BREAKING NEWS
Search

ரஜினியும் நானும் – ஒரு பத்திரிகையாளரின் அனுபவம்

ரஜினியும் நானும் – ஒரு பத்திரிகையாளரின் அனுபவம்

-சு செந்தில்குமரன்

thalaivar-press

விகடன் மாணவ பயிற்சித் திட்டத்தின் கீழ் மிகச் சிறந்த மாணவ நிருபராக தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை வந்து அடுத்த ஒரு ஆண்டில் ஜுனியர் விகடனில் ஜூவி ஷோ என்ற பகுதியை ஆரம்பித்து சினிமா செய்திகள் எழுதும் பணி எனக்கு கொடுக்கப்பட்டது . (இருபது ஆண்டுகளுக்கும் மேல் அந்த பகுதி அதே பாணியில் தொடர்ந்து இப்போதுதான் முடிந்தது . பெரும்பாலான அரசியல் வார இதழ்கள் இப்போதும் சினிமா செய்தியை எழுத அதே பாணியைத்தான் பின்பற்றுகின்றன.)

நான் சினிமா செய்திகள் எழுத ஆரம்பித்த அந்த காலகட்டத்தில்தான் ஆஷ்ரம் பள்ளியை லதா ரஜினிகாந்த் துவக்கினார். ஒரு படவிழாவில் சந்தித்த போது ஆஷ்ரம் பள்ளி பற்றி விகடனில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றார் லதா அவர்கள். சம்மதித்து விட்டு அதை நான் விகடனில் அன்று என் எல்லைக்குட்பட்ட உதவி ஆசிரியர் பொறுப்பில் இருந்த கே. அசோகனிடம் சொல்ல, “தாராளமாக செய்யுங்கள். ஆனால் கூடவே ரஜினியும் ஆஷ்ரம் பற்றியும் தனது பள்ளி வாழ்க்கை பற்றியும் பேசினால் நன்றாக இருக்கும். கேளுங்கள்,” என்றார் .

அந்த சமயத்தில் லதா அவர்களிடம் நான் ரொம்ப உரிமையோடு பேசுவேன் . (இன்றைய இயக்குனர்கள் ஐஸ்வர்யாவும் சௌந்தர்யாவும் அப்போது நண்டும் சிண்டுமாய் இருப்பார்கள்). அதே உரிமையில் நான் “மேடம்.. சார் பேட்டியோடு சேர்ந்து இருந்தா அசத்திடலாம் . அதுக்கு நான் கேரண்டி . now the ball is in your court “என்றேன் . உடனே சிரித்தபடி “we win” என்றார் .

இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு காலை. போயஸ் கார்டன் வீடு .

ஐந்து நிமிடம் காத்திருப்பு. ரஜினியின் உதவியாளர் ஜெயராமன் வந்தார் . உள்ளே தகவல் போன அடுத்த நிமிடம் லதா வந்தார் . உள்ளே போனதும் லதா விலக , சில நொடி தனிமையில் ‘உட்காரலாமா இன்னும் கொஞ்ச நேரம் நிற்கலாமா’ என்று நான் யோசித்த நொடி….

மழைக் காலத்தில் மேகத்தில் இருந்து பூமிக்கு இறங்கும் மின்னல் போல மாடியில் இருந்து இறங்கி வந்தார் ரஜினிகாந்த் .

என்னை அறியாமல் என் மனதில் ஒரு உற்சாகம் . நெருங்கி “வணக்கம் சார்… நான் செந்தில்குமரன். விகடன் நிருபர்” என்றேன். சட்டென்று என் கைகளைப் பற்றிக் குலுக்கி “வணக்கம் சார் . நான் ரஜினிகாந்த் , ஆக்டர் ” என்றார்.

ஒரு நொடி கல்லென சமைந்தேன். அது அவர் வீடு! அவரைப் பார்க்க நான் வந்திருக்கிறேன். அவர் உலகம் அறிந்த மனிதர்! நான் என்னையே எனக்கு தெரியாமல் அலைந்து கொண்டு இருந்தேன். தவிர நான் ரொம்ப சின்னப் பையன் .

ஆனால் நான் அறிமுகம் செய்து கொண்ட விதத்துக்கு சற்றும் குறைவு இல்லாமல் தன்னை அறிமுகம் செய்து கொண்டார் அந்த வசூல் சக்கரவர்த்தி.

நான் வாய் குழறி …” சார்… நீங்க .. என்கிட்டே போய் .. உங்க பேரை சொல்லி… அறிமுகம் ….உங்கள தெரியாம …” என்று உளறிக் கொட்ட , சட்டென்று மறித்து ” நோ சார்.. இன்ட்ரடக்ஷன் னா இன்ட்ரடக்ஷன் தான் ” என்றார். அப்படியே ஆடிப் போனேன் .

என்ன மனுஷன் இவர். அப்போதே முடிவு செய்தேன், ‘வாழ்வில் எவ்வளவு உயர்ந்தாலும் இந்த மனுஷனைப் போல் காலை தரையிலேயே வைத்திருக்க வேண்டும்.’

அவரது அறையில் போய் உட்கார்ந்தோம் . பேசினார். பிரமிப்பு மாறாமல் வெளியே வந்தேன்.

வாசலில் சற்று தள்ளி ரசிகர்கள் நின்றிருந்தனர். ஒருவர் என்னிடம் கேட்டார் “அண்ணா.. தலைவரைப் பார்த்துட்டு வர்றீங்களா ?”

“ஆமாப்பா ..”

“தலைவர் நல்லா இருக்காரா ?”

“அவருக்கு எப்பவும் நல்லாதாம்ப்பா இருப்பாரு…”

(அந்த சந்திப்பில் ரஜினியுடன் நான் பேசிக்கொண்டு இருக்கும்போது நண்பர் ஜி. சிவபெருமாள்  எடுத்த புகைப்படம்தான் மேலே நீங்கள் பார்ப்பது.)

* * *

சில வருடங்களுக்கு பிறகு ஒரு இதழுக்காக ரஜினியின் பேட்டி வேண்டும் என்று கேட்டார்கள் .

அண்ணாமலை படத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இனி எந்த ரசிகனுக்கும் ஆபத்து வரக்கூடாது என்று ரஜினி கவனமாக இருந்த சமயம் அது.

அப்போதெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை யாருடைய அனுமதியும் பெறாமல் நெருங்கும் இடத்தில் நான் இருந்தேன் . பாண்டியன் படத்தின் படப்பிடிப்பில் அவரைச் சந்தித்து “ஒரு பேட்டி வேணும் சார்” என்றேன் . “எது பேசினாலும் அத வேறே மாதிரி பாக்கறாங்க . நம்ம ஃபேன்ஸ்க்கு பிரச்னை ஆகுது. வேணாமே செந்தில், ” என்றார் .

“சார் அரசியல் பத்தி ஒரு வார்த்தை வேணாம். இது சினிமா ஸ்பெஷலுக்கு எடுக்கறது. நோ பாலிடிக்ஸ். ஒன்லி சினிமா,” என்றேன் அவருடைய ஸ்டைலில்.

“ரெண்டும் வேறே வேறேயாவா இருக்கு ?” என்றார் கத்தி மாதிரி. திக்கிட்டு நின்றேன்.

“சரிங்க சார்… பேட்டி எதுவும் வேணாம். நீங்க ஏதாவது பேசுங்க. அதுவே கவர் ஸ்டோரிதான் “என்றேன் .

ம்ஹும்! என் பாட்சா பலிக்கவில்லை .

“ஒகே . நமக்குள்ள ஒரு ஜென்டில்மேன் அக்ரீமென்ட் . நான் ஒரு வார்த்தை பேச மாட்டேன். நீங்க நான் உட்காந்து இருக்கற சேர்ல, என் பக்கத்துல கூட உட்காரலாம் . ஆனா ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை கூட என்கிட்டே இன்னிக்கு பேசக் கூடாது,” என்றார் .

வைர மோதிரத்தைக் கொடுத்து விட்டு, அதை கையில் போட்டுக் கொள்ளக் கூடாது என்கிறாரே..” என்று நினைத்துக் கொண்டு ‘சரிங்க சார் “என்றேன் .

அன்று முழுக்க அவரோடு பாண்டியன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தேன். உணவு இடைவேளையில் “சாப்டீங்களா…?”என்று சைகையில் கேட்டு சாப்பிட்டதை உணர்ந்து புன்னகைத்ததோடு சரி. ஷூட்டிங் முடியும்போது கையாட்டி விட்டுப் போய் விட்டார்.

‘சூப்பர் ஸ்டாரின் படப்பிடிப்பில் சூப்பரான ஒரு நாள்..’ என்று தலைப்பிட்டு எழுதிக் கொடுத்தேன்

அடுத்த நாள் இன்னொரு சீனியர் நிருபர் “செந்தில்குமரனுக்கு ரஜினியிடம் பேட்டி வாங்கும் திறமை இல்லை. நான் போய் பேட்டி எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று கிளம்பிப் போனார். ரஜினியை சந்தித்து பேட்டி கேட்டு இருக்கிறார்.

ரஜினி “நான்தான் நேத்திக்கே தெளிவா சொல்லிட்டனே ” என்று கூற , அதற்கு அந்த நிருபர் “சார் .. அவர் புதுசா வந்தவர். நான் சீனியர்…” என்று ஆரம்பிக்க ,

சட்டென்று இடை மறித்த ரஜினி “வெயிட் வெயிட் .. ஹி இஸ் வெரி டீசன்ட். நான் சொன்னத என்னோட சிச்சுவேஷனை அழகா புரிஞ்சுகிட்டாரு. இப்போ நீங்க கேட்கறீங்க. அதிலும் நீங்க ஒரு பொண்ணு வேறே. இப்போ நான் உங்களுக்கு பேட்டி கொடுத்தா what will he think about me ?” என்று கேட்டிருக்கிறார் .

ஷாக்கான நிருபர் அமைதியாக திரும்பி விட்டார் .

சில நாட்களுக்குப் பிறகு அந்த படத்து யூனிட் ஆட்கள் விஷயத்தை சொன்னபோது என் கண்கள் குளமானது. என்ன ஒரு பெரிய மனுஷத்தனம்!

அந்த பேட்டியை எடுக்க முடியாததால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ரஜினியின் பண்பு …. !

மனசு என்னையும் அறியாமல் சொன்னது “நீங்க நல்லா இருக்கணும் சார்.”

ரஜினி சார்… ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள உங்களுக்கு நான் சொல்லப் போகும் விஷயம் கண்டிப்பாக தெரிந்து இருக்கும்.

வைணவ மகான் ராமானுஜரின் பக்தர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது முதல் நபர் “அடியேன் ராமானுஜ தாசன் வணக்கம் ” என்பார் . அவருக்கு பதில் வணக்கம் வைக்கும் பக்தர் “அடியேன் தாசானு தாசன் வணக்கம்” என்று சொல்வார்.
207531_2463498604391_929640205_n
அதாவது “நான் ராமானுஜருக்கு மட்டும் அல்ல.. ராமானுஜரின் பக்தரான உங்களுக்கும் தாசன்,” என்று பொருள் .

அந்த வகையில் எளிமையின் தாசனான உங்களுக்கு …

இந்த தாசானுதாசனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்!

குறிப்பு: கட்டுரையாளர் சு. செந்தில்குமரன் அனுபவமிக்க பத்திரிகையாளர். இன்று சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்காக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியிருந்த கட்டுரை இது.
10 thoughts on “ரஜினியும் நானும் – ஒரு பத்திரிகையாளரின் அனுபவம்

 1. arulnithyaj

  நன்றி செந்தில் குமரன் சார். தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடன், நல்ல ஆரோக்கியத்தோடும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

 2. சிம்பரம்

  \\அண்ணாமலை படத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இனி எந்த ரசிகனுக்கும் ஆபத்து வரக்கூடாது என்று ரஜினி கவனமாக இருந்த சமயம் அது.\\

  என்ன பிரச்சினை நடந்தது?

 3. M.Sabari Giri Vasan

  சார் தங்கள் பேட்டி அருமையாக இருந்தது தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 4. M.MARIAPPAN

  ஹாப்பி birth day தலைவா இன்று போல் என்றும் வாழ்க வளமுடன்

 5. Marthu

  என்கண்கள் குளமாகிறது…

  னீ ஒரு சகாப்த்தம் தலைவா..

 6. varadhu

  இளங்கோ அவர்களே !

  பிடிப்பதற்கு முன் அவர் அனுமதியை கேட்டுத்தான் புகைதிருப்பாரே தவிர நீங்கள் கற்பனை செய்வதுபோல் ஒன்றும் நடந்திருக்காது .மேலும் அவர் என்றைக்கும் போலியான வாழ்கை வாழ்வதில்லை. நீங்கள் அவரது பழைய பேட்டிகளை பார்த்தது இல்லை என்று நினைக்கிறேன்.மது ,புகை மற்றும் மாது பற்றிய கேள்விக்கான பதிலை அவர் சாவி என்ற இதழுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார். அவரிடம் உள்ள நல்ல பழக்கங்களை சுட்டிகட்டத்தான் திரு .செந்தில் குமரன் கூறி உள்ளாரே தவிர உங்களை போல் குற்றம் சொல்ல அல்ல.யாராக இருந்தாலும் அவரிடம் உள்ள நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள் ,கேட்டதை புறம் தள்ளுங்கள் அதை விட்டுவிட்டு குறை கண்டுபிடிப்பதையே தொழிலாக அலையாதீர்கள் .இந்த உலகத்தில் யாரும் 100% உண்மையான மனிதர்கள் இல்லை இருக்கவும் முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *