BREAKING NEWS
Search

இப்பலாம் யாரு சார் சாதி பாக்கல?

இப்பலாம் யாரு சார் சாதி பாக்கல?

-டான் அசோக்

 


“கீழ்சாதினா இப்படிதான் வாழனும்னு நம்ம சாஸ்திரங்களே சொல்லிருக்கு. அப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன் என்னை ஏன் எல்லாரும் ஒதுக்குறாங்கன்னு” என்று, தான் ஒரு தலித் என்பதால் சிறுவயதில் இருந்து சந்தித்த கொடுமைகளுக்கான காரணத்தைத் தேடி அலைந்து கண்டுகொண்ட ஒரு வட-இந்திய பெண் ‘சத்யமேவஜெயதே’ நிகழ்ச்சியில் சொல்கிறார்.

அமீர்கான் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி இந்தியாவெங்கும் விரவிக்கிடக்கும் பார்ப்பனியத்தின் மீதும் அதன் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிற ஆதிக்கசாதி வெறியின் மீதும் அமிலம் வீசுகிறது!

தன் சமூகத்தின் மீது பார்ப்பனர்கள் கட்டவிழ்த்த அனைத்து ஏதேச்சிகாரங்களையும் தாண்டி, போராடி, படித்து, பிஎச்டி முடித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்று பேராசிரியையாய் இருக்கும் அந்த பெண் இன்னமும் தான் சந்தித்து வரும் அடக்குமுறைகளை கூறும் போது அதை கேட்கும், திராவிட இயக்கங்களால் சாதியை பெருமளவு பின்னுக்குத்தள்ளியிருக்கும் நம் மாநில இளைஞர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்!

அவர் அமர்ந்த பெஞ்சை கழுவிவிட்டு பின் அமர்ந்த சக மாணவர்களை பார்த்த அந்த பெண், தான் பேராசிரியையாய் ஆன பிறகும் தன் தாயின் கையில் துடைப்பத்தைக் கொடுத்து அவர் வீட்டை சுத்தப்படுத்த சொன்ன வீட்டு உரிமயாளரையும் பார்த்திருக்கிறார். ஆக, தலித் என்ற முத்திரை அவர் சாகும் வரையில் அவருடனே தொடரும் எனவும் வேதனையுடன் குறிப்பிடுகிறார். முழுக்க முழுக்க வட இந்திய சாதிய சூழ்நிலைகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை தமிழகத்தின் சூழலோடு ஒப்பிட்டு, திராவிட இயக்கங்களின் சாதி ஒழிப்பு பங்களிப்பை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

1960களில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த பல்வந்த்சிங் ஐ.ஏ.எஸ் சொல்கிறார், அவருக்கு கீழ் பணிபுரிந்த ஒரு பார்ப்பனர் இவர் குடித்த க்ளாசை எடுக்க மாட்டாராம்! மேலும் தனக்கு வரவேண்டிய பதவியுயர்வு பலவற்றை பார்ப்பன மேலதிகாரிகள் தடுத்ததையும், இறுதியில் வெறுத்துப்போய் தன் ஐ.ஏ.எஸ் வேலையையே உதறிவிட்டதாகவும் சொல்கிறார்.

பின் பலதரப்பட்ட மக்களிடம் தற்கால சாதிய நடைமுறை பற்றி நிகழ்ச்சியில் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு சொல்லிவைத்தாற்போல மேல்தட்டு மக்களின் ‘ஃபேஷன் ஸ்டேட்மென்ட்’டான “இப்போதெல்லாம் யார் சார் சாதி பாக்குறா?” என்ற பதிலே ஒட்டுமொத்த பதிலாக வருகிறது. இதற்கு பின்பாக இந்தியாவெங்கும் 2012யிலும் விரவிக்கிடக்கும் தீண்டாமையையும், சாதியத்தையும் ஆராய்ச்சியாளர் இயக்குனர் ஸ்டாலின் மூலம் முகத்தில் அறைந்தாற்போல் காண்பிக்கிறது நிகழ்ச்சி.

காசியில் அர்ச்சகராக இருக்கும் ஒரு பார்ப்பனரிடம் இது குறித்து கேட்கப்படும் கேள்விக்கு அவர் சொல்கிறார், “நான் ஆச்சாரமான ப்ராமணன். கடவுளின் தலையில் இருந்து வந்தவன். நாளைக்கு நம் கால் நம்மிடம் வந்து நான் தான் உன் உடம்பை தாங்குகிறேன் அதனால் நான் உயர்ந்தவர் எனச் சொன்னால் நீங்கள் கேட்பீர்களா? அனைவரும் சமம் என சொல்லும் நம் அரசியலமைப்புச் சட்டத்தை நாங்கள் பாவச்செயலாக பார்க்கிறோம்” என்கிறார்.

இந்த இடத்தில்தான் தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் கடும் முயற்சியால் “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற சட்டத்தை எதிர்த்து வழக்கு போட்டிருக்கும் நம் ஊர் தீட்சிதர்கள் என் நினைவுக்கு வந்தார்கள். இப்படியாகப்பட்ட ஒரு வழக்கு போடப்படும் சூழ்நிலையில், அதை உடனே நீதிமன்றம் தள்ளுபடி செய்யாத சூழ்நிலையில், சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடிய முதியவரை தடித்தீட்சிதர்கள் அடிக்கும் சூழ்நிலையில்தான் நம்மூரில் “இப்பலாம் யாரு சாதி பாக்குறா?” என்ற பொருந்தா-கோஷமும் கேட்கிறது.

இயக்குனர் ஸ்டாலின் சாதியம் பற்றிய தன் பலவருட ஆராய்ச்சியை பகிர்ந்து கொள்ளும்போது இஸ்லாம் மதத்தில், கிறித்தவ மதத்தில் இருக்கும் சாதியத்தைப் பற்றியும் கூறுகிறார்.

இஸ்லாத்தில் சாதி இல்லை, ஆனால் இஸ்லாமியர்களிடம் இருக்கிறது என்றும், இஸ்லாம் மதம் எந்த வகையிலும் சாதியத்தை ஆதரிக்காததால், அல்லாவுக்கு பயந்து மசூதிக்குள் தலித் இஸ்லாமியர்களை அனுமதித்துவிட்டு வெளியில் அவர்களை மதிப்பதில்லை எனவும் ஒரு தாழ்த்தப்பட்ட இஸ்லாமியர் சொல்கிறார்.

அதேபோல் புலையர்கள் என அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட கிறுத்தவ சமூகத்தை சேர்ந்த ஒரு பெண், “எங்கள சர்ச்சுக்குள்ள விட மாட்டாங்க. ஏன்னா எங்க ரத்தம் சிவப்பு அவங்க ரத்தம் நீலம்” என நக்கலாக செவிட்டில் அறைந்ததைப் போல சொல்கிறார். இவர்கள் மதம் மாறினாலும் தலித் முத்திரை என்பது இவர்களை விட்டு அகல மறுக்கிறது என்பதே உண்மை.

இந்த 2012யிலும் வட இந்திய பள்ளிகளில் சத்துணவு நேரத்தில் தலித்துகளை தனியே உட்கார வைக்கிறார்கள். அதனால் பல தலித் மாணவர்கள் சுயமரியாதைக்காக சாப்பிடாமலே கூட இருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் தலித்துகளுக்கு கழிவறை கழுவும் வேலை, பள்ளி மைதானம் சுத்தப்படுத்தும் வேலை அந்தந்த பள்ளி ஆசிரியர்களாலேயே கொடுக்கப்படுகிறது. ‘பட்டேல்’ போன்ற உயர்சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதுபோன்ற வேலையைக் கொடுக்கமாட்டார்கள். “நாங்க எங்க புள்ளைங்க எந்த தொழில செய்யகூடாதுனு பள்ளிகூடத்துக்கு அனுப்புனோமோ அங்கேயும் அதையே பண்ண சொல்றாங்க” என அழுதபடியே தெரிவிக்கிறார் ஒரு தலித் தாய்.

நம் குழந்தைகளுக்கு நம்மூர் பள்ளிகளில் இது நடந்தால் நாம் கொதிப்போமா இல்லையா? வடநாட்டில் பெயர்களோடு தலைமுறை தலைமுறையாக ஒட்டிக்கொண்டிருக்கும் சாதிப்பெயர்கள் இவன் இன்ன சாதி என சுலபமாக இனங்காண வைத்துவிடுகிறது.

நிகழ்ச்சியின் இந்த குறிப்பிட்ட பகுதியைப் பார்க்கையில் தான் நாமெல்லாம் திராவிட இயக்கத்திற்கும், தந்தை பெரியாருக்கும் எவ்வளவு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்பதை முழுதாக உணரமுடிந்தது. நம்மூர் திருமணப் பத்திரிக்கைகளில், “பழனிச்சாமிக் கவுண்டரின் பேரனும், பாலுவின் மகனுமான வேலுவுக்கும்…..” என அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பழனிச்சாமி என்ற பெயருடன் இருக்கும் ‘கவுண்டர்’, ஏன் பாலு என்ற பெயரிலும், பாலுவின் மகனான வேலுவின் பெயரிலும் இல்லை? ஏனெனில் பழனிச்சாமிக் கவுண்டர் தலைமுறைக்கும், பாலு தலைமுறைக்கும் இடையில் திராவிட இயக்கம் தன் வேலையைக் காட்டியதுதான்!

தமிழகத்தில் அவ்வளவு சுலபமாக நாம் யாரின் சாதியையும் கண்டுபிடிக்க முடியாது. “உங்கள் சாதி என்ன?” என்று தமிழகத்தில் யாரேனும் கேட்டால் நாம் எவ்வளவு கேவலமாக அவர்களைப் பார்க்கிறோம்! சாதிப் பெயரை பொது இடத்தில் சொல்லும்போது குரலை தாழ்த்திச் சொல்கிறோமா இல்லையா? அதன் காரணம் பெரியாரேயன்றி, திராவிட இயக்கமேயன்றி வேறென்ன?

இன்னும் தொடரும் மகா கொடுமை!


1993லேயே மனிதர் மலத்தை மனிதரே அள்ளுவதை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டாலும் இன்னும் இந்திய அளவில் 13லட்சம் பேர் மலம் அள்ளும் தொழிலை செய்கிறார்கள். இதில் பெரும்பான்மை இந்திய ரயில்வே துறை ஊழியர்கள் என்பதுதான் பெருங்கொடுமை!

“நகரங்களிலுமா சாதி பார்க்கிறார்கள்?” என்ற அமீரின் கேள்விக்கு “சாதிப்பெயர் சொல்லி வரன் தேடுவதே சாதி பார்க்கும் பழக்கம் தானே!” என பொட்டில் அடித்ததுபோல் பதில் சொல்கிறார் ஆராய்ச்சியாளர் ஸ்டாலின். மேலும் சாதிகளை ஒழிக்க ஒரே வழி சாதிமறுப்புத் திருமணம் மட்டுமே என்றும் சொல்கிறார். நாங்கள் “அடக்கமான குடும்பம், கலாச்சாரமான குடும்பம், பாரம்பரியமான குடும்பம்” என்றெல்லாம் பெருமை பீற்றுபவர்கள் தங்கள் சாதிக்குள்ளேயே திருமணம் செய்வதைதான் அப்படி சொல்கிறார்கள், அந்த பழக்கம் முற்றிலும் ஒழியவேண்டும்.

சாதி இல்லை, அது இப்போது புழக்கத்தில் இல்லை என மறைத்து மறைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளவே எல்லாரும் ஆசைப்படுகிறார்களேயொழிய உண்மையான நிலையை ஒப்புக்கொள்ள யாரும் தயார் இல்லை. உடலில் இருக்கும் நோயை மறைத்து வைத்தால் பின் மருத்துவம் எப்படிப் பார்ப்பது?

ஒட்டுமொத்தமாக தமிழகம் தவிர்த்த இந்தியாவில் படிந்திருக்கும் சாதியப் படிமத்தை இந்த நிகழ்ச்சி மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்திய அளவில் சாதியம் என்பது ஒரு ‘கெட்ட விசயம்’ என்ற புரிதலே வட இந்தியர்களுக்கு சமீபகாலத்தில்தான் வந்திருக்கிறது. பெரியார் 1940களில் செய்த புரட்சிகளை, கலப்பு மணங்களை, கோயில் நுழைவுகளை இப்போதுதான் இவர்கள் ‘புரட்சி’ என்றே அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒழிந்துவிட்டதா சாதி?

சரி, சாதிகளை மறுத்த திராவிட இயக்கம் வேரூன்றியிருக்கும் தமிழகத்தில் சாதியம் முற்றிலும் ஒழிந்துவிட்டதா என்றால் இல்லை என்பதே வருத்தமான உண்மையாக இருக்கிறது. இன்னமும் திண்ணியம் மலம் திணிப்பு நிகழ்ச்சிகள் நடக்கும் ஒரு சமூகத்தில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒப்பீட்டளவில் சாதி ஒழிப்பில் தமிழகம் ஒரு அரை நூற்றாண்டு முன்னால் நிற்கிறது என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியும்.


இது ஒருபுறம் என்றால், சாதியம் நம்மைச் சுற்றி விஷச்செடியாய் வளர்ந்து இருக்கையில் இடஒதுக்கீட்டின் மூலம் மேல்தட்டுக்கு திடீரென ‘ட்ரான்ஸ்ஃபர்’ ஆகியிருக்கும் பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் சிலர் இடஒதுக்கீட்டை எதிர்க்கத் துவங்கிருக்கும் அவலமும் இங்கே ஆரம்பமாகியிருக்கிறது. அதாவது, “நான் ஏறிவந்துட்டேன் அடுத்தவன் ஏறுனா என்ன ஏறலேனா எனக்கென்ன!” என்ற சுயநல எண்ணமே இதற்கு காரணம்.

அதுமட்டுமல்லாது இட ஒதுக்கீடு என்பது பல ஆயிரம் ஆண்டுகளாய் உயர்பதவிகளிலும், அரசை ஆட்டுவிக்கும் இடத்திலும், கல்வியை உரிமை கொண்டாடியவர்களுக்கும் இன்று பிரச்சினையாய் இருக்கிறது. இதுவரை நமக்குக் கீழே குப்பை பொறுக்கியவர்கள் இன்று நமக்கு சமமாக உட்கார்ந்திருக்கிறார்களே என்ற வயித்தெரிச்சலில் புகைகிறார்கள். அதாவது இடஒதுக்கீடு என்பது அவர்களுக்கு மட்டுமே பிரச்சினை, ஆனால் வெகு சாமர்த்தியமாக ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கே பிரச்சினை என்பதைப் போல பொய் பரப்பி பிற்படுத்தப்பட்டவர்களையே இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசவைக்கிறார்கள்.

பல ஆயிரம் வருடங்களாக மக்களின் மரபணுவிலேயே ஊறிப்போன சாதியை வெறும் பேச்சால் ஒழித்தல் என்பது சாத்தியமில்லாதது. சாதி ஒழிப்பு என்பது இன்றளவில் ஒரு பிரச்சாரமாக, “எடுத்தா எடுத்துக்க” என்ற நிலையிலேதான் இருக்கிறது. கடுமையாக, சட்டரீதியாக சாதி ஒழிப்பு நிறைவேற்றப்படும்வரை பெரியார் தோன்றிய தமிழகத்திலேயே கூட சாதி ஒழிப்பில் தேக்கநிலை இருக்கவே செய்யும்.

மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் சாதி சங்கங்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. சாதி மறுப்பு திருமணங்களை எதிர்த்து வெளிப்படையாகவே சாதி வெறியர்கள் பேட்டி தர ஆரம்பித்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாது பல ஆண்டுகளாக இல்லாது இருந்த சாதிப்பெயர் சூட்டல் மெல்ல தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது.

ஜனனி ஐயர், நரேஷ் ஐயர் என திரைக்கலைஞர்கள் சாதிப் பெயரை சூட்டிக்கொண்டு தமிழகத்தில் சுதந்திரமாக அலைகிறார்கள். புதிதாய் தமிழ் தேசியத்தை கையிலெடுத்திருக்கும் சிலர் தங்களை தமிழர் என அடையாளப்படுத்திக் கொள்வதற்காக சாதிப் பெயர்களை பெயருடன் சுமக்கத் துவங்கியுள்ளனர். அண்ணா, பெரியார் படங்களைக் கூட சாதிச் சங்க போஸ்டர்களில் பயன்படுத்தும் முட்டாள்கள் நிறைந்த சமூகமாக தமிழகம் மெள்ள மாறிவருகிறது. இவற்றையெல்லாம் இப்போதே உடனே தடுத்து நிறுத்தாவிட்டால் வடமாநிலங்கள் போல மீண்டும் சாதியம் ஆலமரமாக இங்கே வளர்ந்து நிற்கக்கூடிய வாய்ப்புகள் மேலோங்கும்.

தமிழ்மேட்ரிமோனி, பாரத்மேட்ரிமோனி என இருந்த காலம் போய் இன்று தமிழ் தொலைக்காட்சிகளிலே ஐயர்கல்யாணம்.காம், நாடார்கல்யாணம்.காம் என விளம்பரம் செய்கிறார்கள். கூடியவிரையில் மனிதக்கல்யாணம்.காம் என்ற ஒரு இணையதளம் தொடங்கவேண்டும் என சீரியசாகவே தோன்றுகிறது!

காதல் திருமணங்கள் செய்வோர்க்கு சாதி மறுப்பு இயல்பாகவே அமைந்துவிட்டாலும், சாதி மறுப்பு திருமணம் செய்யவிரும்பும் காதலில் விழாதோருக்கு என பிரத்யேகமாக சாதி மறுப்புத் திருமண இணையதளங்கள் தோற்றுவிக்கப்படவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேல் பட்டேல், பானர்ஜி, சாட்டர்ஜி, குப்தா, தேவர், கவுண்டர், பறையர், வன்னியர், முதலியார் என எந்த பெயர்கள் எல்லாம் சாதியைக் குறிக்கிறதோ அந்தப் பெயர்களையெல்லாம் சட்டப்படி தடை செய்தால் என்ன நட்டம் மொழிகளுக்கு வந்துவிடப் போகிறது? அமெரிக்கா போன்ற நாடுகளில் Nigger, Negro போன்ற சொல்லாடல்களை தடை செய்துள்ளதைப் போல!

சாதிச் சான்றிதழ்களிலும் சாதிப்பெயரைக் குறிக்காமல் இடஒதுக்கீட்டுக்காக வகுப்பை மட்டும் குறிப்பிட்டால் காலப்போக்கில் சாதிப்பெயர்களே காணாமல் போகக் கூட வாய்ப்புண்டு. இதெல்லாம் என் அனுமானங்கள். ஆனால் இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் நிபுணர்களுக்கே வெளிச்சம்.

மீண்டும் சொல்கிறேன், கடுமையாக, சட்டரீதியாக சாதி ஒழிப்பு என்பது நிறைவேற்றப்பட்டாலேயொழிய சாதி என்னும் நோய் தாக்கப்பட்ட சமூகமாகவே இந்திய சமூகம் இருக்கும்.

அடுத்தமுறை, ‘இப்பலாம் யாரு சாதி பாக்குறா?’ எனச் சொல்லும் முன் உங்கள் குடும்பத்தாருக்கு நீங்கள் பெண்/மாப்பிள்ளை தேடும் முறையையும், கடவுள்சிலை அருகில் பிற்படுத்தப்பட்டோர் போக முடியாத நிலையையும், அதை தடுத்து உயர்சாதியினர் தொடுத்திருக்கும் வழக்கையும், அழுதபடியே புலம்பிய டெல்லி பேராசிரியை அனுபவித்த அடக்குமுறையையும், தனியாக உணவிடப்படும் தலித்துகளையும், வீதியெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் சாதிச்சங்க போஸ்டர்களையும், இன்னும் உங்களைச் சுற்றி நடத்தி ஆயிரம் ஆயிரம் சாதி சார்ந்த விஷயங்களையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

சாதியும், சாதிய அடக்குமுறைகள் ஒழியவில்லை. ஒழிக்கவேண்டும் என்ற பெருங்கடமை நம் முன் உயிருடன் இருக்கிறது!

-என்வழி ஸ்பெஷல்

குறிப்பு: கட்டுரையாளர் ‘டான் அசோக்’ இணைய உலகம் அறிந்த அரசியல் விமர்சகர். எழுத்தாளர். சமூக ஆர்வலர்.

சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் இந்த எபிசோட் வீடியோ:
33 thoughts on “இப்பலாம் யாரு சார் சாதி பாக்கல?

 1. பசுமை வளவன்

  நெஞ்சை உலுக்கிய நிகழ்ச்சி. தமிழ்நாட்டில் ஓரளவு குறைவுதான் என்றாலும், இங்கும் இதற்கு சமமான கொடுமைகளை அனுபவித்துவிட்டேன். நான் இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் கேட்கவே வேண்டாம். சாதி இல்லை இப்பல்லாம் என்று எவனாவது சொன்னால் அவனை நடுரோட்டில் நிற்க வைத்து செருப்பால அடிக்கணும். சாதி இல்லை.. இட ஒதுக்கீட்டை எடுத்துடுங்கன்னு சொல்றதுதான் இவனுங்க நோக்கம். முதல்ல ஆதிக்க சாதி மனப்பான்மை, சாதீய உணர்வு இல்லாம சக மனுசங்கிட்ட உன்னால பழக முடியுதான்னு பாரு. ஆயிரம் வருசமா அடிமைப்பட்ட மக்கள் முன்னேறி வரணும்னு மனசால நினைங்கடா. சாதி ஒரு இம்மியளவுக்காவது ஒழியும்.

 2. பசுமை வளவன்

  நல்ல கட்டுரை அசோக்.

  //ஜனனி ஐயர், நரேஷ் ஐயர் என திரைக்கலைஞர்கள் சாதிப் பெயரை சூட்டிக்கொண்டு தமிழகத்தில் சுதந்திரமாக அலைகிறார்கள். //

  -இதுகளுக்கு குடுமி மனசுக்குள்ள முளைச்சிருக்கு. அதை வெட்டாமல் பாட்டு கொடுத்து ஏத்திவிடறதும் நம்மாளுங்கதானே…

 3. கிரி

  ரொம்ப நல்ல கட்டுரை

  கட்டுரையில் கூறியபடி மற்ற மாநிலங்களை குறிப்பாக வட மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் குறைவு தான். இதற்கு நிச்சயம் பெரியார் முக்கியக் காரணம். ஆனால் இவை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

  எதற்கு எடுத்தாலும் பிராமணர்களை கூறுவதற்கு கொடுக்கப்படும் முக்கியம் மற்ற சாதி நபர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. பிராமணர்கள் அதிகளவில் நடக்கிறார்கள் அதே போல மற்ற சமுதாயத்திலும் இதே போல நடக்கிறார்கள். சதவீத அளவில் மாறுபாடுகள் இருக்கலாம்.

  //இதுமட்டுமல்லாது பல ஆண்டுகளாக இல்லாது இருந்த சாதிப்பெயர் சூட்டல் மெல்ல தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது.
  ஜனனி ஐயர், நரேஷ் ஐயர் என திரைக்கலைஞர்கள் சாதிப் பெயரை சூட்டிக்கொண்டு தமிழகத்தில் சுதந்திரமாக அலைகிறார்கள். //

  இது உண்மையிலேயே கவலை அளிக்கும் விஷயம்.

  //எல்லாவற்றுக்கும் மேல் பட்டேல், பானர்ஜி, சாட்டர்ஜி, குப்தா, தேவர், கவுண்டர், பறையர், வன்னியர், முதலியார் என எந்த பெயர்கள் எல்லாம் சாதியைக் குறிக்கிறதோ அந்தப் பெயர்களையெல்லாம் சட்டப்படி தடை செய்தால் என்ன நட்டம் மொழிகளுக்கு வந்துவிடப் போகிறது? அமெரிக்கா போன்ற நாடுகளில் Nigger, Negro போன்ற சொல்லாடல்களை தடை செய்துள்ளதைப் போல!//

  நல்ல யோசனை ஆனால் இதை எந்த அரசியல்வாதியும் செய்ய மாட்டார்கள் ஓட்டிற்காக.

  தீண்டாமை என்பது தலைமுறை இடைவெளியில் தான் குறையும். இதற்கு பல தலைமுறைகள் காலம் எடுக்கும்.

  நான் சில மாதங்களுக்கு முன்பு இதை ஒட்டி எழுதிய பதிவு. தீண்டாமை எப்போது ஒழியும்? http://www.giriblog.com/2012/01/untouchability.html

 4. தினகர்

  கல்வியும் பொருளாதார முன்னேற்றமும் தான் சாதியத்தீயை களைய முடியும். பிற்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயமக்கள் கல்வி என்பதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். எந்த நிலை வந்தாலும், அனைத்து குழந்தைகளும் , குறைந்த பட்சம் பட்டதாரிகள் என்று உருவாக வேண்டும். அத்தோடு படிப்பிற்கேற்ற வேலை என்று காத்திராமல், சுயதொழில், வெளி நாட்டு வேலை என அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும். படிப்பு என்பது அறிவை மேம்படுத்துவத்ற்காக. பட்டம் என்பது இறுதிப்படிப்பும் அல்ல. துறை சார்ந்த தொடர்கல்வியும் கண்டிப்பாக அவசியம்.

  அரசாங்க வேலைகள் மட்டுமல்லாமல், தனியார் துறையிலும் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும்.. சற்று கால அவகாசம் எடுத்துக்கொண்டாலும் ஒரு நாள் ’எல்லோரும் சமம்’ என்ற நிலை கண்டிப்பாக உருவாகும்.

 5. Rajkumar

  இந்தக் கட்டுரையை வாழ்த்தத் தோன்றவில்லை. படித்து முடித்து வருத்தப்பட்டேன். தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்ற அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளைப் பார்த்து பொறாமைப்படாதீர்கள். மற்றவர்களும் அவர்களை மேலே கொண்டுவர முயற்சி செய்யலாம். நம் வீட்டில் பொருளாதார ரீதியில் நலிந்துபோய்விட்ட சகோதரனை சும்மாவா பார்த்துக் கொண்டிருப்போம். கைகொடுத்து தூக்கிவிடுவதில்லையா. அப்படித்தான் இட ஒதுக்கீடு. இந்த அண்டர்ஸ்டேன்டிங் வந்தால், தாழ்த்தப்பட்டவன் என்ற சொல் சான்றிதழ்களோடு நின்று போகும். நன்றி என்வழி!

 6. Ambethkumar

  Dear fellow Indians, just watching the human scavenging is a national shame. My heart bleeding whenever I’m watching this atrocity and compulsion on my Dalit brothers. Mr Prime Minister and defacto PM Soniaji… Please do some thing and show your humanity in this issue!

 7. MANNAI SENTHIL

  மிக சிறந்த கட்டுரை.. நேற்று இந்த நிகழ்ச்சியை நானும் கண்டேன். சில தமிழக நிகழ்வுகளும் இதில் இடம்பெற்றுள்ளன..குறிப்பாய் சிகப்பு – நீல இரத்தம் தமிழக காட்சி என எண்ணுகிறேன். பெரியாரும்,அண்ணாவும்,பழைய கருணானிதியும் முன்னெடுத்த சாதி மறுப்பு இப்பொழுது இல்லை. ஆராய்சியாளர் ஸ்டாலின் சொல்வது போல் திருமணத்தின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மட்டுமே இவ்வலம் குறையும். சாதீய வெறி என்பது.. கீழ்சாதி என தள்ளப்பட்டு பள்ளத்தில் கிடக்கும் சமுகத்துக்குள்ளேயே பரவி கிடக்கும் பாகுபாடும், அருந்ததியர், பறையர், பள்ளர், சக்கிலியர் இவர்களுல் கலப்பு திருமணமும் இல்லை. சில நாட்களில் மாறுகிற விடயமும் இல்லை.. மிக குறைந்த பட்சமாக கலப்பு திருமணம்.. 4 வகை பிரிவுக்குள்ளாவது (SC -ST ; BC; MBC ,& FC ) ஊக்குவிக்கப்படவேண்டும். முக்குலத்ததொர் என இப்பொழுதுதான் கொஞ்சம் துவங்கியிருக்கிறது. செட்டியார்-முதலியார்-வெள்ளாளர் கலப்பு பரவலாக்கப்பட வேண்டும். இதன் உள் கட்டமைப்பை சிதைக்க இப்படிதான் முயல வேண்டும். பல நூறு வருட நம்பிக்கைகள் ..தனக்கு இணை என்று நம்பப்படும் சாதிகளோடு கலப்பதில் அதிக சிரமம் வராது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாய் முற்றிலும் மறையும். பிராமிண ஆதிக்கம்..என்பது அவர்கலின் எண்ணிக்கையில் இல்லை.. அவர்கள் ஏற்றி வைத்த மனப்பாங்கில் இருக்கிறது. கடவுள் மறுக்கும் கமலே அதிக சாதீயம் வளர்த்தவர் திரைபடங்களில் சாதிய பெயர்களை தனது படங்களின் கதாபாத்திரங்களுக்கு அதிகம் பயன் படுத்தியவர். இது தான் உண்மை

 8. Unmai Virumbi

  Nice Article, yeah there is discrimination by the name of Caste in North … but at the same time just bullying Iyer does not seems the right way.. why not thevars and other community where they cannot just digest the Dalit thing… there are examples of these type of atrocities done even today… but picking out Iyer alone is unjustified.

 9. Manoharan

  சாதி வெறி என்பது கீழ்சாதி என்றும் மேல்சாதி என்றும் சிலரால் பிரித்துவைக்கப்பட்ட சாதிகளுக்குள் மட்டும் இல்லை. மேல்சாதி என்று கூறிக்கொள்ளும் சாதிகளுக்கு உள்ளேயே சாதிவெறி இருக்கிறது. சாதிவெறியால் கிட்டத்தட்ட 10 வருடம் வாழ்க்கையில் பின்னோக்கி போய்விட்டவன் நான். பலரும் சொல்வது போல் காதல் சாதி பார்ப்பதில்லை என்பது என் விஷயத்திலும் நடந்தது. மேல்சாதி என்று கூறிக்கொள்ளும் இரு வேறு சாதிகளை சேர்ந்தவர்கள்தான் நாங்கள் இருவரும். எங்களுக்குள் சாதி என்பதே இல்லை. எங்கள் வீட்டிலும் சாதி பார்க்கவில்லை. 12 வருட நட்பு, குடும்ப நண்பர்கள் என்று இருந்த எங்களுக்கு எதுவும் தடையில்லை என்று நினைத்தோம். எங்கள் வீட்டிலும் ஒகே. ஆனால் அவர்கள் பக்கத்தில் காதல் என்று தெரிந்தவுடன் ஒரிஜினல் முகம் வெளிபட்டது. நொறுங்கிபோனேன். எங்கள் காதல் திருமணத்தில் முடிய எவ்வளவோ முயற்ச்சி எடுத்தேன். முடியவில்லை. என்னை முடக்க அத்தனை வழிகளிலும் முயற்ச்சி எடுத்தனர். ஆனால் எங்கள் பகுதியில் அதிகம் பேர் இருக்கும் சாதியை சேர்ந்தவன் நான் என்பதால் என்னை அவர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அப்போது நான் சாதியின் வீரியத்தை மிக அருகில் உணர்ந்தேன். இதே இது சிலரால் கீழ்சாதி என்று வரையறுக்கப்பட்ட சாதியில் நான் பிறந்திருந்தால் என்னை முடித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் சாதி வெறி அந்த பெண்ணின் நெருங்கிய ரத்த வழி உறவுக்கு இரண்டாம் தாரமாக அவளை திருமணம் செய்து கொடுத்தபிந்தான் ஓய்ந்தது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த பையன் என் கிளாஸ்மேட். கிட்டத்தட்ட இந்த பிரச்சனையால் சில வருடங்கள் நான் சுத்தமாக முடங்கி போனேன். இன்றைக்கும் பழைய சம்பவங்களை நினைத்தால் இந்த சாதிவெறிதான் கண் முன் நிற்கிறது. காதல் சாதி பார்க்காமல் இருக்கலாம் ஆனால் அதை சுற்றி இருப்பவர்கள் அப்படி இல்லை.

 10. மிஸ்டர் பாவலன்

  //கிட்டத்தட்ட இந்த பிரச்சனையால் சில வருடங்கள் நான் சுத்தமாக முடங்கி போனேன். // (மனோகரன்)

  நண்பரே..தற்பொழுது உங்கள் status என்ன? Bachelor or married?
  (பதில் சொல்வதும், சொல்லாததும் உங்கள் விருப்பம்).

  நமது சமூகம் எப்படி என்றால் – பணம் இருப்பவன், வசதியானவன்
  சாதிவெறியை மீறி நடந்தால் விட்டு விடுகிறது. Foreign return, NRI
  என்றால் அவர்களுக்கு தனி கவனிப்பு தான். அவர்கள் வீட்டு வாசல்
  வந்ததும் ஆரத்தி எடுப்பதும், ‘டே! கடைல போய் ரெண்டு கூல் ட்ரிங்க்ஸ்
  வாங்கிட்டு வா!” என அனுப்புவதும் ராஜ உபசாரம் தான். எல்லாம்
  பணம் படுத்தும் பாடு.

  மிடில் கிளாஸ், ஏழை என்றால் சமூகம் trouble கொடுக்கிறது.

  ( நான் ஒரு பக்கா மிடில் கிளாஸ். எளிமையை விரும்புபவன்.)

  ஜனனி ஐயர், நரேஷ் ஐயர் இவர்கள் மலையாளிகள் என நினைக்கிறேன்.
  கேரளாவில் பலர் ஜாதி பெயர் சேர்த்து தான் birth certificate வாங்குகிறார்கள்.
  இந்த இருவரும் தமிழ் படங்களில் நடிக்கும் போதோ (ஜனனி), இல்லை
  பாடும் போதோ (நரேஷ்), ஜாதிப் பெயரை விட்டு விட்டு ஷார்ட்டாக
  அவர்கள் பெயரை ஜனனி, நரேஷ் என பயன்படுத்தலாம். இதை நாம்
  அன்பாக அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 11. r.v.saravanan

  கடுமையாக, சட்டரீதியாக சாதி ஒழிப்பு என்பது நிறைவேற்றப்பட்டாலேயொழிய சாதி என்னும் நோய் தாக்கப்பட்ட சமூகமாகவே இந்திய சமூகம் இருக்கும்.

  எஸ் 100 பெர்சென்ட் உண்மை

 12. குமரன்

  இந்தக் கட்டுரையின் பொருள் எனக்கு நானே சுயமாக விதித்த விடுமுறைக்கு விடுமுறை அளித்துவிட்டது!

  சாதீயம் நமது நாட்டின் மிகப்பெரிய சாபக் கேடு. நாம் முன்னேறவிடாமல் தடுப்பதில் சாதீயம், ஜனத்தொகைப் பெருக்கம் இவை இரண்டும் போட்டி போட்டு முன்னுக்கு வருகின்றன. இவற்றின் குழந்தைகளாகத்தான் வறுமை, படிப்பறிவின்மை ஆகியவை வருகின்றன.

  இந்தச் சாபக் கேட்டுக்கு அளிக்கப்பட்ட விமோசனமே, அடிமைசெய்து கொடுமை செய்த பாவத்துக்கான பரிகாரமே (முழுமையாக அல்ல, சிறிதளவிலான ) நமது அரசியல் சாசனத்தில் உள்ள இட ஒதுக்கீடு சட்டப் பிரிவுகள்.

  மனித மலத்தை மனிதன் அல்லும் அளவுக்கு இன்னமும் இருப்பது கொடுமை. அவலம்.

  வினோ,

  இதற்காகவே ஒரு பகுதியை தனியாக ஒதுக்கி அடிக்கடி இந்தப் பொருளில் கட்டுரைகளை வெளியிடுதல் ஒரு நல்ல முயற்சியாக அமையும். ஒருவகையில் இந்தத் தளத்திலேயே இந்த விஷயத்துக்கு ஒரு இட ஒதுக்கீடு செய்தல் சரியாக இருக்கும். அடிக்கடி இந்தப் பொருளில் விவாதங்கள் வருவது குறைந்த பட்சம் இந்தத் தளத்துக்கு வருவோரையாவது சாதீயப் பார்வைகளில் இருந்து நல்ல வழிக்குக் கொண்டு வரும்.

 13. குமரன்

  கிரி

  உங்கள் பக்கத்தில் உள்ள உங்கள் அனுபவங்களையும் பார்வையையும் மிக அருமையாக, உளமார, நல்ல உணர்வு கலந்து எழுதி இருக்கிறீர்கள். பரவலான வெகுவான நடுநிலைப் பார்வை. உலகார்ந்த அனுபவப் பார்வை. எனது பாராட்டுக்கள்.

 14. குமரன்

  மனோகரன், உங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் வருத்தத்தைத் தருகின்றன. சாதீயத்தின் பாதிப்புகள் சாதிகளைத்தாண்டித் தாக்கத்தான் செய்கின்றன. வேதனையான விஷயம். மனிதன் பார்க்கும் சாதிப் பிரிவினைகளை பிரசினைகளின் தாக்கம் பார்ப்பதில்லை. மன ரீதியான கஷ்ட நஷ்டங்கள் அனைவருக்கும் பொது என்பதை மனிதன் உணராமல் இதற்கு விடிவே இல்லை.

 15. anban

  “நிச்சயமாக இறைவன் மனிதர்களுக்கு அநீதி இழைப்பதில்லை. எனினும், மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”
  அல் குரான் 10:44

 16. my india 2020

  எங்கும் இருட்டு ……
  விடியவில்லையே என்று மருகி,
  விடியுமா என்று ஏங்கி,
  இருட்டிலேயே இருந்து இறந்தும் விடுவோம் ஒரு நாள்.

  சபிக்கப்பட்ட வாழ்க்கை.
  சாதி எனும் சகதியில் உழன்று நாம் என்றோ நாரிவிட்டோம்.
  நிச்சயம்
  இருட்டிலேயே இருந்து இறந்தும் விடுவோம் ஒரு நாள்.

 17. SIVAKUMAR

  ஓகே… ஓகே….., முதலில் இட ஒதுக்கீடு என்ற பெயரில் தம் ஜாதியின் பெயரை சொல்லி சலுகைகளை அனுபவிப்பவர்கள் இருக்கும் வரை ஜாதியும் இருக்கும் .

 18. மிஸ்டர் பாவலன்

  ///I was married in 2005 and blessed with a girl child./// (மனோகரன்)

  மனைவி அமைவதெல்லாம்
  இறைவன் கொடுத்த வரம்
  மனைவி அமைவதெல்லாம்
  இறைவன் கொடுத்த வரம்
  மனது மயங்கி என்ன?
  உனக்கும் வாழ்வு வரும்
  மனது மயங்கி என்ன?
  உனக்கும் வாழ்வு வரும்
  -கவியரசு கண்ணதாசன் (KB படம், 1976)

 19. மிஸ்டர் பாவலன்

  (யாரோ சொன்ன ஒரு சோகக் கதையை புதிய
  மெட்டில் தருகிறேன். இது மனோகரன் கதை அல்ல!)

  எங்கிருந்தாலும் வாழ்க
  புதிய துணையுடன் வாழ்க
  பாரின் மாப்பிள்ளை வாழ்க
  பர்கரும் பிஸ்ஸாவும் வாழ்க
  வாழ்க…வாழ்க…

  (எங்கிருந்தாலும் வாழ்க)

  டிவெட்டரில் ஒருவன் காத்திருந்தாலும்
  போட்டோவை இணைப்பில் பார்த்திருந்தாலும்
  ‘Chat’ டிய நாளை நினத்திருந்தாலும்
  கண்மணியே நீ வாழ்க
  வாழ்க…வாழ்க…

  (எங்கிருந்தாலும் வாழ்க)

  வருவாய் என நான் ‘என் வழி’ நின்றேன்
  தனி வழி வந்தாய் அமெரிக்கா சென்றாய்
  பாஸ்போர்ட் வாங்கும் கடமையும் தந்தாய்
  கஸ்டமரே! நீ வாழ்க
  வாழ்க…வாழ்க…

  (எங்கிருந்தாலும் வாழ்க)

  -== மிஸ்டர் பாவலன் ===-

 20. Srinivasan

  நல்ல கட்டுரை ஆனால் வருத்தம் நிறைந்தது. ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் குறை சொல்லும் போக்கு மாறவேண்டும். இன்றும் தென் தமிழகத்தில் ஜாதி கலவரம் நடப்தற்கு முக்கிய காரணம் அங்கு வேரோன்றி இருக்கும் இரு குறிப்பிட்ட இனத்தையே சாரும். எந்த அரசியல் கட்சிக்கு தைரியம் இருக்கிறது, ஒரு பொது தொகுதியில் தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட வேட்பாளரை அறிவிப்பதற்கு? நாமே தனி தொகுதி என்று அவர்களை ஒதுக்கிவிட்டுவிடோம். நல்ல கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இன்று BC/MBC அனைவரும் தங்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறி கொள்ள ஆசை படுகிறார்கள். இது வெறும் கல்வி மற்றும் வேலைக்காக, மற்றபடி சமுதாய மாற்றத்திற்காக இல்லை.

 21. Karthik Ayyanar.M

  நீங்க கர்ம வீரர் காமராஜர்யே மறந்திடிக, அவர் ஒருத்தருதா எல்லரும் எல்லா ஜாதிஎனரும் படிக்கனும் அசைபட்டவரு.அண்ணால ஒரு டுப்பாகுறு.ஒரு தலித் சமுகத்தை முதல் முதல அமச்சரக்க்கி மீனாச்சி அம்மன் கோவில் குமபவிசகம் செய்தவர்.எல்லோரும் மருந்துரங்க எல்லோருக்கும் அவரை நாபக படுத்துங்க தயவுசெய்து

 22. மிஸ்டர் பாவலன்

  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
  செய்தொழில் வேற்றுமை யான். (குறள்-972)

  சாலமன் பாப்பையா உரை:

  எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.

 23. enkaruthu

  அருமையான கட்டுரை.என் மனதில் உள்ள ன் நினைதையைநா எல்லாம் அனைத்தையும் நண்பர் சொல்லிவிட்டார்..நான் ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.கடந்த பிளஸ் டூ ரிசல்ட் ல் சாதித்ததெல்லாம் ஐயர் மாணவர்கள் கிடையாது.தனக்கு இட ஒதுக்கீடு இருந்தாலும் கூட உச்சபட்ச மார்க் எடுத்தார்கள் இந்த ஒடுக்கப்பட்டவர்கள் . இப்படி ஒரு நிலை இருக்க ஐயர் கூட்டம் என்னமோ அவர்களின் ஜாதிகரார்கள் அனைத்து மாவட்டகளிலும் முதல் மார்க் எடுததுபோலவும் அவர்களுக்கு சீட் கொடுக்காமல் ஒடுக்கபட்டவருக்கு கொடுத்ததுபோல இங்கே புலம்புகிறார்கள்.ஐயர் நண்பர்களே கூலி வேலை செய்யும் அனைவர்களும் (தேங்க்ஸ் டு அம்பேத்கர் மற்றும் காமராஜர் ) உங்களை போலவே இன்று பேப்பர் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் நீங்கள் முன் இருந்த மக்களை பேச்சில் முட்டாலாகியதுபோல் இன்று உள்ள விஷயம் தெரிந்தவரை முட்டலாக்கமுடியது .நான் சொல்கிறன் இங்கே ஜெயா என்கிற பிரமினர் இருந்தாலும் சரி மத்தியில் உங்கள் என்னதிர்கேப்ப பிஜேபி வந்தாலும் சரி இந்த இட ஒதுக்கீட்டை ஒன்றும் கை வைக்கமுடியாது

 24. மு. செந்தில் குமார்

  மிக மிக அருமையான கட்டுரை. அருமையான பின்னுட்டல்களும்கூட.

 25. Manoharan

  பாவலன் முதலில் எனக்கு சோகமே இல்லை. இப்போது வேறு வாழ்க்கை. நீங்களாக எதுவும் கற்பனை செய்து கொள்ளவேண்டாம். LOL .

 26. குமரன்

  இன்றைய செய்தி ஒன்று இதோ:

  “சமத்துவப் பெரியார்” கலைஞர் கருணாநிதி அறிக்கையில் இருந்து:
  ///ஸ்ரீவில்லிப்புத்தூர் கம்மாபட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஒன்றில் ஆதிதிராவிடர் பெண்கள் சத்துணவு சமைத்த காரணத்தால், வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு மாணவர்களை, பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று தடுத்துள்ளனர்.அதைவிடக் கொடுமை, வேற்றுச் ஜாதியினரின் எதிர்ப்புக்கு அரசு பணிந்து, சத்துணவுக் கூடத்தில் பணிபுரிந்து வந்த, ஆதிதிராவிடர் ஊழியர்களான மரகதவல்லி, வீரலட்சுமி ஆகியோரை, அங்கிருந்து பணி மாற்றம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். தீண்டாமைக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. இந்த அலுவலர்களை மாற்றம் செய்துள்ள இடத்திலும், இது போலவே வேறு ஜாதியினர் தங்கள் பிள்ளைகளை சாப்பிட விட மறுத்தால், அப்போது அரசு என்ன செய்யும்? ////

  இப்படி தீண்டாமையைச் செய்த சாதியினர் இன்னார் என்று கருணாநிதி அடையாளம் காட்டாமல் வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக மழுப்புதல் தவறு.

  தீண்டாமை செய்வோ இன்ன சாதியினர் என்று பகிரங்கமாக அடையாளம் காட்டினால் ஒழிய அவர்கள் திருந்த மாட்டார்கள். வெளிப்படையாகக் கண்டித்தால் கலவரம் வரும் என்பதெல்லாம் பம்மாத்து வேலை. பள்ளர் என்றும் தேவேன்ன்திரகுல வேளாளர் என்றும் வெளிப்படையாக அறிவிக்காமலா பரமக்குடியில் கலவரமும் துப்பாக்கி சூடும் நடந்தன?

  ஆதிக்க சாதிகளை மக்களுக்கு அடையாளம் காட்டாவிட்டால் அவை எப்படித் திருந்தும்?

 27. அன்பு

  அந்த புகைப்படத்தை பார்த்ததும் கண்கள் குளமாகிவிட்டன, என்று மடியும் இந்த சாதி வெறி?

 28. sivakumar

  fantastic article. a must needed article for our youngsters. yes, still we have the responsibility to eradiacte this culture.

 29. ரா.ரத்தின வேல் பாண்டியன்

  எந்த திராவிடம் சாதிக்கெதிராக போராடியதோ அதே திராவிடம் ஆட்சி அதிகாரத்திற்காக சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பது வேதனையான விசயம்…ஒரு தாழ்த்தபட்ட இனத்தை சேர்ந்த தலைவரை எந்த திராவிட கட்சிகளும் பொது தொகுதியில் நிறுத்துவதில்லை…..

 30. குமரன்

  ரத்தினவேல் பாண்டியன் அவர்களே,

  அதை விடுங்கள்.
  உதாரணத்துக்கு …..
  தமிழக அமைச்சரவையில் மொத்தம் 32 அல்லது 33 அமைச்சர்கள் இருப்பது வழக்கமாகி விட்டது. பதினைந்து சதவிகிதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஏழரை சதவிகிதம் பழங்குடியினருக்கும் என்றால்,

  குறைந்தது ஐந்து தலித் அமைச்சர்களாவது இரண்டு பழங்குடி அமைச்சர்களாவது இருக்க வேண்டுமா இல்லையா?

  இதுவரை எந்த அமைச்சரவையிலும் அதிக பட்சம் இரண்டு தலித் அமைச்சர்களுக்கு மேல் இருந்ததே இல்லை. பழங்குடியினர் — எப்போதும் ஒன்று கூட இருப்பதில்லை.

  ஆக தலித், பழங்குடியினரது கோட்டாவில் இருந்து ஐந்து அமைச்சர்களை மற்ற சாதிக்காக “சமத்துவப் பெரியார்” கருணாநிதி / “சமூக நீதி காத்த வீராங்கனை” ஜெயா உள்பட எல்லா முதலமைச்சர்களும் தங்கள் கோட்டாவாக ஆக்கி விட்டார்கள். இவற்றை இவர்கள் பெரும்பாலும் “ஆதிக்கச் சாதியினருக்கே” தந்து தமது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்கின்றார்கள்.

  1967 க்கும் முன்னால் எட்டு அமைச்சர்கள்தான். அவர்களில் ஒருவர் தலித் என்பது குறிப்பிடத் தக்கது. அது கிட்டத்தட்ட 13 சதம் வந்துவிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *