BREAKING NEWS
Search

ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு? கூவுகிற போராளிஸ்… கொஞ்சம் பொத்துறீங்களா?

ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு? கூவுகிற போராளிஸ்… கொஞ்சம் பொத்துறீங்களா?

– ஆர்.எஸ்.அந்தணன்

Rajini-pol

“நான் அரசியலுக்கு வந்தால்…”

அவர் பேசியது இந்த மூணே வார்த்தைகள்தான். ரஜினியால் கிடுகிடுத்துப் போய்விட்டது நாடு! தொலைக்காட்சிகள் அத்தனையிலும் இது குறித்த விவாதங்கள்தான். செய்தித்தாள்களில் எல்லா பக்கங்களிலும் இது குறித்த கருத்துக்கள்தான். சோஷியல் மீடியா பக்கம் போனால், “கன்னடனுக்கு இங்க என்ன வேலை? ஓடு பெங்களூருக்கு” என்று வெற்றிலையை மென்று ரத்தமாக துப்புகிறது ஒரு கூட்டம்!

“நடிகனுக்கு எதுக்கு இந்த ஆசை?” என்று இன்னொரு கூட்டம் வாயை வில் போல திறந்து, விசுக் விசுக்கென்று விஷ அம்புகளை வீசிக் கொண்டிருக்கிறது.

“ரஜினி இந்த தமிழ்நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்திருக்கிறாரா? அவருக்கு எதற்கு சி.எம் ஆசை?” என்று இன்னொரு கூட்டம் ஒவ்வொரு பற்களையும் கோடரியாக்கி கூர் கூராக அறுத்துத் தள்ளுகிறது.

பிரபல எழுத்தாளர் பாமரன் கூட, “ரஜினி சி.எம் ஆகிவிட்டால் கர்நாடக அணையில் குண்டு வச்சு தமிழ்நாட்டுக்கு தண்ணி திறந்து விடுவாரா? அல்லது இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஆதரவாக படகில் போய் அந்நாட்டு ஜெயிலை உடைத்து மீனவர்களை மீட்பாரா?” என்று கேள்வி கேட்கிறார்.

இப்படி படித்தவன்… படிக்காதவன்… அறிவாளி… எழுத்தாளர்… கம்னாட்டி… முட்டாப்பய… என்று எல்லாரும் கூடி கூடி ரஜினிக்கு எதிராக பேசுவதை கேட்டால் அடிவயிற்றிலிருந்து எழுகிற சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

ஐயா பெரிய மனுசனுங்களா? ரஜினி வந்தால் தமிழ்நாட்டு அரசியலே உருப்படாமல் போய் விடும் என்று உறுமி வரும் கருமி நெஞ்சங்களே… நீங்கள் என்ன காமராஜரும் கக்கனும் ஆள்கிற நாட்டிலா இருக்கிறீர்கள்? பொறுக்கிகளும் கொள்ளைக்காரர்களும் நம்மை ஆளும் நாட்டில், இன்னொரு நபர் வந்துதான் தொலைக்கட்டுமே? அவரும் பொறுக்கியா, புத்தனா என்பதை காலம் தீர்மானிக்கட்டுமே?

சரி… உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் நான் அடுக்கடுக்காக பதில் சொல்கிறேன்.

ரஜினி நாட்டுக்காக போராடி ஜெயிலுக்கு போயிருக்கிறாரா? அவருக்கு ஏன் முதலமைச்சர் ஆசை? இதுதானே உங்கள் முதல் கேள்வி. அட நியாயவானுங்களே… தினந்தோறும் பொதுப் பிரச்சனைக்காக ரயில் மறியலும் பஸ் மறியலும் செய்து, உண்ணாவிரதம் இருந்து போலீசிடம் லத்தியடி வாங்குவது DYFI என்ற அமைப்பின் இளைஞர் கூட்டம்தான். நீங்கள் நியாயவானாக இருந்திருந்தால், அவர்களில் ஒருவனையாவது எம்.எல்.ஏ வாக்கி அழகு பார்த்திருக்க வேண்டியதுதானே? அட… அது கூட வேண்டாம். உங்கள் ரேஷன் கார்டை காட்டி ஒரு முறையாவது அவனை ஜாமீன் எடுத்திருக்கிறீர்களா?

இப்படி நமக்காக அடி வாங்குகிறவனுக்கே ஒரு மண்ணும் உருட்டி வைக்காத நீங்கள், எந்த நம்பிக்கையலடா தோள் தட்டுகிறீர்கள்?

சரி… DYFI வேண்டாம். இந்த வைகோ? எவ்வளவு கேவலப்படுத்தினாலும், நாலாம் நாள் தோளை சிலுப்பிக் கொண்டு துண்டை இழுத்துக் கொண்டு பொதுப்பிரச்சனைக்காக வெயிலில் கிடந்து போராடுகிறாரே? அவரை மனுஷனாகவாவது மதிக்கிறீர்களா? அறம் ஒன்றே அற்புதம் என்று பொதுவாழ்வில் பொங்கி வருகிற தமிழருவி மணியன் ஒரு கட்சி ஆரம்பித்தாரே… அதன் பெயர் என்ன என்றாவது உங்களுக்கெல்லாம் தெரியுமா?

சரி… உங்கள் ரெண்டாவது கேள்விக்கு வருகிறேன்.

ரஜினி ஒரு கன்னடன். தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆள வேண்டும். இதுதானே உங்கள் முழக்கம்?

ஒட்டுமொத்த இந்தியாவுக்கு ஒரு தமிழன் ஜனாதிபதி ஆகும்போது தமிழன் என்று சந்தோஷப்படுகிறாய். பல ஆயிரம் மைல்களை தாண்டி அமெரிக்காவிலிருக்கும் புளோரிடா மாநிலத்தில் ஒரு தமிழன் கவர்னர் ஆகிவிட்டால், தமிழன்டா என்று பெருமைப்படுகிறாய். இப்படி தமிழனுக்கு இன்னொரு இடத்தில் பெருமை கிடைக்கும் போது வாயெல்லாம் பல் ஆகும் நீ… இன்னொருவனுக்கு இங்கே இடம் கேட்டால், “நான் தமிழன்டா. ஒருத்தனுக்கும் இடம் தர மாட்டேன்” என்று மார் தட்டுகிறாய். சுருக்கமாக சொன்னால், உன் தாலியை அறுக்கறதா இருந்தாலும் அவன் தமிழனா இருக்கணும். உன் குடியை கெடுப்பவனா இருந்தாலும் அவன் தமிழனா இருக்கணும். அப்படிதானே? (மேற்படி தமிழன் இந்த ரெண்டு வேலையையும் தானே கடந்த பல ஆண்டுகளாக இங்கே செய்து கொண்டிருக்கிறான்?)

சரி… மிஸ்டர் பொங்குமாங்கடல்களின் மூன்றாவது கேள்வி என்ன? “ரஜினி இங்க சம்பாதிச்சு கர்நாடகாவுல சொத்துக்களா வாங்கிப் போட்ருக்காரு. தமிழ்நாட்லயா வாங்கிப் போட்டாரு?”

அடேய் பக்கிகளா? நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். நீங்கள் கொண்டாடும் தமிழின போராளிகளுக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு இல்லையா? அதில் கோடி கோடியாக பணம் இல்லையா? அதே தமிழன போராளிகள் தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலேயும் சொத்துக்களை குவித்து வைத்திருக்கவில்லையா? ஊழலால் அடித்த பணத்தை இப்படி உலகம் முழுக்க கொட்டி வைத்திருக்கிற அவர்களுக்கு முன், சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணத்தை அவர் பிறந்த மாநிலமான கர்நாடகத்தில் சேமித்து வைத்திருப்பது தேசக் குற்றமா?

“எந்த பொதுப் பிரச்சனைக்காகவாவது ரஜினி குரல் கொடுத்திருக்கிறாரா?” இது உங்களின் நான்காவது கேள்வி.

சரியான கேள்வி. கேட்க வேண்டிய கேள்வி. பொதுப்பிரச்சனைக்காக குரல் கொடுத்த சிலரது பிளாஷ்பேக்கை ஆக்ஷன் ரீப்ளே பண்ணுவோமா?

வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற பன்நாட்டு வணிகத்தை இங்கே அனுமதிக்க மாட்டோம் என்று மருத்துவர் பேமிலி குரல் கொடுத்ததே…? அதன் ரிசல்ட் என்ன என்று கொஞ்சம் சொல்றீங்களா போராளீஸ்?

ஒருபுறம் மதுபான ஆலையை சொந்தமாக துவங்கி டன் டன்னாக பீர் பாட்டில்களாகவும் பிராந்தி பாட்டில்களாகவும் கடைக்கு சப்ளை செய்து கொண்டே, இன்னொரு பக்கம் மதுவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கூச்சலிடும் ‘முன்னாள்’களின் முனகல்தான் பொதுப்பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் ஸ்டைல் என்றால், அது ரஜினியிடம் இல்லைதான்!

இப்படி நீங்கள் எழுப்பும் எல்லாவற்றுக்கும் இங்கு நாக்கை பிடுங்கிக் கொள்கிற அளவுக்கு பதில் உண்டு. ஆனால் என்னையும் ரஜினி ரசிகன் என்று முத்திரை குத்திவிடுவீர்களோ என்கிற அச்சத்தால் நிறுத்திக் கொள்கிறேன்.

ரஜினியை விமர்சிக்க இதைவிட ஆயிரம் விஷயங்கள் என்னிடம் உண்டு. நான் பலமுறை ரஜினியை கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்கிற உரிமை உனக்கும் எனக்கும் மட்டுமல்ல…. அவருக்காக விசிலடிக்கும் கூட்டத்திற்கு கூட இல்லை என்பதுதான் இந்திய ஜனநாயக பெருங்குடி நாட்டின் நிதர்சனம்.

ரஜினி, மோடிக்காக கூவுகிறாரோ? கோடிக்காக கூவுகிறாரோ? முதலில் வரட்டும்…. வந்து நிற்கட்டும். நல்லது செய்தால் நல்லது! இல்லையென்றால் நாட்டுமக்களின் தாலியறுத்தவர்கள் லிஸ்ட்டில் இந்தாளையும் வைத்து கும்பிட்டுவிட்டு போகிறோம்.

பிக்காஸ்… எங்களுக்கு முதுகுத்தோல் கொஞ்சம் ஸ்டிராங் மச்சி!

(ஆர் எஸ் அந்தணன் நியூதமிழ்சினமா.காம் இணையதளத்தின் ஆசிரியர், சினிமா விமர்சகர்)
5 thoughts on “ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு? கூவுகிற போராளிஸ்… கொஞ்சம் பொத்துறீங்களா?

 1. ஸ்ரீகாந்த்.1974

  நல்லவர் லட்சியம் !
  வெல்வது நிச்சயம்!!

 2. sidhique

  அய்யா தமிழ் காவலர்களே… எங்களை வாழவிடுங்கள்!
  Jun 03, 20173
  cmrajini

  மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ்நாட்டை தமிழந்தான் ஆளவேண்டும் என்று எங்களுக்காக உயிரை வருத்தி குரல் கொடுக்கும் தமிழ் காவலர்களுக்கு…

  இப்ப உங்களுக்கு என்ன வேண்டும் ? தமிழ்நாட்டை ஒரு தமிழந்தான் ஆளவேண்டும் ? சரி இப்போது யார் ஆள்கிறார்கள் ? தமிழன்தானே ? இந்த தமிழன் தலைமையிலான ஆட்சி காலம் இன்னும் நான்கு வருடங்கள் பாக்கி இருக்கிறது …அப்புறம் எதற்கு கூப்பாடு ?

