முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

சிங்கம் – திரை விமர்சனம்

May 29, 2010 by envazhi  
Filed under Cinema

சிங்கம் – திரை விமர்சனம்


டிகர்கள்: சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ் ராஜ், விவேக், நாசர்

இசை: தேவி ஸ்ரீ பிரசாத

ஒளிப்பதிவு: ப்ரியன்

எடிட்டர்: வி டி விஜயன்

இயக்கம்: ஹரி

தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

மக்கள் தொடர்பு: நிகில்

ரண்டரை மணி நேரம் படம் தாக்குப் பிடிக்க வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்… எந்த அளவுக்கும் அபத்தமாக கற்பனையை அள்ளிவிடலாம். சோப்ளாங்கி ஹீரோவாக இருந்தாலும், அவர் நினைத்தால் வானத்தை வில்லாக்கலாம், ஜீப்புகளை நடுவானில் பறக்க விடலாம், வில்லன்களை அடிக்குமுன்பே ஆகாயத்தில் மிதக்க வைக்கலாம்… இதுதான் கமர்ஷியல் ஃபார்முலா!’ என்று சொல்லுமளவுக்கு வந்துவிட்டது தமிழ் சினிமா நிலைமை.

அந்த பார்முலாவின்படி, நெல்லை – தூத்துக்குடி பகுதிகளை ஷூட்டிங்குக்காக மொத்தமாக குத்தகை எடுத்திருக்கும் ஹரி உருவாக்கியுள்ள மசாலா அபத்தம் சிங்கம். இந்த சிங்கமும் புதிதல்ல.. சாமியில் விக்ரம் போட்ட அதே காக்கி யூனிபார்மை அடித்துத் துவைத்து மாட்டிக் கொண்டு வந்துள்ளது. விட்டால் ஸ்க்ரீனிலிருந்து நேராக இறங்கிவந்து பார்ப்பவர்களைக் கடித்துவிடுமோ என்று அச்சம் கொள்ள வைக்கும் அளவு அபாயமான சிங்கம் இது!

மகா நல்ல போலீஸ்… மகா கெட்ட வில்லன்… இருவரும் மோதி, ஹீரோ ஜெயிக்க வேண்டும். இதுதான் ஹரியின் வழக்கமான ஒன்லைன்.

நெல்லை மாவட்டத்தின் நல்லூர் கிராமத்தில் அப்பாவின் பெட்டிக் கடை பிஸினஸை தொடர ஆசைப்பட்டு, பின்னர் அவரது விருப்பத்துக்காக போலீஸ் சப் இன்ஸ்பெக்டராகிறார் துரை சிங்கம் (சூர்யா). முடிந்த வரை கிராமத்து வழக்குகளை சாமி விக்ரம் ஸ்டைலில் தீர்த்து வைக்கிறார். அக்மார்க் நேர்மையாளர். அவர் மேல் ஊரே உயிராய் இருக்கிறது.

ஒரு ரியல் எஸ்டேட் வழக்கில் சென்னை தாதாவான பிரகாஷ்ராஜ், நல்லூர் ஸ்டேஷனில் கையெழுத்துப்போட வர வேண்டிய சூழல். தனக்கு பதில் டூப்ளிகேட் ஒருவரை அவர் அனுப்பி வைக்க, நேர்மையான சிங்கம் அதைக் கண்டுபிடித்து, பிரகாஷ்ராஜையே நேரில் வரவழைக்க, மோதல் ஆரம்பிக்கிறது.

சிங்கத்தை சென்னைக்கு வரவழைத்து பழி வாங்க நினைக்கும் பிரகாஷ்ராஜ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சப் இன்ஸ்பெக்டர் சூர்யாவை, இன்ஸ்பெக்டராக பதவி உயர்த்தி, தனது திருவான்மியூர் ஏரியாவுக்கே மாற்றல் செய்ய வைக்கிறார். அங்கே ஆரம்பிக்கிறது இருவருக்குமான போலீஸ்- திருடன் துரத்தல்.

இந்த துரத்தலின் முடிவு என்னவாக இருக்கும் என்று குறைந்தது 500 படங்களிலாவது பார்த்திருப்பீர்கள்.

துரைசிங்கம் என்ற சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் சூர்யா.. ஜீப்பின் கூரையை பிய்த்துக் கொண்டு, கதவுகளை உடைத்துக் கொண்டு அறிமுகமாகிறார். பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசுகிறார் பேசுகிறார்… பேசிக் கொண்டே இருக்கிறார். காது கிழிகிறது. பாக்குறியாடா…. வர்றியாடா… தூக்குறண்டா… போன்ற வார்த்தைகளை அவர் எத்தனை முறை பேசுகிறார் என்று ஒரு மினி போட்டியே வைக்கலாம். ஒரேயொரு வரியாக இருந்தாலும் அடுத்த பத்தாண்டுகளுக்கு நிற்க வேண்டும்… அதுதான் பஞ்ச் டயலாக்.

சிங்கத்தை காட்ல பாத்திருக்கலாம்…

பசிக்கு திருடினா மன்னிச்சிடலாம்….

ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா… இதெல்லாம் பஞ்ச் டயலாக் அல்ல… பஞ்சர் டயலாக்ஸ்!

ஆக்ஷன் காட்சிகள் சகிக்கவில்லை. ‘ஏன்யா உங்களுக்கு இவ்வளவு கொலை வெறி’ என்றுதான் கேட்க வைக்கின்றன. இவர் தொட்டாலே சுமோக்கள் பறக்கின்றன. குறைந்தது 20 வில்லன்கள் பறந்தடித்துக்கொண்டு விழுகிறார்கள். அடடா… இந்த வீராதி வீர சிங்கங்களை நியாயமாக சீன எல்லைக்கல்லவா அனுப்ப வேண்டும்!

என்னதான் ஹீரோ என்றாலும், படத்தில் அவர் ரோல் சாதாரண இன்ஸ்பெக்டர்… ‘சாமி’ கிடையாது. இவர் தனது மேலதிகாரியான துணைக் கமிஷனரையே மடக்குவாராம். நிஜத்தில் போய் பாருங்கள்… ஏசிபியைக் கண்டால் இன்ஸ்பெக்டர் என்னவெல்லாம் செய்வார் என்பது தெரியும்!

ஹரி போன்றவர்களிடமிருந்து ரொம்ப நேர்மையான படைப்பை எதிர்ப்பார்க்கவில்லை.. அட குறைந்தபட்ச நம்பகத்தனமையோடாவது காட்சிகள் அமைக்க வேண்டாமா?

அமர்க்களமாக அறிமுகமாகும் பிரகாஷ்ராஜை வெறும் உதார் பார்ட்டியாகவே காட்டியிருக்கிறார்கள். அவரிடமும் புதுசாக ஒன்றும் இல்லை என்று தெரிகிறது. அல்லது இந்தக் கதைக்கு இதுவே அதிகம் என்று அவர் நினைத்துவிட்டாரோ!

அனுஷ்காதான் படத்தின் ஒரே ப்ளஸ். ஜில்லென்று வருகிறார்… அட, நிறைய காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார்.

என்ன.. இவருக்கும் ஹீரோவுக்கும் உயரப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்திருக்கும் என்பது தெரிகிறது. அரையடி ஸ்டூலோடு ஆட ஹீரோ சிரமப்பட, இவர் வெளுத்து வாங்குகிறார். காதல் காட்சிகளில் கூட இருவரும் சற்று எட்டவே நின்று உயரத்தை மேட்ச் பண்ணுவது விவேக் காமெடியை விட பெரிய காமெடி.

நாசர், விஜயகுமார், மனோரமா, நிழல்கள் ரவி என செட் ப்ராபர்டிகள் இந்தப் படத்திலும் உண்டு.

தாமிரபரணி பாயும் நெல்லையை விட கூவம் மணக்கிற சென்னை கேவலமாக இருக்கிறதென்றால், நெல்லையிலேயே இருந்ததுத் தொலைய வேண்டியதுதானே… வாழவைக்கிற ஊரை விட வாழச் சிறந்த ஊர் எதுவுமில்லை என்பார்கள். அது வசனமெழுதிய ஹரிக்கு நிச்சயம் ஒருநாள் புரியும்!

தொழில் நுட்பக் கலைஞர்களில் முதலிடம் ஒளிப்பதிவாளர் ப்ரியனுக்குத்தான். ஹரியின் ‘டேஸ்ட்’ புரிந்து ரெடிமேடாக காட்சிகளைத் தந்திருக்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை சகிக்கவில்லை.

சில காட்சிகள் சம்பந்தமே இல்லாமல் எகிறுகின்றன. எடிட்டர் வி டி விஜயன் லீவிலிருந்திருப்பார் போலிருக்கிறது!

தனது முந்தைய 9 படங்களையும் திருப்பிப் போட்டு ஹரி கிண்டியுள்ள அதே திருநெல்வேலி அல்வா இந்தப் படம். இனிப்புக்கு பதில் வெறும் மிளகாய்த்தூளைக் கொட்டி வைத்திருக்கிறார். இரண்டரை மணிநேரம், உப்புப் பெறாத விஷயத்துக்காக அடித்துக் கொள்ளும் ரத்த வெறிபிடித்த திரைக்கதையை எப்போது விட்டுத் தொலைக்கப் போகிறாரோ…

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகர்கள் பலரும் சுறாவுக்கு இது பரவாயில்லை என்கிறார்கள். சுறாவாக இருந்தாலும் சிங்கமாக இருந்தாலும் மனிதர்களை கடித்து வைப்பது சர்வ நிச்சயம் என்ற உண்மை புரிந்தே படம் பார்க்க வருகிறார்கள் போலிருக்கிறது. சுறா, சிங்கம் மாதிரி படங்கள் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, பார்ப்பவரையும் படுத்தும் நோய்கள் மாதிரிதான். அறுவை செய்தாவது அகற்ற வேண்டியது அவசியம்!

-வினோ

என்வழி

மாமன் மச்சானும் விகடனின் ‘குறை விமர்சனமும்’!

May 16, 2010 by envazhi  
Filed under Fans Activities

விகடனின் குறை விமர்சனம்!

ந்த வாரம் ஒரு வாரப்பத்திரிக்கையில் முரட்டுக்காளை படத்திற்கு அவர்கள் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு எழுதிய விமர்சனத்தை மறுபிரசுரம் செய்திருந்தார்கள்.

இந்த பத்திரிக்கையின் விமர்சனக் குழுவினர் ரஜினிகாந்த் படங்களை பார்க்கச்செல்லும் போது பூதக்கண்ணாடி அணிந்து சென்றால் பரவாயில்லை. அன்று முதல் இன்று வரை கருப்புக் கண்ணாடியைத்தான் அவர்கள் அணிந்து செல்கிறார்கள் என்பதற்கு முரட்டுக்காளை விமர்சனம் ஓர் உதாரணம்.

விமர்சனத்தின் ஓர் பகுதி,

“சுமலதா, காட்டில் பாடிக்கொண்டு வர, உடனே அதை ரஜினி புரிந்துகொள்வதைப் பார்க்கும் போது, இந்தப் பாடல் ஏற்கனெவே கதையில் பாடப்பட்டிருக்கவேண்டுமே என்று தோன்றுகிறது! இல்லையென்றால் சுமலதா ரஜினியைத் தேடிக்கொண்டு வரும்போது, இந்தக் காதல் ரசம் ததும்பும் பாடல் எங்கிருந்து வந்தது?”

விமர்சனக் குழுவினர் படம் ஆரம்பித்து அரைமணிநேரம் கழித்து சென்றார்களோ, இல்லை படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது அவ்வப்போது அச்சுமுறுக்கு சாப்பிட எழுந்து சென்றார்களோ என்னவோ!

ரஜினியும் சுமலதாவும் விசிலால் இந்தப்பாடலின் மெட்டை பாடிக்கொண்டு தென்னந்தோப்பில் காதல் வளர்க்கும் காட்சி மட்டும் திரையில் சுமார் 5 நிமிடத்திற்கு மேலாக வருமே….

“இன்னொரு இடத்தில், “மாட்டுச் சண்டையில் கூடவா ரஜினியின் கராத்தே ஸ்டைல்? தன்னைப் பார்த்துவிட்டுக் காளைமாடும் தன் முன்னங்கால்களைத் தூக்கி குங்ஃபூ போஸ் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறாரா? போகிறபோக்கில், கோவிலுக்குச் சென்று சுவாமியை வணங்குவதுபோல் படமெடுத்தால்கூட, கராத்தே ஸ்டைலில் நான்கு தடவை கையை சுற்றிவிட்டுத்தான் ரஜினி, கடவுளுக்கே வணக்கம் தெரிவிப்பார் போலிருக்கிறது!”

என்று தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டியுள்ளனர்.

இதற்கு ஏற்கெனவே எஸ்பிஎம் பதில் கூறியிருந்தார். வழக்கமாக மாட்டின் மேல் பாய்வது போல படமாக்காமல், அதனுடன் நேருக்கு நேர் நின்று மோதுவதாக எடுக்க வேண்டும் என்பதற்காக படமாக்கப்பட்ட காட்சி அது. அன்றைக்கு ரசிகர்கள் அமர்க்களமாக வரவேற்ற காட்சியும் அது. கோயிலுக்குப் போய் கடவுளை ரஜினி எந்த ஸ்டைலில் வணங்கினால் இவர்களுக்கென்ன… அது அவர் தனிப்பட்ட விஷயம். இது படத்துடன் சம்பந்தப்பட்ட சமாச்சாரமில்லையே.

இன்னொரு முக்கியமான விஷயம், முரட்டுக்காளையில் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட, படத்துக்கே தனி மரியாதையை ஏற்படுத்திய இசைஞானி இளையராஜா பற்றி ஒரு வரி சொல்லவில்லை. ரஜினி, இளையராஜா போன்ற ஈடுஇணையில்லா கலைஞர்கள் மீது இவர்களுக்கு இன்று நேற்றல்ல.. காலகாலமாக இருந்து வரும் காழ்ப்புணர்வின் வெளிப்பாடுதான் இந்த விமர்சனம்.

Cult Classic என்பதற்கு அட்டகாசமான உதாரணம் முரட்டுக் காளைதான். இந்தப் படத்துக்கு நிகராகக் கூட வேண்டாம்.. அட, ஒரு 20 சதவிகிதம் சுவாரஸ்யமான ஒரு ஆக்ஷன் படத்தை இன்றைக்கு உதாரணம் காட்ட முடியுமா!

குறிப்பு: முரட்டுக்காளை படத்தின் தென்னந்தோப்பு காட்சியில் பார்த்த ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

சுமலதா: உங்களுக்கு மாடுபிடிக்கிறத தவிர என்ன தெரியும்?

ரஜினிகாந்த்: எனக்கா….ஹா ஹா ஹா(தலைவரின் டிரேட் மார்க் சிரிப்பு) நான் ஒரு “சகலகலா வல்லவன்” தெரியுமா?

தலைவர் வாயில் இருந்துதான் “டைட்டில்” அங்க போயிருக்கு பார்த்தீர்களா….

-காத்தவராயன்

சுறா – சினிமா விமர்சனம்

சுறா – விமர்சனம்

நடிகர்கள்: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்

இசை: மணிஷர்மா

ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு

பிஆர்ஓ: பிடி செல்வகுமார்

தயாரிப்பு: சங்கிலி முருகன்

இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்

மாறவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் சில ஹீரோக்களில் விஜய் முக்கியமானவர். குருவி, வில்லு, வேட்டைக்காரன் வரிசையில், இதோ அவரது அடுத்த ‘மெகா படம்’ சுறா!

ரசிகர்களுக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல… எனக்கு தயாரிப்பாளர் இருக்கிறார். எத்தனை மட்டமாக படம் எடுத்தாலும் அதைக் கொண்டுபோய் சேர்க்கும் ஊடக பலம் இருக்கிறது… இதுதான் என் பாணி என்பது விஜய்யின் பாலிஸி. எனவே இதில் யாரும் ஒன்றும் செய்வதற்கில்லை.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சி ஒன்றே போதும், படம் எப்படிப்பட்டது என்பதை விளக்க…

கடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது கடலோர காவல்படை. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை. அது சுறா. உடனே ஊர்மக்கள், ‘அடடா அந்த தம்பிய போல வருமா… அய்யோ எங்க உயிரே அவர்தானே..’ என்கிற ரேஞ்சுக்கு புலம்பிக் கொண்டிருக்க, அப்படியே கடலுக்குள்ளிருந்து மேல் நோக்கி சீறிக் கிளம்பி வருகிறார் சுறா… அதாது ஹீரோ விஜய்! அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்!

அந்தக் காட்சியிலேயே சினிமா ரசிகர்களை அடித்து வீழ்த்தி விடுகிறார் விஜய். அப்போது விழுந்த திரைக்கதை க்ளைமாக்ஸ் வரை நொண்டியடித்துக் கொண்டே இருக்கிறது…

சுறாவின் கதை?

அரதப் பழசான பாகவதர் காலத்து சமாச்சாரம் அது.

யாழ்நகர் (புலம்பெயர்ந்த தமிழ் ரசிகர்களை அத்தனை ஏமாளிகள் என்று நினைத்து விட்டார்களோ! ) என்ற மீனவ கிராமத்துக்கே சுறா (விஜய்) தான் செல்லப் பிள்ளை. இவரில்லையென்றால் ஊர் இல்லை… ஊர் இல்லையென்றால் இவர் இல்லை.

ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

அடுத்த சில சீன்களில் விஜய்யின் காதலியாகி, வித விதமான லொக்கேஷன்களில் ஆடுகிறார்.

இதற்கிடையில் வில்லன் தேவ்கில் தீம் பார்க் அமைக்க அந்த மீனவ கிராமத்தைக் காலி பண்ண முயல்கிறார். கிராமத்தையும் மக்களையும் காக்கும் பெரும்பொறுப்பு சுறாவின் சின்ன தோள்களில் விழுகிறது. எனவே சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார் வில்லன். ஆனால் திடீரென்று கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார் சுறா.

இந்த போராட்டத்தில் தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் விருப்பமிருந்தால் நீங்கள் பார்க்க வேண்டிய க்ளைமாக்ஸ் பகுதி.

வழக்கம் போல இந்தப் படத்திலும் தனக்குத் தெரிந்த அத்தனை வித்தைகளையும் காட்டுகிறார் விஜய். விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்…

கனல் கண்ணன் சொல்லிக் கொடுத்த சண்டையை வஞ்சனையில்லாமல் போடுகிறார். நின்றால் நடந்தால் ஒரு பஞ்ச் டயலாக் என பயமுறுத்துகிறார்.

மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சினையெல்லாம் தொடுகிறார்… ஆனால் எதற்கும் சரியான காரணம் வேண்டுமல்லவா… தைரியமிருந்தால் நேரடியாக இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி படமெடுத்து இந்த வசனங்களை வைக்கலாமே!

க்ளைமாக்ஸ் காட்சியில், ‘இது புலிக்குப் பிறந்தது’ என்று தன்னைப் பற்றி தானே அவர் பஞ்ச் அடிக்க, ‘கொட்டை எடுத்ததா எடுக்காததா’ என கவுண்டர் ரேஞ்சுக்கு டரியலாக்குகிறார்கள் பார்வையாளர்கள்!

நடை, உடை, ஹெலிகாப்டரிலிருந்து இறங்குதல் என எந்தக் காட்சியிலும் சொந்த முயற்சி இல்லை. பாடி லாங்குவேஜுக்குக் கூட அடுத்தவரை நம்பியிருப்பது நல்லதல்ல விஜய்!

இனி வடிவேலு நடிக்கும் படங்களில் அவரும் ஒரு ஹீரோதான் என்று தயக்கமின்றி சொல்லிவிடலாம். இந்தப் படத்திலும் மெயின் ஹீரோவை பல காட்சிகளில் அனாயாசமாக ஓரம் கட்டுகிறார் வடிவேலு. இடைவேளைக்குப் பின் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் அந்த காமெடி ட்ராக் அட்டகாசம்.

ஹீரோயின் தமன்னாவாம். பாடல்களில் மட்டும் அது தெரிகிறது. மற்றபடி படத்தில் அவருக்கு வேலையேதுமில்லை.

வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.

ஏகாம்பரம் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு முதல் தரம்.

தெலுங்கு தேச இறக்குமதியான மணிசர்மாவின் பாடல்களில் ஒன்றிரண்டு தேறுகின்றன. ஆனாலும் கதைதான் ரீமேக் என்றால் பாடல்களுமா என்ற அலுப்புதான் மிஞ்சுகிறது.

விஜய் படங்களில் இனி தரத்தை எதிர்ப்பார்ப்பது வீண்தானோ!

-என்வழி

பையா – திரைப்பட விமர்சனம்

April 3, 2010 by envazhi  
Filed under Cinema

பையா – விமர்சனம்


டிகர்கள்: கார்த்தி, தமன்னா, மிலிந்த் சோமன்

ஒளிப்பதிவு: மதி

இசை: யுவன் சங்கர் ராஜா

எடிட்டிங்: ஆன்டனி

இயக்கம்: லிங்குசாமி

தயாரிப்பு: திருப்பதி பிக்சர்ஸ்

சிறப்பாக சொல்லிக் கொள்ள ஏதுமில்லாத ஒரு வழக்கமான காதல் – ஆக்ஷன் படத்தைத் தந்திருக்கிறார் லிங்குசாமி, ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளை ஏற்றிவிட்டு!

கதையோ, காட்சிகளோ, கேரக்டர்களோ, திருப்பங்களோ… எதிலும் புதுமை இல்லை. ஆனால் யுவன்சங்கரின் ரசனையான பாடல்கள், விறுவிறு ஒளிப்பதிவு, ஒரு தேர்ந்த எடிட்டரின் ஒட்டு வேலைகள் இந்தப் படத்தை சற்று பொறுமையுடன் பார்க்க வைக்கிறது என்பதை சொல்லியாக வேண்டும்!

வேலையில்லாத கார்த்தி பெங்களூர் போகிறார், வேலைக்காக. அங்கு தமன்னாவைக் கண்டதும் காதலில் விழுகிறார். அது தெரியாத தமன்னா கார்த்தியைத் தேடி வந்து உதவி கேட்கிறார். கார்த்தியிடம் மும்பை வரை தன்னை காரில் கூட்டிச் செல்லுமாறு உதவி கேட்க, போகிற வழியில் கார்த்தி காதல் கனவில் மிதக்க, இவர் தனது ‘வலுக்கட்டாய திருமண’ கஷ்டத்தைச் சொல்கிறார். இடையில் ஆந்திராவைச் சேரந்த ஒரு கோஷ்டி துரத்துகிறது இருவரையும். அவர்களை வழக்கம் போல தனி ஆளாக துவம் செய்கிறார் ஹீரோ. அப்புறம்தான் தெரிகிறது அவர்கள் தமன்னாவைத் துரத்தியவர்கள் என்பது.

அடுத்து இன்னொரு கோஷ்டியும் துரத்துகிறது. இவர்கள் மும்பை ரவுடிகள். கார்த்தியை துரத்தி வருகிறார்கள். அதற்கொரு பிளாஷ்பேக். அதில் வில்லன் மிலிந்த் சோமன். இந்த கோஷ்டியையும் தனி ஆளாக நின்று அடித்துப் போடுகிறார் கார்த்தி.

அடுத்து இரு கோஷ்டிகளும் ஒன்றாகத் துரத்துகின்றன. விடுவாரா ஹீரோ… க்ளைமாக்ஸில் முப்பது நாப்பது பேரிடம் அடிவாங்கி கீழே விழுந்தவர், தமிழ் சினிமா நாயகனுக்கே உரிய வீரத்தோடு வீறுகொண்டெழுந்து எல்லோரையும் ஒரே ஆளாக அடித்து நாயகியைக் காப்பாற்றுகிறார்… அப்புறம் என்ன நடந்திருக்கும் என்பதை வாரத்துக்கொரு மசாலா படம் பார்க்கும் நமக்கு தெரியாத சமாச்சாரமா என்ன!

அழுக்கு லுங்கி அல்லது ட்ரவுசர், முண்டா பணியன் காஸ்ட்யூமிலிருந்து கார்த்திக்கு இந்தப் படத்தில் ப்ரமோஷன் கொடுத்திருக்கிறார்கள். என்ன செய்வது… காஸ்ட்யூம் மாறினாலும் கேரக்டர் அப்படியேதான் இருக்கிறது.. இன்னும் பருத்திவீரன் பாதிப்பிலிருந்து அவரே மீளவில்லை போலிருக்கிறது. தமன்னா மீதான காதலை அவர் அனுபவித்து நண்பர்களிடம் சொல்லும் காட்சிகள் பரவாயில்லை.

மற்றபடி சண்டைக் காட்சிகள் மகா கடுப்பேற்றுகின்றன. மூன்றாவது படத்தில் 50 பேரை அடிக்கும் அளவு ஆக்ஷன் ஹீரோவாக்கப்பட்டுள்ளார் கார்த்தி. விட்டால் அடுத்த படத்தில் ஸ்க்ரீனைக் கிழித்துக் கொண்டு வந்து படம் பார்ப்பவர்களையும் போட்டு தாக்கிவிடுவார்கள் போலிருக்கிறது… நம்ப முடியாத ஆக்ஷனையும் நம்பும்படி காட்ட வேண்டும்.. அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங்!

இன்னும் இரண்டு.. இல்லை ஒரு படம் இதே ரேஞ்சுக்கு கார்த்தி நடித்தால் போதும், சுலபமாக பரத்தின் இடத்தைப் பிடித்துவிடுவார்!

தமன்னாவை ஒரு அழகான பொம்மை மாதிரி படம் நெடுக காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நடிப்பில் சொல்லிக் கொள்கிறமாதிரி ஒன்றுமில்லை.

வில்லன் மிலிந்த் சோமன். ஆக்ஷன் கதைக்கு ஒரு வில்லன் வேண்டுமல்லவா… அந்த அளவுதான் இவருக்கான முக்கியத்துவம். அந்த நண்டு கேரக்டர் ஓகே.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை யுவன் சங்கர் ராஜாதான் ஹீரோ. படத்தின் எல்லா பாடல்களையும் ஹிட்டாக்கியிருக்கிறார். நல்ல இளமைத் துள்ளல். படக்காட்சிகளைத் தவிர்த்துவிட்டு, ஒளியும் ஒலியுமாகவே கேட்டு ரசிக்கலாம்… அதேபோல லிங்குசாமியின் திரைக்கதைப் பொத்தல்களை முடிந்தவரை மறைக்க முயற்சிக்கிறது யுவனின் பின்னணி இசை.

துளி துளி.., அடடா மழைடா…, என் காதல் சொல்ல நேரம் இல்லை…, சுத்துதே சுத்துதே பூமி… பாடல்கள் அனைவரின் உதடுகளிலும் உடனடியாக உட்கார்ந்துவிட்டதைப் பார்க்க முடிகிறது.

மதியின் ஒளிப்பதிவு நிறைவாக உள்ளது.

இடைவேளைக்குப் பிந்தய காட்சிகளுக்காக லிங்குசாமி பெரிதாக யோசிக்கவே இல்லை போலிருக்கிறது. சண்டைக்கோழி, ரன் என தனது பழைய படங்களிலிருந்தே உருவிக் கொண்டிருக்கிறார்.

புதுமைகள் ஏதுமில்லாத, ஏற்கெனவே பார்த்துச் சலித்த காட்சிகள் என்பதாலேயே படம் கிளைமாக்ஸை நெருங்கும்போதே அலுப்புத் தட்டுகிறது.

பையா -

பொன்னான பொழுதைக் கொல்ல நினைப்பவர்களுக்கு ஹைய்யா… நல்ல படம் வேண்டும் என்ற பிடிவாதக்காரர்களுக்கு அய்யோ!

-என்வழி

மாத்தி யோசி.. படத்துக்கு போவதைப் பற்றி!

March 14, 2010 by envazhi  
Filed under Cinema

மாத்தி யோசி – விமர்சனம்

டிகர்கள்: ஷம்மு, பொன்வண்ணன், ரவிமரியா, ஹரீஷ், அலெக்ஸ், கோபால், லோகேஷ்

இசை: குரு கிரண்

இயக்கம்: நந்தா பெரியசாமி

தயாரிப்பு: பிஎஸ் சேகர் ரெட்டி

‘மதுரைப் பக்கம் கொஞ்ச நாளைக்கு சினிமா எடுக்கத் தடை… அதிலும் நாலு பசங்க ஒரு பொண்ணு ஃபார்முலான்னா அந்தக் படக் குழுவுக்கே  ஆயுள்காலத் தடை’ன்னு ஒரு அறிவிப்பு வைத்தால் தேவலை என்று சொல்லும் அளவுக்கு வெறுப்பேற்றுகிற ஒரு படம், மாத்தி யோசி!

‘ஆதிக்க சாதி வெறியர்களால் விரட்டப்படும் நான்கு இளைஞர்கள்…’ என்ற ஒரு வரியை வைத்துக் கொண்டு சிலம்பம் விளையாடியிருக்க வேண்டிய இயக்குநர், நொண்டியடித்து மக்கிப்போன குப்பையில் குப்புற விழுந்திருக்கிறார்.

மாங்கா, ஓணான், பாண்டி, மாரி… இதுதான் நாயகர்களின் பெயர்கள்… டவுசரைத் தவிர வேறெந்த உடையும் பிடிக்காது… (‘டைரடக்டர்’ ரொம்ப மாத்தி யோசிக்காம நிறுத்திக்கிட்டார் போல…இல்லையென்றால் அந்த டவுசரையும் விட்டு வைத்திருக்க மாட்டார்!)

கிராமத்திலிருந்து தப்பித்து சென்னைக்குப் போகிறார்கள்… (இதுக்கு இணையா ஒருத்தராலும் மாத்தி யோசிக்கவே முடியாது!)

அங்கே ஒரு வேலையும் கிடைக்கவில்லை. அதனால் ஃபுல்டைம் சில்லறைத் திருட்டில் இறங்குகிறார்கள்… (என்னா ஒரு மாத்து யோசனை?)

அப்போதுதான் ஹீரோயின் அறிமுகமாகிறார்… அவளை விற்கத் துடிக்கும் தாய்மாமனிடமிருந்து காப்பாற்றுகிறார்கள்… (யாருக்காவது இந்த மாத்து யோசனை தோணுமா?)

திடீரென ஹீரோயினுக்கு ஆஸ்திரேலியா போய் படிக்க வேண்டும் என நினைப்பு வர, அதற்கு இரண்டு லட்சம் புரட்ட பெண்ணைக் கடத்துகிறார்கள். கடத்தப்பட்ட பெண் வயசுக்கு வந்துவிட, கடத்தலை மறந்து அவளுக்கு சடங்கு செய்து கும்மியடித்து பாட்டுப் பாடுகிறார்கள்… (இருக்கிற இத்தனூண்டு மூளைய வச்சிக்கிட்டு இதுக்குமேல எப்படி மாத்தி யோசிக்கிறது!)

அப்புறம் போலீஸ் ஆபீஸரிடம் மாட்டுகிறார்கள். அவருக்காக ஒரு ரவுடியைக் கொல்கிறார்கள்… அந்த ரவுடியின் ஆட்கள் இவர்களைக் கொல்கிறார்கள். ஹீரோயின் அம்போவென நிற்க, படம் பார்க்க வந்தவர்கள் அய்யோ என தலையிலடித்துக் கொண்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுகிறார்கள்.

சுப்பிரமணியபுரம், ரேணிகுண்டாவை அப்படியே எடுப்பதா, மாத்தி எடுப்பதா என மாத்தி மாத்தி யோசித்திருப்பார் போலிருக்கிறது நந்தா பெரியசாமி. இதுக்கு சசிகுமார் தரும் அறிமுக உரை வேற!

இந்தப் படத்துக்கு இப்படியொரு தலைப்பை வைத்ததற்கே இந்த இயக்குநருக்கு, படத்தில் வரும் ‘சாதி போலீசுக்கு’ தரும் தண்டனையைத் தர வேண்டும். போயும் போயும் இவரை நம்பி சவாலெல்லாம் விட்டார் அமீர், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்!

இன்னொரு வாட்டி தியேட்டர் பக்கம் வருவியா என்று கூப்பிட்டு செவிட்டில் அறைவது போன்ற கொடுமை… திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, நடிகர்கள், மகா கேவலமான இசை என எல்லாமே இப்படி படு சொதப்பலாக இருந்ததை இத்தனை வருட சினிமா அனுபவத்தில் நான் பார்த்ததில்லை!

இதுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல ஒரு காட்சி க்ளைமாக்ஸில்… தனக்கு முன் பின் தெரியாத நான்கு பையன்களில் மூவரை வில்லன் போட்டுத் தள்ளுகிறான். ஒருத்தன் மட்டும் மிஞ்ச அவனிடம் வில்லன் பேசும் வசனம், ‘இனி எப்படிடா நீ அத்திலி புத்திலி ஆடுவேன்னு பாக்கறேன்’!

‘நிக்காதீங்க ஓடிப்போயிடுங்க… அந்த கொடிய மிருகம் நம்மை நோக்கி வருது’ என்று அலறிக் கொண்டே எழுந்தார் உடன் படம் பார்த்த நண்பர். அதற்கு சரியான அர்த்தம் இந்தப் படத்தில்தான் புரிந்தது!!

-வினோ

நான் கடவுள் – ஒரு மீள் பார்வை…

January 24, 2010 by envazhi  
Filed under ஃபிளாஷ்பேக்

நான் கடவுள் – ஒரு மீள் பார்வை…

நான் கடவுள் படத்துக்காக தட்ஸ் தமிழ் வெளியிட்ட விமர்சனம் இது. தான் பெரிதும் மதித்த விமர்சனங்களில் ஒன்றாக இயக்குநர் பாலா அவர்களே குறிப்பிட்ட ஒன்று.

இந்த தருணத்தில் மறுபதிவாக தருகிறோம்…

சை: இசைஞானி இளையராஜா

பாடல்கள்: வாலி, இளையராஜா

கதை – திரைக்கதை – இயக்கம்: பாலா

ஒளிப்பதிவு: ஆர்தர் ஏ வில்சன்

வசனம்: ஜெயமோகன்

ஸ்டன்ட்ஸ்: சூப்பர் சுப்பராயன்

எடிட்டிங்: சுரேஷ் அர்ஸ்

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

நடிப்பு: ஆர்யா, பூஜா, ராஜேந்திரன், ராஜேந்திரநாத், கோவை கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் விக்ரமாதித்யன்

-ஷங்கர்

பாதுகாப்பான வேலை, மாத இறுதியில் சம்பளம், கான்வென்ட் கல்வி கற்கும் வாரிசுகள், தினமும் ‘த ஹிந்து’வின் முகத்தில் விடியும் காலைகள் என எல்லா வகையிலும் ‘செக்யூர்டான’ ஒரு வாழ்க்கையைப் பற்றி யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். அந்த வழமையான வாழ்க்கையைத்தான் நிறையப் பேர் வாழ்ந்து கொண்டுமிருக்கிறோம்.

ஆனால் அழுக்கு, வன்முறை, அடிமைத்தனம், சுரணையை ரத்தம் வழிய வழிய வெட்டியெடுத்துவிட்டு ஜடமாய், மனம், உடல் இரண்டாலும் ஊனப்பட்டு வாழும் ஒரு வாழ்க்கையைப் படமாக எடுக்க துணிச்சல் மட்டுமிருந்தால் போதாது… வாடிய போதெல்லாம் வாடும் நல்ல மனசும் வேண்டும். பாலாவுக்கும், அவரது ராஜவித்வான் இசைஞானிக்கும் இயல்பிலேயே அப்படியொரு மனசு… அதன் விளைவு ‘நான் கடவுள்’!.

திரையில் வெறும் இரண்டு மணிநேரங்கள் கூட காணச் சகியாத ஒரு வாழ்கைகயை, நிஜத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற சக மனிதர்களைப் பற்றிய படம், நான் கடவுள்.

மூன்று வருடங்கள் அப்படி என்னதான் செதுக்கினார் பாலா இந்தப் படத்தில்…

பாட்டி வடைசுட்ட கதை மாதிரி இதைச் சொல்லிவிட முடியாது. காரணம் இதுதான் கதையென்ற ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதற்குள் குதிரை ஓட்ட முயலாத பாலா!

ஒதுக்கி விடப்பட்டவர்கள் அல்லது இந்த உலகின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓய்ந்து உட்கார்ந்துவிட்டவர்கள், ஒரு பாதாள நரகத்துக்குச் சமமான உலகில் தெரிந்தோ தெரியாமலோ மாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் அந்த நரகத்திலிருந்து எப்படி விடுபடுவார்கள்… யார் வந்து அவர்களை காப்பாற்றி, குதிரையில் அல்ல, குறைந்தபட்சம் குப்பை வண்டியிலாவது கூட்டிச் செல்வார்கள்?.

இந்த மாபெரும் மனித சமூகத்துக்குள் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட இன்னொரு சமூகம் உள்ளதே… அதை எப்போது மீட்கப் போகிறோம்…. சமுத்திரத்துக்குள் ஒரு சின்ன ஏரியாய் முடங்கிக் கிடக்கும் ‘இவற்றை’ எப்படி இந்த ஜன சமுத்திரத்துக்குள் கலக்கச் செய்யப் போகிறோம்?.

இந்த மிகப்பெரும் கேள்விகளை முகத்திலறைந்துவிட்டு அடங்குகிறது, திரைப்படம் எனும் பெயரில் 2 மணிநேரம் திரையில் நாம் பார்த்த ‘ருத்ர’ தாண்டவம்.

காசியில் அகோரி பாபாக்களுக்கு மத்தியில் துவங்குகிறது படம். பின்னர் எங்கெங்கோ பயணப்பட்டு, எவற்றிலெல்லாமோ மோதி, மீண்டும் புறப்பட்ட புள்ளியிலேயே வந்து முடிகிறது, ஒரு முழுமை பெறாத வாழ்க்கை போல. எந்த மனிதனின் வாழ்க்கைதான் முழுமைப் பெற்றிருக்கிறது!.

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பூடகம் ஏதும் வைக்காமல் நெத்தியடியாக செய்திகளைச் சொல்லுவது பாலாவின் பாணி. இந்தப் படமும் அதற்கு விலக்கல்ல.

பிச்சைக்காரர்கள் யாரும் பிறவியிலேயே அந்தப் பட்டத்தோடு வருவதில்லை. இந்தப் பட்டத்தை அவர்கள் கழுத்தில் மாட்டிவிட ஒரு குரூரமான தொழிற்சாலையே இயங்கிக் கொண்டிருக்கிறது.மணிமணியாய் வரும் மழலைகளின் கை கால்களை உடைத்து, உடம்பெல்லாம் பிளேடால் கீறி, அதில் உப்புத் தடவி அலறவைத்து பிச்சை எடுக்கச் செய்து, அந்தப் பணத்தில் பிரியாணியும் சீமைச் சாராயமும் குடித்து மகிழும் பாதகர்கள், அவர்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்து மகிழத் தயாராக இருக்கும் அதிகார வர்க்கத்தினர்… இவர்கள்தான் இந்த பிச்சைக்காரர்களை உருவாக்கும் தொழிற் கூடத் தலைவர்கள்.

நீங்கள் யாரிடம் இதற்காகப் புகார் தர நினைக்கிறீர்களோ… அவர்களே இந்த பாவத்தின் எஜமானர்கள்…

வாழ வகையின்றி, முழுசாய் உடலுமின்றி எந்த நிமிடமும் விழுந்து நொறுங்கப் போகும் உலகின் விளிம்பில் தொங்கும் இவர்களின் அவலங்களுக்கு எந்த வகையில் தீர்வு காணப்போகிறோம்… தெரியவில்லை.

படத்தில் ஒரு பக்கம் பாலாவும், மறுபக்கம் இசைஞானி இளையராஜாவும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்கள்.

ஒரு காட்சியை பாலா என்ன நினைத்து உருவாக்கினாரோ, அந்த எண்ணத்தை தன் இசையால் அந்தக் காட்சிக்குக் கொடுத்திருக்கிறார் இளையராஜா.

சிவோஹம்…, பிச்சைப் பாத்திரம்… பாடல்கள் கையாளப்பட்டிருக்கும் விதம், ஒரு தமிழனாய் நம் கலைஞர்களை எண்ணி பெருமைப்பட வைக்கிறது.

அந்நிய விருதுகள் கொடுத்துதான் இளையராஜா என்ற இந்த மகா கலைஞனை மகத்துவப்படுத்த வேண்டுமென்பதில்லை… யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்த தேசத்தின் ஒப்பற்ற கோஹினூர் வைரம் நமது இசைஞானி. நாம் ரசித்து, நாம் கேட்டு மகிழ்ந்த அவரது பாடல்களுக்கும் இசைக்கும் நாமே கொடுப்போம் அப்படியொரு உயர்ந்த விருதினை!.

ஒளிப்பதிவு இயக்குநர் ஆர்தர் வில்சன், ஸ்டன்ட் இயக்குநர் சூப்பர் சுப்பராயன் இருவரும் படத்துக்கு ஒரு விசேஷ நிறத்தைக் கொடுத்து விடுகிறார்கள். ஆக்ஷன் காட்சிகளின் உச்சம் என்றால் இந்தப் படம்தான். கமர்ஷியலாகவே இருந்தாலும் அத்தனை நேர்த்தி, கலையழகு.

கிருஷ்ணமூர்த்தி என்ற கலை இயக்குநரின் கைவண்ணம் தனித்துத் தெரியாததே இந்தப் படத்தில் அவரது பங்களிப்புக் கிடைத்த பெருமைதானே!.

இந்தப் படத்தின் இன்னொரு தூணாகத் திகழ்பவர் ஜெயமோகன். அவரது ஏழாம் உலகம் நாவலாக வந்தபோது பெற்ற விமர்சனக் காயங்களை, இந்தக் கடவுள் வரம் தந்து ஆற்றியிருக்கிறார்.

ஆர்யா, பூஜா இருவருக்கும் ஆயுள் முழுக்க இந்தப் படத்தை பெருமையாய் சொல்லிக் கொள்ளலாம். சில காட்சிகளில் ஆர்யாவின் கண்களில் விளையாட்டுத்தனம் ஓடிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. ஆனால் அதை பிரமாதமாய் சரிகட்டுகிறது அவரது உடல் மொழி.

கவிஞர் விக்ரமாதியன் வரும் காட்சிகள் நெக்குருக வைக்கின்றன. முருகனாக வரும் கோவை கிருஷ்ணமூர்த்தி, வில்லனாக வரும் ராஜேந்திரன் இருவரும் பாலாவின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைரமாய் ஜொலிக்கிறார்கள். இவர்களைத் தவிர 175 புதுமுகங்கள். அனைவருமே, உடலால், மனதால் பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள். இவர்களை முழுமையாய் தயார் செய்து, ஒரு தனி உலகத்தையே சிருஷ்டிப்பது சாதாரண காரியமா…?.

விமர்சனம் என்று வந்துவிட்டபிறகு குறை சொல்லாமல் போனால் எப்படி… நாம் வளர்ந்த விமர்சனக் கலாச்சாரம் அதுதானே!

படத்தின் பல காட்சிகள் முழுமை பெறாமல் தொங்குவது போன்ற ஒரு உணர்வு. “வாழ்க்கையில் எந்தக் காட்சிதான் முழுமையானது என்று சொல்ல முடியுமா? ஒரு நாளேனும் முழுமையாய் வாழ்ந்துவிட்டால் அடுத்த நாளின் மகத்துவம் புரியாது. மனசு, வாழ்க்கை எல்லாவற்றிலும் உள்ள குறைகள்தான் இந்தப் படத்திலும் தெரியும். அவற்றை தெரிந்தேதான் அனுமதித்தேன்…”, என்ற பாலாவின் பதிலைக் கேட்டபிறகு, குறையென்று எந்தக் காட்சியையும் இங்கே குறிப்பிட முடியவில்லை.

தமிழ் சினிமாவை புணருத்தாரணம் செய்ய வந்த, எக்கச்சக்க திறமைகளை உள்ளுக்குள் சுமந்து கொண்டிருக்கிற கலைஞன் பாலா, தன் அடுத்த பரிமாணங்களை காட்டிடும் வகையில் அவரைக் கொண்டாட வேண்டிய தருணம் இது.

ஈராமான கண்களுடன் பாலாவுக்கு ‘ஹேட்ஸ் ஆப்’!

மனதில் இசை ‘பாரத்துடன்’ இசைஞானிக்கு நன்றி!

குட்டி – விமர்சனம்

January 22, 2010 by envazhi  
Filed under Cinema

குட்டி – விமர்சனம்

டிகர்கள்: தனுஷ், ஸ்ரேயா, ராதா ரவி, ஸ்ரீநாத், வின்சென்ட் அசோகன், ஆர்த்தி

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம்

எடிட்டிங்: கோலா பாஸ்கர்
இயக்கம்: மித்ரன் ஆர் ஜவஹர்
தயாரிப்பு: ஜெமினி பிலிம் சர்க்யூட்

பிஆர்ஓ: நிகில்

ப்போதும் நல்லதையே செய்யும் அனாதை இளைஞன்… அவனைச் சுற்றி எப்போதும் ஜாலியான வாண்டுகள் கூட்டம்… அவனுக்காக உருகும் சக மாணவர்கள்… அவனுக்கு ஒரு அழகிய பெண் மீது காதல், அந்தப் பெண்ணுக்கோ இன்னொரு பையன் மீது காதல்… இந்தக் காதலில் யார் ஜெயிப்பார்கள் என்ற, மகா சுலபத்தில் யூகிக்க முடிகிற க்ளைமாக்ஸ்.

‘ஆஹா… இதை நான் ஏற்கெனவே பார்த்துவிட்டேன்’ என்ற எண்ணம் ஏற்படுகிறதா… இருக்கலாம்… ராஜ்கபூரின் ‘சங்கம்’ காலத்திலிருந்து அப்படி இப்படி மாற்றி மாற்றி எடுக்கப்பட்டு வரும் முக்கோண காதல் கதைதான், தனுஷ் – ஸ்ரேயா நடிப்பில் ‘குட்டி’யாய் வந்திருக்கிறது.

காட்சிக்குக் காட்சி ‘கான்பிடன்ட் வேணும் பாஸ்’ என்று தனுஷ் கூறும்போது நமக்குள் ஒரு சின்ன பயம்… எங்கே இவரும் ‘காதல்னா… வாழ்க்கைன்னா…’ என்று  பாடம் எடுக்க வந்து விடுவாரோ என்று. ‘வேணாம் பாஸ்… விட்ருங்க!

நடனத்திலும் நடிப்பிலும் நல்ல முதிர்ச்சி தெரிகிறது, தனுஷிடம். ஒருதலைக் காதலுக்கு அவர் சொல்லும் விளக்கம் புதுசு… நொந்த மனங்களுக்கு ஆறுதலாகக் கூட இருக்கும்!

ஸ்ரேயா உடம்பில் மட்டுமல்ல… நடிப்பிலும் நல்ல தேர்ச்சி. ஆனால் இரண்டு காதலர்களுக்கிடையில் ஒரு பெண் என்ற கருத்தோட்டத்தில் காட்சிகள் வருவதால், அவரது பாத்திரம் மீது பெரிதாக ஈர்ப்பு வரவில்லை.

அதனால்தானோ என்னமோ, ஸ்ரேயாவுக்கு தோழியாக வரும் ஒரு பெண்ணைப் பார்த்து…’அட, இது அம்சமா இருக்கே!’ என்ற கமெண்டையும் கேட்க முடிந்தது ரசிகர்கள் மத்தியில்!

ஸ்ரேயாவின் காதலராக வரும் சமீர்… சொல்லிக் கொள்வது போல் ஒன்றும் செய்யவில்லை… உர்ரென்று தனுஷை முறைப்பதைத் தவிர. அட… காதலி ஸ்ரேயாவைும்கூட அப்படியேதான் பார்க்கிறார்!

ஆர்த்தியை  படம் முழுக்க தனுஷின் ‘மச்சானாக’ வரவைத்து ப்ரமோஷன் கொடுத்துள்ளனர். அவரும் குறைவில்லாமல் நடித்துள்ளார்.

படத்தில் வருகிற ஒன்லைன் காமெடிகள், ஓலைப் பட்டாசு மாதிரி பளீர் ரகம்…

கல்லூரி மைதானத்தில் தனுஷுக்கும், ஸ்ரீநாத் அண்ட் கோவுக்கும் நடக்கிற காரசார காமெடி உரையாடலில் தியேட்டர் கலகலக்கிறது.

க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகளில் வின்சென்ட் அசோகனுடன் தனுஷ் ஆக்ரோஷமாக மோதுவார்… அப்போது தியேட்டரில் பலத்த சிரிப்பொலி…  ‘தன் வலி அறிதல்’ என்பதை தனுஷ் வகையறாக்கள் புரிந்து கொண்டு காட்சிகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல, ஆரம்ப காட்சியிலிருந்து கடைசி க்ளைமாக்ஸில் தனுஷும் ஸ்ரேயாவும் கட்டிப் பிடித்துக் கொள்வது வரை அனைத்துக் காட்சிகளையும் ரசிகர்கள் பின்பாட்டு மாதிரி சொல்லிக் கொண்டே வருவதை இயக்குநர் கவனத்திலெடுத்துக் கொள்ள வேண்டும்.

லேசான பனி மூட்டம்… வைகறையில் மலை மேடுகளின் மத்தியில் சூரியன் முகம் காட்டும் ஏரிக்கு நடுவில் அழகான மர வீடு… யதார்த்தமாய் இல்லை என்றாலும் ரசனையான கலை இயக்கம். அதை படம் பிடித்த பாலசுப்ரமணியத்தைப் பாராட்ட வேண்டும்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உற்சாகம் ததும்புகிறது. ஆபாச வசனமோ, அருவருக்கத்தக்க ‘குத்தோ’ இல்லாதது இன்னொரு ப்ளஸ்.

சென்னையில் ஆரம்பித்து காயல்பட்டினம், மலைப் பகுதி என காட்சிகள் தாவுவதை எடிட்டர் கோலா பாஸ்கரும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருப்பாரோ!

மற்றபடி, தனுஷுக்கு இது ஒரு சாராசரி படம். ‘பொழுதைக் கொல்ல’ போய் வரலாம்!

-என்வழி

நான் அவனில்லை 2 – திரைப்பட விமர்சனம்

November 28, 2009 by envazhi  
Filed under Cinema

நான் அவனில்லை 2 – விமர்சனம்

naan-avan-illai

நடிப்பு: ஜீவன், மயில்சாமி, லட்சுமி ராய், ஹேமமாலினி, ரக்ஷனா, ஸ்வேதா மேனன்

இசை: டி இமான்

தயாரிப்பு: நேமிச்சந்த் ஜபக், ஹிதேஷ் ஜபக்

இயக்கம்: செல்வா

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

ளமை திமிரும் ஒரு பெண் (ஹேமமாலினி என்கிற ஸ்ருதி பிரகாஷ்), தனக்கு வரப்போகும் கணவன் நாய்க்குட்டி மாதிரி காலைச் சுற்றிக் கிடக்க வேண்டும் என விரும்புகிறாள் (இப்படியொரு ரகசிய ஆசை நிறைய பேருக்கு இருக்கும்போல!)…

இன்னொரு பெண்ணுக்கோ (ஸ்வேதா மேனன்…), அடுத்த பெண்களின் கணவர்களை மயக்கி கட்டிலுக்கு வரவழைத்து, அவனிடம் பணம் – வைரங்களை ‘ஆட்டையைப் போடுவதில் ஒரு தனி கிக்’…

மூன்றாவது  ஒரு நடிகை (லட்சுமி ராய்)… இவருக்கோ உலகத்தின் அத்தனை நாடுகளிலும் தனக்கு சொத்து இருக்க வேண்டும், நிலங்கள் வாங்கிக் குவிக்க வேண்டும் என ஆசை.

நான்காவது பெண் (ரக்ஷனா) திருட்டு கேஸ்… வைரங்களைக் கொள்ளையடிக்கும் இந்தப் பெண்ணின் மனம் விசித்திரமாக கொள்ளை போகிறது, அடிக்கடி ‘நெஞ்சைத் தொடும்’ (இது வேற டச்.. நிஜ டச்) ஒரு கள்ளச் சாமியால்!

இந்த நான்கு பெண்களையும் ஏமாற்றுகிறான் ஒருவன்…. ஐந்தாவதாக ஒரு பெண்ணுக்கு (சங்கீதா) உதவ!

படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா… ஆனால் இந்த சுவாரஸ்யத்தை திரையில் முழுமையாகக் கொண்டு வரத் தவறி விட்டார் இயக்குநர் செல்வா, தனது சொதப்பல் திரைக்கதையால்.

1974-ல் பாலச்சந்தர் எடுத்த, அன்றைக்கு பெரிய ஹிட் என்று சொல்ல முடியாத ‘நான் அவனில்லை’ படத்தை பல ஆண்டுகள் கழித்து2007-ல் ரீமேக்கிய செல்வா, இப்போது அந்த ரீமேக்குக்கு இரண்டாவது பாகம் தந்துள்ளார்.

இந்த மாதிரி 5 ஹீரோயின் கதைகளில் உள்ள ஒரு வசதி, நாயகிகளை உரித்த கோழிகளாக்கி நினைத்த நேரத்தில் நாயகனுடன் ஆட விடலாம். படம் முழுக்க கவர்ச்சி மழை.. ரசிகனும் சீட்டை விட்டு நகரமாட்டான்.

கிட்டத்தட்ட அது ஒர்க்அவுட் ஆகிறது இந்தப் படத்திலும்.

திரையை ஆக்கிரமிக்கும் நாயகிகளின் கவர்ச்சிக் காட்சிகளை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள், லட்சுமிராய் சம்பந்தப்பட்ட பக்கா நாடகத்தனமான, சுமார் காட்சிகளில்கூட ஜாலியாக கமெண்ட் அடித்தபடி சீட்டிலேயே அமர்ந்திருக்கிறார்கள்.

அந்த பனிப் பிரதேசத்தில் லட்சுமி ராயை நிச்சயம் அரை நிர்வாணத்தில் ஓட வைக்காமல் விடமாட்டார் இயக்குநர் என ஒரு ரசிகர் கமெண்ட் அடிக்க, சரியாக அடுத்த காட்சியிலேயே லட்சுமி ராயும் – ஜீவனும் பனித்தரையில் புதைந்தபடி பாட்டுப் பாடுகிறார்கள்!

படத்தின் பல காட்சிகள் இப்படி எளிதில் யூகிக்கக் கூடியவைதான்.

ஆனால் பிரபலமான நகை திருடியாக வரும் ரச்சனா, வாலியின் பக்தையாக மாறுவது சுவாரஸ்யமான கற்பனை. அவருக்கு ஜீவன் கவிதை உபதேசம் செய்யும் காட்சி ‘மகா பச்சை’… ஆனால் அதற்குதான் ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ்!!

‘பொண்ணுங்கள ஏமாத்தற கேரக்டரா… கூப்பிடுங்க ஜீவனை’ என்று இனி சொன்னாலும் வியப்பில்லை. அந்த அளவு சரளமாக ஏமாற்றுகிறார்.

ஆனால் அத்தனையும் செய்துவிட்டு, நான் அவனில்லை என்று திரும்பத் திரும்ப சொல்வதில் என்ன லாஜிக் இருக்கிறது என்றுதான் புரியவில்லை. ‘நான் அவனில்லை’ என்பதை எப்படி நிரூபிக்கிறார்… சர்ச்சுக்குள் புகுந்து, பேராயரின் அங்கியை அணிந்து இஷ்டத்துக்கும் டயலாக் பேசிவிட்டு, எகிறி குதித்து தப்பிவிடுகிறாராம். ஏமாந்தவர்கள் அவனது திறமையைக் கண்டு வியந்து, அப்படியே மனம் திருந்தியும் விடுகிறார்களாம். சட்டம், போலீஸ் என்ன ஆனது? இவற்றுக்கு விடையில்லை. (“இந்த மாதிரி நாலு பார்ட்டி இருந்தா நமக்கும் சொல்லச் சொல்லு மச்சி அந்த டைரடக்கரை!” – இது நமக்கு முன்னால் அமர்ந்து படம் பார்த்த ரசிகர் கமெண்ட்!)

படத்தில் நாயகிகளைவிட முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒருவர் உள்ளார். அவர் மயில்சாமி. கிடைக்கிற ‘கேப்’பிலெல்லாம் புகுந்து விளையாடுகிறார் மனிதர். குறிப்பாக ரக்ஷனாவை ஏமாற்ற ஜீவன் வாலியாகவும், மயில் அவருக்கு சிஷ்யராகவும் வரும் காட்சிகளில் அரங்கம் அதிர்கிறது.

நல்ல நடிப்பைக் காட்ட வேண்டிய படம் இது அல்ல என்று தெரிந்து கவர்ச்சியை மட்டும் தாராளமாகக் காட்டி நடித்திருக்கிறார்கள் 4 நாயகிகளும்.

ஈழத் தமிழ் பெண்ணாக வருகிறார் சங்கீதா. ஆனால் பெரிசாக ஈர்க்காத பாத்திரம். சூழல் புரிந்து அதை வர்த்தகமாக்கிக் கொள்வதில் நம்மாட்களுக்கு பிஎச் டியே கொடுக்கலாம்.

ஒளிப்பதிவு இதம். ஆனால் இசையமைப்பாளர் இமான், கிடைத்த வாத்தியங்களையெல்லாம் உருட்டி விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார், படம் முழுக்க.

கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் செல்வா…  வெளிநாட்டு லொக்கேஷன்கள், நாயகிகளுக்கான கொஞ்சூண்டு உடைகளைத் தேர்வு செய்வதில் காட்டிய ஈடுபாட்டை,  திரைக்கதை உருவாக்கத்திலும் காட்டியிருந்தால் படத்தின் ரேஞ்சே வேறாக இருந்திருக்கும்.

இப்போ…?

‘ஜஸ்ட் டைம் பாஸ்’!

-எஸ்எஸ்

கண்டேன் காதலை – விமர்சனம்

October 30, 2009 by envazhi  
Filed under Cinema

கண்டேன் காதலை – விமர்சனம்

நடிகர்கள்: பரத், சந்தானம், தமன்னா, சிங்கமுத்து

இசை: வித்யாசாகர்

ஒளிப்பதிவு: பிஜி முத்தையா

தயாரிப்பு: மோசர் பேர் எண்டர்டெயின்மெண்ட்

இயக்குநர்: ஆர் கண்ணன்


ப் வி மெட் இந்திப் படத்தை தமிழ் சூழலுக்கேற்ப ரீமேக்க முயன்றிருக்கிறார்கள்.

முன் பின் அறிமுகமில்லாத பரத்தும் தமன்னாவும் எதேச்சையாக ரயிலில் சந்திக்கிறார்கள். சினேகமாகிறார்கள். வாழ்க்கையிலும் வணிகத்திலும் தோல்வியுற்று வெறுமையாகி இலக்கில்லாமல் பயணிக்கும் பரத்துக்கு தமன்னாவின் நட்பு, சில ஆரம்ப அறுவைகளுக்குப் பிறகு பிடித்துப் போக, அவரது ஊரான தேனிக்குப் போகிறார்.

Kandein_kadhali_036

இன்னொரு பக்கம் முன்னாவைக் காதலிக்கிறார் தமன்னா. தன் வீட்டாரிடம் அதைச் சொல்லத்தான் தேனிக்கும் வருகிறார். ஆனால் வந்த இடத்தில் அவருக்கும் முறைமாமன் மொக்கராஜ் சந்தானத்துக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

எனவே சொல்லாமல் கொள்ளாமல் பரத்துடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் தமன்னா. அவர் தன் காதலன் முன்னாவைத் தேடிப் போக, பரத் தன் வாழ்க்கையைத் தேடிப் போகிறார், ஜெயிக்கிறார். ஆனால் தமன்னா என்ன ஆனார் என்று தெரியாமல் அவர் வீட்டார் தவிக்கிறார்கள். பரத் மீது சந்தேகப்படுகிறார்கள்.

சரியாக 9 மாதங்கள் கழித்து தமன்னா திரும்ப வருகிறார் பரத்தின் வாழ்க்கையில். இடையில் அவர் எங்கிருந்தார்? காதல் என்ன ஆனது? பரத்தின் வாழ்க்கையில் தமன்னாவுக்கு என்ன பங்கு? என்பது மீதிக் கதை.

இந்திப் படத்தைப் பார்த்துவிட்டவர்கள், நிச்சயம் இந்தப் படத்தில் எக்கச்சக்கமாய் குறை சொல்லக் கூடும். காரணம், ஒரிஜினல் படத்தில் இருக்கும் இயல்பான காட்சி அமைப்புகள், மற்றும் கரீனா கபூர். ஜப் வி மெட் பார்க்காதவர்களுக்கு தமன்னா சர்க்கரை… பார்த்துவிட்டவர்களுக்கு சாக்ரீம். ஏக திகட்டல். துறுதுறு கேரக்டர் என்பதை ரசிகர்கள் உணர வேண்டும் என்பதற்காக தொணதொணவென கதாநாயகி பேசிக் கொண்டே இருப்பது…. ரொம்ப ஓல்டு ஸ்டைல். ரசிகர்கள் ரொம்ப மாறிட்டாங்க டைரக்டர்!

இடைவேளைக்கு முன்பு வரை சந்தானம் காப்பாற்றுகிறார். இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகளில் வேகமின்மையும் சுவாரஸ்யமில்லாத பாடல்களும் பொறுமையைச் சோதிக்கின்றன.

படத்தின் நாயகன் என்று பரத் அறிமுகமானாலும், ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளுவதென்னவோ சந்தானம்தான். அந்த வகையில் அவர்தான் நாயகன்!

பரத் நடிப்பில் ரொம்ப செயற்கைத்தனம்… தேவர் வீட்டுப் பெண்ணாக வரும் தமன்னா அழகாக இருக்கிறார், வாயை மூடிக்கொண்டிருக்கும் போது மட்டும்!

சிங்க முத்துவுக்கு சரியான வேட்டை… பின்னியிருக்கிறார் மனிதர். மனோபாலா, ரவிச்சந்திரன், முன்னா, நிழல்கள் ரவி என நிறைய பேர், ரவிக்குமாரின் படங்களில் வருவதுபோல வந்தாலும், நிறைவாகச் செய்திருக்கிறார்கள். அதனால் உறுத்தலாக இல்லை.

வித்யாசாகரின் இசை, இந்தப் படத்திலும் அவுட் ஆஃப் பார்ம்தான்!

Kandein_kadhali

பிஜி முத்தையாவின் காமிரா, பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம்…. படத்தின் ப்ளஸ்கள்.

படத்தில் அருவெறுப்பான காட்சிகள், முகம் சுளிக்கச் செய்யும் வசனங்கள், விட்டால் ரத்தம் நம் முகத்தில் தெறிக்குமோ என்று பயப்படும் வன்முறைக் காட்சிகள் ஏதும் இல்லை. ஆனால்  நகைச்சுவை இருக்கிறது படம் முழுக்க… அந்த ஒரு விஷயம் ரசிகனை கடைசி டைட்டில் கார்டு வரை தியேட்டருக்குள் இருக்க வைக்கிறது. அதற்காக ஒரு முறை பார்க்கலாம்!

-எஸ்எஸ்

உன்னைப்போல் ஒருவன் – விமர்சனம்

September 18, 2009 by envazhi  
Filed under Cinema

உன்னைப்போல் ஒருவன் – விமர்சனம்

2epuhki1

டிப்பு: கமல்ஹாஸன், மோகன்லால், கணேஷ் வெங்கட்ராம், லட்சுமி, பரத் ரெட்டி, அனுஜா

ஒளிப்பதிவு: மனோஜ் சோனி

இசை : ஸ்ருதிஹாஸன்

எடிட்டிங்: ராமேஷ்வர் பகவத்

கலை: தோட்டா தரணி

இயக்கம்: சக்ரி டோலட்டி

தயாரிப்பு: கமல்ஹாஸன், சந்திரஹாஸன், ரோனி ஸ்க்ரூவாலா

மக்கள் தொடர்பு: நிகில்

தீவிரவாதத்தின் விளைவுகள் உடனடியாக மக்களைத் தாக்குகின்றன… ஆனால் அந்தத் தீவிரவாதத்தைத் தந்தவர்களுக்கோ தண்டனைகள் தாமதமாக, வலிக்காமல் வழங்கப்படுகின்றன… தீவிரவாதத்துக்கு உடனடி தண்டனை தீவிரவாதமே…” என்ற ஒரு தனிமனிதனின் கோபம்தான் ‘உன்னைப்போல் ஒருவன்’.

வாங்கிய காய்கறியும் கறிவேப்பிலையும் வாடுவதற்குள் நடந்து முடிந்து விடுகிற சில நிகழ்வுகளை ஒரு விஷூவல் லைவ் கமெண்ட்ரி மாதிரி எடுத்திருக்கிறார்கள்.

நாட்டின் எத்தனையோ மத்யமர்களில் ஒருவரான கமல்ஹாஸன் இரவு பகலாக தனக்குத் தெரிந்த நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு வெடிகுண்டு தயாரிக்கிறார். ஒரு நாள் காலை அவற்றைக் கருப்புப் பைகளில் வைத்து காவல் நிலையம், ரயில், ஷாப்பிங் மால் என நகரின் முக்கியப் பகுதிகளிலெல்லாம் வைக்கிறார்.

பின்னர் கூலாக கடைவீதிக்குப் போய் மனைவி போட்டுக் கொடுத்த லிஸ்ட்படி காய்கறிகள் வாங்கிக் கொண்டு, பாதி கட்டி முடித்த ஒரு கட்டடத்தின் உச்சிக்குப் போகிறார். ஒரு பலகையை விரித்துப் போட்டு, கையோடு கொண்டுவந்திருக்கும் அத்தனை கம்ப்யூட்டர் சாதனங்களையும் பரப்பி, அசெம்பிள் செய்து, சற்றே நிதானமாகி மாநகர காவல்துறை கமிஷனர் மாரார் எனும் மோகன்லாலுக்கு ஒரு போன் செய்கிறார். தான் குண்டு வைத்திருக்கும் விவரங்களை தெளிவாக சொல்லிவிட்டு, டக்கென்று போனை வைத்துவிடுகிறார்.

அடுத்த நொடி கமிஷனர் அலுவலகம் அலர்ட்டாக, அது முதல்வர் அலுவலகம் வரை எதிரொலிக்கிறது. உள்துறைச் செயலாளர் லட்சுமி வருகிறார்.

மீண்டும் கமலிடமிருந்து போன்…

இம்முறை தனது செயலின் நோக்கத்தைச் சொல்கிறார். வைத்திருக்கும் குண்டுகள் வெடிக்காமல் இருக்க மும்பை, கோவை, அசாம் என பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரைக் குடித்த குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான நான்கு படுபயங்கர தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்லி நிபந்தனை விதிக்கிறார்.

வேறு வழியில்லை… நிலைமையின் தீவிரம் புரிந்து தீவிரவாதிகளை விடுவிக்க ஒப்புக் கொள்கிறார் கமிஷனர். அதேநேரம் கமல்ஹாஸனின் இந்த செயலுக்கான பின்னணி, அவர் இருக்கும் இடத்தையும் காண முயற்சிக்கிறார் கமிஷனர்.

கமல்ஹாஸனின் நிபந்தனைப்படி தீவிரவாதிகள் நால்வரும் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவனை மட்டும் உடன் செல்லும் அதிரடிப்படை அதிகாரி திடீரென பிடித்துக் கொள்ள, மற்ற மூவரும் தப்பித்து அங்கு நிறுத்தப்பட்டுள்ள ஜீப்பில் ஏறுகிறார்கள். அடுத்த நொடியில் ஜீப் வெடித்துச் சிதற, அதிர்ச்சியில் உறைந்து போகிறது காவல்துறை.

அந்த நான்காவது நபரையும் கொல்ல வேண்டும் என கமலிடமிருந்து அடுத்த போன் வருகிறது. தொடரும் விவாதங்கள், மிரட்டல்களுக்குப் பிறகு அந்த நான்காவது தீவிரவாதியும் கொல்லப்படுகிறான்.

என்ன நடந்தது… ஏன் விடுவிக்கப்படும் தீவிரவாதிகள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு கமல் தரும் விளக்கங்கள் மீதி.

எந்தக் குண்டும் வெடிக்காமலேயே, எந்தக் கட்டடமும் சிதறாமலேயே அந்த எபெக்ட் படம் முழுக்க இருக்குமாறு பார்த்துக் கொண்ட இயக்குநர் சக்ரியைப் பாராட்ட வேண்டும்.

பொதுவாக இந்த மாதிரி படங்களில் முதல்வர் போன்ற பாத்திரங்கள் வரும்போது யாராவது டம்மி பீஸை காட்டி கடுப்பேற்றுவார்கள். ஆனால் கமல் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நிஜ முதல்வரையே நடிக்க வைத்திருக்கிறார், குரல் மூலம்! படத்தில் காட்டப்படுவதும்கூட நிஜ முதல்வரின் வீடுதான்.

இதுபோன்ற நெருக்கடிக்கு மாநகரம் உள்ளாகும்போது, உயர்மட்ட அதிகாரிகள் படும் பாடு, நிலைமையைச் சமாளிக்க ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் முடிவுகள், அதனால் சக அதிகாரிகளுடன் ஏற்படும் உரசல், தனது கீழ்நிலை அதிகாரிகளுடன் ஒரு கமிஷனர் கொண்டிருக்கும் நட்பு ரீதியிலான-அதேநேரம் கடமை மாறாத உறவு… இவற்றையெல்லாம் மிக மிக அருகிருந்து பார்ப்பதைப் போன்ற உணர்வை இந்தப் படம் ஏற்படுத்துகிறது.

படத்தின் பெரும் பலம் வசனங்கள் (இரா முருகன்).

முதல்வருக்கும் கமிஷனருக்கும் நடக்கும் உரையாடலின் ஒரு சிறு பகுதியைப் பாருங்கள்…

“நிலைமை எப்படியிருக்கு மாரார்?”

(ஆங்கிலத்தில்)”எல்லாம் கடவுளின் கையிலிருக்கிறது சார்!”

“அய்யய்யோ… அது சிக்கலான கையாச்சே”

தீவிரவாதம், அவர்களை ஒழிப்பதில் மென்மையான அணுகுமுறை காட்டும் அரசுகள் பற்றி கமல் பேசும் வசனங்களில் தனிமனிதனின் கோபத்துக்குள்ள வீரியம் தெறிக்கிறது.

ஆனால், “மும்பையில் குண்டுவெடித்தால் நாம் டிவியில் செய்தி பார்த்துவிட்டு, வேறு சானலுக்கு மாறுகிறோம். அதிலும் தமிழ்ச் சேனல்களில் அதைக் காட்டுவதுகூட இல்லை. காரணம் வேறு எங்கோ நடக்கிற உணர்வில் நாம் இருப்பதுதான். நாம பேசறது வேற மொழிதானே… எவனுக்கோ நடக்குது நமக்கென்ன என்ன அலட்சியம்…” என்று கமல் கூறும்போது அதை ஏனோ மனம் ஒப்பவில்லை.

இதற்குக் காரணம் இந்திய அரசும் அரசியல்வாதிகளும்தானே… தமிழ்நாட்டுக்காரன் இந்த நிமிடம் வரை வேறு நாட்டு பிரஜை மாதிரிதானே நடத்தப்படுகிறான்… அவனது குரலுக்கு ஏது மரியாதை… அவனது விருப்பத்தை எவன் கேட்கிறான். டெல்லியில் முடிவெடுத்துத் திணிப்பதுதானே காலம் காலமாய் நடக்கிறது. எனவே கமலின் இந்த வாதத்தை மட்டும் ஏற்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் உதைபடும் இந்தியனுக்காகவோ, மும்பையில் செத்துப்போன இந்தியனுக்காகவோ தமிழன் அலட்டிக்கொள்ளாமலே இருந்துவிட்டதன் காரணம் இதுதான்!

தமிழனுக்கு வந்த துன்பங்களுக்காக கவலைப்பட்ட இந்தியர்கள் எத்தனை பேர்? மும்பை குண்டுவெடிப்பை மையப்படுத்தித்தான் அவர்களால் படங்கள் செய்ய முடிந்தது. கோவை குண்டுவெடிப்பெல்லாம் அவர்களால் கண்டுகொள்ளப்படவே இல்லையே.

ஆகவே இந்த ஒரு கருத்தை அவர் சொல்லாமலேகூட விட்டிருக்கலாம். மனிதத்துக்கு எதிரான தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதில் ஒருமைப்பாடு பற்றிய ட்யூஷன் எதற்கு? நதியின் ஓட்டம் மேலிருந்து கீழ்நோக்கி பாய்வதுதான் இயல்பானது!

தனது மூன்று மனைவிகளில் ஒருவர் இறந்துவிட்டதாக ஒரு முஸ்லிம் தீவிரவாதி கூற, அதற்கு அந்த இந்து தீவிரவாதி அடிக்கும் காமெண்ட் மகா தவறு!

அதேநேரம் தீவிரவாதத்துக்கு மத முகமூடி மாட்டிப் பார்ப்பதில் அர்த்தமில்லை என்கிற வாதம் ஏற்கக் கூடியதே. தீவிரவாதமென்றாலே முஸ்லிம்கள்தான் என்றுதான் இங்கும் நிலை நிறுத்துகிறார்கள். இந்துக்களின் தீவிரவாதமும் சிறுபான்மையினரை குஜராத்தில் காவு கொண்டதை கதைக்குள் பதிவு செய்ய முயற்சித்திருப்பது ஒரு சமநிலைத் தன்மையை பேணும் முயற்சி. ஆனால் எடுபடவில்லை.

ஹீரோ லால்!

படத்தின் மிகச் சிறந்த அம்சம் பாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் கலைஞர்கள்… ஒவ்வொருமே ஒப்பற்ற மணிகளாய் ஜொலிக்கிறார்கள்.

படத்தில் தன்னை பின்னுக்கு நகர்த்திக் கொண்டு மோகன்லாலையே பிரதானப்படுத்தியிருக்கிறார் கமல், அந்தப் பாத்திரத்தின் தன்மை அப்படி என்பதால்.

படம் பார்ப்பவர்களின் மனதை அப்படியே முழுமையாய் ஆக்கிரமிக்கிறார் மோகன்லால். நிச்சயம் இதைவிட பெட்டராக யாராலும் நடித்திருக்க முடியாது. அவரது மலையாளத் தமிழ் உச்சரிப்பு பாத்திரத்தின் நம்பகத் தன்மையை இன்னும் அதிகப்படுத்துகிறது. தீவிரவாதிகளை அழைத்துவர அனுப்பப்படும் தனது நம்பகமான இரு உயரதிகாரிகளுடனும் அவர் உரையாடும் காட்சி, குருஷேத்ரா மோகன்லாலை நினைவூட்டுகிறது.

உள்துறை அதிகாரியாக வரும் லட்சுமி யாதார்த்த நடிப்பைக் காட்டியிருக்கிறார். அவருக்கும் மோகன்லாலுக்கும் இடையே நிகழும் அந்த பனிப்போர்… எப்படியும் ஆளும் வர்க்கத்தின் கைகளில் பந்தாடப்படுவோம் என்ற நிச்சயமற்ற தன்மையை மோகன்லால் காட்டும் விதம்… ஹாட்ஸ் ஆஃப் மோகன்லால்!

இந்த முறை கமல் ரிங் மாஸ்டர் மாதிரி அமைதியாக உட்கார்ந்தபடி, ஆனால் தனக்கு-படத்துக்கு தேவையான அனைத்தையும் அதற்குத் தகுந்த கலைஞர்களிடமிருந்து சரியான விகிதத்தில் வாங்கியிருக்கிறார்.

தன் கண்முன் ஒரு சகோதரிக்கு நிகழ்ந்த கொடூரத்தை அவர் விவரிக்கும் போது, நம்மையுமறியாமல்  கண்ணீர்.

எல்லாம் முடிந்ததும் மின்னல் வேகத்தில் அந்த சாதனங்களை  மறைத்து கொளுத்திவிட்டு ஒன்றுமே நடக்காத மாதிரி காய்கறி பைகளோடு வெளியேறும் விதமும், கமிஷனரை எதிர்கொள்ளும்போது, குறுக்கிடும் போன்காலுக்கு அவர் பதில் சொல்லும் விதமும் டிபிகல் கமல் ஸ்டைல்!

அவர் யார் எனத் தெரிந்தும் கமிஷனர் விட்டுவிடப் போகிறார் என்பதை முன்கூட்டியே யூகித்துவிட முடிகிறது.

கணேஷ் வெங்கட்ராம், இந்தப் படத்தின் அட்டகாசமான, யாருமே எதிர்பாராத ஒரு பாத்திரம். அச்சு அசலான அதிரடிப் படை வீரரை கண்முன் நிறுத்துகிறார் மனிதர்.

பரத் ரெட்டி, ஸ்ரீமன், சிவாஜி, சந்தானபாரதி, அனுஜா, பூனம்.. அட கடைசியாக வரும் அந்த ஐஐடி ட்ராப் அவுட் என அனைவரது நடிப்புமே, ஒரு மில்லிமீட்டர் கூட பிசகாமல் அத்தனை கச்சிதம்!

ஒளிப்பதிவு, எடிட்டிங் என எதிலுமே முதல் தரத்தைத் தந்திருக்கிறார்கள். ஸ்ருதி பல இடங்களில் தனது இசையை மவுனிக்க வைத்திருப்பது புத்திசாலித்தனம். மற்றபடி ஒரு இசையமைப்பாளராக இதில் அவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை.

‘இலக்கியம், ஜனரஞ்சகம், நவீனத்துவம் என எந்த வடிவிலிருந்தாலும் மக்களுக்காக செய்யப்படும் நல்ல கலைகள் என்றுமே தோற்பதில்லை’ என்பது நவீன இலக்கியத்தின் முன்னோடி மக்சீம் கார்க்கியின் வாக்கு. அதை உன்னைப்போல் ஒருவனும் நிரூபிக்கும்!

-எஸ்எஸ்

ஈரம் – விமர்சனம்

September 18, 2009 by envazhi  
Filed under Cinema


ஈரம் – விமர்சனம்

eeram-movie-audio-launch-stills-_4_

டிப்பு: ஆதி, சிந்துமேனன், நந்தா, சரண்யா மோகன்

ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்ஸா

இசை: எஸ் தமன்

இயக்கம்: அறிவழகன்

தயாரிப்பு: எஸ் பிக்சர்ஸ் சார்பில் ஷங்கர்

பிஆர்ஓ: நிகில் முருகன்

மிழில் புதுமுயற்சி… மிரட்டலான படம் என்று சொல்லும் அளவுக்கு இல்லைதான்… ஆனாலும் சமீபத்திய தோல்விப் படங்களுக்கு மத்தியில், முறுக்கான சரக்கோடு வந்த படம் என்ற வகையில் தப்பித்துவிட்டது ஈரம் என்பதே உண்மை.

இப்படி சொல்லக் காரணம், இதைவிட சஸ்பென்ஸ், த்ரில்லர் படங்களை நாம் பார்த்து ‘பயந்து’ தெளிந்துவிட்டோம் என்பதாகக் கூட இருக்கலாம்!

இருக்கட்டும்…

கதை ரொம்ப சிம்பிள்… ஆனால் லாஜிக் இல்லாத சூப்பர் நேச்சுரல் சமாச்சாரம். சந்தேகக் கணவன், அந்த சந்தேகத்துக்கு தூபம் போட்டு கொலைவரை விரட்டும் சூழ்நிலை மனிதர்கள்… இவர்களைப் பழிவாங்குகிறது ஒரு இளம்பெண்ணின் ஆவி. நெஞ்சில் ஈரமில்லாத மனிதர்களின் செயல்களை, ஈரத்தையே (தண்ணீர்) தன் ஊடகமாக்கி தண்டனையை அரங்கேற்றுகிறது அந்தப் பெண்ணின் ஆவி.

சிந்துமேனனின் கல்லூரித் தோழர் ஆதி. நட்பு கவிதையான சில சந்திப்புகளுக்குப் பின் காதலாகிறது. அடுத்து கல்யாணத்துக்குப் போகும்போது சிந்துவின் தந்தை ஆதியின் வேலையைக் காட்டி (போலீஸ்) பெண்தர மறுக்க, நந்தாவுக்கு கழுத்தை நீட்டுகிறார் சிந்து.

சந்தேகப் பேர்வழியான நந்தாவிடம் சீரழிகிறது சிந்துவின் வாழ்க்கை. அக்கம்பக்கத்து மனிதர்களும் தத்தமது சுய லாபங்களுக்காக சிந்துவைப் பற்றிய தங்கள் கற்பனைகளை நந்தாவிடம் நிஜம் போலவே போட்டுக் கொடுக்க, ஒரு நாள் கொன்றே விடுகிறார் நந்தா.

இந்தக் கொலைக்குப் பின், பழிவாங்கலை ஆரம்பிக்கிறது சிந்துவின் ஆவி. அதற்கு தண்ணீரை மீடியமாகத் தேர்ந்தெடுக்கிறது. அடுத்தடுத்து நிகழும் நூதன மரணங்கள் சின்னப் பசங்களை நிஜமாகவே டென்ஷனாக்கும் சமாச்சாரம்.

ஆரம்பக் காட்சிகள் மனதுக்குள் பெரும் ஆச்சரியக் குறிகளை எழுப்பும் அளவு திறமையாக, இறுக்கமாகப் படமாக்கப்பட்டுள்ளன.

சாம்பிளுக்கு ஒன்று…

ஒரு பெண் சமையலறைக் குழாயைத் திறக்கிறார. தண்ணீர் வரவில்லை. சலித்தபடி மிக்சியைப் போடுகிறார். மின்சாரம் இல்லை. அப்போது போன் ஒலிக்கிறது. போய் எடுத்துப் பேசுகிறார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே தண்ணீர் வருகிறது. ஸிங்க் நிரம்பி, ஒரு கரண்டி நுனி வழியாக சமையலறையில் வியாபித்து ஹால்வரை பரவுகிறது.

eeram

சில நொடிகளில் மின்சாரமும் வந்துவிடுகிறது. தண்ணீர், மின்கம்பி அறுந்திருக்கும் ஒரு பகுதிக்கும் அந்தப் பெண்மணி பேசிக்கொண்டிருக்கும் இடத்துக்கும் பரவுகிறது. தண்ணீர் விரைந்து விரைந்து அந்தப் பெண்ணின் குதிகாலை முத்தமிட… ஆ வென்ற அலறல்… அடுத்த நொடி மரணப் படுக்கையில் பிணமாக அந்தப் பெண்!

தியேட்டர் பாத்ரூமில் அருவமாக ஆனால் தண்ணீரில் கால்தடங்கள் பதிய ஆவி நடந்து போகும் காட்சிப் பதிவு பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.

ஆனால் இடைவேளைக்குப் பிறகு ஆவி ஆராய்ச்சி மையம் என்றெல்லாம் இழுக்கும்போது சற்று சேர்வு தட்டிவிடுகிறது.

சிந்துமேனனின் ஆவி வந்திருப்பதை ஆதி உணரும் தருணங்களைப் படமாக்கியிருக்கும் நேர்த்தி குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு விஷயம்.

படம் முழுக்க ஈரம் ஒரு காரெக்டர் என்பதால் அதை எங்கும் திணிக்காமல் இயல்பாகவே காட்ட இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் எடுத்த முயற்சிகள் க்ளாஸ் ரகம்.

நடிப்பைப் பொறுத்தவரை… சந்தேகமே இல்லை… ஆதி டிஸ்டிங்ஷன் வாங்கிவிட்டார் இந்தப் படத்தில். கல்லூரி மாணவன், ரொமான்டிக் ஹீரோ, ஆக்ஷன் நாயகன்… மிடுக்கான போலீஸ் ஆபீஸர்… என எந்த வேடத்துக்கும் பக்காவாகப் பொருந்தும் உடல்மொழியை இவரிடம் காணமுடிகிறது. வசன உச்சரிப்பிலும் அத்தனை நேர்த்தி. தென்னிந்திய சினிமாவில் பெரிய உயரங்களைத் தொடப் போகும் இளைஞர் இவர்!

இந்தப் பாத்திரத்துக்கு மிகப் பொருத்தமான தேர்வு சிந்துமேனன். நந்தாவிடம் கொடுமைகளை அனுபவிக்கும்போதும், அந்த கோர மரணத்தை அவர் சந்திக்கும் விதமும்… அடுத்த இன்னிங்ஸ்ஸை சிறப்பாகவே துவக்கியுள்ளார் சிந்து.

நந்தாவைப் பற்றிச் சொல்லாவிட்டால் விமர்சனம் நிச்சயம் முழுமை பெறாது. மிகமிக இயல்பான வில்லத்தனம். சைக்கோ வில்லத்தனத்தை ரகுவரனுக்குப் பிறகு இத்தனை சிறப்பாகக் காட்டியிருப்பவர் நந்தாதான்!

தங்கை வேடத்தில் வரும் சரண்யா மோகன் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

தமனின் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லைதான். ஆனால் பின்னணி இசை படத்தில் அவரை முன்னிருத்துகிறது. மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவு ஆதிக்கு நிகரான இன்னொரு ஹீரோ இந்தப் படத்தில்.

வழக்கமான பழிவாங்கல் கதைதான்… ஆனால் ரசிக்கும்படி எடுத்த விதத்தில் ஜெயித்துவிட்டார்கள் ரசிகர்கள் மனதை!

-எஸ்எஸ்

நினைத்தாலே இனிக்கும் – விமர்சனம்

September 4, 2009 by envazhi  
Filed under Cinema

நினைத்தாலே இனிக்கும் – விமர்சனம்

ni2
நடிப்பு: ப்ரித்விராஜ், ஷக்தி, ப்ரியா மணி, கார்த்திக் குமார், மனோபாலா, இளவரசு…
இசை: விஜய் ஆன்டனி
இயக்கம்: ஜிஎன்.ஆர்.குமரவேல்
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்

ல்ல தலைப்பைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்… ஆனால் தமிழில் ‘ரீமேக்’ செய்யும் அளவுக்கு நல்ல கதையை தேர்ந்தெடுக்கத் தவறியிருக்கிறார்கள் தயாரிப்பாளரும் இயக்குநரும்.

காரணம், மலையாளத்தில் வெளியான க்ளாஸ்மேட்ஸ் முழுக்க முழுக்க மலையாள வாசம் நிறைந்த கதை. அங்குள்ள மாணவர்களின் சேட்டைகள், அந்த மண்ணுக்கே உரிய குறும்புகள் என ஒரு மலையாளி மனதில் பச்சக்கென்று ஒட்டிக் கொள்ளும் திரைக்கதை. அதுதான் அங்கே இந்தப் படம் அந்தப் போடு போட்டது.

ஆனால் அதை தமிழுக்கேற்ப மாற்றுகிறேன் பேர்வழி என இவர்கள் இறங்கப் போக, படம் பார்த்த அனுபவத்தை நினைத்தாலே கசக்கும் அளவுக்கு ஆகிவிட்டது சன் பிக்சர்ஸின் அடுத்த வெளியீடான நினைத்தாலே இனிக்கும்!

இதைவிட பன்னீர் புஷ்பங்கள் மாதிரி கதைகளை இன்றைய சூழலுக்கேற்பவாவது எடுத்திருக்கலாம்.

கடல் மீன்கள், கல்யாணராமன் என வெற்றிப் படங்களாகத் தந்த இயக்குநர் ஜிஎன் ரங்கராஜனின் வாரிசுக்கு முதல் படமே சறுக்கியிருக்கிறது என்ற உண்மையைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. அடுத்த படத்தில் வெற்றிபெற வாழ்த்திவிட்டு விமர்சனத்தைத் தொடர்வோம்…

எதிர்ப்பார்த்த மாதிரியே, முன்னாள் மாணவர் பிரித்விராஜின் ப்ளாஷ்பேக்காக விரிகிறது கதை.

மும்பையில் பணியாற்றும் பிரித்வி ராஜ் எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, தான் படித்த கல்லூரிக்கு வருகிறார். வரும்போதே, பழைய கல்லூரி நினைவுகளுக்குள் பயணப்படுகிறார்.

கல்லூரியில் மாணவர்களின் ஹீரோ ப்ரித்விராஜும் பொறாமை பிடித்த பணக்கார கார்த்திக்கும் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். இவர்களின் பொதுவான நண்பன் சக்தி.

லோக்கல் எம்எல்ஏவின் அடாவடி மகள் ப்ரியாமணியும் இந்தக் கல்லூரியின் மாணவி (கிட்டத்தட்ட 30 வயசு மாணவர்கள்!). ஆரம்பத்தில் ப்ரித்வியுடன் மோதல், பின்னல் வழக்கம்போல காதல் என இந்த லவ் ட்ராக் போகிறது.

அப்போது பார்த்து கல்லூரி தேர்தல்… இந்த தேர்தலில் பிரித்வியுடன் ப்ரியாமணி மோதும் நிலையை கார்த்திக் உருவாக்குகிறார். தொடர்ந்து மோதல், சக்தியின் மரணம் எனப் போகிறது கதை.

பிரித்வியும் பிரியாமணியும் இணைகிறார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ் என சொல்லித் தெரியவேண்டியதில்லை.

கல்லூரி நினைவுகள் என்றதும்… ஆஹா ஜில்லுன்னு ஒரு இளமைப் பயணமாக இருக்குமோ என சந்தோஷப்படுவதற்குள் குத்துப்பாட்டு, டான்ஸ், பைட் என கமர்ஷியல் சமாச்சாரங்களை ஏகத்துக்கும் திணித்து கடுப்படிக்கிறார் இயக்குநர்.

முதல்பாதியில் கொட்டாவி வரவழைக்கும் காட்சிகள், இரண்டாம் பாதியில் ஏக திருப்பங்கள் என சமநிலையற்ற திரைக்கதையால் வெந்தும் வேகாத விருந்தைச் சுவைத்த எரிச்சல் வந்துவிடுகிறது.

போதாக்குறைக்கு காமெடி என்ற பெயரில் திருநங்கைகளை வேறு புண்படுத்தியிருக்கிறார்கள்.

பிருத்விராஜ் இன்னும் திருத்தமாக, மலையாள வாசனை துறந்த தமிழை, அதற்குரிய ஏற்ற இறக்கங்களுடன் பேசக் கற்றுக் கொள்வது நல்லது. மற்றபடி குறை வைக்காத நடிப்பு (மலையாளத்திலும் இவர்தான் ஹீரோ).

சக்தி இயல்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், இன்றைய சினிமாவில் பிரகாசிக்க, இந்த மேனரிசங்கள் நிச்சயம் உதவாது என்பதை அவர் எப்போது உணர்ந்து திருத்திக் கொள்ளப் போகிறாரோ!

ப்ரியாமணி கதாநாயகியாம்… அவரை விட சக்தியின் ஜோடியாக வரும் அந்த இன்னொரு பெண் பரவாயில்லை. ஆனால் அவர் யார் என்று டைட்டிலில் போடவே இல்லை இயக்குநர் / தயாரிப்பாளர். என்ன கோபமோ!

மனோபாலா இனி லெக்சரர் வேடத்தில் நடிக்கக் கூடாது என தடை போட வேண்டும்… அல்லது ரிடயர்மெண்ட் கொடுத்துவிடலாம்.

படத்தில் ஆறுதலான நடிப்புக்குச் சொந்தக்காரர் ‘நம்ம ஆளு’ பாக்யராஜ்தான். பக்குவமான பாத்திரம். நிறைவாகச் செய்திருக்கிறார்.

விஜய் ஆன்டனி இசை… வேண்டாம்… சிலவற்றைச் சொல்லாமல் விட்டு விடுவதே உத்தமம்!

பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு இதம்.

தலைப்புக்கு சம்பந்தமே இல்லாத படம். என்ன… கிட்டத்தட்ட 2 மணிநேரத்துக்குள் படம் முடிந்துவிடுகிறது… படத்தில் சந்தோஷமான விஷயம் அது ஒன்றுதான்!

குறிப்பு: சினிமாக்காரர்களுக்கு ஒரு வேண்டுகோள்… தயவு செய்து பழைய வெற்றிப் படத் தலைப்புகளை அப்படியே விட்டு வையுங்கள். இப்போது ‘நினைத்தாலே இனிக்கும்’ என்று கூகுளில் தேடினால் இந்தப் படம்தான் வந்து தொலைக்கிறது…

-எஸ்எஸ்

கந்தசாமி – விமர்சனம்

August 22, 2009 by envazhi  
Filed under Cinema

கந்தசாமி – விமர்சனம்

நடிப்பு: விக்ரம், வடிவேலு, ஸ்ரேயா, பிரபு, ஆசிஷ் வித்யார்த்தி, கிருஷ்ணா

இசை: தேவி ஸ்ரீபிரசாத்

ஒளிப்பதிவு: என் கே ஏகாம்பரம்

இயக்கம்: சுசி கணேசன்

தயாரிப்பு: வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு

ருப்பதைப் பிடுங்கி இல்லாதவனுக்குத் தரும் ராபின்ஹூட் ஸ்டைல் கதைகளுக்கு ஹாலிவுட் பாலிவுட் கோலிவுட் என சென்றவிடமெல்லாம் சிறப்புதான்!

vikram_kandasamy_wallpaper_15107_1

கதைக்காக ரொம்ப மெனக்கெடவில்லை சுசிகணேசன்… ஜென்டில் மேன், அந்நியன், சிவாஜி மற்றும் ரமணா படங்களின் முக்கிய திருப்பங்களையெல்லாம் ஒரே திரைக்கதைக்குள் கொண்டு வந்து தொழில்நுட்பத்தின் துணையுடன் பிரமாண்ட பொழுதுபோக்கு விருந்து படைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார் என்பது முக்கியம்.

இந்த 3.15 நிமிடப் படத்தில் ஆங்காங்கே சில வேகத் தடைகள் இருந்தாலும், ஒரு பக்கா கமர்ஷியல் மசாலாவை ரசித்த திருப்தியுடன் பார்வையாளர்கள் வெளியேறுவதுதான் கந்தசாமியின் வெற்றி.

திருப்போரூர் கந்தசாமி கோயில் மரத்தில் மக்கள் தங்கள் குறைகளை, கோரிக்கைகளாக பேப்பரில் எழுதிக் கட்டி வைத்துவிட்டால் போதும், உடனே அவர்களுக்கு கேட்ட உதவி கிடைக்கும். ஆனால் காரணம் நிஜமாக, நியாயமாக இருக்க வேண்டும். கோயிலில் உள்ள சாமி அல்ல… ஒரு ஆசாமி. அவர் பெயரும் கந்தசாமிதான் (விக்ரம்). சேவல் வேடமிட்ட கந்தசாமி இவர்.

கொஞ்ச நாளிலேயே, அந்த கிராமம் மற்றும் சுற்றுப் புறங்களில் உள்ளவர்களின் வாழ்க்கை நிலை பசுமையாகிவிட, போலீஸ் அதிகாரி பிரபுவுக்கு சந்தேகம். விசாரணையை ஆரம்பிக்கிறார்.

இந்த நேரத்தில்தான் சிபிஐ பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரி கந்தசாமி அறிமுகமாகிறார். நேர்மையானவர். கறுப்புப் பணத்தை அடியோடு ஒழித்தால் நாடு திருந்திவிடும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

எங்கெல்லாம் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு அதிரடி சோதனை நடத்தி, மொத்தப் பணத்தையும் கைப்பற்றுகிறார். ஆனால் அவற்றை அரசு கஜானாவுக்கு அனுப்பாமல் தாமே முன்னின்று தேவையானவர்களுக்கு வழங்குகிறார்.

தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் எட்டுப் பேரின் (கந்தசாமியின் வில்லன்கள் எண்ணிக்கை போலவே, நண்பர்களின் எண்ணிக்கையும் காட்சிக்குக் காட்சி கூடிக் கொண்டே போகிறது… கடைசியாக 11 நண்பர்கள் டீமாக மாறுகிறது!) துணையுடன் இந்த உதவிகளைத் தொடர்ந்து செய்கிறார் கந்தசாமி. இந்த எட்டுப் பேரும் சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவில் வெவ்வேறு பணிகளை மேற்கொண்டிருப்பவர்கள். (சேவல் வேடம் போட்ட திருப்போரூர் கந்தசாமியும், சிபிஐ கந்தசாமியும் ஒருவரே என்பது உங்களுக்குப் புரிந்திருக்குமே…!)

கந்தசாமியின் அதிரடி சோதனையொன்றில் சிக்கி பணத்தையெல்லாம் இழக்கிறார் வில்லன் ஆசிஷ் வித்யார்த்தி. தந்தைக்கு நேர்ந்த இழப்புக்கு கந்தசாமியைப் பழிவாங்கப் புறப்படுகிறார் ஒல்லிக் குச்சி உடம்புக்காரி ஸ்ரேயா. காதலிப்பது போல் நடிக்க ஆரம்பித்து, பின் காதலில் விழுகிறார்.

ஒரு கட்டத்தில் கந்தசாமிகள் இருவரும் ஒருவரே என்பதை ஆசிஷ் வித்யார்த்தி கண்டுபிடித்து அதை கந்தசாமி வாயாலேயே ஒப்புக் கொள்ள வைத்து அதை வீடியோ ஆதாரமாக்கிவிடுகிறார். ஆனால் கந்தசாமியை போலீசில் போட்டுக் கொடுக்காமல், ஒரு டீல் பேசுகிறார்.

இனியும் கந்தசாமி தனது கறுப்புப் பண வேட்டையைத் தொடர வேண்டும். ஆனால் அந்த வேட்டையில் கிடைப்பதில் பாதியை தனக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பதே அந்த டீல்.

அதற்கு ஒப்புக் கொள்ளும் கந்தசாமி, மெக்ஸிகோவில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்கள் சிலரின் பெருமளவு கறுப்புப் பணத்தைக் கைப்பற்றப் புறப்படுகிறார். அதில் ராஜ்மோகன் என்ற பெரிய திமிங்கிலத்துடன் மோதல் ஏற்படுகிறது. கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுகிறார… உண்மை அம்பலமாகி போலீசிஸில் சிக்குகிறாரா… ஸ்ரேயாவுடன் காதல் என்ன ஆனது? அரசு என்னதான் நடவடிக்கை எடுக்கிறது… இப்படி பல கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு நீ…ண்ட பதில்களையும் வைத்து க்ளைமாக்ஸைத் தொடுகிறார் இயக்குநர்.

திருப்போரூர் கந்தசாமியிடம் ஒரு ஏழைப் பெண் பெற்ற உதவித் தொகையை போலீஸ்காரர் ஒருவர் தட்டிப் பறிக்க, அவரை சேவல் வேடம் போட்ட சூப்பர் மேன் கந்தசாமி தெருவில் போட்டு புரட்டி எடுத்து பணத்தை மீட்பதாகத் தொடங்கும் அந்தக் காட்சியிலேயே பார்வையாளர்களை உள்ளே இழுத்துக் கொள்கிறது கதை. அதனால்தான் அதன்பிறகு வரும் பல லாஜிக் மீறல்களையும், மந்தமான சில காட்சிகளையும் கூட பெரிய குறையாக எடுத்துக் கொள்ளாமல் ரசிக்க முடிகிறது.

அந்நியனுக்குப் பிறகு விக்ரம் எடுத்திருக்கும் முழுநீள சூப்பர் ஹீரோ அவதாரம் கந்தசாமி. லோக்கல் ராபின்ஹூட் மற்றும் சிபிஐ அதிகாரியாக வேடப் பொருத்தம் கச்சிதம். அந்தப் பெண் வேடக் காட்சியை முதலில் பார்ப்பவர்கள் அது விக்ரம் என்ற ஆண் நடிகர்தான் என்று கற்பூரம் அடித்துச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். மெக்ஸிகோ சண்டைக் காட்சிகளில் லாஜிக் இருந்தாலும், அந்த நீ…ளம், கொட்டாவியை வரவழைப்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

கதாநாயகி ஸ்ரோவுக்கு தமிழ் ரசிகர்கள் மீது அப்படியென்ன கோபமோ… ஜேம்ஸ்பாண்ட் படங்களின் நாயகி ரேஞ்சுக்கு கலர்புல் வேடம் அவருக்கு. ஆனால் அவர் முக்கால் நிர்வாணமாக வந்தாலும், ‘அய்யோ பாவம்’ என்று உச்சுக் கொட்டத்தான் முடிகிறது, அவரது ‘சைஸ் ஜீரோ’ உடலைப் பார்த்து!

வடிவேல் சில காட்சிகளில் வெடிவேல்… சிலவற்றில் கடிவேல்!

போலீஸ் அதிகாரியாக வரும் பிரபு தனது வேடத்தின் தன்மை உணர்ந்து செய்துள்ளார். தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவுக்கு இதில் மிக முக்கிய வேடம். படத்தில் விக்ரமுக்கு உறுதுணையாக வரும் அவர் நிஜத்தில் படத்துக்கும் உறுதுணையாக இருக்கிறார்.

மயில்சாமி, சார்லி கொஞ்சமாக வந்தாலும் மறக்க முடியாத பாத்திரங்கள். சுசி கணேசனும் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

படத்தின் முக்கிய பலவீனம், அடுத்து என்ன என்ற பரபரப்பு இல்லாத திரைக்கதைதான்.

இன்னொரு முக்கிய குறை… ஒரு ராபின் ஹூட் உருவாவதற்கான வலுவான  பின்னணியைச் சொல்லாமல் விட்டது.

அதுமட்டுமல்ல… தான் எடுத்த காட்சிகளின் அழகில் தானே மயங்கி, அவற்றை ரசிகர்களும் பார்த்து ரசித்தே ஆகவேண்டும் என்ற ஒரு மோசமான மனநிலைக்கு சுசி கணேசன் ஆட்பட்டுவிட்டாரோ என்று எண்ண வைக்கும் சில காட்சிகள். மகா நீளம். இப்போதே கத்தரி போடுங்கள், இனி பார்ப்பவர்களாவது முழுமையாகப் பாராட்டுவார்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் ஓகே (பெரும்பாலும் மேற்கத்திய ட்யூன்களின் நகல்!).  ஒரு பாடகராக விக்ரமின் குரலும் கூட ஓகேதான். ஆனால் படத்தின் பின்னணி இசையில் கோட்டை விட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவில் ஏகாம்பரம் பல புதிய உத்திகளைப் பயன்படுத்தியிருந்தாலும், சில காட்சிகளில் அதுவே ரசிகனை படத்துடன் ஒன்ற விடாமல் செய்துவிடுகிறது.

திரைக்கதையில் விறுவிறுப்பும், நம்பகத் தன்மையும் இன்னும் கூடுதலாக இருந்திருந்தால் கந்தசாமி இன்னும் கலர்ஃபுல் சாமியாக இருந்திருக்கும்.

பார்க்கலாம்!

-எஸ்எஸ்

பொக்கிஷம் – விமர்சனம்

August 15, 2009 by envazhi  
Filed under Cinema

பொக்கிஷம் – விமர்சனம்

-எஸ்எஸ்

pokkisham_rev

நடிப்பு: சேரன், பத்மப்ரியா, விஜயகுமார், இளவரசு

ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்

கலை: வைரபாலன்

இசை: சபேஷ் முரளி

எழுத்து – இயக்கம்: சேரன்

தயாரிப்பாளர்: ஹிதேஷ் ஜபக்

ன்பே… அதோ தபால்காரன் வருகிறான்
அவன் கையிலிருப்பது உன் கடிதம்.. அல்ல அல்ல
என் உயிர்!

-இந்த மூன்று வரி கவிதையில் சொல்லிவிடக்கூடிய கதைதான் சேரனின் பொக்கிஷம். ஆனால் இந்த கவிதையின் சுவாரஸ்யத்தைத் திரையில் அவரால் தரமுடியாமல் போனது நல்ல சினிமாவுக்காகக் காத்திருந்த ரசிகர்களின் துரதிருஷ்டம்.

சேரன் முதலில் செய்ய வேண்டியது, தனக்கேற்ற பாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும். பாத்திரத்தின் தன்மையை தனக்கேற்ற மாதிரி வளைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அது ஷூவுக்கேற்றபடி காலை வெட்டிக் கொள்வதற்குச் சமம். இந்த விபத்துதான் பொக்கிஷத்தில் நேர்ந்துள்ளது.

006a
ஜெயித்த காதல்கள் வாழ்க்கையாக, தோற்ற காதல்களோ காவியங்களாகின்றன. இதில் இரண்டாவதைப் படமாக்கியுள்ளார் சேரன். ஆனால் எந்தக் காட்சியையும் சுவாரஸ்மாகத் தர முடியவில்லை அவரால்.

இறந்துபோன தந்தையின் டைரியை அவர் மகன் படிப்பதாகத் துவங்குகிறது கதை. அந்த டைரிகளினூடே ஏமாற்றமும் விரக்தியும் வெறுமையும் நிறைந்த ஒரு இந்து – முஸ்லிம் காதல் கதை ப்ளாஷ்பேக்காக விரிகிறது.

உடல்நலம் சரியில்லாத தன் தந்தையை (விஜயகுமார்) மருத்துவமனையில் ஆபரேஷனுக்காக சேர்க்கிறார் லெனின் (சேரன்). அதே மருத்துவமனையில் தன் தாயைச் சேர்த்துவிட்டு இறுதி நேரத்தில் பணம் கட்ட முடியாமல் தவிக்கிறார் நாதிரா (பத்மப்ரியா). தமிழ் இலக்கியம் படிக்கும் நாகூர் கல்லூரி மாணவி.

அந்த நேரத்தில், நாதிராவின் தாயாருக்காக பணம் செலுத்தி உதவுகிறான் லெனின். இந்த உதவி, ஒரே நாளில் இருவருக்குள்ளும் நட்பைப் பூக்க வைக்கிறது. இலக்கியம், கம்யூனிஸம் என பல கருத்துப் பரிமாற்றங்கள். மருத்துவமனை வாசம் முடிந்து இருவரும் அவரவர் ஊருக்குத் திரும்புகிறார்கள். வேலைக்காக கொல்கத்தா வருகிறான் லெனின்.

நாதிராவின் விலாசத்தை தந்தையின் கடிதம் மூலம் அறிந்து, ஒரு கடிதம் அனுப்புகிறார் லெனின். சில தினங்களுக்குப் பின் நாதிராவிடமிருந்தும் கடிதம். கடிதங்கள் தொடர, காதல் பூக்கிறது. வழக்கம்போல இந்துப் பையனுடன் காதலா என முஸ்லிம் குடும்பத்தில் எதிர்ப்பு. ஆனால் லெனினின் தந்தை, அதற்குமேல் நிலைமையை மோசமாக்காமல் லெனினை கூட்டிக் கொண்டு நாகூருக்கே போய் நாதிரா தந்தையுடன் பேசுகிறார்.

அவரும் எதிர்பாராத விதமாக ஒப்புக் கொள்கிறார். இரு நிபந்தனைகளுடன்… ஒன்று அடிக்கடி கடிதம் எழுதக் கூடாது. நேரில் பார்த்துக் கொள்ளாமல் கட்டுப்பாடாக இருக்க வேண்டும்.

திருமணம் கைகூடிய மகிழ்ச்சியில் மனதைக் கட்டுப் படுத்திக் கொண்டு மாதம் ஒரு கடிதம் என எழுதுகிறார். ஆனால் நாதிராவிடமிருந்து ஒரே ஒரு கடிதம் மட்டுமே வருகிறது. பின்னர் கடிதங்கள் இல்லை. என்ன ஆனதோ என்ற பதைப்பில் தந்தையிடம் விசாரிக்கிறார். திருப்தியான பதிலில்லை. எனவே நேரிலேயே போய் பார்த்துவிட ரயிலேறுகிறார். நாகூருக்குப் போய்ப் பார்த்தால், அங்கே நாதிரா குடும்பமே இல்லை. யாரைக் கேட்டாலும் பதிலில்லை. லெனின் என்றதுமே அத்தனை பெரிய மனிதர்களும் பொய் சொல்கிறார்கள்.

கால்கள் தேயுமளவு தேடுகிறார்… நாதிராவின் நாதி எங்கே என்பது மட்டும் தெரியாமலே போக, தந்தையின் வற்புறுத்தலுக்காக வேறு பெண்ணை திருமணம் செய்து, குழந்தை பெற்று வேறு வாழ்க்கையை வாழ்கிறார். ஆனால் நாதிராவுக்கான தேடலை விடாமல், என்றாவது நேரில் பார்த்தால் தர வேண்டும் என்ற நினைப்பில் கடிதங்களாய் எழுதி வைக்கிறார். தராமலேயே இறந்தும் போகிறார்.

இந்த இடத்தில் ப்ளாஷ்பேக் முடிய, தந்தையின் டைரியைப் படிக்கிற மகன், அந்த நிறைவேறாத காதலுக்கு ஒரு அர்த்தம் தர முனைகிறான். தந்தை எழுதி வைத்த கடிதங்களை எடுத்துக் கொண்டு நாதிராவைத் தேடி பயணிக்கிறான். பார்த்தானா… கடிதங்களை ஒப்படைக்கிறானா என்பது மீதிக் கதை.

011b

ஒருவேளை இங்கே இந்தக் கதை  படிக்க சுவாரஸ்யமாக இருக்கலாம். ஆனால் இந்த சுவாரஸ்யத்தைக் கூட படத்தின் காட்சிகளில் ரசிகர்களுக்கு சேரனால் தர முடியவில்லை என்பதே விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட உண்மை.

லெனின் பாத்திரமாக சேரன்… எழுபதுகள் காலகட்டத்து உடைகள், சிகையலங்காரங்கள் என மெனக்கெட்டிருக்கிறார். ஆனால் அதையும் மீறி அவர் சேரனாகவே தெரிவது, அந்தப் பார்த்திரத்தின் இயல்பைச் சிதைத்து விடுகிறது. எதற்கெடுத்தாலும் அழுவது, கிளிசரின் ரொம்பிச் சிவந்த கண்களால் சுய பச்சாதாபத்துடன் பேசுவது… சேரன் மாறவே இல்லை.

இங்கே இன்னொரு முக்கிய விஷயத்தைச் சொல்லியாக வேண்டும்… ஒரு படைப்பாளியாக மட்டும் சேரன் நிற்கும்போது, மேலும் மேலும் தான் உருவாக்கிய பாத்திரத்துக்கு வண்ணங்கள் சேர்க்க முடியும். இன்னும் பல சுவாரஸ்யமான பரிமாணங்களை அதில் கொண்டு வந்திருப்பார். ஆனால் நடிகராகவும் அவரே மாறிவிட்டதால், தன்னால் என்னென்ன செய்ய முடியும், தன் இமேஜுக்கேற்ற காட்சிகள் எவை என்பதில் கவனம் போய்விட, அந்த காரெக்டர் இயல்பு மாறி குறைப் பிரசவமாகிவிடுகிறது. ஆனால் எல்லா படைப்பாளிகளுக்கும் இது பொருந்தும் என்று சொல்ல முடியாது.

நாதிராவாக பத்மப்ரியா. அவரை அழகாகக் காட்ட ரொம்பவே முயற்சித்திருக்கிறார் சேரன். ஆனால் க்ளைமாக்ஸில் எல்லாமே ஒப்பனை என எளிதாகத் தெரிந்துவிடுவதால், காட்சியின் சோகம் பார்வையாளனுக்குள் நுழையாமல் போகிறது.

வயது தளர்ந்த, மகனை நேசிக்கும் கம்யூனிஸ்ட் தந்தை வேடத்தை விஜயகுமார் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
சொல்லிக் கொள்ளும்படி வேறு பாத்திரங்கள் இல்லை.

வசனங்களில் நல்ல தமிழ் விளையாடுவது ஒரு சந்தோஷம். எந்தக் காட்சியும் அறுவறுக்கதாகவோ, இரட்டை அர்த்தம் தொனிக்கும்படியோ இல்லாதது இன்னொரு சந்தோஷம். ஆனால் இந்த சிறப்புகள் எடுபடாமல் போனது சோகம்.

இளையராஜாவின் உறவுகள் தொடர்கதை பாடல் மெட்டையே பல காட்சிகளில் பின்னணி இசையாகப் பயன்படுத்தியிருக்கிறார் சபேஷ் முரளி. இன்னும் சில காட்சிகளில் டைட்டானிக் பாதிப்பு. பெரிதும் சிறிதுமாக மொத்தம் 10 பாடல்களுக்கும் மேல் இருக்கும். ஆனால் எந்த தாக்கமும் ஏற்படுத்தாத பாடல்கள்.

எது செட், எது நிஜம் என்று யாரும் பிரித்துப் பார்த்துவிட முடியாத அளவுக்கு அசத்தலான ஒளிப்பதிவு மற்றும் கலை உருவாக்கம்.

எழுபதாம் ஆண்டு காலகட்டத்தை சரியாகவே மறுநிர்மாணித்திருக்கிறார்கள் வைரபாலனும் சேரனும்.

இந்தப் படத்துக்கு வரவேற்பில்லை என்ற கோபத்தை நிச்சயம் பல மேடைகளில் கொட்டித் தீர்க்கப் போகிறார் சேரன். படைப்பை ஏற்பதும் மறுப்பதும் பணம் கொடுத்து ரசிக்கும் பார்வையாளனின் உரிமை.

நிஜத்தை ஏற்றுக்கொள்ள இயலாத இந்த பலவீனத்தை அவர் வெளிக் காட்டுவதை விட, இன்னும் ஒரு வலுவான, அழகான, சுவாரஸ்யமான படைப்போடு மக்களைச் சந்திக்கட்டும். பொற்காலத்துக்கு தங்கச் சங்கிலி அணிவித்து மகிழந்தவர்களும், பாண்டவர் பூமியையும் ஆட்டோகிராபையும் கொண்டாடியவர்களும் இதே ரசிகர்கள்தானே!

அயன் – திரைப்பட விமர்சனம்

April 6, 2009 by envazhi  
Filed under Cinema

அயன் – விமர்சனம்

நடிப்பு: சூர்யா, பிரபு, தமன்னா, ஜெகன், கருணாஸ், ஆகாஷ்தீப் சைகல், பொன்வண்ணன்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒளிப்பதிவு: எம்எஸ் பிரபு

வசனம்: சுபா

கதை, திரைக்கதை, இயக்கம்: கே வி ஆனந்த்

தயாரிப்பு: ஏவிஎம்

உரிமை & வெளியீடு: சன் பிக்சர்ஸ்

நியாயமாக இந்தப் படத்துக்குதான் குருவி என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும் இயக்குநர். ஆனால் விஜய் முந்திக் கொண்டுவிட்டார். (மற்றபடி அந்தப் படத்துக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை!)

சூர்யாவிடமிருந்து சற்றும் எதிர்பாராத ஒரு ‘க்ளாஸ் ஆக்ஷன்’ படமாக வந்திருக்கிறது அயன். மனதை சிலுசிலுக்க வைக்கும் காதல், உடலை முறுக்கேற்றும் சேஸிங்- சண்டைகள், இதுவரை தமிழ் ரசிகனின் கண்கள் பார்த்தறியாத ரம்யமான காட்சிகள்…

-நிச்சயம் இந்தக் கோடையின் முதல் உருப்படியான வரவு அயன்.

கதை புதிதல்ல… ஆனால் களமும் நிகழ்வுகளும் நிச்சயம் புதிதுதான். வழக்கமான ஆக்ஷன் மசாலாவாகவே இருந்தாலும் அதைச் சொல்லும் நேர்த்திதான் ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும். அந்த வகையில், இடைவேளைக்குப் பின் இரண்டு பாடல்களில் ஹாரிஸ் ஜெயராஜ் சோதித்தாலும், சூர்யா-பிரபு-தமன்னாவின் நடிப்பு இருக்கையில் அமர வைத்து விடுகிறது.

தந்தையின் நண்பர் பிரபுவிடம் விசுவாசமிக்க ‘குருவி’யாக வேலை பார்ப்பவர் சூர்யா. எம்எஸ்ஸி கம்ப்யூட்டர் புலி. பர்மா பஜாரில் நம்பர் ஒன் கடத்தல் குழு.

திருட்டு விசிடியிலிருந்து காங்கோ வைரம் வரை கஸ்டம்ஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பத்திரமாகக் கடத்தி வருவதில் நிபுணர் (கேட்ச் மி இஃப் யு கேன்? …அப்ப நீங்க சினிமா புலிதான்!).

பிரபுக்கு தொழில் கற்றுக் கொடுத்தவர் ஒரு மார்வாடி. அவர் நல்லவராக இருந்தாலும் அவரது மகன் ஆகாஷ்தீப் சைகல், பிரபுவின் முதலிடத்தைப் பறிக்க முயற்சிக்கிறார்.

அதற்காக பிரபு – சூர்யாவை முடிந்தவரை போட்டுக் கொடுக்கிறார் போலீசில். ஒரு முறை அப்படி ஒரு திருட்டு விசிடி சிக்கலில் மாட்டிக் கொள்ளும்போது, பிரபுவுக்காக போலீஸில் சரணடைகிறார் ஜெகன். வெளியில் வந்ததும் பிரபுவுக்கு இன்னொரு விசுவாசமிக்க குருவியாக மாறுகிறார். சூர்யாவும் அவரும் நண்பர்களாகிறார்கள். ஜெகனின் தங்கை தமன்னா. முதல் அறிமுகத்திலேயே, காதல் பூக்கிறது இருவருக்கும். அதை கண்டுகொள்ளாமல் விடுகிறார் ஜெகன். கண்ணெதிரிலேயே காதல் முற்ற, சந்தோஷமாக அனுமதிக்கிறார். டிக்கெட் எடுத்துக் கொடுத்து மாயாஜாலுக்கு படம் பார்க்க அனுப்புகிறார்.

அந்த தருணத்தில்தான், அவர் மார்வாடிக்காக வேவு பார்க்க வந்த குருவி என்ற உண்மையைக் கண்டுபிடிக்கிறார் சூர்யா. அந்த நிமிடமே ஜெகனை நட்பை வெட்டி விடுகிறார், கூடவே தமன்னாவின் காதலையும்.

ஆனால் அதே நண்பன் வேறொரு சமயத்தில் தன்னைப் போலவே குருவியாய் மாறி குடல் கிழிபட்டு மலேஷியாவில் உயிர்விட, பழி சூர்யா மீது விழுகிறது. காதலியே போலீசில் புகார் தருகிறார்.

அதன் பிறகு… நடப்பதையெல்லாம் இங்கேயே சொல்லிட்டா எப்படி… தியேட்டர்ல போய் படம் பார்க்க வேணாமா!

எடுத்த எடுப்பிலேயே, இந்தப் படம் ஒரு ஹைடெக் ஆக்ஷன் மசாலா என்பதைச் சொல்லிவிடுகிறது எம்எஸ் பிரபுவின் காமிரா.

தமிழ் ரசிகர்கள் பார்த்தறியாத காங்கோவிலும், நமீபிய பாலைவனத்திலும் காட்சிகள் விரியும்போது ‘அட’ சொல்ல வைக்கிறது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்த பாலைவனத்துக்கு நடுவே நீண்டு செல்லும் சாலை… அந்த சாலையில் இதமாய் விரையும் திறந்த வாகனம். அதன் நடுவில் ஷாம்பெய்ன் பாட்டில்.. மெத்தைகள்… அருகில் அழகிய காதலி… ரசனைக்கார மனிதர் இயக்குநர் ஆனந்த்!

அதேபோல காங்கோ நாட்டின் நிலையற்ற அரசியல் சூழலையும் மக்கள் வாழ்நிலையையும், இந்த நெடும் படத்துக்குள் ஒரு குறும்படமாய் காட்சிப்படுத்திய விதம் கமர்ஷியல் ஆனந்துக்குள் புதைந்துள்ள இன்னொரு பரிமாணத்தை வெளிக்காட்டுகிறது.

கோடையில் கல்லூரி விடுமுறைக்கு முந்தைய இனிய அவஸ்தைகள் மாதிரி, தமன்னா-சூர்யா காதல் காட்சிகளில் கவிதையும் இளமையும் வழிகிறது.

அதேநேரம் ஆப்ரிக்க முரடர்கள் துரத்தும் அந்த மூன்று நிமிட சேஸிங் காட்சி தமிழில் இதுவரை வராதது. மாற்று நடிகர்களை வைத்துக் கொள்ளாமல் இந்தக் காட்சியில் சூர்யா செய்திருக்கும் சாகஸம் அவரது திறமைக்கு இன்னுமொரு சான்று.

இப்படி பாராட்ட நிறைய உண்டு…

ஆக்ஷன் காட்சிகளில் ஒரு நடிகர் எப்படி தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்பதை சூர்யாவைப் பார்த்து இன்றைய இளம் நாயகர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ‘ஒரு நல்ல ஆக்ஷன் நடிகர் ரிஸ்க் எடுக்க தயங்கக் கூடாது… ஆனால் பாதுகாப்பு முக்கியம்!’ என்பார் சூப்பர் ஸ்டார் ரஜினி. சூர்யா அதை முயற்சித்துப் பார்த்திருக்கிறார்.

விமானத்தில், உடன் வரும் ‘பீட்டரிடம்’ ஹைடெக் ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டுவதிலாகட்டும், அடுத்த நொடியே ரஜினியின் ‘ஆண்டவன் ஆட்ட’ கட்அவுட்டுக்கு முன் பக்கா லோக்கலாக இறங்கி ஆடுவதாகட்டும்… கிடைத்த இடத்திலெல்லாம் சிக்ஸர் அடிக்கிறார் சூர்யா!

நடிப்பு, தோற்றம் இரண்டிலுமே தமன்னாவிடம் நல்ல முன்னேற்றம். அசின், நயன்தாராக்களுக்கு நல்ல மாற்று. அவர்கள் வகித்த இடத்துக்கும் தகுதியான பெண்தான்.

கலைந்த தலை, ஒரு வார தாடி, மனம் நிறைந்த அன்புடன் வரும் பிரபுவைப் பார்க்கும்போது ஏனோ மனம் நிறைவாய் உணர்கிறது. பொருத்தமான தேர்வு. உனக்கும் எனக்கும் படத்துக்குப் பின் மனம் கவரும் இன்னொரு அழுத்தமான பாத்திரம்.

ஜெகனுக்கு நல்ல வாய்ப்பு… சரியாகப் பயண்படுத்திக் கொண்டிருக்கிறார். கருணாஸ் கண்கலங்க வைக்கிறார், அந்த ஒரே காட்சியில்.

கஸ்டம்ஸ் அதிகாரி பொன்வண்ணன் மீண்டும் தன்னை ஒரு பண்பட்ட நடிகராகக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

இன்னும்கூட பொருத்தமான ஒருவரை போட்டிருக்கலாமே என்று சொல்ல வைக்கிறது வில்லன் ஆகாஷ்தீப் சைகலின் சுமாரான நடிப்பு.

ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபுவும் எடிட்டர் ஆண்டனியும் கேவி ஆனந்தின் இடது வலது கரங்கள் மாதிரி… கச்சிதமான வேலை!

இரண்டு பாடல்கள் ரசிக்க முடிகின்றன. அது கூட அந்த வித்தியாசமான நடன அமைப்பு மற்றும் காட்சிகளுக்காக. மற்றபடி ஹாரிஸ் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். பின்னணி இசையில் ‘தம்’ போதாது சாரே!

இப்போது கூட தாமதமில்லை, இடைவேளைக்குப் பின் வரும் இரண்டு பாடல்களையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் வெட்டி வீசலாம்…!

மற்றபடி சின்னச் சின்ன லாஜிக் மீறல்கள், இடைவேளைக்குப் பிந்தைய மெதுவான நகர்வு இவற்றைத தவிர பெரிதாக எந்தக குறையும் இல்லாத படம். இரண்டரை மணிநேரம் எந்தக் கவலையும் இல்லாமல், ரசித்து அனுபவிக்க தைரியமாகப் பரிந்துரைக்கலாம்.

இதுவரை சன் பிக்சர்ஸ் மார்க்கெட்டிங் செய்ததிலேயே உருப்படியான படமும்கூட!

பொழுதுபோக்குக்கு உத்தரவாதம்!

-சாம்

Related Posts with Thumbnails