முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

‘பக்கா’ ரஜினி படமாக உருவாகிறது சுல்தான்!

July 5, 2010 by envazhi  
Filed under Cinema

‘பக்கா’ ரஜினி படமாக உருவாகிறது சுல்தான்!

அனிமேஷன் படமாக எடுக்கப்பட்டு வந்த ரஜினியின் சுல்தான் இப்போது முழு நீள ரஜினி படமாக மாறுகிறது. இதனால் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதாம்.

செளந்தர்யா ரஜினிகாந்த் தனது ஆக்கர் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரித்து வரும் அனி்மேஷன் படம் சுல்தான். இப்படத்தை முழு நீள அனிமேஷன் படமாக எடுத்து வந்தார் செளந்தர்யா.

ஆனால் பல காரணங்களால் குறித்த காலத்தில் இந்தப்படம் வெளியாகவில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் ரிலையன்ஸ் விலகிக் கொண்ட நிலையில், இந்தப் படத்தின் விநியோக உரிமை சன் பிக்சர்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தை முழுமையான ரஜினி படமாக எடுக்கவுள்ளார் செளந்தர்யா. ஏற்கெனவே எடுக்கப்பட்ட அனிமேஷன் காட்சிகளுடன், நிஜ ரஜினி இடம்பெறும் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளனவாம்.

இதன் மூலம் இப்படம் முழுமையான ரஜினி படமாக மாறுகிறது.  ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் அத்தனை அம்சங்கள், அசத்தலான பாடல்களுடன் வழக்கமான, பிரமாண்டமான ரஜினி படமாக இது இருக்கும்.

படத்தின் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதால், ரஜினியின் மிகப் பிரமாண்டமான படங்களில் ஒன்றாக சுல்தான் மாறவுள்ளது.

எந்திரன் பாடல் காட்சி படமாக்கம் முடிந்ததும் சுல்தானுக்கு முழு வீச்சில் நேரம் கொடுக்கவுள்ளாராம் ரஜினி!

பாட்ஷா – 2..? பரபரக்கும் சத்யா மூவீஸ்!

June 9, 2010 by envazhi  
Filed under Popcorn

பாட்ஷா – 2?

டுத்த வெடியை ரஜினியே எடுத்துக் கொடுக்க, கொஞ்சமும் தாமதிக்காமல் கொளுத்த ஆரம்பித்துவிட்டது மீடியா.

சமீபத்தில் ஆர்.எம்.வீ. இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட ரஜினி, “என்னால் பலன் அடைந்தவர் பலர்; நஷ்டமடைந்த சிலரில் ஆர்.எம்.வீ-யும் ஒருவர். ‘பாட்ஷா’ போன்ற படத்தை ஆர்எம்வீயால் மட்டுமே மீண்டும் தயாரிக்க முடியும்…”

என்று ‘எடுத்துக் கொடுக்க’ , அதன் எதிரொலியாக, ‘எந்திரன்’ படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படத்தை ஆர்.எம்.வீ-யின் சத்யா மூவீஸ் தயாரிக்க ஏற்பாடு நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி ஆர்எம் வீரப்பனின் மருமகனும், சத்யஜோதி பிலிம்ஸ் உரிமையாளருமான தியாகராஜனிடம் கேட்டோம்.

அவரோ, “அப்படி ஒரு படம் உருவானா சந்தோஷம்தானே… ஆனால் இன்னும் எதுவும் முடிவாகலை. அதுக்குள்ள அதைப் பத்தி பேசக்கூடாது” என்றார்.

ஆனால், ‘பாட்ஷா – 2′ என்ற தலைப்பில் தீவிர கதை ஆலோசனை நடக்கிறதாம், சத்யா மூவீஸ் கதை இலாகாவில்!

எந்திரனுக்குப் பிறகுதான் சுல்தான்!

சுல்தான் பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. வெளியீட்டுக்கான பணிகளில் இறங்கலாமா என சௌந்தர்யா யோசித்தபோது குறுக்கிட்ட ரஜினி, “இந்தப் படத்தை இப்போது விட வேண்டாம். எந்திரன் ரிலீஸுக்குப் பிறகு வெளியிடலாம். பொறுமையாக இரு” என்று தடுத்துவிட்டாராம்.

அதற்கு உடனடி பலனும் கிடைத்துள்ளது. படத்தின் உலக உரிமையை சன் பிக்ஸர்ஸ் பெரும் விலைக்கு வாங்கிக் கொண்டுள்ளது. கலாநிதி மாறனே இதனைத் தெரிவிக்க, உற்சாகமாகவிட்டார் சௌந்தர்யா.

இன்னொரு பக்கம், சுல்தானிலிருந்து விலகுவதாக அறிவித்த வார்னர் பிரதர்ஸ் மீண்டும் சௌந்தர்யாவுடனான தங்கள் உறவினை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன் விளைவாக 5 புதிய படங்களைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் வார்னர் பிரதர்ஸும், சௌந்தர்யாவும் கையெழுத்திட்டுள்ளனர்.

எந்திரன்… பூசணிக்காய் உடைக்கப்பட்டது!

பொதுவாக ஒரு படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்தபிறகு, யூனிட்டில் பூசணிக்காய் உடைப்பது ஒரு சம்பிரதாயம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்துக்கும், படப்படிப்பு முற்றாக முடிந்ததை அறிவிக்கும் வகையில் பூசணிக்காய் உடைக்கப்பட்டதாக எந்திரன் வட்டாரங்கள் தெரிவித்தன.

விரைவில் எந்திரன் விளம்பர பணிகளை ஆரம்பிக்க உள்ளது சன். அசத்தலான ஸ்டில்களையும் வெளியிட உள்ளது, தங்கள் நிறுவனப் பத்திரிகைகளில். முன்பு எந்திரன் முதல் செட் ஸ்டில்களை வெளியிட்டபோது தினகரன் நாளிதழின் விற்பனை 4 லட்சம் பிரதிகள் கூடுதலாக விற்றது.

அதை மனதில் கொண்டே இந்த முறையும் தங்கள் நாளிதழ் / வார இதழ் மூலம் எந்திரன் ஸ்டில்களைத் தரப் போகிறார்களாம், சன் நிறுவனத்தினர்!

-என்வழி

ரஜினி – ரஹ்மான் சந்திப்பு… சுல்தானுக்கு சூப்பர் அறிமுகப் பாடல்!

April 2, 2010 by envazhi  
Filed under Rajini

ரஜினி – ரஹ்மான் சந்திப்பு… சுல்தானுக்கு சூப்பர் அறிமுகப் பாடல்!

கோப்பு படம்

ரு பிரச்சினை தன்னால்தான் சரியாகும் என்று தெரிந்தால், சற்றும் தயங்காமல் நேரில் போய் முடிவுக்குக் கொண்டு வருவதில் சூப்பர்ஸ்டாருக்கு நிகர் யாருமில்லை.

ரஹ்மான் விஷயத்திலும் அப்படி ஒன்று நடந்துள்ளது சமீபத்தில்.

எந்திரன், சுல்தான் என ரஜினியின் இரண்டு படங்களுக்கும் ரஹ்மான்தான் இசை. எந்திரனுக்கு முன்பே கமிட் ஆன படம் சுல்தான். ஆனால் எந்திரன் இசைப் பணிகள் முடிந்துவிட, சுல்தானுக்கு மட்டும் வேலை பாக்கியிருந்தது. ஆனால் ரஜினி கண்டுகொள்ளவில்லை. எந்திரன் வேலைதான் அவருக்கு முக்கியமாக இருந்தது.

சுல்தான் பட வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டிருந்தன. எந்திரன் ஷூட்டிங் முடிந்து, ரஜினி முழுமையாக சுல்தானுக்கு மீண்டும் திரும்ப, இசைப் பணிகள் பாக்கியிருப்பதைத் தெரிந்து கொண்டவர், நேராக ரஹ்மான் வீட்டுக்கே போய்விட்டார்.

கூடவே படத்தின் இயக்குநர் சௌந்தர்யாவும். பத்து நிமிடங்கள்தான்… சுல்தானின் அனைத்து இசைப் பணிகளையும் குறித்த காலத்தில் தந்துவிடுவதாக ரஹ்மான் கூற புன்முறுவலுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினாராம் ரஜினி.

ரஜினியே நேரில் போனதற்கு இன்னொரு காரணமிருந்தது… சுல்தான் படம் முற்றிலும் அனிமேஷனாக இல்லாமல், ரஜினி படத்துக்கே உரிய அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்த படமாக வருவதால், ஒரு அறிமுகப் பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என சௌந்தர்யா அபிப்பிராயப்பட, அதற்கும் ரஹ்மான் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆக ரஹ்மானின் அசத்தலான பாடலுடன் ரஜினி அறிமுகமாகும் அட்டகாசமான காட்சிகளும் சுல்தானில் உண்டு!

சுல்தான் வருமா? – சௌந்தர்யா ரஜினி பதில்

December 19, 2009 by envazhi  
Filed under Popcorn

ஆர்கே செல்வமணிக்கு அப்படி என்ன கடுப்பு ரஜினி மீது?

popcorn_sodaரு வாரத்து செய்தித் தாள் கட்டிங்குகள் கிடைத்தால் போதும்,  முழுப்படத்துக்கும் ஸ்க்ரிப்ட் எழுதும் ஆர் கே செல்வமணிக்கு, சூப்பர் ஸ்டார் மீது ரொம்ப நாளாகக் கடுப்பு (சில ஆண்டுகளுக்கு முன் ரஜினி படம் இயக்க கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்ட ஆத்திரமாகவும் இருக்கலாம்). எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் தலைவரைக் குத்திப் பேசாமல் இருப்பதில்லை.

சமீபத்தில் ஒரு கூட்டத்தில் ரஜினியை விமர்சிப்பது போலப் பேசியதற்கு, ரசிகர்கள் உடனே சரியான பதிலடி தர, பார்ட்டி கப் சிப்.

தர்மபுரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, படங்களுக்கு தமிழில் பெயர் மாற்றம் செய்தே தீர வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருப்பது நல்லதுதான். இல்லாவிட்டால் ரோபோ எந்திரனாகியிருக்குமா? பெரிய நடிகர் என்பதற்காக விதிவிலக்கு தராமல் விட்டதற்கு அரசைப் பாராட்டுகிறேன் என்றார்.

உடனே ஒரு இளைஞர் எழுந்து, ‘அரசின் உத்தரவை யாராக இருந்தாலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் ரஜினி முன்னுதாரணமாய் நிற்கிறார். அதைக்கூட பாராட்ட மனமின்றி குறை சொல்கிறீர்களே… அவர் எந்திரன் என மாற்றாமல் விட்டிருந்தாலும் குறை சொல்லியிருப்பீர்கள்…! ” என்றார்.

உடனே டாபிக்கை மாற்றி, வந்த விஷயம் குறித்து பேச ஆரம்பித்துவிட்டார்.

சுல்தான் வருமா? சௌந்தர்யா பதில்

popcorn_sodaகோவா படத் தயாரிப்பு விஷயத்தில் ஆக்கர் ஸ்டுடியோ சின்ன சிக்கலுக்கு உள்ளானதும், உடனே அதற்கு மிகப் பெரிய கதை எழுதக் காத்திருந்தார்கள் நிறைய பேர். ஆனால் பிரச்சினை சுமூகமாக்கப்பட்டுவிட, இப்போது கோவா படம், பொங்கலுக்கு வெளியாவது உறுதி என்று அறிவித்துள்ளார் சௌந்தர்யா.

கூடவே, ரஜினி நடிக்கும் சுல்தான் – தி வாரியர் படம் பற்றிய வதந்திகள் குறித்தும் சௌந்தர்யாவிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர், “முதலில் எந்திரன்தான் வெளி வரவிருக்கிறது. சுல்தான் படத்தில் இன்னும் சில வேலைகள் பாக்கியுள்ளன. மிகுந்த சிரத்தையெடுத்து அதைச் செய்து வருகிறோம். சுல்தான் நிச்சயம் உங்களை ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு வெளிவரும். இது முழுக்க முழுக்க ஆக்கர் ஸ்டுடியோ படம். வார்னர் பிரதர்ஸ் கூட்டணியில் உருவாகும் படமல்ல. விரைவில் விவரமாக பிரஸ் மீட்டில் சொல்வேன்.. காத்திருங்கள்…” என்றார்.

யோகி விளம்பரம் புறக்கணிப்பு; அதிர்ச்சியில் அமீர்!

popcorn_sodaயோகி படத்தின் ஒரு காட்சியில் குழந்தைக்கு மலம் துடைக்க முன்னணி நாளிதழை உபயோகிப்பது போல காட்சி வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் பத்திரிகையாளர் காட்சியின்போது இதைப் பார்த்துவிட்ட அந்த நாளிதழ் நிருபர் கடுப்பாகி கோபித்துக் கொண்டு வெளியேறினார்.

‘எல்லா தரப்பினரும் படிக்கும் பத்திரிகை இது என்று காட்டவே இப்படி ஒரு காட்சியில் அந்தப் பேப்பரைப் பயன்படுத்தினோம்’  என்று இயக்குநரும் ஹீரோவும் எவ்வளவோ கூறியும் நாளிதழ் நிர்வாகம் இறங்கி வரவில்லையாம்.

இன்னொன்று, அந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளவர், தொழில் ரீதியாக எதிரியாகத் திகழும் இன்னொரு பத்திரிகையின் நிருபர்.

இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு யோகி படத்தின் விளம்பரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டதாம் பத்திகை நிர்வாகம்.

இன்னும் படம் ஓடிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் இப்படி ஒரு எதிர்ப்பு, அதுவும் முன்னணி பத்திரிகையிடமிருந்து வந்ததில் அமீர் அதிர்ந்து போயுள்ளாராம்.

‘சுல்தான் நிஜமாகவே பெரிய வெற்றியைப் பெறுமா?’

September 5, 2009 by envazhi  
Filed under Featured


‘சுல்தான் நிஜமாகவே பெரிய வெற்றியைப் பெறுமா?’

வெளியில் உள்ள ரசிகர்கள் பேசிக் கொள்வதை விடுங்கள்… ரஜினி ரசிகர்களுகளே ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்ளும் கேள்வி சுல்தான் உண்மையிலேயே வெற்றி பெறுமா? மக்களிடம் அதற்கு எந்த மாதிரி வரவேற்பு கிட்டும்? என்பதுதான்!

king-rajini1

காரணம் இருக்கிறது… இது ரஜினியின் அனிமேஷன் படம். அனிமேஷன் என்ற கான்செப்ட் ரசிகர்களுக்கு புதிய விஷயம் இல்லை என்றாலும், ரஜினியை எப்படி அனிமேஷனில் வடித்திருப்பார்கள், முழுமையான ரஜினி படத்தில் உள்ள பல பொழுதுபோக்கு அம்சங்களை எப்படி இதில் சேர்த்திருப்பார்கள்.. மக்களை ஈர்க்கும் விதத்தில் என்ன புதுமை இடம் பெற்றிருக்கும் என்றெல்லாம் பல கேள்விகள் எழுவதால் உண்டான ஒரு ஐயப்பாடு ரசிகர்களிடம் நிலவுவதை நாம் உணர முடிகிறது.

எந்திரனுக்குப் பின் சுல்தான் வந்தால் சரியாக இருக்குமோ என்று கேட்கும் ரசிகர்களும் உண்டு.

ஆனால் இந்த ஐயப்பாடு அர்த்தமற்றது என படத்தை உடன் சேர்ந்து தயாரிப்பவர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகப் பிரமுகர்களுக்கும் புரிய வைத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் / இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

விரைவில் இதை ரசிகர்களுக்கும் விரிவான பேட்டிகள் மற்றும் முன்னோட்டக் காட்சிகள் மூலம் சொல்லவிருக்கிறார் .

இப்போது சௌந்தர்யா அவர்கள் நமக்குச் சொன்னதை, உங்களுக்கும் சொல்கிறோம். சுல்தான் எத்தனை சிறப்புக்குரிய படமாக வரப் போகிறது என்பதைப் புரிந்து கொள்ள அது உதவும்.

படத்தின் கதை சரித்திரமும் பேண்டஸியும் கலந்தது. ரஜினி ஒரு மாவீரனாக… மன்னனாக வருகிறார்.

ஆனால் இந்தக் கதையில் மிக முக்கிய அம்சம் முப்பரிமாண காட்சிகள்தான். இதற்கு முன் இந்தியாவில் சில முப்பரிமாண படங்கள் வந்திருந்தாலும் அவை முழுமையானவை அல்ல. சில காட்சிகளில் மட்டும், அதுவும் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்க்கும்படியான காட்சிகள்தான் இடம்பெற்றிருந்தன.

ஆனால் சௌந்தர்யாவின் சுல்தான் படத்தின் சிறப்பே, ஒவ்வொரு பாத்திரமும் நமக்குத் தொட்டுவிடும் தூரத்தில் தெரிகிற வகையிலான முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் அமைந்திருப்பதுதான். தலைவர் தோன்றும் காட்சிகளிலெல்லாம் அவரைத் தொட்டுப் பார்க்க தானாகவே dsc_04651உங்கள் கரங்கள் நீளும்… இந்த தொழில்நுட்பத்துடன் ஒரு அட்டகாசமான கதை, எஸ் ராமகிருஷ்ணனின் அசத்தல் வசனங்கள் (குறிப்பாக பஞ்ச் வசனங்கள்), மனதையள்ளும் ரஹ்மானின் பாடல்கள்…

முன்பே சொன்னதுபோல, சில காட்சிகளில் அனிமேஷன் இல்லாத, நிஜ ரஜினியை ரசிகர்கள் வெகு வெகு அருகில் பார்த்து மகிழலாம்.

“இது அப்பா படம்… உங்களைப் போலவே நானும் அப்பாவின் அதிரடியான படங்களுக்கு ரசிகை. அந்தப் படங்களை விட அனைத்து வகையிலும் மேம்பட்ட படமாக சுல்தான் இருக்கும். நகரத்து ரசிகர்களாக இருந்தாலும், கிராமத்து ரசிகர்களாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் சுல்தான் பார்க்க திரையரங்குக்கு வரவேண்டும் என நினைக்கத் தூண்டும் அளவுக்குக் காட்சிகளில் பிரமாண்டமும் பொழுதுபோக்கு அம்சங்களும் அத்தனை சிறப்பாக வந்துள்ளன.

எடுத்த வரையில் அப்பாவுக்கு பரம திருப்தி. இன்னும் சில வாரங்களில் முழுவதுமாக படப்பிடிப்பு முடிந்துவிடும்.

இந்தப் படத்தின் பல சிறப்புகளை சர்ப்பரைஸ் பேக்கேஜாக வைத்துள்ளேன். அவை முதல் காட்சி பார்க்கும்போது மட்டும்தான் உங்களுக்கு தெரியவரும். அதுதான் அடுத்த காட்சிக்கும் உங்களை இழுத்து வரும்…”, என்கிறார் சௌந்தர்யா அசைக்க முடியாத நம்பிக்கையுடன்.

‘படத்தின் பட்ஜெட் ரூ.700 மில்லியன்… இதில் இன்னும் சில மில்லியன்கள் கூடினாலும் ஆச்சரியமில்லை…’, என்கிறார் ஆக்கர் ஸ்டுடியோவின் தலைமை அலுவலர் (மார்கெட்டிங்) கார்த்திக். எதிர்பார்க்கும் வசூல் ரூ.2.5 பில்லியன்களாம். இதிலும் கொஞ்சம் கூடினால் வியப்பில்லைதானே!

ரிலீஸ் தேதி எந்திரனுக்கு முன்பா பின்பா என்பதை மட்டும் இன்னும் முடிவு செய்யவில்லையாம்!

-வினோ

‘கிராபிக்ஸ் நாயகி’ சௌந்தர்யா!

August 6, 2009 by envazhi  
Filed under Cinema

‘கிராபிக்ஸ் நாயகி’ சௌந்தர்யா!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரு வாரிசுகளுமே தங்களுக்கு விருப்பமான துறைகளில் முத்திரை பதித்து வருகின்றனர்.

மூத்த மகள் ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் தேர்ச்சி பெற்றவர்… கலைமாமணி விருதெல்லாம் வாங்கியவர். நாட்டிய மேதை டாக்டர் பத்மா சுப்ரமணியத்திடமே பாராட்டுக்களை வென்றவர்.

இளைய மகள் சௌந்தர்யா ரஜினியோ கோலிவுட் செல்லம்.

கிராபிக்ஸ் துறையில் இளம்புயலாய் கலக்கிக் கொண்டிருப்பவர். சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் என மெகா பட்ஜெட் படங்களில் கிராபிக்ஸ் டிசைனராக பொறுப்பேற்ற அவர், இந்தியாவிலேயே முதல் முறையாக ரஜினியை வைத்து முழு நீள அனிமேஷன் திரைப்படம் ஒன்றையே உருவாக்கி வருகிறார்.

இது ஒரு சர்வதேசப் படம்… இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத ஒரு பெருமையை ரஜினிக்குத் தரப்போகும் படம்!

இந்த சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சௌந்தர்யாவை தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் 20 பேரில் ஒருவராக இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

சௌந்தர்யாவுக்கு ‘கிராபிக்ஸ் நாயகி’ என்றும் அந்தக் கட்டுரையில் பட்டம் சூட்டியுள்ளனர்.

இந்தியா டுடேவில் இடம்பெற்ற அந்த செய்தி:

10-soundarya-copy

இந்த கௌரவம் குறித்து என்ன நினைக்கிறார் சௌந்தர்யா ரஜினி?

“மிகுந்த உற்சாகமாக இருக்கிறது. நல்ல விஷயங்கள் என்றுமே மனதுக்குப் புதிய பரவசத்தையும், இன்னும் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற வேகத்தையும் தரும். அப்படித்தான் இதை எடுத்துக் கொள்கிறேன்.

எனக்கு முன் இப்போதுள்ள சவால், ‘சுல்தானை மிகச் சிறந்த படமாக அப்பாவின் ரசிகர்களுக்குத் தரவேண்டும்’, என்பதே. நிச்சயம் பெருமைக்குரிய படமாக வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது..” என்கிறார் ‘நம்ம வீட்டு இளவரசி’!

-வினோ

சன்டிவியின் வியாபார உத்தி, எந்திரனை பாதிக்குமா? – கேள்வி பதில் -6

July 31, 2009 by envazhi  
Filed under Questions

சன்டிவியின் வியாபார உத்தி, எந்திரனை பாதிக்குமா? – கேள்வி பதில்-6

ஈழத் தமிழ்ப் போராளிகளுக்குள் இப்போது மூண்டுள்ள இந்த மோதல் எந்த அளவு தமிழீழ நோக்கத்துக்கு குந்தகமாக அமையும்? ஈழத் தமிழரின் வாழ்வு மலர தாயகத் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

ப.கலையரசன், pattukalai@yahoo.com

camp-2

குழப்பத்தில்தான் தெளிவு பிறக்கும். இப்போதைக்கு புலத்தில் உள்ள போராளிகள் பிளவுபட்டிருப்பது உண்மையே.

ஆனாலும் இவை அனைத்தும் விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை, புலம்பெயர் ஈழத் தமிழர்களிடையே நிலவுகிறது. இது ஒரு தற்காலிக நிலைமைதான். ஆனால் இதெல்லாம் இப்போது முக்கியமில்லை.

இப்போது நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம், முள்கம்பி வேலிக்குள் வாழ்க்கை முடங்கிக் கிடக்கும் மூன்று லட்சம் தமிழர்களை மீளக் குடியேற்றுவதற்கான வழிமுறைகளே. நாளும் வருகிற செய்திகள், அந்த மக்களுக்கு உரிமையுள்ள பூமி பறிபோய்க் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. தமிழரின் சொந்த நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் வெகு வேகமாக நடந்து வருகின்றன.

வெறும் பார்வையாளர்களாக அனுதாப வார்த்தை உதிர்ப்பதால் ஒன்றும் நடந்துவிடாது. எனவே ஈழ தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான அரசியல் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும், புலத்தில் உள்ள போராளிகள் மற்றும் உணர்வாளர்களின் இப்போதைய நோக்கம், சிந்தனை, செயல்பாடு இதுவே.

பிரியாணி, நூறு ரூபாய்த்தாள், பிரச்சார பொழுது போக்குகளில் அமிழ்ந்து கிடக்கும் தாயகத் தமிழர்கள் இதற்கு எந்த அளவு உதவுவார்கள் என்பது புரியவில்லை.

மேடைகளிலும், டிவி விவாதங்களிலும், பத்திரிகைப் பக்கங்களிலும் வாய் கிழிய, பேனா முனை மழுங்குமளவுக்கு தமிழுணர்வு என்றும் தமிழ்த் தேசியம் என்றும் முழங்கியவர்கள், ரகசியமாக ஹம்ஸாவின் விருந்தில் கூடிக் குடித்துக் களித்து, கையூட்டோடு வீடு திரும்பும் காலம் நீளும் வரையில், இந்த பிரியாணிக் கலாச்சாரமும் நீளும் என்றே தெரிகிறது.

ஈழத் தமிழரின் இன விடுதலை தாயகத் தமிழர்களால் நடக்காது. அவர்களே கையையூன்றி கரணம் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே நிதர்சனம்!

**********

ஜெயலலிதாவின் தேர்தல் புறக்கணிப்பு திமுகவுக்கு உறைக்கும் என்கிறீர்கள்?

மலர், malaredit@gmail.com

karunanidhijayalalitha

நிச்சயம் இல்லைதான். திமுக இப்போது அதையெல்லாம் கவனிக்கிற மனநிலையில் இல்லை. காரணம், அவர்களுக்குத் தேவை வெற்றிகள் மட்டுமே…

ஈழத்தில் தமிழன் செத்தாலும், இங்குள்ளோர் எத்தனையோ பிரச்சினைகளில் தவித்தாலும், தங்கள் இலக்குகளை அடைவதில் மிகத் தெளிவாக உறுதியாக இருக்கிறார்கள். இது ஒரு வெற்றிகரமான கார்ப்பரேட் நிறுவனத் தலைமைக்கே உரிய மனநிலை.

இன்னொன்று, தார்மீகம் பற்றியெல்லாம் ஜெயலலிதா பேசக் கூடாது. கலைஞர் எதிர்வரிசையில் இருந்திருந்தால் இன்று அவரும் ஜெயலலிதா முடிவை எடுத்திருக்க வேண்டியிருந்திருக்கும். 1991-லிருந்து ஜெயலலிதாவின் அரசியலை நாமும் பார்த்து வருகிறோம்.

‘இவருக்கு அவர் பரவாயில்லை… அவருக்கு இவர் தேவலை’ என்று இந்த இருவர் நாடகத்தில் மட்டுமே தமிழர் கவனம் இருக்க வேண்டும் எனத் தெளிவாகத் திட்டமிட்டு தங்கள் காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர் திமுக-அதிமுக ‘முதலாளிகள்’.

**********

குப்பை படங்களையெல்லாம் தூக்கி நிறுத்த சன்டிவி பயன்படுத்தும் வியாபார உத்தி, நாளை ‘தலைவர்’ படத்தை பாதிக்காதா?

மணிவண்ணன், powersstar@yahoo.co.in

endhiran-stills1

து ரஜினி – ஷங்கர் படம். அது ஒன்று போதும். சூரியனுக்கு டார்ச் அடிக்க தேவையில்லை என்ற வழக்கமான பழமொழியைத்தான் உங்களுக்கு நானும் சொல்வேன். தங்கள் வர்த்தக உத்திகளைத் தாண்டிய மாபெரும் ஈர்ப்புத் தன்மை இந்தப் படத்துக்கு உண்டு என்பது சன்னுக்கே நன்கு தெரியும்!

**********

தொடர்ந்து தோல்விப்படங்களாகவே வருகின்றனவே… தமிழ் சினிமாவில் அத்தனை கதை / கற்பனை வறட்சியா?

எஸ். சக்திகுமார், shakthi41@hotmail.com

jun06_tamil

விட்டா குடுமி… அடிச்சா மொட்ட… இதுதான் பொதுவாக தமிழ் சினிமா இயக்குநர்கள் – தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்ததெல்லாம்.

பெரிய கார்ப்பரேட் ரேஞ்சுக்கு திட்டமிட்டு, பெட்டிக்கடை வியாபாரம் நடத்தும் விநோதமானவர்கள் இவர்கள். முதல் படத்திலேயே இருந்த மொத்த சரக்கும் தீர்ந்துபோய், இரண்டாவது படத்துக்கே பர்மா பஜார் டிவிடி கடையின் தயவைத் தேடும் இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!

முதல் படத்தில் வெற்றி பெற்ற இயக்குநர் நான்கு படங்கள் வரை கூட இன்றைக்கு தாக்குப் பிடிப்பதில்லை. காரணம் படிப்பதில் நாட்டமின்னை, அனுபவ அறிவு இல்லாமை.

சொல்வதெல்லாம் பொய்… சரியான திட்டமிடல் கிடையாது. மதுவுக்கும் மாதுவுக்கும் செய்யும் செலவை படத்தின் நியாயமான விளம்பரத்துக்குச் செய்ய மாட்டார்கள்.  நாடோடிகளின் வெற்றிக்குக் காரணம் சரியான ஸ்கிரிப்ட் மட்டுமல்ல… அதை சந்தைப்படுத்திய முறையும் கூட.

சில பிஆர்ஓக்களின் தவறான வழிகாட்டுதலில் கடைசி நேரத்தில் இவர்களே தங்கள் படத்துக்கு தூக்குக் கயிறு மாட்டி விடுகிறார்கள். அப்புறம் எங்கே உருப்படும் இவர்கள் எடுக்கும் படங்கள்?

**********

வறாக நினைக்க வேண்டாம். என்னைப் போன்ற பல ரசிகர்களுக்கு உள்ள சந்தேகம் இது. சுல்தான் வெற்றிப் படமாக அமையும் என நம்புகிறீர்களா?

சிவராம், sivarajini@gmail.com

sultan

ந்தப் படம் வழக்கமான படம் அல்ல… ஆனால் ஒரு ரஜினி படத்துக்கான அத்தனை குதூகலமான அம்சங்களும் படத்தில் இருக்கும். படத்தில் வரும் ரஜினியின் உருவம் அனிமேஷன் என்றாலும், நிஜத்தில் அந்தப் பாத்திரமாக ரஜினிதான் நடித்திருக்கிறார்.

இன்னொன்று இன்றைய தலைமுறைக்கு மிகவும் பரிச்சயமான, கடந்த தலைமுறையை ஆச்சர்யப்படுத்தும் தொழில்நுட்பத்தில் இந்தப் படம் தயாராகிறது.

“இந்தியாவில் இதுவரை யாரும் மேற்கொண்டிராத ஒரு வித்தியாசமான, ஆனால் ஜனரஞ்சகமான முயற்சி இது. அப்பாவின் படங்களுக்கே உரிய வெற்றியை நிச்சயம் ஈட்டும்!” என்கிறார் சௌந்தர்யா ரஜினி.

ஒரு ரஜினி ரசிகருக்கு வேறென்ன வேண்டும்… கொண்டாடத் தயாராக வேண்டியதுதானே!

-வினோ

‘நான் பறக்கிற இலை இல்ல… மலை, அசைக்க முடியாது!’

May 13, 2009 by envazhi  
Filed under Featured

‘நான் பறக்கிற இலை இல்ல… மலை, அசைக்க முடியாது!’  – இது சுல்தான் பஞ்ச்!

ரம்ப காலத்தில் நடை உடை பாவனை தவிர, குறிப்பாக ஏதாவது ஒரு மேனரிஸத்தை ஸ்டைல் என்று தனித்துக் காட்டி வந்தார் ரஜினி.

ஆனால் ஒரு கட்டத்தில் ரஜினியின் நடை, பேச்சு என எல்லாமே ஸ்டைல்தான் என்பதைப் புரிந்து கொண்ட ரசிகர்கள், ரஜினி என்ற அற்புத நடிகரை ‘ஸ்டைல் சாம்ராட்’டாக கொண்டாடி வருகின்றனர். அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் இளைஞர்களின் உலகில் கம்ப்யூட்டர் மொழி மாதிரி படுவேகமாகப் பரவி வருகிறது.thumbcms

அதே போலத்தான், அவரது முத்திரை வசனங்களும். ‘நான் ஒரு தடவை சொன்னா…’ வசனத்துக்குள்ள ஈர்ப்பு என்னவென்பதை இப்போதும் உணர முடியும்.

ஆனால், விடலை ஹீரோக்களெல்லாம் அவர் பாணியில் விரல் சொடுக்கிப் பேசத் துவங்க, தன் படங்களில் பஞ்ச் வசனங்கள் பேசுவதைக் குறைத்துக் கொண்டவர், தன்னைப் பின்பற்றும் இளைய நடிகர்களை ஒருவித சந்தோஷத்துடன் உற்சாகப்படுத்த ஆரம்பித்தார். எந்தக் கலைஞனிடமும் காண முடியாத அரிய குணம் இது.

இன்று ரஜினி பேசுவதில் எது முத்திரை வசனம் (பஞ்ச் டயலாக்), எது சாதாரண வசனம் என்று பிரிக்க முடியாமல் போய்விட்டது. அவர் சாதாரணமாகப் பேசினாலே இப்போது பஞ்ச் வசனம்தான் என்பதால் ரசிகர்களும் தனியாக பஞ்ச் வசனம் கேட்பதில்லை!

ஆனாலும் சுல்தான் படத்தில் சில பஞ்ச் வசனங்களை தந்தைக்காக உருவாக்கச் சொல்லியுள்ளார் சௌந்தர்யா. இந்த வசனங்களை எழுதியிருப்பவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இதைத் தவிர சௌந்தர்யாவே தந்தைக்காக எழுதியுள்ள ஒரு பஞ்ச் வசனமும் உண்டு.

அது:

‘அடிக்கிற காத்துல பறக்கிற இலை இல்லடா இந்த சுல்தான். மலை, அசைக்க முடியாது…!’

படம் எப்போது ரிலீஸ்?

ஆரம்பத்தில் மே, பிறகு ஜூன், ஜூலை என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது ‘எந்திரன்’ ரிலீஸ் 2010-ல் என்பது உறுதியாகிவிட்டதால், படத்தை தீபாவளிப் பரிசாக தரும் திட்டத்திலிருக்கிறாராம் சௌந்தர்யா.

soundarya3“எதையும் திட்டமிட்டு, சரியான தரத்துடன் தரவேண்டும் என்பதே என் விருப்பம். அப்பாவும் அதைத்தான் விரும்புவார். அனிமேஷன் வேலைகள் நடக்கின்றன. கடந்த வருடம் ஜுன் மாதம் படப்பிடிப்பு துவங்கியது. இப்போதைக்கு 70 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. புத்தாண்டுக்கு முன் ரசிகர்களுக்கு தரப்படும் ஒரு வித்தியாசமான பரிசாக இந்தப் படம் இருக்கட்டுமே…” என்று புன்னகைக்கிறார் இந்த சூப்பர் ஸ்டார் வீட்டு இளவரசி.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் இன்னும் ஒரு பாடல் மட்டுமே பாக்கி. பின்னணி இசையை அவரே கொஞ்சம் அவகாசமெடுத்து செய்து தருவதாகக் கூறியுள்ளாராம்.

ரஜினியின் அறிமுக பாடல் இதுவரை எந்தப் படத்திலும் இடம்பெறாத அளவு ஸ்டைலாகவும் பிரம்மாண்டமாகவும் எடுக்கப்பட்டுள்ளதாம்.

படத்தில் இடம்பெறுவது முழுக்க முழுக்க ரஜினியின் சொந்தகுரல்தான். அனிமேஷன் ரஜினிக்கு ஜோடி விஜயலட்சுமி. காமெடிக்கு மயில்சாமி, வில்லத்தனத்துக்கு ராகுல்தேவ் என புத்தம் புதிய கூட்டணி.

இதில் ரஜினியின் அனிமேஷன் உருவம் “சிக்ஸ் பேக்”சில் கட்டுமஸ்தான தேகத்தோடு உருவாக்கப்பட்டுள்ளதாம். (படையப்பாவிலேயே அவர் சிக்ஸ் பேக் ஸ்டைலில் தோன்றிவிட்டார்!).

படம் வெளியாகும்போதே, சுல்தான் படத்தை உருவாக்கிய விதம் குறித்த, ‘மேக்கிங் ஆப் சுல்தான்’ படமும் திரையரங்குகளில் வெளியிடப்படும்.

தமிழ், தெலுங்கு, இந்தியில் நேரடியாக வெளியாகும் சுல்தான், ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் வெளியாகிறது.

-வினோ

‘ஆக்கர் ஸ்டூடியோ’விலிருந்து விலகவில்லை! – வார்னர் பிரதர்ஸ்

May 13, 2009 by envazhi  
Filed under Cinema

‘ஆக்கர் ஸ்டூடியோ’விலிருந்து விலகவில்லை! – வார்னர் பிரதர்ஸ் அறிவிப்பு

சௌந்தர்யா ரஜினியின் ஆக்கர்ஸ் ஸ்டுடியோவுடனான கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகியதாக சொல்லப்படுபவை அனைத்தும் ஆதாரமற்றவை, வதந்திகள் என அறிவித்துள்ளது ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். soundaryarajini

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிக்கு சொந்தமான நிறுவனம், ஆக்கர் ஸ்டூடியோ. இந்த நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் இதர தென்னிந்திய மொழிகளில் நிறைய படங்கள் தயாரிக்கப் போவதாக வார்னர் பிரதர்ஸ் அறிவித்திருந்தது.

தமிழில் முதல்படமாக ‘கோவா’வை இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே போல சூப்பர் ஸ்டார் ரஜினியின் முதல் அனிமேஷன் படமான சுல்தான் – தி வாரியர் படத்தை வார்னர் பிரதர்ஸ் உலகம் முழுக்க வெளியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆக்கர் ஸ்டூடியோவில் இருந்து வார்னர் பிரதர்ஸ் விலகிவிட்டதாக ஒரு வதந்தி பரவியது.

ஆனால் ‘வார்னர் பிரதர்ஸ் – ஆக்கர் ஸ்டுடியோ கூட்டணியில் பிரிவு இல்லை’ என்பதை ஏற்கெனவே நாம் செய்தியாக தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். இதுகுறித்து சௌந்தர்யாவின் பேட்டியையும் நாம் வெளியிட்டிருந்தோம்.

இப்போது வார்னர் பிரதர்ஸ் நிறுவனமே இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரிவு குறித்த செய்தி உண்மையல்ல என்று வார்னர் பிரதர்ஸ் துணைத்தலைவர் ரிச்சர்டு பாக்ஸ் கூறியுள்ளார்.

இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது:

“ஆக்கர் ஸ்டூடியோவுடன் நாங்கள் இணைந்து, தொடர்ந்து பணிபுரிகிறோம். எங்கள் 2 நிறுவனங்களும் இணைந்து தென்னிந்திய மொழிகளில் பல படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விட்டன.

சரியான நேரத்தில், எங்கள் திட்டங்களை அறிவிப்போம். ஆக்கர் ஸ்டூடியோவில் இருந்து நாங்கள் விலகிவிட்டதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை,” என்றார் ரிச்சர்ட் பாக்ஸ்.

இதுகுறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது:

“ஆக்கர் ஸ்டூடியோவும், வார்னர் பிரதர்சும் இணைந்து வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறன. எங்கள் 2 நிறுவனங்களுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது.

எங்களின் புதிய திட்டங்களை மிக விரைவில் அறிவிக்க இருக்கிறோம். எங்களுக்கு எதிராக வதந்திகளும், கற்பனை செய்திகளும் பரப்பப்பட்டுள்ளன. அதை யாரும் நம்ப வேண்டாம். இது குறித்து ஏற்கெனவே பல முறை நான் தெளிவாக அறிவித்துள்ளேன். ஆனால் உண்மையைச் சொல்லும்போது அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். வதந்திகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். என்னிடம் எப்போது வேண்டுமானாலும் விசாரிக்கலாம்…”, என்றார் சௌந்தர்யா.

Related Posts with Thumbnails