புதுமணத் தம்பதி சௌந்தர்யா – அஸ்வினுக்கு முதல்வர் வாழ்த்து! – ஸ்பெஷல் படங்கள்
புதுமணத் தம்பதி சௌந்தர்யா – அஸ்வினுக்கு முதல்வர் வாழ்த்து! – ஸ்பெஷல் படங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா – அஸ்வின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை ராஜா முத்தையா – ராணி மெய்யம்மை அரங்குகளில் நடந்தது.
காலையில் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போனதால், வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தார் முதல்வர் கருணாநிதி. அவரை ரஜினி, லதா ரஜினி உள்ளிட்டோர் வரவேற்றனர். மணமக்கள் அவரிடம் ஆசி பெற்றனர்.
துணை முதல்வர் ஸ்டாலினும் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
நிதியமைச்சர் அன்பழகன், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி, மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், நெப்போலியன், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் சு திருநாவுக்கரசர், சன் டிவி தலைவர் கலாநிதி மாறன், தொழிலதிபர் எம்ஏஎம் ராமசாமி செட்டியார், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர்கள் ஏ ஆர் ரஹ்மான், தேவா, இயக்குநர் பீ வாசு, ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சத்தியநாராயணா, நடிகர் மோகன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் திரையுலக விஐபிக்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்து வாழ்த்தினர்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.


-என்வழி ஸ்பெஷல்
டிஆர் பாலு தமிழரோ… இந்தியரோ அல்ல… சிங்களவர்! – தாமரை
September 4, 2010 by envazhi
Filed under கட்டுரைகள்
போலீஸ்காரனாக அல்லாமல் கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா? – தாமரை
இலங்கை விஷயத்தில் இந்தியா போலீஸ்காரனாக நடந்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் திமுக எம்பி டி ஆர் பாலு.
இதற்கு பதிலடி தந்துள்ள கவிஞர் தாமரை, “இந்தியாவால் போலீஸ்காரனாக நடந்து கொள்ள முடியாது. ஆனால் கொலைகாரனாக மட்டும் நடந்து கொள்ள முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்கனவே இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நிலையில், அங்கு எதிர்பார்த்த அளவிற்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது வருத்தமளிக்கிறது.
இத்தகைய நிலையில் இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் மேற்கொண்ட மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமையையும் கண்டறிய இந்திய அரசு சிறப்பு தூதரை இலங்கைக்கு அனுப்பி கண்காணிக்க வேண்டும்..”
-இப்படி ஒரு கோரிக்கையை வைத்து கடந்த ஜூலை 17-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் கலைஞர்.
இதன்பேரில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்…கொழும்பிலிருந்து வெளியாகும் ஒரு தமிழ்ப் பத்திரிகைக்கு, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அளித்துள்ள பேட்டியில்,
“யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்தியா தனது உதவிகளைத் தொடரும். ஆனால், அந்த உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரன் வேலையை இந்தியாவால் செய்ய முடியாது,” என தனது தலைவர் கருணாநிதிக்கே பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஆயிரக்கணக்கான கோடிகளை இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கைக்கு வாரியிறைத்திருக்கும் நிலையில்…, ‘அந்த பணத்தை எப்படி வேண்டுமானாலும் சிங்களன் செலவழிக்கட்டும். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை’ என்கிற ரீதியில் பாலு சொன்னது ஈழத் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
டிஆர் பாலு தமிழரா… இந்தியரா… சிங்களவரா?
டி.ஆர்.பாலுவின் இந்த பேட்டி பற்றி பேசிய கவிஞர் தாமரை, “தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தமிழரா, இந்தியரா என்ற குழப்பம் அவருக்கே இருக்கும். இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. அவர் தமிழரோ, இந்தியரோ அல்லர், அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரனாக இந்தியா செயல்பட முடியாது என்றும், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சிங்கள இராணுவ குடியிருப்புகள் அமைப்பது தொடர்பாக ஆதாரமில்லாமல் குறைசொல்ல முடியாது என்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.
அவரது இந்த பேட்டி நமக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் தி.மு.க. தலைமைக்கே வியப்பை அளித்திருக்கக் கூடும். அப்படி இல்லையென்றால் எல்லோரும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். இந்திய உதவிகளை கண்காணிக்க சிறப்பு தூதரை அனுப்பவேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்துகிறார். ஆனால் இது போலீஸ்காரன் வேலை என டி.ஆர்.பாலு சொல்கிறார்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை நடுநிலையாளர்கள் பலரும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழர் பகுதிகளில் புதிய புதிய இராணுவ பாசறைகள் அமைக்கப்பட்டு வருவதையோ, பழைய உயர் பாதுகாப்பு வலயங்கள் நீடித்து வருவதையோ சிங்கள அரசே மறுக்கவில்லை. ஆனால் டி.ஆர்.பாலு இதற்கு ஆதாரம் வேண்டுமென்று கேட்கிறார். இவரும் இவரது குழுவினரும் ராஜபக்சேவின் விருந்தாளிகளாக இலங்கை சென்றபோது போய்ப் பார்த்திருந்தால் ஆதாரங்கள் கிடைத்திருக்குமே?
இப்போதும் கூட சுயேச்சையான ஒரு ஊடகவியலாளர் குழுவை எவ்வித தடையும், தணிக்கையுமின்றி தமிழர் பகுதிகளை சுற்றிப் பார்க்க அனுமதி வாங்கித் தரட்டுமே… அப்படி அனுமதி வாங்கித் தந்தால், நானே நேரில் சென்று உண்மைகளைக் கண்டறிந்து மக்களுக்கு சொல்லத் தயாராக இருக்கிறேன்.
டி.ஆர்.பாலுவின் கூற்றுப்படி இந்தியாவால் போலீஸ்காரனாக செயல்பட முடியாது என்றால், கொலைகாரனாக மட்டும்தான் செயல்பட முடியுமா?” என்று காட்டமாகக் கேட்டார்.
‘பசில்தான் கிங்’
அதே பேட்டியில், டி.ஆர்.பாலு தெரிவித்திருக்கும் இன்னொரு கருத்து ஈழ உணர்வாளர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
‘இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினீர்களா?’ என்ற கேள்விக்கு
“ஆம். சந்தித்துப் பேசினோம். அவர்தானே இன்று ‘கிங்’ ஆக உள்ளார். அவருடன் பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடினோம். அது நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது,” என கூறியிருக்கிறார்.
“ஈவிரக்கமின்றி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் சகோதரர் பசிலை ‘கிங்’ என அழைக்கிறார் என்றால், டி.ஆர்.பாலுவின் உண்மையான மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக அறியமுடிகிறது. ஆக ராஜபக்சே குடும்பத்தினருடனும் அவர் நல்லுறவு கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த பதில் வெளிப்படுத்துகிறது,” என்கிறார்கள் தமிழுணர்வாளர்கள்!
நீங்கள் வைத்திருப்பது சிவப்பு பணமா? நீலப் பணமா? – கருணாநிதிக்கு விஜயகாந்த் கேள்வி
நீங்கள் வைத்திருப்பது சிவப்பு பணமா? நீலப் பணமா? – கருணாநிதிக்கு விஜயகாந்த் கேள்வி
சென்னை: முதல்வர் கருணாநிதியின் குடும்ப வாரிசுகள் சினிமா படம் எடுக்கிறார்களே, அந்தப் பணம் கறுப்பு பணமா? அல்லது சிவப்பு பணமா? அல்லது நீலப் பணமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க லட்சக் கணக்கில் கருப்பு பணம் வாங்கும் விஜயகாந்த், ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை என, முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு விஜயகாந்த் வெளியிட்டுள்ள பதில் அறிக்கை:
“என்னைப் பற்றி நேரடியாக குற்றம்சாட்ட முடியாமல், அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரே கூறப்படுகிறது. நம்பப்படுகிறது என்று கூறி தப்பிக்கொள்வது ஏன்? அவர் அப்படி கூறுவது முதல் தடவையல்ல. இதற்கு முன்பு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மீதும் கூறினார். வேறு எந்த குறைகளையும் காணமுடியாததால், இந்த உளுத்துப்போன குற்றச்சாட்டை அவர் கூறி வருகிறார்.
முதல்வர் கருணாநிதியின் குடும்ப வாரிசுகள் சினிமா படம் எடுக்கிறார்களே, அந்தப் பணம் கறுப்பு பணமா? அல்லது சிவப்பு பணமா? அல்லது நீலப் பணமா?
இரவு பகல் பாராமல் வியர்வை சிந்தி சம்பாதித்தப் பணத்தில், அரசுக்கு வரி கட்டியதுபோக மீதி உள்ள பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிற என்னைப் பற்றி குறைகூறி வரும் முதல்வர் கருணாநிதி, அவரது குடும்ப பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் இன்று உலக பணக்காரர்கள் வரிசைக்கு போட்டியிடுகிறார்களே அவர்களுக்கு எந்த தொழில் மூலம் பணம் வந்தது என விளக்குவாரா?
ஏழை எளிய மக்களுக்கு 60 ஆண்டுகளில் என்ன உதவி செய்தார் என்று, நான் கேட்ட பிறகுதான் ஒரு நீண்ட நன்கொடை பட்டியலையே அவர் வெளியிட்டுள்ளார்.
மாமண்டூரில் நான் கட்டிய திருமண மண்டபத்தை திறந்து வைத்த அன்றே பொதுமக்களிடம் ஒப்படைத்தேன். அதற்கு பெயர்தான் உண்மையான தானம். சொந்த வாழ்க்கையில் நான் ஆற்றியுள்ள உதவிகளை பட்டியலிட்டால், எந்த பத்திரிகையிலும் வெளியிட இடம் இருக்காது.
தான் செய்த உதவிகளை பெற்றவர்கள்தான் பேச வேண்டுமே தவிர, தான் பேசக் கூடாது. ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு அடையாளம் உண்டு. காமராஜர் என்றால் கல்வி கண்ணை திறந்தவர் என்றும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்றால் சத்துணவு தந்த வள்ளல் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அன்றிலிருந்து இனறு வரை கருணாநிதி என்றால், ஊழல்வாதி என்ற அடையாளம் தானே மக்கள் மனதில் நிலையாக நிற்கிறது. இதனை நான் முதலில் சொல்லவில்லை. ஊர் சொல்கிறது. உலகம் சொல்கிறது. நாடே சொல்கிறது. ஏன் உச்சநீதிமன்றமே விஞ்ஞான ரீதியான ஊழல்வாதி என சொல்கிறது…”
-இவ்வாறு அதில் விஜயகாந்த் கூறியுள்ளார்.
கறுப்புப் பணம் வாங்கும் விஜய்காந்துக்கு ஊழல் பற்றிப்பேச அருகதையில்லை! – கருணாநிதி
கறுப்புப் பணம் வாங்கும் விஜய்காந்துக்கு ஊழல் பற்றிப்பேச அருகதையில்லை! – கருணாநிதி
சென்னை: சினிமாவில் சம்பளமாக கறுப்புப் பணம் வாங்கும் விஜய்காந்துக்கு ஊழல் பற்றிப் பேச அருகதையில்லை என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: தி.மு.க., அ.தி.மு.க., இரண்டுமே ஊழல் கட்சிகள்- அவர்களோடு கூட்டணி கிடையாது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சொல்லியிருக்கிறாரே?
பதில்: அவருடைய அந்த அறிவிப்பை எல்லா ஏடுகளும் வெளியிட்டிருக்கின்றன. நானும் படித்துப் பார்த்தேன். ஒரேயொரு ஒப்பீட்டு உதாரணத்தை மாத்திரம் இதுபற்றிச் சொன்னால் “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதைப் போல பொதுமக்களுக்கு உண்மை விளக்கம் கிடைக்குமென்று நம்புகிறேன்.
தி.மு. கழகத் தலைவனாக இருக்கின்ற நான் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதுவதில் வருகின்ற ஊதியம் முழுவதையும் வருமான வரி கட்டியது போக மிச்சத்தை பொது நலன்களுக்கான நிதியாக வழங்கிவிடுகிறேன். சில நேரங்களில் அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியிலும் அந்தத் தொகையைச் சேர்த்து வழங்கச் செய்திருக்கிறேன்.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமேயானால், 2004-2005-ம் ஆண்டில் “மண்ணின் மைந்தன்” திரைப்படத்திற்கு நான் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 11 லட்சம் ரூபாய் – “கண்ணம்மா” படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய் ஆக 21 லட்சம் ரூபாயை சுனாமி நிவாரணத்திற்காக அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடமே, தம்பி மு.க. ஸ்டாலினை நேரில் சென்று வழங்கும்படி செய்தேன்.
அது போலவே 9-7-2008 அன்று “உளியின் ஓசை” படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் ரூபாய் 25 லட்சத்தில் வருமான வரி போக மீதி 18 லட்சம் ரூபாயை திரைத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும் மூத்தக் கலைஞர்களுக்கு நானே நேரடியாக வழங்கினேன்.
கருணாநிதி அறக்கட்டளை…
அஃதன்னியில் 2005 நவம்பர் முதல் 2010 ஆகஸ்ட் மாதம் வரை மாதந்தோறும் ஏழையெளியோருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் என்றும் ஐயாயிரம் ரூபாய் என்றும் ஒவ்வொரு மாதமும் என் பெயரால் உள்ள “கலைஞர் கருணாநிதி அறக் கட்டளை” நிதியிலிருந்து வழங்கி வருவதன் மூலமாக இதுவரை 2049 பேருக்கு ஒரு கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோலவே ஆண்டு தோறும் நல்ல புத்தகங்களை, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் தாங்கிய புத்தகங்களை எதிர்கால இளைஞர்களுக்கு ஆக்க பூர்வமாக வழிகாட்டுகின்ற அறிவார்ந்த புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் ஐந்து பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழியாக வழங்கிட, ஒரு கோடி ரூபாயை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு வழங்கினேன்.
இந்த நிதியைக் கொண்டு, “கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை” என்ற பெயரில் அறக்கட்டளையை நிறுவி, இதுவரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் பொற்கிழிகள் வழங்கச் செய்திருக்கிறேன்.
மாணவர்களுக்கு உதவி
மேலும் ஒரு கோடி ரூபாயை தமிழ்ச் செம்மொழி நிறுவனத்திற்கு வழங்கி, அதன் மூலம் அறக் கட்டளை ஒன்றை உருவாக்கி கல்வெட்டியல், தொன்மையியல், நாணயவியல் ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சி செய்யும் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளேன்.
அண்மையில் கோவை மாநகரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் “பின்லாந்து” நாட்டைச் சேர்ந்த உலகத் தமிழ் அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களுக்கு முதன் முறையாக பத்து லட்சம் ரூபாய்க்கான இந்த விருது வழங்கப்பட்டது.
இஃதன்னியில் “பெண் சிங்கம்” திரைப்படத்திற்காக எனக்குக் கிடைத்த 50 லட்சம் ரூபாயை தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியில் சேர்த்திருக்கிறேன். அந்தத் தொகையினை அருந்ததியர் நல வாரியத்தின் மூலமாக அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்க வழங்கப்படும் என்று அறிவித்து, அப்படி வழங்க முற்பட்ட போது, அந்த 50 லட்சம் ரூபாய் போதாமல், மேலும் பதினோறு லட்ச ரூபாய் தேவைப்படும் என்று தெரிவித்த போது, அந்தத் தொகையையும் வங்கியில் இருந்த என்னுடைய நிதியிலிருந்து முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளித்து, மாணவர்களுக்கு அதை வழங்கச் செய்தேன்.
இளைஞனுக்கு வசனமெழுத ரூ 50 லட்சம்!
அது போலவே “இளைஞன்” திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியமைக்காக எனக்கு அளிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாயில், வருமான வரித் தொகை போக எஞ்சிய 45 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலே சேர்த்து, மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காக அந்தத் தொகையை வழங்கச் செய்தேன்.
என்னுடைய பிறந்த நாளன்று மாலைக்குப் பதிலாகவும், பொன்னாடைக்குப் பதிலாகவும் கழகத் தோழர்கள் அளித்த நிதியையும், பொற்காசுகளையும் கூட அப்படியே முதல்வர் பொது நிவாரண நிதியிலே சேர்த்தேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 14-4-2010 அன்று மறைமலைநகரில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் எனக்கு அளித்த “அம்பேத்கர் சுடர்” விருதுடன் தரப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியினையும் முதல்வர் பொது நிவாரண நிதியில் சேர்த்துள்ளேன்.
இதற்கெல்லாம் மேலாக சென்னை கோபாலபுரத்தில் நான் தற்போது வாழ்ந்து வரும் என்னுடைய வீட்டைக் கூட ஏழையெளியோர்க்குப் பயன்படும் வகையில் ஒரு மருத்துவமனையாக மாற்றிட நன்கொடையாக அளிப்பேன் என்றும் அறிவித்து, அதற்கான பத்திரப் பதிவுகளும் செய்யப்பட்டு விட்டன.
கறுப்புப் பணம்….
அப்படிப்பட்ட என்னையும் ஊழல் கட்சி என்கிறார்- மற்றொரு கட்சியையும் ஊழல் கட்சி என்கிறார். இந்த இரண்டு கட்சிகளோடும் கூட்டணி சேர மாட்டேன் என்று கூறுகிற அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் ஒரு படத்திலே கதாநாயகனாக நடிக்க லட்சக்கணக்கில் வாங்குகிற பணத்தில் பெரும் பகுதி வருமான வரி கட்டாமல் கறுப்புப் பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறதே,
அவர் ஊழலைப் பற்றி இப்படிப் பேசியிருப்பது-உலகத்தினர் வாய் விட்டு சிரிப்பதற்குரிய கேலியாக அல்லவா இருக்கிறது! பிறர் முகத்தில் குறை காண்பதற்கு முன் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டாமா?
-இவ்வாறு அதில் கூறியுள்ளார் கருணாநிதி.
சௌந்தர்யா திருமணம்: கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ரஜினி நேரில் அழைப்பு!
சௌந்தர்யா திருமணம்: கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ரஜினி நேரில் அழைப்பு!
சென்னை: தனது இளைய மகள் சௌந்தர்யா ரஜினி-அஸ்வின் திருமணத்துக்கு இன்று முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் நடிகர் ரஜினிகாந்த்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் தனது ஆக்கர் ஸ்டூடியோ மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். இவரும் தொழிலதிபர் மகன் அஸ்வினும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காதலை ஏற்றுக் கொண்டார் ரஜினி. மணமகன் வீட்டாருக்கும் இதில் முழு சம்மதம். சில மாதங்களுக்கு முன் சௌந்தர்யா ரஜினி-அஸ்வின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில், முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு வாழ்த்தினார்.
இப்போது வரும் செப்டம்பர் மாதம் 3ம் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.
இந்தத் திருமணத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர், பாஜக தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் வைத்துள்ளார் ரஜினி.
இந்த நிலையில், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் ரஜினி. சௌந்தர்யாவின் திருமண அழைப்பிதழை ரஜினிகாந்த் முதல்வரிடம் கொடுத்தார்.
அரசியல் மற்றும் இதர திரையுலகப் பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ்களை தானே முன்னின்று கொடுத்துவருகிறார் ரஜினி.
நடிகர் அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயா, மகன் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். ரஜினிக்கு நெருக்கமான ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவும் திருமணத்துக்கு வருகிறார்.
ஜெயலலிதாவுக்கும் அழைப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் இன்று நேரில் சந்தித்த ரஜினி, சௌந்தர்யாவின் திருமண அழைப்பிதழை வழங்கினார். அவருடன் மனைவி அவரது மனைவி லதாவும் சென்றிருந்தார்.
குமுதம் பிரச்சினை சுமூகமாகத் தீர்ந்ததாக அறிவிப்பு!
முடிந்தது பிரிவினை… குமுதம் பிரச்சினை சுமூகமாகத் தீர்ந்ததாக அறிவிப்பு!
சென்னை: குமுதம் குழுமத்தில் ஏற்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் சுமூகமாக தீர்ந்துவிட்டதாகவும், இதற்கு வழிகோலிய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குமுதம் குழுமத்தை ஆரம்பித்த எஸ் ஏ பி அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு, அந்தக் குழுமத்தின் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் நிர்வாக ஆசிரியராகவும், உரிமையாளராகவும் இருந்தார் அவரது மகன் டாக்டர் எஸ் ஏ பி ஜவஹர் பழனியப்பன். அமெரிக்காவில் மருத்துவராகவும் பணியாற்றுகிறார் இவர்.
குமுதத்தில் பதிப்பாளராக இருந்த பி வி பார்த்தசாரதியின் மகனான என் வரதராஜனுக்கு நிர்வாக இயக்குநர் பதவி அளித்து, நிறுவனத்தை அவரது பொறுப்பில் விட்டிருந்தார் ஜவஹர். அவருக்கு சம்பளமாக ரூ 6.25 லட்சம் அளித்து வந்தார்.
ஆனால் குமுதம் நிர்வாகத்திலும், ஆசிரியர் குழு விவகாரங்களிலும் ஜவஹருக்கும் வரதராஜனுக்கும் சுமூகமான உறவு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குமுதம் குழுமப் பத்திரியில் பணியாற்றும் லோகநாயகி என்பவர் வரதராஜனுக்கு சாதகமாக செயல்பட்டார். குமுதம் தலைமை நிருபர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். உடனே பதிலுக்கு ஒரு புகாரைப் பதிவு செய்த தலைமை நிருபர், குமுதத்தில் வரதராஜன் செய்து வந்த மோசடிகள், அவரது தூண்டுதலால் லோகநாயகி கொடுத்த புகார் போன்றவற்றை அம்பலப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து குமுதம் உரிமையாளரான டாக்டர் ஜவஹர் பழனியப்பனும் கமிஷனர் அலுவலகத்தில் வரதராஜன் மீது புகார் கொடுத்தார். அதில் குமுதம் அலுவலகத்தில் வரதராஜன் பெரும் நிதி மோசடி செய்து விட்டதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட ரூ 6.25 லட்சம் சம்பளத்தைத் திருத்தி ரூ 10 லட்சமாக மோசடி செய்து பெற்று வந்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து வரதராஜன் கைது செய்யப்பட்டார். ஆனால் முதல்வர் கருணாநிதியின் தலையீட்டின்பேரில், அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, குமுதம் பிரச்சினை சுமூகமாகத் தீரவேண்டும் என்பதற்காகவே வரதராஜனை பிணையில் விடுவிக்கச் சொன்னதாகக் கூறினார்.
இதற்கிடையே குமுதம் விவகாரத்தில் ஜவஹருக்கும் வரதராஜனுக்கும் சமரசம் ஏற்படுத்தும் முயற்சி அரசின் ஆதரவுடன் தொடங்கியது. கடந்த நான்கு மாதங்களாக இந்த முயற்சி நடந்துவந்தது.
இருவருக்கும் பொது நண்பரான இந்து நாளிதழ் முதன்மை ஆசிரியர் என் ராமின் இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று இறுதிச் சுற்று சமரசப் பேச்சு நடந்தது. இதில் ஜவஹர் மற்றும் வரதராஜன் ஆகிய இருவருமே கலந்து கொண்டனர்.
இதன் முடிவில் இரு தரப்புக்கும் சுமூகமான ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதில் இருவரும் கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டனர்.
இதன்படி குமுதம் குழுமத்தின் இரு இதழ்கள் வரதராஜன் மற்றும் டாக்டர் பி. ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கும், மீதம் உள்ள ஏழு இதழ்களின் உரிமை டாக்டர் பழனியப்பன் மற்றும் அவரது தாயார் கோதை அண்ணாமலை ஆகியோருக்கும் என முடிவு செய்யப்பட்டது.
குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து என் ராம் ஒரு செய்திக் குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.
அதில், குமுதம் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும், இந்த விவகாரத்தை தமிழக சட்டமன்றத்தில் அறிவித்தது மட்டுமின்றி, அதற்கான தீர்வுக்கு வழியமைத்துத் தந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சினிமாவில் ரஜினியின் உயரத்தை எவராலும் எட்ட முடியாது! – கலாநிதி மாறன்
இந்திய சினிமாவில் ரஜினியின் உயரத்தை எவராலும் எட்ட முடியாது! – கலாநிதி மாறன்
இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் உயரத்தை எவராலும் எட்ட முடியாது என்றார் சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கலாநிதி மாறன் பேசியதாவது:
“ஒரு தமிழ் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்துவது இதுதான் முதல் முறை. அதுவே எனக்கு பெருமையாக இருக்கிறது. வைரமுத்து இனிமையான பாடல்களை எழுதியிருக்கிறார். விஞ்ஞானம் தொடர்பான பாடலையும் எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அழகாக எழுதியிருக்கிறார். அவர் மகன் கார்க்கியும் பாடல் எழுதியிருக்கிறார்.
இசை பிரமாதமாக வந்திருக்கிறது. தமிழின் பக்கம் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. முதல் முறையாக அவரது மகள் கதீஜாவும் இதில் பாடியிருக்கிறார்.
ஷங்கர் ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக செய்பவர். சில டைரக்டர்கள் மாஸ் படம் இயக்குவார்கள். சில டைரக்டர்கள் கிளாஸ் படம் இயக்குவார்கள். ஷங்கர் இந்த இரண்டும் செய்பவர். கோலாலம்பூரில் டுவின் டவர் எப்படி தனித்துவத்துடன் நிற்கிறதோ அப்படி இந்திய சினிமாவில் ரஜினி நிற்கிறார். அந்த உயரத்தை எவராலும் எட்ட முடியாது. அவர் ஒரு சகாப்தம் (லெஜண்ட்).
‘ஸ்டாருக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள வித்தியாசம்!’
இந்த படத்துக்காக இரண்டு வருடம் உழைத்திருக்கிறார். படம் ஆரம்பிக்கும்போது ரஜினி என்னிடம் பேசினார். “எந்திரன் கண்டிப்பாக ஹிட் ஆகும். நாம சேர்ந்து பண்ணுவோம். என் சம்பளத்தைக்கூட இப்போது தரவேண்டாம் படம் முடிந்த பிறகு வாங்கிக் கொள்கிறேன்” என்றார். அவர் சொன்ன வார்த்தையை இன்றுவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். சம்பளமே கேட்கவில்லை. இதுதான் ஸ்டாருக்கும், சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள வித்தியாசம்.
சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான். அந்த இடத்துக்கு யாரும் வரப்போவதில்லை. பிறக்கப் போவதும் இல்லை. ‘எந்திரன்’ டீம் கடுமையாக உழைத்திருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவுக்கு தமிழனத் தலைவரும் தமிழக முதல்வருமான கலைஞர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி…”, என்றார் கலாநிதி மாறன்.
ரஜினி சார் உழழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட்! – ஷங்கர்
ரஜினி எந்திரனுக்காக உழைத்தது கொஞ்ச நஞ்சமல்ல. அவரது உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் என்றார் இயக்குநர் ஷங்கர்.
மலேசியாவில் நடந்த எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவில் மேலும் அவர் பேசுகையில், “நான் இயக்கிய ‘ஜீன்ஸ்’ படம் இந்த நாட்டில் 100 நாள் ஓடியது. நான், ஐஸ்வர்யா ராய், ரஹ்மான் இணைந்திருந்த படம் அது.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்திருக்கிறார்கள். அதனால் எந்திரன் இங்கே 200 நாள் ஓடும் என்று எதிர்பார்க்கிறேன்.
எந்திரன் என் கனவுப் படம். இரண்டு பேர் இல்லையென்றால் என் கனவு நனவாகி இருக்காது. ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி, மற்றொருவர் கலாநிதி மாறன். அவர் இல்லையென்றால் இந்தப் படம் முடிந்திருக்காது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து எனது கனவுப் படத்தை கொண்டு வந்த கலாநிதி மாறனுக்கு காலமெல்லாம் கடமைப்பட்டிருப்பேன்.
இந்த படத்தில் ரஹ்மானின் இசையை கேட்கும்போது அவருக்கு ஏன் ஆஸ்கார் விருது கொடுத்தார்கள் என்பது புரியும். அவரது உழைப்புதான் அந்த உயரங்களை கொடுக்கிறது.
இந்தப் படத்தில் முதல்முறையாக கிளிமஞ்சாரோ… என்ற பழங்குடியின பாட்டு இடம்பெற்றிருக்கிறது. எந்திரத்துக்கு காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு டியூன் போட்டுக் கொடுங்கள் என்று ரகுமானிடம் கேட்டேன். மூன்று டியூன் போட்டுக் கொடுத்தார். எதிலும் எனக்கு திருப்தியில்லை. அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு புதிதாக ஒரு டியூன் போட்டுக் கொடுத்தார். பிரமாதமாக வந்திருக்கிறது.
வைரமுத்துவின் வரிகளும் படத்தில் பிரமாதமாக அமைந்திருக்கிறது.
எனது முந்தைய படங்களைவிட எந்திரனில் ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கும். அதற்கு காரணம் ரத்னவேலுவின் திறமை.
சிவாஜி படத்தில் ரஜினியை அழகாக காட்டினேன். எந்திரனில் அவரை இன்னும் அழகாக காட்டியிருக்கிறேன். ரத்ன வேலுவின் லைட்டிங்தான் காரணம்.
ஐஸ்வர்யா ராயை லேடி ரஜினி என்று குறிப்பிடலாம். அவரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்திருக்கிறது. ஹீரோவுக்கு நிகரான அவரது உழைப்பு அபாரமானது.
இந்த படத்தை எடுக்க பல முறை முயற்சி செய்தேன். ஆனால் பட்ஜெட் இவ்வளவு அதிகமா என்று யாரும் இதை தயாரிக்க முன்வரவில்லை. அதனால் இந்தியில் எடுக்கலாம் என்று முயற்சித்தேன். சில சூழ்நிலைகளால் அங்கும் முடியவில்லை. தமிழிலேயே எடுத்தால் என்ன என்று தீவிரமாக யோசித்தபோது ரஜினி கைகொடுத்தார்.
படத்தில் ரஜினியின் உழைப்பு அபாரமானது. மேக்-அப் போடுவதற்கு மட்டும் 6 மணிநேரம் பொறுமையாக காத்திருந்தார். சிரமம் பார்க்காமல் உழைத்தார். அவரது உழைப்புக்கு ஒரு சல்யூட்.
டெக்னீஷியன்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இந்த படத்திற்காக இரண்டு வருடமாக நாங்கள் கேட்டதையெல்லாம் செய்து கொடுத்து உதவிய சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் நன்றி”, என்றார்.
