உன்னைப்போல் ஒருவன் – விமர்சனம்
உன்னைப்போல் ஒருவன் – விமர்சனம்
நடிப்பு: கமல்ஹாஸன், மோகன்லால், கணேஷ் வெங்கட்ராம், லட்சுமி, பரத் ரெட்டி, அனுஜா
ஒளிப்பதிவு: மனோஜ் சோனி
இசை : ஸ்ருதிஹாஸன்
எடிட்டிங்: ராமேஷ்வர் பகவத்
கலை: தோட்டா தரணி
இயக்கம்: சக்ரி டோலட்டி
தயாரிப்பு: கமல்ஹாஸன், சந்திரஹாஸன், ரோனி ஸ்க்ரூவாலா
மக்கள் தொடர்பு: நிகில்
தீவிரவாதத்தின் விளைவுகள் உடனடியாக மக்களைத் தாக்குகின்றன… ஆனால் அந்தத் தீவிரவாதத்தைத் தந்தவர்களுக்கோ தண்டனைகள் தாமதமாக, வலிக்காமல் வழங்கப்படுகின்றன… தீவிரவாதத்துக்கு உடனடி தண்டனை தீவிரவாதமே…” என்ற ஒரு தனிமனிதனின் கோபம்தான் ‘உன்னைப்போல் ஒருவன்’.
வாங்கிய காய்கறியும் கறிவேப்பிலையும் வாடுவதற்குள் நடந்து முடிந்து விடுகிற சில நிகழ்வுகளை ஒரு விஷூவல் லைவ் கமெண்ட்ரி மாதிரி எடுத்திருக்கிறார்கள்.
நாட்டின் எத்தனையோ மத்யமர்களில் ஒருவரான கமல்ஹாஸன் இரவு பகலாக தனக்குத் தெரிந்த நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு வெடிகுண்டு தயாரிக்கிறார். ஒரு நாள் காலை அவற்றைக் கருப்புப் பைகளில் வைத்து காவல் நிலையம், ரயில், ஷாப்பிங் மால் என நகரின் முக்கியப் பகுதிகளிலெல்லாம் வைக்கிறார்.
பின்னர் கூலாக கடைவீதிக்குப் போய் மனைவி போட்டுக் கொடுத்த லிஸ்ட்படி காய்கறிகள் வாங்கிக் கொண்டு, பாதி கட்டி முடித்த ஒரு கட்டடத்தின் உச்சிக்குப் போகிறார். ஒரு பலகையை விரித்துப் போட்டு, கையோடு கொண்டுவந்திருக்கும் அத்தனை கம்ப்யூட்டர் சாதனங்களையும் பரப்பி, அசெம்பிள் செய்து, சற்றே நிதானமாகி மாநகர காவல்துறை கமிஷனர் மாரார் எனும் மோகன்லாலுக்கு ஒரு போன் செய்கிறார். தான் குண்டு வைத்திருக்கும் விவரங்களை தெளிவாக சொல்லிவிட்டு, டக்கென்று போனை வைத்துவிடுகிறார்.
அடுத்த நொடி கமிஷனர் அலுவலகம் அலர்ட்டாக, அது முதல்வர் அலுவலகம் வரை எதிரொலிக்கிறது. உள்துறைச் செயலாளர் லட்சுமி வருகிறார்.
மீண்டும் கமலிடமிருந்து போன்…
இம்முறை தனது செயலின் நோக்கத்தைச் சொல்கிறார். வைத்திருக்கும் குண்டுகள் வெடிக்காமல் இருக்க மும்பை, கோவை, அசாம் என பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரைக் குடித்த குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான நான்கு படுபயங்கர தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்லி நிபந்தனை விதிக்கிறார்.
வேறு வழியில்லை… நிலைமையின் தீவிரம் புரிந்து தீவிரவாதிகளை விடுவிக்க ஒப்புக் கொள்கிறார் கமிஷனர். அதேநேரம் கமல்ஹாஸனின் இந்த செயலுக்கான பின்னணி, அவர் இருக்கும் இடத்தையும் காண முயற்சிக்கிறார் கமிஷனர்.
கமல்ஹாஸனின் நிபந்தனைப்படி தீவிரவாதிகள் நால்வரும் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவனை மட்டும் உடன் செல்லும் அதிரடிப்படை அதிகாரி திடீரென பிடித்துக் கொள்ள, மற்ற மூவரும் தப்பித்து அங்கு நிறுத்தப்பட்டுள்ள ஜீப்பில் ஏறுகிறார்கள். அடுத்த நொடியில் ஜீப் வெடித்துச் சிதற, அதிர்ச்சியில் உறைந்து போகிறது காவல்துறை.
அந்த நான்காவது நபரையும் கொல்ல வேண்டும் என கமலிடமிருந்து அடுத்த போன் வருகிறது. தொடரும் விவாதங்கள், மிரட்டல்களுக்குப் பிறகு அந்த நான்காவது தீவிரவாதியும் கொல்லப்படுகிறான்.
என்ன நடந்தது… ஏன் விடுவிக்கப்படும் தீவிரவாதிகள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு கமல் தரும் விளக்கங்கள் மீதி.
எந்தக் குண்டும் வெடிக்காமலேயே, எந்தக் கட்டடமும் சிதறாமலேயே அந்த எபெக்ட் படம் முழுக்க இருக்குமாறு பார்த்துக் கொண்ட இயக்குநர் சக்ரியைப் பாராட்ட வேண்டும்.
பொதுவாக இந்த மாதிரி படங்களில் முதல்வர் போன்ற பாத்திரங்கள் வரும்போது யாராவது டம்மி பீஸை காட்டி கடுப்பேற்றுவார்கள். ஆனால் கமல் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நிஜ முதல்வரையே நடிக்க வைத்திருக்கிறார், குரல் மூலம்! படத்தில் காட்டப்படுவதும்கூட நிஜ முதல்வரின் வீடுதான்.
இதுபோன்ற நெருக்கடிக்கு மாநகரம் உள்ளாகும்போது, உயர்மட்ட அதிகாரிகள் படும் பாடு, நிலைமையைச் சமாளிக்க ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் முடிவுகள், அதனால் சக அதிகாரிகளுடன் ஏற்படும் உரசல், தனது கீழ்நிலை அதிகாரிகளுடன் ஒரு கமிஷனர் கொண்டிருக்கும் நட்பு ரீதியிலான-அதேநேரம் கடமை மாறாத உறவு… இவற்றையெல்லாம் மிக மிக அருகிருந்து பார்ப்பதைப் போன்ற உணர்வை இந்தப் படம் ஏற்படுத்துகிறது.
படத்தின் பெரும் பலம் வசனங்கள் (இரா முருகன்).
முதல்வருக்கும் கமிஷனருக்கும் நடக்கும் உரையாடலின் ஒரு சிறு பகுதியைப் பாருங்கள்…
“நிலைமை எப்படியிருக்கு மாரார்?”
(ஆங்கிலத்தில்)”எல்லாம் கடவுளின் கையிலிருக்கிறது சார்!”
“அய்யய்யோ… அது சிக்கலான கையாச்சே”
தீவிரவாதம், அவர்களை ஒழிப்பதில் மென்மையான அணுகுமுறை காட்டும் அரசுகள் பற்றி கமல் பேசும் வசனங்களில் தனிமனிதனின் கோபத்துக்குள்ள வீரியம் தெறிக்கிறது.
ஆனால், “மும்பையில் குண்டுவெடித்தால் நாம் டிவியில் செய்தி பார்த்துவிட்டு, வேறு சானலுக்கு மாறுகிறோம். அதிலும் தமிழ்ச் சேனல்களில் அதைக் காட்டுவதுகூட இல்லை. காரணம் வேறு எங்கோ நடக்கிற உணர்வில் நாம் இருப்பதுதான். நாம பேசறது வேற மொழிதானே… எவனுக்கோ நடக்குது நமக்கென்ன என்ன அலட்சியம்…” என்று கமல் கூறும்போது அதை ஏனோ மனம் ஒப்பவில்லை.
இதற்குக் காரணம் இந்திய அரசும் அரசியல்வாதிகளும்தானே… தமிழ்நாட்டுக்காரன் இந்த நிமிடம் வரை வேறு நாட்டு பிரஜை மாதிரிதானே நடத்தப்படுகிறான்… அவனது குரலுக்கு ஏது மரியாதை… அவனது விருப்பத்தை எவன் கேட்கிறான். டெல்லியில் முடிவெடுத்துத் திணிப்பதுதானே காலம் காலமாய் நடக்கிறது. எனவே கமலின் இந்த வாதத்தை மட்டும் ஏற்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் உதைபடும் இந்தியனுக்காகவோ, மும்பையில் செத்துப்போன இந்தியனுக்காகவோ தமிழன் அலட்டிக்கொள்ளாமலே இருந்துவிட்டதன் காரணம் இதுதான்!
தமிழனுக்கு வந்த துன்பங்களுக்காக கவலைப்பட்ட இந்தியர்கள் எத்தனை பேர்? மும்பை குண்டுவெடிப்பை மையப்படுத்தித்தான் அவர்களால் படங்கள் செய்ய முடிந்தது. கோவை குண்டுவெடிப்பெல்லாம் அவர்களால் கண்டுகொள்ளப்படவே இல்லையே.
ஆகவே இந்த ஒரு கருத்தை அவர் சொல்லாமலேகூட விட்டிருக்கலாம். மனிதத்துக்கு எதிரான தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதில் ஒருமைப்பாடு பற்றிய ட்யூஷன் எதற்கு? நதியின் ஓட்டம் மேலிருந்து கீழ்நோக்கி பாய்வதுதான் இயல்பானது!
தனது மூன்று மனைவிகளில் ஒருவர் இறந்துவிட்டதாக ஒரு முஸ்லிம் தீவிரவாதி கூற, அதற்கு அந்த இந்து தீவிரவாதி அடிக்கும் காமெண்ட் மகா தவறு!
அதேநேரம் தீவிரவாதத்துக்கு மத முகமூடி மாட்டிப் பார்ப்பதில் அர்த்தமில்லை என்கிற வாதம் ஏற்கக் கூடியதே. தீவிரவாதமென்றாலே முஸ்லிம்கள்தான் என்றுதான் இங்கும் நிலை நிறுத்துகிறார்கள். இந்துக்களின் தீவிரவாதமும் சிறுபான்மையினரை குஜராத்தில் காவு கொண்டதை கதைக்குள் பதிவு செய்ய முயற்சித்திருப்பது ஒரு சமநிலைத் தன்மையை பேணும் முயற்சி. ஆனால் எடுபடவில்லை.
ஹீரோ லால்!
படத்தின் மிகச் சிறந்த அம்சம் பாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் கலைஞர்கள்… ஒவ்வொருமே ஒப்பற்ற மணிகளாய் ஜொலிக்கிறார்கள்.
படத்தில் தன்னை பின்னுக்கு நகர்த்திக் கொண்டு மோகன்லாலையே பிரதானப்படுத்தியிருக்கிறார் கமல், அந்தப் பாத்திரத்தின் தன்மை அப்படி என்பதால்.
படம் பார்ப்பவர்களின் மனதை அப்படியே முழுமையாய் ஆக்கிரமிக்கிறார் மோகன்லால். நிச்சயம் இதைவிட பெட்டராக யாராலும் நடித்திருக்க முடியாது. அவரது மலையாளத் தமிழ் உச்சரிப்பு பாத்திரத்தின் நம்பகத் தன்மையை இன்னும் அதிகப்படுத்துகிறது. தீவிரவாதிகளை அழைத்துவர அனுப்பப்படும் தனது நம்பகமான இரு உயரதிகாரிகளுடனும் அவர் உரையாடும் காட்சி, குருஷேத்ரா மோகன்லாலை நினைவூட்டுகிறது.
உள்துறை அதிகாரியாக வரும் லட்சுமி யாதார்த்த நடிப்பைக் காட்டியிருக்கிறார். அவருக்கும் மோகன்லாலுக்கும் இடையே நிகழும் அந்த பனிப்போர்… எப்படியும் ஆளும் வர்க்கத்தின் கைகளில் பந்தாடப்படுவோம் என்ற நிச்சயமற்ற தன்மையை மோகன்லால் காட்டும் விதம்… ஹாட்ஸ் ஆஃப் மோகன்லால்!
இந்த முறை கமல் ரிங் மாஸ்டர் மாதிரி அமைதியாக உட்கார்ந்தபடி, ஆனால் தனக்கு-படத்துக்கு தேவையான அனைத்தையும் அதற்குத் தகுந்த கலைஞர்களிடமிருந்து சரியான விகிதத்தில் வாங்கியிருக்கிறார்.
தன் கண்முன் ஒரு சகோதரிக்கு நிகழ்ந்த கொடூரத்தை அவர் விவரிக்கும் போது, நம்மையுமறியாமல் கண்ணீர்.
எல்லாம் முடிந்ததும் மின்னல் வேகத்தில் அந்த சாதனங்களை மறைத்து கொளுத்திவிட்டு ஒன்றுமே நடக்காத மாதிரி காய்கறி பைகளோடு வெளியேறும் விதமும், கமிஷனரை எதிர்கொள்ளும்போது, குறுக்கிடும் போன்காலுக்கு அவர் பதில் சொல்லும் விதமும் டிபிகல் கமல் ஸ்டைல்!
அவர் யார் எனத் தெரிந்தும் கமிஷனர் விட்டுவிடப் போகிறார் என்பதை முன்கூட்டியே யூகித்துவிட முடிகிறது.
கணேஷ் வெங்கட்ராம், இந்தப் படத்தின் அட்டகாசமான, யாருமே எதிர்பாராத ஒரு பாத்திரம். அச்சு அசலான அதிரடிப் படை வீரரை கண்முன் நிறுத்துகிறார் மனிதர்.
பரத் ரெட்டி, ஸ்ரீமன், சிவாஜி, சந்தானபாரதி, அனுஜா, பூனம்.. அட கடைசியாக வரும் அந்த ஐஐடி ட்ராப் அவுட் என அனைவரது நடிப்புமே, ஒரு மில்லிமீட்டர் கூட பிசகாமல் அத்தனை கச்சிதம்!
ஒளிப்பதிவு, எடிட்டிங் என எதிலுமே முதல் தரத்தைத் தந்திருக்கிறார்கள். ஸ்ருதி பல இடங்களில் தனது இசையை மவுனிக்க வைத்திருப்பது புத்திசாலித்தனம். மற்றபடி ஒரு இசையமைப்பாளராக இதில் அவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை.
‘இலக்கியம், ஜனரஞ்சகம், நவீனத்துவம் என எந்த வடிவிலிருந்தாலும் மக்களுக்காக செய்யப்படும் நல்ல கலைகள் என்றுமே தோற்பதில்லை’ என்பது நவீன இலக்கியத்தின் முன்னோடி மக்சீம் கார்க்கியின் வாக்கு. அதை உன்னைப்போல் ஒருவனும் நிரூபிக்கும்!
-எஸ்எஸ்
கேப்டனை விட மோகன்லால் சாதித்தது என்ன?!! – ஒரு கொந்தளிப்பு கடிதம்!
July 12, 2009 by envazhi
Filed under சும்மா தமாசு
கேப்டனை விட மோகன்லால் சாதித்தது என்ன?!! – ஒரு கொந்தளிப்பு கடிதம்!
எனது பகிரங்கக் கொந்தளிப்பு கடிதம்…
அப்படி என்ன செய்துவிட்டார் மோகன்லால்..!?
மேகன்லால் மலையாள திரைப்பட உலகின் முன்னணி நடிகர். பலவிதமான கதாப்பாத்திரங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். மாநில மற்றும் தேசிய அளவிலான விருதுகளையும் குவித்தவர். ராணுவ அதிகாரியாக சில படங்களிலும் நடித்து முத்திரை பதித்தவர். இதில் எனக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. அவரது படங்கள் பல நானும் ரசித்து பார்த்திருக்கிறேன்.
ஆனால், இரண்டே இரண்டு திரைப்படங்களில் ராணுவ அதிகாரியாக நடித்ததை மட்டும் வைத்து ராணுவத்தில் கெளரவ கர்னல் பதவி வழங்கப்பட்டிருந்தால், அதை என்னைப் போன்றவர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
வெறும் இரண்டே படங்களில் ராணுவ அதிகாரியாக நடித்து விட்டு, அவற்றில் ஒரு சில பிஸ்கோத்து தீவிரவாதிகளை மட்டும் டம்மி துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மோகன்லாலுக்கு கொடுக்கும்போது, என்னால் விம்மி அழாமல் இருக்க முடியவில்லை!
காரணம்…??!!???]
சினிமா உலகில் கால் வைத்ததிலிருந்தே, ஏறத்தாழ அனைத்துப் படங்களிலும் ராணுவ அதிகாரியாக / போலீஸ் அதிகாரியாக நேர்மையாக நடித்தவரும், கன்னியாகுமரியிலிருந்து, காஸ்மீரு வரை அத்தனை தீவிரவாதிகளையும் சுட்டுக்கொன்றும், உயிருடன் பிடித்தவருமான நமது புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்தை, இந்திய ராணுவம் கெளரவிக்காதது ஏன்?
விஜயகாந்த் இடத்தை மோகன்லாலால் ஏணி வைத்தாலும் நெருங்க முடியாது என்பது மழலைகளுக்கும் தெரிந்த ஒன்று!
வெள்ளித்திரையில் காக்கிச் சட்டையும், மிலிட்டிரி ட்ரெஸ்சும் மாட்டிக் கொண்டு விஜயகாந்த் செய்த சாதனைகள் தான் எத்தனையெத்தனை?????
இந்த நேரத்திலே ஒரு சில சாதனைகளை சொல்ல வேண்டிய நிலையில் உள்ளேன். இது, இந்திய ராணுவத்தை மட்டுமின்றி, அமெரிக்க ராணுவத்துக்கும் விடுக்கப்பட்ட அறைகூவலாக எடுத்துக் கொள்ளலாம்!
1) கடந்த 30 வருஷத்துக்கும் மேலாக நமது பொதுச் சொத்தான சந்தன மரங்களைக் கடத்தியும், யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை எடுத்தும் கடத்தல் செய்து வந்தவன் சந்தனக்கடத்தல் காரன் வீரப்பத்திரன். அவனைப் பிடிக்க பல போலீஸ் அதிகாரிகள் போனபோது இரக்கமற்று அவர்களை சுட்டுக்கொன்று காட்டுராஜாவாக வாழ்ந்து வந்த கடத்தல் மன்னன் வீரபத்ரனை “கேப்டன் பிரபாகரனாக” தனியாக நின்று சண்டைபோட்டு உயிருடன் பிடித்து வந்தவர் யார்? மோகன்லாலா…? இல்லை நமது கேப்டன்!!!
2) இளம்பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, பின்பு அவர்களது உடல் உறுப்புக்களை எடுத்து வெளிநாடுகளுக்கு கடத்தல் செய்து வந்த கொள்ளைக் கூட்டத்தை மொத்தமாக “புலன் விசாரனை” செய்து தனியாக நின்று பந்தாடி கூண்டோடு அழித்து பல அவார்டுகளை குவித்தவரின் பெயர் என்ன மோகன்லாலா…? இல்லை நமது கேப்டன்!!!
3) பாகிஸ்தானில் இருந்து நமது நாட்டுக்குள் ஊடுருவி, அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்து, நமது நாட்டை சீரழிக்க நினைத்து, இறுதியில் பள்ளிச் சிறுவர்களைக் கடத்தி வைத்து தப்பிக்க நினைத்தார்கள் பயங்கரவாதிகள்… இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளாகி பிரதமரே முடிவெடுக்க முடியாமல் இருக்கும் போது, அரசாங்கத்து தெரியாமலே தீவிரவாதிகளின் இருப்பிடத்துக்குள்ளேயே சிங்கம் போல சென்று தீவிராவாதிகளை ஒழித்து, அதன் தலைவன் வாசீம் கானை இரண்டு காலாலேயே கழுதை போல் உதைத்து, அபார வீரன் “சேதுபதி IPS” என்று பெயரெடுத்தாரா மோகன்லால்..? இல்லை நமது கேப்டன்!!!
4) “மாநகரகாவல்” நிலையத்தில் இருந்து “திருமூர்த்தி”யாக வலம் வந்து நமது நாட்டின் இரண்டு பிரதமர்களை இரு வேறு தருணங்களில் குண்டு வைத்து கொல்ல, அயல்நாடுகளின் உத்தரவின் பேரில் செயல்பட்ட கூலிப்படையை கூண்டோடு கைலாயம் அனுப்பினாரே… அந்த மாவீரனா இந்த மோகன்லால். இல்லை நமது கேப்டன்!!!
5) தினமும் ஒருவேளை சோற்றுக்கு நமது மக்கள் அவதிப்படும்போது, மக்களுக்காக அராசங்கத்தால் வரும் ஒரு ரூபாய் ரேஷன் அரிசிகளை மொத்தமாக சுருட்டிய கூட்டத்தை, அவருக்கு தெரியாத அயல் மாநிலங்களில் உள்ள கடத்தல் தீவிரவாதிகளின் கூடாரத்துக்குள்ளேயே சென்று தவிடுபொடியாக்கி, நமது 100 கோடி மக்களின் பசியை தீர்த்து வைத்த ‘தேவனா’ இந்த மோகன்லால்..? இல்லை நமது கேப்டன்!!!
6) இந்தியாவின் எந்த ஓர் ஆட்சியாலும் அதிகாரத்தாலும் ஒழித்திட முடியாத லஞ்சத்தை, ஒற்றை ‘ரமணா’வாக அவதராமெடுத்து மறுஒலிபரப்பு மலர்ச்சியை ஏற்படுத்திய அனுபவம் உண்டா மோகன்லாலுக்கு?… இல்லை நமது கேப்டனிடம் உண்டு.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்தச் சாதனைகளின் எண்ணிக்கை மோகன்லாலின் வயதைத் தாண்டினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
அத்தகைய இந்திய தேசத்தின் காவலனான கோடம்பாக்கத்திலே வலம் வந்த கேப்டனை, ராணுவம் கெளரவிக்காமல் புறக்கணித்தது, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பெருங்களங்கம்!
இந்த நேரத்திலே ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன்… ஏ அமெரிக்க அரசாங்கமே… விழித்துக் கொள்… எங்கள் கேப்டனின் மகத்துவதை நீயாவது அறிந்து செயல்படு!!!!!
இப்படிக்கு,
கதறலுடன்,
கேப்டன் ரசிகன்.
-Source: விகடன்,
Courtesy: Nattu
‘தமிழில் பல சிறந்த கலைஞர்கள் உள்ளனர்!’ – மோகன்லால்
தமிழில் சிறந்த கலைஞர்கள் உள்ளனர்! – மோகன்லால் பேட்டி
கோவை: தமிழ் திரைப்படத் துறையில் திறமையான கலைஞர்கள் பலர் உள்ளதால் திரைப்படங்களின் தரம் உயர்ந்துள்ளது என்று பாராட்டியுள்ளார் பிரபல மலையாள நடிகர் மோகன்லால். 
மலபார் கோல்டு தங்க நகை நிறுவனத்தின் ‘பிராண்டு அம்பாசிடர்’ ஆக ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தமாகியுள்ள நடிகர் மோகன்லால், கோவையில் அந்நிறுவனத்தின் ஷோரூம் திறப்பு விழாவுக்கு நேற்று வந்திருந்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டி: “மலபார் கோல்டு’ ஷோரூம் திறப்பு விழாவுக்கான டிவி விளம்பரத்தில் அனைவரையும் தவறாமல் ஓட்டுப் போடச் சொன்னது வாஸ்தவம்தான்.
ஆனால் சாதாரணமாகவே பலர் ஓட்டுப் போடுவதில்லை. தேர்தல் சமயத்தில் தயாரிக்கப்பட்ட விளம்பரப் படம் என்பதால் ஓட்டுப் போடுவதை வலியுறுத்தினேன். கேரளாவில் தேர்தல் நடந்தபோது நான் ஐதராபாத்தில் இருந்ததால் என்னாலேயே ஓட்டுப் போட முடியவில்லை.
தமிழில் ‘உன்னைப் போல் ஒருவன்’ என்ற படத்தில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறேன். அதில் போலீஸ் அதிகாரி வேடம். ஜூலையில் ரிலீஸ் ஆகிறது”, என்ற மோகன்லாலிடம்,
தமிழ் திரைப்படத் துறை குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேட்கப்பட்டது.
சிறந்த நடிகர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலர் உள்ளதால் சமீபகாலமாக தமிழ் திரைப்படங்களின் தரம் உயர்ந்துள்ளது. அருமையான கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன. இந்த ஆரோக்கியமான நிலை தொடர வேண்டும், என்றார் மோகன் லால்.
அரசியலுக்கு வரும் ஐடியா உள்ளதா?
இல்லவே இல்லை. ஆமா… நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்?
சினிமாவில் நடிப்பதைத் தவிர வேறு ஏதாவது தொழில் செய்கிறீர்களா?
திருவனந்தபுரத்தில் ‘அனிமேஷன் ஸ்கூல்’ நடத்துகிறேன், அவ்வளவுதான் என்றார் மோகன்லால்.
ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ரஜினி, கமல், லால்!
ரஜினி… கமல்.. மோகன் லால்… குவியும் ரசிகர்கள்!
ரசிகர்கள் மற்றும் விவிஐபிக்களின் தொடர் வருகையால் நிரம்பி வழிகிறதாம் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி.
பின்னே… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் மோகன்லால் மூவரும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் என்ற செய்தி தெரிந்த பின்னரும் ரசிகர்களால் தங்களைக் கட்டுப்படுத்த இயலுமா என்ன…
ஆம்… இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட் படமான எந்திரன் ஷூட்டிங்குக்காக ரஜினியும் – ஐஸ்வர்யா ராயும் முகாமிட்டுள்ள அதே ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில்தான், கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படப்பிடிப்பும் நடக்கிறது.
எந்திரன் படப்பிடிப்பு நடக்கும் ப்ளோருக்கு அடுத்த தளத்தில் உன்னைப் போல் ஒருவன் படப்பிடிப்பு.
இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து மோகன்லாலும் நடிக்கிறார்.
ஆந்திராவில் ரஜினிக்கு உள்ள பெரும் செல்வாக்கும் ரசிகர் கூட்டமும் திரை உலகமறிந்த ஒன்று.
தென்மாநில மக்கள் பெரும்பாலும் கலந்து வசிக்கும் ஹைதராபாத்தில் கமல் மற்றும் மோகன் லால் அபிமானிகளும் நிறையவே உண்டு.
இந்த முப்பெரும் நட்சத்திரங்களும் முகாமிட்டிருப்பதை அறிந்ததும் ரசிகர்கள் ஏராளமாய் திரண்டு வந்த வண்ணம் உள்ளார்களாம் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு.
குறிப்பாக, எந்திரன் – தி ரோபோ படம் குறித்த எதிர்பார்ப்பு அனைத்து மொழி ரசிகர்களிடமும் எக்கச்சக்கமாய் இருப்பதால், எப்படியாவது ஷூட்டிங் இடைவேளையில், ஒருமுறையாவது ரோபோ தோற்றத்தில் ரஜினியை, பார்த்துவிட மாட்டோமா என்ற ஆர்வத்தில் அந்த குறிப்பிட்ட தளத்தை விட்டு நகர மறுக்கிறார்களாம்!












