முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் அமைப்பே! – நியூஸி. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

August 31, 2010 by envazhi  
Filed under General

விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் அமைப்பே! – நியூஸி. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆக்லாந்து: இறைமை உள்ள ஒரு இனத்துக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் அமைப்பே என நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

1992-ல் புலிகளுக்கு ஆயுதம் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை இந்திய கப்பல் படை இடைமறித்து சென்னை நோக்கி செலுத்தி வந்தது. இதில்தான் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கிட்டு இருந்தார். சென்னைக்கு அருகில் இந்தக் கப்பல் கொண்டுவரப்பட்டதும் கப்பல், அதிலிருந்த ஆயுதங்கள் மற்றும் புலிகள் அமைப்பின் தலைவர்களை சிறைப்படுத்த இந்திய கப்பல் படையினர் முயன்றபோது, கப்பலை வெடி வைத்துத் தகர்த்தனர் புலிகள். இதில் கிட்டு உள்ளிட்டோர் இறந்தனர். மூவர் மட்டும் கடலில் குதித்துத் தப்பினர். அவர்களை இந்தியா கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2001-ல் தண்டனை முடிந்ததும், அவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பியது இந்தியா. பின்னர் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து நியூஸிலாந்துக்கு சுற்றுலா விசாவில் சென்றனர். 2002-ல் அகதி உரிமை கோரி அங்கு விண்ணப்பித்தனர்.

ஆனால் இதனை நிராகரித்த நியூஸிலாந்து அவர்களில் இருவரை நாடு கடத்தியது. மூன்றாமவர் மட்டும் அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நியூஸிலாந்து நீதிமன்றம் மேற்கண்ட முன்னுதாரணமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

அகதி அந்தஸ்து கோரிய நபர், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்திய மாலுமி என்றும், தனது செயலை அதை ஒப்புக்கொள்வதாகவும் அரசு தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு இந்திய அரசு வழங்கிய தண்டனை மற்றும் இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி அகதி உரிமையை மறுத்தது நியூஸிலாந்து அரசு.

இதனை விசாரித்த நீதிபதி, இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை படைத்தவர்களே என்று குறிப்பிட்டார். மேலும் இந்திய நீதிமன்றத் தீர்ப்புகளையும் அவர் இந்த விசாரணையின் ஒரு அங்கமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தள்ளிவிட்டார்.

குறிப்பிட்ட அந்தக் கப்பல் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிச் சென்றது உண்மையாகவே இருந்தாலும், புலிகள் தங்கள் மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு. அவர்களுக்கு அத்தியாவசியமான பொருள்களைத்தானே அந்தக் கப்பல் ஏற்றிச் சென்றது? இதில் தவறு காண வேண்டியதில்லை. அந்தக் கப்பல் புலிகளுக்குப் போய்ச் சோராத நிலையில் அவர்களாலே மூழ்கடிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் அரசியல் குற்றமோ, பொதுமக்களுக்கு ஊறு விளைவித்த குற்றமோ இல்லை என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அரசியல் அமைப்பு

மேலும் தமது தீர்ப்பில், “இறைமை உள்ள இனம் என்ற அடிப்படையில் தமிழர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்காகவே விடுதலைப் புலிகள் போராடினர். புலிகள் ஒரு போராட்ட அமைப்பு. அது அரசியல் ரீதியாக தற்போது இயங்கி வருகிறது” என்றும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட அந்த தமிழருக்கு நியூசிலாந்து அரசு உடனே அகதிகள் அந்தஸ்து வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக ஆஸ்திரேலியா பட்டியலிட்டபோது, நியூசிலாந்தும் அதற்கான முயற்சியில் இறங்கியது.

அப்போது நியூசிலாந்து தமிழர்கள் மேற்கொண்ட பெரும் போராட்டங்களால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. இன்று புலிகளுக்கு தடை விதிக்காத முக்கிய நாடுகளுள் நியூஸிலாந்தும் ஒன்று.

உலகில் தமிழர்கள் பெருமளவில் வாழும் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இன்னும் புலிகள் மீது தடைகள் உள்ளன. அவ்வளவு ஏன், தமிழர்களின் தாயகமான இந்தியாவில் தடை நீடிக்கிறது. இந்தத் தடையை இனியும் நீடிக்கலாமா வேண்டாமா என்ற பொது கருத்துக் கணிப்பில் பங்கேற்று புலிகளுக்காக வாதாடக்கூட ஆளில்லாத நிலைதான் இந்தியாவில் உள்ளது.

தற்போது நியூசிலாந்தில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு, புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள நாடுகளில் அத் தடையை நீக்க தமிழ் அமைப்புகள் முயற்சிகள் மேற்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்பு தவறானது என்பதை கிட்டத்தட்ட வெளிப்படையாகவே உரைத்திருக்கிறது நியூஸிலாந்து உச்ச நீதிமன்றம். எனவே இதை மேற்கோள் காட்டி, புலிகளுக்கு எதிரான தடையை எதிர்த்து இந்தியாவிலும் வாதாட முடியும்.

இன்னொன்று, புலிகள் தங்கள் ஆயுதக் கப்பலை மூழ்கடித்தது, அரசியல் குற்றமோ, பொது நலனுக்கு எதிரான குற்றமோ அல்ல என தெள்ளத் தெளிவாக நியூஸிலாந்து நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. புலிகள் வல்வெட்டித் துறைக்கு கொண்டு சென்ற கப்பலை இடைமறித்தது இந்திய கப்பல் படைதான். தங்களுக்குச் சொந்தமான பொருளை புலிகள் மூழ்கடித்ததில் என்ன குற்றம் காண முடியும்? அந்த ஆயுதங்களைக் கொண்டு இந்தியாவை அவர்கள் தாக்க முயலவில்லையே என்றும் நீதிபதிகள் கருத்து வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!

நியூசிலாந்தில் உள்ள ஒரு வேற்றின நீதிபதிக்கு புரிந்துள்ள விஷயம் தமிழ் தலைவர்களுக்கு இன்னும் புரியவில்லை என்பதை நினைத்து ஆச்சர்யப்படுவதா, வேதனைப்படுவதா!

தமிழரைக் கொல்லும் ராஜபக்சே வரலாம்.. நான் வரக்கூடாதா? – பினாங்கு ராமசாமி

August 26, 2010 by envazhi  
Filed under General

தமிழரைக் கொல்லும் ராஜபக்சே வரலாம்.. நான் வரக்கூடாதா? – பினாங்கு ராமசாமி

பேராசிரியர் இராமசாமி, ‘பினாங்கு ராமசாமி’ என்றே அறியப்படுகிறார். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர். இலங்கை இன அழிப்புப் போருக்குப் பின்னர் ஈழ மக்களுக்காக சர்வதேச அளவில் ஓங்கி ஒலிக்கும் கோபக் குரல்!

செம்மொழி மாநாட்டுக்கு எதிராக இவர் கொளுத்திப்போட்ட பட்டாசுகள் வெடித்து அடங்குவதற்குள், ‘மகிந்த ராஜபசே, கோத்தபய வரிசையில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், கருணாநிதி ஆகிய மூன்று பேரும் போர்க் குற்றவாளிகளே. இவர்களிடமும் ஐ.நா. விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும்’ என்று அதிரடி அறிக்கைவிட்டிருக்கிறார்.

இந்த வார விகடனில் வெளியாகியுள்ள அவரது பேட்டி:

“இந்தியாவுக்குள் உங்களை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதே… என்ன காரணம்?”

“மாநில முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக உள்துறை, இந்திய அரசைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நானும் பார்வதி அம்மாளைப்போல எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறேன்.

இலங்கையில் ராஜபக்சேவின் தமிழின அழிப்புப் போரில் இந்திய நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்து வந்தேன். இருண்ட மேகம் தமிழர்களைச் சூழ்ந்த வேளையில், துயர் துடைக்க கருணாநிதி எதுவுமே செய்யவில்லை. கவலையோடு ஏதாவது செய்யுங்கள் என்றேன்.

ஆனால், கருணாநிதிக்கு சொக்கத் தங்கம் சோனியா காந்தியின் கோபத்துக்கு தான் ஆளாகிவிடக் கூடாது என்ற ஒரே கவலை மட்டுமே இருந்தது. அதன் விளைவுதான், அந்தக் கடிதம். தமிழர்களைக் கொல்லும் ராஜபக்சேவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்; விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது.”

“உங்கள் நண்பர் சீமான் சிறையில் இருக்கிறாரே?”

“மீனவர்களுக்காகக் குரல் கொடுத்ததற்காகத் தம்பியைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதன் பின்னர், இரண்டு முறை சிங்களக் கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை வெடிவைத்துத் தகர்த்திருக்கிறது.

இப்போது மிகத் தந்திரமாக யாழ்ப்பாண மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் சதி நடந்துகொண்டு இருக்கிறது. இரு நாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகச் செய்திகள் வெளியாகின்றன.

பிரச்னை இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலானதா? இலங்கை அரசுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையிலான பிரச்னையை இவர்கள் இரு நாட்டுத் தமிழ் மீனவர்களுக்கு இடையிலான பிரச்னையாகத் திசை திருப்புகிறார்கள். அதற்கு இடைஞ்சலாக இருப்பார் என்பதால்தான், தம்பி சீமானை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.”

“செம்மொழி மாநாட்டுக்கு உங்களை அனுமதிக்கக் கூடாது என்று கடிதம் எழுதுகிற அளவுக்கு உங்களுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் இடையில் என்ன முரண்பாடு?”

“எல்லாத் தமிழர்களையும்போல நானும் ஆரம்பத்தில் கலைஞரை மிகவும் நேசித்தேன். அவர் எழுத்துக்களை விடாமல் படித்தேன். ஆனால், முதலாம் ஈழப் போரின்போதுதான் இவரின் சுயநல அரசியலைப் புரிந்துகொண்டேன்.

அவருக்கு, தமிழர்கள் பற்றியோ, தமிழ் மொழிபற்றியோ எந்தக் கவலையும் இல்லை. செம்மொழி மாநாட்டைப் பொறுத்தவரையில் நான் ஏதோ செம்மொழி மாநாட்டுக்கு வருகிறேன்… வருகிறேன் என்று வாசலில் போய் நின்றதுபோலவும், கருணாநிதி என்னைத் துரத்திவிட்டதுபோன்றும் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்.

விருந்து உண்ணுவதில்கூட மானம் பார்க்கிற தமிழன் நான். உலக அளவில் தனக்கு நேர்ந்துள்ள அவப் பெயரைப் போக்க, இனக் கொலை நடந்த ஓர் ஆண்டுக்குள் செம்மொழி பெயரில் இந்த மாநாட்டைத் தன் குடும்ப மாநாடாக நடத்தி முடித்திருக்கிறார். ஆனால், தன் மீது விழுந்த களங்கத்தை மாநாடு நடத்தியோ, மயிலாட நடத்தியோ கழுவ முடியாது என்பது முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு இன்னும் விளங்கவில்லை. இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட உடனே முதன்முதலாக அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவன் நான். செம்மொழி மாநாடு நடந்த அதே கோவையில், பல தடைகளைத் தாண்டி டாக்டர் கிருஷ்ணசாமி ஏற்பாடு செய்த மாநாட்டிலும், மதுரையில் நாம் தமிழர் மாநாட்டிலும் பேசினேன்.

புது டெல்லியில் நடைபெற்ற புலம்பெயர்ந்த இந்தியர்களின் மாநாடான ‘பிரவசி பாரதிய திவாஸ்’ மாநாட்டுக்கு எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலத்தில் இந்தியாவின் பங்கைச் சுட்டிக்காட்டி, நான் நிராகரித்தேன். இப்படி எதிர்ப்புத் தெரிவித்த என்னை அவமானப்படுத்தும் நோக்கில், வழக்கம் போலக் கடிதம் எழுதினார் கருணாநிதி. மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்தவிதமான தனிப்பட்ட பிரச்னைகளும் இல்லை.”

“பிரபாகரன்தான் என் தலைவர் என்கிறீர்கள், அதற்கு என்ன காரணம்?”


“எனக்கு மட்டுமல்ல… உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்தான்.

தலைவர் பிரபாகரனை இரு முறை வன்னியில் சந்தித்துள்ளேன். ஈழத் தமிழர்களைப்பற்றியும் உலகத் தமிழர்கள்பற்றியும் நீண்ட நேரம் உரையாடி னோம். அவரிடமிருந்து விடைபெறும்போது, தமிழ், தமிழர் நலன் குறித்த தெளிந்த சிந்தனையும் தெளிவான பார்வையோடும் நான் வெளியே வந்தேன்.

பிரபாகரன் எனக்கு ஒரு வழிகாட்டி. சுருக்கமாகச் சொல்லப்போனால், தமிழினத்தின் காவலன் பிரபாகரன். தமிழர் சரித்திரத்தில், 1,000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அவரைப் போன்ற தீர்க்கதரிசனம் மிக்க தலைவர் தோன்றுவார். தமிழர் சரித்திரத்தில் ஈடு இணையற்ற மாபெரும் தலைவர் அவர்!”

“30-க்கும் மேற்பட்ட நாடுகள், புலிகள் அமைப்பைத் தடை செய்திருக்கும் நிலையில், மலேசியாவில் ஓர் அரசுப் பதவியில் இருக்கும் உங்களது பேச்சு, மலேசிய அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தாதா?”

“கடந்த காலங்களில் ‘தீவிரவாதம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, பல சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் நசுக்கப்பட்டதை நாம் அறிவோம்.

அயர்லாந்து புரட்சி இயக்கம், விடுதலைப் புலிகள் இயக்கம், பி.எல்.ஓ. எனப்படும் பாலஸ்தீன சுதந்திர இயக்கம், இப்படிப் பல சுதந்திரப் புரட்சி இயக்கங்களை அவ்வாறுதான் சித்திரித்து ஒடுக்கப்பார்த்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய விடுதலை இயக்கம். சிங்கள இனவெறி அரசின் கொலை வெறியாட்டத்தில் இருந்து, இலங்கையில் ஒரு தேசிய இனமான தமிழர்களைக் காப்பாற்றத் தொடங்கப்பட்ட இயக் கம். அவ்வியக்கம், தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவே விளங்கியது. ஈழத் தமிழர்கள் மட்டும் இன்றி, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு காவல் அரணாக நம்பிக்கையை ஏற்படுத்தியது விடுதலைப் புலிகள் அமைப்புதான்.

நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்தே, தமிழர்கள் மட்டுமல்லது, இந்தோனேஷியாவின் ஆச்சே பகுதி மக்கள், பாலஸ்தீனியர்கள் என்று உரிமைக்காகப் போராடும் மக்களுக்காகப் போராடுபவனாகவே இருந்து வந்திருக்கிறேன். இப்போது அரசியலுக்கு வந்து, பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பதவியில் உட்கார்ந்து இருக்கிறேன் என்பதற்காக எனது கொள்கைகளை, எனது போராட்டத்தைக் கைவிட்டுவிட முடியாது!”

“கே.பி. கைது, ஈழ அகதிகள் விவகாரங்களில் கொண்டுள்ள அணுகுமுறை போன்றவற்றை வைத்துப்பார்க்கும்போது, மலேசிய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று தெரிகிறதே?”

“மலேசியாவில் ஆட்சியில் இருக்கும் அரசும் இனவாத அரசே. அந்த வகையில், சுதந்திர இயக்கங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது அதிசயம் இல்லை. மலேசிய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இணக்கப்பாடின்றி, நெருங்கிய ஒத்துழைப்பு இன்றி, கே.பி-யின் கைது மலேசியாவில் நிகழ்ந்திருக்காது.

பல விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது மலேசிய அரசு. அவ்வாறு நாடு கடத்தப்படும் புலி உறுப்பினர்களை, இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது, சித்ரவதைகள் செய்கிறது. தமிழ் சுதந்திர இயக்கங்களை ஒடுக்குவதில், இரண்டு அரசுகளும் மிகக் கவனமாக நடந்துவருகின்றன.

இன்று வரையிலும் சுமார் 2,000 தமிழ் அகதிகள், மலேசியாவின் குடிநுழைவுத் துறை தடுப்பு முகாம்களில் உள்ளனர். அண்மையில்கூட, சுமார், 75 அகதிகள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளனர்.”

“இந்திய, தமிழக அரசுகளையும், சோனியாவையும் நீங்கள் விமர்சிப்பது, மலேசிய-இந்திய உறவுகளைப் பாதிக்காதா?”

“மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே போன்று மன்மோகன் சிங், சோனியா காந்தி, ப.சிதம்பரம், கருணாநிதி ஆகியோரும் போர்க் குற்றவாளிகளே. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழு, தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக் கொடுமைகள்பற்றி விசாரிக்கும்போது இவர்களையும் விசாரிக்க வேண்டும்.

உங்களுக்குத் தெரியும், ஈழப் போரில் நிகழ்ந்த கொடுமைகளைக் கண்டு, நான் சில தலைவர்களைக் கேள்வி கேட்டதற்கே, எனக்கு இந்தியாவுக்குள் செல்லத் தடை விதித்துள்ளனர். கண்டிப்பாக, மலேசிய அரசுக்கு என் நடவடிக்கைகள் எரிச்சலைக் கிளப்பியிருக்கும்தான். அதைப்பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுதான் என் நோக்கம்.”

“உங்கள் மாநிலத்துக்கு வந்த இந்தியத் தூதரை நீங்கள் சந்திக்க மறுத்து அவமதித்தது சரியா?”

“எனக்குத் தடை விதித்த இந்திய அரசின் அதிகாரிகளுக்கு நான் மரியாதை கொடுப்பது அவசியம் இல்லை என்று நான் கருதுகிறேன். சமீபத்தில், இந்தியத் தூதர் விஜய் கோகல்லே அவர்களைச் சந்திக்க நான் மறுத்துவிட்டேன். நான் என்ன நினைக்கிறேன் என்றால், மலேசியாவில் உள்ள இந்திய அரசின் அதிகாரிகள் இந்திய அரசாங்கத்தின் பிரசார சாதனங்கள், அவ்வளவுதான்.”

“ஐ.நா. விசாரணைக் குழுவின் விசாரணைகள் சரியான வகையில் நடத்தப்படும் என்று கருதுகிறீர்களா?”

“இலங்கையில் நிகழ்ந்த கடும் யுத்தத்தை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது. ஆனால், இன்று பல நாடுகள், மனித உரிமைக் குழுக்கள், தனி நபர் களின் தொடர் அழுத்தத்தால், இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் விசாரணைக் குழு ஒன்றை ஐ.நா. அமைத்துள்ளது. அதன் நடவடிக்கைகள், விசாரணைகள் எந்த அளவுக்கு நடுநிலையாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், இலங்கையில் நிகழ்ந்தது இன அழிப்பு நடவடிக்கைதான் என உலக நாடுகளுக்கும், தலைவர்களுக்கும் புரியவைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. நாங்களும் இதற்கான வேலை களை ஆரம்பித்துவிட்டோம்!”

“இந்திய அரசு ஈழத் தமிழர் விவகாரத்தில் மட்டுமல்லாது எல்லா தமிழர்கள் விவகாரத்திலும் இப்படித்தான் நடந்துகொள்வ தாகக் குற்றம் சாட்டினீர்களே, அது ஏன்?”

“மலேசியாவில் வசித்தாலும் எங்கள் வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. எங்களின் மூதாதையர்களில் பலர், இரண்டாம் உலகப் போரில் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து போராடியவர்கள்.

ஆனால், இந்திய அரசாங்கம் மலேசியத் தமிழர்களை எப்போதோ மறந்துவிட்டது. எங்கள் துன்பங்களை இந்திய அரசு கண்டுகொண்டதே இல்லை. அதிலும் குறிப்பாக, வட இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய நடுவண் அரசு, தமிழர்கள் விவகாரங்களில், அது மலேசியத் தமிழராகட்டும், ஈழத் தமிழராகட்டும், ஓர் அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கிறது.

ஆஸ்திரேலியாவில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டால் அலறித் துடிக்கும் இந்திய அரசின் இதயம், தாக்கப்படுபவன் தமிழன் என்றால் மௌனமாகிவிடுகிறது. கருணாநிதியோ தனது குடும்ப நலனுக்காக தமிழர்களின் நலன், அவர்களின் எதிர்காலம் எல்லாவற்றையும் காவு கொடுத்துவிட்டார். இப்போதைக்கு, தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம், மறுமலர்ச்சி கண்டிப்பாகத் தேவை என்பதுதான் என்னுடைய கருத்து. அதன் பிறகுதான், தமிழீழத்தைப் பற்றிய விவாதங்கள் குறித்து நாம் பேச முடியும்!”

நன்றி: ஆனந்த விகடன்

முழுக்க முழுக்க உளறல்… ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்கள்… கேபிக்கு மன்னிப்பே கிடையாது! – வைகோ

August 25, 2010 by envazhi  
Filed under General

முழுக்க முழுக்க உளறல்… ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்கள்… கேபிக்கு மன்னிப்பே கிடையாது! – வைகோ

சென்னை: கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் சமீபத்தில் கூறியுள்ள அனைத்தும் உளறல் பேச்சு… ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்கள். அவருக்கு மன்னிப்பே கிடையாது,” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை:

இலங்கைத் தீவில் போர்நிறுத்தம் ஏற்படாமல் போனதற்கு வைகோதான் காரணம் என்று, சிங்கள அரசின் விருந்தாளியாக தற்போது கொழும்பில் இருக்கின்ற குமரன் பத்மநாதன், என் மீது குற்றம் சாட்டி இருக்கிறார்.

வைகோவின் தேர்தல் பேராசையால், விடுதலைப்புலிகள் பலியாக நேர்ந்தது என்று, ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார். இப்படிக் கூறிய குமரன் பத்மநாதன், 2002ஆம் ஆண்டு இறுதியில், சர்வதேசப் பொறுப்பில் இருந்து பிரபாகரனால் நீக்கி வைக்கப்பட்டவர். பகைவர்களுக்குக் கையாளாகி விடக்கூடாதே என்ற நிலையில், 2008ஆம் ஆண்டில், சர்வதேச ஊடகத் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டவர்.

2009 மே 18ஆம் தேதி, பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று அறிவித்துவிட்டு, மூன்றாம் நாள் பிரபாகரன் இறந்து விட்டார். இனி விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நானே தலைவர் என்றும், தன்னைத்தான் பிரபாகரன் தலைவர் பொறுப்பை வகிக்கச் சொன்னார் என்றும், ஒரு உலக மகா பொய்யைச் சொல்லி, தனக்குத்தானே முடிசூடிக் கொண்டவர்.

ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்…

இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்படும், தமிழ் ஈழ மக்களின் போராட்ட வரலாற்றில், ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏற்பட்ட துரோகப் படலத்தின் தொடர்ச்சியாக, தற்போது குமரன் பத்மநாதன் தமிழ் ஈழ விடுதலைக்கு எதிராக, கொலை பாதகன் ராஜபக்சே அரசின் கைக்கூலியாக, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்கிறார்.

அவர் தனது பேட்டியில், தமிழ் ஈழம் என்பது அழிந்து போன லட்சியம் என்றும், விடுதலைப்புலிகள் சாதாரண மக்கள் மீது வன்முறையை ஏவி, துன்பம் விளைவித்ததற்காகத் தான் வருந்துவதாகவும், அதற்காக இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தாம் மன்னிப்புக் கோருவதாகவும் கூறி உள்ளார்.

இலங்கையில் போரை நிறுத்துவதற்கு, தி.மு.க. தரப்பிலே முயற்சித்ததாகவும், இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அதற்கான ஒரு திட்டத்தைச் சொன்னதாகவும், அந்தத் திட்டத்தின்படி, விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரண் அடைகிறோம் என்று அறிவிக்க வேண்டும். சுதந்திரத் தமிழ் ஈழம் என்ற குறிக்கோளைக் கைவிட்டு, மாற்று அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்க வேண்டும் என்றும், அப்படி ஒரு அறிவிப்பை சிதம்பரமே தயாரித்து இருந்ததாகவும் பத்மநாதன் கூறி உள்ளார்.

இந்தத் திட்டம் குறித்து, வைகோவுக்கும், பழ. நெடுமாறனுக்கும் தெரிவிக்கக் கூடாது என்றும், தேர்தல் காலமாதலால், போர் நிறுத்தம் ஏற்பட்டால் காங்கிரஸ் தி.மு.க.வுக்குப் பெயர் வந்துவிடும் என்றும், அதனால், இந்தத் திட்டத்தைப் புலிகள் ஏற்கவிடாமல் தடுக்க முயல்வோம் என்றும், புலிகளின் அரசியல் பிரிவுச் செயலாளர் நடேசனிடம் கூறப்பட்டதாகவும், நடேசன் அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனிடம் கூறியதால், மகேந்திரன் என்னிடம் கூறி விட்டாராம்.

தமிழ் ஈழ விடுதலைக் கோரிக்கையைப் புலிகள் கைவிட்டால், விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் ஆதரவு தர மாட்டோம் என்று நடேசனிடம் நான் கூறி விட்டதால், இந்தப் போர் நிறுத்த முயற்சி கைகூடாமல் போனதாகவும், பத்மநாதன் என் மீது பழி சுமத்தி உள்ளார்.

பத்மநாதன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய். போர்நிறுத்தம் ஏற்பட்டால், என்னைவிட, பழ.நெடுமாறனை விட நிம்மதி அடைகிறவர்கள் யாரும் இருக்க முடியாது. எவ்வகையிலாவது போர்நிறுத்தம் ஏற்பட்டு விடாதா என்று நாங்கள் துடித்தோம்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், புலிகள் அமைப்புக்கும், அவர்கள் அங்கே எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைப் பற்றி, எந்தக் காலத்திலும் நாங்கள் யோசனை கூறியது கிடையாது. ஈழத்தின் நிலைமைக்கு ஏற்ப, அம்மக்களின் நலனுக்கு ஏற்ற முடிவுகளை, பிரபாகரன் மேற்கொள்வார்.


முரண்பட்ட பேட்டி…

பத்மநாதன் கொடுத்த பேட்டியில், அவரது கூற்றையே அவர் முரண்பட்டு இன்னொரு இடத்தில் சொல்கிறார்.

2008 டிசம்பர் 31இல் பிரபாகரன் தன்னோடு தொடர்பு கொண்டதாகவும், ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, முக்கியத் தலைவர்களை வெளிநாட்டுக்கு வெளியேற்றி, சில வெளிநாடுகளின் உதவியோடு போர்நிறுத்தம் ஏற்படுத்தும் யோசனையைத் தாம் கூறியதாகவும், அதற்கு பிரபாகரன், இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிராகரித்து விட்டதாகவும் கூறுகிறார்.

ஆயுதங்களைக் கீழே போடவே ஒப்புக்கொள்ளாத பிரபாகரன், சிதம்பரத்தின் யோசனைப்படி ஆயுதங்களையும் கீழே போட்டு, சரண் அடைந்து தமிழ் ஈழத்தையும் கைவிட்டு விட, கனவிலாவது உடன்படுவாரா?

நான் இதில் எதிர்ப்புத் தெரிவித்து, அதனால் முயற்சி நின்று போனதாக அறிவுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள்.

அதே பேட்டியில், இன்னொரு இடத்தில், பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி, தன்னிடம், தனது தந்தை, தாய், தங்கை, தம்பியைப் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யச் சொன்னதாகவும், ஹெலிகாப்டர் மூலமும், பின்னர் கப்பல் மூலமும் அவர்களைத் தப்புவித்து, வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல, ஒரு ஆசிய நாட்டுடனும், இரண்டு ஆப்பிரிக்க நாடுகளுடனும் தான் திட்டமிட்டதாகவும், நார்வேயில் உள்ள நெடியவன் அதற்குப் பணம் கொடுக்காமலும், புலிகளின் வெளிநாட்டு விமானப்பிரிவுத் தலைவர் அச்சுதன், விமானிகளை அனுப்பாமல் கெடுத்து விட்டார்கள் என்றும் கூறி உள்ளார்.