ஏழு கடல் தாண்டியும் எந்திரன் முழங்குமடா! – கருணாநிதி வாழ்த்து
எங்கெங்கு காணினும் வெற்றியடா! ஏழுகடல் தாண்டியும் எந்திரன் முழங்குமடா!” என எந்திரன் படத்துக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘எந்திரன்’ பாடல் வெளியீட்டு விழாவுக்கு முதல்வர் கருணாநிதி பிரத்யேகமாக வாழ்த்து தெரிவித்தார். நவீன தொழில்நுட்பமான எச்.டி கேமராவில் பதிவு செய்யப்பட்ட அவரது வாழ்த்து கோலாலம்பூர் விழாவில் திரையிடப்பட்டது. அதில் முதல்வர் கூறியதாவது:
தமிழ்நாட்டு மக்களுக்காக, பொதுவாக உலகத் தமிழர்களுக்காக, எந்திரம் போல் உழைத்துக் கொண்டிருக்கின்ற எனக்கு, ‘எந்திரன்’ திரைப்படம் பற்றி சிலவற்றை சொல்லக் கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சிக்கு உரியதாகும்.
‘எந்திரன்’ படம் இந்திய நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், உலக நாடுகளில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படமாகும்.
சன் பிக்சர்ஸ் தம்பி கலாநிதி மாறன் தயாரிக்க, சூப்பர் ஸ்டார் – என் இனிய நண்பர் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கும் பிரமாண்டமான படம்.
கல்லுக்குள் இருக்கும் ஈரத்தையும் பிழிந்தெடுக்கும் ஆற்றல் பெற்ற இயக்குனர் ஷங்கர், கலை உலகில் இருக்கின்ற அற்புத திறனாளிகள் பலருடைய திறமையை வெளிப்படுத்தி இயக்கியுள்ள திரைப்படம் ‘எந்திரன்’.
மனிதநேயம் கொண்டவரும் மனதில் அப்பழுக்கின்றி மாசற்ற மாணிக்கங்களில் ஒருவராக விளங்குபவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரும்பாடுபட்டு வெளிக்கொணரும் இந்தப் படம் பெரும்புகழ் பெறும் என்பதில் ஐயமில்லை.
பொன்குடத்திற்கு பொட்டு வைத்தால், அதன் பொலிவைப் புகலவும் வேண்டுமோ! ஆம், நமது ஆஸ்கார் நாயகன் தம்பி ஏ.ஆர்.ரகுமான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நோக்கப் பாடலுக்கு இசையமைத்து இமயப் புகழ் பெற்றதை அடுத்து, ‘எந்திரன்’ படத்துக்கும் இசையமைத்து இருக்கிறார்.
ஒப்பனை செய்துகொள்ளவே ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரம் வரை ரஜினிகாந்த் செலவிட்டு இருக்கிறார் என்றால், அவர் எடுத்துள்ள சிரமத்திற்கு, கொடுத்துள்ள உழைப்புக்கு ஈடு இணையற்ற பரிசாக இந்த ‘எந்திரன்’ வெளிவர இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளில் பத்துக்கு மேற்பட்ட வெற்றித் திரைப்படங்களை வெளியிட்ட சன் பிக்சர்ஸ், இந்த ‘எந்திரன்’ படத்தின் மூலம், ‘எங்கெங்கு காணினும் வெற்றியடா! ‘எந்திரன்’ படம் ஏழுகடல் தாண்டியும் முழங்குமடா!’ என திரையுலகம் திரும்பத் திரும்ப பாடத்தான் போகிறது…”
-இவ்வாறு முதல்வர் வாழ்த்தியுள்ளார்.
உலகை தமிழ் வலம் வர எந்திரன் விழா அடித்தளம்!- ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ ஆர் ரஹ்மான் பேசுகையில், “தமிழ் மிகச்சிறந்த மொழி. உலகம் முழுவதும் தமிழைக் கொண்டு செல்ல என்னால் என்ன முடியும் என்று அடிக்கடி யோசித்திருக்கிறேன். மலேசிய தலைநகரில் நடக்கும் இந்த ‘எந்திரன்’ பாடல்கள் வெளியீட்டு விழா அதற்கு அடித்தளமாக அமையும் என்று நினைக்கிறேன்.
என் மகள் கதீஜாவிடம் இந்த படத்துக்கு பாடுமாறு கேட்டிருந்தேன். வழக்கமாக நான் இசையமைப்பது நள்ளிரவு 12 மணி, அதிகாலை 1 மணி என இருக்கும். அந்த நேரத்துக்கு வந்து கதீஜாவால் பாட முடியுமா என்று நினைத்தேன். ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வந்தவள், அரை மணி நேரத்தில் நான்கு மொழிகளுக்கும் சேர்த்து பாடி அசத்தி விட்டாள். ‘புதிய மனிதா’ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், நான், கதீஜா இணைந்து பாடியிருக்கிறோம். படத்தின் எல்லா பாடல்களையும் ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நம்புகிறேன்…” என்றார்.
எந்திரன் உலகம் முழுக்க சாதிக்கும்! – வைரமுத்து
கவிஞர் வைரமுத்து பேசியதாவது: ‘எந்திரன்’ உள்ளூரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. சிவாஜியில் ‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ என ரஜினி வசனம் பேசினார். இதில் சிங்கிளாக வரவில்லை; சிங்கப் படையையே திரட்டி வந்திருக்கிறார். அதில் சிங்கிளாக வந்தார், இதில் ஜங்கிளோடு வந்திருக்கிறார்.
கலாநிதி மாறனின் ரசிகன் நான். இந்த உண்மை அவருக்கு தெரியாது. கலைஞர்கள், படைப்பாளிகள் மட்டுமல்ல, சாதித்தவர்களும் சமுதாயத்தால் மதிக்கப்பட வேண்டும். தன்னுடைய உழைப்பால், தன்னுடைய பேராற்றலால் இன்று உலகம் முழுவதும் தெரியும் அளவிற்கு கலாநிதி மாறன் வளர்ந்திருக்கிறார் என்றால் அது சாதாரணமான சாதனையல்ல.
இந்தப் படத்தை முதலில் வேறொரு நிறுவனம் தயாரித்தது. அதில் சிக்கல். அப்போது கை கொடுத்தவர் கலாநிதி மாறன். ஷங்கரிடம் சொன்னேன், ‘இனி கவலைப்பட தேவையில்லை. ஐங்கரன் விட்டுவிட்டான். இப்போது கலாநிதி மாறனால் ஆயிரம் கரங்கள் வந்திருக்கிறது’ என்றேன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொழிலை நேசிக்கிறார். அதனால் 35 ஆண்டுகள் அந்த சிம்மாசனத்தில் அவர் மட்டுமே ஜாம்பவானாக அமர்ந்திருக்கிறார்.
எந்திரனுக்கு எப்படி பாட்டு எழுதுவது என்று மூன்று மாதங்கள் தகவல்கள் சேகரித்தேன். இயக்குனர் ஷங்கரும் தகவல்களை தொகுத்து தந்தார். அதை வைத்து நான் பாடல்களை உருவாக்கினேன். ஒரு தமிழன் ஹாலிவுட்டில் படம் இயக்க வேண்டுமென்றால் அது ஷங்கரால் மட்டும்தான் முடியும். என் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசை கிடைத்த பிறகுதான் அதற்கு உலக அங்கீகாரம் கிடைத்தது. இந்த படம் உலக உயரத்தை தொட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..”, என்றார்.
உண்மையான சூப்பர் ஸ்டார் ரஜினி சார்! – ஐஸ்வர்யா ராய்
எந்திரன் நாயகி ஐஸ்வர்யா ராய் பேசுகையில், “எந்திரன்’ படம் இந்திய சினிமாவில் ரொம்ப ஸ்பெஷல். எனக்கும் இந்த படம் ஸ்பெஷல்தான். இந்த படத்துக்காக இரண்டு வருஷம் கஷ்டப்பட்டு முழுமையான ஈடுபாட்டுடன், நம்பிக்கையுடன் நடித்திருக்கிறேன்.
படத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரித்திருக்கிறது சன் பிக்சர்ஸ். இந்த படம் இந்திய சினிமாவின் புதிய அடையாளமாக உலகம் முழுவதும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்காக கலாநிதி மாறனுக்கு நன்றி சொல்ல வேண்டும். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இயக்குனர் ஷங்கரால் முடியாதது எதுவும் இல்லை என்று இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். படத்தின் மகத்தான வெற்றி குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினி சார் ஒரு அற்புதம். நடிப்பின் சிகரம் அவர். செட்டில் ஒன்றுமே தெரியாதவர் போல, சாதாரணமாக இருப்பார். ஆனால் கேமரா சுழல ஆரம்பித்ததும் அவர் நடிப்பதையே அசந்துபோய் பல முறை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். அவருக்கு நிகரே கிடையாது. இந்திய சினிமாவின் உண்மையான சூப்பர் ஸ்டார் அவர்தான்…” என்றார்.
வடிவேலு, ஜெயம் ரவி, கருணாஸ், ஸ்ரேயா, சிம்பு உள்பட பலரும் நிகழ்ச்சியில் பேசினர்.
-என்வழி
சுமை கால் பணம்… சுமைக் கூலி முக்கால் பணம்!
சுமை கால் பணம்… சுமைக் கூலி முக்கால் பணம்!
கிராமங்களில் சொல்லப்படும் ஒரு வழக்குமொழி இது. முதல்வர் கருணாநிதியின் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முற்று முழுதாகப் பொருந்தும் மொழியும் கூட.
இந்த மாநாட்டுக்கு ஆன செலவு அதிகாரப்பூர்வமாக ரூ 311.5 கோடி. கோவைக்கு புதிய சாலைகளும் பூங்காக்களும் கிடைத்தது உண்மைதான் என்றாலும், இதில் கால்வாசி பலனாவது தமிழுக்குக் கிடைத்திருக்குமா என்பதுதான் கேள்வியே.
ஆடம்பரமாக மாநாட்டு அரங்கங்களை அமைத்து, குடியரசுத் தலைவரின் கையால் திறக்கப்பட்டு, நான்கு நாள் பொழுதுபோக்குகளுக்குப் பிறகு கடந்த ஞாயிறன்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியால் முடித்து வைக்கப்பட்டது. சற்று கூர்ந்து கவனித்தாலும், இந்த மாநாட்டில் பெரும் அபத்தங்கள் நிறைந்திருப்பதைக் காணலாம்.
செம்மொழி மாநாடு நடப்பதால், கோவையில் திமுக கொடி, பேனர், சின்னமே இல்லாமல் இருக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதற்கு வட்டியும் முதலுமாக முதல்வர், துணை முதல்வர், கனிமொழி துதி பாடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தது, கவிஞர்கள், எழுத்தாளர்கள் குழு.
அதிலும் இந்த பட்டிமன்றம், கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சிகள் அபத்தத்தின் உச்சம். சன் டிவியில் வரும் பண்டிகை கால பட்டிமன்றமே மேல்.
சத்தியசீலன் நடத்திய பட்டிமன்றமாகட்டும், சாலமன் பாப்பையா தலைமையில் நடந்ததாகட்டும்… கருத்துச் செறிவோ, பொருள் செறிவோ இன்றி, வரைமுறையில்லாமல் பேசிக் கொண்டே இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் 12 நிமிடம் பேச நேரம் ஒதுக்கினால், அதில் 10 நிமிடத்தை கருணாநிதி துதி பாடவே எடுத்துக் கொண்டார்கள். முதல்வருக்கு புகழ்ச்சி பிடிக்காது என்று கூறிக் கொண்ட புகழ்ந்தார்கள். அவரும் முன்வரிசையில் உட்கார்ந்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார்.
திண்டுக்கல் லியோனி, இது பட்டிமன்றம் என்பதை முற்றாக மறந்து மிமிக்ரி செய்தார். நக்கீரன் கோபால் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். அங்கேயும் நித்யானந்தன் – ரஞ்சிதா விவகாரத்தை குறிப்பிட மறக்கவில்லை அவர். எஸ்வி சேகர் நகைச்சுவை என்ற பெயரில் உளறிக் கொட்டினார் (“பஸ்ஸிலே சீட் இருந்தும் அந்தம்மா ஏன் உட்காரலை..? அவர் பெயர் அமராவதியாம்”)
வாலி தலைமையில் வெறும் துதியரங்கமாக மா(நா)றியது கவியரங்கம். கருணாநிதியை புகழ்வதில் வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தமிழன்பனுக்கு பெரும் போட்டியே நடந்தது. வழக்கம் போல இங்கும் வாலிதான் ஜெயித்தார்!
கருத்தரங்கம் என்ற பெயரில் கடைசி நாளில் அடித்த கூத்துக்களுக்காகவே திருச்சி செல்வேந்திரன் போன்றவர்களின் நாக்கில் தமிழ்த் தாயின் எழுத்தாணி கொண்டு சூடிழுக்க வேண்டும்!
ஏதோ மன்னர் வீட்டு கல்யாணத்தில் நடந்த கலை நிகழ்ச்சிகள் மாதிரிதான் இவை அனைத்தும் காட்சி தந்தன.
வெளியில் தெரிந்த கூத்துக்கள் இவை என்றால், ஆய்வரங்கம் என்ற பெயரில் உள்ளே நடந்த அபத்தங்களுக்கு அளவே இல்லை.
தமிழ் மொழியின் பண்டைய – சமகால- எதிர்கால போக்குகள் பற்றி செறிவான கட்டுரைகள் சமர்ப்பிப்பார்கள் என்று பார்த்தால், பெரும்பாலானோர் முதல்வர் கருணாநிதியின் படைப்புகளை ஆய்வு செய்து எழுதிக் குவித்திருந்தார்கள். ‘கலைஞரின் பேசும் கலை வளர்ப்போம்’, ‘தொல்காப்பிய பூங்கா’, ‘கலைஞர் உரைத் திறன்’, ‘கலைஞரின் சிலப்பதிகாரத்தில் நாடகக் கூறுகள்’, ‘கருணாநிதி கடிதங்களில் இலக்கிய ஆளுமை’, ‘கருணாநிதியின் சிலப்பதிகார நாடகம்’…. இப்படி ஏதோ திமுக இலக்கிய மாநாட்டுக் கட்டுரைகள் ரேஞ்சுக்கு அடித்து விட்டிருந்தார்கள்.
இதைவிடக் கொடுமை, கனிமொழியின் கவிதைகள் குறித்தும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டிருந்ததுதான். அவர் எழுதிய கவிதைப் புத்தகங்கள் மொத்தமே மூன்றுதான் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
‘இந்த அபத்தக் கட்டுரைகளையெல்லாம் படித்துப் பார்த்து செம்மொழி மாநாட்டுக்குத் தகுதியானதுதான் என்று ஒப்பளித்த ‘பிரகஸ்பதிகள்’ யாரென்று எந்தத் தகவலுமில்லை…’, என மாநாட்டுக்கு வந்திருந்த விமர்சகர்கள் சலிப்புடன் வெளியேறியதும் நடந்திருக்கிறது.
இதற்கிடையே, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு எப்படியெல்லாம் முன்னுரிமை கொடுத்து முதல்வரிடம் நல்ல பெயர் வாங்குவது என்று அதிகாரிகளுக்கு இடையே போட்டி வேறு.
இறுதி நாளில் தமிழுக்கு தனி பட்ஜெட் உரை வாசித்தார் முதல்வர். அதில் எம்எஸ் சுவாமிநாதனுக்கு ஒரு பொறுப்பை வழங்கியிருந்தார். (இலங்கையின் வடக்கு வசந்தத்துக்கு அவர் உறுதுணையாக இருப்பதற்காக தமிழக அரசு தரும் பரிசா இது என்று தெரியவில்லை!)
இந்த மாநாட்டுக்கு இலங்கை தமிழ் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி வரவேண்டும்,. அவர் வாயால் “உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்” என்று தன்னை அழைக்க வேண்டுமென முதல்வர் விரும்பினார். அது நடந்துவிட்டது. அந்த வகையில் கருணாநிதியின் குற்றமுள்ள மனதுக்கு இது ஒரு குறுகிய கால ஆறுதலாக அமையக் கூடும். ஆனால்… காலமுள்ள அளவும் தமிழர் மனசைவிட்டு மறையாது அவர் நட்டாற்றில் கைவிட்ட துரோகம்.
ஈழத் தமிழர் நல்வாழ்வு குறித்து ஒப்புக்கு ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார் முதல்வர். அது:
“இலங்கையில் போர் முடிவடைந்த பிறகும் தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் மறு குடியமர்வுக்கும், அந்த நாட்டுத் தமிழர்கள் தமது மொழி, இன உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும் நீண்ட காலமாகக் கோரி வரும் அரசியல் தீர்வு இதுவரை காணப்படவில்லை.
மேலும், அவர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படும் உறுதிமொழிகள் முறையாக நிறைவேற்றப்படாதது உலகத் தமிழர்களுக்கு வேதனையை அளிக்கிறது. எனவே இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்..”
-நல்லா வலியுறுத்தினாங்க போங்க. கொலைகாரனின் கூட்டாளியிடம் வைக்கப்படும் கருணை மனுவுக்கு ஒப்பானது இது!
அடுத்து தமிழ் வளர்ச்சிக்கு பெரும் நிதி ஒதுக்குவதாகவும் அறிவித்தார் முதல்வர். அதாவது ரூ 100 கோடி. செம்மொழி மாநாட்டுக்கு செலவு ரூ 311.5 கோடியாம். ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு ரூ. 100 கோடி மட்டும்தானாம்!
இப்போது புரிகிறதா ‘சுமை கால் பணம்; சுமைக்கூலி முக்கால் பணம்’ என்றால் என்னவென்று!
-என்வழி
தமிழில் படித்தோருக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை! – முதல்வர்
தமிழில் படித்தோருக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை… தமிழ் வளர்ச்சிக்கு ரூ 100 கோடி… மத்தியில் தமிழ் ஆட்சி மொழி! – முதல்வர்
கோவை: தமிழகத்தில் தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
மேலும் தமிழை ஆட்சி மொழியாக்குவது, தமிழ் வளர்ச்சிக்காக ரூ 100 கோடி ஒதுக்குவது என மேலும் பல திட்டங்களையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
கோவை மாநகரில் கடந்த 23ம் தேதி கோலாகலமாக தொடங்கிய உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வெகு விமரிசையாக நடந்தது. தினசரி பல்வேறு ஆய்வரங்குகள், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், கவியரங்குகள் என களைகட்டி வந்த மாநாடு ஞாயிற்றக்கிழமையுடன் முடிவடைந்தது.
இதையொட்டி தொல்காப்பியர் அரங்கில் மாலை 4 மணிக்கு நிறைவு விழா தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.
விழாவில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பு அஞ்சல் தலையையும் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் மற்றும் தமிழ் வளர்த்த பேராயர் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் அஞ்சல் தலைகளையும் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆ.ராசா வெளியிட, அவற்றை முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார்.
முதல்வர் கருணாநிதி சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியதற்காக “கணியன் பூங்குன்றனார்” பரிசு வழங்கினார்.
2007-08ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சிறந்த மென்பொருட்களுக்கான கணியன் பூங்குன்றனார் விருதினை முதல்வர் கருணாநிதி வழங்க அதை விஜயன் பெற்றுக் கொண்டார். அதன்பிறகு கோவையில் அமையவுள்ள செம்மொழி பூங்காவுக்கான வரைபடத்தைத் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார் முதல்வர் கருணாநிதி. தொடர்ந்து அவர் நிறைவு விழா சிறப்புரையாற்றினார்.
விழாவில் முதல்வர் கருணாநிதி 15 அறிவிப்புகள், புதிய திட்டங்களை வெளியிட்டார்.
அவை:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் தமிழகத்தை சூழலியல் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 நிலங்களாகப் பிரித்திருந்தனர். ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நிலப் பகுதிகள், தாவரங்கள், விலங்குகளைக் கொண்டவை.
இந்த அமைப்பு இயற்கை வளம், உணவு உத்தரவாதம், உடல் நலம் காக்கவும், சித்த மருத்துவத்துக்கும் பேருதவியாக இருந்து வந்துள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை 2010-ம் ஆண்டை உலக உயிரியல் பன்மை ஆண்டாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் நினைவாக, தமிழக அரசு சார்பில் ஐந்திணை நில வகைகளில் பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் அமைக்கப்படும். வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் இதன் அமைப்பாளராக இருப்பார்.
இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு
இலங்கையில் போர் முடிவடைந்த பிறகும் தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் மறு குடியமர்வுக்கும், அந்த நாட்டுத் தமிழர்கள் தமது மொழி, இன உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும் நீண்ட காலமாகக் கோரி வரும் அரசியல் தீர்வு இதுவரை காணப்படவில்லை.
மேலும், அவர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படும் உறுதிமொழிகள் முறையாக நிறைவேற்றப்படாதது உலகத் தமிழர்களுக்கு வேதனையை அளிக்கிறது. எனவே இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.
தமிழ் வளர்ச்சிக்கு ரூ. 100 கோடி
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாக, தமிழ் வளர்ச்சிக்கென்று தனியாக தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.
மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. மத்திய அரசு அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க கால தாமதம் ஏற்படும் என்பதால் செம்மொழியான தமிழை முதல் கட்டமாக ஆட்சி மொழியாக்க வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கக் கோரி 2006-ல் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் வழங்கப்படுவதைப் போன்று தமிழின் வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் தேவையான அளவு மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்.
நாட்டில் இதுவரை அனைத்து இந்திய மொழிகளிலும் சேர்த்து தோராயமாக ஒரு லட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் குறைந்தது 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். எனவே இதையும் இனி கண்டுபிடிக்கப்பட வேண்டிய கல்வெட்டுகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு உருவாக்கத் திட்டமிட்டுள்ள இந்திய தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
கடல் கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரிக் கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்யத் தேவையான திட்டம் வகுத்து மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு…
தமிழகத்தின் ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும் எனும் நீண்ட நாள் கனவு இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. அதை நிறைவேற்ற அரசு அலுவலர்களும் பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தமிழில் சிறந்த மென்பொருள் தயாரித்தவர்களுக்கு ஆண்டுதோறும் கணியன் பூங்குன்றனார் பெயரில் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருது வழங்கப்படும்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடத் திட்டங்களில் தமிழ்ச் செம்மொழி என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம் பெற ஏற்பாடு செய்யப்படும்.
தமிழின் சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய, ஆசிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும், பிற மொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்கவும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணினியியல், மருத்துவம் போன்ற அறிவியல் திறனை வளர்ப்பதற்குத் தேவையான நூல்களை பிற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யவும் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் முதல்வர் கருணாநிதி.
செம்மொழி மாநாடுகள் தொடரும்
உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள், இந்திய, தமிழக தமிழ் அறிஞர்களைக் கொண்டு மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த அமைப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும். மேலும் திராவிட மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றைத் தொகுத்து நிரந்தரக் கண்காட்சி அமைக்கவும், தமிழ் மொழியின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஆவணக் காப்பகம் அமைத்து பராமரிக்கும் பணியையும் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் மேற்கொள்ளும்.
பல்வேறு தனித்தனித் தீவுகளைப் போல் இப்போது சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைக்கும் பணியையும், மொழி ஆராய்ச்சி, மொழித் தொண்டு போன்றவற்றில் தன்னலம் கருதாது செயல்படும் தமிழ் அறிஞர்களை உரிய முறையில் ஆதரித்து அவர்களைத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பணியையும் இந்தச் சங்கம் மேற்கொள்ளும்.
மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர் அறிஞர்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து கையேடு தயாரித்து வழங்குவதுடன், உலக அளவில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் பணியையும் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் மேற்கொள்ளும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
கோவையில் ரூ.100 கோடியில் பாலம்
கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நினைவாக கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.100 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
“காந்திபுரம் பகுதியில் பஸ் நிலையங்கள் உள்ளதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோவை மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே குறுக்குச் சாலை, நூறடிச் சாலை, சத்தியமங்கலம் சாலை ஆகியவற்றை கடக்கக் கூடிய சந்திப்புகளில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நீளமுள்ள பெரிய மேம்பாலம் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படும்” என்றார் முதல்வர்.
‘கலைந்தாலும், பிரிந்தாலும் கட்சிகளை சேர்க்கும் சக்தி என்னிடம் உள்ளது!’
‘கூட்டணி கலைந்தாலும், பிரிந்தாலும் கட்சிகளை சேர்க்கும் சக்தி என்னிடத்தில் இருக்கிறது!’- முதல்வர்
சென்னை: கூட்டணி கலைந்தாலும் பிரிந்தாலும் சேர்க்கிற சக்தி என்னிடம் உள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.
மேலும், செம்மொழி மாநாட்டு நிறைவு நாளில், பட்ஜெட் படிப்பது போல் தமிழின் வளர்ச்சிக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.
கோவையில் நடைபெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், மாநாட்டுப் பந்தலில் ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற சிறப்புக் கருத்தரங்கம் நேற்று மாலை நடந்தது. இந்த கருத்தரங்கத்துக்கு, முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்துக்களை அள்ளி, அள்ளி தந்துள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், இதனை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் என் சார்பில் நன்றி.
நிரம்பப் பேசுவேன்…
கடந்த 4 நாள்களாக கோவை திருநகரில் மக்கள் வெள்ளமென திரண்டு எங்கே சென்றாலும் தமிழ் தமிழர் என்று முழக்கமிடும் நிலை ஏற்பட்டு, நாளையும், நாளை மறுநாளும், நடைபெறுகின்ற கருத்தரங்கங்கள், ஆய்வரங்களுக்குப் பிறகு 27-ந் தேதி நடைபெறும் மாநாட்டு நிறைவு விழாவில் நிரம்ப பேச இருக்கின்றேன், இப்படி சொல்வதால் இன்றைக்கு பேசமாட்டேன் என்று பொருளல்ல. பேசுவேன். அளவோடு பேசுவேன்.
ஆணையிட்டுப் பழக்கமில்லை…
இங்கு எனக்கு இடப்பட்ட ஆணைகளை எப்படி நிறைவேற்றுவது என்பதை பற்றி சிந்திக்க நேரம் எடுத்துக் கொண்டு, நிறைவு நாளில் பல்லாயிரக்கணக்கில் பொங்கி வழிகின்ற மக்கள் கூட்டத்தில், மாநாட்டின் வாயிலாக நாம் என்னென்ன காரியங்களில் ஈடுபட இருக்கிறோம், அதற்கு நீங்கள் எப்படி கைகொடுக்க வேண்டும், ஆதரவு வழங்கவேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுக்க இருக்கின்றேன். ஆணையிட்டு பழக்கம் இல்லாததால்.
அதனால், நீங்கள் சொன்ன கருத்துக்களை எடுத்துரைத்த ஆலோசனைகளை தமிழை வாழ வைக்க தமிழுக்கு வலிவும் பொலிவும் சேர்க்க என்னென்ன செயல்களில் ஈடுபடவேண்டுமோ இங்கு வீற்றிருக்கின்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் இட்ட ஆணைகளாக, இங்கே அமர்ந்திருக்கக் கூடிய பல்லாயிரக்கணக்கான தமிழர்களாகிய நீங்கள் தந்துள்ள ஆணையாக ஏற்று பணிபுரிவோம், தொண்டு புரிவோம் என்பதை என்னுடைய பேச்சின் முன்னுரையாக கூறுகிறேன்.
‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’
இன்றைய தினம் இந்த மாநாட்டு கருத்தரங்கின் தலைப்பு, ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்பதாகும். இப்பொழுது எங்கும் தமிழாக இருக்கிறதா? இயங்கும் தமிழாக இருக்கிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
இங்கு பேசிய தலைவர்கள் பேச்சில் இருந்து இதை நான் கூற வேண்டிய கட்டாயத்துக்கு வந்துள்ளேன். இங்கு பேசிய 20-க்கும் மேற்பட்ட கட்சிகளை சேர்ந்தோர் அமர்ந்துள்ள காட்சியினரைப் பார்த்து மறுபடியும் பழைய காலத்துக்கு கூட்டணி வந்தது போல் இருக்கிறதே என்று கூட சிலர் வியந்தார்கள்.
பிரிந்தாலும் கலைந்தாலும்…
நான் அவர்களுக்கு சொல்லுகிறேன். கூட்டணி கலைந்தாலும், பிரிந்தாலும் கட்சிகளை சேர்க்கும் சக்தி என்னிடத்தில் இருக்கிறது. அது மந்திர சக்தி அல்ல. மாயசக்தி அல்ல. அந்த சக்திதான் நான் கற்ற, நான் பால் குடித்த தமிழ் என்னும் சக்தி.
அதை நீங்களும் உணர்ந்திருக்கின்ற காரணத்தினால்தான் இங்கே கடந்த சில நாள்களாக, மேலும் சில நாள்களுக்கு இருக்கும் வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு, தமிழை வாழ வைக்க, தமிழுக்கு காப்பளிக்க என்னென்ன வழிமுறைகள் கூறப்படும் என்பதை கேட்டு, அவ்வாறு நடப்போம் என்று காத்திருக்கின்றீர்கள்.
அறப் போராட்டம்
எனக்கு இந்த மாநாட்டில் மிகுந்த மகிழ்ச்சி. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வது மாத்திரமல்ல, கலந்து கொள்வார்களா, மாட்டார்களா? என்ற எண்ணத்தோடு டெல்லியில் உள்ள சி.பி.ஐ., சி.பி.எம். கட்சித் தலைவர்கள் வருவார்களா என்று எண்ணியபோது, தட்டியவுடன் திறக்கும் கதவைப் போல், கேட்டவுடன் நம்முடைய இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராஜாவும், பழைய நண்பரும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவரான யெச்சூரியும், மிகுந்த சிரமங்களுக்கிடையே இங்கே கலந்து கொண்டிருக்கிறார்கள்.
2 பேர் மாத்திரமா? நாங்கள் வரவில்லையா என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் கேள்விக்குறியாக இருந்த இரு கட்சிகளின் தலைவர்கள் இங்கே வந்தார்கள் என்றால், நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை. இன்று மேடையில் உங்களுடைய தமிழ்த் தாய்க்கு, தமிழுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
மொழி உணர்வோடு, மொழி குடும்பத்தை சேர்ந்தவர்களாகிய நாம் அந்த குடும்பத்தை சேர்ந்த மொழிகளுக்கு தரவேண்டிய தகுதிகளை தமிழகத்திலும் சரி, டெல்லியிலும் சரி தரப்பட்டாக வேண்டும். அதற்கான அறப்போராட்டத்தை அமைதியாக நடத்தவேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாநாடு.
கோரிக்கை வைக்க வேண்டிய இடம் டெல்லி….
தமிழக காங்கிரஸ் தலைவர் பேசும்போது 10 கோரிக்கைகளை வைத்தார். எனக்கு சந்தேகம். அது நான்தானா என்று என்னை நான் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டேன். என்ன என்றால், தமிழக காங்கிரஸ் தலைவர் கோரிக்கை வைக்கின்ற இடத்தை விட்டுவிட்டு இங்கு வைக்கிறார்.
நான் வேடிக்கைக்காக சொல்லவில்லை. உண்மையிலேயே வட புலத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், நாட்டை ஆளும் சக்தி படைத்தவர்கள். அவர்களுக்கு எத்தனையோ அலுவல்கள், தொல்லைகள் உள்ள காலகட்டத்தில் நம் பிரச்சினைகளை உடனடியாக நிறைவேற்றுவது இயலாத காரியம்தான்.
இந்தியாவில் எத்தனையோ மக்கள், மாநிலங்கள், அவற்றின் நிர்வாகங்கள் அதில் உள்ள பிரச்சினைகளை கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு நாம் சொன்ன உடனே மறுநாள் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும் என்று தந்தி கொடுத்தால் மறுநாளே எடுத்துக் கொள் என்று தருவதற்கு தயாராக இல்லாததற்கு அவர்களுக்கு மனம் இல்லை என்று பொருள் அல்ல. அந்த அளவுக்கு அலுவல்கள், நெருக்கடி, அவற்றை தாண்டித்தான் நம்மை கவனிக்க வேண்டும், அப்படி தாண்டி இங்கு வரும் கஷ்டத்தை போக்குவதற்காகத்தான் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், உணர்த்த வேண்டியவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
இங்கே இந்த மாநாட்டில் என்னிடத்தில் உணர்த்தி, தமிழ்நாடு அரசு இதையெல்லாம் சாதிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என்றால் என்ன பொருள்? மத்திய அரசு செய்ய முடியாதவற்றை செய்வதற்கு தமிழக அரசு தயாராக இருக்கும். அவர்களுக்கு நாங்களும் துணையாக இருப்போம் என்று குறிப்பிடுகின்ற நிலையில்தான் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன். தமிழுக்காக என்றால் 10 கோரிக்கைகள் அல்ல. 10 கட்டளைகளை நிறைவேற்றக் கூடியவர்கள் நாம்.
உயிர் தமிழுக்கு உடல் தமிழுக்கு…
உயிர் தமிழுக்கு உடல் தமிழுக்கு என்று முழங்கிய தலைவர்கள் வழிவந்தவர்கள் நாம். செய்து காட்டியவர்கள் நாம். அந்த வீரவரலாறுக்கு உரியவர்கள் நாம். அதனால்தான் தமிழகத்தில் ஏற்படவேண்டிய மறுமலர்ச்சி, ஊர்வலத்தால், மாநாட்டால், தெருக்கூட்டத்தால், அரங்குகளால் அந்த அரங்குகளில் நிகழும் அமர்வுகளில், அதில் கிடைக்கும் ஆய்வுரைகளால் முடிந்து விடக்கூடியதல்ல.
நாம் ஒவ்வொருவரும் மொழிக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும். அதற்கு முதல்கட்டமாக, இங்கே பேசிய தலைவர்கள் குறிப்பிட்டதை போல் இந்த மாநாட்டில் கூடியிருக்கின்ற நீங்கள்தான் பயிற்சி பெறவேண்டும். அந்த பயிற்சியை பெறுவதற்கு நீங்கள் ஆயத்தமாக வேண்டும்.
செம்மொழி அந்தஸ்து…
தமிழிலேதான் ஒருவருக்கு ஒருவர் முடிவெடுக்க வேண்டும். அதை நான் எடுத்துக் கொண்டால் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால், எனக்கு தமிழை தவிர வேறு மொழிகளில் அந்த அளவுக்கு பயிற்சி இல்லை. அவருக்கு ஆங்கிலம் தெரியாது,
அதனால்தான் தமிழில் பேசவேண்டும் என்று சுருக்கமாக கூறிவிட்டு போவார்கள். ஆனால் என்னை விட அதிகம் ஆங்கிலம் பயின்ற, தமிழை தாய்மொழியாக கொண்டு, பிற மொழி புலமை பெற்றவர்களான திரு.வி.க. போன்றவர்கள் எல்லாம் ஆங்கிலம் பயின்றவர்கள்தான். தமிழின் வளர்ச்சிக்கு, தமிழில் பேச வேண்டும், தமிழில் பயிற்சி பெறவேண்டும், வீட்டில் குழந்தை தவழ்ந்தால் மட்டும் போதாது. தமிழும் தவழவேண்டும் என்றார்கள். தமிழர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.
மூவேந்தர் காலத்தில் தமிழ் சிறந்து விளங்கியது. இடைப்பட்ட காலத்தில் களப்பிரர்கள் ஆட்சியில் தமிழுக்கு இருண்டகாலம் ஆனது. 6,7,8-ம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழிக்கு பல்லவர்கள் ஆதரவு தந்தார்கள். அதன்பிறகு இடைக்கால சோழர், பாண்டியர் ஆட்சியில் தமிழ் சிறப்பாக இருந்தது. 14 முதல் நூற்றாண்டு வரை தமிழ் சீரழிந்து போயிற்று.
இந்த நிலையை மாற்றத்தான் பரிதிமாற் கலைஞர் போன்றோர் எப்படியாவது தமிழுக்கு செம்மொழி தகுதி பெற வேண்டும் என்று எண்ணினார்கள். அவரைப் போன்ற தமிழறிஞர்கள் குரல் கொடுத்ததால் நாம் ஆட்சி பொறுப்பை ஏற்று, மத்தியில் உள்ளவர்களிடம் எடுத்துச் சொல்லி செம்மொழி தகுதியை பெற்றுள்ளோம். சோனியா எழுதிய கடிதத்தை பற்றி தங்கபாலு சொன்னார். நான் திருச்சி மாநாட்டில் அந்த கடிதத்தை காட்டி, இது என் தாத்தா காலத்தில் வைக்கப்பட்ட செப்பேடு என்று கொள்ளு பேரன், பேத்திகள் சொல்லவேண்டும் என்று கூறினேன்.
அறிவிப்பு வெளியாகும்…
அதன்பிறகு, செம்மொழிக்கான அலுவலகத்தை மைசூரில் இருந்து, சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று, சென்னை மாநகருக்கு அந்த அலுவலகம் மாற்றப்பட்டது. அது சிறிய வாடகை இடத்தில் இயங்கி வருகிறது.
உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. பழைய கோட்டை இருந்த அலுவலகத்துக்கு இந்த செம்மொழி அலுவலகத்தை மாற்ற முடிவுசெய்துள்ளோம். செயின்ட் ஜார்ஜ் கோட்டைதான் இனி செம்மொழி தலைமை அலுவலகம். அந்த அலுவலகத்தில் செம்மொழி ஆய்வுக்கான பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் சென்னை திரும்புவதற்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதற்கான வேலைகள் வேகமாக நடக்கிறது. அங்குள்ள முதல்வர் அலுவலகம், இனி செம்மொழி தலைமை அலுவலகம் என்றழைக்கப்படும்.
செம்மொழிக்கு எந்த அளவுக்கு பொலிவு சேர்க்கப்படுமோ அதைச் சேர்ப்போம். இங்கு நடைபெறும் ஆய்வரங்கம், கருத்தரங்கில், இங்கு பேசிய தலைவர்கள் பேசியதை, தந்த அறிவுரைகளை கட்டளைகளை பற்றி யோசித்து நல்ல அறிவிப்புகள் இறுதிநாள் நிகழ்ச்சியில், உள்துறை மற்றும் நிதித்துறை மந்திரி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பல அறிவிப்புகளை வெளியிடுவேன். அதில் பட்ஜெட் படிப்பது போன்ற பல செய்திகளை சொல்ல இருக்கின்றேன்…,” என்றார்.
‘சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ்!’
சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் – பிரதிபா பாட்டீல்
கோவை: சங்க காலத்திலேயே பெண்களுக்கு சமத்துவத்தை வழங்கியது தமிழ்ச் சமுதாயம் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறினார்.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை புதன்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசினார்.
அடுத்த தலைமுறை தமிழ் இளைஞர்கள், தமிழ் கலாசாரம், வரலாறு குறித்த அறிவுடன் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அவரது பேச்சு விவரம்:
“உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான தமிழ் அறிஞர்கள் பங்கு பெற்றுள்ள இந்த சிறப்புமிக்க பிரமாண்ட மாநாட்டில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வந்துள்ள அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செம்மொழி அந்ததை 2004-ம் ஆண்டு பெற்றது தமிழ். இது தமிழ் மொழியின் இலக்கிய வளம், கலாச்சார செறிவு மற்றும் அதிக மக்களிடைய பரவியுள்ள தன்மைக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். தமிழக முதல்வர் கருணாநிதியின் இடையறாத முயற்சிக்குக் கிடைத்த வெற்றியும் கூட. அவர் வெறும் நிர்வாகி மட்டுமல்ல, மிகச் சிறந்த இலக்கிய அறிஞர். அரை நூற்றாண்டுக்கும் மேல் தமிழில் எழுதி வருபவர். இந்த மாநாட்டின் மைய நோக்குப் பாடலையும் எழுதியுள்ளார். அவருக்கு எனது முதல் பாராட்டைத் தெரிவிக்கிறேன்.
தமிழ் மக்களுக்கு என் இதயத்தில் எப்போதும் சிறப்பிடம் உண்டு. அதுவும் சென்னை எனக்குப் பிடித்த நகரம். குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சாரத்தை நான் ஆரம்பித்ததே சென்னையில்தான். நான் குடியரசுத் தலைவரான பிறகு எனக்கு முதல் பாராட்டு விழா நடத்தியவர்கள் தமிழ் மக்களே. நான் பேசிய முதல் கூட்டமும் சென்னையில்தான் நடந்தது. இப்படி என் வாழ்க்கையில் பிரிக்க முடியாத சிறப்பு பெற்றவர்கள் தமிழர்கள்.
இந்த மக்கள் மிகச் சிறப்பானவர்கள். பண்பில் உயர்ந்தவர்கள். எப்போதும் மதச்சார்பின்மையில் உறுதியாக நிற்பவர்கள். கலாச்சாரத்தை பேணிக்காப்பவர்கள். சகிப்புத் தன்மைக்கு உதாரணமாகத் திகழ்பவர்கள். மனிதாபிமானமிக்கவர்கள். சங்க காலத்திலிருந்து இன்று வரை இந்த பண்புகளில் மாறாமல் உறுதியுடன் திகழ்பவர்கள்.
பண்பில் சிறந்த தமிழ்நாடு!
தமிழும் தமிழ் மக்களும் பாரத தேசத்தின் பெருமைக்குரிய அடையாளங்கள். இந்திய கலை, பண்பாட்டுச் சிறப்பில் தமிழுக்கு உன்னத இடம் உண்டு.
தமிழ் மக்கள் அறிவில் சிறந்தவர்கள். உழைப்பில் உயர்ந்தவர்கள். பண்டைய நாள்களில் சில்க் ரூட் எனப்பட்ட பட்டுவழித்தடம் மூலம் திரைகடலோடி திரவியம் தேடிய வல்லவர்கள்.
கி மு முதல் நூற்றாண்டிலேயே பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்கார இனம் என்றால் அது தமிழினம்தான். ஆன்மீகமும் கலையுணர்வும் தமிழர்களிடமிருந்து பிரிக்கமுடியாதவை.
தமிழர்கள் செல்லுமிடமெல்லாம் வெற்றியைப் பெறும் சிறப்பு மிக்கவர்கள். இந்த வெற்றி எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்பதே எனது ஆசை.
அனைத்து மதங்களையும் சமமாக நோக்குவதில் தமிழர்களுக்கு இணையில்லை. இங்கு சைவமும் உண்டு, வைணமும் உண்டு, கிறிஸ்தவம், இஸ்லாம் என பிற மதங்களும் உண்டு. ஆனால் எல்லா மதங்களுக்கும் உரிய மரியாதையைக் கொடுத்து அமைதி வழியில் செல்லும் உன்னத சமூகம் தமிழினம். யாரிடத்தும் வேற்றுமை பார்ப்பதில்லை.
சீர்த்திருத்தத்தின் முன்னோடி…
இந்திய அரசின் அரசியல் சாசனத்தில் உள்ள சமத்துவம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், மதச் சார்பின்மை ஆகியவற்றுக்கு முழுமையான உதாரணம் தமிழகம்.
சமூக சீர்த்திருத்தங்களின் முன்னோடி என்பேன் தமிழகத்தை. 2000 ஆண்டுகளுக்கு முன்பே பல சமூகச் சீர்த்திருத்தங்களைச் செய்தவர்கள் தமிழர்களே.
தேசத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழகம் தோள்கொடுத்து நிற்கிறது. தமிழகத்தில் சமூக மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ள காரணத்தால் எல்லா சமூகத்தினரும் சமமாக மதிக்கப்படுகிறார்கள்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் வாழும் கிராமப் பகுதிகளின் வளர்ச்சிப் பணிகள், அந்தப் பகுதி மக்களின் பங்கேற்புடன் கூடியதாக உள்ளது. தமிழகத்தில் கிராம பஞ்சாயத்துகள் மூலம் அப்படிப்பட்ட அமைப்பு முறை இருப்பதைக் காண முடிகிறது. இதனால் பொருளாதார, நிர்வாக ரீதியில் தன்னிச்சையாக செயல்படக் கூடிய வகையில் அவை செயல்படுகின்றன. இதுபோன்ற நிலைதான் நாட்டு வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும்.
இதற்கு மூலமான பஞ்சாயத் ராஜ் எனும் ஆட்சி முறையை முதல்முதலாக முழுமையாக நடைமுறைப்படுத்தியவர்கள் தமிழர்கள்தான். சோழ மன்னர்கள் காலத்திலேயே சுயமான கிராம நிர்வாக ஆட்சி முறைக்கு வித்திட்டவர்கள் தமிழ் மன்னர்கள்.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்திலிருந்தே ஆட்சி முறைக்கும், நிர்வாகத் திறனுக்கும் பெயர் பெற்ற சமூகமாகத் திகழ்கிறார்கள் தமிழர்கள். பல்லவர்களின் கட்டடக்கலைச் சிறப்பும், சோழர்களின் செப்புக் கலை சிற்பங்களும் தேசத்தின் பெருமைகள்.
உலகின் மிகத் தொன்மையான மொழி, இந்தியாவின் மிகப் பழைமையான மொழி தமிழ் என்பதை பெருமையுடன் இங்கே சொல்லிக் கொள்கிறேன். கிமு 200வது ஆண்டில் தொல்காப்பியம் எனும் பிரமிக்க வைக்கும் இலக்கண நூலை தொல்காப்பியர் எழுதினார். சங்க காலப் புலவர்களின் இலக்கியம் இன்றும் பிரமிக்க வைக்கிறது. சங்க காலத்திலேயே ஆண் புலவர்களுக்கு நிகரான பெண் புலவர்களை தமிழ் சமூகம் ஆதரித்துள்ளது!
இந்த உலகமே எனது ஊர்தான், இந்த மக்களெல்லாம் என் உறவுகள்தான் என்ற பொருளில் ‘யாதும் ஊரே; யாவரும் கேளீர்’ என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் பாடியுள்ளார் ஒரு புலவர்.
திருவள்ளுவரின் திருக்குறள் காலத்தால் மறையாத ஒரு நீதிநூல் ஆகும். தேசத் தந்தை மகாத்மா அவர்கள், ‘பொதுமறையான திருக்குறளைப் படிப்பதற்காகவே நான் தமிழை முழுமையாகக் கற்க வேண்டும்’ என்றார். அப்படியொரு சிறப்பு தமிழுக்கு. சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என காப்பியங்கள் கொண்ட செம்மொழியான தமிழை ஆழ்வார்களும் நாயன்மார்களும் பேணி வளர்த்தனர்.
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் மொழியின், தமிழகத்தின் பங்களிப்பு மகத்தானது. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தனது தமிழ்க் கவிதைகள் மூலம் ஏற்படுத்திய சுதந்திர வேட்கை, தேச விடுதலையில் முக்கியப் பங்காற்றியது. சென்ற தலைமுறைகளுக்கும் வரவிருக்கிற தலைமுறைக்கும் சரியான பாலத்தை தமிழ் மொழி அமைத்திருக்கிறது. அடுத்த தலைமுறையினர் அதைப் பேணிக் காக்க வேண்டும்.
தமிழ் செம்மொழி மையத்தை விரைவில் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் இங்கே வலியுறுத்த வேண்டியது அவசியமாகிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ் மொழிக்கு இவ்வளவு சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் விழா எடுத்த முதல்வர் கருணாநிதியை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். எனதருமைத் தமிழ் மக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி, வணக்கம்” என்றார்.
உலக மொழிகளுக்கெல்லாம் தமிழே தாய்மொழி! – முதல்வர் கருணாநிதி
உலக மொழிகளுக்கெல்லாம் தமிழே தாய்மொழி! – முதல்வர் கருணாநிதி
கோவை: உலகில் தொன்மையான மொழி தமிழ்தான். உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழிகத் திகழ்கிறது தமிழ் என்றார் முதல்வர் கருணாநிதி.
தமிழறிஞர்கள், பல்துறை நிபுணர்கள், மொழியியல் அறிஞர்கள், பொதுமக்கள் என மக்கள் வெள்ளம் கோவையைச் சூழ இன்று காலை கோலாகலமாக தொடங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.
5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள், பல்துறை நிபுணர்கள் பங்கேற்கின்றனர். கொடீசியா வளாகத்தில் இதற்காக பிரமாண்ட பந்தலும், மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று காலையிலேயே பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விட்டனர்.
விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியது:
உலகச் செம்மொழி மாநாட்டினைத் தொடங்கி வைத்து ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது’ வழங்கி விழாப் பேரூரையாற்ற வருகை தந்திருக்கும் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் அவர்களே, தடைக் கற்கள் பல போடப்பட்டாலும், அவற்றை யெல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு தமிழகத்தின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாகவும்- பற்றின் காரணமாகவும் வருகை தந்துள்ள தங்களுக்கு உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு மலரை வெளியிட்டு, வாழ்த்துரை வழங்க, வருகை தந்திருக்கும், தமிழ்நாடு ஆளுனர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களே!
தமிழக அரசின் நிதி அமைச்சர் இனமானப் பேராசிரியர், தமிழகத்தின் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களே!
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கே வருகை தந்திருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களே, ஆய்வறிஞர்களே, கவிஞர்களே, தமிழ் ஆர்வலர்களே, தமிழ் அன்பர்களே! என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே!
கோவையில் நடைபெறுகின்ற இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, மடைதிறந்த வெள்ளமெனத் திரண்டு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது நன்றி கலந்த வணக்கத்தையும் உள்ளம் நிறைந்த வரவேற்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி தீரத்தின் நெற் களஞ்சியமாம், தஞ்சை தரணியிலே, கருக்கலிலே கண் விழிக்கும் திருக்குவளை என்னும் சிற்றூரில், கவிபுனையும் கற்பனைத் திறனும், தமிழிசை ஆற்றலும், வேளாண்மை நாட்டமும், மிகுந்த முத்துவேலருக்கும், அஞ்சுகத்தம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்து, 14 வயதினிலே, ‘வீரத் தமிழ் கொஞ்சும் நாட்டிலே’ எனும் அணிவகுப்புப் பாடல் இயற்றி தமிழ் வாழ்க, தமிழர் வெல்க என்று புலி, வில், கயல் பொறித்த கொடி பிடித்து, தமிழ் மாணவர் பட்டாளத்திற்கு தலைமை தாங்கி ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுடன் பேரணி நடத்தி,
அதே வயதில் ‘திராவிடர் விழித்துக் கொள்ளும் காலம் நெருங்கி விட்டது. பெரும் பாலான திராவிடர் வீறு கொண்டெழுந்து விட்டனர். நாட்டைக் காப்பாற்றவும் கலை நாகரீகத்தைக் காக்கவும் கச்சை கட்டி விட்டனர்’, என்ற முன்னுரையோடு ‘செல்வ சந்திரா’ என்ற நாடகத்தை எழுதி, 17 வயதில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற ஓர் அமைப்பினைத் தோற்றுவித்து, அதன்ஆண்டு விழாவுக்கென ‘கிளம்பிற்றுக் காண் தமிழச் சிங்கக் கூட்டம்! கிழித் தெறியத் தேடுகாண் பகைக்கூட்டத்தை’ என்ற பாடல் வரிகளைப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடமிருந்து வாழ்த்தாகப் பெற்று,
‘திராவிட நாடு’ தொடக்க இதழ் ஒன்றில், ‘இளமைப் பலி’ என்ற கட்டுரை எழுதி, அறிஞர் அண்ணாவின் கவனத்தை கவர்ந்தது, 20 வயதில் ‘சேரன்’ என்ற புனைப் பெயரோடு, ‘முரசொலி’ இதழைத் தொடங்கி, ‘கிழவன் கனவு’ என்னும், சீர்திருத்த சிறுகதையினை வழங்கி,
பின்னர் தந்தை பெரியாரின் அரவணைப்பிலும், அறிஞர் அண்ணாவின் அன்பிலும் நனைந்து, வளர்ந்து, தமிழையே தோன்றாத் துணையாகவும், தோளேந்திய ஆயுதமாகவும் கொண்டு- கதை, கவிதை, கட்டுரை, நாடகம், திரைப்படம், அரசியல் என பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்து – ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாதபோதும், தமிழ் அன்னைக்கு இயன்ற வழியனைத்தும், முனைந்து இடையறாது பணியாற்றி, அணிமணிகள் பலவும் தேடிக்கொணர்ந்து சூட்டி வரும் எனக்கு,
கோலமிகு கோவை மாநகரிலே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கும், அதன் தொடக்க விழாவிலே தலைமையேற்பதற்கும், கிட்டிய வாய்ப்பினை பெருமையாக கருதுகிறேன்.
முதல் மாநாடு இது!
இதுவரை உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடைபெற் றிருக்கின்றன. முன்னர் நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்பொழுது நடைபெறுகிற இந்த மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை உலகத் தமிழ் மாநாடுகள். இப்பொழுது நடைபெறுவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.
உலகத் தமிழ்ச் செம்மொழி என்பதில் உள்ள மூன்று சொற்களும், பொருள் பொதிந்தவை மட்டுமல்ல, பொருத்தமானவையும் ஆகும். தமிழ் உலக மொழி மட்டுமல்ல, உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், ‘ஞால முதல்மொழி தமிழே’ என்று நிறுவிக் காட்டியிருக்கிறார்.
மூலத் தாய்மொழிச் சொற்கள் உலக மொழிகளில், சொல் வடிவில், உருத்திரிந்து, பொருள் அளவில் உருத்திரி யாமல் இருக்கின்றன.
தமிழே உலக முதல் மொழி… மொழிகளின் தாய்!
எடுத்துக்காட்டாக உலக மொழிகளில் உள்ள அம்மா, அப்பா எனும் உறவு பெயர்கள், நான், நீ, அவன் எனும் மூவிடப் பெயர்கள், நீர், நெருப்பு, காற்று போன்ற இயற்கைப் பெயர்கள் போன்றவை தமிழோடு மிகவும் நெருக்கம் கொண்டவையாக உள்ளன. தமிழோடு தொடர்பில்லாத அடிப்படைச் சொற்கள் எவையும், உலக மொழிகளில் இல்லாததால் தமிழே உலக முதல் தாய்மொழி எனும் தகுதியைப் பெறுகிறது.
உலக மொழிகளில் மிகத் தொன்மைக் காலம் முதலே இயல், இசை, கூத்து எனும் முத்தமிழ், வளர்ச்சியை எய்தியதால், தமிழ் நிலை யான தன்மையை அடைந்தது. இலக்கியம் தழுவிய கலை வளர்ச்சி, தமிழுக்கு நிலைத்து நிற்கும் ஆற்றலைத் தந்திருப்பதால், தமிழை உலகத் தாய்மொழி என அறியலாம்.
கி.மு. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசனாகிய சாலமனுக்கு தமிழகக் கப்பல்கள் மயில் தோகையையும், யானைத் தந்தத்தையும், வாசனைப் பொருள்களையும் கொண்டு சென்றன.
வடமொழியில் வேதங்களில் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் இருப்பதை ஆய்வறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்து அறிவித்தார்.
இதிலிருந்து வட மொழிக்கு முன்பே தமிழ் இருந்தது என்பதை அறியலாம், வால்மீகி ராமாயணத்தில் தென்னகத்தை ஆண்ட மூவேந்தர்களைப் பற்றிய குறிப்பும், பாண்டியரின் தலைநகரான கபாடபுரம் பற்றிய குறிப்பும் உள்ளன. இது லெமூரியா கண்டத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் இருந்த கபாடபுரம் பற்றியதாகும் எனக் கருதப்படுகிறது.
கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சந்திரகுப்த மௌரியரின் அமைச்சரான சாணக்கியர் தன் அர்த்தசாஸ்திரத்தில் கபாடபுரத்தில் முத்துக்குளித்தலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
கி.மு. 350-ல் வாழ்ந்த வடமொழி இலக்கணப் பேரறிஞரான காத்தியாயனார் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பாரதத் போர் பற்றி வரும் குறிப் பில், புறநானூற்றில் பாண்டவர் ஐந்து பேருடன், 100 துரியோதனாதியர்களும் போரிட்டபோது அந்த இரு பக்கப்படைகளுக்கும் பெருஞ்சோறு கொடுத்த காரணத்தால் உதியஞ்சேரலாதன்- சேரன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என்று அழைக்கப்பட்டார். பாரதப் போர் நடைபெற்ற காலம் கி.மு. 1500 எனப்படுகிறது. அப்படியானால் இந்தச் சேரனின் காலம் கி.மு. 1500 ஆக இருக்க வேண்டும். இவையனைத்தும் தமிழ் இனத்தின் தொன்மையையும், தமிழ் மொழியின் தொன்மையையும் புலப்படுத்தும்.
சிந்துவெளி நாகரீகத்தின் சொந்தக்காரர்கள்…
பேரறிஞர்களான ஜான் மார்ஷல், ஈராஸ் அடிகள், சர் மார்டிமர் வீலர், கமில் சுவலபில் போன்றோர், திராவிடர்களே சிந்துவெளி நாகரிகத் தோற்றத்தின் உரிமையாளர்கள் எனவும், அவர்களின் மொழி திராவிடமொழிதான் எனவும் உறுதிபடுத்தியிருக்கின்றனர்.
சிந்துவெளி நாகரீகம் ஒரு திராவிடப் பண்பாடு, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தமிழ்ப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சிந்து வெளிக் குறியீடுகளைப் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள தொன்மங்களோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம் என்று கடந்த 40 ஆண்டுகளாகச் சிந்துவெளிப் பண்பாட்டு வரிவடிங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் டாக்டர் ஐராவதம் மகாதேவன் கூறியிருக்கிறார்.
இன்று ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ பெறும் பின்லாந்து நாட்டுப் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா- சிந்துவெளிப்பண்பாடும், அதன் எழுத்தும் திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்னும் கருதுகோளை ஆய்வுச் சான்றுகளோடு முன்வைத்து, அத்துறையில் தொடர்ந்து அரும்பணியாற்றி வருகிறார். சிந்துவெளியினர் திராவிட மொழி பேசுபவர்களே என்பதற்கான தகுந்த ஆதாரங்களை அவர் விரிவாகக் கூறியுள்ளார்.
5000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்…
அகநானூறு, புறநானூறு போன்ற கடைச் சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்குக் கிடைத்தது. தொல்காப்பியம் கிடைத்ததால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்குக் கிடைத்தது. சிந்துவெளி எழுத்துச் சான்றுகளின் பயனாக, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் கண்டறியப்பட்டுள்ளது.
பண்டைத் தமிழர்கள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் பயணம் செய்து, உச்சயினி, கலிங்கப்பட்டினம், காசி, பாடலிபுரம் முதலான இடங்களிலும், கடல் கடந்த நாடுகளாகய காழகம் (பர்மா), தக்கோலம், கிடாரம், சாவகம் (கிழக்கிந்தியத் தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்று வணிகம் செய்தார்கள்.
தமிழக வணிகர் அயல் நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்தது போலவே, அயல்நாட்டு வணிகரும் தமிழகத்திற்கு வந்து வணிகம் செய்தார்கள், அக்காலத்தில், வணிகத்திலே உலகப் புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலே, அயல்நாடுகளிலிருந்து கப்பலோட்டி வந்த வேறு மொழிகளைப் பேசிய மக்கள் தங்கியிருந்ததைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
பயனற வறியா யவனர் இருக்ழையும்
கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள்
கலந்திருந்துறையும் இலங்குநீர் வரைப்பும்
என்று சிலப்பதிகாரமும்
மொழி பல பெருகிய தீர் தே எத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்
என்று பட்டிப்பாலையும் எடுத்துரைக்கின்றன.
தமிழ்நாட்டிற்கு வட மேற்கிலிருந்து வந்த அராபிய வாணிகரும், யவனர்களும், சேரநாட்டின் முசிறித் துறைமுகத்திற்கு வந்து வாணிகம் செய்தனர். இத்தகைய வாணிகத்தின் மூலமாகவும் பல்வேறு மொழிகளின் தொடர்புகளின் காரணமாகவும் தமிழ், உலக நாடுகளில் எல்லாம் அறியப்பட்ட மொழியாற்று. அதன் தொன்மையாலும், தனித் தன்மையாலும், முதன்மைச் சிறப்பினாலும், தமிழ் உலக முதல் தாய் மொழியாக – உலகத் தமிழாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
செம்மொழி – என்ன தகுதி?
ஒரு மொழி செம்மொழியாகக் கூறப்படுவதற்கு இன்னின்ன தகுதிகள் வேண்டுமென்று வரையறுக்கப்பட்டுள்ளது. தொன்மை பொதுமைப் பண்பு நடுவுநிலைமை தாய்மைத் தன்மை மொழிக் கோட்பாடு இலக்கிய வளம் உயர் சிந்தனை பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு ஆகிய பதினோரு தகுதிகளை ஒரு மொழி பெற்றிருந்தால்தான், அது செம்மொழியாகும்.
இந்த பதினோரு தகுதிகளை மட்டுமல்ல இந்தத் தகுதிகளுக் கெல்லாம் மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழிதான், தமிழ் மொழி என்பதை தமிழகத்திலே உள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல, இந்தியாவிலே பிற மாநிலங்களிலே உள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம் ஓரு மனதாக ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
தமிழ் செம்மொழியே என முதன் முதலில் குரல் கொடுத்தவர் தமிழறிஞர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற் கலைஞர் ஆவார்கள்.
தமிழ் செம்மொழி என்று முதன் முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் இராபர்ட் கார்டுவெல் அவர்கள் ஆவார்கள். அயர்லாந்து நாட்டில் ஷெப்பர்ட் காலனி என்ற இடத்தில் வாழ்ந்த இவர் அங்கிருந்து குடி பெயர்ந்து தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் இடையான்குடி என்ற ஊரில் தனது இறுதிக் காலம் வரையில் வாழ்ந்தவர். அந்த அளவிற்கு மண்ணின் பற்று, மொழியின் பற்று கொண்டவராக அவர் விளங்கினார்.
தமிழ் செம்மொழி என்னும் அங்கீகாரத்தைத் பெற வேண்டுமென்று, சென்னை சைவசித்தாந்த மகா சமாஜம், கரந்தைத் தமிழ் சங்கம், தலை நகர்ந்த தமிழ்ச் சங்கங்கள் போன்ற அமைப்புகளும், சென்னைப் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்திலே உள்ள பல்கலைக் கழகங்களும், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், முனைவர் ச. அகத்தியலிங்கம், முனைவர் வா.செ. குழந்தைசாமி, முனைவர் ஜான் சாமுவேல், மணவை முஸ்தபா, முனைவர் அவ்வை நடராஜன், முனைவர் பொற்கோ போன்ற தமிழறிஞர்களும், டாக்டர் சுனித்குமார், சட்டர்ஜி, டாக்டர் மில் சுவலபில், டாக்டர் ஜார்ஜ் எல். ஹார்ட் போன்ற வெளி மாநில வெளிநாட்டு அறிஞர்களும் தொடர்ந்து குரல் கொடுத்தனர்.
‘தியாகத் திருவிளக்கு சோனியா’
எனினும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழகத்தில் ஓங்கி ஒலித்து வந்த அந்தக் குரல், காட்டில் காய்ந்த நிலவாய் கடலில் பெய்த மழையாய் கவனிப்பாரற்று போயிற்று.
ஆனால், அரசியல் வானில் துருவ நட்சத்திரம் போன்று மத்தியில் தியாகத் திருவிளக்காம் சோனியா காந்தி வழிகாட்டுதலிலும், டாக்டர் மனமோகன்சிங் தலைமையிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தது. அதற்குப் பின்னர்தான் தமிழைச் செம்மொழியெனப் பிரகடனப்படுத்த வேண்டுமென்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. 12.10.2004 அன்று தமிழ், செம்மொழி என்ற பிரகடன அறிவிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டது.
அந்த நேரத்தில் சோனியா காந்தி எனக்கு எழுதிய கடிதத்தில்..
‘அதாவது தமிழைச் செம்மொழியாக ஆக்குவதற்குத் தேவைப்பட்ட முறையான சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து அது நிறைவேறிவிட்டது. இந்தச் சாதனைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் காரணம் என்றாலும் கூட, குறிப்பாகவும், சிறப்பாகவும், நீங்கள்தான் இதற்குக் காரணம். உங்கள் தலைமையிலே உள்ள திராவிட முன்னேற்ற கழகம்தான் இதற்குக் காரணம்” என்று சோனியா காந்தி எழுதியிருந்தார்கள்.
நான் உங்களுக்குச் சொல்கிறேன். இதனை நான் ஒரு கடிதமாக அல்ல.
காலாகாலத்திற்கும், இன்னும் நூற்றாண்டு காலம், இருநூறாண்டு காலத்திற்கும் பிறகு, என் கொள்ளுப் பேரன் எடுத்துப்படித்து, நம்முடைய தாத்தா கட்டிக் காத்த செப்பேடு இது என்று பாராட்டுகின்ற அளவிற்கு ஆக வேண்டுமென்ற ஆர்வமும் நம்பிக்கையும் உள்ளவன் நான்.
ஒரு நூற்றாண்டு காலமாக எழுப்பப்பட்டு வந்த குரல்- குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசத்தொடங்கியதற்குப் பிறகு-தமிழ் செம்மொழி என்ற பிரகடன அறிவிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டதையொட்டி- நடைபெறுகிற முதல் மாநாடு இது என்பதால், தமிழின் பெயரால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற திருப்பெயரில் இந்த மாநாடு கோவை மாநகரிலே நடைபெறுகிறது.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகும், இளமையும் அணுவளவேனும் குறையாமல் இந்த அவனியிலே வாழ்ந்து வரும் தமிழ் மொழியை, இனி எதிர்காலத் திற்கான தேவைகளை மதிப்பிட்டு- கணினித் தமிழ், அறிவியல் தமிழ் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான வழி முறைகளை வகுத்திடவும், இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழியியல், மொழி பெயர்ப்பியல், வரலாறு, தத்துவம், மானிடவியல், நாட்டுப்புறவி யல் போன்ற பல துறைகளிலும் பண்பட்ட ஆய்வுகளை ஊக்கப்படுத்திடவும், சிந்து சமவெளி முதல் ஆதிச்சநல் லூர், கொடுங்கடல் கொண்ட குமரிக்கண்டம் வரை தொல்லியல் துறையில் இதுவரை மேற்கொண்ட ஆய்வு முடிவுகளின் அடிப் படையில் மேலும் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுத்திடவும், இந்த மாநாடு இப்போது கொங்கு பூமியிலே நடைபெறுகிறது.
வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பொருப்பு வெளிக்குன்று-கிடக்கும்
களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டு
குளித் தண்டலையளவும் கொங்கு-
என்று ஒருகாலத் தில் கொங்கு நாட்டு எல்லை கள் வரையறுக்கப்பட்டிருந்தன.
தமிழகத்தின் சரித்திரத்தில்- சங்க காலம் தொடங்கி இன்று வரை-தனி இடம் பெற்றிருப்பதும்-என்னை முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராக அனுப்பி வைத்ததுமான குளித்தலை உள்ளிட்டதும்-கொங்கு நாடாகும். ஆம், குளித்தண்டலை யளவும் கொங்கு.
தமிழகத்தில் பாரி, ஓரி, காரி, பேகன், ஆய், அதியன், நள்ளி என்னும் எழுவரை மட்டும் வள்ளல்கள் என வரையறுத்துக் கூறினர், சங்க காலத்துச் சான்றோர்கள். இவ்வெழுவர்க்குப் பின்னர், அவ்வெழுவர் போல ஈதற்குயான் உளேன் என்ற வள்ளல் குமணனோடு, சங்ககால வள்ளல்கள் எண்மராவர். அவ்வெண்மரில், பேகன், அதியமான், ஓரி, குமணன் ஆகிய நால்வர் கொங்கு நாட்டினர்.
அது மட்டுமல்ல, கடிய நெடுவேட்டுவன், நன்னன், பூந்துறை, ஈந்தூர்க் கிழான், கொண் கானங் கிழான், விச்சிக்கோ, தாமான் தோன்றிக்கோன், மோகூர்ப்பழையன் ஆகிய சங்ககாலத் தலைவர்களும், பழையகோட்டைச் சர்க்கரை, மும்முடிப் பல்லவராயர், காடையூர்க் காங்கேயர், கொற்றை வேணாடுடையார், மசக்காளி மன்றாடியார், வணங்காமுடி வாணராயன், காளிங்கராயன், பாரியூரான், உலகுடையான், அகளங்கன், இம்முடிச் சோழியாண்டான், தீரன் சின்னமலை, கொல்லி மழவன் போன்ற பிற்கால சங்கத் தலைவர்களும் கோலோச்சிய பூமி கொங்கு பூமி.
அஞ்சி அத்தை மகள் நாகையார், அதியன் விண்ணத்தனார், அந்தி இளங்கீரனார், ஆலத்தூர்க்கிழார், ஆவியார், இரும்பிடர்த்தலையார், எருமை வெளியனார், கருவூர்க் கண்ணம்பாளனார், கருவூர்க்கிழார், கருவூர்க்கோ சனார், கருவூர்ச் சேரமான் சாத்தனார், குடவாயிற் கீரத்தனார், கொல்லிக் கண்ணனார், செங்குன்றூர்க் கிழார், பெருந்தலைச் சாத்தனார், பொன்முடியார் போன்ற சங்ககாலப் புலவர்கள் பாடிப் பைந்தமிழ் வளர்த்த பூமி இந்தக் கொங்கு பூமி.
இத்தகைய புலவர்களும், புரவலர்களும், தன்னேரிலாத் தலைவர்களும் உலாவிய புகழுக்கும், பெருமைக்கும் உரியது கொங்கு பூமி. அதன் கோலமிகு மாநகரம் கோவை. அந்த மாநகரில் அனைத்து வகையிலும் அழகும், பொருத்தமும் நிறைந்த இடத்தில்-உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்குகிறது.
மாநாட்டினைத் தொடங்கி வைத்திட, பெண்ணின் பெருமைக்கும், இந்திய மண்ணின் பெருமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிடும் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் நமது அன்பான அழைப்பினையேற்று இங்கே வருகை தந்திருக்கிறார்கள்.
மாநாட்டுச் சிறப்பு மலரை வெளியிட்டு, வாழ்த்துரை வழங்கிட ஆளுநர் எனது நண்பர் சுர்ஜித் சிங் பர்னாலா இங்கே வந்திருக்கின்றார். உங்களோடு இணைந்து, அவர்களை வர வேற்று, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடக்க விழாத்தலைமையுரையினை இந்த அளவில் நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!
-என்றார் கருணாநிதி.
அவர் பேசி முடித்த பிறகு அவரது உரை செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு இன்று தொடக்கம்!
உலகத் தமிழறிஞர்கள் பங்குபெறும் தமிழ் செம்மொழி மாநாடு இன்று ஆரம்பம்
கோயம்பத்தூர்: முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று காலை 10.30 மணிக்கு கோவை மாநகரில் வெகு கோலாகலமாகத் தொடங்குகிறது.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. முதல்வர் கருணாநிதி முன் கூட்டியே கோவை சென்று கடைசி நேர பணிகளை நேரில் பார்வையிட்டார்.
இதுவரை உலகத் தமிழர்கள் உலகத் தமிழ் மாநாடுகளைத்தான் கண்டு வந்துள்ளனர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்த பிறகு முதல் முறையாக நடக்கும் மாநாடு இது.
5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள், பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் பங்கேற்கின்றனர். விழா முழுவதும் கோவை கொடிசியா அரங்கிலும், அதன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலிலும் நடக்கிறது.
காலை 10.30 மணிக்கு துவக்கி வைக்கும் பிரதிபா பாட்டீல்!
நாளை காலை 10.30 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும். பின்னர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மைய நோக்குப் பாடல் ஒலிபரப்பாகும்.
அதன் பின்னர் முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றுகிறார். ஆளுநர் பர்னாலா சிறப்பு மலரை வெளியிட, நிதியமைச்சர் அன்பழகன் தகுதியுரையாற்றுவார்.
அதைத் தொடர்ந்து கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சி இடம்பெறும். பின்லாந்து தமிழறிஞர் அஸ்கோபர் போலோவுக்கு இந்த விருதினை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்குகிறார்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதியின் தலைமையுரை இடம் பெறுகிறது. தொடர்ந்து ஆளுநர் பர்னாலா சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடக்க உரை நிகழ்த்துகிறார்.
அமெரிக்கத் தமிழறிஞர் ஜார்ஜ் ஹார்ட், ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழகத்தின் வா.சே. குழந்தைச்சாமி ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்துகிறார்கள். தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியின் நன்றி உரையுடன் காலை நிகழ்ச்சி முடிவடைகிறது.
மாலையில் இனியவை நாற்பது… ஊர்வலம்!
இன்று மாலை 4 மணிக்கு ‘இனியவை நாற்பது’ என்ற தலைப்பிலான பிரமாண்ட பேரணி தொடங்குகிறது. இதில் தமிழகத்தின் கலை, இலக்கியம், வரலாற்றுச் சிறப்பை வெளிக்காட்டும் வகையிலான 40 அலங்கார வண்டிகள் இடம் பெற்று பேரணியாக கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவுக்கு அணி வகுத்துச் செல்கின்றன.
கோவை வ.உ.சி. பூங்காவில் தொடங்கும் இந்தப் பேரணி, அவினாசி சாலை வழியாக, மாநாட்டு வளாகம் வரை நடக்கிறது.
இந்தப் பேரணியை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் லட்சுமி மில் அருகே அமைக்கப்பட்டுள்ள அலங்கார மேடையிலிருந்து பார்வையிடுகிறார்கள்.
இதேபோல சாலையின் 6 இடங்களில் மேடைகள் போடப்பட்டுள்ளன. அங்கு பன்னாட்டுத் தமிழறிஞர்கள், முக்கியப் பிரமுகர்கள் அமர்ந்து காண்பார்கள்.
முதல் நாள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல்வேறு ஆய்வரங்கங்கள், கவியரங்குகள், கருத்தரங்குகள் என ஐந்து நாட்கள் மாநாடு நடக்கிறது.
செம்மொழி மாநாட்டையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் நடைபெறவுள்ளன.
வரலாறு காணாத பாதுகாப்பு
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக கோவை நகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. அனைத்து முக்கியச் சாலைகளும் புதுப் பொலிவுடன் காட்சி தருகின்றன. சாலை மின் விளக்குகள் அனைத்தும் சீராக்கப்பட்டு இரவைப் பகலாக்கும் வகையில் பளிச்சிடுகின்றன. அனைத்துப் பகுதிகளிலும் அலங்கார விளக்குகள் ஜொலிக்கின்றன.
பாதுகாப்புக்காக மட்டும் 11 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்ப் படைகள், வெடிகுண்டு நிபுணர்கள் இரவு பகலாக நகரையே தங்களது பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வந்து கண்காணித்து வருகின்றனர்.
ரயில் நிலையங்கள், விமான நிலையம் , பஸ் நிலையங்கள், முக்கிய வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமானம் மூலமும் பாதுகாப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தங்கும் வசதி -சாப்பாடு
மாநாட்டுக்காக வரும் முக்கியப் பிரமுகர்களுக்காக, தமிழறிஞர்களுக்காக திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், லாட்ஜுகள் என அனைத்தும் புக் செய்யப்பட்டுள்ளன.
இதனால் சாதாரண பயணிகள் தங்குவதற்கு விடுதிகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல உணவு வசதியும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தமிழறிஞர்களுக்கு மட்டுமல்லாது, பொது மக்களுக்காகவும் சிறந்த உணவை அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த உணவு குறைந்த விலையில் ஐந்து நாட்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த அடையார் ஆனந்த பவன், வசந்த பவன் ஹோட்டல்கள் ஒப்பந்த அடிப்படையில் உணவு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மாநாட்டு வளாகத்துக்குள் ரூ 30க்கு சைவ உணவு கிடைக்கும்.
பொது மக்களுக்காக வழங்குவதற்காக நாலரை லட்சம் உணவுப் பொட்டலங்களாக தயாரித்து விற்கவுள்ளனர். முதல் நாளில் ஒன்றரை லட்சம் உணவுப் பொட்டலங்ளும், மற்ற 3 நாட்ளுக்கு தலா 50 ஆயிரம் பொட்டலங்களும், கடைசி நாளில் ஒன்றரை லட்சம் உணவுப் பொட்டலங்களும் தயாரிக்கப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத் தலைவரும், வசந்த பவன் உரி்மையாளருமான ரவி கூறுகையில், “செம்மொழி மாநாட்டிற்கு வரும் பொதுமக்களுக்கு அரசு சார்பில் குறைந்த விலையில் மதிய சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.59 மதிப்புள்ள சாப்பாடு ரூ.30-க்கு விற்கப்படுகிறது.
வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், அரை லிட்டர் மினரல் வாட்டர் கேன், இனிப்பு, காரம், ஊறுகாய் பாக்கெட் அனைத்தும் இதில் அடங்கும். இதேபோல ஒவ்வொரு நாளும் சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதம் என விதம் விதமான சாதங்களும் வழங்குகிறோம்” என்றார்.
கலை நிகழ்ச்சிகள், பிரமாண்டப் பேரணிகள், சொற்பொழிவுகள், ஆய்வரங்க அமர்வுகள், சுவையான உணவு என இன்று முதல் ஐந்து நாட்களுக்கு அமர்க்களப்பட உள்ளது கோவை நகரம்.
விடுதலைப் புலிகள் அறிக்கையும்… கருணாநிதி மகிழ்ச்சியும்!
விடுதலைப் புலிகள் அறிக்கையும்… கருணாநிதி மகிழ்ச்சியும்!
சென்னை: கோவையில் நடைபெறவுள்ள தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளதை வரவேற்றுப் பாராட்டியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்து இராமு சுபன் என்ற பெயரில் மின்னஞ்சல் மூலம் இந்த வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
உலக செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புவதாக 5 பக்கங்களைக் கொண்ட இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புலிகள் அமைப்பின் இந்த வாழ்த்து செய்தி குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதி இப்படிக் குறிப்பிட்டிருந்தார்:
“கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கி-அந்த வாழ்த்தினூடே ஈழத் தமிழ் இனம் படுகின்ற இன்னல் களைச் சுட்டிக்காட்டி அம்மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு – இச்செம்மொழி மாநாட்டினை நடத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன்.
தாய் மொழியாம் தமிழ் மொழியின் எதிர் கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் இச்செம்மொழி மாநாட்டுக்கு எம் ஆதரவு உண்டு; இந்த மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வழி கோலும் என்பதுடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே எமது அவா என்றும் சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் எந்த எதிர்பார்ப்பும், குறிக்கோளும் ஒளி விடுகிறதோ அவற்றைக் காண வேண்டும், கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவலில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள அமைப்பின் கருத்துகளில் எள்ளளவு வேறுபாடும் எமக்கில்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.
இலங்கையில் நடந்த அவலத்தை அருகில் இருந்த தமிழர்களால் தடுக்க முடியவில்லை என்ற வேதனை நமக்கு உண்டு என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதுதான் தேவையற்ற விவாதத்துக்கு இடமளித்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.
சிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தமிழகம் முழுதும் கண்டனக் குரல்கள் எழுந்தபோது, அவர்கள் யாரும் அப்பாவி மக்கள் அல்ல என்று கூறியதோடு, அவர்கள் சாகத்தான் வேண்டுமென்று சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலவினார்கள், இன்னமும் குலவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிக்கை வெளியிட்ட அந்த அமைப்பு ஒருக்கணம் எண்ணிப் பார்த்தால் உண்மைகள் ஆயிரம், ஒவ்வொன்றாக எதிர் நின்று சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதற்கு சாட்சியங்கள் கூறும். இந்த நேரத்தில் மேலும் அதை விளக்க விரும்பவில்லை. உண்மை எப்போதும் உறங்கி விடாது.
ஒரு காலத்தில் உதறிக் கொண்டு எழுந்து பேசத்தான் போகிறது.
இதற்கிடையே எனக்குள்ள மகிழ்ச்சியெல்லாம், இங்கே சிலர் பாரதத்து காந்தாரி போலப் பதறித் துடித்து – ராமாயணத்து கூனி போல பட்டாபிஷேகத்தையே தடுத்து நிறுத்த பகிரங்கமாகவே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் போது, ‘இதோ தமிழர்கள் நாங்கள்; எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் எம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்பட விருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு எம் ஆதரவு என்றும் உண்டு’ என்று அறிக்கை வெளியிட்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் – எம் இனத்தின் ஒற்றுமைக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம், வாழ்த்துகிறோம் என்று உளம் திறந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைவதோடு அவர்களைப் பாராட்டுவதும் கடமை எனக் கருதுகிறேன்…” என்று கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்த அந்த வாழ்த்து அறிக்கை:
“உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம்.
தமிழக அரசு நடாத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எதிர்வரும் யூன் 23 ஆம் நாள்முதல் 27 ஆம் நாள்வரை கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
முன்னர் நடைபெற்று வந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு தமிழக அரசு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடாத்த முன்வந்துள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முதன்முதலில் கோலாலம்பூரில் 1966 ஏப்ரல் 16 – 23 நாட்களில் நடத்தப்பட்டது. அதன் இரண்டாவது மாநாடு 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10 நாட்களில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்றது. அதன்பின், பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, கோலாலம்பூர், மொரீசியஸ், தஞ்சாவூர் எனப் பல இடங்களில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழ் மக்கள் சந்தித்த பேரிழப்பின் வலி குறையுமுன்னர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதை உலகத் தமிழர்கள் விரும்பவில்லை. அதன் காரணமாக அந்த மாநாட்டைப் புறக்கணிக்கும் வேண்டுகோளை பல அமைப்புக்கள் விடுத்தன. எம் மக்களின் இந்த உணர்வு நியாயமானதே என்பதனை சான்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனமாக இருந்தநிலை இன்று மாறிவிட்டது. மொழியே ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துகிறது. தமிழரின் தேசிய அடையாளத்தை தமிழ்மொழியே குறிக்கிறது.
1974 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்தேறிய நான்காவது உலகத் தமிழாராட்சி மாநாட்டில் எம்மக்கள் தமது உயிரையே காணிக்கை ஆக்கினர் என்பதனை நினைவூட்ட விரும்புகின்றோம்.
செம்மொழி மாநாடு நடைபெறுவது பல வழிகளிலும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் பெருமையும் வளமும் அளிக்கும் என மனதார நம்புகிறோம். ஒரு மொழியின் வளர்ச்சி அம்மொழியின் தொன்மை தொடர்பானது மட்டுமே அன்று. எதிர்கால பயன்பாட்டுக்கு அது எந்த அளவு உதவப்போகிறது என்பதுதான் ஒரு மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது.
இவை காரணமாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க நாம் விரும்புகிறோம்.
தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கிய சிங்களப் பேரினவாதம், மேலும் தனிச்சிங்களச் சட்டம் என்று எமது தாய்மொழி மீதும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியது. தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட காரணத்தாலேயே தமிழர்கள் மீது படிப்படியாக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இவற்றையெதிர்த்துத் தொடங்கப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டமென்பது அடிப்படையில் மண் மீட்புக்கானதும் மொழிக் காப்புக்கானதுமான போராட்டமே. ஒரு மொழி வாழவேண்டுமானால், அம்மொழி பேசும் மக்கட் கூட்டம் பிழைத்திருக்க வேண்டும். அவ்வகையில் ஈழத் தமிழினம் தப்பிப் பிழைத்திருக்கவும், ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறவும் நடத்தப்படுவதே எமது போராட்டமாகும்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மொழியின் மேம்பாட்டுக்குப் போர்ச் சூழலுக்கு மத்தியிலும் கடுமையாகப் பாடுபட்டு வந்தமையை அனைவரும் அறிவர். குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டுதல், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அனைவருக்கும் தூய தமிழ்ப்பெயரை மாற்றியது, போர்ப்பயிற்சிக் கட்டளைகளைக் கூட தூய தமிழில் மாற்றிப் பயன்படுத்தியது, அங்காடிகளின் பெயர்ப் பலகைகளை நூறு விழுக்காடு தூய தமிழில் எழுதும் நடைமுறையைக் கொண்டு வந்தது என எமது இயக்கம் தமிழ்மொழியின் பால் கரிசனை கொண்டு எடுத்த நடவடிக்கைகள் பலவுண்டு. விடுதலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம் “தமிழ்ப்பெயர்க் கையேடு – மக்கட்பெயர் 46,000″ என்ற தொகுப்பைத் தயாரித்து வெளியிட்டது.
இது மட்டுமன்றி எமது மாவீரர்கள், மக்களின் தியாகத்தினால் உலகம் முழுவதும் எம் மொழி, இனம் புத்துயிர் பெற்று ஒரு மறுமலர்ச்சியினை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்மொழி மீது கொண்டுள்ள காதலுக்கு போர்க்களத்தில் விழுப்புண்பட்டு வீழ்ந்த வேங்கைகளின் கல்லறையில் நின்று எடுக்கும் உறுதிமொழி சான்றாக உள்ளது.
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!
மொழிக்காகவும் மண்ணுக்காகவும் இறுதிவரை போராடிய ஆயிரக்கணக்கான எம் வீரர்களும் மக்களும் முள்ளிவாய்க்காலில் மாண்டுபோயினர்; அனைத்துலக ஆதரவுடன் சிங்களத்தால் வதைக்கப்பட்டனர். இந்த இறுதிக் கணத்தில் நடந்தேறிய பேரவலத்தினை எம் அருகில் இருந்த கோடிக்கணக்கான தமிழர்களால் முயற்சித்தும் தடுக்க முடியவில்லை என்ற வேதனை எமக்கும் எமது மக்களுக்குமுண்டு.
தம்மையே கருக்கிய உயரிய தியாகங்கள் பல நடந்தபோதும், ஏதாவது செய்ய வேண்டுமென்ற துடிப்பு ஏராளமானவர்களுக்கு இருந்தபோதும் ஓர் அரசியற் சக்தியாக அதை முன்னெடுத்து நிறைவேற்ற முடியாமற்போன துயரம் தமிழகத்தில் நடந்தது.
இப்போதும் காலம் கடந்து விடவில்லையென்றே நாம் நம்புகிறோம். மொழியின் வாழ்வும் வளர்ச்சியும் அம்மொழியைப் பேசும் இனத்தின் ‘இருப்போடு’ தொடர்புபட்டது என்ற வகையில், தமிழ் மொழியைப் பேசும் ஓர் இனக் குழுமத்தின் இருப்பை உறுதி செய்வது அனைவரினதும் கடமையாகும்.
ஈழத்திலே தற்போது எமது மக்கள் படும் துன்பங்களைத் துடைத்து அவர்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதத்தை உலகளவில் பெற்றுக் கொடுக்கும் பணி எல்லாத் தமிழருக்குமுண்டு. இன்று நடைபெறும் சிங்களக் குடியேற்றங்கள், தமிழர் படுகொலைகள் என்பன நிறுத்தப்பட்டு தமிழர்கள் தம் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.
இன்று மிகமுக்கியமான காலகட்டத்தில் இந்தச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. எம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடாத்தப்படவிருக்கும் இச் செம்மொழி மாநாட்டிற்கு எம் ஆதரவு என்றும் உண்டு. இந்த மாநாடு தமிழ்மொழி வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதுடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே தமிழீழ விடுதலைப் புலிகளாகிய எங்களின் அவா.
அதேவேளை, ஈழத் தமிழினம் இலங்கையில் படும் இன்னல்களைக் களைவதுடன், அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியைத் தட்டிக்கேட்டு அதற்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இச்செம்மொழி மாநாட்டை நடாத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில், செம்மொழி மாநாடு தனது குறிக்கோளைத் திறம்பட அடைந்ததாக அனைத்துத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
அந்த வகையில், செம்மொழி மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் எம்மினத்தின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருக்கும் என நம்புவதுடன் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற நாம் வாழ்த்துகின்றோம்.
நன்றி.
‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்’
இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
-இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு அடுத்த பாராட்டு விழா… ரெடியாகும் சினிமாக்காரர்கள்!
கருணாநிதிக்கு அடுத்த பாராட்டு விழா… ரெடியாகும் சினிமாக்காரர்கள்!
அடுத்த பாராட்டு விழாவுக்கு தயாராகிறார் முதல்வர் கருணாநிதி. அவருக்கு விழா எடுக்க சளைக்காமல் தயாராகிறது திரைப்படத் துறையும்.
இந்த முறை எந்த சாதனைக்காக விழா என்கிறீர்களா?
75 ஆண்டுகளுக்கும் மேல் ஓயாமல் எழுதி வரும் கருணாநிதியை கவுரவிக்கும் பொருட்டு அண்ணா விருது வழங்குகிறார்களாம்.
அகில இந்திய திரைப்பட சம்மேளனம் சார்பில் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி சென்னையில் நடக்கும் எழுத்தாளர்கள் மாநாட்டில் இந்த விருது வழங்கப்படும் என்றார் ‘ஃபெப்ஸி’ தலைவர் வி.சி.குகநாதன்.
இலங்கை போகும் அசின்!
இலங்கையில் எந்தப் படப்பிடிப்பும் நடத்தக்கூடாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திப் பட ஷூட்டிங்குக்காக இலங்கையின் ‘புதிய டார்லிங்’ சல்மான்கான் அழைப்பின்பேரில் கொழும்பு செல்கிறார் அசின்!
அப்படின்னா தடை?
‘அதுபற்றி காவல்காரன் ஹீரோ விஜய்தானே கவலைப்படணும், நமக்கென்ன?’ என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது அம்மணி. விஷயம் அறிந்ததும் துடித்துப் போன ஹீரோ, நிலைமையின் தீவிரத்தை விளக்கியுள்ளார்.
ஆனால் அம்மணிக்கு, சல்மான்கானை விட மனசில்லை. இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லையாம்.
தொழில் அதிபர்களை விட்டுடறாங்க.. சினிமாக்காரங்களைப் பிடிச்சிக்கிறாங்க!
கடைசியில் பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது… ஆம், ஐஃபா விழாவுக்குப் போகக் கூடாது என்றெல்லாம் அறிக்கைவிட்ட சரத்குமாரின் உண்மையான மனநிலை பளிச்சென்று வெளியில் வந்துள்ளது.
‘ஆ ஊன்னா… இலங்கைக்குப் போகாதீங்க.. போனா தடைன்னு சொல்றாங்க. ஆனா தொழிலதிபர்கள் பிஸினஸ் பண்ணிக்கிட்டுதானே இருக்காங்க. இதில் நடிகர் நடிகைகளை மட்டும் டார்கெட் பண்ணா எப்படி? அவங்களும் தொழில்முறை கலைஞர்கள்தானே?’ என்று ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளார் சரத்குமார்… அதாவது தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்.
இந்தி நடிகர்கள் யாரும் இலங்கை பட விழாவுக்குப் போகக் கூடாது என்று அறிக்கை விட்டவர் இவர்தான். இதே அறிக்கையை ஆங்கிலத்தில் கடிதமாக்கி அதில் கையெழுத்துப் போட்டு அனுப்பியவரும் இவரேதான்.
நல்ல ஒற்றுமை…. தமிழனை அசைச்சிக்க முடியாது!
-என்வழி






































