முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

நித்யானந்தா மீது அப்படியென்ன கடுப்பு உங்களுக்கு? – கேள்வி – பதில் -11

April 9, 2010 by envazhi  
Filed under Questions

நித்யானந்தா மீது அப்படியென்ன கடுப்பு உங்களுக்கு? – கேள்வி – பதில் -11

கேள்வி: ஏன் அடிக்கடி ‘கேள்வி – பதில்’ ஆப்ஸென்டாகிவிடுகிறது?

ரஞ்சன்

பதில்: கலைஞர் அளவுக்கு நான் தேர்ந்தவன் அல்ல, நானே கேட்டு.. நானே பதிலும் சொல்ல!

கேள்வி: நித்யானந்தா மீது அப்படியென்ன கடுப்பு உங்களுக்கு?

இரா. வேதமூர்த்தி

பதில்: நித்யானந்தா மீது மட்டுமல்ல… பொதுவாக மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான புரோக்கராய் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும் கார்ப்பரேட் சாமியார்கள் யார் மீதும் எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை.

சனாதன தர்மம் பேசும் சங்கராச்சாரிகள் மீதும் நமக்கு கடுகளவு மரியாதையும் கிடையாது.

இவர்கள் மட்டுமல்ல, சட்டத்துக்கும் தர்மத்துக்கும் புறம்பான காரியங்களை கடவுள் மற்றும் மதங்களின் பெயரால் செய்து கொண்டிருக்கும் போலிச் சாமியார்கள், போலிப் பாதிரியார்கள், போலி இமாம்கள் என யாரையும் இந்த சமூகம் அனுமதிக்கக்கூடாது என்ற கருத்துக் கொண்ட நமக்கு, நித்யானந்தனும் ஒன்றுதான், கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு குண்டு வைக்கும் தீவிரவாதியும் ஒன்றுதான்.

கேள்வி: நித்யானந்தாவை அம்பலப்படுத்திவிட்டது சன் டிவி. அவர்களுக்குள் இருந்த பகைக்குள் மக்களை பலிகடாவாக்கி விட்டார்கள். இதில் கண்ட பலன் இதுதானே? சட்டப்படி என்ன செய்ய முடிந்தது?

எம் தினகர்

பதில்: சில தினங்களுக்கு முன், மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நான்கைந்து பெண்கள் சற்று சத்தமாக இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்:

“சாமியாராம் சாமியார்… அதான் பார்த்தோமே முந்தா நாள் ராத்திரி. சின்னப் பையனா இருந்தாலும் எவ்வளவு கருத்தா பேசறான்னு பார்த்தா, அவன் சின்னபுத்தி சிரிப்பா சிரிச்சிடுச்சே… இனிமே சாமியார் கீமியார்னு எவனாச்சும் வந்தா, அவன் மேல விழுற முதல் துடைப்பம் நான் போடறதாத்தான் இருக்கும் பாத்துக்க…”

-ஏதோ சுவாரஸ்யத்துக்காக சொன்னதில்லை இது. நிஜமாகவே நான் பார்த்த / கேட்ட ஒரு விஷயம்.

இதற்கு சில நாள்கள் கழித்து, ஜெயங்கொண்டம் அருகே சில பெண்கள் சொன்னது:

“இத பாருங்கடி… இனி சாமிய பாக்க கோயிலுக்குப் போறதோட நிறுத்திக்கணும்… சாமியார பாக்கப் போனா, இப்படித்தான் சந்தி சிரிச்சிப் போகும்…”

கேட்க சந்தோஷமாக இருந்தது.

நித்யானந்தன் விவகாரத்தை பத்திரிகையாளர்கள் மசாலா தடவி எழுதுகிறார்கள், காசு பார்க்கும் ஆசையில் காமம் தடவி எழுதுகிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டாலும், இந்தச் செய்திகள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்த்தோமோ அது ஓரளவுக்கு நடந்திருக்கிறது…. என்ற திருப்தி.

ஆனால் இது போதாது… மக்கள் சாமியார்களை முற்றாக ஒதுக்கித் தள்ள வேண்டும்.

அனைத்துப் பற்றுக்களையும் துறந்த சாமியார்களுக்கு இளம் பெண்களிடத்தில் மட்டும் எதற்கு அளவு கடந்த பற்று?

காசு பணம் சேர்ப்பதில் ஒரு குடும்பஸ்தனைக் காட்டிலும் அதிக வெறி எதற்கு?

ஊரை ஆக்கிரமித்து ஆஸ்ரமம், உலகெல்லாம் கிளைகள் எதற்கு?

கிட்டத்தட்ட ஏரியா தாதாக்கள் போல, ஆளுக்கொரு பகுதியைப் பிரித்துக் கொண்டு ஓடி ஓடி மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவது எதற்கு?

இந்தக் கேள்விகளை அனைத்து மக்களும் தீவிரமாகக் கேட்க ஆரம்பித்துவிட்டால் நித்யானந்தன்களும், ஜெயேந்திரன்களும், சதீஷ் (நாராயணி!)களும் உருவாகாமலே போய்விடுவார்கள் அல்லவா!

சட்டம் தன் வேலையை முழுமையாகச் செய்ய காலமாகலாம். ஆனால் அதற்குள் சமூத்தின் மனநிலை மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை மீடியாவின் ஒரு பகுதி சரியாகவே செய்கிறது.

-வினோ

இளைய சூப்பர் ஸ்டார்??-கேள்வி பதில்-10

December 11, 2009 by envazhi  
Filed under Questions

‘இளைய சூப்பர் ஸ்டார் என்று ஒருவர் பெயர் மாற்றிக் கொண்டதைக் கவனித்தீர்களா?’

Rajini-spl-1

கேள்வி: இளைய சூப்பர் ஸ்டார் என்று ஒருவர் பெயர் மாற்றிக் கொண்டதைக் கவனித்தீர்களா… அதுபற்றி எதுவும் எழுத மாட்டீர்களா?

வே செந்தில்குமார்

பதில்: என்னதான் பட்டுக் குஞ்சம் கட்டிக் கொண்டாலும் விளக்குமாறு விளக்குமாறுதான்… இப்படிச் சொல்வதால் விளக்குமாறு கோபித்துக் கொள்ளப் போகிறது!

பட்டங்களுக்கும் பதவிகளுக்கும் அப்பாற்பட்ட மனிதர் ரஜினி. அவரைச் சிறுமைப்படுத்த முயலும் யாரும் சிறுமைப்பட்டுப் போவார்கள். அவர் பெயரை தவறாகப் பயன்படுத்தி பப்ளிசிட்டி தேடுபவர்கள் அதற்கான பலனை அடைவார்கள்!

மீண்டும் சொல்கிறோம்… எண் சாண் உடம்புக்கும் தலை ஒன்றுதான்!

***

கேள்வி: ரஜினி மீண்டும் ரசிகர்களைச் சந்திப்பாரா?

ரஞ்சன்

பதில்: ‘நேரம் வரும்போது கட்டாயம் சந்திப்பார்!’ – இது தலைமை மன்ற பதில்.

***

கேள்வி: ரஜினி அரசியலுக்கு வராவிட்டால்…?

சுரேஷ்

பதில்: அவர் அரசியலுக்கு வராவிட்டால் நஷ்டம் மக்களுக்குத்தான். மற்றபடி ரசிகர்கள் மனதைத் தேற்றிக் கொண்டு தலைவர் வழி செல்லத் தயாராகிவிடுவார்கள். இதுதான் எதார்த்தம்.

***

கேள்வி: அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

-ரவிஷங்கர்

திரு ரஜினிகாந்த்!

குமுதம் கதைகளும் தலைமை மன்ற மறுப்பும்!

November 21, 2009 by envazhi  
Filed under Questions

குமுதம் கதைகளும் தலைமை மன்ற மறுப்பும்! – கேள்வி பதில் பகுதி

மீண்டும் குமுதமும் விகடனும் ஆரம்பித்துவிட்டார்களே… தயவு செய்து இந்தச் செய்திகளில் எந்த அளவு உண்மை என்று தலைமை மன்றத்தில் விசாரித்து சொல்லவும்…!

எம் மாரியப்பன், ரசிகர், தூத்துக்குடி

03

அந்தக் கட்டுரையின் முகப்பு படம்...

வேறொன்றுமில்லை… எந்திரன் ரிலீஸ் நெருங்குகிறதே.. என்ற ஒற்றை வரி பதிலே இதற்குப் போதும்தான்.

இருந்தாலும் இதற்கு விரிவான பதிலாக இன்று ‘ரஜினிபேன்ஸ் டாட்காம்’ தளத்தில் வெளியாகியுள்ள விளக்கம் மற்றும் தலைமை மன்ற நிர்வாகி சுதாகரின் பதிலையே உங்களுக்கும் தர விரும்புகிறேன்.

வார – மாத – புலனாய்வுப் பத்திரிகைகளில் ரஜினியைப் பற்றி வரும் சாமர்த்திய ஜோடிப்புகளைப் படித்து, அதை தலைமை மன்றத்திடம் விசாரித்து பதிலெழுதி நமக்கே களைப்பாகிவிட்டது… அதேநேரம் தலைவர் இதுபோன்ற கட்டுரைகள் மற்றும் ஜோடிப்புகளுக்கு விளக்கம் சொல்லாமல் தன்வழியில் போய்க் கொண்டே இருப்பதன் அர்த்தமும் புரிந்தது…

குமுதம் ரிப்போர்ட்டர், ரஜினி வெளி மாநிலத்தில் போய் ரகசியமாக 60ம் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கட்டுரை வெளியிட, அடுத்த நாளே குமுதம் வார இதழ் இன்னொரு கவர் ஸ்டோரி வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரையிலும் Pucca Misleading மட்டுமே நோக்கமாக இருக்கிறது.

தலைவர் படப்பையில் ஆஸ்ரமம் கட்டுவதாகவும், எந்திரன் மட்டுமே அவரது கடைசிப் படம் என்றும் கட்டுரை தெரிவிக்கிறது.

எந்திரனுக்குப் பிறகு, அமைதியாக தலைவர் இந்த ஆஸ்ரமம் பக்கம் ஒதுங்கிவிடுவார் என்றும், தனது ரசிகர்களையும் அவர் ஆன்மிகத்துக்கே இழுக்கப் போகிறார் என்றும், ரஜினியின் கூடவே இருந்து கவனித்தவர்கள் மாதிரி புனைந்து தள்ளியிருக்கிறார்கள்.

ரஜினி ஆஸ்ரமம் கட்டுவதும், ஆன்மீகத்தை நேசிப்பதும் ரசிகர்களுக்குப் புதிய விஷயமல்ல. இவை பல பத்திரிகைகளில் வெளியாகிவிட்ட செய்திகள். இதற்கும் அவரது எதிர்கால திட்டங்களுக்கும் தேவையற்ற முடிச்சுக்களைப் போட்டுக் குழப்பி வருகின்றன பத்திரிகைகள். அதுவுமில்லாமல் தனது ஆன்மீகத்தை அவர் பப்ளிசிட்டி ஸ்டன்டாக பயன்படுத்தியதில்லை. யார் மீதும் திணிக்கவும் இதுவரை முற்பட்டதில்லை. அரசியல், மதங்கள், கடவுள்களைத் தாண்டிய ரசிகர்களே அவரைச் சுற்றி இருப்பவர்கள் என்ற அடிப்படையைக் கூட இவர்கள் புரிந்து கொள்வதில்லை!

‘எந்திரன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து தலைவர் டப்பிங் வரை போய்விட்டார்’ என படத்தின் பிஆர்ஓ நிகில் கூறியுள்ளார். எனவே படம் வெளியாகும் தருணத்திலோ, வெளியான பிறகோ தலைவர் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கவிருக்கும் நிலையில், அவரவர் மனதுக்கேற்ப கதைகள் புனைந்து வருகிறார்கள்.

தேவையற்ற, கற்பனையான விஷயங்களைப் பெரிதாக்கி, உள் நிலவரம் என்னவென்று தெரியாத ரசிகர்களை கற்பனையான உலகத்தில் மிதக்கவிட்டு, படம் வெளியாகிற தருணங்களில் வேண்டுமென்றே தாக்குதலைத் தொடுப்பது இவர்களின் சமீபத்திய ட்ரெண்ட். ரசிகர்கள் சரியான புரிதலோடு இருக்க வேண்டும்.

இது குறித்து தலைமை மன்ற நிர்வாகி சுதாகரிடம் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

“எந்த விஷயமாக இருந்தாலும் தலைவர் உரிய நேரத்தில் அறிவிப்பார். இந்த கட்டுரைகள் பற்றி எந்த கருத்தும் கூற விரும்பவில்லை, அவை முற்றிலும் கற்பனையானவை என்பதைத் தவிர!” என்றார் பளிச்சென்று!

குறிப்பு: குமுதம் இதழில் வெளியான கட்டுரையின் பக்கங்களை நமக்கு ஸ்கேன் செய்து அனுப்பிய நண்பர் மாரியப்பனுக்கு நன்றி.

******

வினோ-

உசுப்பேற்ற வேண்டாம், கொஞ்சம் விசாரித்துவிட்டுச் சொல்லுங்கள்… எந்திரன் ஏப்ரல் வெளியீடா?

சுரேஷ்குமார், திருச்சி

SS-thalaivar-2

தை இப்போதே சொல்வது கஷ்டம். ஆனால் சன் பிக்சர்ஸ் வைத்திருக்கும் லைன்அப்பைப் பார்த்தால் அதற்கு வாய்ப்புகள் குறைவு. காரணம் வேட்டைக்காரன், ஜக்குபாய் உள்ளிட்ட 4 படங்களுக்கு தலா ஒரு மாதமாவது அவர்கள் விளம்பரம் தந்து கரையே(ற்)ற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் எந்திரனுக்காக எந்த லைன்அப்பும் மாறும்!

******

மிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வழியே இல்லையா… இன்னும் எத்தனை காலத்துக்கு பிரியாணி, குவார்ட்டருக்கு தங்களை விற்றுக் கொள்ளப்போகிறார்கள் வாக்காளர்கள்? (உடனே. ரஜினி வந்தால் மாறும் என்று கூறி கடுப்பேற்றாதீர்கள்!)

ஷண்முகராஜன், திருமுல்லைவாயல், சென்னை

rajini1

நிச்சயம் இப்போதைக்கு இல்லை. குறைந்தது இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ளதல்லவா! (நீங்க எதிர்ப்பார்த்த பதிலை நான் சொல்லவே இல்லையே!!)

-வினோ

ரஜினி ரசிகர்கள் ‘அரசியல் அநாதைகளா?’ – கேள்வி பதில்-7

September 1, 2009 by envazhi  
Filed under Questions

ரஜினி ரசிகர்கள் ‘அரசியல் அநாதைகளா?’ – கேள்வி பதில்-7

வினோ… காங்கிரஸ்காரர்களின் சமீபத்திய பேச்சுக்களை கவனித்தீர்களா… ரஜினி ரசிகர்களை இழுங்கள், அவர்கள் அரசியல் அநாதைகள் என பகிரங்கமாகவே கார்த்தி சிதம்பரம் தாக்கியுள்ளாரே?

(ரஜினி தேவா, சென்னை-14)

வினோ… அதான் விஜய்காந்த், விஜய்னு ஆள்பிடிச்சிக்கிட்டுப் போறாங்களே… அப்புறம் எதுக்கு நம்மளை வேற சீண்டிப் பாக்குறார் இந்த கார்த்தி சிதம்பரம்… ஒரு செருப்படி பதில் தரணும் இவங்களுக்கு!

(கே.சரவணன், கண்ணதாசன் நகர்)

வினோ…

பார்த்தீர்களா, அந்த ****** கார்த்திக் சிதம்பரத்தின் பேச்சை…!

(கோகுல்தாஸ்)

fans
ன்னைப் போலவே பிறரையும் நினைக்கும் குணம் கார்த்தி சிதம்பரத்துக்கு… என்ன செய்வது!

அரசியல் அநாதை யாரென்று அவர் கண்ணாடி முன் நின்றபடி கேட்டுக் கொள்ளட்டும். ஓட்டு வேண்டும், ஆதரவு வேண்டும் என்று இவர்கள்தான் நம்மைத் தேடி வருகிறார்களே தவிர, பதவி வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் அவர்களைத் தேடிப் போகவில்லை. 1996 தேர்தலிலிருந்து யாருடைய யார் அரசியல் அநாதை என்பது இப்போது புரிந்திருக்குமே…

அது சரி… எல்லாம் இருக்கும் இந்த கோமானுக்கு அநாதைகளின் ஆதரவு எதற்கு!

குறிப்பு: இன்னும் சில மணி நேரங்களிலோ அல்லது நாளையோ தான் பேசியதை மறுத்து அறி்க்கைவிட்டாலும் விடுவார் இவர்… அல்லது இவரது அப்பா அப்படி விட வைப்பார்!

**********

ண்பர் வினோ…

மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்… கந்தசாமி வெற்றிப் படமா? உங்கள் தலைவர் ஏன் இந்த மாதிரி படங்களுக்கெல்லாம் சர்டிபிகேட் தருகிறார்?

(ஆர் எஸ்)

rajini-2

ன்னங்க இது… குசேலன்ல வர்ற ஆர்எஸ் மாதிரி கேள்வி கேட்கறீங்க (அவர் கடைசில, ‘இப்படி ஒரு மனுசனுக்கு ரசிகன்னு பெருமையா சொல்லிக்குவேன்’ என்பார். நீங்களும் அப்படி உணர்ந்து சொல்வீர்கள் நண்பரே…!).

ரஜினி சார் விரும்பிப் பார்க்கும் படங்கள் சில… அவர் பார்க்க வேண்டும் என விரும்பி மற்றவர்கள் கூப்பிடுவதால் பார்க்கும் படங்கள் சில.

சில படங்களை பார்த்துவிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார். சில படங்களை அதன் தயாரிப்பாளர்கள் அல்லது கலைஞர்கள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக பாராட்டுவார்.

உண்மையில் அவர் ஒரு மிகச் சிறந்த விமர்சகரும்கூட. படத்தின் குறைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் தனியாகவும், நிறைகளை பகிரங்கமாகவும் சொல்பவர்.

கந்தசாமியின் குறைகளை மிக நாசூக்காக தாணுவுக்கு சுட்டிக்காட்டியவர், அதன் தயாரிப்பாளர் தாணு, விக்ரமின் முதலீடு, உழைப்புக்காகப் பாராட்டினார். இந்த துறையின் தலைமகனான அவர் வேறு எப்படி நடந்து கொள்வார் என எதிர்பார்க்கமுடியும் சொல்லுங்கள்…

அடுத்து கந்தசாமியின் வெற்றி பற்றி…

அதன் தயாரிப்பாளர் நேற்று முன் தினம் அவரது லெட்டர் பேடிலேயே ஒரு விவரம் கொடுத்திருந்தார். எந்தெந்த ஊரில், எந்தெந்த நாட்டில் எவ்வளவு வசூல் என்று.

இதுவரை மொத்தம் ரூ.37 கோடி என்று பகிரங்கமாகக் கொடுத்திருக்கிறார். இது கந்தசாமியின் தயாரிப்புச் செலவை விட அதிகம். அப்படியெனில் இது வெற்றிப் படம்தானே!

-வினோ

சன்டிவியின் வியாபார உத்தி, எந்திரனை பாதிக்குமா? – கேள்வி பதில் -6

July 31, 2009 by envazhi  
Filed under Questions

சன்டிவியின் வியாபார உத்தி, எந்திரனை பாதிக்குமா? – கேள்வி பதில்-6

ஈழத் தமிழ்ப் போராளிகளுக்குள் இப்போது மூண்டுள்ள இந்த மோதல் எந்த அளவு தமிழீழ நோக்கத்துக்கு குந்தகமாக அமையும்? ஈழத் தமிழரின் வாழ்வு மலர தாயகத் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

ப.கலையரசன், pattukalai@yahoo.com

camp-2

குழப்பத்தில்தான் தெளிவு பிறக்கும். இப்போதைக்கு புலத்தில் உள்ள போராளிகள் பிளவுபட்டிருப்பது உண்மையே.

ஆனாலும் இவை அனைத்தும் விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை, புலம்பெயர் ஈழத் தமிழர்களிடையே நிலவுகிறது. இது ஒரு தற்காலிக நிலைமைதான். ஆனால் இதெல்லாம் இப்போது முக்கியமில்லை.

இப்போது நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம், முள்கம்பி வேலிக்குள் வாழ்க்கை முடங்கிக் கிடக்கும் மூன்று லட்சம் தமிழர்களை மீளக் குடியேற்றுவதற்கான வழிமுறைகளே. நாளும் வருகிற செய்திகள், அந்த மக்களுக்கு உரிமையுள்ள பூமி பறிபோய்க் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. தமிழரின் சொந்த நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் வெகு வேகமாக நடந்து வருகின்றன.

வெறும் பார்வையாளர்களாக அனுதாப வார்த்தை உதிர்ப்பதால் ஒன்றும் நடந்துவிடாது. எனவே ஈழ தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான அரசியல் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும், புலத்தில் உள்ள போராளிகள் மற்றும் உணர்வாளர்களின் இப்போதைய நோக்கம், சிந்தனை, செயல்பாடு இதுவே.

பிரியாணி, நூறு ரூபாய்த்தாள், பிரச்சார பொழுது போக்குகளில் அமிழ்ந்து கிடக்கும் தாயகத் தமிழர்கள் இதற்கு எந்த அளவு உதவுவார்கள் என்பது புரியவில்லை.

மேடைகளிலும், டிவி விவாதங்களிலும், பத்திரிகைப் பக்கங்களிலும் வாய் கிழிய, பேனா முனை மழுங்குமளவுக்கு தமிழுணர்வு என்றும் தமிழ்த் தேசியம் என்றும் முழங்கியவர்கள், ரகசியமாக ஹம்ஸாவின் விருந்தில் கூடிக் குடித்துக் களித்து, கையூட்டோடு வீடு திரும்பும் காலம் நீளும் வரையில், இந்த பிரியாணிக் கலாச்சாரமும் நீளும் என்றே தெரிகிறது.

ஈழத் தமிழரின் இன விடுதலை தாயகத் தமிழர்களால் நடக்காது. அவர்களே கையையூன்றி கரணம் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே நிதர்சனம்!

**********

ஜெயலலிதாவின் தேர்தல் புறக்கணிப்பு திமுகவுக்கு உறைக்கும் என்கிறீர்கள்?

மலர், malaredit@gmail.com

karunanidhijayalalitha

நிச்சயம் இல்லைதான். திமுக இப்போது அதையெல்லாம் கவனிக்கிற மனநிலையில் இல்லை. காரணம், அவர்களுக்குத் தேவை வெற்றிகள் மட்டுமே…

ஈழத்தில் தமிழன் செத்தாலும், இங்குள்ளோர் எத்தனையோ பிரச்சினைகளில் தவித்தாலும், தங்கள் இலக்குகளை அடைவதில் மிகத் தெளிவாக உறுதியாக இருக்கிறார்கள். இது ஒரு வெற்றிகரமான கார்ப்பரேட் நிறுவனத் தலைமைக்கே உரிய மனநிலை.

இன்னொன்று, தார்மீகம் பற்றியெல்லாம் ஜெயலலிதா பேசக் கூடாது. கலைஞர் எதிர்வரிசையில் இருந்திருந்தால் இன்று அவரும் ஜெயலலிதா முடிவை எடுத்திருக்க வேண்டியிருந்திருக்கும். 1991-லிருந்து ஜெயலலிதாவின் அரசியலை நாமும் பார்த்து வருகிறோம்.

‘இவருக்கு அவர் பரவாயில்லை… அவருக்கு இவர் தேவலை’ என்று இந்த இருவர் நாடகத்தில் மட்டுமே தமிழர் கவனம் இருக்க வேண்டும் எனத் தெளிவாகத் திட்டமிட்டு தங்கள் காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர் திமுக-அதிமுக ‘முதலாளிகள்’.

**********

குப்பை படங்களையெல்லாம் தூக்கி நிறுத்த சன்டிவி பயன்படுத்தும் வியாபார உத்தி, நாளை ‘தலைவர்’ படத்தை பாதிக்காதா?

மணிவண்ணன், powersstar@yahoo.co.in

endhiran-stills1

து ரஜினி – ஷங்கர் படம். அது ஒன்று போதும். சூரியனுக்கு டார்ச் அடிக்க தேவையில்லை என்ற வழக்கமான பழமொழியைத்தான் உங்களுக்கு நானும் சொல்வேன். தங்கள் வர்த்தக உத்திகளைத் தாண்டிய மாபெரும் ஈர்ப்புத் தன்மை இந்தப் படத்துக்கு உண்டு என்பது சன்னுக்கே நன்கு தெரியும்!

**********

தொடர்ந்து தோல்விப்படங்களாகவே வருகின்றனவே… தமிழ் சினிமாவில் அத்தனை கதை / கற்பனை வறட்சியா?

எஸ். சக்திகுமார், shakthi41@hotmail.com

jun06_tamil

விட்டா குடுமி… அடிச்சா மொட்ட… இதுதான் பொதுவாக தமிழ் சினிமா இயக்குநர்கள் – தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்ததெல்லாம்.

பெரிய கார்ப்பரேட் ரேஞ்சுக்கு திட்டமிட்டு, பெட்டிக்கடை வியாபாரம் நடத்தும் விநோதமானவர்கள் இவர்கள். முதல் படத்திலேயே இருந்த மொத்த சரக்கும் தீர்ந்துபோய், இரண்டாவது படத்துக்கே பர்மா பஜார் டிவிடி கடையின் தயவைத் தேடும் இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!

முதல் படத்தில் வெற்றி பெற்ற இயக்குநர் நான்கு படங்கள் வரை கூட இன்றைக்கு தாக்குப் பிடிப்பதில்லை. காரணம் படிப்பதில் நாட்டமின்னை, அனுபவ அறிவு இல்லாமை.

சொல்வதெல்லாம் பொய்… சரியான திட்டமிடல் கிடையாது. மதுவுக்கும் மாதுவுக்கும் செய்யும் செலவை படத்தின் நியாயமான விளம்பரத்துக்குச் செய்ய மாட்டார்கள்.  நாடோடிகளின் வெற்றிக்குக் காரணம் சரியான ஸ்கிரிப்ட் மட்டுமல்ல… அதை சந்தைப்படுத்திய முறையும் கூட.

சில பிஆர்ஓக்களின் தவறான வழிகாட்டுதலில் கடைசி நேரத்தில் இவர்களே தங்கள் படத்துக்கு தூக்குக் கயிறு மாட்டி விடுகிறார்கள். அப்புறம் எங்கே உருப்படும் இவர்கள் எடுக்கும் படங்கள்?

**********

வறாக நினைக்க வேண்டாம். என்னைப் போன்ற பல ரசிகர்களுக்கு உள்ள சந்தேகம் இது. சுல்தான் வெற்றிப் படமாக அமையும் என நம்புகிறீர்களா?

சிவராம், sivarajini@gmail.com

sultan

ந்தப் படம் வழக்கமான படம் அல்ல… ஆனால் ஒரு ரஜினி படத்துக்கான அத்தனை குதூகலமான அம்சங்களும் படத்தில் இருக்கும். படத்தில் வரும் ரஜினியின் உருவம் அனிமேஷன் என்றாலும், நிஜத்தில் அந்தப் பாத்திரமாக ரஜினிதான் நடித்திருக்கிறார்.

இன்னொன்று இன்றைய தலைமுறைக்கு மிகவும் பரிச்சயமான, கடந்த தலைமுறையை ஆச்சர்யப்படுத்தும் தொழில்நுட்பத்தில் இந்தப் படம் தயாராகிறது.

“இந்தியாவில் இதுவரை யாரும் மேற்கொண்டிராத ஒரு வித்தியாசமான, ஆனால் ஜனரஞ்சகமான முயற்சி இது. அப்பாவின் படங்களுக்கே உரிய வெற்றியை நிச்சயம் ஈட்டும்!” என்கிறார் சௌந்தர்யா ரஜினி.

ஒரு ரஜினி ரசிகருக்கு வேறென்ன வேண்டும்… கொண்டாடத் தயாராக வேண்டியதுதானே!

-வினோ

ரஜினி – இளையராஜா நட்பு குறித்து…? – கேள்வி பதில் – பகுதி 5

June 27, 2009 by envazhi  
Filed under Questions

ரஜினி – இளையராஜா நட்பு குறித்து…? – கேள்வி பதில் – பகுதி 5

இளையராஜா – ரஜினி பிரிவு ஏன் என்பதை இப்போது சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களுக்கிடையிலான நட்பு பற்றியாவது சொல்லுங்க வினோ…!

எஸ்.கல்யாண சுந்தரம், கரூர்

rajini4
ந்தக் கேள்விக்கான பதிலை நான் சொல்வதை விட, சூப்பர் ஸ்டார் ரஜினி சொல்வது பொருத்தமாக இருக்கும் இல்லையா…

இதோ, முன்பு விகடனுக்கு அளித்த பேட்டியில் ரஜினி அவர்கள், தனக்கும் ராஜாவுக்கும் உள்ள நெருக்கம் பற்றி சொன்ன பதில்:

“ராஜா சாரை நான் கூப்பிடறதே ‘சாமி’ன்னுதான். இதோ, இப்போ பெங்களூர் கிளம்பி வர்றதுக்கு முன்னாடி ராஜாவைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். திருவாசகத்தைப் போற்றிப் பாடி ஒரு மியூஸிக் ஆல்பம் பண்ணி முடிச்சிருக்காரில்லையா… அந்த மியூஸிக் கேட்டேன்! அப்பிடியே மனசு மிதக்குது. அது சும்மா ஒரு வேலைனு நினைச்சுப் பண்ணியிருந்தா வந்திருக்காது. அதுல பிரமாதமான ஜீவன் இருக்கு… ஒரு தபஸ் மாதிரிதான் அதை செஞ்சிருக்காரு ராஜா!

அதுக்கான விழாவுக்கு நான் வரணும்னு கூப்பிட்டு இருந்தாங்க. ஆனா, விழா நேரத்துல நான் ஊரில் இருக்க மாட்டேன். அதான், அவர் வீட்டுக்கு சந்திக்கப் போயிருந்தேன். எனக்கும் ராஜாவுக்கும் ஒரு நெருக்கம் உண்டு. அவர்தான் ரமண ரிஷியின் போட்டோ, புத்தகமெல்லாம் எனக்கு முதல்ல தந்தவர். அதுக்குப் பின்னாடிதான் நான் திருவண்ணாமலை போக ஆரம்பிச்சதெல்லாம்! சினிமாவைத் தாண்டி எங்களுக்குள்ள ஆழமான நட்பு எப்பவுமே இருக்கு!’’”

இது ரஜினி சொன்னது.thiruvasagam-rajini01

இந்தப் பேட்டியில் சொல்லாத ஒரு விஷயத்தையும் செய்தார் ரஜினி. திருவாசகம் விழாவுக்கு தான் வருவது சந்தேகம் என்று சொன்னவர், பின்னர் ராஜாவுக்கே இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில், விழாவுக்கு முதல் போய் நின்று ஆச்சர்யப்படுத்தினார். அதுதான் இளையராஜாவுடனான நட்புக்கு அவர் தந்த முக்கியத்துவம். அதை அன்று மேடையிலும் சொன்னார் ரஜினி.

இந்த விழாவுக்கு நியாயமாக கலைஞர் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் இந்த விழாவைப் புறக்கணிக்கும் விதத்தில், பா விஜய் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்குப் போய்விட்டார். அந்த குறையை, வட்டியும் முதலுமாகச் சேர்த்து ஈடு செய்தவர் ரஜினிதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லையே..!

அந்த விழாவில் தமிழின் பக்தி இலக்கியங்கள் குறித்து அருவி மாதிரி மதிமுக தலைவர் வைகோ பேசிக் கொண்டே போக, அதை ஒரு ரசிகனாக நின்று மேடையிலேயே விசிலடித்து மியூசிக் அகாடமியையே அதிர வைத்தார் சூப்பர் ஸ்டார்.

ராஜாவின் இசை பற்றி முத்தாய்ப்பாக அவர் ஒரு விஷயம் சொன்னார்.

“தயவு செய்து இந்த இசையை சும்மா… ஜாலியா டைம் பாஸுக்காக கேக்கணும்னு நினைக்காதீங்க. அமைதியான தனிமையில் மனதை ஒரு நிலைப்படுத்தி, கண்களை மூடி இந்த இசையைக் கேளுங்கள். உங்கள் மனசு சுத்தமாகிவிடும். அதுதான் ராஜா சாரோட இந்த இசைக்குள்ள சக்தி…” என்று மனதார அனுபவித்துப் பேச, ராஜா அதை நெகிழ்ந்துபோய் பார்த்துக் கொண்டிருந்தார்.

திரைப்படங்களில் இணைந்து பணியாற்றுவதையும் தாண்டிய ஒரு அழுத்தமான நட்பு, புரிந்துணர்வு அவர்களுக்குள் உண்டு என்பதை உணர்த்திய நிகழ்வு இது!

மீதி கேள்விகள்- பதில்கள், நாளை…

-வினோ

ரஜினி பற்றியே எழுதுகிறீர்களே… கமல் பற்றி? – கேள்வி – பதில் தொடர்ச்சி!

June 17, 2009 by envazhi  
Filed under Questions

ரஜினி பற்றியே எழுதுகிறீர்களே… கமல் பற்றி எழுதுங்களேன்! – கேள்வி – பதில் தொடர்ச்சி!

பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பதை நம்புகிறீர்களா… ஒரே வரியில் நெத்தியடியாக பதில் சொல்லுங்கள் போதும்!

சக்திகுமார், டெட்ராய்ட், shakthi41@hotmail.com

pr1
நம்பகமான இடங்கள் சொல்வதால் நம்புகிறேன்!

*********


ரஜினிக்கு கணிணி பற்றி தெரியுமா? மற்றும் வலை உலக பதிவர்களை பற்றி என்ன நினைக்கிறார், அவர் கூட பதிவெழுதினால் நன்றாக இருக்குமே? ஏன் என்றால் இதுவரை அவர் கணணியில் உபயோகபடுத்தும் புகைப்படம் வெளி வரவில்லையே?

இந்த கேள்வி வெளியிட விருப்பமில்லாவிடில் தனி மெயிலில் பதில் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வடிவேலன் ஆர்., giblogs@gmail.comcopy-of-res_98-sivaji-105

இதில் மறைக்க என்ன இருக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சி பற்றிய அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் ரஜினி அவர்கள். தனக்கு இதெல்லாம் தெரியும் என பிரஸ்தாபிக்க வேண்டிய நிலையில் அவர் இல்லை. அதை அவர் விரும்புவதும் இல்லை.

கணிணி தொழில்நுட்பம், கணிணி வரைகலையில் ஹாலிவுட்டுக்கு நிகராக சாதனை படைத்துக் கொண்டிருக்கும் சௌந்தர்யாவைப் பார்த்த பிறகுமா இந்தக் கேள்வி… ரஜினியின் அடுத்தடுத்த படங்கள் இரண்டுமே கணிணி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்தவையே.
சிவாஜியில் அவர் லேப்டாப்பை கையாளும் லாவகத்தைப் பார்த்தீர்களா…

ரஜினி குறித்து வரும் செய்திகள், வலைதளங்கள் அனைத்தையும் அவரது அலுவலக ஊழியர்கள் தனி கணிணியில் சேகரித்து வைத்துள்ளனர்.

அவர் எப்போதுமே தனது கருத்துக்களை வெளிப்படையாக, பளிச்சென்று தெரிவித்துவிடுபவர். அதனால் ப்ளாக் எழுதும் அவசியம் அவருக்கில்லை.

*********

எப்போதும் ரஜினியை பற்றி மட்டுமே எழுதறீங்களே, கமல் பற்றிய யாருக்கும் தெரியாத தெரிய வேண்டிய ஏதும் ஒரு நிகழ்ச்சியை சொல்ல முடியுமா?

தன்ராஜ் பி, dhans4all@gmail.com
kamalhassan_unnaipol_oruvan_10நிச்சயம்…

சொந்த அனுபவத்தையே சொல்லவா…

ஒருமுறை ஆங்கிலப் பத்திரிகையான அலைவ் (கேரவன்) இதழுக்காக கமல்ஹாசனை சந்திக்கச் சென்றிருந்தேன். கமல் அவர்களின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்துக்கு திரு நிகில் முருகன் வரச்சொல்லியிருந்தார். அவரை பத்திரிகையாளனாக இரண்டாவது முறை சந்திக்கிறேன், 3 வருட இடைவெளிக்குப் பிறகு. சண்டியர் (விருமாண்டி என பெயர் மாற்றம் நிகழ்வதற்கு முன்) படத்துக்காக தயாராகிக் கொண்டிருந்தார் அப்போது. அந்தப் படத்துக்கு கிளம்பிய எதிர்ப்புகளில் மிகவும் டென்ஷனாக அவர் இருந்த நேரம்.

என்னைப் பார்த்ததும், ‘வாங்க… உங்க எடிட்டர் எப்படி இருக்கிறார்?’ என்றார் எடுத்த எடுப்பில். முன்பு அவரைச் சந்தித்த போது தினமணியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதன் ஆசிரியர் அமரர் ஆர்எம்டி சம்பந்தம் அவர்களைத்தான் விசாரிக்கிறாரோ என்ற நினைப்பில், ‘சார் நான் இப்போ வேற மேகஸின்ல இருக்கேன்…’ என்றேன்.

‘தெரியும்… தெரிஞ்சுதானே வரச் சொன்னேன்… நான் உங்க புது எடிட்டரைத்தான் கேட்கிறேன்’ என அவர் சொல்ல ஆடிப்போய் விட்டேன்.
காரணம் இந்த எடிட்டர் டெல்லியிலிருக்கிறார். எப்படி கமலுக்கு இவரைத் தெரியும் என யோசித்துக் கொண்டிருக்கும்போதே, எங்கள் எடிட்டரைப் பற்றிய 10 நிமிட மினி உரையே நிகழ்த்தி அசரடித்தார் மனிதர். அவர் சொன்னதில் பல விவரங்கள் எங்கள் அலுவலகத்தின் மூத்த ஊழியர்களுக்கே கூடத் தெரியாது!

‘எப்படி சார் உங்களுக்கு இவ்வளவு விஷயம்…’ என இழுத்தேன் தயக்கமாக.

‘இந்தியாவில் துணிச்சலாக நாத்திகம் பேசும் ஒரு பத்திரிகைக் குழுமம் பற்றி தெரியாமல் இருக்கக் கூடாதல்லவா… அதனால் தெரிந்து வைத்துக் கொண்டேன். உங்கள் ஆசிரியரை நான் ஒருமுறை சந்திக்க வேண்டும்’, என்றார்.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் எங்கள் எடிட்டர் அவரைத் தொடர்பு கொண்டபோது, என்னைப் பற்றியும் அவரிடம் நல்ல வார்த்தைகள் சொல்லி, எனது மதிப்பை அலுவலகத்தில் உயர வைத்தவர் கமல். அதை நாம் எப்போதும் மறக்க முடியாது.

குறிப்பு: விருமாண்டிக்கு நான் எழுதிய மூன்று பக்க விமர்சனத்தை, சிறந்த விமர்சனங்களில் ஒன்று என கமல் பாராட்டினார், அவரது பிறந்த நாளின் போது நடந்த பிரஸ்மீட்டில். பின்னர் எப்போதாவது பொருத்தமான தருணத்தில் அதைத் தருகிறேன்!

*********

ஒரு பத்திரிகையாளராக மறக்க முடியாத அனுபவம் ஒன்றைச் சொல்லுங்கள்!

ஆர் சரவணன், kmrvsaravanan@hotmail.com

karu-in-a-press-meet

சூப்பர் ஸ்டார் ரஜினியை முதன் முதலில் அவரது வீட்டில் சந்தித்த அனுபவம்தான். அவர் கையால் உபசரிக்கப்பட்ட, மிகவும் மறக்க முடியாத தருணம் அது. ரஜினி பற்றி எழுத உத்தேசித்துள்ள ஒரு தொடரில் அதைத் தருவதாக திட்டம்… இப்போது வேறு ஒரு அனுபவத்தைச் சொல்கிறேன்!

தமிழகத்தின் இன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி, பதவியில் இல்லாமலிருந்த காலம் அது. ஜெயலலிதாதான் அப்போது முதல்வர். அப்போது அறிவாலயத்தில் அவர் கூட்டிய பத்திரிகையாளர் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன், உடன் சீனியர் நிருபர் ஒருவரும் வந்தார். அப்போது நான் பணியாற்றியது பிரபலமான ஒரு மாலைப் பத்திரிகையில்.

மிக முக்கியமான சூழலில் நடந்த பிரஸ்மீட் அது.

ரஜினியின் ஆதரவுக்காக திமுக தவமிருந்த காலம் (இப்போதும் ஒன்றும் பெரிய மாற்றமில்லை!). கேள்வி நேரத்தின் போது, இன்னொரு பிரபல மாலைப் பத்திரிகையின் நிருபர் ஒரு கேள்வி கேட்டார்… அப்போதெல்லாம் சீனியர் நிருபர்களான கல்யாணம், கோபாலன், ராமசாமி போன்றவர்கள்தான் கேள்வி கேட்பார்கள். மற்றவர்கள் அவர்கள் வாயைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார்கள்.

இந்த நிருபர் முதல்முறையாக கலைஞர் பிரஸ்மீட்டுக்கு வந்திருக்கிறார் போலிருக்கிறது. ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார்… அதுவும் விவகாரமாக.

“இந்தத் தேர்தலில் நீங்களும் மூப்பனாரும் ரஜினியை நம்பித்தான் இறங்குவதைப் போல ஒரு தோற்றம் உள்ளதே… அதுபற்றி சொல்லுங்கள்” என்றார்.

வந்ததே கோபம் கலைஞருக்கு.

‘நீ எந்தப் பத்திரிகைய்யா…’

‘அய்யா… வந்து…’

‘எந்தப் பத்திரிகைன்னு மரியாதையா சொல்லு…  விசாரிங்கய்யா’, என்றார்.

நடுநடுங்கிப் போனார் நிருபர்.

அடுத்த சில தினங்கள் கழித்து எங்கள் அலுவலகத்துக்கு வேலை கேட்டு கலங்கிய கண்களுடன் அந்த நிருபர் வந்த பிறகுதான் ‘பிரஸ்மீட் எஃபெக்ட்’ என்ன என்பது புரிந்தது!

என்னடா பொழைப்பு இது என்று நொந்து கொண்ட, பத்திரிகையுலகம் புரியத் தொடங்கிய அந்தத் தருணம்… எந்தக் காலத்திலும் மறக்க முடியாதது!

(இதையெல்லாம் விட உச்சகட்டம்… இப்போது அந்த நிருபர் சன் குழும இதழ் ஒன்றிலேயே வேலை பார்ப்பதை என்னவென்று சொல்வீர்கள்!)

-தொடரும்

-வினோ

மற்ற கேள்வி பதில் பகுதிகளைப் படிக்க…

கேள்வி பதில் பகுதி -1, 2, 3 மற்றும் 4

பண உதவி வேணும்னா ஒரு மாசம் முன்னாடியே சொல்லுங்க!! – ஜேகே ரித்தீஷ்

June 14, 2009 by envazhi  
Filed under election

பண உதவி வேணும்னா ஒரு மாசம் முன்னாடியே சொல்லுங்க!! – ஜேகே ரித்தீஷ்

முதல்வன் அர்ஜுன் ஸ்டைலில் களமிறங்கியுள்ளார் ராமநாதபுரம் தொகுதியின் எம்பி ஜேகே ரித்தீஷ். jkr

அந்தப் பகுதியின் லோக்கல் கேபிள் சேனல் ஒன்றுக்கு அளித்த நேரடி ஒளிபரப்பு பேட்டியில் ரித்தீஷின் உத்தரவுகள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்று வாக்காளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

தொகுதி மக்களின் கேள்விகளும் அதற்கு ரித்தீஷின் பதில்களும்:

ராமநாதபுரம் மருத்துவமனைக்கு கூடுதல் வசதி செய்து தருவீர்களா?

“மருத்துவமனைக்கு கூடுதல் வசதி செய்து தருவதால் பயனில்லை. அருகில் இருக்கும் சிவகங்கைக்கு மருத்துவக் கல்லூரி வரும் போது, ராமநாதபுரம் எதிலும் குறைந்தது இல்லை. எனவே, இங்கும் மருத்துவக் கல்லூரி வர முதல்வரிடம் மனு அளிப்பேன்”.

அரசு பள்ளிகளில் இங்கிலீஷ் நல்லா சொல்லித் தர மாட்டேங்குறாங்க!

“அரசு பள்ளிகளில் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ கட்டாயமாக்க வேண்டும் ஏற்கனவே பல பள்ளிகளுக்கு எனது சொந்த செலவில் “ஸ்போக்கன் இங்கிலீஷ்’, புத்தகங்கள் வழங்கி உள்ளேன்”.

எங்களுக்கு இலவச ‘டிவி’ மற்றும் காஸ் அடுப்பு பலருக்கு கிடைக்கவில்லையே?

“இந்தக் குற்றச்சாட்டு பரவலா இருக்கு. தேர்தல் நேரத்துல ஓட்டு கேட்பதில் சிரமம் இருப்பதாக முதல்வர் கருணாநிதியிடம் தேர்தல் நேரத்தில் கூறினேன். ‘காஸ், ‘டிவி’க்கு மாற்றாக பணத்தை கொடுக்குமாறும் கூறினேன். அதிலும் சிரமங்கள் உள்ளதாக தலைவர் கூறினார். ‘தேர்தலின் போது ‘டிவி’ குறித்து ராமநாதபுரத்தில் புகார் கூறியவர்களின் பகுதிக்கு முதலில் வழங்க உத்தரவிடுவேன்’.

எங்கள் குடும்பம் மிகுந்த சிரமத்தில் உள்ளது. பண உதவி தேவை… (ஒரு முஸ்லிம் பெண்)

“உங்கள் பெயரை வைத்தே நீங்கள் எனக்கு தான் ஓட்டு போட்டீர்கள் என்பதை நான் அறிவேன். பண உதவி வேண்டுபவர்கள் என்னுடைய முகவரிக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே அனுப்பிவிடுங்கள். தி.மு.க., ஒன்றிய, நகர செயலர் மூலமாக வரும் கடிதங்களுக்கு மட்டுமே நான் உதவுவேன். மக்கள் தேவைகள் அனைத்தும் நியாயமானவை. அதை கட்டாயம் நிறைவேற்ற முடியும்”.

பலர் ரோடு உள்ளிட்ட வசதி குறித்து கேட்டபோது, “அதிகாரிகளிடம் கூறுங்கள். நடவடிக்கை இல்லை என்றால் நான் பார்த்து கொள்கிறேன். ஒரு மாதத்தில் அனைத்து வசதிகளையும் நிறைவேற்றுவேன்”, என்றார்.

‘நீ தாமரைக்குத்தானே ஓட்டுப் போட்ட?’

புகார் கூறிய வாக்காளர் ஒருவரை மடக்கிய ரித்தீஷ் எம்.பி., ‘நீ ‘செட்டியார்’தானே? தாமரைக்கு தானே ஓட்டு போட்டாய், ஓட்டு போட்டவரிடமே போய் கேள் எனக் கூறி போனை ‘கட்’ செய்தார்.

“விசேஷ காலங்களில் இளைஞர்கள் வணிகர்களிடம் நன்கொடை கேட்க வேண்டாம். என்னிடம் வாருங்கள் நான் தருகிறேன். செட்டியார் சமுதாய மக்களுக்கு (வணிகர்கள்) நான் உதவி செய்ய நினைக்கிறேன். ஆனால் அவர்கள் எனக்கு ஓட்டளிக்கவில்லை,” என்றார்.

ஒருவரது வீட்டிலிருந்து தெருவில் சாக்கடை நீர் பாய்வதாக போனில் ஒருவர் புகார் அளித்த போது, “சம்பந்தப்பட்ட நபரை நேரடி ஒளிபரப்பின் போது மொபைலில் தொடர்பு கொண்ட ரித்தீஷ், ‘நான் நாளை வந்து பார்க்கும் போது அங்கு சாக்கடை நீர் ஓடக்கூடாது’, என உத்தரவிட்டார். அதன்படி, அந்த நபரும் தெருவில் சாக்கடை நீர் விடுவதை நிறுத்தினார்.

கல்வி கட்டணம் கேட்ட பலருக்கு மறுநாளே கட்டணம் கிடைக்கும் எனவும் உறுதியளித்தார்.

அட..!

விஜய் சூப்பர் ஸ்டாரா? – கேள்வி – பதில்: பகுதி -3

May 16, 2009 by envazhi  
Filed under Questions

விஜய் சூப்பர் ஸ்டாரா? – கேள்வி – பதில்: பகுதி -3

வினோ…
bagyaraj-1_1196854810_largeரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் விஜய்காந்த் இருக்குமிடம் தெரியாமல் இருந்திருப்பார் என்ற பாக்யராஜின் கருத்தை ஒப்புக் கொள்கிறீர்களா?

ஷிவ், __________
போகிற போக்கில் பெரிய பெரிய உண்மைகளை ஜஸ்ட் லைக் தட் சொல்லிவிட்டுச் செல்வதில் பாக்யராஜுக்கு நிகர் அவரே!

***********

புலிகள் கைவசம் இருந்த அனைத்துப் பகுதிகளும் கைப்பற்றப்பட்டு விட்டனவா? ஈழத்தில் போர் நிற்கும்போது தமிழர்கள் இருப்பார்களா…

குணசேகரன், gunarajesh@hotmail.com

tiger-earth-bund-550x347

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் குறுகிப்போய்விட்டது என்றும் பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்பதும் உண்மைதான்.

இந்தியா ஒன்றும் செய்யாவிட்டாலும், சர்வதேச நாடுகள் தனி ஈழம் அமைவதற்கான நெருக்குதல்களைத் தரும் என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு உள்ளது. புலிகள் வலிந்த தாக்குதல்கலில் இறங்காமல் காலம் தாழ்த்தியமைக்கு இதுவும் ஒரு காரணம். ஒருவேளை புலிகள் அத்தகைய தாக்குதல்களில் இறங்கியிருந்தால், தமிழினத்தை முற்றாக அழிக்க சிங்கள ராணுவத்துக்கு பெரிய காரணம் கிடைத்துவிட்டிருக்கும்.

புலிகளின் தற்காப்பு தாக்குதல்கள், புலம்பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள், சர்வதேச பிரதிநிதிகளின் தொடர் இலங்கை விஜயங்கள் போன்றவை அந்நாட்டுக்கு நெருக்குதல்களைக் கொடுத்து வருகின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நேரடி தலையீடு ஆரம்பமாகத் துவங்கியுள்ளது.

ஈழ தமிழினம் அழிவதற்குள், இந்த நெருக்குதல்கள் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். நிரந்தரத் தீர்வாக தனி ஈழம் மலர்ந்தாக வேண்டும். அது எந்த அளவு தாமதமாகிறதோ… அந்த அளவு தமிழினத்துக்கு ஆபத்து.

************

உண்மையிலேயே மத்திய அரசுக்கு ஈழப் பிரச்சினையில் அக்கறை இல்லையா? சும்மா பத்திரிகைகளில் ஏதாவது ம் எழுதுறாங்களா? அரசியல் பண்ணாமல் இந்தப் பிரச்சினைக்கு யாரால்தான் நல்ல ஒரு தீர்வு காணமுடியம்?

புயலமன், puyalaman@yahoo.co.uk

sonia-karu3
மே பதினோறாம் தேதி காலை முதல் படிக்கத் தெரிந்த, தொலைக்காட்சி பார்க்கத் தெரிந்த எல்லோருக்கும் ஈழத்தில் எந்த மாதிரி படுகொலை நடந்தேறியது என்பது தெரிந்திருக்கும். ஆயிரம், இரண்டாயிரம் என கடந்து 3400 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக வன்னிச் செய்திகள் தெரிவித்தன.

இதயமுள்ள ஒவ்வொரு தமிழனின் மனமும் கொதித்துக் கொண்டிருக்க…

அன்று சென்னையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்துக்கு வந்த சோனியா இப்படிச் சொன்னார்: இலங்கையில் இப்போது போர் முழுமையாக நிறுத்தப்பட்டிப்பதே இந்திய அரசின் நெருக்குதலால்தான். எங்களுக்கு மேலும் 5 ஆண்டு தாருங்கள். இலங்கைத் தமிழர்களை ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தப்படி மீண்டும் ‘சிங்களவன் அடிமைகளாக’ அமர்த்தி வைப்போம் என்று முழங்கினார்.

இதுதான் மத்திய அரசுக்கு ஈழத் தமிழன் மீதுள்ள அக்கறைக்கான ஒரு சின்ன சாம்பிள்!

************

சமீபத்தில் நான் பார்த்த வேட்டைக்காரன் பட போஸ்டர்களில் சூப்பர் ஸ்டார் விஜய் என்று அச்சிடப்பட்டுள்ளது. இது உண்மையா?

கார்த்திகேயன், karthi_08@yahoo.co.in

cprabhu
செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத சிலர் இப்படித்தான் ஆர்வக் கோளாறில் சொந்தமாக டிசைன் செய்து இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினி தனக்குத் தானே சூட்டிக் கொண்டதுமல்ல… ஏதோ ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் வற்புறுத்திப் பெற்றதுமல்ல. மக்கள் சூட்டிய பட்டம்… அதை அடுத்தவர் எடுத்து சூடிக் கொள்வது கோமாளித்தனம்.

*************

ஹாய் வினோ…

rajini3சிவாஜி படம் இந்தியில் டப் செய்யப்பட்டும் வெளியாகாமல் இருப்பது ஏன்?

பிரகாஷ், prakash@asprecise.com
உண்மையில் சிவாஜியின் இந்தி வடிவத்தை, சில காட்சிகளை மீண்டும் ஷூட் செய்து பக்காவாகத் தயார் செய்துவிட்டார்கள் ஏவிஎம் நிறுவனத்தினர். கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தப் படத்தை வெளியிடும் திட்டமுள்ளதாக ஏவிஎம்மின் சிஇஓ பாபு ஒரு பத்திரிகைக் குறிப்பு கூடக் கொடுத்தார். ஆனால் வெளியாகவில்லை.

இப்போது விசாரிக்கையில், சில காரணங்களுக்காக பட வெளியீட்டை இப்போதைக்கு தள்ளி வைத்திருப்பதாக, ஏவி எம் நிறுவன செய்தித் தொடர்பாளர் நம்மிடம் தெரிவித்தார். நிச்சயம் வெளியாகும் என்கிறார்கள்.

*************

இந்தத் தேர்தலில் எந்த அணி பெரும்பான்மை நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றும்?

சக்தி குமார், ஒட்டாவா

கலவையான முடிவுகளைச் சொல்கின்றன ஊடக கணிப்புகள். இன்னும் சில மணி நேரம் பொறுத்திருங்கள் நண்பரே…

-வினோ

எம்ஜிஆரும் ரஜினியும் சந்திச்சிருக்காங்களா? – கேள்வி பதில் – 3

May 8, 2009 by envazhi  
Filed under Questions

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் வருங்கால முதல்வர் ரஜினியும் சந்திச்சிருக்காங்களா? – கேள்வி  பதில் -3

நாளை வா.. என்று சனி பகவானை டபாய்த்த வினாயகரின் கதை போலாகிவிட்டது, ‘கேள்வி பதில் பகுதி நாளை வெளியாகும்’ என்ற உங்கள் அறிவிப்பு’ என அன்புடன் நம்மைக் கடிந்து கொண்ட நண்பர்களின் ஆர்வத்துக்கு தலை வணங்குகிறோம்.

நண்பர்களே… தேர்தல் முடியும் வரை ஒரு பத்திரிகையாளனான நமது நேரம் நம் வசமில்லை என்பதைப் புரிந்து கொண்டு அமைதி காத்தமைக்கு நன்றி.
இனி இடைவெளியின்றி, பதில்கள் தொடரும். உங்கள் கேள்விக் கணைகளைத் தொடரலாம்…

வாழ்க்கையில் வெற்றி பெறுவது கஷ்டம்… அப்படியே வெற்றி பெற்றாலும் அதைத் தக்க வைத்துக் கொள்வது மிக கஷ்டம். அப்படியே தக்க வைத்துக் கொண்டாலும் அதைவிட பெரிய வெற்றிகளைத்தொடர்ந்து பெறுவது கஷ்டம்.

ஆனால் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்?

ஒருமுறை விழுந்தாலும் அடுத்த முறை அதைவிட மிகப் பெரிய உயரத்துக்கு எழுகிறாரே… எப்படி சாத்தியம் இது? எப்படி நானும் ஒரு ரஜினிகாந்த் ஆவது?

கோகுலன், rajini_kogulan@yahoo.com

‘இஷ்டத்தோட கஷ்டப்படு… நினைச்சது நடக்கும்’ – இது ரஜினி சொல்லும் வாழ்க்கைத் தத்துவங்களில் ஒன்று.
ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டார் ஒரே நாளில் உருவானவர் அல்ல. பொற்கொல்லனிடம் நிறைய அடிகள் பட்டு ஜொலிக்கிற தங்கத்தின் நிலைதான் ரஜினியின் நிலையும்.padayappa_big1

இந்த அந்தஸ்தை அடைய அவர் செலுத்திய உழைப்பு, இழந்த விருப்பங்கள், தாங்கிய வலிகள்… நிச்சயம் கொஞ்சமல்ல. ஒரு சின்ன உதாரணம் பாருங்கள்…

விழாக்கள், சந்திப்புகள் என தொடர்ச்சியான வேலைப் பளுவை முடித்துக் கொண்டு விடியற்காலையில் 4 மணிக்குத்தான் படுக்கப் போயிருப்பார் ரஜினி. நன்கு அசந்து தூங்கும் நேரம். ஆனால் அடுத்த நாள் 7 மணிக்கு ஷூட்டிங் இருக்குமாம். சரியான நேரத்தில் எழுப்புவதற்கென்றே ஒரு உதவியாளர் இருப்பார். ஒரு கூஜா ஐஸ் தண்ணீரை அவர் முகத்தில் தெளித்து எழுப்பிவிடுவாராம். இதைச் செய்ய உதவியாளருக்கு பயமாக இருந்தாலும் அவரது வேலை அதுதான் என்பதால் மிகுந்த தயக்கத்துடனே செய்வாராம்.

1998-ல் ரஜினியிடம் உதவியாளராக இருந்த ஒருவர் சொன்ன தகவல் இது. பிலிமாலயா பத்திரிகையின் பொறுப்பாசிரியரும் ரஜினிக்கு நன்கு தெரிந்த மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவருமான திரு.ராதாராஜ் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தினார்.

தான் ஒரு சூப்பர் ஸ்டார், நினைத்த நேரத்தில் போனால் கேட்பவர் யாருமில்லை என்ற மிதப்பில் அவர் ஒரு நாளும் படப்பிடிப்புக்குப் போனதில்லை. இன்று வரை அதுதான் நிலைமை.

தனக்கான நேரம், வாய்ப்பு வரும்வரை காத்திருக்கும் பொறுமையும், எதிரிகளையும் நட்பு வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்ளும் அவரது பெருந்தன்மையும்தான், எப்பேர்ப்பட்ட வீழ்ச்சியிலிருந்தும் அவரை எழ வைத்து, புதிய கிரீடங்களைச் சூட வைத்துள்ளது.
இந்தப் பண்புகளில் பத்தில் ஒரு மடங்காவது நீங்களும் வளர்த்துக் கொண்டால், உங்கள் துறையில் நீங்களும் சூப்பர் ஸ்டார்தான்!

************

இந்தியாவின் இன்றையப் பொருளாதார நிலை என்ன? வீழ்ச்சி நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? வேலைவாய்ப்பு நிலை என்ன?

சாரு, _________
மேற்கத்திய நாடுகளில் இத்தனை காலமும் பாடாய்படுத்தி வந்த பொருளாதார மந்தம் இப்போது இந்தியாவில் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பது உண்மையே.

முதல்முறையாக மீடியாவிலேயே இதன் தாக்கம் அதிகமாக உள்ளதைப் பார்க்க முடிகிறது. என்டிடிவி நிறுவனம் 20 சதவிகிதத்துக்கும் அதிகமான ஊழியர்களையும், டைம்ஸ் ஆப் இந்தியா நூறுக்கும் அதிகமான ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது.

இதற்குக் காரணம், அந்நிய பொருளாதாரங்களை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமது நாடு சார்ந்திருக்கத் தொடங்கியதே. சுய அடையாளம், சுய முயற்சிகள், சுய நிறைவு இந்த மூன்றும் இல்லாத பொருளாதாரத்துக்கு ஏற்படும் கதிதான் இப்போது இந்தியப் பொருளாதாரத்துக்கும் ஏற்பட்டுள்ளது.

விவசாயம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசுகள் உண்மையைச் சொல்லி மக்களை சுய நிறைவுக்கான முயற்சிகளில் ஈடுபட வைக்காமல், ஓட்டுப் பொறுக்கிகளாக மாறி, மக்களுக்கு பொய்யான தகவல்களைக் கொடுத்து வருகின்றன. இதனால் பாதிப்பின் அளவு இன்னும் அதிகரிக்கக்கூடும்.

*************

ரஜினி ரசிகன் என்ற கோணத்தில் அல்லாமல், தமிழர்கள், தமிழ் ஈழம் மற்றும் தமிழ்நாடு என்ற பார்வை இந்த தளத்தின் பின்னணியில் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு வருமா?

வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் இன்னொரு மாநிலத்துக்கு முதல்வரானதை இந்தியாவில் வேறு மாநிலத்தில் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? இந்தக் கருத்துக்கு நான் எதிரானவன் இல்லை என்றாலும், மொழி-இன உணர்வு என்று வரும்போது எல்லோரும் ஓரணியில் திரண்டுவிட, தமிழனிடம் மட்டும் அந்த உணர்வே இல்லையே..

ஜனா , rathernot@sorry.com

என்ன ஜனா… நமது தளத்தைப் பார்த்த பின்னும் இந்த சந்தேகம் வருவது நியாயமா…? (நிறைய கேள்வி கேட்டிருக்கீங்க.. ஒவ்வொண்ணா எடுத்துக்கிறேன்!)

இரண்டாவது கேள்விக்கு ஏற்கெனவே பதில் கூறியிருக்கிறோம். எம்ஜிஆர், ரஜினி வேறு மாநிலத்துக்காரர்கள் என்ற பார்வையிலேயே இந்த கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன என்பது நமக்கும் தெரியும்.  எம்ஜிஆர் பிறப்பால் மலையாளி என்று கூறப்பட்டாலும், முழுக்க முழுக்க தமிழராகவே, இன உணர்வு மற்றும் மொழி உணர்வுடன் வாழ்ந்தார். எத்தனை முதல்வர்கள் ஆண்டிருந்தாலும் காமராஜருக்குப் பின் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தை மட்டுமே தமிழகத்தின் நிம்மதியான ஆட்சிக் காலம் என அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். உண்மையும் அதுதான்.

ரஜினி பிறப்பால் வேறு இனமாக இருக்கலாம்… ஆனால் உணர்வால், மொழிப்பற்றால், மனிதாபிமானத்தால் மிகச் சிறந்த தமிழராகவே வாழ்பவர்.

இனம் மொழிக்கு அப்பாற்பட்டு, நல்லவர் பின்னால் நாடு நிற்கும் என்பதற்கு இந்தியாவில் ஏற்கெனவே பல உதாரணங்கள் உண்டு. ஒரு வங்காளி திரிபுராவுக்கு முதல்வராகவில்லையா?

சுதந்திரத்துக்குப் பின்னும், வெள்ளையரான மவுண்ட்பாட்டனை வேண்டி விரும்பி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக அமர்த்திப் பார்த்த நாடுதான் இது!

mgr-rajini

*************

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் வருங்கால முதல்வர் ரஜினியும் சந்திச்சி பேசி இருக்காங்களா ?

புயலமன், puyalaman@yahoo.co.uk

எம்ஜிஆர் – ரஜினி இருவருக்கும் ஆரம்பகாலத்தில் பெரிய அளவு நெருக்கம் ஏதுமில்லை என்றாலும், பின்னாளில் தனது ஆஸ்தான பட நிறுவனமான சத்யா ஸ்டுடியோ மூலம் பெரும் வாய்ப்புகளை ரஜினிக்கு உருவாக்கிக் கொடுத்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். மூன்று முகம், தங்கமகன், ஊர்க்காவலன் மற்றும் பாட்ஷா படங்கள் ரஜினியின் திரையுலகப் பயணத்தில் மைல்கற்கள். எம்ஜிஆர் ஆசி இல்லாமல் இது சாத்தியம் இல்லை.

இருவரையும் பற்றி பல்வேறு செவி வழிக் கதைகள் சொல்லப்பட்டாலும், அவற்றையெல்லாம் பொய்யென நிரூபித்தது எம்ஜிஆர் மீது ரஜினி வைத்திருந்த மதிப்பும், அதை இன்று வரை தன் படங்களில் ரஜினி வெளிப்படுத்தி வரும் விதமும்.

ரஜினி – கமல் தலைமையில் திரையுலகமே கூடி எம்ஜிஆருக்கு விழா எடுத்ததை மறந்திருக்க மாட்டீர்கள். ஈழப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக எம்ஜிஆரைச் சந்தித்துப் பேசியுள்ளார் ரஜினி. தனிப்பட்ட முறையில் ஒரே ஒரு முறை ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆரைச் சந்தித்து ரஜினி பேசியதாகவும் சொல்கிறார் ‘இதயக்கனி’ ஆசிரியர் எஸ். விஜயன்.

*************

மேக்கப் போடாமல் நடிப்பது எப்படி?

பதி, kpathian@yahoo.co.in

அரசியல் – சினிமாவையெல்லாம் தாண்டி, நமக்குள்ளேயே நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள்!

*************

விடுதலை புலிகள் ஒரு தீவிரவாத அமைப்பு அல்ல என்று நீங்கள் கூறி வருகிறீர்கள்.

ஆனால் அவர்கள் செய்த கொலைகளை பார்க்கும் போது ஒரு விடுதலை இயக்கம் செய்த செயல்கள் போலவா இருக்கிறது, போரில் போர் வீரர்களை தானே தாக்க வேண்டும், நாட்டின் ஜனாதிபதியையும், மந்திரிகளையும் கொலை செய்வது என்ன மரபு, மற்ற தீவிரவாத இயக்கங்களை விட பயங்கரவாத அமைப்பு போலதானே இருக்கிறது.

நாளை இவர்களை நம்பி நம் தமிழ் மக்களை எவ்வாறு விட முடியும். தனி ஈழ கோரிக்கை நியாயம்தான், அனால் அதை கையாளும் முறை சரி என்று உங்களுக்கு உண்மையிலேயே தோன்றுகிறதா?

பிரசாத், prasad.kumar@ge.com

photo11

இந்தியாவுக்குதான் புலிகள் தீவிரவாதிகள். ஆனால் ஈழத்து மக்களுக்கு ஒரே நம்பிக்கை புலிகள் மட்டுமே. தனி நீதிமன்றம், தனி போலீஸ், போக்குவரத்து, வரிவிதிப்பு, கல்வித்துறை, முப்படைகள் என ஒரு பக்கா அரசாங்கத்தை ஈழத்தில் நடத்தியவர்கள் புலிகள். இதையெல்லாம் தமிழர்களின் ஒத்துழைப்பும் நம்பிக்கையும் இல்லாமலா நடத்தியிருப்பார்கள்!

அமைதிக்காலம் என்ற பசப்பு வார்த்தையில் சிக்கிய புலிகள், அதன் பிறகு ஜனாதிபதி, மந்திரிகளை கொல்லவில்லை. அதற்கு முந்தைய அத்தகைய கொலைகளின் போது புலிகள் ஒரு கொரில்லா இயக்கம். கொரில்லா இயக்கத்துக்கு இந்த வரையறையெல்லாம் கிடையாது. அதை தங்கள் இயக்கத்தின் வலுவைக் காட்டவும், தமிழர் கோபத்தைக் காட்டவும் புலிகள் பயன்படுத்தினர்.

மரபு ரீதியான ராணுவமாக புலிகள் மாறிய பிறகு, தேர்ந்த ராணுவ போர் முறைகளையே புலிகள் கடைப்பிடித்தனர். அப்பாவி சிங்களர்களைக் கொல்லவில்லை. அதற்கான சந்தர்ப்பம் எவ்வளவோ இருந்தும், தங்கள் எதிர்ப்பை பெட்ரோல் கிடங்குகளைத் தகர்ப்பது, வரிவிதிப்பு மையத்தைத் தாக்குவது… இப்படித்தான் புலிகள் காட்டி வந்தனர்.

ஆனால் இலங்கை ராணுவமோ, அப்பாவி தமிழர் மீதும், தமிழர் தலைவர்கள் மற்றும் தளபதிகள் மீதும் குண்டுவீசித் தாக்கிக் கொன்றது.

‘புலிகளை நம்பலாம்… நிர்வாகத்தைத் தரலாம். மிகச் சிறந்த நிர்வாக முறையைத் தரும் வல்லமை, புத்திசாலித்தனம் மிக்கது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. இந்த சான்றிதழ் நாம் தருவதல்ல…’ பிரான்ஸ், பிரிட்டன் போன்ற வெளிநாட்டவர்கள் தந்தது.

**************

கலைஞர் அவர்களின் உண்ணாவிரதம் நாடகம் இல்லையா?
தமிழக முதல்வர் கலைஞர் உண்ணாவிரதம் இருந்த போது காங்கிரஸ்சிடம் கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து விலகுவோம் என்று மிரட்டியதாக கூறப்பட்ட செய்தி உண்மையானதா?

செந்தில் மோகன் கே ஏ, senthilmka@gmail.com

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல உண்மையிலேயே பொருத்தமான நேரம் இதுவே. உண்மையில் ஈழ விவகாரத்தில் தமிழக அரசின் திடீர் மெத்தனம், அவ்வப்போது ஏற்படும் புரியாத திடீர் வேகத்துக்கு பலருக்கும் காரணம் தெரியாது. ஆனால் மீடியா நண்பர்களுக்கு நன்கு தெரிந்த உண்மை ஒன்றுண்டு.karu-stat1

ஈழ விவகாரத்தில் ஸ்டாலின் நிலைப்பாடும் கலைஞர் நிலைப்பாடும் நேர் எதிர். கலைஞரையும் மீறி, ‘ஈழத்துப் போரை சீக்கிரம் முடித்து வைக்குமாறு’ இந்திய அரசுக்கு இணக்கமான ஒத்துழைப்பைக் கொடுப்பதே ஸ்டாலின்தான் என்று வலுவான ஆதாரங்களுடன் திமுக பகுதிச் செயலாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். அது பெரிய அதிர்ச்சிதான். இது பலருக்குத் தெரிந்தும், சின்ன பத்திரிகைகள் மட்டும் செய்தி வெளியிடுவதும் மற்றவை அமைதி காப்பதும், அதைவிடப் பெரிய அதிர்ச்சி.

ஸ்டாலினையும் மீறி, கலைஞர் உண்ணாவிரதமிருந்ததற்குக் காரணம், ஈழத் தமிழர்கள் படும் கொடுமைகளை வீடியோ வடிவில் அவர் பார்க்க நேர்ந்ததும், தமிழ் உணர்வாளர்கள் சிலர் வைத்த உருக்கமான வேண்டுகோளும்தான். ஆனால் கலைஞர் சொன்னதுபோல இது ஒன்றும் திட்டமிடப்படாமல் நடந்ததல்ல. கலைஞர் உண்ணாவிரதமிருக்கப் போகிறார் என்பது முன்கூட்டியே மாவட்ட அளவில் தெரிந்து விட்டது. காலை 6 மணிக்கெல்லாம் பல மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் பந்தல் ரெடியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கலைஞர் அழுத்தம் கொடுத்ததும்,  அதற்கு கூட்டணி மறுபரிசீலனை என்ற அஸ்திரத்தை ஏவியதும்கூட உண்மையே என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். ஆனால் காங்கிரஸின் நரித்தனம், மூப்பின் இயலாமை மற்றும்  குடும்ப பாசம் போன்றவை அவரது தமிழின உணர்வை, ‘மழை விட்டாலும் தூவானம் தொடரத்தானே செய்யும்’ என சொல்ல வைக்கும் அளவுக்கு மாற்றிவிட்டது!

**************

தமிழ் சினிமாவில் தரமான படங்கள் வரவே வராதா?

சக்திகுமார், shakthi41@hotmail.com

pasanga0011
நல்ல தமிழ்ப் படங்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் உள்ளன. என்ன… ஜான் ஏறினால் முழம் சறுக்கும் நிலை!

ஒரு நல்ல படம் வந்தால் தொடர்ந்து நாற்பது மோசமான படங்கள் வருவதுதான் சாபக்கேடு. இப்போது வந்துள்ள நல்ல படம் ‘பசங்க’. பார்த்துட்டு சொல்லுங்க!

-வினோ

இதற்கு முந்தைய கேள்வி பதில் பகுதியைப் படிக்க…

தமிழனை தமிழன்தான் ஆள வேண்டுமா? – கேள்வி பதில் -2

கேள்வி உங்கள் வழியில்… பதில் ‘என்வழி’யில்! - பகுதி 1


தமிழனை தமிழன்தான் ஆள வேண்டுமா? – கேள்வி பதில் -2

April 26, 2009 by envazhi  
Filed under Questions

தமிழனை தமிழன்தான் ஆள வேண்டுமா? – கேள்வி பதில் -2

கேள்வி பதில் பகுதிக்கு வாழ்த்துச் சொன்ன, லேட்டாயிடுச்சே என்று குறைபட்டுக் கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.  நேற்றைய கேள்வி பதில்களின் தொடர்ச்சி…

நேற்றைய தொடர்ச்சி…

தமிழன் என்று அடிக்கடி சொல்பவர்தான் தமிழனா? தமிழ்நாட்டுல பொறந்தாதான் தமிழனா? பெரியார் புகழ் பாடறவங்க மட்டும்தான் தமிழனா?

தமிழனை தமிழன்தான் ஆள வேண்டும் என்கிறார்களே… முதல்வர் என்பவர் முதன்மை வேலைக்காரர்தானே… அவருக்கு கீழ் நிறைய மந்திரிகள், எம்எல்ஏக்கள், அலுவலர்கள் என இருப்பவர்களும் வேலைக்காரர்கள்தானே… அப்போ பகுத்தறிவாளர்கள் முட்டாள்களா?

வேலைக்காரன்னு மரியாதை இல்லாம பேசறானேன்னு நினைக்க வேண்டாம். மக்கள் பணத்தில் நடப்பதுதானே அரசாங்கம்… என் காசை எனக்கு செலவழிக்கிற கணக்குப் புள்ளை, வேலைக்காரர்தானே! (பதில் சொல்லலேன்னா கமெண்ட் போட்டே நோகடிச்சிடுவேன்!)

டி.சுப்பிரமணியன், subramaniam.thirunavukkarasu@gmail.com

rajinikanth_with_karunanathiஇருங்க… இருங்க… கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன்.

யார் தமிழன்?

தன்னை எப்போதும் ‘தமிழன்… தமிழன்’ என மாரிலடித்து ஒப்பாரி  வைப்பவன்  அல்ல…  தமிழ்நாட்டில் பிறந்துவிட்டேன் என்று பிறப்புச் சான்றிதழ் காட்டிக் கொண்டிருப்பவனும் அல்ல…

தமிழகத்தில் பிறந்தவன்தான் தமிழனை ஆள வேண்டும் என்பது சட்டமும் அல்ல…

மனதில் நிஜமான இன உணர்வும், தமிழை தன்மொழியாய் நேசித்து தமிழனின் சுக துக்கங்களில் உண்மையாய் பங்கெடுத்துக் கொள்கிற யாரும் தமிழனே.

பிறப்பால் மட்டும் தமிழனாய் இருந்து என்ன பயன்? உணர்வால், உண்மையால், உதவியால் தமிழனாய் இருப்பதே சிறப்பு.

இனத்தைக் காட்டிக் கொடுத்து கட்சித் தலைவனாய், மந்திரியாய், முதல்வனாய் உயர்பவர்கள் இந்த இனத்தில் முளைத்த அவமானங்கள்.

முதல்வர் என்பவர் வேலைக்காரர்தான்… ஆனால் மரியாதைக்குரிய, நம்மையும் அதிகாரம் செலுத்தும் சட்ட அனுமதி பெற்ற வேலைக்காரர். அவருக்குக் கீழே உள்ளவர்களும் அப்படியே. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களுக்காக சட்டம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள மரியாதை அது. நீங்கள் சட்டத்தை மதிப்பவராக இருந்தால், சட்ட அங்கீகாரம் பெற்றவர்களையும் மதியுங்கள்.

நாளை ரஜினி முதல்வராகிவிட்டாலும் இந்தக் கேள்வியைக் கேட்பீர்களா!

****

இந்தக் கவுண்டமணி என்னதான் பண்றார் தல… சும்மா இருக்கிறதுக்கு ஏதாவது படங்களில் நடிக்கலாமே!

(செல்வபாரதி, selvabharthi3984@gmail.com)

goundarநீங்க நினைப்பது போல வாய்ப்புக்காக அலையும் ரகமில்லை கவுண்டர்.

தான் நினைப்பது போலவே எல்லாம் நடந்தாக வேண்டும் என்ற பிடிவாதம் அவருக்கு உண்டு. இப்போதும் நான்கு படங்களில் நடிப்பதாக அவருக்கு நெருங்கிய நமது பத்திரிகையாள நண்பர் சொன்னார்.

‘நான் நடிக்கிறதெல்லாம் உண்மைதான்யா… ஆனால் அந்தப் படங்கள் எப்போ வரும்னுதான் சொல்ல முடியாதே!’ என்றாராம் கவுண்டர் ஒரு முறை நக்கலாக!

******

கருணாநிதி கெட்டவரா? ரொம்ப கெட்டவரா?

தலைவர் குடும்பத்திளிருந்து யார் அடுத்த மாநிலங்களவை உறுப்பினர்? அறிவுநிதியா? உதயநிதியா? வேறு எதாவது நிதியா?

அடுத்த தி.மு.க முதல்வர் யார்? அன்பழகனா? ஆற்காடா?

கருணாநிதியின் மிக பெரிய ஜால்ரா யார்?

(பால்பழனி, g4palani@gmail.com)

20-karunanithi6-2001ஆக மொத்தத்தில் அவர் நல்லவரில்லை என்பது நிரூபணமாகிவிட்டதல்லவா… விஷத்தில் கொஞ்சமென்ன, அதிகமென்ன… விஷம் விஷம்தான்.

முதல்வர் பதவிக்கே அங்கு நான்கைந்து வேட்பாளர்கள் முட்டிக் கொண்டிருக்கும்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி பற்றிப் பேசுகிறீர்களே…

கருணாநிதியின் மிகப்பெரிய ஜால்ரா யார் எனும் போட்டியில் இப்போதைக்கு வெற்றி பெற்றிருப்பவர் எம்ஜிஆரால் எக்கச்சக்க பதவி, சொத்து சேர்த்த ஜெகத்ரட்சகன்! (ஒவ்வொரு கேள்வியா கேளுங்க பழனி)

******

தேர்தல் விதி மீறல்கள் குறித்து எங்கே அல்லது யாரிடம் புகார் தரலாம்?

எஸ்.என்.கணேஷ், ganesh_sn@yahoo.co.in

nareshசென்னை வட பழனியில் 100 அடி சாலையில் அமைந்துள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நேரடியாகப் புகார் தரலாம்.
தலைமைச் செயலகத்தின் புகார் பிரிவுக்கும் அனுப்பலாம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உங்கள் புகாரைத் தெரிவிக்கலாம். மிக அவசரம் எனும் பட்சத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலேயே புகார் தரலாம். தேர்தல் நேரத்தில், ஆணையத்தின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டதுதான் காவல் துறையும்.

*********

ஈழமக்களின் இந்த துயரத்துக்கு விடுதலைப் புலிகளும் ஒரு காரணம் என்று கூறுவதை ஏற்கிறீர்களா?

பாரதி,  rajinibharathi@hotmail.com
SRI LANKA-UNREST‘நாங்கள் அடிமையாக சந்தோஷமா இருந்தோம். எங்களுக்கு தனிநாடும், சுதந்திர வாழ்க்கையும் வாங்கித்தர வந்த விடுதலைப் புலிகளால்தான் இந்த கஷ்டமெல்லாம்’ என்று சொல்வதற்கு சமமானது உங்கள் கேள்வி.

பேரினவாதமும், இந்திய அரசின் சுயநலமும் கைகோர்த்ததால் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலம் இது.

அதற்கு தோதாக சிக்கியது ராஜீவ் கொலை. இதுபற்றி பெரிய புத்தகமே எழுதலாம். இப்போதைக்கு இது போதும்.

*******
காங்கிரஸ் தனது ஆட்சி முடிவதற்குள் ஈழத்தை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தாலே இலங்கை அரசுக்கு தீவிரமாக தற்போது உதவிக்கொண்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது? இது பற்றி உங்கள் கருத்து…

அன்புடன்… கிரி

menon, narayananகைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா…

ஈழத்தில் வன்னிக் களமுனையில் இந்தியப் படைகள் உள்ளன, இந்திய ஆயுதங்களே நம் உறவுகளைக் கொல்கின்றன என்ற உண்மையை ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர். புலிகளும் இக்குற்றச்சாட்டை பகிரங்கமாகவே கூறியுள்ளனர்.

திரும்பவும் ஆட்சிக்கு வருவது சந்தேகம் என்ற காங்கிரசின் ‘தன்னம்பிக்கை’யும், தமிழ்நாட்டு அரசியல் மீது சோனியாவுக்குள்ள அசைக்க முடியாத ‘நம்பிக்கையும்’தான், கணவர் கொலைக்குப் பழிவாங்க இந்த சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுக்க வைத்துள்ளது.

*********

உங்களை மாதிரி ரஜினி வெறியர்கள் எப்போதான் திருந்துவீர்கள்?

அருள்பிரகாஷ், tamilspot@gmail.com

rajini-spl-256x3001ஏன்… எதற்காக… திருந்த வேண்டும்?  ரஜினி ரசிகர்களால் இந்த தேசத்துக்கு என்ன அவமானம் நேர்ந்துவிட்டது…

அல்லது தமிழ்நாட்டில் எத்தனை குடிகள் முழுகிப் போயிருக்கின்றன?

என்னமோ ரஜினியைப் புகழ்கிறவர்கள் தேசத் துரோகிகள் போலவும், இப்படிக் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் உலகமகா அறிவுஜீவிகள் என்றும் நினைப்பு.

உண்மையில் ரஜினிக்கு இருப்பவர்கள் ‘ப்ரியர்களே’… வெறியர்கள் அல்ல!

அவரே சொன்னதுபோல இது அன்பால சேர்ந்த கூட்டம்!

ஒரு ரஜினி ரசிகன் தொடர்ச்சியாக செய்கிற நற்பணிகளில் ஒன்றையாவது, வாழ்நாளில் ஒரு முறையேனும் நீங்கள் செய்திருப்பீர்களா தெரியவில்லை. குறைந்தபட்சம் 50 மில்லி ரத்தம் கொடுக்க நீங்கள் தயாரா என உங்களையே கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்!

(உங்கள் கேள்வியை முழுமையாக வெளியிடாததற்காக சந்தோஷப்படுங்கள்!).

********

சந்திரமுகி படத்தின் டைட்டிலில் கமல்ஹாசனுக்கு நன்றி என போடுகிறார்களே… ஏன்?

(மோகன்குமார், mkumarsrm@gmail.com)

kamalpதனது மும்பை எக்ஸ்ப்ரஸ் படத்தின் பணிகளை பாதியில் விட்டுவிட்டு, ரஜினி – சிவாஜி குடும்ப நிகழ்வான சந்திரமுகி பூஜையில் கலந்து கொண்டார் கமல்.

மேலும், சந்திரமுகி – மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள் ஒரே நேரத்தில் வெளியான சூழலில், சந்திரமுகியை அதிக அளவு திரையரங்குகளில் வெளியிட ஆர்வம் காட்டினார்கள் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும்.

வழக்கமாக கமல் படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்ட திரையரங்குகளும் கடைசி நேரத்தில் சந்திரமுகியைத் திரையிட விருப்பம் தெரிவிக்க, கமலும் தன் நண்பருக்காக விட்டுக் கொடுத்தார்.

அந்த நன்றிதான் டைட்டிலில் தெரிந்தது!

-இது சிவாஜி பிலிம்ஸ் பிஆர்ஓ டயமண்ட் பாபு தெரிவித்தது.

-வினோ

முதல் பகுதியைப் படிக்க…

கேள்வி உங்கள் வழியில்… பதில் ‘என்வழி’யில்! – பகுதி 1

கேள்வி உங்கள் வழியில்… பதில் ‘என்வழி’யில்! – பகுதி 1

April 25, 2009 by envazhi  
Filed under Questions


கேள்வி உங்கள் வழியில்… பதில் ‘என்வழி’யில்! – பகுதி 1

வணக்கம் நண்பர்களே…

இடையறாத பணிகள், தேர்தல், ஈழப் போர்ச் செய்திகளை தொகுக்க வேண்டிய வேலை என பல பணிகள் குறுக்கிட்டதால் சிறிய தாமதம்.

இந்தப் பகுதிகுறித்து அறிவிப்பு வெளியிட்டதும் கேள்விகள் உற்சாகமாய்  வந்தன. ஆனால் ஒரு வார தாமதம் ஏற்பட்டுவிட்டது.

இதுவரை 56 கேள்விகள் நமக்கு வந்துள்ளன. நிச்சயம் அனைவரது கேள்விகளுக்கும் பதில் உண்டு என்ற உறுதியை மட்டும் இப்போதைக்குத் தருகிறோம். இந்த வாரத்துக்கான கேள்விகளில் 2 கேள்விகளுக்கான பதில்களை மட்டும் ஒரு அறிமுகமாக இன்று தருகிறோம்.

மற்றவை நிச்சயம் நாளை…

எத்தனை கேள்வி-பதில்கள் வெள்ளிக்கிழமை இடம் பெறும்?

ஒருவரே எத்தனை கேள்வி வேண்டும் என்றாலும் கேட்கலாமா!

எது பற்றி வேண்டும் என்றாலும் கேட்கலாமா! (நாகரீகமாக)

(கிரி, __________)

அடடா… கெளம்பிட்டீங்களா… எப்படிப் பார்த்தாலும் இந்தக் கேள்வியைத்தான் முதலில் வைத்தாக வேண்டும் என்று திட்டமிட்டுக் கேட்டீங்களோ…

வாரம் 10 கேள்விகள். எதைப் பற்றியும் கேட்கலாம்… நாகரீகமாகக் கேட்கவில்லையென்றால் சிங்கப்பூருக்கும் ஆட்டோ வரும்!!

ஒரு பத்திரிகையாளராக சூப்பர் ஸ்டாரை பலமுறை, தனிப்பட்ட முறையிலும்கூட சந்தித்திருப்பீர்கள். அவற்றில் மறக்க முடியாததைக் கூறுங்கள்…

(கல்யாண், kals75@yahoo.com)

ஒரு முக்கியமான அனுபவத்தைச் சொல்வதற்காக உங்களது இந்தக் கேள்வியைப் பயன்படுத்திக் கொள்கிறேன். ரஜினியை வெறும் பார்வையாளனாக, ரசிகனாக, பத்திரிகையாளனாக மட்டும் நான் பார்க்கவில்லை.

1995-ம் ஆண்டு மாலை முரசு நாளிதழில் செய்தியாளராக- அதுவும் ரஜினி பீட் – பார்க்கிற நிருபராக என் பணி மாறியதிலிருந்து அவரை அடிக்கடி நிகழ்ச்சிகளில், பத்திரிகையாளர் சந்திப்புகளில் சந்திக்கும், பேசும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அருணாச்சலம் படப்பிடிப்பிலும், பின்னர் பாபா படப்பிடிப்பிலும் நிறைய நேரம் இருந்து அவரது நடிப்பை நேரடியாகப் பார்த்து வியந்திருக்கிறேன்.

ஆனால் அப்போதெல்லாம் ஏற்படாத ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் இது.img016

பாபா படத் தோல்விக்குப் பிறகு, காவிரி விஷயத்தில் திரையுலகம் இரண்டாகப் பிளவுற்றிருந்த நேரம்.

‘இங்க வந்தா என்னை கன்னடக்காரன்னு சொல்றீங்க, பெங்களூர் போனா மகாராஷ்ட்ராக்காரன்னு சொல்றாங்க. நான் எங்கே போகட்டும், என்னை எங்கே போகச் சொல்றீங்க?’ என்று அதற்கு முந்தைய நாள் போட்கிளப் ப்ரஸ் மீட்டில் ரஜினி கேட்ட போது பல நிருபர்களே கண்கலங்கி விட்டதை, அவர்களில் ஒருவனாக இருந்து பார்த்ததால், அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் அவரை நேரில் பார்க்க தீவிர விருப்பம் கொண்டிருந்தேன்.

அடுத்த நாள் ரஜினி தன்னந்தனியாக உண்ணாவிரதம் அறிவிக்க, அவருக்கு பல்வேறு அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தன. அப்போது எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கப் போன குழுவில் நானும் இருந்தேன். அந்தக் குழுவுக்கு தலைவர் மூத்த எழுத்தாளர் விக்ரமன்.

அருணாச்சலா இன்னில் ஐந்து நிமிட காத்திருப்புக்குப் பின் ரஜினி அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அவரைப் பார்த்ததும், முந்தைய நாள் பிரஸ் மீட்டில் அவர் வேதனைப்பட்டதைக்  குறிப்பிட்டோம்.

‘நீங்க இந்த ஸ்டேட்டுக்கே ராஜா சார்… நீங்க ஏன் கலங்கறீங்க. யாரோ நாலுபேர் சொல்றதால நீங்க அந்நியப்பட்டுட மாட்டீங்க. எப்பவும் நீங்க எங்க ரஜினிதான்’ என்றார் விக்ரமன்.

அதற்கு ‘ஆண்டவன் இருக்கிறான்… ‘ என்றார் ரஜினி.

பின்னர் ஒவ்வொருவரிடமும் அவர்களைப் பற்றி விசாரித்த ரஜினி, என்னைப் பார்த்து, ‘நீங்க எப்போ ரைட்டரானீங்க?’ என்றார்.

‘பத்திரிகை எடிட்டர் சார் இப்போ!’ என்றார் உடன் வந்திருந்த நண்பர்.

‘ஓ.. ரிப்போர்ட்டராயிருந்து இப்போ எடிட்டராயிட்டீங்களா…குட்.. நல்ல ப்ரமோஷன்!’ என்றவரிடம் நான் பொறுப்பேற்றிருந்த பத்திரிகையைக் கொடுத்தேன். வாங்கிப் பார்த்தார். அதில்தான் பாபா விமர்சனமும் வெளியாகியிருந்தது.

பின்னர் ‘நீங்கள்லாம் முழு ஆதரவு தெரிவிச்சா போதும்!’ என்றவரிடம், ‘நாங்கள் நாளை முழுவதும் உங்கள் போராட்ட வேலைகளில் பங்கெடுத்துக் கொள்கிறோம். எங்களுக்கும் பொறுப்பு கொடுங்கள்’ என்றோம்.

ரஜினி அவர்கள், அடுத்த நாள் காலையில் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்துவிடச் சொன்னார். சரியாக 7.30 மணிக்கு அங்கே ஆஜராகிவிட்டோம். சிறிது நேரத்துக்குள் தமிழகமே திரண்டு வந்ததைப் போல அப்படியொரு கூட்டம்.

உண்ணாவிரதம் முடியும்வரை ஏற்பாட்டாளர் குழுவில் நாங்களும் இருந்தோம். கவர்னர் மாளிகையில் மனு கொடுத்துவிட்டு வெளியில் வந்த ரஜினி அவர்கள், மறக்காமல் அழைத்து, “இந்த சப்போர்ட்டை என்னிக்கும் மறக்க மாட்டேன். ரொம்ப தாங்க்ஸ்”, என்றார். ஒரு நெருக்கடியான நேரத்தில் அவருடனே இருக்கும் வாய்ப்பு கிடைத்ததில் உள்ளபடியே திருப்தியாக உண்ர்ந்தோம்.

உடனிருந்த நடிகர் சரத்குமார்,  ‘சரி…, இனிமே உங்க ஆபீஸ் ராகவேந்திரா மண்டபமா? பத்திரிகை அலுவலகமா?’ என்றார் ஜாலியாக.

குறிப்பு: ‘ஆஹா…நான் சூப்பர் ஸ்டாருக்கு நெருக்கமானவனாக்கும்’ என காட்டிக் கொள்ளவோ, ரஜினியை எனக்கும் தெரியும் என்று கூறி சுய விளம்பரம் தேடும் நோக்கத்திலோ இதை எழுதவில்லை.

அதற்காகத்தான், ரஜினியைச் சந்தித்தபோது எடுத்த ஒரு படத்தை இங்கே தந்திருக்கிறேன். இயல்பாகவே அதில் எனது முகம் மறைக்கப்பட்டிருந்தது ஒரு வசதி. மற்ற படங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் தருகிறேன்… காரணம், சொல்ல இன்னும் நிறைய உள்ளது!

* கவுண்டமணி என்னதான் பண்றார்?

* கருணாநிதி நல்லவரா கெட்டவரா?

* ஈழத்தமிழர்களி்ன் துண்பங்களுக்கு காரணம் விடுதலைப் புலிகளா?

* உங்களை மாதிரி ரஜினி வெறியர்கள் எப்போதான் திருந்துவீங்க…?

- இன்னும் இன்னும் பரபர கேள்விகளுக்கு பதில்… நாளை!

Related Posts with Thumbnails