ஈழத்தமிழ் மக்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு தப்பிச் செல்ல பிரபாகரன் சம்மதிக்க மாட்டார் என்று சொல்லிவிட்டு, பிறிதொரு இடத்தில் கடைசியாக தப்பிச் செல்ல வருவார் என்றும் கூறி உள்ளார்.

ராஜபக்சேயின் விருந்தாளி கேபி…

குமரன் பத்மநாதன் கோலாலம்பூரில் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, விமானத்தில் வசதியுள்ள உயர்வகுப்பில் தான் பயணித்ததாகவும், கொழும்பு சென்றவுடன் ராஜபக்சேயின் சகோதரன், தமிழ் ஈழ மக்களின் படுகொலைக்குக் காரணமான கொடியோருள் ஒருவனான ராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு ராஜபக்சே தம்மை அன்போடு கைகுலுக்கி வரவேற்று கேக்கும், தேநீரும் தந்து உபசரித்ததாகவும், மிக்க கனிவோடு தம்மிடம் பேசியதாகவும், அதன்பின் தான் ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டதாகவும், அதிகாரி ஒருவர் தனக்கு எந்நேரமும் உதவியதாகவும், உலகில் யாருடனும் பேசும் தொலைபேசி வசதியும், தொடர்புகொள்ள மின் அஞ்சல் வசதியும் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.

சிங்கள அரசுக்கும், தனக்கும் பரஸ்பரப் புரிதலும், நம்பிக்கையும், நட்பும் வளர்ந்துகொண்டே வருவதாகவும் சொல்லி உள்ளார். கோத்தபயவிடம், யுத்தம் நீண்ட காலத்துக்கு முன்பே யுத்தம் முடிந்து விட்டதாகக் கூறினாராம்.

லட்சியத்தைக் கைவிடாத பிரபாகரன்….

கடல்புலிகளின் தலைவர் சூசை, அரசியல் பிரிவுச் செயலாளராக இருந்த தமிழ்செல்வன், நிதிப்பிரிவுப் பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோர் அமைப்பிலே ஆதிக்கம் செய்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார். ஆனால், 2002 கடைசியில் பிரபாகரன் தன்னைப் பொறுப்பில் இருந்து விலகச் சொன்னதாகவும் ஒப்புக் கொண்டு உள்ளார்.

இமாலய ஆபத்துகளே தன்னைச் சூழ்ந்தாலும், பிரபாகரன் இலட்சியத்தைக் கைவிட மாட்டார், சரண் அடைய மாட்டார் என்பதை, புலிகளின் எதிரிகளும் ஒப்புக் கொள்வார்கள்.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி, பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரையில் திட்டவட்டமாக அவர் ஒன்றை உலகத்துக்கு அறிவித்தார்.

“பெரிய ஆயுத பலம் கொண்ட பாரிய சக்திகளை எதிர்த்து நாங்கள் நிற்கிறோம். எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும், எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும், எத்தனை சக்திகள் எதிர்கொண்டாலும், தமிழரின் சுதந்திர விடிவுக்காகத் தொடர்ந்து நாம் போராடுவோம். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரம் ஆகிவிட்ட எமது மாவீரர்களின் வழியே சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோமாக! புலிகளின் தாகம், தமிழ் ஈழத் தாயகம்.”

தமிழ் ஈழ விடுதலையைத் தன் உயிரினும் மேலான இலட்சியமாகக் கொண்டு இருந்த பிரபாகரனை, அதைக் கைவிடச் சொல்லி, இந்திய அரசினர் யோசனை சொன்னார்களாம்.

போர் நிறுத்தம் பற்றி இந்திய அரசு கூறவில்லையே…

விஸ்வரூபம் எடுக்கின்ற கேள்வி யாதெனில், இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும் என்று உலகின் பல நாடுகள் வேண்டுகோள் விடுத்து, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், இந்திய அரசு ஏன் ஒப்புக்குகூட போர் நிறுத்தம் என்ற சொல்லை இலங்கை அரசிடம் கூறவில்லை?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் போர் நிறுத்தத்துக்கு ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 48 மணி நேரத்தில், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்து விட்டு வந்தபோது, பிரதமர் வீட்டு வாயிலில் பத்திரிக்கையாளர்கள் இந்தியப் பிரதமர் போர் நிறுத்தம் வேண்டினாரா? என்று கேட்டனர்.

ஆத்திரத்தோடும், எரிச்சலோடும், போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது; விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என்று உடம்பை முறுக்கிக் கொண்டு திமிராகப் பேசும் தைரியம் அந்த அதிபருக்கு எப்படி வந்தது? இந்திய அரசு கொடுத்தத ஊக்கம்தான் காரணம்.

போரை நடத்தியது இந்தியாவே…

இதைத்தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் சொல்லி வருகிறேன். இலங்கையில், சிங்கள அரசு புலிகளுக்கு எதிராக நடத்தும் போரை இயக்கியதும், திட்டமிட்டதும், ரடார்களும், ஆயுதங்களும், ஆயிரம் கோடி வட்டி இல்லாத பணமும் கொடுத்தது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான். பிரதமரே இலங்கைக்குத் தாங்கள் ஆயுத உதவி செய்ததை ஒப்புக்கொண்டு, 2008 அக்டோபர் 2 இல் எனக்கு கடிதம் எழுதி உள்ளார்.

வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், தமிழக முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டு வாசலில், போர் நிறுத்தத்தை இந்தியா கேட்குமா? என்று செய்தியாளர்கள் வினவியதற்கு எரிச்சலோடு பதில் சொன்னார்: ‘அது எங்கள் வேலை அல்ல; சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் நடக்கும் சண்டை’ என்றார்.

2009 பிப்ரவரி 18 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் அதே பிரணாப் முகர்ஜி, அப்பாவி தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்கிறார்கள் என்று அக்கிரமமான குற்றசாட்டையும் கூறினார்.

இந்திய இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் 2007 இல் செய்யப்பட்டது. இந்தியக் கடற்படையின் உதவியோடு விடுதலைப் புலிகளுக்கு வந்த எட்டுக் கப்பல்களை தாங்கள் கடலில் மூழ்கடித்ததாக இலங்கையில் கடற்படைத் தளபதி வசந்த கரனன்கொட 2009 மார்ச்சில் உண்மையைப் போட்டு உடைத்து விட்டார்.

ராஜபக்சே அறிவித்த ஒரு மூவர் குழுவும், மன்மோகன் சிங் அறிவித்த மூவர் குழுவும், டெல்லியில் ஐந்து முறையும் கொழும்பில் மூன்று முறையும் சந்தித்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி வெற்றி பெறத் திட்டமிட்டன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே விடுதலைப் புலிகளைப் போரில் முடித்துவிட வேண்டும் என்று இந்திய அரசு விரும்புவதாக, இலங்கை அமைச்சர் ஒருவரே கூறிவிட்டார்.

இலங்கை நாடாளுமன்றத்தில், இந்திய உதவியால்தான் புலிகளைத் தோற்கடித்தோம் என்றே அதிபர் ராஜபக்சே அறிவித்தார்.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, பிஞ்சுக் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் உட்பட படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய அரசும் ஒரு காரணம். ராஜபக்சேவின் போர்க்குற்றத்தில், இந்தியாவின் காங்கிரஸ் அரசுக்கும் பங்கு உண்டு என்று தொடர்ந்து நான் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி வருகிறேன்.

அதற்காக என் மீது தேசத் துரோக குற்றச்சாட்டில் இரண்டு வழக்குகளை கருணாநிதி அரசு ஏவி உள்ளது.

நானா பதவி ஆசைப் பிடித்தவன்…?

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இரத்தப் பழிக்கு இந்திய அரசு ஆளாகி விட்டது; குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும்; எங்கள் எதிர்காலச் சந்ததிகள் இன்றைய இந்திய அரசை மன்னிக்க மாட்டார்கள் என்று எழுத்து மூலமாக பிரதமரிடம் குற்றம் சாட்டி உள்ளேன்.

இந்தத் தமிழ் இனத் துரோகச் செயலுக்கு, கலைஞர் கருணாநிதி உடந்தையாகச் செயல்பட்டார் என்பதே என் குற்றச்சாட்டு.

இந்தப் பழியில் இருந்து தப்பிக்கவும், என் மீதே பழி சுமத்தவும், கடந்த ஆண்டிலேயே உளவுத்துறையின் ஏற்பாட்டில், பத்மநாதன் இப்போது அவிழ்த்து விட்டு உள்ள கோயபல்ஸ் பொய்களை அப்போதே சொன்னார்கள். அது எடுபடவில்லை.

அனைத்து உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக இராஜபக்சே நிறுத்தப்படுவார் என்று கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ள என்னைக் களங்கப்படுத்த, இராஜபக்சேவின் கைக்கூலி ஆகிவிட்ட குமரன் பத்மநாதனைத் தற்போது பயன்படுத்தி உள்ளார்கள்.

இதில் வேதனை என்னவெனில், நாடாளுமன்றத் தேர்தலில் பதவி ஆசைக்காக நான் போர் நிறுத்தத்தைத் தடுத்தேன் என்று குமரன் பத்மநாதன் உளறி இருக்கிறார். மத்திய அமைச்சர் பதவிகள் என்னை நாடிவந்தபோதும் நிராகரித்தவன், 2004ஆம் ஆண்டில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை நிராகரித்தவன் நான்.

என்ன பேசினார் நடேசன்?

2009ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி நடேசன் என்னிடம் பேசும்போது, தொகுதி உடன்பாடு முடிந்துவிட்டதா அண்ணா? என்று கேட்டார்.

‘கொஞ்சம் நெருடல் இருக்கிறது. ஆனால், அணிமாற மாட்டேன்; தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்’ என்றேன்.

அதற்கு அவர் ‘நீங்கள் போட்டியிட சிவகாசித் தொகுதி ஒதுக்கப்படுகிறதா?’ என்றார்.

‘தற்போது விருதுநகர் தொகுதி அது. ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படுகிறது’ என்றேன்.

‘நீங்கள் ஒருவர் நாடாளுமன்றத்துக்குச் சென்றால், ஐநூறு எம்.பி.க்கள் எங்களுக்காகச் செல்வதாக நினைப்போம். எனவே, நீங்கள் போட்டியிட வேண்டும்’ என்றார்.

‘நான் யோசிக்கிறேன்’ என்றேன்.

அன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் தொடர்பு கொண்டார். ‘அண்ணா, பலத்த சண்டை நடக்கிறது. மிகவும் சிரமப்பட்டு சேட்டிலைட் போனில் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு நீங்கள் அவசியம் போட்டியிட வேண்டும் என்று தலைவர் பிரபாகரன் விரும்புகிறார்’ என்று குறிப்பிட்டார்.

‘இது குறித்து யோசித்து முடிவு எடுப்பேன்’ என்றேன்.

அன்று நடந்த இந்த உரையாடல் அருகில் இருந்த என் இயக்க முன்னோடிகளுக்குத் தெரியும்.

மே 10ஆம் தேதி அன்று கடற்புலிகளின் தலைவர் சூசை என்னிடம் பேசினார். ‘காயம்பட்ட தமிழ் மக்களின் புண்களில் புழுக்கள் நெளிகின்றன. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் சிலரை இந்திய அரசு ஒரு குழுவை அனுப்பிப் பார்வையிடச் செய்யுங்கள்’ என்றார்.

மே 11 கடைசி நாள் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சொன்னேன். ‘அடுத்த நான்கு நாட்களுக்குள் கோரமான போரை சிங்கள அரசு நடத்தப் போகிறது. இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்கத் திட்டமிட்டு விட்டனர். இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழர்களை அழிக்க சிங்கள அரசு மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு ஆயத்தமாகி விட்டது’ என்று குறிப்பிட்டேன்.

மே 12 அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் காடன் பிரௌன் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உள்ளிட்டத் தலைவர்களுக்கு தமிழர்களின் துயரத்தை மின் அஞ்சலில் வடித்துப் போரை நிறுத்த மன்றாடி செய்தி அனுப்பினேன்.

நான் எந்தப் பதவியிலும் இல்லை. என் மனதில் ஏற்பட்ட பதற்றத்தால் நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்றே செயல்பட்டேன்.

மே 13 வாக்குப் பதிவு முடிந்து இரவு பத்தே கால் மணிக்கு நடேசன் என்னிடம் பேசினார். ‘ஜெயித்துவிடலாமா? அண்ணா’ என்றார்.

‘என் தொகுதியில் கோடிக்கணக்கில் ஆளும் தரப்பு பணத்தைக் கொட்டிவிட்டது. சொற்ப வித்தியாசத்தில் ஜெயிக்கலாம்’ என்றேன். பிரபாகரன், நடேசன் உள்ளிட்டோரின் நிலைமையைப் பற்றிக் கவலைப்பட்டபோது ‘பயப்படாதீங்க அண்ணா! நாங்க வெல்வோம் அண்ணா!’ என்றார்.

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரச்சொல்லி, நடேசனையும் அவரது மனைவியையும், புலித்தேவனையும் சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது.

துரோகிகள் கேபி, கருணாவும் இயேசுவைக் காட்டிக் கொடுத்த ஜூடாஸும்!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எதிரிகளுக்குப் பிடித்துக் கொடுத்தான் ஜூடாஸ். 30 வெள்ளிக் காசுகளுக்காக இத்துரோகத்தைச் செய்த ஜூடாஸ், தனது குற்றத்தை உணர்ந்தவனாக உள்ளம் உடைந்து, முப்பது காசுகளை வீசி எறிந்துவிட்டு, மரக்கிளையில் கழுத்தில் சுருக்கிட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டு மடிந்தான்.

ஆனால், தன் துரோகத்தை உணர்ந்து வருந்தி தற்கொலை செய்து கொண்டான் என்று உலகில் எவரும் சொல்வது இல்லை.

தன் தவறை உணர்ந்த ஜூடாஸுக்கே மன்னிப்பு இல்லை என்றால், குமரன் பத்மநாதன், கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது.

துரோகிகளும், எதிரிகளும் தூற்றினால்தான் நீ சரியான பாதையில் போவதாக அர்த்தம் என்று தந்தை பெரியார் சொன்னார்.

ராஜபக்சே கூட்டம் வைகோவையும், நெடுமாறனையும் தூற்றுகின்றபோது அவர்கள் சரியான பாதையில் செல்கிறார்கள் என்பதை, தன்மானம் உள்ள தமிழர்கள் நன்கு அறிவார்கள்…

பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற தகவல் கிடைத்ததும் நான் தனியறையில் கண்ணீர் விட்டதும், கதறியதும், அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் தவித்ததும் உண்மை. அதை நான் மறுக்கவில்லை.

ஆனால் இது இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட வதந்தி, சதி என்று 24 மணிநேரத்தில் உறுதியான தகவல் கிடைத்ததும் தலைவர் இருக்கிறார், நலமுடன் இருக்கிறார் என்று சொன்னோம். இதில் என்ன குற்றம் கண்டுபிடிக்கிறார் கே.பி.?”

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் வைகோ.

-என்வழி

பிரபாகரனின் ‘வீரமரணம்’… இந்தியாவின் ‘போர் நிறுத்த முயற்சி’… – கேபி சொல்லும் புதிய ‘உண்மைகள்’!

August 24, 2010 by envazhi  
Filed under General

இறுதி வரை போரிட்டு ‘வீரமரணம்’ அடைந்தார் பிரபாகரன்! – சொல்கிறார் கேபி

கொழும்பு: இலங்கை ராணுவத்திடம் பிரபாகரன் சரணடையவில்லை. அவர் தனது படையுடன் இறுதிவரை தீரமாகப் போரிட்டு ‘வீரமரணம்’ அடைந்தார், என்று கூறியுள்ளார் கேபி எனும் குமரன் பத்மநாதன்.

இறுதிப் போரில் புலிகள் தோற்று, தலைவர் பிரபாகரனும் களத்தில் ‘இல்லை’ என்றான சூழலில், புலிகள் இயக்கத்தின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டவர் கேபி. ஆனால் அடுத்த சில தினங்களில் இலங்கை புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார். இலங்கை கொண்டு வரப்பட்டு ரகசிய விசாரணை செய்யப்பட்டார். கொஞ்ச காலம் அவரைப் பற்றிய பேச்சே இல்லாமல் இருந்தது.

ஆனால் அவர் இலங்கை அரசுக்கு ஆதரவாக தன்னை மாற்றிக் கொண்ட பிறகு, அவரைப் பற்றிய செய்திகளும், அவர் அளிக்கும் பேட்டிகளும் இலங்கை ஊடகங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இப்போது வடக்கு கிழக்கு புணரமைப்பு அமைப்பின் செயலராக உள்ள கேபி, உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் நிதி பெற்று அதனை, வடக்கு கிழக்கு புணரமைப்புக்காக செலவிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு விரைவில் இலங்கை அரசு பிரிகேடியர் அந்தஸ்து வழங்கி ஊர்க்காவல் படைக்குத் தலைவராக்கவும் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை நாளிதழ் ஒன்றுக்கு அவர் மிக நீண்ட பேட்டியொன்றை அளித்துள்ளார்.

அதில் பிரபாகரன் எப்படி ‘கொல்லப்பட்டார்’, தொலைக்காட்சியில் காட்டப்பட்டது அவர் உடல்தானா? அந்தஉடலைப் பெற்றுக் கொள்ள ஏன் உறவினர் யாரும் முன்வரவில்லை? என்றெல்லாம் மிக விரிவாகக் கூறியுள்ளார்.

ஆனால் இந்தப் பேட்டியில் அவர் முக்கியமான ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது களத்தில் இருந்த சூழலை வைத்தே பிரபாகரன் வீரமரணம் அடைந்திருக்கலாம் என்று தான் நம்புவதாகவும், தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடல் அவருடையதைப் போலத்தான் இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். அங்கே என்ன நடந்தது என்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை என்றும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். தனது அனுமானங்களை அவர் இறுதி கருத்தாக இந்தப் பேட்டியில் முன் வைத்துள்ளார்.

கூடவே, வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களைக் கடுமையாக சாடியுள்ள அவர், முதல்வர் கருணாநிதி, ப சிதம்பரம் போன்றவர்களை போர் நிறுத்தத்துக்கு முயன்றவர்களாகக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுகவுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக போர்நிறுத்த முயற்சியை வைகோ தடுத்ததாகக் கூறியுள்ளார் கேபி.

ஆனால் அந்த நேரத்தில் தமிழகத்தில் அனைவருமே போர் நிறுத்தத்தை அறிவிக்கக் கோரித்தான் பல போராட்டங்களை நடத்தி வந்தனர் என்பது முக்கியமானது.

இவற்றில் பல்வேறு பலத்த சந்தேகங்கள் உள்ளன. ஆனாலும், கேபி இன்று இலங்கை அரசின் ஊதுகுழலாக மாறி, பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்த படாத பாடுபடுவதைக் காட்டவும், ஈழ ஆதரவுத் தலைவர்களை முடிந்தவரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அவர் முயற்சிப்பதையும், திடீரென்று திமுக-காங்கிரஸின் போர் நிறுத்த முயற்சிகளைப் பற்றி புதிதாக பிரலாபிப்பதையும் காட்டவே அவரது பேட்டியை இங்கே தருகிறோம்.

கேபி பேட்டி (கேபிக்கு வாகாக ‘எடுத்துக் கொடுக்கும்’ செய்தியாளரின் கேள்விகளைத் தவிர்த்துள்ளோம்):

“பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் நான் காப்பாற்ற முயன்றேன். ஆனால் நெடியவனும் காஸ்ட்ரோவும் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை.

ஒரு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தி பிரபாகரனை நான் காப்பாற்ற திட்டமிட்டேன். இதற்காக எனக்கு 10.5 மில்லியன் டாலர் பணம் தேவைபப்ட்டது. இதை தருவதாக காஸ்ட்ரோ தெரிவித்திருந்தார். இந்தப் பணத்தை நார்வேயிலிருந்து நெடியவன் அனுப்பி வைப்பார் எனவும் கூறியிருந்தார்.

ஆனால் நெடியவன் பணத்தை அனுப்பவில்லை. எனது திட்டத்தைக் கேட்டு பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். தந்தை, தாயார் மற்றும் சகோதரன், சகோதரி ஆகியோரை எப்படியாவது வெளியில் அனுப்பி வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தார். ஆனால் நெடியவனால் அந்தத் திட்டம் நிறைவேற முடியாமல் போய் விட்டது.

எனது திட்டம் என்னவென்றால், ஒரு ஹெலிகாப்டரை எடுத்துக் கொண்டு, அதை வான் புலிகள் அமைப்பின் தலைவரான அச்சுதன் வன்னிப் பகுதிக்கு செல்வது, ஹெலிகாப்டர் மூலம் பிரபாகரன் உள்ளிட்டோரை மீட்டு கடலில் தயாராக நிறுத்தி வைக்கப்படும் கப்பலுக்குக் கொண்டு சென்று காப்பாற்றுவது என்பது.

ஆனால் நெடியவன் பணத்தைத் தராததோடு மட்டுமல்லாமல், அச்சுதனையும் தடுத்து விட்டார். இதனால் அச்சுதன் என்னுடன் வைத்திருந்த தொடர்புகளை அப்படியே துண்டித்துக் கொண்டார்.

தலைவரைக் காப்பாற்றி அந்தப் பெருமை எனக்கு வருவதை நெடியவனும், காஸ்ட்ரோவும் விரும்பாததே இதற்குக் காரணம்.

இப்படி அனைத்தும் தாமதாமாகியதால், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த சமயத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியை ராணுவம் முற்றுகையிட்டு விட்டது. இதனால் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நிலை. இதனால் பெரும் துயரத்துடன் எனது மீட்புத் திட்டங்களை கைவிடும் முடிவை எடுத்தேன்.

சூசை சொன்னது…

இறுதிப் போரின் போது கடைசி நிமிடம் வரை நான் சூசையுடன் தொடர்பில் இருந்தேன். அவர்தான் பிரபாகரனும் பொட்டு அம்மானும் தனி குழுவாகச் சென்று ராணுவத்தை ஊடறுத்து வெளியேறிவிட்டதாக கடைசி நிமிடத்தில் தகவல் கொடுத்தார். அதை நம்பித்தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் அறிவித்தேன். ஆனால் மீண்டும் சூசையுடன் தொடர்பு கொண்ட போது, பிரபாகரனின் ஊடறுப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், அவர் மட்டும் திரும்பி வந்துவி்ட்டதாகவும் கூறினார். உடன் சென்ற பொட்டு திரும்பவே இல்லையாம்.

அதன் பிறகு சூசையுடன் எனது தொடர்பு அறுந்துவிட்டது.

பிரபாகரன், பொட்டு அம்மன் உள்பட 60 பேர் இலங்கை பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளனர். பிரபாகரன் கிட்டத்தட்ட தப்பி விட்டார். ஆனால் பொட்டு அம்மனால் வர முடியவில்லை. கொல்லப்பட்டு விட்டார். இதையடுத்து ராணுவத்தின் கைக்கு பொட்டுவின் உடல் போய் விடக் கூடாது என்பதற்காக பிரபாகரனே, பொட்டு அம்மான் உடலை தீயிட்டு எரித்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

அடுத்த நாள் தொலைக்காட்சியில் பிரபாகரனின் உயிரற்ற உடலைப் பார்த்தேன். பார்த்ததும் அது பிரபாகரன் உடல்தான் என்று எனக்குத் தெரிந்து விட்டது. தனிமையில் அமர்ந்து ஓவென கதறி அழுதேன்.

எனக்கும் தெரியாது…

ஆனால் நிச்சயமாக என்ன நடந்தது என்று எனக்கும் தெரியாது. அந்த இடத்தில் நான் இல்லை. கடைசி நேரத் தொடர்புகள் அற்றுப் போய்விட்டன. ஆனால் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது தலைவர் பிரபாகரனின் உடல்தான்.

அவர் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், பொன்சேகா முன் மண்டியிட்ட நிலையில் அவரை சுட்டுக் கொன்றதாகவும் சிலர் கூறி வருவது அப்பட்டமான பொய். குறிப்பாக தமிழ் தலைவர் ஒருவரே இப்படிக் கூறியிருப்பது துரோகமானது. வேதனை தருகிறது.

ராணுவத்தின் மிக உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் பிரபாகரனின் இறுதி நேர போரைப் பற்றி மிக பெருமையாகக் கூறினார். அந்த அதிகாரி யார் என்பதை நான் சொல்ல மாட்டேன். கிட்டத்தட்ட எல்லாருக்குமே தெரிந்தவர்தான்.

நந்திக் கடல் பகுதியில் பிரபாகரனும் அவருடன் இருந்தவர்களும் மிக வீரமாகவும் கடுமையாகவும் சண்டையிட்டார்களாம். இதில் இறுதி நேரம் வரை சற்றும் பின்வாங்காமல் பிரபாகரன் சண்டையிட்டே வீர மரணம் அடைந்துள்ளார். இதை ராணுவம் உறுதிப்படுத்தியது.

பிரபாகரனின் குடும்பத்தினர் மொத்தமாக இந்த சண்டையில் இறந்துவிட்டதும் உண்மையே. சாள்ஸ் ஆண்டனி அவர்களைக் காக்க கடைசி வரை முயன்றார்.

பிரபாகரனின் மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரும் போரில் இறந்தனர். துவாரகாவும் புலிகள் இயக்கத்தில் போராளியாகவே இருந்தார். பிரபாகரன் மனைவி மதிவதனியும் இறந்துவிட்டார் என்பதே உண்மை.

பிரபாகரன் தனது மகனையும் மகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார் என்று சிலர் கூறுவதில் உண்மையில்லை. பிரபாகரன் தனது பிள்ளைகள் வெளிநாடு செல்வதை அனுமதிக்கவில்லை. அவரது குடும்பம் முழுவதும் இயக்கத்தில்தான் இருந்தது.

பிரகபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் மீது எனக்கு பாசம் அதிகம். அவனது மரணம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. அவனிடம் அடிக்கடி நான் போனில் பேசியிருக்கிறேன். கடைசி நேரத்தில் கேபி மாமாவுடன் நான் போகப் போகிறேன் என்று ஒரு சிறு பையை எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தானாம். அதை நினைக்கும்போது கஷ்டமாக இருந்தது…

பிரபாகரன் உடலை ஏன் பெற்றுக் கொள்ளவில்லை?

பிரபாகரன் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும், நான் இயக்கத்தை உயிர்ப்புடன் வைக்க தீவிர முயற்சிகள் எடுத்தேன். இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றேன். பின்னர் தலைவரின் உடலுக்கு முறைப்படி உரிமை கோருமாறு அவரது குடும்பத்தினரை கேட்டுக் கொண்டேன்.

பிரபாகரனின் சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோரைத் தொடர்பு கொண்டு உடலைப் பெற உரிமை கோருமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர்.

குறிப்பாக, பிரபாகரன் சகோதரியின் கணவர் தனது மனைவியிடமிருந்து போனை வாங்கி என்னிடம் கோபமாகப் பேசினார். இனிமேல் போன் செய்ய வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறி வைத்து விட்டார்.

இதனால் தலைவரின் உடலை யாரும் உரிமை கோர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இதையடுத்து ராணுவமே உடலை எரித்து சாம்பலை கடலில் வீசி விட்டது.

குலுங்கி அழுத வைகோ…

தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதுதான் இப்போதைய உண்மை. ஆனால் தலைவர் இருப்பதாக பிரசாரம் செய்து வருவோர் புலிகள் இயக்கத்துப் பணத்தை மனதில் கொண்டுதான் அவ்வாறு பேசி வருகின்றனர்.

தலைவர் இருந்தபோது வசூலிக்கப்பட்ட பணமும், தலைவர் இறந்த பின்னர், இருக்கிறார் என்று கூறி வசூலிக்கப்பட்ட பணமும் பெருமளவில் குவிந்திருக்கிறது. இந்தப் பணம் எல்லாம் நெடியவனிடம்தான் உள்ளது.

தலைவர் இறந்து விட்டது வைகோவுக்கு நன்றாகத் தெரியும். நான் அவரது மரணச் செய்தியை வைகோவுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தபோது வைகோ குலுங்கி அழுதார். ஆனால் மேடைகளில் தலைவர் இருக்கிறார் என்று பொய்யாகப் பேசி வருகிறார்.

திமுகவுக்கு பெயர் போய்விடக் கூடாது என்று தடுத்தாராம் வைகோ!

உண்மையில் ஈழப் போரை முடிவுக்குக் கொண்டு வர நான் மேற்கொண்ட முயற்சிகளைத் தடுத்தவர் வைகோதான். இதற்குக் காரணம், திமுகவுக்கு நல்ல பெயர் போய் விடக் கூடாதே என்பதற்காக இவ்வாறு செய்தார் வைகோ.

ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் பல்வேறு இந்தியத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டார்.

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, பாதிரியார் ஜெகத் கஸ்பார் ஆகியோருடன் அவர் தொடர்பு கொண்டார். அவர்கள் மூலம் மத்திய அரசை சமாதானப்படுத்தி, இலங்கை அரசை நிர்ப்பந்தப்படுத்தி போரை நிறுத்த முயற்சித்து வந்தார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம், பிரபாகரனையும், அவரது குடும்பத்தினரையும் மற்றவர்களையும் உயிருடன் காக்க நினைத்து முயற்சித்தார் நடேசன்.

இந்த முயற்சிக்கு டெல்லியும் இணங்கி வந்தது. காரணம், அப்போது நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு பெரும் அடி விழுந்து விடுமோ என்று அவர்கள் பயந்தனர். ஜெயலலிதா வேறு புலிகளுக்கு ஆதரவான நிலையை எடுத்ததால் அவர்களது பயம் அதிகரித்தது.

இதையடுத்து மத்திய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைத்து வந்தார். போரை நிறுத்துவதாகவும், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைவதாகவும், ஈழத்திற்கு மாற்றான அரசியல் தீர்வுக்கு சம்மதிப்பதாகவும் அறிவிக்குமாறு புலிகள் இயக்கத்திற்கு ப.சிதம்பரம் யோசனை தெரிவித்தார்.

மேலும் புலிகள் இயக்கத்திற்காக தானே ஒரு அறிக்கையையும் அவர் தயார் செய்தார். இப்படி அறிவிப்பு வெளியான பின்னர் இலங்கையை நிர்ப்பந்தித்து போரை நிறுத்த இந்தியா தீவிர முயற்சிகள் எடுக்கும் என்பது பேச்சுவார்த்தையின் முடிவாகும்.

இந்தத் திட்டத்தை நெடுமாறனிடமோ அல்லது வைகோவிடமோ தெரிவிக்கக் கூடாது என்றும் நடேசன் அறிவுறுத்தப்பட்டார். ஆனால் நடேசனோ, இந்தத் திட்டம் குறித்து சிபிஎம் எம்.எல்.ஏ கே.மகேந்திரனுடன் ஆலோசித்துள்ளார். இதையடுத்து மகேந்திரன் இந்த தகவலை வைகோவிடம் கொண்டு சென்று விட்டார்.

இதைக் கேட்ட வைகோ அதிர்ச்சி அடைந்தார். எங்கே போர் நிறுத்தம் நடந்து விட்டால், அந்தப் பெருமை திமுக, காங்கிரஸுக்குப் போய் விடுமோ என அவர் அஞ்சினார். இதையடுத்து ஈழத்திற்கு மாற்றான தீர்வுக்கு புலிகள் சம்மதித்தால், தமிழகத்தில் எங்களுடைய ஆதரவை நீங்கள் இழக்க நேரிடும் என்று நடேசனை எச்சரித்தார்.

இதைக் கேட்டதும், எங்கே அதிமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று, மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமையலாம் என்று நம்பிய நடேசன் தனது திட்டத்தைக் கைவிட்டு விட்டார்…,” என்று கூறியுள்ளார் கேபி.

பிரபாகரனைப் பாதுகாக்க நெடியவன் ஒத்துழைக்கவில்லை! – சொல்கிறார் கேபி

August 20, 2010 by envazhi  
Filed under உலகம் & இலங்கை

பிரபாகரனைப் பாதுகாக்க நெடியவன் ஒத்துழைக்கவில்லை! – சொல்கிறார் கேபி

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு நெடியவன் ஒத்துழைப்பு வழங்கவில்லை என குமரன் பத்மநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

நார்வேயிலிருந்து வெளியாகும் ஒரு இணையதளம் வெளியிட்டுள்ள கேபியின் பேட்டியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரன், மனைவி மதிவதனி, மகள் துவராகா மற்றும் மகன் பாலச்சந்திரன் ஆகியோரை மீட்பதற்கு தாம் கடுமையான முயற்சி மேற்கொண்டதாக குமரன் பத்மநாதன் அதில் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்டத்தின் போது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது, குடும்ப உறுப்பினர்களை வெளியேற்ற முயற்சி எடுங்கள் என பிரபாகரனின் புதல்வர் சாள்ஸ் அன்டனி தம்மிடம் உதவி கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் சாள்ஸ் ஆன்டனி களத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டதையும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டரின் மூலம் பிரபாகரன் குடும்பத்தைக் காப்பாற்றி பின்னர் அவர்களை கப்பல் மூலம் மீட்பதற்கு தாம் திட்டமிட்டிருந்த போதிலும், அதற்கு நெடியவன் ஆதரவு வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் குறித்த முயற்சி பலனளிக்கவில்லை என்று கூறியுள்ளார் கேபி.

போர் நிறுத்தம் ஒன்றை அமல்படுத்தி அதன் மூலம் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை மீட்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பொட்டு அம்மான் பத்திரம்… தலைவர் ரகசியம்!

August 11, 2010 by envazhi  
Filed under உலகம் & இலங்கை

பொட்டு அம்மான் ‘பத்திரம்’… தலைவர் ‘ரகசியம்’!

விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு பொறுப்பாளரான சிரஞ்சீவி மாஸ்டர், கடந்த 12 வருடங்களுக்கு மேலாக மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாகத் தேடப் பட்டு… கடந்த ஜூன் மாதம் தமிழக உளவுத் துறையால் வளைக்கப்பட்டார்.

திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட சிரஞ்சீவி மாஸ்டர், சில தினங்களுக்கு முன் பூந்தமல்லி சிறப்பு முகாமுக்குக் கொண்டு வரப்பட்டார். விடுதலைச் சிறுத்தைகளின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு மற்றும் சில வழக்கறிஞர்கள் மூலமாக சிரஞ்சீவி மாஸ்டரிடம் ஜூனியர் விகடன் பத்திரிகை எடுத்துள்ள பேட்டி:

‘உங்கள் மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றச் சாட்டுகள் உண்மைதானா?’

‘என்னைப் பற்றிய பல விவரங்களை ஏற்கெனவே நீங்கள் வெளியிட்டு விட்டீர்கள். தமிழகத்தில் தங்கி இருந்தாலும், இதுகாலம் வரை எவ்விதத் தவறான செயல் பாடுகளிலும் நாங்கள் ஈடுபட்டது கிடையாது. பழைய வழக்குகளின் அடிப்படையில் போலீஸ் எங்களைக் கைதுசெய்து இருக்கிறது. அந்த வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காகப் போடப்பட்டவை!’

‘பிரபாகரனுக்கு எதிரான வரதராஜ பெருமாளை கொலை செய்யவே நீங்கள் தமிழகத்துக்கு அனுப்பப் பட்டதாக ஏற்கெனவே தமிழகத்தில் பிடிபட்ட புலிகள் வாக்குமூலம் வெளியிட்டு இருந்தார்களே..?’

(சிரிக்கிறார்…) ”எனக்கு அப்படி எல்லாம் எவ்வித அஸைன்மென்டும் கொடுக்கப் படவில்லை. புலிகள் எனச் சொல்லி அப்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்… அவர்களின் வல்லமை என்ன? என்பது போலீஸாருக்கே தெரியும். அவர்கள் மூலமாக வரதராஜ பெருமாளை நான் கொல்ல முயன்றதாகச் சொன்னது வேடிக்கையானது.

பிடிபட்டவர்கள் அப்படி ஒரு வாக்கு மூலத்தைக் கொடுத்தார்களா..? இல்லை, வேண்டுமென்றே அப்படி ஒரு வாக்குமூலம் திட்டமிட்டு வெளியிடப்பட்டதா..? என்பது தெரியவில்லை. புலி உறுப்பினர்களாகப் பிடிபடுபவர்கள் மீது எத்தகைய வழக்குகள் போடப்பட வேண்டும் என்பதை எல்லாம் தமிழக அரசியல்தான் தீர்மானிக்கிறது.’

‘ஈழப் போர் தீவிரமாக இருந்தபோது நீங்கள் அங்கேதான் இருந்தீர்களா? போர்க் கொடூரங்களின் நேரடி சாட்சியாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?’

‘சிங்கள அரசின் கொடூரம் உலகத்துக்கே தெரியும். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருசேர அழிக்கப்பட்டனர். ‘பஸ் மோதி பள்ளி மாணவன் மரணம்’ என்கிற செய்தியை தினசரிகளில் படித்தால், அது நம் குழந்தையாக இல்லாவிட்டாலும் மனது பதறுகிறது.

ஆனால், ஈழத்தில் கொத்துக் கொத்தாகக் குழந்தைகள் கொல்லப்பட்ட கொடூரம் உலகறிய நடந்தும், சிங்கள அரசைக் கண்டிக்க உலகம் முன்வரவில்லை. மற்றபடி அந்தக் கொடூரங்கள் குறித்து விளக்கிச் சொல்லும் நிலையில் நாங்கள் இல்லை!’

‘பிரபாகரன் தப்பி விட்டதாக ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லி சிங்கள அரசு ஒரு சடலத்தை காட்டியது. இதில் எதுதான் உண்மை?’

‘எங்களின் தலைமையைக் கேட்காமல் நாங்கள் ஏதும் சொல்ல முடியாது. அதே நேரம் இட்டுக்கட்டி ஏதும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை.’

‘சரி… உங்களின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் நிலை குறித்தாவது சொல்லுங்களேன்…?’

(பலமாக சிரிக்கிறார்) ”மிகப்பத்திரமாக இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.’

‘கேணல் ராம், புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. உள்ளிட்டோர் சிங்கள சதிக்கு ஆளாகி தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறதே?’

‘சிங்கள அரசு தமிழர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒற்றுமையைக் குலைக்க அனைத்துவித முயற்சிகளையும் செய் கிறது. போர்க் காலத்திலும் சிங்கள அரசு இப்படித்தான் சதி செய்தது. அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் இத்தகைய சதிகளை புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.’

‘ஈழத்துக்கான விடிவு கிடைக்க இனியும் வாய்ப்பு இருக்கிறதா?’

‘முகாமில் அடைபட்டுக் கிடக்கும் என்னால் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? எத்தகைய அடக்குமுறையும் ஒரு நாள் உடையத்தானே செய்யும்!’ -உறுதியோடு சொல்கிறார் சிரஞ்சீவி மாஸ்டர்!

நன்றி: ஜூனியர் விகடன்

வடக்கு – கிழக்கு பகுதி புனர்வாழ்வு அமைப்பின் செயலராக கேபி நியமனம்!

August 5, 2010 by envazhi  
Filed under உலகம் & இலங்கை

வடக்கு – கிழக்கு பகுதி புனர்வாழ்வு அமைப்பின் செயலராக கேபி நியமனம்!

கொழும்பு: கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு வடக்கு கிழக்கின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பான நோ்டோவின் (NERDO) செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக ஆயுத கடத்தலில் ஈடுபட்டவராக கூறப்பட்டவரும், பின்னர் தன்னையே புலிகள் அமைப்பின் தலைவராக பிரகடனப்படுத்தியவருமான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் கடந்த அக்டோபர் மாதம் மலேசியாவில் வைத்து இலங்கை புலனாய்வு போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.

இதன் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ள அவர், சாதாரண கைதிகளை போல நடத்தப்படவில்லை. மாறாக அவர், புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் நேர்டோ என்ற பெயரில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை செயற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் இந்த நிறுவனத்திற்கு நிதியுதவி கோரி, புலம் பெயர் தமிழர்களுக்கு அவர் அண்மையில் கடிதம் எழுதியுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன.

இந்த நிலையில், இன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில், கேபி நேர்டோவின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நடக்கும் புனரமைப்புப் பணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு சர்வதேச நிதியுதவி கிடைக்க இலங்கை அரசும் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்ப் பிரமுகர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட போராளிகளுடன் கேபி உரையாடும் வீடியோ காட்சி:

இனி என் வாழ்நாளில் புலிகள் தலையெடுப்பார்கள் என நம்பவில்லை! – சொல்கிறார் கேபி

August 2, 2010 by envazhi  
Filed under உலகம் & இலங்கை

‘இனி என் வாழ்நாளில் புலிகள் தலையெடுப்பார்கள் என நம்பவில்லை!’ – சொல்கிறார் கேபி

கொழும்பு: உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. எங்களது வாழ்நாளில் அவ்வாறு நடக்கும் என நாம் நம்ப வில்லை. 35 வருட யுத்தத்தில் சிக்கி கொண்டிருந்த நாம் இனி சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும், என கே பி எனப்படும் குமரன் பத்மநாதன் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு விடுதலைப் புலிகள் தலைவராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர் கேபி. ஆனால் மலேசியாவில் வைத்து அவரை இலங்கை உளவுத்துறையினர் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தனர். தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் இலங்கை அரசுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கைது செய்யப்பட்டதே ஒரு நாடகம்தான் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் உள்ளூர் பத்திரிகை ஒன்று கே.பத்மநாதனை சந்தித்து பேட்டி எடுத்து வெளியிட்டு உள்ளது. அதில் செய்தியாளர் கேட்ட கேள்விகளும், பத்மநாதன் அளித்த பதில்களும்:

கேள்வி: ராஜபக்சேயின் குடும்ப ஆட்சியில் நீங்கள் சிக்கியுள்ளீர்கள். நீங்கள் உங்களிடம் இருந்த பெருந்தொகை பணத்தை ராஜபக்சேயின் உறவினர்களுக்கு பரிமாற்றியுள்ளீர்கள். இதன் காரணமாகவே உங்களை சிறையில் அடைக்காமல் சுதந்திரமாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?

பதில்: அவ்வாறான பரிமாற்றம் எதுவும் கிடையாது. 2003-ம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இருந்த பொறுப்புகளில் இருந்து நான் விலகிக் கொண்டேன். அதன் பின்னர் நான் பெருந்தொகை பணத்தை என்வசம் கொண்டிருக்கவில்லை.

கேள்வி: கப்பல்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள்? கப்பல்களுக்கு என்ன நடந்தது? எந்த சகோதரருக்காக அதனை கொடுத்தீர்கள்?

பதில்:- பல கப்பல்கள் இறுதி யுத்தத்தின்போது அழிக்கப்பட்டன. அங்கு கொடுப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை.

கேள்வி: கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்பட வில்லை. உங்களுக்கு அதுபற்றி தெரிந்திருக்கும்தானே?

பதில்: இரண்டு, மூன்று கப்பல்கள் எஞ்சியிருந்தன. சில வேளைகளில் அரசாங்கம் அவற்றை கைப்பற்றியிருக்கலாம்.

கேள்வி: உங்களை எங்கே பிடித்தார்கள்?

பதில்: மலேசியாவில்.

கேள்வி: உங்களை யார் பிடித்தது?

பதில்: மலேசிய புலனாய்வாளர்கள். என்னை விமான நிலையம் வரை அழைத்துச் சென்று அங்கு இலங்கையின் புலனாய்வாளர்களிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் நான் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டேன்.

கேள்வி: என்ன நிபந்தனைகளுக்கு கீழ் நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளீர்கள்? தற்போது என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். நான் ஏனைய கைதிகள் எண்ணுவதை போலவே உணர்வுகளை கொண்டுள்ளேன். எனினும் நான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வீடு எங்குள்ளது என்பது எனக்குத் தெரியாது!

கேள்வி: உங்களை சமாதானத்துக்கு உதவுமாறு அரசாங்கம் அழைத்ததா?

பதில்: ஆம். நாங்கள் அதனை பற்றி பேசினோம். நான் எனது மக்களுக்கு உதவ வேண்டும். கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உதவ வேண்டும் என நினைக்கிறேன்.

கேள்வி: யுத்தத்தின் இறுதிக் காலத்தில் உங்களது பணி என்னவாக இருந்தது?

பதில்: நாங்கள் யுத்தத்தை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் உள்பட பல தரப்புகளுடனும் பேசினோம். எனினும் அது முடியவில்லை.

கேள்வி: மலேசியாவில் இருந்து இலங்கை வந்ததன் பின்னர் மட்டக்களப்புக்கு போயிருக்கிறீர்களா?

பதில்: இல்லை. வன்னிக்கு சென்றிருந்தேன். புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலர் இலங்கைக்கு வந்து அரசாங்கத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை மேற்கொள்ள பயணித்தபோது நானும் அவர்களுடன் வன்னிக்கு சென்றேன்.

கேள்வி: உங்களுடைய பழைய யுத்த களத்திற்கு சென்றபோது எவ்வாறு கவலைப்பட்டீகள்?

பதில்: முகாம்களுக்கு விஜயம் செய்தபோது போரின் காரணமாக பொதுமக்கள் அவலப்படுவதை கண்டு வருந்தினேன். எனக்கு அழுகை வந்தது. இந்த நிலையில் சமாதான பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்.

கேள்வி: புலம்பெயர்ந்த வர்களின் குழுவுடன் நீங்கள் வன்னிக்கு சென்றீர்களா?

பதில்: வன்னிக்கு சென்றோம். அபிவிருத்தி தொடர்பாக அரசு சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து சேவையாற்றுவது குறித்து ஆராய்ந்தோம்.

கேள்வி: யுத்தம் முடிவடைந்து விட்டது. இந்த யுத்தத்தில் அழிந்து போன சொத்துக்கள் குறித்து உணர்கிறீர்களா?

பதில்: நாங்கள் கசப்பான அனுபவத்தை பெற்றிருக்கின்றோம்.

கேள்வி: சர்வதேசத்தில் விடுதலைப்புலிகளின் பலம் என்ன?

பதில்: சிலர் உண்மையை பேசுகிறார்கள். பலர் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறுகின்றனர். நான் முகாம்களுக்கு சென்ற போது அங்கு உள்ள இளைஞர்களும், பெண்களும் தாம் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என கூறுகின்றனர். ஒரு சதவீதத்தினரே மீண்டும் யுத்தம் செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.

கேள்வி: தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் இலங்கையில் தோற்றம் பெறுவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. எங்களது வாழ்நாளில் அவ்வாறு நடக்கும் என நாம் நம்ப வில்லை. 35 வருட யுத்தத்தில் சிக்கி கொண்டிருந்த நாம் இனி சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

கேள்வி: அரசியலுக்கு வரும் நோக்கம் இருக்கிறதா?

பதில்: இல்லை. எனது மக்களின் பிரச்சினைகள் தீரும் வரை அவ்வாறான எண்ணம் இல்லை. நான் விடுதலையை விரும்புகிறேன். எனினும் பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம்… இன்னுமொரு ஆதாரம்!

இலங்கை ராணுவத்தின் வெறியாட்டம்… இன்னுமொரு ஆதாரம்!

கொழும்பு: இலங்கையின் போர்க்குற்றத்தின் கோர முகத்தை சர்வதேசம் உணரும் தருணம் நெருங்குகிறது. சர்வதேச போர் சட்டங்களுக்குப் புறம்பான அத்தனை அக்கிரமங்களையும் புலிகளுக்கு எதிரான போரில் நடத்தியுள்ளது சிங்கள ராணுவம்.

இதற்கான ஓளிப்பட ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியுள்ளன.

முன்பு, தங்களிடம் பிடிபட்ட புலிப் போராளிகளின் கண்களைக் கட்டி உயிரோடு தலையில் சுட்டுக் கொன்ற காட்சிகளை சேனல் 4 வெளியிட்டது. அதனை இலங்கை அரசு மறுத்தது. ஆனால் வீடியோவின் உண்மைத் தன்மையை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தது சேனல் 4.

பெண் புலிகளை நிர்வாணப்படுத்தி சிதைத்துக் கொன்றது, பிடிபட்ட போராளியை துடிக்கத் துடிக்க கத்தியால் அறுத்துக் கொன்றது… இப்படி ஏராளமான ஆதாரங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் தாம் பெற்ற உதவிகளைக் கொண்டு எத்தகைய கோரத் தாண்டவத்தை இலங்கை ஆடியுள்ளது என்பதற்கு இதோ இன்னும் சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளது அதிர்வு இணையதளம்.

சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகள் மற்றும் இதர ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தி புலிகளைக் கொன்று குவித்த சிங்கள ராணுவம், இறந்த போராளிகளை குதறி வைத்துள்ளது.

பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி, உறுப்புகளைச் சிதைத்து தங்கள் வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.

வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நடேசன், பூலித்தேவன் உள்ளிட்ட தலைவர்களை ராணுவம் சுட்டுக் கொன்றதற்கான ஆதாரங்களும் விரைவில் வெளிவர உள்ளன.

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைக் குழுவை ஐநா நியமித்துள்ள நிலையில், போர்க்குற்றம் தொடர்பான மேலும் பல ஆவணங்கள் வெளிவரக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படங்கள்: அதிர்வு

இலங்கை அரசின் கபட நாடகத்தில் ஏமாறாதீர்கள்! – விடுதலைப் புலிகள் அறிக்கை

June 29, 2010 by envazhi  
Filed under உலகம் & இலங்கை

தமிழர் மீது இலங்கை அரசு தொடுத்துள்ள உளவியல் போர்! – விடுதலைப் புலிகள் அறிக்கை

கொழும்பு: புலம்பெயர் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களைப் பிரிக்க இலங்கை அரசு சதித் திட்டம் தீட்டியுள்ளது. இந்த கபட நோக்க முயற்சிகள் தொடர்பாக புலம்பெயர் மக்கள் மிக விழிப்புடன் இருக்குமாறு விடுதலைப் புலிகள் அமைப்பு கோரியுள்ளது.

புலிகளின் வெளியுலகத் தொடர்புகளுக்குப் பொறுப்பாளராக இருந்த கே.பி என்ற குமரன் பத்மநாபனுக்கு இலங்கை அரசு பொது மன்னிப்பும், அரசுப் பதவியும் வழங்கும் வாய்ப்பு தென்படுவதாக இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் போர் குற்றம் தொடர்பான விசாரணையில் அவரை அரசுத் தரப்பு சாட்சியாக பயன்படுத்தவும் இலங்கை முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் புலிகளின் தலைமைச் செயலக இணைப்பாளர் ராமு. சுபன் வெளியிட்டுள்ள அறிக்கை:

அன்பான தமிழ் பேசும் மக்களே!

இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் சர்வதேசத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்ற அதேவேளை எம் உரிமைக்கான போராட்டத்தினை நசுக்க தொடர்ந்தும் திடசங்கற்பம் பூண்டுள்ளது.

எம் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பது சர்வதேச ரீதியாக பல வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது இயக்கத்தினை அழிப்பதன் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் இலட்சியத்தை அழித்துவிடலாம் என்ற சிங்கள அரசின் நோக்கம் எடுபடவில்லை.

இத்தகைய சூழலில் இலங்கை அரசு பல்வேறு நரித்தனம் கொண்ட தந்திரத் திட்டங்களை வகுத்து நகர்த்தி வருகின்றதை எம்மக்கள் நன்கு அறிவர்.

சர்வதேச ரீதியாக எழுந்துள்ள அழுத்தங்களைத் தணிப்பது, சர்வதேச உதவிகளை தமிழர்களின் பேரால் பெற்று சிங்களக் குடியேற்றங்களைப் பெருக்குவது, இன நல்லிணக்கம் என்ற பேரிலும், அபிவிருத்தி என்ற பேரிலும் எம் உரிமைக்கான போராட்டத்தினை அடியோடு இல்லாமல் செய்வது ஆகிய நீண்டகால திட்டங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இத்தகைய சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சி நடவடிக்கைகளுக்குப் புலம்பெயர் தமிழர்கள் பெரும் தடையாக இருப்பதனை இலங்கை அரசாங்கம் நன்கு கணித்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இருந்த விரக்தி, குழப்பங்கள், கருத்து முரண்பாடுகளைக் களைந்து ஆரோக்கியமான முறையில் ஒன்றிணைந்து செயற்படத் தொடங்கிய புலம்பெயர் தமிழரின் செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குப் பெரும் தலையிடியாக அமைந்து வருகின்றன.

இதன் காரணத்தால் புலம்பெயர் தமிழர் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களின் ஒற்றுமையைக் குலைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இலங்கை அரசாங்கம்.

அதன் ஒருபகுதியாக, சிறையிலுள்ள போராளிகள் சிலரைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி சில திட்டங்களைச் செயற்படுத்தி புலம்பெயர் மக்களின் ஒரு தொகுதியைத் தம் வசப்படுத்தி, வளங்களை உள்வாங்க முனைகிறது. இதன்மூலம் குழப்பங்களை ஏற்படுத்தி எமது ஒற்றுமையைச் சிதைத்து, தமிழரின் உரிமைக்கான போராட்டத்தினையும் புலம்பெயர் தேசங்களில் நசுக்க எண்ணியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே இலங்கை அரசாங்கத்தால் சில நகர்வுகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உளவியல் போர்…

போராளிகளை விடுவிப்பதற்கும், தாயக மக்களின் துயரங்களைப் போக்குவதற்கும் எமது இயக்கமும், புலம்பெயர் மக்களும் விட்டுக் கொடுப்புக்களுக்குத் தயாராக இருக்கின்றார்கள் என்ற நல்ல நோக்கினை இலங்கை அரசாங்கம் கபடத்தனமாகப் பயன்படுத்த முனைகிறது. அதற்காக தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் பயன்படுத்தி, தம்வசப்படுத்தும் உளவியற்போரை இலங்கை அரசு கையாளத் தொடங்கியுள்ளது.

தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப் போவதாகக் கூறும் சிங்கள அரசாங்கம் செய்தவை, செய்து கொண்டிருப்பவை என்ன?

யுத்தத்தின்போது ஈவிரக்கமற்ற முறையில் எமது மக்களைக் கொன்று குவித்தது. சரணடைந்தவர்களைக் கொடூரமாகக் கொலை செய்தது. ஊடகங்களைச் சுயாதீனமாகச் செயற்படவிடாமல் தடுத்தது. சரணடைந்தவர்கள் குறித்த முழுமையான விபரங்களை இன்றுவரை வெளிப்படுத்தாமலுள்ளது.

நாளாந்தம் பாலியல் வல்லுறவு, சித்திரவதை, கொலை என்று தடுப்புக் காவலில் உள்ளவர்களைப் பலியாக்கிக் கொண்டிருக்கிறது. தொண்டு நிறுவனங்களைச் சுதந்திரமாகச் செயற்பட விடாது தடுப்பது மட்டுமன்றி போர்க் குற்றவியல் விசாரணை தொடர்பான பன்னாட்டு முயற்சிகளை முற்றாக உதறித் தள்ளிக் கொண்டிருக்கிறது இந்த இலங்கை அரசாங்கம்.

இதே அரசாங்கம் தடுப்புக் காவலிலுள்ள போராளிகள் சிலரை விடுவிப்பது, மக்களின் புனர்வாழ்வு, அபிவிருத்தி என்ற திட்டங்களைக் கபட நோக்குடன் பயன்படுத்தி எமது மக்களை வசியப்படுத்த முயல்கிறது. தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுவிப்பது என்பது முற்றுமுழுதாக இலங்கை அரசின் கையிலுள்ள விஷயம். அதற்கு எந்தத் தடையுமே இல்லை.

தனி நபர்களை வரவழைப்பது ஏன்?

அது குறித்துப் பேசுவதானால்கூட தாயகத்தில் இதே கோரிக்கைகளை முன்வைத்த தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேசாமல் புலம்பெயர் தேசத்திலிருந்து தனி நபர்கள் சிலரை அழைத்துப் பேசவேண்டிய தேவையில்லை.

இதுவொரு தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சியாகவும், தம் மீதான அழுத்தங்களைத் தணிக்க இலங்கை அரசு ஆடும் ஒரு நாடகமாகவுமே பார்க்கப்பட வேண்டும்.

என்ன செய்திருக்க வேண்டும்?

தமிழ்மக்கள் மேல் அக்கறையும் அவர்களின் துயரங்களைப் போக்க வேண்டுமென்ற விருப்பும் உண்மையாகவே இலங்கை அரசாங்கத்துக்கு இருக்குமானால்,

* இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தினையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினையும் நீக்கவேண்டும்.

* தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.

* ஐயத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொது மக்களையும் மனிதாபிமானப் பணியாளர்களையும் விடுவிக்க வேண்டும்.

* இன்னமும் மீளக் குடியமர்த்தப்படாமல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் அனைவரையும் அவரவரின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த வேண்டும்.

* பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களையும் உள்ளூர்த் தொண்டு நிறுவனங்களையும் தமிழர் தாயகத்தில் சுதந்திரமாக அபிவிருத்திப் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

இந்த செயற்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாக இடம்பெற வேண்டும். அத்தோடு தாயகத்திலுள்ள தமிழர் பிரதிநிதிகளுடன் இணைந்து இவற்றைச் செய்யவேண்டும்.

புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செய்யப்பட வேண்டிய பணிகளுக்கென அணுகப்பட வேண்டியவர்கள் அதற்கெனவுள்ள மக்கள் கட்டமைப்புக்களேயன்றி, தனி நபர்களல்லர். இவ்வாறான செயற்பாடுகளை வெளிப்படைத் தன்மையுடன் செய்யும்போது உலகத் தமிழர்களும் அதற்கு முன்னின்று உழைப்பார்கள்.

அரசின் கபடத்தனம்!

ஆனால் இலங்கை அரசாங்கமோ மிகமிக இரகசியமாக, சிறையில் கைதிகளாகவுள்ள எமது இயக்கத்தைச் சேர்ந்த சிலருடனும், வெளிநாட்டில் இருந்து அண்மையிற் சென்ற தனிநபர்கள் சிலருடனும் சேர்ந்து திரை மறைவில் சில செயற்பாடுகளை முன்னெடுப்பது உள்நோக்கம் கொண்டவை.

ஆகவே இந்தக் கபடநோக்கம் கொண்ட இலங்கை அரசின் முயற்சிகள் தொடர்பில் புலம்பெயர் மக்கள் மிக விழிப்புடனும் கூட்டுப் பொறுப்புணர்வுடனும் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்தோடு, மக்கள் பிரதிநிதிகளைப் புறந்தள்ளி தனிநபர்களைக் கொண்டு காரியமாற்றும் இலங்கை அரசின் இந்தக் கபட முயற்சியினை பன்னாட்டு அமைப்புக்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் சரியாக விளங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதேவேளை, இலங்கை அரசின் இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகி, நல்லெண்ண அடிப்படையில் சிறிலங்கா அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கும், வழங்க முன்வந்திருக்கும் புலம் பெயர்ந்த தனி நபர்கள், இலங்கை அரசின் கபடத்தனத்தை விளங்கிக் கொண்டு விழிப்புணர்வோடு செயற்பட்டு அரசின் சதிக்குப் பலியாகாமல் இருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புறக்கணிக்க வேண்டும்!

சிலருக்குப் பொது மன்னிப்பளித்து அவர்களைக் கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டும், அபிவிருத்தி என்ற பெயரில் சலுகைகளை வழங்கியும் அரசியல் இலாபம் தேடமுனையும் இலங்கை அரசாங்கத்தின் வஞ்சகச் சூழ்ச்சியைத் தமிழ் மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்.

அத்தோடு, சலுகைகளுக்காக எமது இனத்தின் அரசியல் அபிலாசைகளை விலைபேசும் சக்திகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உரத்துச் சொல்லவும், எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தி அதற்கான நீதியை உலகமட்டத்தில் பெற்றுக்கொடுக்கவும் பணியாற்றும் வலுவுடனிருக்கும் எமது புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக அணிதிரண்டு செயற்படுவதன் மூலம் எமது விடுதலையை வென்றெடுக்கப் பாடுபட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செம்மொழி மாநாட்டில் பங்கேற்க நிர்ப்பந்திக்கவில்லை! – சிவத்தம்பி

June 23, 2010 by envazhi  
Filed under General

செம்மொழி மாநாட்டில் பங்கேற்க நிர்ப்பந்திக்கவில்லை! – சிவத்தம்பி

சென்னை: கோவையில் நாளை துவங்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க தனக்கு எந்தவித நிர்பந்தங்களும் தரப்படவில்லை என்று தமிழறிஞர் பேராசிரியர் கார்த்திக்கேசு சிவத்தம்பி தெரிவித்துள்ளார்.

செம்மொழி மாநாட்டில், முதன்மை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள தமிழகம் வந்துள்ளார் ஈழத்து தமிழறிஞர் பேராசிரியர் சிவத்தம்பி.

மாநாட்டில் கட்டாயம் சிவத்தம்பி கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் பங்கேற்காவிட்டால் அது நாதஸ்வரம் இல்லாத கல்யாணம் மாதிரியாகிவிடும் என்றும் முதல்வர் கருணாநிதியே மீண்டும் மீண்டும் சிவத்தம்பிக்கு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.

கனிமொழி எம்பியும் பெரும் முயற்சியெடுத்து அவருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவரது வருகையின் அவசியத்தை வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் இந்த விழாவில் பங்கேற்க உதவியுள்ளார் சிவத்தம்பி.

தமிழ் மாநாட்டு நிகழ்வுகளில், தாம் கலந்து கொண்டது தனது விருப்பத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும், இதில் எந்த நிர்ப்பந்தமும் அழுத்தமும் தரப்படவில்லை என சிவத்தம்பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில், “இலங்கை தமிழர்களின் பாரம்பரிய கலாசாரம், விழுமியம் மற்றும் தாற்பரியம் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் போது, அதை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.

எனக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை இந்திய அரசும் அங்கீகரித்துள்ளது…” என்றார். செம்மொழி மாநாடு நடக்கும் கோவைக்கு நேற்று சென்றார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களால் எழுதப்பட்ட 20 நூல்களை, அவர் வெளியிட்டார். இன்றைய துவக்க விழா நிகழ்வில் பங்கேற்கும் அவர், மாநாட்டின் ஆய்வரங்குக்கு தலைமை வகிக்கிறார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான கார்த்திகேசு சிவத்தம்பி, விடுதலைப் புலிகளின் மதிப்புக்குரிய தமிழறிஞராக இருந்தவர். ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ என்ற பெயரில் முன்பு விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் நடத்திய பண்பாட்டு நிகழ்வில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. புலிகளுக்கான கோட்பாட்டுப் பின்னணியை இலக்கியம் வாயிலாகப் பரப்பியதில் முக்கியப் பங்கு கொண்டவர்.

வட மாகாண புணரமைப்பு: கேபியுடன் கைகோர்க்கும் முக்கிய புலித் தலைவர்கள்!

June 20, 2010 by envazhi  
Filed under உலகம் & இலங்கை

வட மாகாண புணரமைப்பு: கேபியுடன் கைகோர்க்கும் முக்கிய புலித் தலைவர்கள்!

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் அரசுடன் கைகோர்த்து, போரில் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணப் புணரமைப்புப் பணிகளில் ஈடுபடுகிறார்.

இதில் அவருக்கு உதவ 9 பேரைக் கொண்ட தமிழ் நிபுணர் குழு முன் வந்துள்ளனர். இந்த தகவலை இலங்கையின் அரசு செய்திதாளான ‘சண்டே அப்சர்வர்’ வெளியிட்டுள்ளது.

கனடா, சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்த நிபுணர்கள் அண்மையில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவையும் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பெரீஸ் ஆகியோரையும் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

குமரன் பத்மநாதனே இந்த 9 பேரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாக சண்டே அப்சேவர் தெரிவித்துள்ளது.

இந்த ஒன்பது பேரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களாக அந்தந்த நாடுகளில் செயற்பட்டவர்கள் என்றும், புலிகளின் சர்வதேச வலையமைப்பு அறுக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையை கேபி வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுத்ததன் மூலம் இவர்கள் அரசு ஆதரவாளர்களாக மாறியதாகக் கூறப்படுகிறது.

கேபிக்குப் பொது மன்னிப்பு மற்றும் அரசுப் பதவி அளிக்கப்படும் என சில தினங்களுக்கு முன் பாதுகாப்பு செயலாளரின் அலுவலகம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன அவசரம்… என்ன அவசரம்!

June 14, 2010 by envazhi  
Filed under Editorial

டெல்லியின் தாளத்துக்கு ஆடாமல், காவல்துறை சொந்தமாக யோசிக்கட்டும்!

நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று, நடக்கவிருந்த பெரும் ரயில் விபத்து தடுக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரத்திலிருந்து 25 கிமீ தொலைவில் பேரணி – சித்தணி கிராமங்களுக்கு இடையில் தண்டவாளத்தை நாசகார கும்பல் வெடி வைத்துத் தகர்த்துள்ளது.

அதிகாலை நடந்த இந்த குண்டுவெடிப்பை சட்டென்று உணர்ந்த எழும்பூர் – சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு ராஜசேகரன், உடனடியாக அருகில் உள்ள முண்டியம்பாக்கம் ரயில் நிலைய அதிகாரிக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தந்து உஷார்ப்படுத்தினார்.

அப்போது அந்த வழியாக சென்னை நோக்கி வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திய நிலைய அதிகாரி, தண்டவாளத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது, மெதுவாகச் செல்லுங்கள் டிரைவர்களை எச்சரிக்க, அவர்களும் மெதுவாக ரயிலை இயக்கினர். குறித்த இடத்தை நெருங்கிய போது, தண்டவாளம் தகர்க்கப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டனர். வண்டியை அவசரமாக நிறுத்தி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர்களைக் காத்துள்ளனர்.

காப்பாற்றிய 'கார்டு'!

சேலம் – எழும்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்களை குறி வைத்து இந்த சதி வேலை நடத்தப்பட்டுள்ளது. இரண்டு ரயில்களுமே அதிலிருந்து தப்பித்தது பெரிய நிம்மதி.

இந்த விபத்தைத் தவிர்த்ததன் முழுப் பெருமையும் சேலம் – எழும்பூர் கார்டு டி ராஜசேகரன், முண்டியம்பாக்கம் ரயில் நிலைய அதிகாரி ஏ துக்காராம், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் டிரைவர் கோபிநாத் ராவ், துணை டிரைவர் டி ராஜ்குமார் ஆகிய நான்கு ரயில்வே அதிகாரிகளுக்கே சேரும்.

அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதிகாலை என்றெல்லாம் பாராமல், தங்களை நம்பி பயணிக்கும் மக்களின் உயிரை மதித்து கடமையாற்றுவது, அதுவும் இன்றைய லஞ்ச-ஊழல் சூழலில் சாதாரண விஷயமல்ல!

தே நேரம் இந்த விபத்துக்கான காரணம், நாசவேலை சதியைச் செய்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்குவது மிகவும் அவசியம். அப்பாவிகளின் உயிருடன் விளையாட முற்படும் யாரையும் விட்டுவைக்கக் கூடாது.

ஆயிரம் குறைகள், ஆட்சியாளர்கள் மீதான அதிருப்திகள் இருந்தாலும், இந்தியாவிலேயே இன்றைய தேதிக்கு அமைதியான மாநிலம் தமிழகம்தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது. இது ஒன்றும் ஆட்சியாளர்களின் சாதனை அல்ல.. மக்களின் தெளிந்த மனநிலைதான் காரணம் (இந்த தெளிவு சமயத்தில் அளவுக்கு அதிகமாகப் போய்விடுவதாலேயே, களத்தில் இறங்கி உணர்வைக் காட்ட வேண்டிய நேரங்களிலும் டிவிக்கும் டாஸ்மாக்குக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள் என்பதும் உண்மை!).

இந்த அமைதியைக் குலைக்கக் காரணமாக நிற்கும் எந்த சதியையும் முறியடிப்பது அவசியம். இதில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

தண்டவாளம் தகர்க்கப்பட்டிருந்த இடத்தில் விடுதலைப்புலி ஆதரவாளர்களின் துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் ‘பிரபாகரனின் தம்பிகள்’ என்று குறிப்பிட்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்தியப் பயணத்தைக் கண்டிப்பதாக அந்தத் துண்டுப் பிரசுரங்கள் தெரிவிப்பதாகக் காவல்துறை கூறுகிறது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை, என்றாலும்.. வெறும் துண்டுப் பிரசுரங்களைக் கொண்டு குறிப்பிட்ட யாரையும் குற்றவாளியாக்கிவிட முடியாதல்லவா?

சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள், எந்த விசாரணையையும் மேற்கொள்ளாமலேயே, மாநிலக் காவல் துறைத் தலைவர் லத்திகா சரண், “இந்தச் சம்பவத்துக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை” என்று அவசர அவசரமாக அறிக்கை விட்டார்.

அடுத்த சில நிமிடங்களில் புலனாய்வுத் துறை ஐ.ஜி.யான ஜாபர் சேட், “இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான்” என்று பேசி வைத்த மாதிரி அறிக்கை கொடுக்கிறார்!

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், துண்டுப் பிரசுரம் அடித்து வைத்துவிட்டா குண்டு வைப்பார்கள்? விட்டால் தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவு தலைவர்கள் அனைவரும் தங்களின் பெயர் உள்ளிட்ட பயோடேட்டாவை அடித்து வைத்துவிட்டுதான் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தினார்கள் என்பார்கள் போல…

தமிழகத்தில் ஈழத் தமிழரின் போராட்டத்துக்கு ஆதரவான சூழல் நிலவுவதும், அதற்கு உறுதுணையாக எதிர்க்கட்சித் தலைவர்களும் உள்ள நிலையில், இந்த துண்டுப் பிரசுரம், புலிகள் மீது போலீசாரின் அவசர குற்றம்சாட்டு போன்றவற்றை உற்றுக் கவனிக்க வேண்டியுள்ளது.

ஐஃபா விழாவை படுதோல்வியடையச் செய்தது, ராஜபக்சே வருகைக்கு மிகப்பெரிய எதிர்ப்பைத் தெரிவித்து மத்திய மாநில அரசுகளை திகைப்புக்குள்ளாக்கியது போன்றவற்றை புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளே முன்னின்று செய்தன.

அந்த இயக்கங்கள் மீது அப்பட்டமாக பழிபோடும் அவசர முயற்சியாகவே, இந்த குண்டுவெடிப்புக்கு புலிகளின் ஆதரவாளர்களே காரணம் என தமிழக காவல்துறை கூறுகிறதோ!

இந்த சதிச் செயலை வேறு யாரேனும் செய்துவிட்டு, பழியை புலிகளின் ஆதரவாளர்கள் மீது போடும் சாத்தியக் கூறை வசதியாக காவல்துறை மறைத்துவிட்டது ஏன்? அல்லது, ‘இலங்கையில் முற்றாக தமிழர் போராட்டம் அடக்கப்பட்டு விட்டது. இப்போது தமிழகத்தில்தான் மிச்சமிருக்கிறது. அதையும் அடியோடு ஒழிக்க வாய்த்துள்ள சந்தர்ப்பம் இது’ என்ற ‘சிங்களவனின் நண்பர்களது’ குறுக்கு சிந்தனைக்கு போலீசார் தரும் ஆதரவா?

தங்கள் தவறுகளை மறைக்க பெரும் சதிகளை அரங்கேற்றி அதை எதிராளி மீது திருப்பிவிடும் சம்பவங்களை சமகால வரலாற்றிலேயே நிறைய பார்த்திருக்கிறோம்.

இந்த சதியை தமிழகத்தில் அரங்கேற்றும் அவசியமோ, அப்படி நிறைவேற்றினால் அதன் பின் விளைகள் என்னவாக இருக்கும் என்றோ புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் அறியாதவர்கள் அல்ல.

எனவே, நடந்துள்ள கொடூரமான சதிச் செயலின் உண்மைப் பின்னணி என்னவென்று விரைந்து கண்டறிவது அவசியம்.

அதை விட்டுவிட்டு, ‘இவன்தான் குற்றவாளி’ என மனதுக்குள் கற்பனை செய்துகொண்டு, நிஜ குற்றவாளிகளைத் தப்பவிடுவது தமிழக காவல் துறைக்கு அழகல்ல!

இந்த விஷயத்தில் தமிழகக் காவல்துறை தங்களது ‘சென்னை மூளையை’ மட்டுமே பயன்படுத்தி துப்பறியட்டும்… விஷயத்தை திசை திருப்ப டெல்லியிலிருந்து திணிக்கப்படும் யோசனைகளை சற்று தள்ளி வைத்து செயல்பட்டால், சதிகாரர்கள் யாரென்பது தெரிந்துவிடும்!

-வினோ

என்வழி

குமரன் பத்மநாபனுக்கு பொது மன்னிப்பு…. அரசுப் பதவி!!

June 9, 2010 by envazhi  
Filed under General

குமரன் பத்மநாபனுக்கு பொது மன்னிப்பு…. அரசுப் பதவி!! – கேஹலிய சூசகம்

கொழும்பு: கே பி எனப்படும் குமரன் பத்மநாபனுக்கு இலங்கை அரசு பொது மன்னிப்பு வழங்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், அவருக்கு அரசுப் பதவி கிடைக்கவும் வாய்ப்புள்ளதாகவும் இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புலிகளின் வெளியுலகத் தொடர்புகளுக்குப் பொறுப்பாளராக இருந்தவர் கேபி. தேசியத் தலைவர் பிரபாகரனால் அந்தப் பொறுப்புக்கு நிர்ணயிக்கப்பட்டவர்.

ஆனால் முள்ளிவாய்க்காலில் புலிகள் ஆயுதங்களை மௌனித்த பிறகு நடந்த பேரவலத்தில் கேபியின் சதி இருக்கலாம் என பலரும் சந்தேகிக்க ஆரம்பித்தனர். அதை உறுதிப்படுத்தும் விதத்தில் தேசியத் தலைவர் பற்றி முன்னுக்குப் பின் முரணாக செய்திகள் கொடுத்து தமிழரின் நம்பிக்கையைத் தகர்த்தார். புலிகளின் தலைவர் என தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார்.

சிறிது தினங்கள் கழிந்த நிலையில், மலேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டார். அதன்பிறகு அவரைப் பற்றி வெளிப்படையான செய்திகள் எதுவும் இல்லை என்றாலும், அவர் அரசாங்க சாட்சியாக மாறி, புலிகளின் சொத்துக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று கூறப்பட்டது.

ராஜபக்சே சகோதரர்கள் தேர்தலைச் சந்தித்ததே கேபியால் காட்டிக் கொடுக்கப்பட்ட புலிகளின் நிதி ஆதாரங்களை வைத்துதான் என்று கூறப்பட்டது.

ராஜபக்சே சகோதரர்களுடன் இணக்கமாகப் போய்விட்டதால் கேபிக்கு ராணுவ முகாமில் ராஜ உபசாரம் நடப்பதாகவும், கோத்தபாய போன்றவர்களுடன் அவர் இணக்கமான உறவில் இருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்த நிலையில் கேபிக்கு பொது மன்னிப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அரசுத் தரப்பிலிருந்தே செய்திகள் கசியத் துவங்கியுள்ளன.

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ஊடகத் துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெலவும் இதுபற்றி சூசகமான தகவலைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “குமரன் பத்மநாதன் ஒரு காலத்தில் அரசன் போல வாழ்ந்து வந்தவர். எனினும் தற்போது அவர் தமது பெருமைகள் அனைத்தையும் இழந்து சாதாரணமாக வாழ்ந்து வருகிறார்.

அவருக்கு இப்போது பொதுமன்னிப்பு வழங்கும் யோசனையில் அரசு உள்ளது. அதற்கான சாத்தியங்களும் அதிகம் உள்ளதை மறுப்பதற்கில்லை.

ஆனால் அவருக்கு அரசாங்க பதவி எதுவும் வழங்கப்படுமா என்பதை அரசாங்கத்தின் உயர் மட்டம்தான் தீர்மானிக்கும்…” என்றார்.

‘இயக்கத்துக்கு எதிராக செயல்பட்டவர் கேபி’

கேபிக்கு தண்டனை எதுவும் கிடையாதா? என்று இந்த பேட்டியின் போது கேஹலியவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “தமது இயக்கத்துக்கு (விடுதலைப் புலிகள்) எதிராக செயற்பட்டதாலேயே கேபி இப்போது தண்டனையை அனுபவித்து வருகிறார். அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே விடுதலைப் புலிகளின் பல்வேறு தரப்புக்களையும் அரசாங்கத்தினால் முடக்கமுடிந்தது. எனவே அவருக்கு தண்டனை தேவையில்லை என்றே அரசு கருதுகிறது” என்றார் கேஹலிய ரம்புக்வெல.

ஆக, கருணா ஸ்டைலில் இன்னொரு அமைச்சரை இலங்கை அமைச்சரவையில் எதிர்ப்பார்க்கலாம்!

தனி ஈழமே தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு! – லீ க்வான் யு

June 5, 2010 by envazhi  
Filed under கட்டுரைகள்

ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி: அவரைத் திருத்தவே முடியாது! – சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ க்வான் யு

லங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது. தனி ஈழம் ஒன்றே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்று கூறியுள்ளார் சிங்கப்பூரின் முதல் பிரதமரான் லீ க்வான் யு.

சர்வதேச அளவில் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் லீ க்வான் யுவும் ஒருவர். இவரது மகன்தான் தற்போதைய சிங்கப்பூரின் பிரதமர். மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்த பிறகு, எந்த இயற்கை வளமும், குடிநீர் வசதியும் கூட இல்லாமல் தவித்த சிங்கப்பூரை பெரும் வர்த்தக மையமாக மாற்றியவர். வல்லரசுகளுக்கு இணையாக உருவாக்கியவர் என புகழப்படுபவர்.

இன்றும் சிங்கப்பூர் அரசில், அமைச்சர்களின் வழிகாட்டி (Ministers Mentor) என மூத்த அமைச்சர் பொறுப்பை வகிக்கிறார் லீ.

லீ குவான் யுடனான உரையாடல்கள் என்ற தலைப்பில் சமீபத்தில் ‘Citizen Singapore: How To Build A Nation – Conversations with ’ என்றக நூல் வடிவில் வெளியாகியுள்ளது.

அந்த நூலில் இலங்கை இனப் பிரச்சினை குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் லீ குவான் யு விரிவாக விளக்கியுள்ளார்.

இலங்கைப் பிரச்சினை குறித்து அவர் இப்படி கூறியுள்ளார்:

இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர்.

ஆனால் தொடர்ச்சியான சிங்களர் மேலாதிக்கம் இரு இனங்களுக்குள்ளும் மோதலை ஏற்படுத்திவிட்டது. தமிழரின் உரிமைகளை தெரிந்தே மறுக்கிறது சிங்களம். அரசியல் அதிகாரத்துக்காக சிங்களர்களை தமிழர்களுக்கு எதிராகத் தூண்டி வருகிறார்கள் சிங்கள அரசியல்வாதிகள்.

இலங்கை மகிழ்ச்சியான நாடாக இனியும் இருக்க முடியாது. தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இனி உருவாகவும் முடியாது.

இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை அங்கு நிலைமை இப்படித்தான் இருக்கும்.

இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள், சிங்களர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள். ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்து போராடுவார்கள். சர்வதேசம் இதனை மெதுவாகப் புரிந்து கொண்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்ற முடியும் என்று நான் நம்பவில்லை. அவரைத் திருத்தவே முடியாது” என்று கூறியுள்ளார்.

தமிழருக்குதான் அதிக மரியாதை தர வேண்டும்!

அவரிடம் இந்த நூலின் ஆசிரியர் டாம் பிளேட் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

“இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. மெஜாரிட்டியான சிங்களர்கள், விடுதலைப் புலிகளை அழித்து விட்டனர். உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம்வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள்.

முன்பும் இப்படித்தான்செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முயலுகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன்.

இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள அரசு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை, சிங்களர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான்.

மலேசியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்தான் இருக்கப் போகிறது,” என்று கூறியுள்ளார் லீ.

இந்த நூலை முன்னணி பத்திரிக்கையாளரும், லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்தவருமான பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இதை வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழவே முடியாது, தமிழ் ஈழம் மலர்ந்தால்தான் இலங்கையில் அமைதி திரும்பும் என்பதை தனது கருத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாக லீ வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லீ க்வான் யு பற்றி…

1923-ல் பிறந்த லீ க்வான் யுவுக்கு இப்போது 86 வயது. 1959-ல் சிங்கப்பூரின் பிரதமரானார். 1990-ம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமாராக இருந்தவர். உலகில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

1990 நவம்பரில், தானே முன்வந்து பதவி விலகினார். ஆனால் அவரது நிர்வாகத் திறன் சிங்கப்பூருக்கு முழுவதுமாக பயன்பட வேண்டும் என்பதற்காக 1990-ம் ஆண்டு மூத்த அமைச்சர் என்ற பதவியை உருவாக்கினர். அவரை வழிகாட்டியாகக் கொண்டு ஆட்சியைத் தொடர்ந்தார் புதிய பிரதமர் கோ சோ டோங்.

2004-ம் ஆண்டு லீயின் மூத்த மகன் லீ ஸெய்ன் லூங் சிங்கப்பூர் பிரதமராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து அமைச்சர் வழிகாட்டி என்ற புதி்ய அமைச்சு உருவாக்கப்பட்டு அதில் லீ க்வான் யு அமர வைக்கப்பட்டார். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அமைச்சகம் இது. லீயின் வழிகாட்டுதல்களுடன் அமைச்சரவையை நடத்த உருவாக்கப்பட்டது இந்தப் பதவி. ஆக 1959லி-ருந்து பதவிகளின் பெயர் மாறினாலும், சிங்கப்பூர் அரசின் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்பவர் லீ.

உலகில் தனக்கு மிகப் பிடித்த அரசியல் தலைவர் மற்றும் நிர்வாகி லீ க்வான் யுதான் என பல முறை தனது பேட்டிகளில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளது நினைவிருக்கலாம்.

-என்வழி

Related Posts with Thumbnails