  சரி அது போகட்டும் ..முதலில் எங்கள் வாழ்க்கையைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ? நாங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளும், எங்கள் வாழ்க்கைத் தரம் கடந்த பல வருடங்களாக அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருப்பதை பற்றியும் தெரியுமா உங்களுக்கு ? கடுமையான விலைவாசி ஏற்றம், ஆனால் கடந்த பல வருடங்களாக அதே வருமானம்… பருவ மழை பொய்த்து விவசாயம் பட்டுப் போய்விட்டது. ராக்கெட் வேகத்தில் சென்றிருக்கவேண்டிய தொழில் ஆமை வேகத்தில் பயணிக்கிறது. முறையான குடிதண்ணீர் இல்லை, சாலை வசதிகள் சரியாக இல்லை. மருத்துவமனை பக்கத்தில் போகவே பயமாக இருக்கிறது. கொள்ளை அடித்துத்தான் மருத்துவமனைக்கு செலவு செய்யவேண்டும் போன்ற நிலை இருக்கிறது. கல்வி பற்றி கேட்கவே வேண்டாம். ப்ரிகேஜுக்கு கூட லட்சங்களில் கட்டணம். மருத்துவக் கல்லூரிகளில் கோடிகளில் கட்டணம். எவ்வளவு சம்பாதித்தாலும் பற்றாக்குறை. எவ்வளவு உழைத்தாலும் போதாத வருமானம். தினசரி வாழ்க்கையை ஓட்டுவது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?

  காமராசரை தோற்கடித்த பாவத்துக்கு இன்னும் பரிகாரம் தேடிக்கொண்டிருக்கிறான் தமிழன். கடந்த 40 வருடங்களாக தமிழன் அதிகமாக கேட்ட வார்த்தைகள்…. ஊழல், ஊழல் கமிஷன், ஊழல் குற்றத்தில் சிறை, 2ஜி ஊழல்,சுடுகாட்டு கூரை ஊழல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஊழல், டான்சி ஊழல், அன்னிய செலாவனி ஊழல், மேக்சிஸ் ஊழல்… இப்படி முன்னால் வைக்கப்படும் பெயர்தான் மாறியதே தவிர, அந்த ஊழல் என்ற வார்த்தை இன்று வரை மாறவில்லை. தமிழன் வாழ்க்கையோடு பின்னிப் பினைந்துவிட்டது ஊழல்.

  கரும்புக்கு சரியான விலையில்லை, பயிர் கடன் கட்ட முடியவில்லை. ஆனால் டாஸ்மாக் வருமானம் கொழிக்கிறது. மிக்சியும்,கிரைண்டரும், டிவியும்,லேப்டாப்பும் இலவசமாக கிடைக்கிறது ஆனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க இவைகளை விற்றாலும் போதாது.

  என்ன காரணம்? எங்களின் வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தலைவர்கள் இல்லை. மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என நினைக்கும் தலைவர்கள் குறைந்து, தான் நன்றாக இருக்கவேண்டும் என நினைக்கும் தலைவர்கள் பெருகிவிட்டனர். எங்கள் பணத்தை கொள்ளையடித்து பின் அதைக் காப்பாற்ற செலவு செய்து, பின் அது தொடர்பான வழக்குகளை சந்திக்கவே எல்லா நேரத்தையும், எங்கள் பணத்தையும் செலவிட்டு, பின் எங்களுக்கு குவார்டரும், பிரையாணியும் 500,1000 பிச்சை போட்டு பின் மீண்டும் கொள்ளையடித்து…

  தமிழனின் வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் இருக்கிறது ? பேயாய் உழைக்கும் மக்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் தமிழ்நாடு இந்தியாவின் கடைசி மாநிலமாக இருந்திருக்கும். தென் மாவட்டங்களுக்கு வேலை கொடுக்கும் மேற்கு மாவட்டங்கள், வந்தாரை வாழவைக்கும் வட மற்றும் சென்னை மாவட்டங்கள்…. இப்படி நாங்களேதானே எங்களுக்கான வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் செய்யும் என விட்டிருந்தால் இன்றைக்கு பிச்சைக்கார மாநிலமக்களாகத்தான் நாங்கள் இருந்திருப்போம்.

  சென்னையில் வெள்ளம் வந்த போது எங்கள் மக்களை நாங்கள்தானே மீட்டெடுத்தோம்? எங்கள் கலாசாரம் நசுக்கப்பட்டபோது நாங்களே ஒன்று திரண்டு மீட்டெடுத்தோம். சாதி, மொழி, இன பாகுபாடு பார்த்தா ஒன்று திரண்டோம்? யாரையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எந்நேரமும், இதே வேலையாய் நாங்கள் இருக்க முடியுமா? எங்களுக்கான எல்லாவற்றையும் நாங்களே செய்துகொள்ளவேண்டும் என்றால் அரசாங்கம் எதற்கு? நாங்கள் ஏன் வரி கட்டவேண்டும்?

  IMG_7829_800x533

  நாங்களும் மாறி, மாறி ஓட்டுப்போடு சலித்துவிட்டோம். ஊழல்வாதிகள் என்று தெரிந்தும் ஓட்டுப் போட்டோம். என் இன மக்கள் சாகும்போது வேடிக்கை பார்த்தவர்கள் என்று தெரிந்தும் ஓட்டுப் போட்டோம். இவர் வேண்டாம் என்றால் அவர், அவர் வேண்டாம் என்றால் இவர். இருவரும் வேண்டாம் என இன்னொருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றால் யாருக்குக் கொடுப்பது ? பொது வெளியில் அநாகரிகமாக அடிப்பவருக்கும், மொழிவெறியைத் தூண்டுபவருக்கும், சாதி வெறியை வளர்ப்பவருக்குமா ?

  எங்களுக்காக ஒரு நொடி கூட கவலைப்பட யாரும் தயாரில்லை. பெரிதாக எதுவும் செய்யாவிட்டாலும் ஒரு அரணாக இருந்தவரும் இப்போது இல்லை. யார் சொல்வது சரி, யார் சொல்வது தவறு என்று கூடத் தெரிவதில்லை. தமிழ், தமிழ் மொழி என்ற உணர்வு எங்களுக்கு நிறையவே உள்ளது. யாரும் பாடம் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் உணவு, உடை, இருப்பிடம் கிடைத்துவிடுமா? தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜெகத்தினை அழித்துவிடுவோம் என்றார் பாரதி. ஆனால் லட்சக்கணக்கில் ஒரு வேளை உணவில்லாமல் இருக்கிறார்கள். எத்தனை ஜெகத்தை அழிப்பது?
  ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் ஊழல்வாதிகளிடமிருந்தும், திருடர்களிடமிருந்தும், சாதி, மத, மொழி வெறியர்களிடமிருந்தும் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. வெறும் அடிமைகளாகத்தான் கிடக்கிறோம்.

  போதுமய்யா… இனியும் முடியாது… எங்களுக்கு எதுவுமே கண்ணுக்கு தெரியவில்லை. எங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு நேர்மையான தலைமை, ஒரே ஒரு தலைமை. எங்கள் வேலையை நாங்கள் செய்தால் எங்களைப் பார்த்துக்கொள்ள அரசாங்கம் இருக்கிறது என்று நாங்கள் நம்பிக்கையாக வாழ ஒரு தலைமை. எங்கள் காசு எங்களுக்கே என்று நிம்மதியாக இரவில் தூங்க ஒரு பாதுகாப்பான தலைமை. அவ்வளவே… தமிழனா, மலையாளியா, கன்னடனா, இந்துவா, முஸ்லிமா, கிருத்துவனா, செட்டியாரா, தலித்தா, கவுண்டரா, நாடாரா, தேவரா… எதுமே எங்களுக்குத் தேவையில்லை. நல்ல நேர்மையான மனிதன், எங்கள் வாழக்கை தரம் உயரவேண்டும் என நினைக்கும் ஒரு தலைவன் மட்டுமே வேண்டும்.

  தமிழன், தமிழ் என்று சொல்லி இத்தனை நாள் பொழப்பு ஓட்டியது போதும். எங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி தூண்டியே எங்களுக்கு நல்லது செய்ய யாரையும் வரவிடாமல் தடுத்தது போதும். உங்கள் கோஷங்களால் உங்கள் பொழப்பு ஓடுகிறதே தவிர எங்கள் பொழப்பு டாஸ்மாக் கடை வாசலில் சந்தி சிரிக்கிறது. ஏற்கனவே இலவசத்திலும், போதையிலும் கிடக்கும் தமிழனிடம் மொழி வெறியையும் திணிக்காதீர்கள். இந்தி வேண்டாம் என்று போராடிய அத்தனை தலைவர்களின் பேரன்களும் இந்தி நன்றாக பேசுகிறார்கள். இங்கே நாங்கள் காட்பாடி தாண்டினால் திணறுகிறோம்.

  எங்கள் பொருளாதாரம் பக்கவாதம் வந்தது போல் கிடக்கிறது. எங்கள் விவசாயம் செழிக்க வேண்டும், எங்கள் தொழிற்சாலைகள் முன்னேற வேண்டும், எங்களுக்கு குறைந்த செலவில் கல்வியும், சுகாதாரமும் வேண்டும், எங்கள் இளைஞர்களுக்கு நிரந்திர வேலை வேண்டும். நேற்றைக்கு உருவான மாநிலங்கள் எல்லாம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக்கொண்டிருக்கும்போது… அய்யாயிரம் வருட தமிழினம் எட்டுகால் பாய்ச்சலில் பின்னோக்கிப் போய்க்கொண்டிருப்பதை இனியும் சகித்துக் கொள்ளமுடியாது .

  தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்று கூப்பாடு போடுகிறீர்களே அப்படிப்பட்ட தமிழன் உருவாகவிடாமல் யார் தடுத்தது ? ஏன் எங்களுக்கு நீங்கள் தமிழன், தமிழன் என்று சொல்பவர்களிடம் நம்பிக்கை வரவில்லை ? கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தீர்களா ? எங்களின் அன்றாட வாழ்க்கையை முன்னேற்றக்கூடிய எந்த திட்டமோ, யோசனையோ உங்களிடம் இல்லை. எங்கள் பிரச்சனைக்கான எந்த நடைமுறை தீர்வும் உங்களிடம் இல்லை. பின் எப்படி உங்களை நம்புவது ? எங்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு எந்த குரலும் கொடுக்காமல், தமிழ் தமிழ் என்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்தால் உங்களை நாங்கள் புறக்கணிக்கவே செய்வோம். ஈழ சகோதரர்கள் மேல் உங்களை விட பல மடங்கு எங்களுக்கு அக்கறை உள்ளது. ஆனால் கூப்பாடு போடும் நீங்கள் இங்கிருக்கும் ஈழ அகதிகள் வாழ்வு மேம்பட எதையாவது செய்ததுண்டா ? குறைந்த பட்சம் உங்கள் நிறுவனங்களில், வீடுகளில் அவர்களை வேலைக்கு வைத்திருக்கிறீர்களா?

  சீமான் சொல்கிறார், “ரஜினிகாந்த் என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறாரோ அதை நாங்கள் செய்கிறோம்,” என்று. சபாஷ்… பாராட்டுகிறேன் அவரை. வாருங்கள்… எங்கள் வாழ்க்கை மேம்பட, எங்கள் பிரச்சனைகள் தீர உங்களிடம் என்ன தீர்வு இருக்கிறது என்று சொல்லுங்கள்… எதிர்கருத்துக்களை ஆத்திரப்படாமல் எதிர்கொள்ளுங்கள், விவாதம் செய்யுங்கள், எதிர்கருத்துக்களை உங்கள் கருத்துக்களால் வென்றெடுங்கள். உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை வரச் செய்யுங்கள், நீங்களும் வெல்லலாம். அதை விடுத்து தமிழன்தான் ஆளவேண்டும் என ரஜினிகாந்த்தை திட்டிக் கொண்டே இருந்தால் எங்களுக்கு ரஜினிகாந்த்தான் நினைவில் வந்துகொண்டே இருக்கிறார், நீங்கள் அல்ல.

  அன்றைக்கு தந்தி நேர்காணலில் என்ன சொன்னீங்க ? எனக்கு தமிழ்நாட்டை பற்றித்தான் கவலை, மற்ற நாட்டில் தமிழன் ஆண்டா என்ன ஆளலைன்னா எனக்கு என்னன்னா ? அப்ப உங்க ஈழ உணர்வெல்லாம் வெறும் வேஷம்தானா?
  தமிழன்தான் தமிழ்னாட்டை ஆளவேண்டும் என்பது உங்களுடைய கருத்து. அதை எங்கள் கருத்தாக்காதீர்கள். இன்றைய நிலையில் எங்களுக்கு நல்லது செய்யவேண்டும் என உண்மையான மனதுடன் வரும் யாரையும் நாங்கள் கைதட்டி வரவேற்போம். அது ரஜினிகாந்த்தாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி. அவரவரை எந்த இடத்தில் வைக்கவேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதை நீங்கள் சொல்லவேண்டாம். ஏற்கனவே பாதாளத்தில் கிடக்கும் எங்களின் வாழ்க்கையை, மேலும் அதல பாதாளத்தில் தள்ளி மூடிவிடாதீர்கள்.

  இதற்கு நடுவே பாரதிராஜா போன்றவர்களின் அலப்பரை தாங்கமுடியவில்லை. தமிழன், தமிழன் என்று பேசும் பாரதிராஜா குறைந்தபட்சம் தன் படத்தில் தமிழர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருவேன் என்ற கொள்கையை கடைபிடித்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை ? உனக்கு ஒரு சட்டம்.. ஊருக்கு ஒரு சட்டமா ? தமிழ் மக்களின் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் ரஜினிகாந்தை கூப்பிட்டு நடிப்புக் கல்லூரி தொடங்கி விளம்பரம் தேடி சம்பாதிக்காமல், ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்து, குறைந்த செலவில் தமிழ் பிள்ளைகளுக்கு கல்வி கற்றுத் தந்திருக்கலாமே ? ஏன் செய்யவில்லை ? அப்போ நீங்க சம்பாதிக்க, உங்கள் பிழைப்பு ஓட, உங்கள் சந்ததி நன்றாக இருக்க நீங்க என்ன வேணாலும் செஞ்சுக்குவீங்க, நாங்க உங்க பேச்சை கேட்டு பிச்சை எடுக்கணுமா ? தமிழ், தமிழ்னு கூவிட்டு காரும், பங்களாவுமாக நீங்க இருப்பீங்க ஆனா நாங்க சோத்துக்கு சிங்கி அடிக்கனுமா ? நல்லா இருக்குதுய்யா உங்க நியாயம் … ஒரு மைக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு நீங்க போயிடுவீங்க. அதைக் கேட்டுட்டு நாங்க அடிச்சுட்டு திரியணுமா ?

  Untitled collage

  அதென்ன அடிக்கடி என் குழந்தைக்கு நாந்தான் அப்பன் ..பக்கத்து வீட்டுக்காரன் அல்ல.. என் படுக்கைக்கு வராதே…” என்று ? எதற்காக இந்த தரம் கெட்ட விமர்சனம் ? உங்கள் நிலையை நியாயப்படுத்த எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போய் பேசறீங்க ? சீமானும் சரி, பாரதிராசாவும் சரி ஏத்தனை வேற்று மொழிகாரர்களை வைத்து படம் எடுத்து சம்பாதிச்சீங்க ..அப்ப நீங்க சாப்பிடுற சோத்துலயும், உடுத்தும் உடையிலும் அவங்க பங்கும் இருக்குல்ல ? இதைவிட மோசமா பாரதிராசா பாணியில் கேட்க முடியும்… ஆனால் அவர் அளவுக்கு தரம் தாழ்ந்து போக விரும்பவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தப்ப எங்க ஓடி ஒளிந்தீர்கள் பாரதிராசா ? அவர்களை எதிர்த்திருந்தால் என்ன ஆயிருக்கும்னு உங்களுக்கு நல்லா தெரியுமே …. சைக்கிள் கேப்பில் மைக் கிடைத்தால் மட்டுமே வரும் வீரத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்.

  நாங்கள் தெளிவாக இருக்கிறோம்… வரும் காலத்தில் எங்களுக்கு நல்லது நினைப்பவரை மட்டுமே நாங்கள் ஆட்சியில் அமர வைப்போம். மொழி, இன, சாதி வெறியால் எங்களை பிரித்து, எங்கள் வாழ்க்கையை பாழாக்குவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

  தயவு செய்து தமிழ், தமிழ்னு போலி கூச்சல் போட்டு எங்க வாழ்க்கையை கெடுக்காதிங்க. எங்கள் மொழிக்கும், எங்கள் கலாசாரத்துக்கும் ஆபத்து வந்தால் என்ன நடக்கும் என்பதை ஏற்கனவே காட்டிவிட்டோம். இப்ப எங்களுக்கு தேவை எங்களுக்கு வேலை செய்ய நல்ல தலைவர்கள் மட்டுமே … அது ரஜினிகாந்த்தாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி…அதை தேர்தல் வரும்போது நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். நீங்க உங்க வேலையை பாருங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *