முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

இசையில் எனக்கு வாரிசு யாருமில்லை! – இளையராஜா

June 3, 2010 by envazhi  
Filed under Cinema

இசையில் எனக்கு வாரிசு யாருமில்லை! – இளையராஜா

சையில் எனக்கென்று வாரிசுகள் யாருமில்லை. இது எல்லாருக்கும் சொந்தமானது, என்றார் இசைஞானி இளையராஜா.

ஜூன் 2-ம் தேதி தனது 67வது பிறந்த நாளைக் கொண்டாடினார் இளையராஜா. நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் அவர் பிறந்த நாள் கொண்டாடுகிறார்.

இதனையொட்டி, திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள் இளையராஜாவின் ஒலிப்பதிவுக் கூடம் அமைந்துள்ள பிரசாத் ஸ்டுடியோவில் குவிந்துவிட்டனர். பிறந்த நாள் விழாவை ஃபெப்ஸி அமைப்பும், ராஜா இசையமைக்கும் இரு புதிய படங்களின் தயாரிப்பாளர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம நாராயணன், ஃபெப்ஸி தலைவர் விசி குகநாதன், ஃபெப்ஸி ஜி சிவா, நடிகர்-ஒளிப்பதிவாளர் நட்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த விழாவில் பங்கேற்று, இளையராஜாவை வாழ்த்தினர்.

பின்னர் மூன்று ஆசிரமங்களைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினார் இளையராஜா.

ஃபெப்ஸி சார்பில் கொண்டுவரப்பட்ட கேக்கை வெட்டியவர், ராம நாராயணன், விசி குகநாதன் உள்ளிட்டோருக்கு ஊட்டினார்.

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா சார்பில் பெரிய கேக் வரவழைக்கப்பட்டது. அதையும் வெட்டிய ராஜா, அனைவருக்கும் பரிமாறச் சொன்னார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், “உண்மையில் இன்று எனக்குப் பிறந்த நாள் கிடையாது. ஒரு நாள் முன்கூட்டியே கொண்டாடுகிறேன். ஜூன் 3-ம் தேதிதான் எனக்குப் பிறந்த நாள். ஆனால் அன்று முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் வருகிறது.

அந்த தினத்தில் பிறந்த நாள் கொண்டாட வேண்டாமே என்பதற்காகத்தான் நான் ஒரு நாள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவேன். இந்த முறை உங்கள் அன்பு இங்கே இருக்கும்படி ஆகிவிட்டது.

என்னிடம் எந்த பிறந்த நாள் செய்தியும் கிடையாது. இந்த நாளில், ஏராளமான குழந்தைகளுக்கு உணவு வழங்கியது மிகுந்த நிறைவாக உள்ளது…” என்றவரை இடைமறித்த நிருபர்கள், “உங்கள் இசை வாரிசு யார்?” என்று கேட்டனர்.

சற்றும் யோசிக்காத ராஜா, நீங்கள்தான் என்றார். பின்னர், “இந்த உலகம் ரொம்பப் பெரிசு. இதில் அனைவருக்குமே சம பங்குண்டு. இங்கே உரிமை கொண்டாட என்ன இருக்கிறது. எனக்கென்று இசை வாரிசுகள் யாருமில்லை. இசைக்கு யாரும் வாரிசாகவும் முடியாது. அவரவர் திறமையில் முன்னே வர வேண்டியதுதான்” என்றார்.

பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட பல பாடகர்கள், கவிஞர்கள் ராஜாவுக்கு வாழ்த்துக் கூறிச் சென்றவண்ணமிருந்தனர்.

கொண்டாடிய கேப்டன் டிவி!

இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி, தமிழ் தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. ஆனால் விஜயகாந்தின் கேப்டன் டிவி மட்டும் காலை முதல் மாலை வரை இளையராஜா பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகளையும் அருமையான பாடல்களையும் தொடர்ந்து ஒளிபரப்பியது.

மு மேத்தா, பாடகர்கள் திப்பு ஹரிணி பேட்டிகள், ராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டம், அவரது பேட்டி என தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்தனர்.

-என்வழி ஸ்பெஷல்

மாமன் மச்சானும் விகடனின் ‘குறை விமர்சனமும்’!

May 16, 2010 by envazhi  
Filed under Fans Activities

விகடனின் குறை விமர்சனம்!

ந்த வாரம் ஒரு வாரப்பத்திரிக்கையில் முரட்டுக்காளை படத்திற்கு அவர்கள் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு எழுதிய விமர்சனத்தை மறுபிரசுரம் செய்திருந்தார்கள்.

இந்த பத்திரிக்கையின் விமர்சனக் குழுவினர் ரஜினிகாந்த் படங்களை பார்க்கச்செல்லும் போது பூதக்கண்ணாடி அணிந்து சென்றால் பரவாயில்லை. அன்று முதல் இன்று வரை கருப்புக் கண்ணாடியைத்தான் அவர்கள் அணிந்து செல்கிறார்கள் என்பதற்கு முரட்டுக்காளை விமர்சனம் ஓர் உதாரணம்.

விமர்சனத்தின் ஓர் பகுதி,

“சுமலதா, காட்டில் பாடிக்கொண்டு வர, உடனே அதை ரஜினி புரிந்துகொள்வதைப் பார்க்கும் போது, இந்தப் பாடல் ஏற்கனெவே கதையில் பாடப்பட்டிருக்கவேண்டுமே என்று தோன்றுகிறது! இல்லையென்றால் சுமலதா ரஜினியைத் தேடிக்கொண்டு வரும்போது, இந்தக் காதல் ரசம் ததும்பும் பாடல் எங்கிருந்து வந்தது?”

விமர்சனக் குழுவினர் படம் ஆரம்பித்து அரைமணிநேரம் கழித்து சென்றார்களோ, இல்லை படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது அவ்வப்போது அச்சுமுறுக்கு சாப்பிட எழுந்து சென்றார்களோ என்னவோ!

ரஜினியும் சுமலதாவும் விசிலால் இந்தப்பாடலின் மெட்டை பாடிக்கொண்டு தென்னந்தோப்பில் காதல் வளர்க்கும் காட்சி மட்டும் திரையில் சுமார் 5 நிமிடத்திற்கு மேலாக வருமே….

“இன்னொரு இடத்தில், “மாட்டுச் சண்டையில் கூடவா ரஜினியின் கராத்தே ஸ்டைல்? தன்னைப் பார்த்துவிட்டுக் காளைமாடும் தன் முன்னங்கால்களைத் தூக்கி குங்ஃபூ போஸ் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறாரா? போகிறபோக்கில், கோவிலுக்குச் சென்று சுவாமியை வணங்குவதுபோல் படமெடுத்தால்கூட, கராத்தே ஸ்டைலில் நான்கு தடவை கையை சுற்றிவிட்டுத்தான் ரஜினி, கடவுளுக்கே வணக்கம் தெரிவிப்பார் போலிருக்கிறது!”

என்று தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டியுள்ளனர்.

இதற்கு ஏற்கெனவே எஸ்பிஎம் பதில் கூறியிருந்தார். வழக்கமாக மாட்டின் மேல் பாய்வது போல படமாக்காமல், அதனுடன் நேருக்கு நேர் நின்று மோதுவதாக எடுக்க வேண்டும் என்பதற்காக படமாக்கப்பட்ட காட்சி அது. அன்றைக்கு ரசிகர்கள் அமர்க்களமாக வரவேற்ற காட்சியும் அது. கோயிலுக்குப் போய் கடவுளை ரஜினி எந்த ஸ்டைலில் வணங்கினால் இவர்களுக்கென்ன… அது அவர் தனிப்பட்ட விஷயம். இது படத்துடன் சம்பந்தப்பட்ட சமாச்சாரமில்லையே.

இன்னொரு முக்கியமான விஷயம், முரட்டுக்காளையில் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட, படத்துக்கே தனி மரியாதையை ஏற்படுத்திய இசைஞானி இளையராஜா பற்றி ஒரு வரி சொல்லவில்லை. ரஜினி, இளையராஜா போன்ற ஈடுஇணையில்லா கலைஞர்கள் மீது இவர்களுக்கு இன்று நேற்றல்ல.. காலகாலமாக இருந்து வரும் காழ்ப்புணர்வின் வெளிப்பாடுதான் இந்த விமர்சனம்.

Cult Classic என்பதற்கு அட்டகாசமான உதாரணம் முரட்டுக் காளைதான். இந்தப் படத்துக்கு நிகராகக் கூட வேண்டாம்.. அட, ஒரு 20 சதவிகிதம் சுவாரஸ்யமான ஒரு ஆக்ஷன் படத்தை இன்றைக்கு உதாரணம் காட்ட முடியுமா!

குறிப்பு: முரட்டுக்காளை படத்தின் தென்னந்தோப்பு காட்சியில் பார்த்த ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

சுமலதா: உங்களுக்கு மாடுபிடிக்கிறத தவிர என்ன தெரியும்?

ரஜினிகாந்த்: எனக்கா….ஹா ஹா ஹா(தலைவரின் டிரேட் மார்க் சிரிப்பு) நான் ஒரு “சகலகலா வல்லவன்” தெரியுமா?

தலைவர் வாயில் இருந்துதான் “டைட்டில்” அங்க போயிருக்கு பார்த்தீர்களா….

-காத்தவராயன்

மனசுக்குள் பெய்யும் மழை!

May 12, 2010 by envazhi  
Filed under Music

மனசுக்குள் பெய்யும் மழை!

சின்ன வயதில் பார்த்த பல படங்கள் மறந்து போகின்றன.. கேட்ட பல பாடல்கள் நினைவுகளிலிருந்து அழிந்து போகின்றன.

ஆனால் சில நிகழ்வுகளைத் தொட்டு நிற்கும் படங்கள் / பாடல்களை யுகங்களானாலும் மறக்க முடியாது போலிருக்கிறது.

ஒரு கோடை மழை நாளில், எங்கள் ஊரில் திருமணம் ஒன்றில் ரிக்கார்டு போட்டபோதுதான் முதன்முதலில் அந்தப் பாட்டைக் கேட்டேன். பதின்ம வயதுகளின் ஆரம்பம். பார்க்கும் பெண்களிடமெல்லாம் நெருக்கமாக இருக்கத் தூண்டும் கிளர் பருவம். மனதை பரவசப்படுத்தியது அந்தப் பாட்டு.

அதுதான் வெள்ளைப் புறா ஒன்று… எனும் புதுக்கவிதை படப் பாட்டு. தொடர்ந்து அந்த ரிக்கார்டில் ஒலித்த அத்தனைப் பாடல்களுமே இனிமையாக இருந்தன. ஆனால் வெள்ளைப் புறா ஒன்றும்…, வா வா வசந்தமே பாடலும்தான் எனக்கு மிகப் பிடித்த பாடல்களாக இருந்தன.

பின்னொரு மழைநாளில் திருப்பத்தூர் சி.கே.சி திரையரங்கில் அந்தப் படத்தைப் பார்த்தேன். 14 கிலோ மீட்டர் சைக்கிளில் நண்பர்களுடன் போய் பார்த்த படம். படத்தின் இடைவேளையில்தான், அவளும் படம் பார்க்க வந்திருப்பது தெரிந்தது. அவளுக்கு வீடு பக்கத்து கிராமம். உடன் படிப்பவள். வகுப்பிலேயே அழகி. சைக்கிளில் அவள் வருவதைப் பார்க்கவே ஒரு கூட்டம் காத்திருக்கும். பையன்களும் பெண்களும் பேசிக் கொள்ளாமல், மனதுக்குள் பெரிய கோட்டை கட்டி, அந்தக் கோட்டையைத் திறக்காமலேயே, அடுத்த கட்டத்துக்குப் போய்விடும் கட்டுப்பெட்டி காலம் அது.

படம் முடிந்த பிறகு அவள் என்னுடன் அதிசயமாய் பேசினாள்.. (உடன் வந்திருந்த அவள் தங்கை விரோதமாய் முறைத்ததாய் நினைவு!)

‘படம் பிடிச்சிருக்கா…’

‘ம்… உனக்கு?’

‘எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இன்னொரு முறை அக்காவோட வருவேன்’

‘எப்போன்னு சொல்லு…நானும் வர்றேன்’

பதில் சொல்லாமல், முகமெல்லாம் வெட்கச் சிரிப்பாக அவள், கடந்து செல்ல, வெள்ளைப் புறா ஒன்று இதயத்துக்குள் நீண்ட நேரம் படபடவென அடித்துக் கொண்டே இருந்தது. அந்த சந்தோஷத்தைக் கொண்டாட நண்பர்களை வற்புறுத்தி அடுத்த காட்சியும் பார்த்தேன் (இரண்டாம் வகுப்பு டிக்கெட் விலை 75 பைசா!).

வாழ்க்கை வேறு வேறு திசைகளில் பயணப்பட்டுவிட்டாலும் இன்னும் கூட மனசுக்குள் அந்த மழை ஈரமும், மகிழ்ச்சியான உரையாடலும் மறையவே இல்லை.

‘புதுக்கவிதை’ பாடல்களை மீண்டும் ஒரு முறை கேட்க நேர்ந்தபோது, இதைப் பதிவு செய்யத் தோன்றியது… இதைப் படிக்கும் உங்களையும் இப்படி சில மழைக் காலங்களும்… புதுக்கவிதைகளும் கடந்திருக்கலாம்…!

வெள்ளைப் புறா ஒன்று…

வாரே வா…

வெள்ளைப் புறா ஒன்று… (சோகம்)

வா வா வசந்தமே…

படம்: புதுக்கவிதை
நடிகர்கள்: ரஜினி, ஜோதி
பாடல்கள்: வைரமுத்து
இசை: இசைஞானி இளையராஜா
இயக்கம்: எஸ்பி முத்துராமன்
வெளியான வருடம்: 1982

-திருப்பத்தூரான்

‘என் கடவுள் இளையராஜாதான்!’

May 6, 2010 by envazhi  
Filed under Cinema

‘இசையால் எனக்கு விலாசம் தந்தவர் இளையராஜாதான்!’

ன்றியறிதலில் வள்ளுவன் வாக்கை அப்படியே பின்பற்றுகிறார் முரளி.

“நன்றி உணர்வு இல்லேன்னா… நடிகன் என்பதை விடுங்க, நான் மனுசன்லயே சேர்த்தி இல்லை. நான் திரையுலகுக்கு வந்து 27 வருடங்கள் ஆகிவிட்டன. 98 படங்களில் நடித்து விட்டேன். சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் ‘பகல் நிலவு’, ‘இதயம்’, ‘என்றும் அன்புடன்’ என 3 படங்களில் நடித்தேன். எங்க சாமி இளையராஜாதான் இசை. இவை மட்டுமல்ல… இன்னும் நான் நடித்த இங்கேயும் ஒரு கங்கை, பூவிலங்கு என எத்தனையோ படங்களில் அவர்தான் எனக்கு விலாசம் கொடுத்தார், தனது அற்புதமான இசை மூலம்.

என்னைப் பொறுத்தவரை இளையராஜாதான் எனக்கு கடவுள். என் படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும் என நிறைய பேர் தியேட்டருக்கு வருவார்கள். என் படங்கள் ஓடியதற்கு இளையராஜாதான் காரணம்.

இப்போ என் மகன் அதர்வா (பாணா காத்தாடி) நடிக்க வந்திருக்கிறான். இந்தப் படத்தை சத்யஜோதி தியாகராஜனின் வாரிசுகள் தயாரிக்கிறார்கள். இசைஞானியின் மகன் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

என் மகன், நடிப்பில் மக்கு என யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக நானே அவனுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன். நடிகரின் மகன் சினிமாவில் ஜெயிப்பது சுலபம் இல்லை. அப்பாவையும், மகனையும் ஒப்பிட்டு பார்ப்பார்கள். தயாரிப்பாளரையும், நடிப்புக்கு உயிர் தரும் இசையமைப்பாளரையும் மதிக்கணும்னு என் மகனுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கேன்…” என்று அவர் பேசி முடித்தபோது கண்களில் கண்ணீர்!

-பாணா காத்தாடி இசை வெளியீட்டு விழாவில் நடந்த நிகழ்வு இது!

இளையராஜா புகார்: எக்கோ நிறுவனத்தில் அதிரடி சோதனை… ரூ 25 லட்சம் சிடிக்கள் பறிமுதல்

April 8, 2010 by envazhi  
Filed under General

இளையராஜா புகார்: எக்கோ நிறுவனத்தில் அதிரடி சோதனை… ரூ 25 லட்சம் சிடிக்கள் பறிமுதல்

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா கொடுத்த புகார் அடிப்படையில் எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்தில் நேற்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது ஒரு லாரி நிறைய ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஆடியோ சினிமா பாடல் சி.டி.களை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர். இவை அனைத்தும் இளையராஜா இசையில் வெளிவந்தவை. இளையராஜாவுக்கு ராயல்டி தரப்படாமல் விற்கப்பட்டு வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் இளையராஜா 900க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவரது பெரும்பாலான படங்களின் இசையை இசைத் தட்டுகள், கேசட்டுகள் மற்றும் டிஜிட்டல் வடிவத்தில் வெளியிடும் உரிமையை எக்கோ நிறுவனத்துக்கு கொடுத்திருந்தார் இளையராஜா.

ஆனால் அந்த நிறுவனமோ இளையராஜாவின் இசைக்கு பெரும் விலை நிர்ணயித்து மார்க்கெட்டில் விற்றது. ஆனால் இளையராஜாவுக்கு தரவேண்டிய ராயல்டி தொகையை மட்டும் தரவில்லை என்று இளையராஜா புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்த எழுத்துப் பூர்வமான மனுவை சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்தார்.

இசையமைப்பாளரான தனக்கும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ராயல்டியாக மட்டுமே பல கோடி ரூபாயை எக்கோ நிறுவனம் தரவேண்டியுள்ளதாக இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். துணை கமிஷனர் ஸ்ரீதர், உதவி கமிஷனர் விமலா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முத்துவேல்பாண்டி 2 சட்டப் பிரிவுகளின் கீழ் எக்கோ நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்தார்.

இதையொட்டி, நேற்று முன்தினம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஏவி.எம். மியூசிக் ஸோன், சரஸ்வதி ஸ்டோர் என்ற கடையில் சோதனை நடந்ததாகவும், அனுமதி பெறாமல் விற்பனைக்கு வைத்திருந்த ஆடியோ சினிமா பாடல் சி.டி.கள் 179 பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறினார்கள். அதே நாளில் எக்கோ நிறுவனத்திலும் சோதனை நடத்தி 10 மாஸ்டர் பிரிண்டுகளைக் கைப்பற்றினர்.

இந்த நிலையில், நேற்று 2-வது நாளாக கோபாலபுரத்தில் உள்ள எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்திலும் சோதனை நடந்தது. மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணிக்கு மேலும் சோதனை நீடித்தது. உதவி கமிஷனர் விமலா, இன்ஸ்பெக்டர் முத்துவேல்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் ராமு ஆகியோர் போலீஸ் படையோடு சென்று இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஆடியோ சினிமா பாடல் சி.டி.களை ஒரு லாரி நிறைய பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். அத்தனையும் அனுமதி பெறாத சி.டி.கள் என்றும் போலீசார் கூறினார்கள். இதேபோல, மேலும் சில நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

எக்கோ நிறுவனத்தில் மேலும் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும், அமெரிக்காவில் உள்ள அதன் உரிமையாளர்கள் விசாரணைக்கு வரவழைக்கப்படுவார்கள் என்றும் போலீசார் கூறினர்.

என் குடும்பத்தினர் எல்லோருக்கும் பயன்பட வேண்டும்! – முதல்வர் கருணாநிதி

April 5, 2010 by envazhi  
Filed under General

தமிழ்நாடே என் குடும்பம்தான்!- முதல்வர் கருணாநிதி

சென்னை: தமிழ்நாடே என் குடும்பம்தான் என்று சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

சென்னை மியூசிக் அகடாமியில் நடைபெற்ற எழிலரசி வீணை இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசியது:

எழிலரசி இவ்வுளவு அருமையாக உங்களுடைய பாராட்டுக்களையெல்லாம் பெறுகின்ற அளவிற்கு இந்த வீணையை இசைப்பாரென்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னை இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டுமென்று அழைத்த போது கூட-அழைப்பிதழில் என்னுடைய பெயர் போட்டிருப்பது எனக்கு தெரியாது. என்னுடைய பெயர் மாத்திரமல்ல, இளையராஜாவின் பெயரும், நித்யஸ்ரீயின் பெயரும் இருப்பது கூட எனக்கு தெரியாது. இங்கே வந்து அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்ட பிறகு தான் எனக்கே தெரியும்.

எழிலரசியினுடைய வீணை நாதத்தை-இசை நுட்பத்தை-இவற்றையெல்லாம் கேட்ட போதும், பார்த்த போதும், இனி நமக்கு கவலையில்லை, என்றைக்காவது ஒரு நாள் மனக்கஷ்டம் வரும் போது எழிலரசியை கூப்பிட்டு வீணை வாசிக்க சொல்லலாம் என்ற ஆறுதல்.

பாரதிதாசனை பற்றி இங்கே குறிப்பிடப்பட்டது. துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா? என்று பாரதிதாசன் பாடியிருக்கிறார். யாழ் எடுத்து இன்பம் சேர்த்தால் தான் அந்த துன்பத்தை போக்க முடியும் என்பது பாரதிதாசன் கண்ட கனவு. அவர் எண்ணிய எண்ணம். அதைபோல துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்க அடிக்கடி நான் எழிலரசியை அழைக்க வேண்டியிருக்கும். அப்படியென்றால் துன்பம் அடிக்கடி வரும் நேரும் என்று அர்த்தம் அல்ல. நேருகின்ற துன்பத்தை துடைப்பதற்கு எழிலரசியின் வீணை பயன்படுமென்று நான் நம்புகிறேன். அந்த வகையில் என்னுடைய குடும்பத்தில் எல்லோருமே கலைஞானம் கொண்டவர்கள் தான்.

என் குடும்பத்தினர் எல்லோருக்கும் பயன்பட வேண்டும்!

என்னுடைய வீட்டிலே உள்ள பிள்ளைகளின் பெயர்களையெல்லாம் பார்த்தாலே எழிலரசி என்றும், கயல்விழி என்றும், ஓவியா என்றும் இப்படியெல்லாம் தமிழிலேயே பெயர்கள் எல்லாம் இருக்கும். அப்படி தமிழிலேயே பெயர்களையெல்லாம் வைத்த காரணத்தாலோ என்னவோ, எல்லோருமே தமிழ் இன்பத்தை பொழிகின்றவர்களாக விளங்குகிறார்கள்-என்னுடைய குடும்பம், பெரிய குடும்பம். இந்த பெரிய குடும்பத்தில் மலர்களாக-அரும்புகளாக-பிஞ்சுகளாக பலரை பார்க்கின்ற பழமாக நான் இருக்கின்றேன். இந்த பிஞ்சுகளும், அரும்புகளும், மலர்களும் மலர்ந்து முற்றி கனிகளாகி உங்களுக்கெல்லாம் பயன்படுகின்ற-தமிழர்களுக்கு பயன்படுகின்ற அந்த காலத்தை தான் நான் விரும்புகிறேன்.

நித்யஸ்ரீ இங்கே பேசும்போது அவருடைய பாட்டியார் என்னை பற்றி சொன்னதை குறிப்பிட்டார்கள். மும்மூர்த்திகள் பிறந்த திருவாரூர் என்னுடைய ஊர் என்பதால் நானும் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டார்கள். எப்படியோ மும்மூர்த்திகளோ அல்லவோ-மூன்று என்பது என்னுடைய முன்னேற்றத்திற்கு-நான் வழிபடுகின்ற வார்த்தைகளாக-நான் பின்பற்றுகின்ற வார்த்தைகளாக அமைந்திருக்கின்றன-கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற இந்த மூன்றும் தான் எனக்கு வழிகாட்டக்கூடிய வாசகங்கள்.

இந்த வாசகங்களை பின்பற்றி நடைபெறுகின்ற என்னுடைய வாழ்க்கையில் எந்த சேதாரமும் வராமல் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் என்னோடு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்ற பிள்ளைகள் பேரன்கள், பேத்திகள் என்று இவ்வுளவு பேர் இருக்கிறார்கள் என்று ஒரு வட்டத்திற்குள்ளே நான் குறிப்பிட்டு காட்ட விரும்பவில்லை. இளையராஜா சொன்னது போல தமிழ்நாடே என்னுடைய குடும்பம் தான். தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்கள் அத்தனைபேருக்கும் நான் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் இந்த சிறிய மண்டபத்தில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியின் மூலமாக என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அரங்கத்தை பார்த்ததும், எனக்கு வந்த நினைவு இதை போன்றதொரு அரங்கம் நம்முடைய உலக தமிழ் செம்மொழி மாநாட்டிலே ஒன்றையாவது அமைக்க வேண்டும் என்ற அந்த எண்ணம் தான் எனக்கேற்பட்டது..” என்றார்.

விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவும் கலந்து கொண்டு பேசினார்.

ரஜினி நடிக்க… ராஜா இசைக்க… மனசெல்லாம் பரவசம்!

March 21, 2010 by envazhi  
Filed under Music

கண்ணீரை வரவழைத்த இசைஞானி!

ண்பர் கிரிக்கு அறிமுகம் தேவையில்லை. வலையுலகில் பிரபல பதிவர் அவர். ரஜினி ரசிகர். இந்த வாரம் அவர்தான் தனது ரசனையை விருந்தாகத் தருகிறார்!

சைஞானி இளையராஜாவின் இசை என்றாலே அது மனதை வருடும் இசைதான், எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் தான் இவரது பலமே. தற்போதைய பாடல்கள் எல்லாம் கொஞ்ச நாள் கேட்டவுடனே ஒருவித சலிப்பு வந்து விடுகிறது. ஆனால் இளையராஜா முன்பு இசையமைத்த பெரும்பாலான பாடல்களை இன்று கேட்கவும் இனிமையாக இருக்கும். இரவு நேரங்களில் பண்பலை வானொலிகளில் தினமும் ஒலிக்கும் இளையராஜா பாடல்களே இதற்கு சாட்சி.

இப்படி பல மறக்க முடியாத பாடல்களை கொடுத்த இளையராஜா அவர்கள் ரஜினி படத்திற்காக இசையமைத்த பாடல்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், சிறு முன்னுரையுடன்.

இசை என்பது ஒருவரை உருக வைக்க வேண்டும் அது தான் உண்மையான இசை என்பார்கள். ஒரு சில இசையை கேட்டாலே கண்கலங்கும் என்று கூறுவார்கள்.. யோவ்! என்னய்யா சொல்றீங்க! அதெப்படி.. அப்படி எல்லாம் நடக்குமா! இது நெம்ப ஓவரா இருக்கே என்று தோன்றும். ஆனால் எனக்கே அந்த சம்பவம் நடந்தது என்றால் என்ன சொல்வது?

என்னோட வாழ்க்கையில் இசையை கேட்டெல்லாம் நான் கண்ணீர் விட்டதில்லை (ஒருவேளை அந்த அளவிற்கு எனக்கு ரசிக்க தெரியவில்லையோ என்னவோ) ஒருமுறை மனது வருத்தத்தில் இருந்தேன் எதோ காரணத்தால்… அந்த சமயத்தில் தளபதி படத்தில் வரும் சின்னத்தாயவள் பாடலை கேட்கும்படி நேரிட்டது (எதேச்சையாக). என்ன ஒரு அற்புதமான இசை அது! முதலில் ரயில் வரும் போது வரும் இசையும், அதன் பிறகு முதலிலும் இடையில் ஒரு இடத்திலும் வயலின் வரும் இசையும்..பாராட்ட வார்த்தைகள் இல்லை. அப்போது என்னை கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கி விட்டேன். மனதை அறுக்கும் இசை. இப்போது கேட்டாலும் உடல் சிலிர்த்து விடும். நான் கூறுவது பொய் என்று கருதினால் நீங்கள் மனது சரி இல்லாமல் இருக்கும் சமயம் இந்தப்பாடலை கேட்டுப்பாருங்கள் நான் சொல்வது எவ்வளவு உண்மை என்று புரியும். என்னால் எக்காலத்திலும் இந்தப்பாடலையும் அதற்கு உயிர்கொடுத்த இசையையும் அதை நமக்கு உணர்வுடன் கொடுத்த ஜானகி அம்மாவையும் என்னால் மறக்கவே முடியாது. இந்தப்பாடலை பாடிய ஜானகி அம்மாவை எத்தனை பாராட்டினாலும் தகும்.

சின்னத் தாயவள்… டைட்டில் பாடல்:

படம்: தளபதி

இசை: இளையராஜா

பாடல்: வாலி

பாடியவர்: எஸ் ஜானகி

இரண்டாவது பாடல்.. ஸ்ரீவித்யா – ரஜினி

டுத்தது ஜானி படத்தில் “என் வானிலே”. இதுல தலைவர் கலக்கி இருப்பாரு.. படத்திற்காக இல்லாமல் நிஜமாகவே ரொம்ப ரசித்து கேட்பதை போல இருக்கும் அவரது முகபாவனைகள். தலைவா பின்னிட்டீங்க! முதலில் ரஜினி பியானோவை வாசிப்பார்!!

No No Just listen என்று கூறி விட்டு ஸ்ரீதேவி வாசிக்கும் போது இருவரும் கொடுக்கும் உணர்வுகள் அட்டகாசம். பாடல் முழுவதும் ஒரு வித ரசனையான எதோ ஒன்று இழையோடும். இதற்கு இளையராஜா அவர்கள் கொடுக்கும் தொடக்க இசையும் அதன் பின் தொடர்ந்து வரும் இசையின் மாற்றங்கள் கலக்கலாக இருக்கும்.. இந்த படத்தில் அனைத்து பாடலுமே பட்டாசு தான்.

படம்: ஜானி

இசை: இளையராஜா

பாடல்: கவியரசு கண்ணதாசன்

பாடியவர்: ஜென்ஸி

ஹி ஹி ஹி அடுத்தது நம்ம தலைவர் ப்ளே பாயா(மேனா)க நடித்து இருக்கும் தீராத விளையாட்டு பிள்ளை பாடல் நெற்றிக்கண் படத்தில் இருந்து. இதில் இசைக்கேற்ற மாதிரி இவரது கிளுகிளுப்பான நடவடிக்கைகள் இருக்கும். செம கிக்கான இசை.. இந்த ரஜினியின் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமான இசையை இளையராஜா கொடுத்து இருப்பார்.

தற்போது கூட இதன் இசையை விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்திற்கு பயன்படுத்தி இருப்பார்கள். இதில் இருந்தே தெரிந்து கொள்ளாலாம் இத்தனை வருடம் கடந்தும் அந்த இசையின் வீரியத்தை. ரிங் டோனாக கூட பலர் வைத்துள்ளனர்.

படம்: நெற்றிக்கண்

இசை:  இளையராஜா

பாடல்: கவியரசு கண்ணதாசன்

பாடியவர்: மலேஷியா வாசுதேவன்

டுத்ததாக பட்டய கிளப்பி இருக்கும் மலைக்கோவில் வாசலில் பாடல் வீரா படத்தில் இருந்து. இந்தப்பாடலில் இசை கோரஸ் என்று அனைத்துமே அசத்தல் ராகம். ட்ரம்ஸ் அதிகம் பயன்படுத்தப்பட்டு இருக்கும். நல்ல தரமான ஸ்பீக்கரில் இந்தப்பாடலை கேட்டால் அற்புதமாக இருக்கும்.

படம்: வீரா

இசை: இளையராஜா

பாடல்: வாலி

பாடகர்: மனோ, ஸ்வர்ணலதா

டைசியாக ரஜினி கதை வசனத்தில் சொந்தமாக தயாரித்த படம் வள்ளி. இதில் வரும் என்னுள்ளே என்னுள்ளே என்ற பாடலின் முதல் சில நொடிகளை கேட்டு விட்டாலே போதும் மீதி பாடலை கேட்காமல் இருக்க முடியாது. துவக்கத்தில் இருந்தே இசைஞானி பின்னி பெடலேடுத்து இருப்பார்.

இந்தப்பாடலை காட்சிபடுத்திய விதமும் சிறப்பாக இருக்கும், பாடலுக்கு ஏற்ற காட்சியமைப்பு. பாடலுக்கு இன்னொரு பலம் ஸ்வர்ணலதாவின் குரல். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.

படம்: வள்ளி

இசை: இளையராஜா

பாடல்: வாலி

பாடியவர்: ஸ்வர்ணலதா

போனசாக! இசைஞானியே பாடிய எவராலும் மறக்க முடியாத பாடல் தாய்மூகாம்பிகை படத்தில் வரும் ஜனனி ஜனனி. இதற்கெல்லாம் விளக்கம் தேவையில்லை..

படம்: தாய் மூகாம்பிகை

இசை- பாடியவர்: இசைஞானி இளையராஜா

பாடல்: வாலி

-கிரி

www.giriblog.com

இளையராஜாவை மோசடி செய்த ‘எக்கோ’ நிறுவனம்!

March 20, 2010 by envazhi  
Filed under Cinema

இளையராஜாவை பல கோடி மோசடி செய்த ‘எக்கோ’ நிறுவனம்!

ழுபதுகள் மற்றும் எண்பதுகளில் தமிழ் சினிமா இசையின் பொற்காலத்தை உருவாக்கியவர் இசைஞானி இளையராஜா.

தொன்னூறுகளின் ஆரம்ப வருடங்கள் வரை ராஜா இசையமைத்த பெரும்பாலான தமிழ் / தெலுங்கு படங்களின் இசை வெளியீட்டு உரிமை எக்கோ என்ற நிறுவனத்துக்கே அளிக்கப்பட்டது. இளையராஜா என்ற கலைஞனால் மட்டுமே பெரும் புகழடைந்த நிறுவனம் இந்த எக்கோ.

பயணங்கள் முடிவதில்லை, உதயகீதம், வைதேகி காத்திருந்தாள், சின்னத்தம்பி, என் ராசாவின் மனசில போன்ற படங்களின் இசைத் தட்டுகள் (எல்பி ரிக்கார்டுகள்) மற்றும் சிடிக்கள் விற்பனையில் நிகழ்த்திய சாதனை பிரமிப்பூட்டக்கூடியது. இவற்றையெல்லாம் எக்கோ நிறுவனம்தான் வெளியிட்டது. பெரும் பணம் பார்த்தது.

ஆனால் தான் இசையமைத்த அனைத்து திரைப்படங்களின் இசை உரிமையையும் தன்வசமே வைத்துக் கொண்ட இளையராஜா, தற்காலிகமான விற்பனை உரிமையை மட்டுமே எக்கோ நிறுவனத்துக்கு அளித்திருந்தார்.

இப்போது தன்னிடமிருந்த காப்பிரைட் உரிமையை வேறு நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டார் ராஜா. எனவே அந்த நிறுவனத்தார் புதிய வடிவில் இளையராஜாவின் அனைத்துப் பட பாடல்களையும் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்தும், ராஜாவின் பழைய பாடல்களை புதுப்புது சிடிக்களாக அடித்து விற்றுத்

தள்ளுகிறது எக்கோ. இந்த சிடிக்களில் இளையராவின் கோல்டன் பாடல்கள் மிகச் சொற்பமாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கும். அதிகபட்சம் 16 பாடல்கள்தான். விலை மட்டும் ரூ 200! (இளையராஜா பாடல்கள் அடங்கிய ஒரு எம்பி 3 சிடி விலையே அதிகபட்சம் ரூ 10தான்.)

எக்கோ நிறுவனம் இளையராஜா இசையை வைத்து கோடி கோடியாக சம்பாதித்தது. இதில் இளையராஜாவுக்கான ராயல்டியைக் கூட அவர்கள் தரவில்லை. இளையராஜாவுக்கே தராதவர்கள், தயாரிப்பாளர்களுக்கு எங்கே தரப்போகிறார்கள்!

எனவே இனியும் சும்மா இருந்தால் சரிவராது என்ற முடிவுக்கு வந்தவர் நேராக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் போனார். எக்கோ உரிமையாளர் ரங்கசாமி பார்த்தசாரதி மீது முறையாக ஒரு புகாரைப் பதிவு செய்தார்.

இதுபற்றி பின்னர் நிருபர்களிடம் இளையராஜா கூறுகையில், “இந்த புகார் மனுவை கொடுப்பதற்கு முன்பாக இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அந்த கடிதத்தின் அடிப்படையில்தான் கமிஷனரிடமும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

எக்கோ ரிக்கார்டிங் நிறுவனம் மீது நான் இந்த புகார் மனுவை கொடுத்துள்ளேன். நான் இசை அமைத்த தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் இசை ஒலி நாடாக்களையும், டிஜிட்டல் இசை தட்டுகளையும் வெளியிடும் உரிமையை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்துக்கு வழங்கியிருந்தேன்.

இந்த நிறுவனம், தயாரிப்பாளர்களுக்கும், எனக்கும் தரவேண்டிய ராயல்டி தொகையை தராமல் தானே அனுபவித்து வருகிறது. இது சட்ட-ஒழுங்கு மீறலாகும். நான் இசையமைத்த தெலுங்கு படங்களின் இசை உரிமையை ஆதித்யா என்ற நிறுவனத்துக்கும் பல கோடி ரூபாய்க்கு விற்று இருக்கிறது, எனக்குத் தெரியாமலேயே. இந்த விற்பனை உரிமை என்னிடம் இருக்கையில் அவர்கள் இப்படி விற்றது ஒரு மோசடி குற்றமாகும்.

அதோடு இந்த நிறுவனமே ஒரு மோசடி நிறுவனம் என்பதற்கு மேலும் ஒரு ஆதாரமாக என்னுடைய அனுமதியும், தயாரிப்பாளர்களின் அனுமதியும் இல்லாமல் வெளிநாட்டில் நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களில் செயல்படும் ‘ஓரியன்டல் ரிக்கார்ட்ஸ்’ என்ற நிறுவனத்தின் மூலமாக அத்தனை படங்களின் இசையையும் வெளியிட்டு வருகிறது.

இதன்மூலம் வந்த வருமானத்திலும் எங்களுக்கு சேரவேண்டிய பணத்தை தரவில்லை. தற்போது ‘எக்கோ’ நிறுவனத்தில் வெளியான அத்தனை இசை உரிமையையும் ஒரு வடநாட்டு கம்பெனிக்கு ரூ.25 கோடிக்கும் மேலாக விற்கப்போவதாக நான் கேள்விபட்டுள்ளேன்.

எனவே, இசையமைப்பாளர், தயாரிப்பாளர்கள் ஆகியோரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ள அந்த நிறுவனம் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகரப் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன் என்றார் இளையராஜா.

கிட்டத்தட்ட 30 ஆண்டுக்கும் மேலாக இந்த மோசடி நடந்துள்ளது. எவ்வளவு கோடி மோசடி என்பது பற்றி வழக்கு விசாரணையின்போது தெரியவரும்…” என்றார் இளையராஜா.

கமிஷனர் உத்தரவு: இளையராஜா அளித்துள்ள புகார் குறித்து விசாரிக்குமாறு, மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு கமிஷனர் டி. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ஒருவரின் உழைப்பைத் திருடுவது எத்தனை கேவலமான செய்கை? அதுவும் இளையராஜா என்ற மேதையின் உழைப்பை கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் மோசடியாக காசாக்கி வந்திருக்கிறார்கள்…

எத்தனை இனிய அனுபவத்தைத் தந்த இசை, பாடல்கள் அவை.. இந்த விஷயத்தில் இளையராஜாவின் மனதை நோகடிக்காமல், அவருக்குச் சேர வேண்டிய பங்கை உடனடியாகத் தர எக்கோ நிறுவனம் முன்வரவேண்டும். அவருக்குச் சொந்தமான இசையை, திருட்டுத்தனமாக விற்பதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

செய்வார்களா?

-என்வழி

நினைவோ ஒரு பறவை… ஒரு ரசிகனின் ஃப்ளாஷ்பேக்!

March 7, 2010 by envazhi  
Filed under Music

நினைவோ ஒரு பறவை… ஒரு ரசிகனின் ஃப்ளாஷ்பேக்!

ணக்கம் நண்பர்களே..

கமெண்ட் பகுதியில் மட்டுமே அவ்வப்போது தலைகாட்டி வந்த என்னை, முகப்புப் பக்கத்தில் முகம் காட்ட வைத்திருக்கிறார் வினோ. உற்சாகப்படுத்துதல், சகித்துக் கொள்ளுதல் இரண்டுக்குமே ஒரு மனசு வேண்டும்.

ஒருவனின் ரசனையை மதித்து, அந்த ரசனைக்கு ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சும் குணம் எல்லாருக்கும் சுலபத்தில் வருவதில்லை.

என்னைப் பற்றிய ஒரு வரி அறிமுகம்… நான் ஒரு ரஜினி ரசிகன்! அவ்வளவுதான்!!

எப்போது தலைவரை ரசிக்க ஆரம்பித்தேன்…?

ஹாங்… தர்மயுத்தம். இதுதான் நான் பார்த்த முதல் தலைவர் படம். அந்த முடி, நிறம், நடையில் தெரியும் எகத்தாளம், எதிராளியை பார்வையிலேயே காலி பண்ணும் அந்த கூரிய பார்வை… ‘இவர்தான்டா நம்மாளு’ என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன் போலிருக்கிறது.

ஒரு படம் கூட தவறவிட்டதில்லை. போக்கிரி ராஜா என்ற படம் வந்தபோது, ஊரிலும் பள்ளியிலும் நான் செய்த அட்டகாசங்களை இப்போதும் நண்பர்கள் சொல்லும்போது, திகைப்பாகத்தான் இருக்கிறது. போக்கிரி ராஜா என்ற பெயரை எதிரணிக்காரன் (கமல் ரசிகர்கள்!) ஒருவன் உச்சரித்ததற்கே மண்டையை உடைத்தேன் என்றால், ரஜினியுடன் என்னுடைய மானசீக உறவு புரிந்திருக்கும்.

காலையில் எழுந்ததும் ரஜினி முகம் பார்க்கணும், ரஜினி பாட்டு கேக்கணும், ரஜினி குரலை அனுபவிக்கணும்…. யாராவது கமல் பெயரைச் சொன்னாலும் என் ஜென்ம விரோதியாகிவிடுவான். தலைவரும் கமலும் நண்பர்கள்தான் என்றாலும் ரசிகர்களால் அப்படி இருக்க முடிந்ததில்லை.

இதில் வினோதம் பாருங்கள்… கமல் பிடிக்காது என்றாலும் அவர் படத்தை எப்படியும் முதல் இரு தினங்களுக்குள் பார்த்துவிடுவேன். ஒருவேளை அவர்களின் நட்புக்கு நமக்கே தெரியாமல் நாம் தந்த மரியாதை இது போலிருக்கிறது!

எண்ணம், செயல் எல்லாவற்றிலும் ரஜினியே நிறைந்திருந்தாலும், அந்த தீவிர ரசிப்பையும் மீறி என்னை மயக்கிய சில பாடல்கள் உண்டு. அதுவும் கமல் பாடல்கள் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா…

இந்தப் பாடல்களை ரசிக்க எனக்கு கமல் ஒரு தடையாக இருக்கவில்லை. ரஜினி, கமல் என்ற parameter தாண்டிய ஒரு விஷயம் இருக்கிறது… அது இசைஞானி இளையராஜா!

ரஜினி ரசிகனான என்னை மயக்கிய சில கமல் பாடல்கள்… இதுதான் டாபிக். அவற்றை ஜஸ்ட் பட்டியலிட வேண்டும் என்பதே என் ஆசை. வேறு வர்ணனை எதுவும் தரும் உத்தேசம் இல்லை. அந்தப் பாடல்களைக் கேளுங்கள். வர்ணித்து மகிழுங்கள். ஜூட்…!

படம்: கடல் மீன்கள்

பாடல்: தாலாட்டுதே வானம்… தள்ளாடுதே  மேகம்.. தாளாமல் மடிமீது தார்மீகக் கல்யாணம… இது கார்கால சந்தேஷம்!
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன் – ஜானகி

படம்: சிகப்பு ரோஜாக்கள்

பாடல்: நினைவோ ஒரு பறவை… விரிக்கும் அதன் சிறகை… பறக்கும் அது கலக்கும் தன் உறவை!
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்கள்: கமல்ஹாஸன் – ஜானகி

படம்: உல்லாசப் பறவைகள்

பாடல்: அழகு ஆயிரம்… உலகம் முழுவதும்… இறைவனின் சிரிப்பினில் எழுதிய ஓவியம் மமமியா மமமியா மமமியா மா..!
இசை: இளையராஜா
பாடல்: கவியரசு கண்ணதாசன்
பாடியவர்: எஸ் ஜானகி

படம்: மீண்டும் கோகிலா

பாடல்: ஹே.. ஓராயிரம்… மலர்களே மலர்ந்தன… உலகிலே சுகமே இதுதானோ ஹே…!
இசை: இளையராஜா
எழுதியவர்: கவியரசு கண்ணதாசன்
பாடியவர்: எஸ்பிபி

படம்: ராம் லட்சுமணன்

பாடல்: விழியில் என் விழியில்… ஒரு பூ பூத்ததோ… பூ இன்று பெண்ணானதோ….
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: எஸ்பிபி – பி சுசீலா

படம்: ஒரு கைதியின் டைரி

பாடல்: ஏபிசி நீ வாசி… நீ வாசி எல்லாம் உன் கைராசி வா ரோஸி…
இசை: இசைஞானி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: ஜேசுதாஸ் – வாணி ஜெயராம்

படம்: சலங்கை ஒலி
பாடல்: மௌனமான நேரம்… இளம் மனதில் என்ன பாரம்!
இசை: இசைஞானி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்பிபி – ஜானகி

படம்: எனக்குள் ஒருவன்

பாடல்: முத்தம் போதாதே…
இசை: இசைஞானி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்பிபி – ஜானகி

படம்: மகாநதி

பாடல்: ஸ்ரீரெங்க ரெங்கநாதனின் பாதம்… வந்தனம் கூறடி…
இசை: இசைஞானி
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: எஸ்பிபி – ஷோபனா

படம்: ஹே ராம்

பாடல்: நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி… நுமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
இசை: இசைஞானி
எழுதியவர்: கமல்ஹாஸன்
பாடியவர்கள்: ஹரிஹரன் – ஆஷா போஸ்லே

குறிப்பு: ஆனாலும் இந்த வினோ பண்ற ‘அநியாய’த்தை சொல்லாமல் விட முடியாதுங்க…! ரஜினியின் அரிய, ஆனால் ரசிகர்கள் அவ்வளவாக அறிந்திராத சில (இருக்கிறதா என்ன?) பாடல்களை தொகுக்கலாமே… என்று யோசனை சொன்னேன். பதிலுக்கு இவர், திருப்பிக் கேட்டது, ‘ரஜினி ரசிகரான நீங்கள் வேறு யார் பாடலையும் ரசிக்கவில்லையா?’ என்பதுதான். அந்த கேள்விக்கு விடைதான் இந்தத் தொகுப்பு. அநியாயத்துக்கு என் பழைய நினைவுகளைக் கிளறி அழ வச்சிட்டார்…

எனவே அடுத்தமுறை தலைவரின் அரிய ஹிட் பாடல்களுடன் சந்திக்கலாம்…!

-ரஞ்சன்

நான் கர்வம் பிடித்தவனா? – இசைஞானி

February 21, 2010 by envazhi  
Filed under Cinema

நான் கர்வம் பிடித்தவனா? – இசைஞானி

மீபத்தில் ஆனந்த விகடனில் வெளியான இசைஞானி இளையராஜாவின் நேர்காணல், மிகச் சிறந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பத்மபூஷன் விருது பெற்ற ராஜாவுக்கு மரியாதை செய்ய திருமாவளவன் போயிருந்தார். அந்த சந்திப்பில் இளையராஜா கூறியுள்ள ஒவ்வொரு பதிலும் அந்த மனிதரின் உண்மையான உள்ளத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்திருந்தன.

அந்த நேர்காணலில், ராஜாவின் பதில்களை மட்டும் தனியாக இங்கே தருகிறோம்…

பத்மபூஷன் விருது காலம் தாழ்த்தி கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதற்கு ராஜா சொல்லியிருக்கும் பதில்:

“சாதிக்காகவா விருது கொடுப்பான்? சாதிச்சதுக்காகத்தானே தருவார்கள். காலத்தால் கிடைத்த விருது, காலம் கடந்த விருது என்றெல்லாம் எதுவும் இல்லை. தருணம் ஏற்பட்டால், பரிசுகள் கிடைக்கும். உள்ளே இருக்கும் குஞ்சுக்குச் சிறகு முளைத்தால், முட்டையில் விரிசல் விழும். அதுதான் கோழியின் தருணம். அது மாதிரி இப்போது எனக்குப் பரிசு கிடைக்கும் தருணம்’.

தனது அரசியல் அனுபவத்தை இப்படிச் சொல்கிறார் இளையராஜா:

‘சின்ன வயசிலயே எனக்குக் கட்சி, அரசியல், உலகம், பிரச்னைகள் எல்லாமே தெரிய ஆரம்பிச்சது. ஏன்னா, கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்பு இருந்தது. ஆனா, இசை ஆர்வம் அதைவிட அதிகமா இருந் தது. ஏதோ ஒரு பொருளை வித்து 400 ரூபாய் பணத்தை என்னோட அம்மா கொடுத்தாங்க. அதை வெச்சுக்கிட்டுதான் சென்னைக்கு வந்தேன். இன்றைக்கு இருக்கிற இசை அனுபவம் அன்றைக்கு இருந்தா, நிச்சயமா சென்னைக்கு வந்திருக்கவே மாட்டேன்!

இசையில் ஒரு சிகரம் என்று தன்னைப் புகழ்வதைப் பற்றி ராஜா கூறியுள்ள பதில் அவரது ஆழ்ந்த புலமை மற்றும் சொல்லாட்சியின் உச்சம்…

‘நிலம் தாழ்ந்ததாக இருப்பதால் நீர் அதன் மீது ஓடுகிறது. எனவே, என் மீதுதான் நீர் ஓடுகிறது என்று நிலம் பெருமைப்பட முடியுமா? அதுபோல இசை, என்னைத் தேர்ந்தெடுத்து என் மீது ஒடுகிறது. அவ்வளவுதான். அதற்காக இசை அறிவு என்னிடம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம் அல்ல. இசை என்னும் புள்ளியை நோக்கி நான் நாட்டம் செலுத்தினேன். அது என்னைத் தேர்ந்தெடுத்தது. நீங்கள் உங்களது நாட்டத்தை அரசியலில் செலுத்தினீர்கள். அரசியல் அறிவு உங்களைத் தேர்ந்தெடுத்தது.’

‘நான் என்னுடைய கடமையை, எனக்குத் தெரிந்ததைச் செய்கிறேன். அதனால், யார் என்னைப் புகழ்ந்தாலும் அதை நான் பெரிதாக நினைப்பது இல்லை. அதைப் பார்த்துத்தான் சிலர் என்னைக் கர்வம் பிடித்தவன் என்கிறார்கள்’

‘நான் புத்தகம் எதுவும் படிக்கிறது இல்லை. அதுக்கு நேரமும் இல்லை. அதில் நாட்டமும் இல்லை..’ என்று முடித்துள்ளார் ராஜா.

நினைவுகளை மீட்டும் இசை… ஒரு அனுபவம்

February 8, 2010 by envazhi  
Filed under Music

நினைவுகளை மீட்டும் இசை… ஒரு அனுபவ தொகுப்பு

ள்ளி நாட்களில்… ஏன் கல்லூரிக்குச் செல்லத் துவங்கியபோதும் கூட, ஏதாவது ஒரு வானொலி நிலையத்தில் சேர்ந்து விட வேண்டும் என்பது என் தீராத ஆசையாக இருந்தது. காரணம் அப்போதெல்லாம், இசை கேட்க ஒரே வழி வானொலிதான். இசை என்றால்.. திரையிசை.. அதிலும் இளையராஜா – எம்எஸ்வி பாடல்கள்.

வானொலியை விட்டால் கல்யாணங்கள், திருவிழாக்களில் ரிக்கார்டு போடுவார்களே அதை சாப்பாடு தூக்கமின்றி கேட்டுக் கொண்டே இருப்பேன். அதிகபட்சம் இரண்டு நாள்தான் இந்த ரிக்கார்டு போடுவார்கள்… அப்புறம் புதிய பாடல்கள் கேட்க முடியாதே.. அதனால் உண்மையிலேயே சாப்பாட்டை மறந்து பாட்டுப் பித்துப் பிடித்துப் போய் திருவிழாக்களில்  அலைந்திருக்கிறோம். அட, பாட்டு கேட்பதற்காகவே ஒரு சவுண்ட் சர்வீஸில் வேலைக்குக் கூட சேர்ந்து கொஞ்சநாள் இருந்திருக்கிறேன்!

வானொலியில் ஞாயிற்றுக்கிழமையானால் நேயர் விருப்பம் என்ற நிகழ்ச்சி போடுவார்கள். அதில் விரும்பிக் கேட்டவர்களின் பெயர்களைப் படித்துவிட்டு, அந்தப் பாடலை ஒளிபரப்புவார்கள் பாருங்கள்… அந்த வேலையில் சேர மனதில் ஒரு வெறியே இருந்தது!

ஆனால் டிடி மெட்ரோ என்ற சேனல் வந்தபிறகு, அதிலும் காம்பியரிங் என்ற பெயரில் கண்டபடி பேச ஆரம்பித்த பிறகு அந்த ஆசை போயே போச். பாட்டு கேட்கவும் நிறைய சாதனங்கள் மலிந்துவிட்டன.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்.. நண்பர் சரவணன் சில பாடல்களைக் குறிப்பிட்டு, அவற்றைத் தொகுத்து பதிவாக வெளியிட விரும்பினார். அவர் விரும்பிய பாடல்களை யு ட்யூபில் தேடி இந்தப் பதிவைத் தயார் செய்தபோது உண்மையிலேயே, அந்த பழைய நாட்களின் ‘வெளியில்’ கொஞ்சநேரம்  மனம் அலைந்துவிட்டுத் திரும்பியது…!

அதிலும் அவர் குறிப்பிட்டிருந்த பாடல்கள்… மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்ட ராஜாவின் தேவ கானங்கள்… அவற்றை தொகுப்பதே தனி இன்பம்தான்.

இனி சரவணன் தன் ரசனையைப் பகிர்ந்து கொள்கிறார்…

-வினோ

சை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது.

நல்ல இசை என்பது, கேட்பவரை மனம் லயிக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் தெரியும்!

அப்படி என் மனம் லயித்த திரைப் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், ‘நினைவுகளை மீட்டும் இசை’ மூலம்…

ஆனந்தக்கும்மி என்று ஒரு படம் அனேகமாக வருடம் 1983-ல் வெளியானது. அந்தப் படம் பலருக்கு இன்று நினைவில் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் பாடல்கள்… காலத்துக்கும் மறக்க முடியாதது!

இந்த படத்தில் வரும் ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..
என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்த பாடல் ‘ஆனந்த கும்மியடி கும்மியடி ….’ என்று பெண்கள் கோரஸ் குரலில் ஆரம்பிக்கும் அது முடிந்தவுடன், தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்திருப்பார் இளையராஜா.

அப்படியே ஒரு அமைதியான கிராமத்தில், நிலவின் ஒளியில் மின்னும் பின்னிரவுக்க, நம்மை இழுத்துச் செல்லும் அந்த இசை.

தொடர்ந்து வரும் பல்லவி,

ஓ வெண்ணிலாவே வா ஓடி வா…

அதற்குப் பின் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு முன்

ஜானகியின் குரலில் வரும் ‘லா லி லா லி லா லி….’ நம்மை சுகமாய் தாலாட்டும்.

இந்த பாடலை எனது 18 வயதில் கேட்டிருக்கிறேன்.
இந்த வயதிலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மனதில் இளமையின் நினைவுகள்…

என் மனதை மயக்கும் பாடல்களில் ஒன்று..கேட்காதவர்கள் கேட்டுத்தான் பாருங்களேன்!

ஊமை நெஞ்சின் ஓசைகள்…, ஒரு கிளி உருகுது…, அண்ணன்மாரே தம்பிமாரே…, திண்டாடுதே ரெண்டு கிளியே (இளையராஜா) என மற்ற பாடல்களும் மகா இனிமையானவை.

இந்த ஆனந்தக்கும்மி படத்தின் தயாரிப்பு: இளையராஜா

பாடல் பாடியவர்கள் S.P. பாலசுப்ரமணியம்,S.ஜானகி

இந்த படத்தின் இயக்குனர்: பாலமுருகன்

இந்த படத்தின் நாயகன் பெயர் பாலச்சந்தர். இந்தப் படத்துக்குப் பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை.

நாயகி அஸ்வினி (பார்த்திபன் ஜோடியாக பொண்டாட்டி தேவை படத்தில் நடித்திருப்பார்).
பாடலை எழுதியவர்: வைரமுத்து

மெல்லப் பேசுங்கள் (1983) என்று ஒரு படம். இயக்குனர்கள்: பாரதி வாசு (சந்தானபாரதி – P.வாசு )

நாயகன்: வசந்த் (பின்னர் டிவி சீரியல்களில் பிரபலமாகி, சமீபத்தில் இறந்துவிட்டார்) நாயகி: பானுப்ரியா (அறிமுகம்)

இந்த படத்தில் ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…’ என்ற பாடல் சுகமானது.

இந்த பாடல் ஆரம்பிக்கும் முன் ஒரு ஒற்றைக் குயிலின் பாட்டுச் சத்தமும்… தொடர்ந்து புள்ளினங்களின் சத்தமும், மாணிக்கவாசகரின் சிவபெருமான திருப்பள்ளியெழுச்சி வரிகளும் ஒலிக்கும்.. நமக்கோ உடல் சிலிர்க்கும்!

‘கூவின பூங்குயில், கூவின கோழி…
குருகுகள் இயம்பின.. இயம்பின சங்கம்..
யாவரும் அறிவறியாய்! எமக்கு எளியாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே…’

உமா ரமணன் குரலில் இந்த வரிகள் அப்படியே ராஜாவின் இசையில் சங்கமிக்கும் அற்புதத்தை அவரைத் தவிர யாரும் நிகழ்த்த முடியாது.(பாடியது தீபன் சக்ரவர்த்தி- உமா ரமணன்) அதைத் தொடர்ந்து ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…’ என்று பல்லவி வரும்.

அடடா.. அது ஒரு சுகமான அனுபவம். அந்த உற்சாகம் வார்த்தைகளுக்குள் சிக்காதது. கேட்கும் யாரையும் தொற்றிக் கொள்ளும்.. பாடலுக்கு சொந்தக்காரர்: எம்ஜி வல்லபன்

கேட்காதவர்கள் கேட்டுப் பெறுங்கள் இந்த உற்சாகத்தை!

டம்: இங்கேயும் ஒரு கங்கை (1984)

தயாரிப்பு: கலைமணி

இயக்கம்: மணிவண்ணன்

நாயகன்: முரளி ,சந்திரசேகர்

நாயகி: தாரா (நாயகன் கமல் தங்கை )

இசை: இசை அரசர் இளையராஜா

அப்போதெல்லாம் மாசத்துக்கு ஒரு மணிவண்ணன் படம் வரும். கண்டிப்பாக ஹிட் ஆகும். இந்த படத்தில் நான்கு பாடல்கள்… இரண்டு பாடல்கள் மட்டுமே எனக்கு நன்கு அறிமுகம்.

1. தெக்குத் தெரு மச்சானே… (மிக இனிய டூயட்)
2. சோலை புஷ்பங்களே…

இந்த இரண்டு பாடல்களையும் பாடியவர்கள்: கங்கை அமரன், P.சுசீலா

‘சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்…’ பாடல் கேட்கும் போதே ஒரு மெல்லிய சோகம் மனதை நிழலாய் ஆக்கிரமிக்கும் உணர்வு. பாடல் முடிந்த பின்னும் இனம்புரியாத பாரம் மனதில்… வைரமுத்துவின் வரிகள் இவை.

இந்த படத்தின் பாடல்கள் ஊமை வெயில் என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து இசை தட்டுக்களாக வெளிவந்து அந்த காலகட்டத்தில் செம ஹிட்டானவை. ஆனால் அந்த படம் வெளிவரவில்லை.

அதற்குபின் மணிவண்ணனின் ‘இங்கேயும் ஒரு கங்கை’ படத்தில் அந்தப் பாடல்களை இளையராஜா பயன்படுத்தியதாகப் படித்திருக்கிறேன் (அன்றைய நாட்களில் ராஜா பயங்கர பிஸி. ஒரு வருடத்துக்கு 50 படங்களுக்கு இசையமைத்த நேரம். அதனால் இதுபோன்ற அட்ஜஸ்ட்மெண்டுகள்!)

ண்பதுகளின் ஆரம்ப வருடங்கள் அவை… ‘இன்னிசைச் சக்கரவர்த்தி இளையராவின் இசை மழையில்’ என்று படத்தின் டைட்டிலுக்கு மேலே ஒரு வரி இடம் பெறும்… அப்போதே தெரிந்து கொள்ளலாம் அது கோவைத் தம்பியின் படம் என்று. அவரது பெரும்பாலான படங்களுக்கு ராஜாதான் இசை. பாடல்களில் இசையை அமுதமாய் பொழிந்திருப்பார் இசைஞானி. படமெங்கும் அந்த அமுதமழை தொடரும்…

அப்படி ஒரு படம்தான் இளமைக் காலங்கள்.

இந்தப் படத்தில்   ‘இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்…’ என்று ஆரம்பிக்கும் பாடல் நினைவுகளை எப்போதும் இனிமைப்படுத்தும் அற்புதமான பாடல்.

அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அதிகாலை பஸ்சில் வரும் போது இந்த பாடல் பஸ்சில் ஒளிபரப்பானது… அதிகாலையில் அந்த குளிரில் பஸ்சின் சீரான ஓட்டத்தில் இந்த பாடல் கேட்டு பரவசமாகிப் போனேன்… எப்போது எங்கே இந்தப் பாடலைக் கேட்டாலும், என் மனதுக்குள் அந்த அதிகாலை சில்லென்ற நினைவுகளைப் பரப்பிவிட்டுப் போகும் அதிசயம்.

ஒரு அதிகாலையில் நீங்களும் கூட கேட்டுப் பாருங்கள்…

இதில், இரண்டாவது சரணத்திற்கு பின் ‘ப…ப…ப…பா…பா..ப…ப..
என்று ஜானகி பாடும்போது, ராஜாவின் இசையில் தெறிக்கும் துள்ளல்… மொத்த சந்தோஷத்தையும் அள்ளி வருவது போல ஒரு இசையொலியை அந்த இடத்தில் தந்திருப்பார் ராஜா. இனி இப்படியொரு பாட்டை யாராவது தர முடியுமா என்றுகூட தெரியவில்லை.

படம்: இளமை காலங்கள் (1984)

தயாரிப்பு: கோவைத்தம்பி

இயக்கம்: மணிவண்ணன்

நாயகன்: மோகன், நாயகி: சசிகலா

பாடல்: வைரமுத்து

இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.

பாட வந்ததோர் கானம்..

ஈரமான ரோசாவே…

ராகவனே ரமணா ரகுநாதா…

படிப்புலே ஹீரோ …

ந்தப் பதிவின் கடைசி பாடல்…

இளையராஜாவை மட்டுமே நம்பி ஸ்ரீதர் எடுத்த தென்றலே என்னைத் தொடு படத்தில் எல்லா பாடல்களுமே மிகப் பிரபலம்.

அதிலும் தென்றல் வந்து என்னை தொடும்… பாடல் இனிமையின் சிகரம்.

இந்த பாடல் ஆரம்பிக்கும் போது ராஜாவின் இசை தென்றலாய் வருட ஆரம்பிக்கும்… தொடர்ந்து ஜேசுதாஸ் – ஜானகி குரல்கள் நம்மை இன்னோர் உலகத்துக்கு அழைத்துச் செல்லும்.

சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது… என்றெல்லாம் பெரியவர்கள் சொல்வார்களே… அந்த இனிமையை இந்தப் பாடலில் அனுபவிக்கலாம்.

வாலி எழுதிய வசீகர பாடல் இது!

இந்தப் பாடல்களையெல்லாம் கேட்ட பிறகு மனதுக்குள் ஒரு நிறைவு வரும் பாருங்கள்.. அது எத்தனை கோடிகள் செலவழித்தாலும் கிடைக்காதது… நினைவுகளை எப்போதும் இனிமைப்படுத்தும் இசைஞானி இளையராஜாவுக்கு நன்றிகள். வேறென்ன சொல்ல முடியும்!

-ஆர் வி சரவணன்

‘ஒரு ஃபோட்டோ எடுக்கனும்ணே…!’- பத்மபூஷன் இளையராஜா வீட்டில் ஒரு அனுபவம்

January 26, 2010 by envazhi  
Filed under Cinema

‘பத்மபூஷன்’ இளையராஜா வீட்டில்… ஒரு அனுபவம்!

த்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதும், தி நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டு முன் எப்போதும் காணாத அளவு பெரும் செய்தியாளர் கூட்டம்…

வீட்டில் ராஜா இல்லை… வீட்டில் உள்ளவர்களுக்கும் விஷயம் தெரியவில்லை. சிறிதுநேரத்தில் பிரசாத்திலிருந்து அவசரமாக வந்தார் இளையராஜா. காரை விட்டு அவரால் இறங்கக் கூட முடியாத அளவு மொத்த செய்தியாளர்களும் அவரைச் சூழந்து கொண்டனர்.

அனைவரையும் அமைதியாக விலக்கிவிட்டு வீட்டுக்குள் சென்றவர், மீண்டும் வந்தார். 200 பேருக்கும் அதிகமாக செய்தியாளர்களும் கேமராமேன்களும் அவரை போட்டி போட்டு படம் பிடிக்க சிரித்துக் கொண்டே எல்லோருக்கும் காட்சி தந்தார்.

பின்னர் ‘எல்லோரும் அமைதியா இருங்க, விஷயத்தை சொல்லிடறேன்’ என்று கேட்டுக் கொண்டார்.

அவர் பேசுகையில், “எனக்கு கிடைத்த இந்த விருதை, உங்களுக்கே கிடைத்தது போல சந்தோஷத்துடன் இங்கு வந்திருக்கிறீர்கள்… அந்த சந்தோஷம் என் முகத்திலும் பிரதிபலிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது தெரிகிறது. இதுவே எனக்கு பெரிய சந்தோஷம்தான்.

உங்களையெல்லாம் இப்படி பார்ப்பதே சந்தோஷம்தான்யா. மற்றபடி இது எந்த அளவு சந்தோஷம் என்று அளவெல்லாம் சொல்ல முடியாது.

கலைஞர்களை கவுரவப்படுத்தும் விருதாக இதைக் கருதுகிறேன். கலைஞர்கள் மேலும் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று ஊக்குவிப்பதற்காக, இதுபோன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விருது எனக்கான அங்கீகாரம் இல்லை… என் இசைக்கு கிடைத்த பாராட்டாக இதை கருதுகிறேன். விருது கொடுத்திருக்கிறார்கள் எனும் போதே, நாங்கள் யாரும் இந்த விருதை ‘வாங்கவில்லை’ என்பது உறுதியாகிறதல்லவா… அது இன்னும் சந்தோஷம்… இந்த விருதினைப் பெற்ற அனைவர் சார்பாகவும் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

பின்னர் நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு ராஜா சொன்ன பதில்களும் (ஏகப்பட்ட வேண்டாத, பொருத்தமில்லாத கேள்விகளும் கேட்டார்கள்… ஆனால் ராஜா அவற்றை கோபப்படாமல் தவிர்த்துவிட்டார்!)

இந்த அங்கீகாரம் உங்களுக்கு தாமதமாகக் கிடைத்ததாக நினைக்கிறீர்களா?

இது அங்கீகாரமல்ல… பாராட்டு. தாமதம் என்றெல்லாம் ஏன் நினைக்க வேண்டும்… அதது கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்திருக்கிறது.

ரஹ்மானுக்கும் பத்மபூஷண் விருது தந்திருக்கிறார்களே…

இது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி.

ரஹ்மான் உங்கள் சிஷ்யர்… அவருக்கும் உங்களுக்கும் ஒரே விருது….

(இடைமறித்த ராஜா) இதுக்கு நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்..! எனக்கு கிடைத்தது எனக்கு, அவருக்கு கிடைத்தது அவருக்கு. அவ்வளவுதான்.

கிராமிய இசை பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதா?

எதை முன்னுக்கு வர வைப்பது, எதை பின்னுக்கு தள்ளுவது என்பதை காலம் தீர்மானிக்கும். இந்த நேரத்தில் எதற்கு இந்தக் கேள்வியெல்லாம்…

இதுபோன்ற விருதுகள், தென்னிந்தியர்களுக்கு காலதாமதமாக வழங்கப்படுவதாக கருதுகிறீர்களா?

தாமதமாக வழங்கப்படுவதாக நான் நினைக்கவில்லை. வடக்கு, தெற்கு பேதங்களை எல்லாம் அரசியல்வாதிகளிடம் கேளுங்கள். என்னிடம் கேட்க வேண்டாம்.

சிம்பொனி போன்ற முயற்சி தொடருமா?

அதற்கு சில விநாடி நேரம் போதும். ஆனால், இப்போதுள்ள பைரஸி, டவுன்லோடிங் போன்ற சமாச்சாரங்கள் அந்த முயற்சிகளைத் தடுக்கின்றன, என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினர். இதற்கு ராஜா என்ன சொல்வாரோ என்ற தயக்கமும் இல்லாமலில்லை.

நாமும் தயக்கத்துடன் அவரிடம்  போய், ‘அண்ணே ஒரு ஃபோட்டோ எடுக்கனும்ணே…’ என்றோம். அவரோ, ‘அட… அதுக்கென்ன.. வாய்யா..வா’ என்று பக்கத்தில் நிறுத்தி புகைப்படம் எடுக்கச் சொன்னார்.

அதுமட்டுமல்ல, ஆசைப்பட்ட எல்லாரையும் வரச் சொல்லி, தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார் சந்தோஷத்துடன்… செய்தியாளர்கள் எல்லோருமே அவரது ரசிகர்களாகவே இருந்ததால்… அந்த வைபவம் முடியவே ரொம்ம்ப நேரம் ஆயிற்று!

-வினோ

இளையராஜா-ரஹ்மானுக்கு பத்மபூஷன்!

January 25, 2010 by envazhi  
Filed under General

நோபல் பரிசு வென்ற தமிழரான லண்டனைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், உமையாள்புரம் கே.சிவராமன், லண்டனைச் சேர்ந்த பிரதாப் சந்திர ரெட்டி ஆகிய தமிழர்கள் உள்பட 6 பேர் இந்தாண்டுக்கான பத்ம விபூஷன் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நாராயணன் வகுல் ஆகியோர் உள்பட 43 பேர் பத்ம பூஷன் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், ஒய்.ஜி. பார்த்தசாரதி, டாக்டர் ஜலகண்டபுரம் ராமசாமி கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் டி.என். மனோகரன், தொழிலதிபர் வேணு சீனிவாசன், டாக்டர் ரங்கநாதன் பார்த்தசாரதி உள்பட 81 பேர் பத்மஸ்ரீ விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் இன்று அறிவி்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 130 பேர் இந்த விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 6 பேர் பத்ம விபூஷன் விருதுகளும், 43 பேர் பத்மஸ்ரீ விருதுகளும், 81 பேர் பத்மபூஷன் விருதுகளும் பெறுகின்றனர்.

நடிகர் அமீர் கான் பத்ம பூஷன் விருது பெறவும், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், பாட்மின்டன் வீராங்கனை சானியா நெஹ்வால், இந்தி நடிகை ரேகா, நடிகர் சைப் அலி கான், குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விஜய்க்கு கிடைக்கவில்லை…

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது கிடைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரது பெயர் விருதுப் பட்டியலில் இடம் பெறவில்லை.

14 தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது:

இந் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மூவருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது.

சி.வி. ராவ், ஐ.ஜி, ரயில்வே போலீ்ஸ், சென்னை, டி.கே. ராஜேந்திரன், ஐ.ஜி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம், சென்னை, எஸ். மாணிக்க ராவ், துணை ஆணையர், குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து, திருநெல்வேலி உள்பட 14 பேர் இந்த விருது பெற தேர்வாகியுள்ளனர்.

15 கோடியில் தயாராகி, மூன்றாம் நாளே இருபது கோடி வசூலித்த பா!

December 9, 2009 by envazhi  
Filed under Popcorn


15 கோடியில் தயாராகி, இரண்டாம் நாளே இருபது கோடி வசூலித்த பா!

popcorn copyபா படத்தின் வெற்றி புதிய மற்றும் வித்தியாசமான முயற்சிகளில் இறங்குவோருக்கு பெரும் நம்பிக்கையும் உற்சாகமும் தந்துள்ளது என முன்பு குறிப்பிட்டிருந்தோம்.

வர்த்தக ரீதியாக இந்தப் படம் செய்து வரும் சாதனை, இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்தப் படத்துக்கு அமிதாப்பச்சனின் ஏபி கார்ப்பரேஷன் முதலீடு செய்தது ரூ 15 கோடி. படம் வெளியான மூன்றே நாட்களில், அதாவது ஞாயிற்றுக்கிழமை மாலையே ரூ.20 கோடி வரை பா வசூலித்துவிட்டதாக பிஸினஸ் ஸ்டாண்டர்டு போன்ற நாளிதழ்கள் தெரிவித்துள்ளன.

இன்னும் உலகமெங்கும் இந்தப் படத்தின் வசூல் நிலவரம் வெளிவந்தால் தெரியும், இந்தப படத்தின் வெற்றி எத்தனை பிரமாண்டமானதென்பது.

தமிழுக்கு வருகிறது பா!

popcorn copyபா திரைப்படம் சென்னையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் ஞாயிற்றுக் கிழமை வரை இந்தப் படத்துக்கான முன்பதிவு முடிந்துவிட்டதாக சொல்கிறது சத்யம் சினிமாஸ்.

காதல், காமம், வன்முறை என எந்த வழக்கமான மசாலாவும் இல்லாத இந்த படத்துக்கு சென்னையில் கிடைத்து வரும் வரவேற்பைப் பார்த்து, இதை தமிழில் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஒரு கலைஞர்.

அவர் வேறு யாருமல்ல.. பா படப் பாடல்கள் மூலம் இப்போது வடக்கிலும் தன் இசைக் கொடியை பறக்கவிட்டுள்ள இசைஞானி இளயைராஜாதான்!

குறிப்பு: பா படம் ராஜாவின் 884வது படம். இந்த விவரம் அவரே சொன்னது, பா பிரிமியர் ஷோவில்!

ரஜினி, இளையராஜாவுக்கு அமிதாப் சூட்டிய புகழாரம்!

December 8, 2009 by envazhi  
Filed under Cinema

ரஜினி, இளையராஜாவுக்கு அமிதாப் சூட்டிய புகழாரம்!

மீபத்தில் சென்னை வந்திருந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசைஞானி இளையராஜாவை வெகுவாகப் புகழ்ந்தார்.raja - amitji

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சனிக்கிழமை சென்னை வந்தார். இளையராஜாவுடன் பா படத்தின் சிறப்புக் காட்சியில் பங்ககேற்றார்.

இளையராஜா இசையில், பால்கி இயக்கத்தில், அமிதாப்பின் மிக வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள பா திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் பாராட்டுக்களும் அந்தப் படத்துக்கு குவிகின்றன.

படத்தின் பாடல்கள் இந்தி சினிமாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

படம் வெளியான தினத்தன்று மும்பையில் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அமிதாப், அதில் பங்கேற்க வருமாறு இளையராஜாவை அழைத்துள்ளார். ஆனால் ராஜாவால் போக முடியவில்லை.

எனவே இளையராஜாவுக்காக சென்னையில் ஒரு தனி ஷோவுக்கு ஏற்பாடு செய்ததிருந்தது அமிதாப்பின் ஏபி கார்ப்பரேஷன். ஃபெப்ஸி அமைப்பு இந்த காட்சிக்கான பணிகளை முன்னின்று செய்தது.

சனிக்கிழமை மாலை நடந்த இந்த சிறப்புக் காட்சியில் திரையுலகினர் பெருமளவில் பங்கேற்று, இளையராஜாவுக்கும், அமிதாப்புக்கும் வாழ்த்து மழை பொழிந்தனர்.Paa-Premiere-Still

படம் துவங்குவதற்கு முன், சில நிமிடங்கள் இளையராஜாவும், அமிதாப்பும் மைக்கில் பேசினர்.

அப்போது, சென்னை தனக்கு மிகவும் பிடித்த நகரம் என்றார் அமிதாப்.

“இந்தியாவிலேயே அதிக ஒழுக்கம் மிகுந்த நகரம் சென்னைதான். இங்குள்ளவர்களைப் போல மும்பையில் ஒரு கட்டுக்கோப்பான, அற்புதமான படைப்பாளிகளைப் பார்க்க முடியாது. தமிழர்கள் ரொம்ப முற்போக்கானவர்கள். நான் மும்பைவாசியாக இருந்தாலும், பாதித் தமிழன் என்று பெருமையாக சொல்லிக் கொள்வேன். தென்னிந்தியாவின் தயாரிப்புகளில் நானும் ஒருவன் என்றும் சொல்லலாம்.

என்னை ஒரு நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்குமாறு கேட்கிறார்கள். பா படமே கிட்டத்தட்ட தமிழ்ப் படம்தான். தமிழ்க் கலைஞர்களால் உருவான மிகச் சிறந்த படைப்பு. பால்கியும் பிசி ஸ்ரீராமும் அற்புதமான கலைஞர்கள். இவர்களுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல, மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை.

இளையராஜா இசையை விரும்பாதவர்கள் கூட இருக்க முடியுமா? இளையராஜாவை இன்று நேற்றல்ல… பல ஆண்டுகளாக எனக்கு மிக நெருக்கமாகத் தெரியும்.

என்னைப் பொறுத்தவரை இளையராஜா ஒரு நிஜமான, சுத்தமான இசை மேதை. இதயத்துக்கு நெருக்கமான இனிய பாடல்களைத் தருவதில் அவருக்கு நிகரான ஒரு இசைமேதையைப் பார்க்க முடியாது. நான் அவருடைய வீட்டுக்குப் போயிருக்கிறேன். அவர் என்னை உபசரித்த விதம், ஒரு மறக்க முடியாத இனிய அனுபவம். அவருடன் பணியாற்றியது எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஏற்கெனவே சீனிகும் படத்தின் பாடல்கள் பெரும் சாதனை நிகழ்த்தின. இப்போது பா அதை முறியடித்துள்ளது…” என்றார்.

ரஜினி – கமல் பற்றியும் இந்த நிகழ்ச்சியில் பேசத் தவறவில்லை அமிதாப்.

“ரஜினி – கமல் இருவருக்குமே என்மீது பெரும் அன்பு. எப்போதும் என்னை தமிழில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டே உள்ளார்கள். அவர்களின் இந்த விருப்பத்தை நான் இன்னும் நிறைவேறவில்லை. விரைவில் அந்த்க குறை நீங்கும் என எதிர்பார்க்கிறேன்.

ரஜினி ஒரு அற்புதமான மனிதர். எப்போதெல்லாம் அவரது படம் இங்கு வெளியாகிறதோ, அப்போதெல்லாம் மும்பைக்கே வரும் ரஜினி, தனது படத்தின் சிறப்புக் காட்சியை எனக்காக ஏற்பாடு செய்வார். இதை விட முக்கியம், நான் நடித்த படம் வெளியானாலும், அதை முதலில் பார்த்துவிட்டு, என்னை அழைத்துப் பாராட்டுவார். முன்பு பிளாக் படத்தின் சிறப்புக் காட்சிக்கு நான் ரஜினியை அழைக்க நினைத்திருந்தேன். அவரோ அதற்குள் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, என்னைப் பாராட்டினார். இந்த பா படத்தை, ரஜினிக்கு சிறப்புக் காட்சியாக போட்டுக் காட்ட விரும்புகிறேன்… அதற்குள் அவரே பார்த்துவிட்டு என்னைக் கூப்பிடாமல் இருக்க வேண்டும்!” என்றார் சிரித்தபடி அமிதாப்.

படத்தின் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமையும் வெகுவாகப் பாராட்டினார்.

பின்னர் பேசிய இசைஞானி, “அமிதாப் போல ஒரு மகா கலைஞனை பார்ப்பது மிக அரிது. இந்தப் படத்தில் எங்கள் பங்களிப்பை விட அமிதாப்பின் பங்களிப்பு உயர்ந்தது, மதிப்பு மிக்கது. பால்கியின் திரைக்கதை ஒரு அற்புதமான விஷயம்…” என்றார்.

Related Posts with Thumbnails