BREAKING NEWS
Search

போரில் மட்டுமல்ல.. நிஜத்திலும் இவர் ஒரு ஹீரோ!

போரில் மட்டுமல்ல.. நிஜத்திலும் இவர் ஒரு ஹீரோ!

னித இனமே கெட்டுப் போய்விட்டது… வானம் திறந்து விழுங்கினால்தான் விமோசனம், என்று மனம் வெறுத்து பலரும் சபிக்கும் நேரங்களில் சில நல்ல, நேர்மையான மனிதர்கள் வெளிச்சத்துக்கு வருவார்கள். மனிதத்தின் மீது மீண்டும் நம்பிக்கை துளிர்க்கும்!

மைசூரைச் சேர்ந்த சார்லஸ் வில்லியம்ஸ் அப்படி ஒரு நேர்மையான மனிதர்தான்.

சார்லஸ் வில்லியம்ஸுக்கு வயது 89. பிரிட்டிஷ் இந்தியாவில் ராயல் ஏர்போர்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்திய விமானப்படையில் பணியாற்றியவர். 2ம் உலகப் போரில் களம் கண்டிருக்கிறார். லாகூர், பர்மா என பல ராணுவ முகாம்களில் பணியாற்றியிருக்கிறார்.

ஓய்வுக்குப் பின்னர் தனது பென்ஷன் கணக்கைப் பார்த்தபோது தனது பென்ஷன் தொகை குறைவாக இருப்பதாக உணர்ந்தார் சார்லஸ். இதையடுத்து உள்ளூர் ராணுவ நல மற்றும் குறை தீர்ப்பு வாரியத்தை அணுகி முறையிட்டார். ஆனால் அங்கு அவருக்கு பலன் கிடைக்கவில்லை. யாரும் அவரது குறையைத் தீர்க்க அக்கறை காட்டவில்லை.

இதையடுத்து மைசூரில் உள்ள வீகேர் முன்னாள் ராணுவத்தினர் அறக்கட்டளையின் தலைவர் சுப்ரமணியை அணுகினார் சார்லஸ். பின்னர் வீகேர் அறக்கட்டளையில் கணக்குப் போட்டு பார்த்தபோது சார்லஸுக்கு பென்ஷன் தொகை குறைத்துக் கொடுக்கப்படவில்லை, மாறாக கூடுதலாக கொடுக்கப்பட்டு வருவது தெரிய வந்தது.

அதாவது நிரந்தர மருத்துவப் படியாக சார்லஸுக்கு ரூ. 300 மாதந்தோறும் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. உண்மையில் அந்தப் படியைப் பெறும் தகுதி அவருக்கு இல்லை. கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த மருத்துவப் படியுடன் சேர்த்து மாதம் ரூ. 15,200 பென்ஷன் வழங்கப்பட்டு வந்துள்ளது.

தனக்கு கூடுதலாக பணம் போடப்பட்டு வருவதை அறிந்த சார்லஸ், உடனடியாக அப்படி தரப்பட்ட தொகையை 15 மாதங்களுக்கு கணக்கிட்டு மாதா மாதம் கழித்துக் கொண்டு விடுமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து சுப்பிரமணி, மங்களூரில் உள்ள ஸ்டேட் பாங்க் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுப்பிரமணி கூறுகையில், உண்மையிலேயே இப்போதுதான் சார்லஸுக்கு இந்தத் தொகை மிகவும் தேவை. காரணம் அவருக்கு மருத்துவச் செலவுகள் நிறைய உள்ளன. கண் பார்வை மங்கி விட்டது. இருதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்கு ரூ. 1.5 லட்சம் பணம் தேவை. அந்தத் தொகை இல்லாமல் அவதிப்படுகிறார். இந்த நேரத்தில் தனக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படியைத் திரும்பக் கொடுத்து விட தீவிரமாக உள்ளார். இது ஒரு பக்கம் ஆச்சரியத்தையும், மறுபக்கம் வருத்தத்தையும் தருகிறது,” என்றார்.

ஆனால் சார்லஸ் கூறுகையில், “எனக்கு எது தகுதி இல்லையோ அதைப் பெற நான் ஆசைப்படக் கூடாது. அது தவறு. மேலும், எனக்கு தகுதி இல்லாத பணத்தைப் பெற்று அரசுக்கு சுமையைக் கூட்ட நான் விரும்பவில்லை. எனவேதான் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்,” என்றார் உறுதியாக.

கடந்த தலைமுறை நேர்மையை இன்னும் பாதுகாக்கிறது… இந்தத் தலைமுறை ஊழல் வளர்க்கிறது!

வேறென்ன சொல்ல..

நன்றி: தி ஹிண்டு
4 thoughts on “போரில் மட்டுமல்ல.. நிஜத்திலும் இவர் ஒரு ஹீரோ!

 1. குமரன்

  ///கடந்த தலைமுறை நேர்மையை இன்னும் பாதுகாக்கிறது… இந்தத் தலைமுறை ஊழல் வளர்க்கிறது!///

  அதனால்தான் கலைஞர் இன்னமும் இந்தத் தலைமுறையை விட மனமில்லாமல் இருக்கிறாரோ?

  சார்லஸ் போல எத்தனையோ பேர் ஏழ்மை நிலையிலும், நடுத்தர வர்க்கத்திலும் பல தரப்பட்ட சிரமங்கள் இருந்தாலும் நேர்மையாகவே வாழ்கிறார்கள். ஆனால் மனிதனுக்கு வசதியும் வாய்ப்பும் ஏற ஏற நேர்மை தேய்ந்து கொண்டே வருகிறது என்பது வருத்தம் தரும் நிகழ்வே.

 2. மிஸ்டர் பாவலன்

  //கடந்த தலைமுறை நேர்மையை இன்னும் பாதுகாக்கிறது… இந்தத் தலைமுறை ஊழல் வளர்க்கிறது!// (என் வழி)

  வாழ்வில் நேர்மை என்பது நேற்று – நேற்று!

  எங்கும் ஊழல் என்பது இன்று – இன்று !

  அது சாதனை ஆவது நாளை – நாளை !

  வரும் சோதனைதான் இடை வேளை !!

  -மிஸ்டர் பாவலன்

 3. chenthil UK

  படித்ததும் கண்ணீர் துளிகள் எட்டி பார்கிறது… கொஞ்சம் சிலிர்த்தது…. சார்லஸ் அவர்களுக்கு தலை வாங்குகிறோம் … ஒன்று மட்டும் புரிகிறது.. நேர்மை என்பது ரத்தத்தில் இருக்க வேண்டும் … பிறருடைய ரதத்தின் வேர்வையின் பலனை அபகரித்து வாழும் அரசியல்வாதிகளிடம் எதிர்பார்ப்பது நடக்காது, இந்த நேர்மைக்க அரசாங்கம் அவரின் மரத்துவ படியை கூடினால் நல்லது…

  ஈ என இறத்தல் இழிந்தன்று … ஈயேன் என இறத்தல் அதனினும் இழிந்தன்று… நு.. யாரோ பாட்டி படித்து போச்சு…

  சும்மா ஒலிம்பிக்ஸ் ஜெயிச்ச 5 கோடி கொடுப்பதும் , chess ல ஜெயிச்சா ௨ கோடி கொடுப்பது தான் அரசாங்கத்தின் சாதனை.

  இப்படி பட்ட அரசாங்கம் இருக்கும் வரை எத்தனை தலைமுறை வந்தாலும் பழைய தலைமுறையின் நேர்மை எல்லாரிடமும் எதிர்பக்க முடியாது ( But exceptions always exist)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *