எனக்கும் ரஜினிக்கும் நட்பைத் தாண்டிய உறவு! – கமல்
எனக்கும் ரஜினிக்கும் நட்பைத் தாண்டிய உறவு உள்ளது, என்று நடிகர் கமல்ஹாஸன் தெரிவித்துள்ளார்.
மலையாளப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
ஒளி கொடுத்த சூரியன் சிவாஜி
என்னுடைய இத்தனை வருட பயணத்தில் எனக்கு மிகப்பெரிய முன்னோடியாக, என்னை பாதித்தவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். ஒளி கொடுக்கும் ஒரு சூரியன் மாதிரி அவர் இருந்தார்.
விருதுகள் பற்றி கவலைப்படும் நிலையில் நான் இல்லை. விருதுகளும் பாராட்டுக்களும் ஒரு கலைஞனை உற்சாகப்படுத்துபவை என்பதை நான் மறுக்கவில்லை. எனக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லையே என்று வருத்தமில்லை. அதே நேரம் ரஹ்மானுக்கு அந்த விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
ஆஸ்கர் குறித்து கவலை இல்லை!
எஞ்ஜினீயரிங் படிப்பு படிக்காமலேயே எனக்கு பிஇ பட்டம் கிடைக்கவில்லையே என்று புலம்புவதைப் போலத்தான், எனக்கு விருது கிடைக்கவில்லையே என்று கூறுவது. ஒருவேளை நான் ஆஸ்கர் விருதுக்கேற்ற மாதிரி படங்கள் செய்திருந்தால், உரிய முறையில் அணுகியிருந்தால் எனக்கும் விருது கிடைத்திருக்கும். சத்யஜித் ரேக்கு வழங்கப்பட்டதைப் போல, நான் இறந்த பிறகு எனக்கும் கூட ஆஸ்கர் தரப்படலாம். அதை என் குழந்தைகள் பெற்றுக் கொள்வார்கள்.
நிறைய முறை என்னிடம் அரசியல் பற்றி பேசிவிட்டார்கள். மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் குதித்து பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்றில்லை.
மலையாளம் சினிமா எனக்கு நிறைய கற்றுத் தந்தது. அந்த பாதிப்பில்தான் நான் மகாநதி போன்ற படங்களை எடுத்தேன். கிட்டத்தட்ட பாலச்சந்தர் எப்படி என்னை ஒரு வடிவத்துக்கு கொண்டுவந்தாரோ, அதே போன்ற பணியை மலையாளம் சினிமா செய்தது.
ரஜினிக்கும் எனக்கும் உள்ள நட்பு!
எனக்கும் ரஜினிக்கும் உள்ள உறவு மிகவும் நட்பு ரீதியானது. அதையும் தாண்டியது என்றுகூடச் சொல்லலாம். அப்போதெல்லாம் நான் சினிமா வாய்ப்புக்காக பாலச்சந்தர் போன்ற இயக்குநர்களின் அலுவலகத்திலேயே அமர்ந்திருப்பேன். அப்படி ஒரு நாள் பாலச்சந்தர் அலுவலகத்துக்குப் போய் அமர்ந்திருந்தேன்.
அப்போது, ‘வெளியில் ஒரு பிலிம் இன்ஸ்ட்டிட்யூட் மாணவர் நிற்கிறார். மராட்டி பெயர். ஆங்கிலம், கன்னடம் பேசுவார். கராத்தே தெரியும். நீ போய் அவரை வரச் சொல்’ என்றார். நானும் போய் அழைத்து வந்தேன். அவர்தான் ரஜினிகாந்த் . நானும் அவரும் இணைந்துதான் அந்தப் படத்தைச் செய்தோம்.
அந்த படத்தில் ரஜினி பிரெஞ்ச் தாடி வைத்திருப்பார். அப்போது எனக்கு ராஜன் என்று ஒரு மிக நெருங்கிய நண்பர் இருந்தார். கேன்சர் நோயாளி. அவரும் பிரெஞ்ச் தாடிதான் வைத்திருப்பார். படம் முடிந்த பிறகு ராஜன் இறந்து போனார். உடனே ரஜினியும் தன் தாடியை எடுத்துவிட்டார். அன்று முதல் ரஜினி என் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல… ராஜன் இடத்தில் நான் வைத்துப் பார்க்கும் நபரும் அவரே. நட்பைத் தாண்டிய உணர்வு அது.
வெற்றி தோல்விகளை நான் சகஜமாகவே எடுத்துக் கொள்கிறேன். பாட்ஷாவின் வெற்றியையும் குசேலன் தோல்வியையும் ரஜினி எப்படி எடுத்துக் கொண்டாரோ அப்படித்தான் நானும்.
நானும் ஸ்ரீதேவியும்…
என்னுடன் அதிகப் படங்களில், 27 படங்களில், நடித்தவர் ஸ்ரீதேவி. அது ஒரு இனிமையான நினைவு. நானும் அவரும் காதலிப்பதாக ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்றே எல்லாரும் நம்பினார்கள். ஸ்ரீதேவியின் தாயார் கூட அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை. அதையெல்லாம் தாண்டிய அற்புதமான உறவு எங்களுக்குள் இருந்தது.
அப்போதெல்லாம் என்னைப் பார்த்தால் ஸ்ரீதேவி பயத்துடன் ஒதுங்கி நிற்பார். அந்த பயம் இப்போதும் அவரிடம் உள்ளது. என்னை இப்போதும் கமல் சார் என்றுதான் அவர் அழைப்பார்…”, என்று கூறியுள்ளார் கமல்.
ரஜினி, அமிதாப், கமலுக்கு நன்றி! – சீமான்
கொழும்பு திரைப்பட விழாவில் யாரும் பங்கேற்காதீர்கள்..!- சீமான் வேண்டுகோள்!
சென்னை: எமது தொப்புள்கொடி உறவுகளின் ரத்தத்தால் நனைந்த இலங்கையில், தமிழர் படுகொலையைக் கொண்டாடும் வகையில் இரக்கமற்று நடத்தப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்திய நடிகர் – நடிகையர் யாரும் பங்கேற்க வேண்டாம். மீறிப் பங்கேற்போருக்கு எதிராக பெரும் போராட்டம் தொடரும்” என்று நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:
நாம் தமிழர் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு மனிதாபிமான அடிப்படையில், இலங்கையில் நடக்கும் இந்தியத் திரைப்பட விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்த ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், கமல்ஹாஸன், மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு நன்றி.
மலையாளம், தெலுங்கு, கன்னடத் திரையுலகைச் சேர்ந்த மம்முட்டி, மோகன்லால், திலீப், வெங்கடேஷ், நாகார்ஜுன், புனித் ராஜ்குமார் போன்ற கலைஞர்களும் இந்த விழாவைப் புறக்கணித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இவர்களெல்லாம் சக மனிதனாக தமிழர் உணர்வுகளை மதித்துள்ளார்கள். அந்த உணர்வுக்கு நன்றி செலுத்துகிறோம்.
அதேபோல இந்த விஷயத்தில் மிகத் தெளிவான முடிவை எடுத்துள்ள தென்னிந்திய திரைப்படத்துறை, கொழும்பு விழாவில் பங்கேற்கும் நடிகர்களுக்கு தடையை அறிவித்துள்ளது. இது மிகுந்த ஆறுதலைத் தருகிறது. தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்புக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவர்களைத் தவிர, மனித உணர்வற்று இலங்கை விழாவுக்கு போக விரும்புபவர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்.
இன்று காலையில் கூட இந்தியத் திரைப்பட விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைதாகியிருக்கிறார்கள். இவர்களும் மற்ற நடிகர்களைப் போல இலங்கை செல்லமாட்டோம் என்று அறிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.
இந்தியத் திரைப்பட விழாவில் ஒரு இந்திய நட்சத்திரம் கூட பங்கேற்கவில்லை என்ற நிலை உருவாக வேண்டும். இனப் படுகொலை செய்த ஒரு நாடு சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தப்பட வேண்டும். போர்க் குற்றங்களுக்கு உரிய தண்டனையை ராஜபக்சே அரசு அனுபவித்தே தீர வேண்டும். அதற்கு திரைத்துறையினரின் இந்தப் புறக்கணிப்பு பெருமளவு உதவும் என்பதை மனதில் கொண்டு, தமிழ் இனத்தின் உரிமைக்கும் விடிவுக்கும் குரல் கொடுக்க முன்வருமாறு, கேட்டுக்கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
விளக்கினார் ரஜினி… விலகுகிறார் அமிதாப்?
ரஜினியின் விளக்கமும் அமிதாப் குடும்பத்தின் விலகலும்!
இலங்கையில் நடக்கவிருக்கும் சர்வதேச இந்தியப் பட விழாவில் அமிதாப் குடும்பத்தினர் பங்கேற்க மாட்டார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அவர்களின் இந்த முடிவுக்கு சூப்பர் ரஜினி முக்கிய காரணம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்துக்கே பிள்ளையார் சுழி போட்டவர்கள் ரஜினியும் கமலும்தான்.
இலங்கைத் தூதரகத்திலிருந்து அழைப்பிதழ் என்ற தகவல் தெரிந்ததுமே அதனை முதலில் நிராகரித்தவர்கள் இவர்களே.
இந்த செய்தியறிந்து சட்டென்று சுதாரித்துக் கொண்டனர் தமிழ் திரையுலகினர்.
விஷயம் அரசியல் உலகில் பரவியதும் வைகோ, பழ நெடுமாறன், சீமான் உள்ளிட்டோர் ரஜினிக்கும் கமலுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டனர்.
சீமானின் நாம் தமிழர் இயக்கம் மும்பையில் அமிதாப் வீடுகளை முற்றுகையிட, அவரும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்துப் பேசினார்.
விழா ஏற்பாட்டாளர்களையும் நாம் தமிழர் இயக்கத்தினருடன் பேச வைத்தார். தமிழர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் முடிவெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த அமிதாப், தனது நெருங்கிய நண்பரான ரஜினியிடம் இதுகுறித்து விரிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் மீது தமிழ் ரசிகர்கள் வைத்துள்ள மதிப்பு, குறிப்பாக ஐஸ்வர்யா ராய் இந்த நேரத்தில் கொழும்பு செல்வது எத்தகைய விளைவுகளை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்பதையெல்லாம் எடுத்துக் கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினை, வன்னிப் போரின் போது இங்கு திரையுலகம் மேற்கொண்ட போராட்டங்கள் குறித்தும் ரஜினி கூறியதாகத் தெரிகிறது.
மேலும் மணிரத்னம் தரப்பிலிருந்தும் ஐஸ்வர்யா ராய்க்கு பிரச்சினையின் தன்மையைப் புரிய வைத்துள்ளனர்.
இதன் விளைவாக அமிதாப் குடும்பத்தினர் கொழும்பு விழாவுக்கு செல்லாமல் புறக்கணிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்த விழாவில் சிறப்புக் காட்சியாக ராவணன் படத்தைத் திரையிட திட்டமிட்டிருந்த மணிரத்னம், இப்போது அதனை கைவிட்டுள்ளார். இலங்கை விழாவுக்கும் ராவணன் படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது!
நன்றி: தட்ஸ்தமிழ்
ரஜினி – கமல் உணர்வுக்கு நன்றி!- சீமான்
ரஜினி – கமல் உணர்வுக்கு நன்றி!- சீமான்
இலங்கையில் நடக்கும் திரைப்பட விழாவில் பங்கேற்க மாட்டோம்
என்று ரஜினியும் கமலும் கூறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சக தமிழனின் உணர்வுக்கு அவர்கள் அளித்த மரியாதைக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்.
கொழும்பில் வரும் ஜூன் மாதம் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடக்கிறது. தமிழ் ஈழத்தில் ஏராளமான விடுதலைப் புலிகளும் ஆயிரக்கணக்கான மக்களும் தங்கள் தாய்மண்ணுக்காக உயிரைத் துறந்த கொடிய போர் முடிந்து ஓராண்டு முடிகிறது.
அந்த கொடிய நிகழ்வை, இலங்கை அதிபர் ராஜபக்சே கேளிக்கை நிகழ்ச்சியுடன் கொண்டாடத் திட்டமிட்டு, அதற்கு இந்திய திரைக்கலைஞர்களையே துணைக்கு அழைத்துள்ளார்.
இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஷாரூக்கான் போன்ற கலைஞர்களும் ராஜபக்சேவுக்கு துணை செல்கின்றனரே என்று தமிழர்கள் வேதனைக் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
இலங்கைக் தலைநகர் கொழும்பில் விழா என்றதுமே, அதில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ்க் கலைஞர்கள் முடிவு செய்துவிட்டனர்.
இந்த விழாவுக்கு சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா சார்பில் அமிதாப் மற்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே விடுத்த அழைப்பை முற்றிலும் புறக்கணித்துள்ளனர் ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ்க் கலைஞர்கள்.
இதுகுறித்த செய்தியை முன்பே வெளியிட்டுள்ளோம்.
இந்த நிலையில், கொழும்பு திரைப்பட விழாவுக்கான எதிர்ப்பை தமிழ் உணர்வாளர்கள் ஒருமித்த குரலில் காட்ட ஆரம்பித்துள்ளனர்.
இந்த விழாவைப் புறக்கணித்ததன் மூலம் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்த ரஜினி, கமல் உள்ளிட்ட கலைஞர்களை தமிழ் உணர்வாளர்கள் பாராட்டியுள்ளதோடு, சக தமிழனின் உணர்வைப் புரிந்து கொண்டமைக்காக நன்றியும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குநரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் கூறுகையில், “இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் மாதம் நடத்தப்படுவதாக அறிந்தோம். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை நடிகர் அமிதாப்பச்சன் முன்னின்று கவனித்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இவ்விழாவில் பங்கேற்க கமல், ரஜினி இருவருக்கும் அமிதாப் விடுத்த அழைப்பை அவர்கள் இருவரும் புறக்கணித்துவிட்டதாக செய்தி அறிந்தோம். சக தமிழனின் வலியையும் உணர்வையும் மதித்து, இவ்விழாவில் பங்கேற்க மறுத்த அந்த இருபெரும் கலைஞர்களுக்குக்கும் அனைத்து தமிழ்க் கலைஞர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த உணர்வு எல்லோருக்கும் வேண்டும்.
தமிழ்க் கலைஞர்கள் யாரும் இவ்விழாவுக்கு போகக் கூடாது என்று அனைத்து தமிழ்க் கலைஞர்களும் எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளும் நமக்கு இலங்கையில் இருந்து மரணச் செய்தியாகத்தான் வந்து கொண்டிருந்தன. அங்கு தமிழர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.
சென்ற ஆண்டு இதே நாளில் நடந்த நெஞ்சை பதற வைக்கும் துயரச் சம்பவங்களை மறக்கடிக்க திட்டமிட்டு இந்த விழா நடத்தப்படுவதாகவே கருதுகிறேன். இன்றைக்கும் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் முள்வேலிக்கு மத்தியில் கடும் சித்ரவதைக்கு ஆளாகி வருகிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது” என்று கூறியுள்ளார்.
அமிதாப் வீட்டு முன் ஆர்ப்பாட்டம்!
இதற்கிடையே, கொழும்புவில் நடத்தத் திட்டமிட்டுள்ள திரைப்பட விழாவை உடனடியாக நிறுத்துமாறு அமிதாப் பச்சனு்ககு தமிழ் திரைப்பட அமைப்புகள் மற்றும் உணர்வாளர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதனை தெரிவிக்கும் விதமாக மும்பையில் உள்ள அமிதாப் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஐஸ்வர்யா ராய் என்பவர் நடிகையாக உருவானது இந்த தமிழ் மண்ணில்தான். இந்த தமிழர்கள் அவருக்கு பேராதரவை வழங்கினார்கள்.
ஆனால் அந்த தமிழனின் உறவுகள் கொல்லப்பட்ட இலங்கையில், அமிதாப்பின் மருமகளான ஐஸ்வர்யா ராயும் பங்கேற்க இருப்பதாக கேள்வியுறுகிறோம். இதற்காக மன வருத்தப்படுகிறோம். தமிழ் ரசிகர்கள் முழுமையாக அவரை நேசிக்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் இந்த விழாவில் அவர் பங்கேற்பது தமிழ்க் கலைஞர்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
விழாவில் பங்கேற்பதை அவர் நிராகரிக்க வேண்டும். தமிழர்கள் மற்றும் தமிழ்க் கலைஞர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இவ்விழாவுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
அதையும் மீறி அமிதாப், ஐஸ்வர்யா ராய் இருவரும் இவ்விழாவில் பங்கேற்பார்களேயானால், ஐஸ்வர்யா நடித்துள்ள படத்தை ஒட்டுமொத்த தமிழர்களும் புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் ஐஸ்வர்யா ராய் நடித்த படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவரது படத்தைப் பார்க்காமல் புறக்கணிப்பார்கள்.
தமிழர்களின் மரணச் செய்தி தினமும் வந்து கொண்டிருக்கின்ற வேளையில் தமிழர்கள் கண்ணீர்க்டலில் மிதக்கும் நேரத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை மகிழ்விக்க இத்தகைய ஒரு விழா நடத்தப்படுவது தேவைதானா என்று அமிதாப் பச்சன் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.
தமிழர்களின் ஆதரவில் பெரிய நடிகையான ஐஸ்வர்யா ராய் அந்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மாறாக நடந்து கொள்ளக்கூடாது.
எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், மும்பையில் உள்ள அமிதாப் வீட்டு முன்பாக நாம் தமிழர் இயக்கம் சார்பில் நாளை காலை முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் மும்பையில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாம் தமிழர் இயக்க தொண்டர்கள் பங்கேற்பார்கள்” என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட திரைப்பட அமைப்புகளும் கொழும்பு திரைவிழாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமிதாப் பச்சன் இந்த விழாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.
‘அமிதாப் – இலங்கை’ அழைப்பை புறக்கணித்தனர் ரஜினி – கமல்
அமிதாப் – இலங்கை அழைப்பை புறக்கணித்தனர் ரஜினி – கமல்
இலங்கையில் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு ஐஐஎஃப்ஏ – இலங்கை விடுத்துள்ள அழைப்பைப் புறக்கணித்தனர் ரஜினியும் கமலும்.
விஜய் உள்ளிட்ட அடுத்த நிலை நாயகர்களும் இந்த விழாவுக்கு வரமுடியாது என்று தெரிவித்துள்ளனர்.
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடக்கிறது.
கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்த ஐஐஎஃப்ஏ விழா உலகின் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. அந்த வகையில் இப்போது கொழும்பில் நடக்கிறது.
ஜூன் 3-ம் தேதி துவங்கும் இந்த விழாவில் பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தமிழகத்திலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல்ஹாஸன் ஆகிய இருவரையும் எப்படியாவது பங்கேற்கச் செய்ய வேண்டும் என பெருமுயற்சி மேற்கொண்டாராம் அமிதாப்.
ரஜினிக்கும் கமலுக்கும் அழைப்பிதழும் அனுப்பியுள்ளார். ஆனால், இருவருமே இந்த விழாவுக்கு வர மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே லண்டனில் நடந்த ஐஐஎஃப்ஏ விழாவில் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டபோதும், அதை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் ரஜினி. பின்னர் பாங்காக்கில் நடந்த இதே அமைப்பின் விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.
இவற்றையெல்லாம் விட முக்கியம், இந்த ஆண்டு நடக்கும் விழாவையும் அவர் தவிர்த்ததுதான்.
கமல்ஹாஸன் ஏற்கெனவே இந்த அமைப்பின் விருதினைப் பெற்றவர் என்றாலும், இந்த ஆண்டு இலங்கையில் நடப்பதாலேயே அதனைப் புறக்கணித்துள்ளார்.
அடுத்த நிலை நாயகர்களான விஜய், சூர்யா போன்றோர் இது தொடர்பான அழைப்பிதழைக் கூட வாங்க மறுத்துள்ளனர்.
தமிழ் இனப்படுகொலைக்குக் காரணமானவர், மனித உரிமைகளை மீறிய போர்க்குற்றவாளி என்று சர்வதேசத்தால் குற்றம்சாட்டப்பட்ட ராஜபக்சேயின் ரத்தக் கறை படிந்த கைகளை தமிழர் பிரதிநிதிகளும், தமிழர் கட்சிகளும்கூட இன்று தேடிப் போய் குலுக்கி வரும் நிலையில், தமிழகத்தின் கலைஞர்கள் தங்களின் ரசிகர்களின் மனத்துடிப்பைப் புரிந்து கொண்டு நடந்திருப்பது ஆறுதலளிப்பதாக உள்ளது என தமிழ் உணர்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘கலைஞர் திரை ஊர்’: படப்பிடிப்பு தளத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார் ரஜினி!
‘கலைஞர் திரை ஊர்’ அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி!
சென்னையில் புதிதாக உருவாகும் சினிமா நகரத்துக்கு வருகிற 23-ந் தேதி, முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நகரின் படப்பிடிப்புத் தளத்துக்கு ரஜினிகாந்த் அடிக்கல் நாட்டுகிறார்.
திரைப்பட தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வீடு கட்டுவதற்காக, சென்னையை அடுத்த பையனூரில் 65 ஏக்கர் நிலத்தை முதல்வர் கருணாநிதி வழங்கியிருக்கிறார்.
அங்கு, திரையுலகை சேர்ந்தவர்களுக்கு வீடுகளும், ஒரு படப்பிடிப்பு தளமும், ஒரு மருத்துவமனையும் கட்டப்படுகிறது. இதற்கு, ‘கலைஞரின் திரை ஊர்’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.
கலைஞரின் திரை ஊருக்கான அடிக்கல் நாட்டு விழா, பையனூரில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. விழாவில், முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக ரஜினி, கமல் இருவரும் பங்கேற்கிறார்கள்.
திரைப்பட நகருக்கு முதல்வர் அடிக்கல் நாட்ட, நகரின் படப்பிடிப்பு தளத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கல் நாட்டுகிறார். மருத்துவமனைக்கு கமல்ஹாசன் அடிக்கல் நாட்டுகிறார்.
மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் மற்றும் இசைஞானி இளையராஜா பெயர்களில் ஒலிப்பதிவுக் கூடங்களும் அமைகின்றன.
இதுபற்றிய தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது.
நினைவோ ஒரு பறவை… ஒரு ரசிகனின் ஃப்ளாஷ்பேக்!
நினைவோ ஒரு பறவை… ஒரு ரசிகனின் ஃப்ளாஷ்பேக்!
வணக்கம் நண்பர்களே..
கமெண்ட் பகுதியில் மட்டுமே அவ்வப்போது தலைகாட்டி வந்த என்னை, முகப்புப் பக்கத்தில் முகம் காட்ட வைத்திருக்கிறார் வினோ. உற்சாகப்படுத்துதல், சகித்துக் கொள்ளுதல் இரண்டுக்குமே ஒரு மனசு வேண்டும்.
ஒருவனின் ரசனையை மதித்து, அந்த ரசனைக்கு ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சும் குணம் எல்லாருக்கும் சுலபத்தில் வருவதில்லை.
என்னைப் பற்றிய ஒரு வரி அறிமுகம்… நான் ஒரு ரஜினி ரசிகன்! அவ்வளவுதான்!!
எப்போது தலைவரை ரசிக்க ஆரம்பித்தேன்…?
ஹாங்… தர்மயுத்தம். இதுதான் நான் பார்த்த முதல் தலைவர் படம். அந்த முடி, நிறம், நடையில் தெரியும் எகத்தாளம், எதிராளியை பார்வையிலேயே காலி பண்ணும் அந்த கூரிய பார்வை… ‘இவர்தான்டா நம்மாளு’ என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன் போலிருக்கிறது.
ஒரு படம் கூட தவறவிட்டதில்லை. போக்கிரி ராஜா என்ற படம் வந்தபோது, ஊரிலும் பள்ளியிலும் நான் செய்த அட்டகாசங்களை இப்போதும் நண்பர்கள் சொல்லும்போது, திகைப்பாகத்தான் இருக்கிறது. போக்கிரி ராஜா என்ற பெயரை எதிரணிக்காரன் (கமல் ரசிகர்கள்!) ஒருவன் உச்சரித்ததற்கே மண்டையை உடைத்தேன் என்றால், ரஜினியுடன் என்னுடைய மானசீக உறவு புரிந்திருக்கும்.
காலையில் எழுந்ததும் ரஜினி முகம் பார்க்கணும், ரஜினி பாட்டு கேக்கணும், ரஜினி குரலை அனுபவிக்கணும்…. யாராவது கமல் பெயரைச் சொன்னாலும் என் ஜென்ம விரோதியாகிவிடுவான். தலைவரும் கமலும் நண்பர்கள்தான் என்றாலும் ரசிகர்களால் அப்படி இருக்க முடிந்ததில்லை.
இதில் வினோதம் பாருங்கள்… கமல் பிடிக்காது என்றாலும் அவர் படத்தை எப்படியும் முதல் இரு தினங்களுக்குள் பார்த்துவிடுவேன். ஒருவேளை அவர்களின் நட்புக்கு நமக்கே தெரியாமல் நாம் தந்த மரியாதை இது போலிருக்கிறது!
எண்ணம், செயல் எல்லாவற்றிலும் ரஜினியே நிறைந்திருந்தாலும், அந்த தீவிர ரசிப்பையும் மீறி என்னை மயக்கிய சில பாடல்கள் உண்டு. அதுவும் கமல் பாடல்கள் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா…
இந்தப் பாடல்களை ரசிக்க எனக்கு கமல் ஒரு தடையாக இருக்கவில்லை. ரஜினி, கமல் என்ற parameter தாண்டிய ஒரு விஷயம் இருக்கிறது… அது இசைஞானி இளையராஜா!
ரஜினி ரசிகனான என்னை மயக்கிய சில கமல் பாடல்கள்… இதுதான் டாபிக். அவற்றை ஜஸ்ட் பட்டியலிட வேண்டும் என்பதே என் ஆசை. வேறு வர்ணனை எதுவும் தரும் உத்தேசம் இல்லை. அந்தப் பாடல்களைக் கேளுங்கள். வர்ணித்து மகிழுங்கள். ஜூட்…!
படம்: கடல் மீன்கள்
பாடல்: தாலாட்டுதே வானம்… தள்ளாடுதே மேகம்.. தாளாமல் மடிமீது தார்மீகக் கல்யாணம… இது கார்கால சந்தேஷம்!
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன் – ஜானகி
படம்: சிகப்பு ரோஜாக்கள்
பாடல்: நினைவோ ஒரு பறவை… விரிக்கும் அதன் சிறகை… பறக்கும் அது கலக்கும் தன் உறவை!
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்கள்: கமல்ஹாஸன் – ஜானகி
படம்: உல்லாசப் பறவைகள்
பாடல்: அழகு ஆயிரம்… உலகம் முழுவதும்… இறைவனின் சிரிப்பினில் எழுதிய ஓவியம் மமமியா மமமியா மமமியா மா..!
இசை: இளையராஜா
பாடல்: கவியரசு கண்ணதாசன்
பாடியவர்: எஸ் ஜானகி
படம்: மீண்டும் கோகிலா
பாடல்: ஹே.. ஓராயிரம்… மலர்களே மலர்ந்தன… உலகிலே சுகமே இதுதானோ ஹே…!
இசை: இளையராஜா
எழுதியவர்: கவியரசு கண்ணதாசன்
பாடியவர்: எஸ்பிபி
படம்: ராம் லட்சுமணன்
பாடல்: விழியில் என் விழியில்… ஒரு பூ பூத்ததோ… பூ இன்று பெண்ணானதோ….
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: எஸ்பிபி – பி சுசீலா
படம்: ஒரு கைதியின் டைரி
பாடல்: ஏபிசி நீ வாசி… நீ வாசி எல்லாம் உன் கைராசி வா ரோஸி…
இசை: இசைஞானி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: ஜேசுதாஸ் – வாணி ஜெயராம்
படம்: சலங்கை ஒலி
பாடல்: மௌனமான நேரம்… இளம் மனதில் என்ன பாரம்!
இசை: இசைஞானி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்பிபி – ஜானகி
படம்: எனக்குள் ஒருவன்
பாடல்: முத்தம் போதாதே…
இசை: இசைஞானி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்பிபி – ஜானகி
படம்: மகாநதி
பாடல்: ஸ்ரீரெங்க ரெங்கநாதனின் பாதம்… வந்தனம் கூறடி…
இசை: இசைஞானி
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: எஸ்பிபி – ஷோபனா
படம்: ஹே ராம்
பாடல்: நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி… நுமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
இசை: இசைஞானி
எழுதியவர்: கமல்ஹாஸன்
பாடியவர்கள்: ஹரிஹரன் – ஆஷா போஸ்லே
குறிப்பு: ஆனாலும் இந்த வினோ பண்ற ‘அநியாய’த்தை சொல்லாமல் விட முடியாதுங்க…! ரஜினியின் அரிய, ஆனால் ரசிகர்கள் அவ்வளவாக அறிந்திராத சில (இருக்கிறதா என்ன?) பாடல்களை தொகுக்கலாமே… என்று யோசனை சொன்னேன். பதிலுக்கு இவர், திருப்பிக் கேட்டது, ‘ரஜினி ரசிகரான நீங்கள் வேறு யார் பாடலையும் ரசிக்கவில்லையா?’ என்பதுதான். அந்த கேள்விக்கு விடைதான் இந்தத் தொகுப்பு. அநியாயத்துக்கு என் பழைய நினைவுகளைக் கிளறி அழ வச்சிட்டார்…
எனவே அடுத்தமுறை தலைவரின் அரிய ஹிட் பாடல்களுடன் சந்திக்கலாம்…!
-ரஞ்சன்
புதிய சட்டசபைக் கட்டடம் திறப்பு விழா: ரஜினி – கமலுக்கு அழைப்பு!
புதிய சட்டசபைக் கட்டடம் திறப்பு விழா: ரஜினி – கமலுக்கு அழைப்பு!
சென்னை: தமிழக அரசின் புதிய சட்டசபைக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர்கள் ரஜினி – கமலுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அழைப்பிதழை தமிழக செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியே நேரில் சென்று கொடுத்தார்.
தமிழக அரசின் புதிய சட்டசபைக் கட்டடத்துக்கான பணிகள் 2007-ம் ஆண்டு துவங்கின. முதல்வர் கருணாநிதியின் கனவுத் திட்டம் இந்த புதிய சட்டசபை வளாகம்.
திட்டமிட்டபடி மிகச் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது இந்தக் கட்டடம். வருகிற மார்ச் 3-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இந்தக் கட்டடத்தைத் திறந்து வைக்கிறார்கள். இவர்களுக்கு துணை முதல்வர் முக ஸ்டாலின் டெல்லிக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்.
இப்போது தலைநகர் சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைப்பதில் மும்முரமாக உள்ளது தமிழக அரசு.
முதல்வர் கருணாநிதி சார்பில் தமிழக செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி இந்த அழைப்பிதழ்களை நேரில் கொடுத்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் முதல்நிலை நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாஸனுக்கு திங்கள்கிழமை அழைப்பிதழ்களை வழங்கினார் பரிதி இளம்வழுதி.
இருவரும் நிச்சயம் இந்த விழாவில் பங்கேற்பதாக அவரிடம் உறிதியளித்ததோடு, விழா சிறப்பாக நடக்கவும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜெயம் ராஜா சொன்ன கதை பிடிக்கவில்லையாம் விஜய்க்கு!
கமல் ஜோடியாக த்ரிஷா!
யாவரும் கேளிர் படத்தில் கமல் ஜோடியாக நடிக்கும் நாயகி இவர்தான் என நயன்தாரா, ஸ்ரேயா, கரீனா கபூர் என தெரிந்த பெயர்களையெல்லாம் யூகமாக சொல்லி வந்தது மீடியா.
ஆனால் ஏற்கெனவே மர்மயோகி படத்துக்கு ஒப்பந்தம் செய்து வைத்திருந்த த்ரிஷாவையே இந்தப் படத்தின் நாயகியாக்கிவிட்டார் கமல்.
விஷயம் அறிந்ததும், மும்பை ஓட்டலைக் காலி செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டாராம் த்ரிஷா.
‘எனக்கு இந்திப்படம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை… நம்ம ஊர் கமல் முக்கியமாச்சே’ என்கிறார் த்ரிஷா.
ஜெயம் ராஜா சொன்ன கதை பிடிக்கவில்லையாம் விஜய்க்கு!
ஜெயம் ராஜா பொதுவாக ரீமேக் படங்களைத்தான் எடுப்பார். தொடர்ந்த அந்த பார்முலா அவருக்கு ஒர்க்அவுட் ஆகிறது. விஜய்யும் அப்படித்தான். அவருக்கும் ஒரிஜினல் கதைகளுக்கும் அப்படி ஒரு தூரம்…
இந்த இருவரும் சேரும் படமும் ரீமேக்காகத்தான் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் ராஜா கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று விஜய்க்கு ஒரிஜினல் கதை ஒன்றைத் சொன்னாராம்.
கதையைக் கேட்ட விஜய், ஒற்றை வரியில் சொன்ன பதில்: ‘பிடிக்கலை, வேற நல்ல ரீமேக் கதையைப் பிடிங்க!’
ராஜா ரீமேக் கதை தேடிக் கொண்டிருக்க, அதற்குள் மலையாள சித்திக்கைப் பிடித்த விஜய், அவரது பாடிகார்ட் படத்தையே 51வது படமாக ரீமேக்கச் சொல்லிவிட்டாராம்.
அப்ப ராஜா… 52 அல்லது 53 வது படத்தை இயக்குவாராம்!!
ஜெயம் ரவி நடிக்க அமீர் இயக்கும் அடுத்த படமான கண்ணபிரான் படப்பிடிப்பு மார்ச்சில் துவங்குகிறதாம்.
படத்தைத் தயாரிக்கப் போகிறவர் திமுகவின் பிரபலமான மனிதர். பெயர் ஜெ அன்பழகன். தி நகர் எம்எல்ஏவாக இருந்தவர். இப்போது திமுக மாவட்ட செயலாளர்.
முதல்வர் விழா… உச்சகட்ட நாடகத்துக்கு கோடம்பாக்கம் ஒத்திகை!
முதல்வர் விழா… ‘உச்சகட்ட நாடக’த்துக்கு கோடம்பாக்கம் ஒத்திகை!
கிட்டத்தட்ட உன்மத்தம் பிடித்த நிலைக்குப் போயிருக்கிறது தமிழ் சினிமாவும் அரசியல் களமும். துதிபாடுவதில் ஒருவருக்கொருவர் சளைக்காமல் காட்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்.
சினிமாக்காரர்கள் பாராட்டு விழா எடுப்பதும், அவர்களுக்கு கருணாநிதி சலுகைகளை வழங்குவதும் தங்குதடையில்லாமல் தொடர்கிறது. தமிழகத்தின் சூப்பர் சிட்டிசன்களாக மாறியுள்ளனர் சினிமாக்காரர்கள். மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த ‘சிறந்த நிலையை’ உருவாக்கிய முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் சினிமா மீண்டும் ஒரு விழா எடுக்கிறது நாளை சனிக்கிழமை (பிப்ரவரி 6).
ஏதோ கல்யாணத்துக்குத் தயாராவது போல ‘குஜாலாக’ இருக்கிறது கோடம்பாக்கம். நாளை நடக்கும் ‘முதல்வருக்கு ஐஸ் வைக்கும் விழாவுக்காக’ ஒரு பக்கம் குத்தாட்ட ஒத்திகை, மறுபக்கம் துதிப்பாடல் ஒத்திகை, பிலிம்சேம்பர், பெப்ஸி வளாகங்களில் நிர்வாகிகளின் மேடை ஒத்திகை, அடுத்து என்ன கோரிக்கை வைக்கலாம் என்று ‘ஹை லெவல்’ ஆலோசனைகள்…
நாட்டில்.. ஸாரி இந்த மாநிலத்தில் மற்றவர்கள் எல்லாம் வீணாகப் பிறந்து தொலைத்துவிட்டது போல ஒரு பிரமை.
நாளைய விழாவில் அனைத்து முன்னணி நடிகைகளும் குறைந்தது ஒரு குத்தாட்டமாவது போட வேண்டும் என்பது விழா ஏற்பாட்டாளர்களின் கட்டளை.
இதை மீறிய ஸ்ரேயா, பாவனா, ப்ரியாமணி மற்றும் த்ரிஷாக்களுக்கு தடை போட்டிருக்கிறார்களாம் ஃபெப்ஸி அமைப்பினர். வெளிநாட்டுப் படப்பிடிப்பிலிருக்கும் நடிகர்களுக்கும் இது அறிவிக்கப்பட அடித்துப் பிடித்துக் கொண்டு கோடம்பாக்கத்துக்கு ஃபிளைட் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் (ஏற்கெனவே ஷூட்டிங்குக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவித்துள்ளது ஃபெப்ஸி).
கமல் ஒரு ட்ராமா போடப் போகிறாராம் (நிஜமான நாடகமுங்க). இதில் முதல்வர் கருணாநிதி எழுதிய வசனங்களைப் பேசி அவரிடம் சபாஷ் வாங்குவதுதான் பிரதான நோக்கம். கலைஞர் வசனத்தில் தான் நடிக்கவில்லை என்ற குறையைத் தீர்க்க இந்த ஏற்பாடாம்.
கலைஞரை போற்றிப் பாடப்படும் பாடலுக்கு தொழில் முறைப் பாடகர்களுடன் சேர்ந்து ரஜினியும் கமலும் பாடுவார்கள் என்று வேறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவின் இறுதியில் திரைத் துறையினருக்கு மேலும் சில சலுகைகள் வழங்கவும், வீடுகள் திறப்பு விழா தேதி பற்றியும் முதல்வர் அறிவிக்க உள்ளார் என்பதுதான் ஹைலைட்!
விலை உயர்வு, கல்வி என்ற பெயரில் அடிக்கப்படும் கொள்ளை, கிராமங்களில் அடியோடு சீரழிந்து கிடக்கும் உள்கட்டமைப்பு வசதி, தொழில்மயம் என்ற பெயரில் தமிழகத்தின் முக்கால்வாசி பகுதியில் நிலத்தடி நீரைக் கெடுத்து வைத்திருக்கும் அநியாயம், அங்கெல்லாம் பாதுகாக்கப்பட்ட குடிநீரைத் தர ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாத அரசு இயந்திரம், சீரழிந்துபோன விவசாயம், சமத்துவபுர வீட்டுக்குக் கூட தலா ரூ 50 ஆயிரம் பிடுங்கப்படும் அக்கிரமம்… அட அவ்வளவு ஏன், சினிமா தியேட்டர்களில் கட்டணம் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கொள்ளை மற்றும் எதிர்ப்பவர் மேல் பிரயோகிக்கப்படும் கேட்பாரற்ற வன்முறை…
எல்லாத்தையும் மறந்துவிட்டு, இந்த சினிமாக்காரர்களின் ஜாலியான கூத்தை ஆனந்தக் கண்ணீரோட கண்டு களியுங்க.. தமிழகம் சினிமாக்காரர்களுக்காக நேர்ந்துவிடப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொண்டபடி!
-விதுரன்
ஜக்குபாய் சிறப்புக் காட்சியில் ரஜினி… ஸ்பெஷல் படங்கள்!
ஜக்குபாய் சிறப்புக் காட்சியில் ரஜினி… ஸ்பெஷல் படங்கள்!
ஜக்குபாய் பிரிமியர் ஷோவில் பார்வையாளர்களைக் கவர்ந்தவர்… வேறு யார்… செம ஹேண்ட்சமாக வந்திருந்த தலைவர்தான்!
நீங்களே பாருங்க…

'பாராட்டு விழாவுல இந்த முறை கலைஞருக்கே சவால் விடற கவிதை ஒண்ணு சொல்லிடப் போறேன்... அப்புறமாவது என்னை ரிலீவ் பண்றாங்களா பாப்போம்... என்ன சொல்றீங்க ரஜினி?' 'வாவ்... பிரில்லியன்ட்பா!'
-என்வழி ஸ்பெஷல்
ஜக்குபாய் பிரிமியர் ஷோவில் ரஜினி – கமல்!
ஜக்குபாய் படம் பார்த்தார் ரஜினி!
சென்னையில் நடந்த ஜக்குபாய் படத்தின் சிறப்புக் காட்சியில் பங்கேற்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
சரத்குமார்-ஸ்ரேயா நடிப்பில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜக்குபாய். சந்திரமுகி படத்துக்கு முன் ரஜினி நடிப்பதாக இருந்து, பின்னர் கைவிடப்பட்ட படம் இது.
இந்தப் படம் போஸ்ட் புரொடக்ஷனில் இருந்தபோது, படக்குழுவைச் சேர்ந்த சிலரால் இணையதளங்களில் கசியவிடப்பட்டது.
அடுத்த சில நாட்களில் டிவிடி வடிவிலும் 15 ரூபாய்க்குக் கிடைத்தது. ஆனாலும் பார்க்க ஆளில்லை.
பின்னர் இந்த விவகாரத்தை வைத்து பெரிய அளவில் நடவடிக்கைகளில் இறங்கினர் சரத்குமாரும் ராதிகாவும். அதற்கு ரஜினி, கமல் என திரையுலகப் பிரமுகர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டனர். முதல்வரிடம் மனுகொடுத்து, திருட்டு டிவிடி வைத்திருந்தாலே தண்டனை என்று அறிவிக்கச் செய்து சாதனை படைத்தனர்.
இந்த நிலையில், படத்தின் சில காட்சிகளை மாற்றி எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
படத்துக்கு மேலும் விளம்பரம் தேடி, அதன் பிரிமியர் காட்சியை சென்னையில் ஏற்பாடு செய்திருந்தனர். சென்னை சத்யம் வளாகத்தில் நடந்த இந்த சிறப்புக் காட்சிக்கு ரஜினி, கமல் ஆகியோர் கண்டிப்பாக வந்து ஆதரவு தரவேண்டும் என்று ராதிகா மற்றும் சரத்குமார் தரப்பில் கேட்டுக் கொண்டார்களாம்.
கோடம்பாக்கத்தின் மற்ற முன்னணி நடிகர்களான அர்ஜுன், வடிவேலு, தனுஷ், பார்த்திபன், நடிகைகள் சிம்ரன், சங்கீதா, ஆண்ட்ரியா என பலரும் இந்த ஷோவுக்கு வந்திருந்தனர்.
ரஜினி படம் தவிர்த்த, தமிழ்ப் பட பிரியமியர் ஷோவுக்கு இத்தனை நட்சத்திரங்கள் அணி திரண்டிருந்தது இதுதான் முதல்முறை என்று பெருமையாக சொல்லிக் கொண்டார் சரத்குமார் (அதுகூட ரஜினி வந்ததால்தான் என்பது அவருக்குத் தெரியாமலா இருந்திருக்கும்!).
முதல்வர் நிவாரண நிதி… உண்டியலில் பணம் போட்ட ரஜினி!
இந்த ஷோவுக்கு வந்த நட்சத்திரங்கள் அனைவரும் முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு கணிசமாக நன்கொடை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ரஜினி தன் பங்களிப்பாக ஒரு தொகையை உண்டியலில் செலுத்தினார்.
கமல் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்களும் நன்கொடையை செலுத்தினர்.
பிரிமியர் ஷோவில் ரஜினி… சில படங்கள்:
ரஜினி – கமல் ‘கால்ஷீட்’ வாங்கியாச்சா?
January 12, 2010 by envazhi
Filed under இது எப்படி இருக்கு
ரஜினி – கமல் ‘கால்ஷீட்’ வாங்கியாச்சா?
‘சினிமாக்காரங்க விழா அறிக்கை கிடக்கட்டும்யா.. அப்படியே இந்த விழாவுக்கு ரஜினி – கமல் கால்ஷீட் வாங்கியாச்சான்னு நம்ம ‘டைரக்டரை’ கேளு.. அது ரொம்ப முக்கியம்!’
‘முழுசா படிங்க தலைவரே.. டீட்டெய்லா ரிப்போர்ட் இருக்கு!’
தலைமைச் செயலகத்தில் ரஜினி!
தலைமைச் செயலகத்தில் ரஜினி… திருட்டு விசிடியைத் தடுக்க கோரிக்கை!
திருட்டு விசிடி ஒழிப்பு தொடர்பாக முதல்வரைச் சந்திந்து ஆலோசனை நடத்தினர் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள்.
ஜக்குபாய் திரைப்படம் திரைக்கு வரும் முன்பே இணைய தளங்களில் வெளியானதில் திரையுலகம் ஆடிப்போனது. அடுத்த அதிர்ச்சியாக இந்தப் படத்தை டிவிடிகளில் ரூ 15-க்கு விற்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இதனால் பெரும் நஷ்டம் ஆகிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் குமுறினர். பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, அதில் ரஜினி மற்றும் கமல்ஹாஸனை பங்கேற்க வைத்தனர்.
திருட்டு விசிடி வெளிவர காரணம் திரையுலகில் உள்ள சிலர்தான் என்றும், அவர்கள் யாரென்று கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரஜினி கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, ஜக்குபாய் டிவிடிகளை அச்சடித்து விநியோகிப்போரை தொடர்ந்து கைது செய்து வருகிறது தமிழக காவல்துறை.
இந்நிலையில், இன்று மாலை (வெள்ளிக்கிழமை) முதல்வரைச் சந்தித்தனர் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர்.
திருட்டு விசிடி ஒழிப்பில் தமிழக அரசு காட்டும் அக்கறைக்கு நன்றி தெரிவித்த ரஜினி,
இந்த திருட்டுக்கு காரணமானவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டார்.
இணையதளங்களில் புதிய படங்கள் வெளியாவதைத் தடுக்க சைபர் க்ரைம் பிரிவு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பின்னர் திருட்டு விசிடி ஒழிப்பு தொடர்பான எழுத்துப் பூர்வமான மனுவை முதல்வரிடம் ரஜினி, கமல், சரத்குமார் உள்ளிட்ட கலைஞர்கள் வழங்கினர்.
பின்னர் முதல்வருடன் ரஜினி, கமல் நடத்திய நீண்ட ஆலோசனையின் முடிவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
*திரைப்படங்களை ஒளிநாடா மற்றும் குறுந்தகடுகளாக திருட்டுத்தனமாக விற்பவர்கள், வைத்திருப்பவர்கள் மற்றும் தயாரிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
*மத்திய அரசின் காப்பி ரைட் சட்டம் 1957ன் படி மேலே குறிப்பிடவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்ப்படும்.
*இந்தச் சட்டத்தின்படி குறைந்த பட்ச சிறை தண்டனையாக ஆறு மாதங்கள் அவர்களுக்குக் கிடைக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
*இந்த சட்டப் பிரிவுகளை மேலும் தீவிரமாக்குவதற்காக மத்திய அரசிற்கு தமிழக அரசின் சார்பில் பரிந்துரை அனுப்பப்படும்.
*அரசின் சார்பில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதே நேரத்தில், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள், தங்கள் துறை சார்ந்தவர்கள் மூலம் இந்த திருட்டு விசிடிகள் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சினிமாவின் அனைத்துப் பிரிவினரும் இதனை ஒரு முன் எச்சரிக்கையாகக் கொண்டு செயல்பட வேண்டும்.
-என்வழி ஸ்பெஷல்
*படங்கள் விரைவில்…
திருட்டு விசிடி பணம் தீவிரவாதத்துக்குதான் போகுது! – கமல்
திருட்டு விசிடி பணம் தீவிரவாதத்துக்குதான் போகுது! – கமல்
திருட்டு விசிடி வாங்குவதற்கு மக்கள் கொடுக்கும் பணம் நல்ல வழியில் செலவழிக்கப்படுவதில்லை. மும்பை குண்டு வெடிப்பு போன்ற தீவிரவாதத்துக்குதான் அது பயன்படுகிறது என்றார் கமல் ஹாஸன்.
ஜக்குபாய் இன்டர் நெட்டில் வெளியான விவகாரம், திருட்டு டிவிடி விற்பனை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியது:
“இது, இழவு வீடு என்று சொல்வதை ஒத்துக்கொள்ள மாட்டேன். நான் கெஞ்சி கேட்பது, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ‘ஜக்குபாய்’ படத்தை தியேட்டருக்கு கொண்டுவந்து விடுங்கள். ‘விக்ரம்’ படம் எடுத்தபோது இதே போன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டது.
எம்.ஜி.ஆரிடம் போய் அழுதுகொண்டே சொன்னேன். என்ன செய்யவேண்டும்? திருடனைப் பிடித்து உள்ளே போடட்டுமா? என்று கேட்டார். அதன்படியே அவரும் அவனை உள்ளே பிடித்துப் போட்டார். அடுத்த நாளே அந்த திருடன் வெளியே வந்துவிட்டான்.
உண்மையிலேயே வி.சி.டி. திருடர்களை திருத்த முடியாது. சாராயக்கடைகள் திறந்திருந்தபோதும், கள்ளச்சாராயம் குடித்து பலர் செத்துப்போனதை நாம் பார்த்திருக்கிறோம்.
குறைந்த விலையில் வி.சி.டியிலும், டி.வி.டி.யிலும் படம் பார்ப்பதை மக்கள் சந்தோஷமாக நினைக்கிறார்கள். அதைத் திருத்த முடியாது.
‘ஹேராம்’ சி.டி. பர்மா பஜாரில் விற்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். இதுபோன்ற சட்டவிரோதமான செயல்கள் எல்லாம், கறுப்பு பணத்தில் இருந்து வருவதுதான்.
திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் எல்லாம் நல்ல விஷயத்துக்குப் போவதில்லை. மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதை நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
திருட்டு வி.சி.டி. பணம் எல்லாம் தேச துரோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்கு புரியவைக்க வேண்டும். நீங்க கொடுக்கிற பணம் உங்க தலையிலயே குண்டா விழுதுன்னு புரிய வைக்கணும்.
இப்போதைக்கு என்ன செய்வது? என்ற முடிவை மட்டும் எடுக்காமல், எதிர்காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
இனி நம் சட்டதிட்டங்களை அழுத்தம் திருத்தமாக போடவேண்டும். சட்டத்தில் நிறைய ஓட்டை இருக்கிறது. அதை அடைக்க வேண்டும். தப்பு செய்வதற்கு வழிவகுத்து கொடுக்கக்கூடாது…,” என்றார்.
இந்த பிரஸ்மீட்டை ஏற்பாடு செய்த சரத்தும் ராதிகாவும் செய்தியாளர்களிடம் அழுதபடியே பேசிக் கொண்டிருந்தனர். அடிக்கடி ‘சினிமாவை அழிச்சிடாதீங்க’ என்றும் கேட்டுக் கொண்டனர்.































