BREAKING NEWS
Search

முரசொலி சிலந்திக்கு ஒரு ரஜினி ரசிகனின் பதிலடி!

ணக்கம், ஸ்டாலின்.. ரஜினி ரசிகர்கள் என்றால் பிளக்ஸ் வைத்தும் போஸ்டர் அடித்தும் திரிவதற்கே லாயக்கு என்று நினைத்து விட்டீர் போலும்.. எங்களுக்கு உள்ளூர் அரசியலும் தெரியும் உலக அரசியலும் தெரியும் ப்ரோ!

செயல்படாமலே செயல் தலைவராக இருந்த நீங்கள், இன்று தந்தையின் தகனத்தால் தலைவராகி உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்! பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதி, எனது பொன்னான நேரத்தை செலவு செய்ய வேண்டிய சூழல் வந்திருக்கக் கூடாது. ஆனால் தன்னுயிர் நீங்கும் காலம் வரை, சாணக்கியத்தனமாகவும் ராஜதந்திரத்துடனும் அரசியல் செய்து வந்த தங்களது தந்தை கூட, எம் தலைவர் ரஜினியை ஒருமுறை கூட இகழ்ந்ததில்லை.. அது பாசமா அல்லது பயமா என்பது எங்களுக்கு தெரியாது. ஏனென்றால் ரஜினியின் மக்கள் பலம் என்னவென்று அவருக்கு தெரிந்திருக்கிறது என்பதே உண்மை! ஆனால் மைனாரிட்டி ஆட்சியைக் கூட கலைக்க துப்பில்லாத தாங்கள், எங்களது தலைவரை முரசொலி வாயிலாக ஏளனம் செய்திருப்பதைக் கண்டு எங்களால் சிரிக்கவே முடிகிறது!

எங்களது தலைவர் எங்களை அசிங்கமாகத் திட்டினார் என்று ஆதங்கப்பட்டுள்ளீர்கள். எங்களது தலைவர் எங்களை ஆரம்பத்திலேயே கண்டிக்காமல் விட்டிருந்தால், நாங்களும் ஓசி பிரியாணி, ஓசி பஜ்ஜி என கடைக்காரர்களை துன்புறுத்தி கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திக் கொடுத்திருப்போம் அல்லவா? காலம் காலமாய் மாவட்ட செயலாளர்களை மாற்றவும், கட்டப் பஞ்சாயத்து செய்யும் லோக்கல் திமுக பிரமுகர்களையும் கண்டிக்கும் தைரியம் உள்ளதா உங்களுக்கு? தங்களது தகப்பனார் கலைஞர், தான் உயிரோடு இருந்த காலம் வரையிலும், உங்களுக்கு தலைவர் பதவி வழங்காமல் இழுத்ததும் சரியான முடிவுகளில் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இருக்கிறது உங்களின் சமீபகால நடவடிக்கைகள்!

காலம், தோல்வி, வயது ஆகியவை தான் ஒரு தலைவனுக்கு நல்ல பக்குவத்தைக் கொடுக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களது நடவடிக்கையால் துவண்டு கிடக்கும் திமுக தொண்டர்களே உங்களை கேலி செய்து வரும் வேளையில், எங்களது தலைவரையும் ரசிகர்களையும் அவமானப்படுத்தும் உங்களது முரசொலி பத்திரிகையின் நோக்கமும் பலிக்காது.. மு.க.வின் இளைய மகனான உங்களது முதல்வர் கனவும் பலிக்காது!

எழுதி வைத்த பேப்பரில் உள்ளதை வாசிக்கவே தடுமாறும் காட்சியை பார்ப்பவர்களுக்கு ‘கலைஞர் இருந்த இடத்தில் இவரா?’ என்ற கேள்வி வந்து போகுமா இல்லையா? பேசுவதில் மட்டுமல்ல முடிவெடுப்பதிலும் ஏன் இத்தனை குழப்பம்? ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடிய போது தாங்கள் நடத்திய ரயில் மறியல், உண்ணாவிரத காமெடிகள் எல்லாம் மக்களிடமும் தொண்டர்களிடமும் உங்களுக்கு கெட்ட பெயரைத்தான் கொடுத்தன என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறீரா?.

சொந்த அண்ணனையும் தங்கையையும் கூட பயத்தின் காரணமாக அரசியல் செய்ய விடாமல் தடுக்கும் நீங்கள், தலைவர் ரஜினியின் அரசியல் வருகையால் பயம் கொள்வது ஆச்சர்யமளிக்கவில்லை ஸ்டாலின். தகுதியில்லாதவன் தான் தன் இடத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்படுவான். உங்களுக்கு தகுதி இருப்பதாக நீங்கள் நம்பினால், தைரியமாக ரஜினியை எதிர்த்து பேட்டி தரலாம் அல்லது அறிக்கை விடலாம். அதை விடுத்து புனைப்பெயரில் எங்களது தலைவனை இகழ்வது எவ்வகை நியாயம்?

வலுவான கட்டமைப்பு முதல் நிர்வாகிகள் சந்திப்பு, களப்பணி ஆய்வு, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு என்று உங்களை ஓவர்டேக் செய்து கொண்டிருக்கிறார் எங்களது தலைவர் என்பதை இன்று முரசொலி வாயிலாக அறிந்தேன். மகிழ்ச்சி.. நீங்கள் தொடங்கிய இடத்திலேயே நிற்கிறீர்கள் என்பதை உணர்ந்தால் அடுத்த தேர்தலிலும் எதிர்கட்சித் தலைவராக இருக்கலாம். இதே நிலை தொடர்ந்தால், அதற்கும் நாமம் தான். தலைவன் சொல்படி கேட்பவன் தான் தொண்டன். தொண்டன் தவறு செய்தால் கண்டிப்பவன் தான் தலைவன். அவ்வகையில் ரஜினி மக்கள் மன்றத்தை விமர்சிக்க திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை!

களத்தில் சந்திப்போம் ஸ்டாலின்!

– மு.அங்குராஜ், மதுரை.
One thought on “முரசொலி சிலந்திக்கு ஒரு ரஜினி ரசிகனின் பதிலடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *