முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

எந்திரன் பிரமாண்ட வெற்றி பெறும்! – ரஜினி பேட்டி!

September 10, 2010 by envazhi  
Filed under Rajini

எந்திரன் பிரமாண்ட வெற்றி பெறும்! – ரஜினி பேட்டி!

திருமலை: எந்திரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா மற்றும் மகள் சௌந்தர்யா, மருமகன் அஸ்வின் ஆகியோருடன் கார் மூலம் நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார்.

திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி, சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் ஏழுமலையான் கோவிலுக்குள் சென்ற அவரை, கோவில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

வரவேற்பு முடிந்ததும், வி.ஐ.பி. தரிசனம் வழியாக சென்று இரவு சுமார் 9 மணியளவில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருடன் மனைவி, மகள், மருமகன் ஆகியோரும் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் ரஜினிகாந்த்துக்கு லட்டு மற்றும் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.

தரிசனம் முடிந்து வெளியில் வந்த ரஜினியை சூழ்ந்து கொண்ட நிருபர்கள், வரவிருக்கும் எந்திரன், அரசியல் பிரவேசம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவர்களிடம் ரஜினி கூறியதாவது:

எனது மகளின் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. அதற்காக ஏழுமலையானுக்கு நன்றி செலுத்த குடும்பத்துடன் வந்தேன்.

இம்மாதம் வெளிவர உள்ள ‘எந்திரன்’ படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இத் திரைப்படம் குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் அமைந்துள்ளது.

‘எந்திரன்’ மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ‘எந்திரன்’ படம் மாபெரும் வெற்றி பெறவும் ஏழுமலையானை நான் வேண்டிக்கொண்டேன்.

அரசியல் பற்றியெல்லாம் இப்போது எதுவும் பேசும் சூழ்நிலை இல்லை. இப்போதைக்கு அரசியல் மற்றும் எனது அடுத்த படம் பற்றிச் சொல்ல எதுவுமில்லை.

நண்பர் சிரஞ்சீவி மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வெற்றி மேல் வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்,” என்றார் ரஜினி.

ரஜினியைக் கண்டதும், ‘சூப்பர் ஸ்டார் வாழ்க’, ‘ரோபோ, ரோபோ’, ‘இனிய எந்திரா’ என ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்க முயன்றனர். அவரும் முடிந்தவரை சிலருக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். கூட்டம் அலைமோதியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

சூப்பர் ‘பவர்’ பக்ஸ்!

August 27, 2010 by envazhi  
Filed under Cartoon

சூப்பர் ‘பவர்’ பக்ஸ்!

-தினமணி

இனி ‘விஜய்… அரசியல்’ பத்தி மட்டும் கேட்காதீங்க! – எஸ்ஏசி

June 2, 2010 by envazhi  
Filed under Cinema

‘விஜய்… அரசியல்’ பத்தி மட்டும் கேட்காதீங்க! – எஸ்ஏசி

வெளுத்துக்கட்டு படத்துக்காக தான் வைக்கும் பிரஸ் மீட்களில் இனி விஜய் பற்றியோ,. அவரது அரசியல் பிரவேசம் குறித்தோ கேள்வி கேட்காதீர்கள். அதனால் பல பின்விளைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது என்றார் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரன்.

னது வெளுத்துக்கட்டு படத்துக்காக தமிழகத்தின் மற்ற நகரங்களில் பிரஸ் மீட் வைத்து விளம்பரம் செய்து வருகிறார் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்.

இந்தப்படத்தை அவர் தயாரிக்கிறார். இயக்கவில்லை. கதிர் என்ற புதுமுக ஹீரோவையும், மூன்று புதிய நாயகிகளையும் அறிமுகப்படுத்துகிறார். தன்னுடன் இந்த புதுமுகங்களையும் அழைத்துச் செல்லும் எஸ்ஏசி, படம் குறித்து பேட்டிகள் அளித்து வருகிறார். சமீபத்தில் திருச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “விஜய் அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது” என்றார். இதற்கு கடுமையான எதிர்விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அரசியல் பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ளார் எஸ்ஏசி.

நேற்று வேலூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்ஏ சந்திரசேகரன் கூறியது:

“இந்தக் கதை மிகப் புதிதாக இருக்கும். எந்தப் படத்தின் சாயலும் இருக்காது. காரணம் எஸ்.ஏ.சந்திரசேகரான என்னைப் பற்றியதுதான் இந்தப்படம். என் சிறு வயதில், இளைய பருவத்தில், நடந்த விஷயங்களை படத்தின் கதை.

இந்தப் படம் மாபெரும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். சினிமா உலகத்தில் நான் அறிமுகப்படுத்திய விஜய், சிம்ரன், விஜயகாந்த் ஆகியோர் சினிமா உலகத்தில் வெற்றி பெற்று மிகப்பெரிய பிரபலத்தோடு இருக்கிறார்கள்.

அதேபோல், இந்தப் படத்திலும் நான், கதிர் என்கிற இளைஞரை அறிமுகப்படுத்தியுள்ளேன். இவர் தமிழ்நாட்டு பையன்.

இதேபோல் படம் இளைஞர்களுக்குப் பிடித்த மாதிரி, செக்ஸியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆந்திராவில் பிறந்து, கர்நாடகாவில் வளர்ந்த ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகிறேன். இன்னொரு பெண்ணை கிராமத்து தென்றலாக வருவது போல் அறிமுகப்படுத்துகிறேன். இதோடு இன்னோரு பெண்ணையும் அறிமுகப்படுத்துகிறேன். மொத்தம் இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள். படம் இளம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பதுபோல் இருக்கும்” என்றார்.

அவரிடம், அண்மையில் விஜய் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை என்று விநியோகஸ்தர்கள் 35 சதவீதம் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்களே?, என நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சந்திரசேகரன், “தயவு செய்து விஜய் பற்றியும், அரசியல் பற்றியும் கேட்க வேண்டாம். ப்ளீஸ்… இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு முழுக்க முழுக்க வெளுத்துக்கட்டு படத்தை பற்றிதான்…” என்று எஸ்ஸானார்!

‘மதுரையையும் கூல் பண்ணியாச்சு!’

‘அப்பாடா… இனி மதுரைப் பக்கமும் அரசியல் சேவையை ஜோரா செய்யலாம்!’

இடம்: கோபாலபுரம்

விஜய் படங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது ! – எஸ்ஏ சந்திரசேகர்

May 30, 2010 by envazhi  
Filed under Cinema

விஜய்யை வைத்து நான் சிவப்பு மனிதன் படத்தை ரீமேக் செய்கிறேன்! – எஸ் ஏ சந்திரசேகர்

திருச்சி: விஜய் நடிக்கும் படங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. அவரது ரசிகர் மன்றங்கள் மிக வலுவாக உள்ளன. விஜய் அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது என்று திருச்சியில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வெளுத்துக்கட்டு’ திரைப்படத்தின் பாடல் அறிமுக விழா திருச்சியில் நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:

நடிகர்களை நம்பி படம் எடுக்காமல் கதாபாத்திரத்தை நம்பி படம் எடுப்பது என்னுடைய வழக்கம். கதாபாத்திரத்தை நம்பி படம் எடுத்தால் யாரை வேண்டுமானாலும் வைத்து படம் எடுக்கலாம். படத்தில் ஏதாவது விஷயத்தை சொல்ல நினைப்பவன் நான்.

இப்போது படம் எடுப்பது ரொம்ப எளிது. ஆனால் அந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்று, வெற்றி பெறுவது கடினம். இதை எப்படி சமாளிப்பது என்று திரைஉலகம் திணறி கொண்டு இருக்கிறது.

விஜய் படங்களுக்கு பெரும் வரவேற்பு!

நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வருவதற்கு அஸ்திவாரம் போட்டு உள்ளார். அவர் நடிக்கும் படங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விஜய் அரசியலில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. உரிய நேரத்திற்காக அவர் காத்து இருக்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடிகர் விஜய் எனக்கு மகனாக கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் சிவப்பு மனிதன்  ரீமேக்கில் விஜய்

ரஜினியை வைத்து நான் இயக்கிய ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை ‘ரீமேக்’ செய்து தயாரிக்க இருக்கிறேன். அதில் விஜய் நடிக்கிறார். ஆனால் நான் இயக்கவில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நான் படத்தை மட்டும் தயாரிக்க இருக்கின்றேன்.

இது போன்ற என்னுடைய பழைய படங்கள் சிலவற்றை இந்த காலத்துக்கு ஏற்ப ‘ரீமேக்’ செய்யப் போகிறேன்,” என்றார்.

திமுகவில் குஷ்பு!

May 14, 2010 by envazhi  
Filed under General

முதல்வர் ‘ஆசியுடன்’ திமுகவில்  சேரும் குஷ்பு!

சென்னை: காங்கிரஸ் கட்சி எனக்குப் பிடிக்கும், ராஜீவ் காந்தி படங்களை என் படுக்கையறையில் மாட்டியிருந்தேன் என்று கூறி, காங்கிரஸ் தலைவர்களை உசுப்பேத்திய நடிகை குஷ்பு, திடீரென்று திமுகவில் இன்று இணைவதாக அறிவித்துள்ளார்.

தர்மத்தின் தலைவன் படம் மூலம் அறிமுகமான குஷ்பு, அதன்பிறகு பல சர்ச்சைகள், கிசுகிசுக்களில் சிக்கினார். ஆனால் தனது அரசியல், திரையுலக செல்வாக்கால் அவற்றிலிருந்து மீண்டு வந்தார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் கற்பு பற்றி புதிய இலக்கணம் கூறினார். தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்த சந்தேகத்தையும் எழுப்பினார்.

தமிழ் அமைப்புகள் என்னதான் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவற்றையெல்லாம் ஓரங்கட்டும் விதமாக குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்தது உச்ச நீதிமன்றம். குஷ்பு மீதான 22 வழக்குகளைத் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், குஷ்பு காங்கிரஸில் சேரப் போவதாக கூறப்பட்டது. இதனால் மகிழ்ந்து போன காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, சுதர்ஸனம் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் குஷ்புவை வரவேற்று மாறி மாறி அறிக்கைகள் கொடுத்தனர்.

ஆனால், திமுக அரசு குஷ்புவை எம்எல்சியாக்கத் திட்டமிட்டது.

இப்போது திமுகவில் சேரப் போவதாக அறிவித்துள்ளார் குஷ்பு. சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் இறுதிநாளான இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுக உறுப்பினராக சேருகிறார் குஷ்பு.

மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் செல்லும் அவர், முதல்வரிடம் ஆசி பெற்று திமுகவில் இணைகிறார்.

அடுத்த சில தினங்களில் அமையவிருக்கும் சட்ட மேலவையில், திமுக எம்எல்சியாக அவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தின் போது குஷ்புவுக்கு பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

திமுகவில் சேர்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது! – குஷ்பு

திமுகவில் சேர்வது குறித்து குஷ்பு கூறியதாவது:

“அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இப்போது நிறைவேறுவதில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

தமிழக் முதல்வர் டாக்டர் கலைஞர் மீது எனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு. அதனால் நான் இன்று மாலை அவர் முன்னிலையில் திமுகவில் இணைகிறேன்.

இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவேன். திமுகவில் இணைந்த பிறகு அதிகாரப்பூர்வமாக மேலும் இது குறித்து விரிவாகப் பேசுகிறேன். தமிழக மக்களின் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. அரசியலிலும் என்னை வரவேற்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்”, என்றார் குஷ்பு.

மட்டமான படங்களில் நடிப்பதற்கு பதில் வீட்ல சும்மா இருக்கலாம்! – அஜீத்

May 13, 2010 by envazhi  
Filed under Cinema

மட்டமான படங்களில் நடிப்பதற்கு பதில் வீட்ல சும்மா இருக்கலாம்! – அஜீத்

ட்டமான படங்களில் நடிக் கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம், என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார்.

கார் ரேஸில் பிஸியாக உள்ள அஜீத், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இப்படிக் கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியின் சில பகுதிகள்:

என்னாச்சு, மொராக்கோ ரேஸில்?

“இந்த வருஷம் ஃபார்முலா-2 சீஸன் ரொம்பவே நல்லா ஆரம்பிச்சது. அன்னிக்கு ரேஸ்ல திடீர்னு எனக்கு ரொம்ப முன்னாடி போயிட்டு இருந்த கார் ஒண்ணு எகிறிப் பறந்து இன்னொரு கார் மேல மோதிருச்சு. பெட்ரோல் பத்திட்டு எரிய ஆரம்பிச்சு, இன்னொரு காரும் அதில் மோத… பயங்கர விபத்து.

நான் கொஞ்சம் பின்னாடி இருந் ததால், ஸ்பீட் கன்ட்ரோல் பண்ணி எதிலும் மோதாம பாஸ் பண்ணிட்டேன். 100 அடி முன்னாடி என் கார் இருந்திருந்தா… மை காட்!”

ஏற்கெனவே ஃபார்முலா-1 ரேஸர் கரூண் சந்தோக் போதிய ஸ்பான்சர்கள் இல்லாமல் திணறிட்டு இருக்கார். அந்த நிலைமை உங்களுக்கு வரலாம் இல்லையா…

”வரலாம் இல்லை… ஏற்கெனவே வந்திருச்சு பாஸ்! ஸ்பான்சர்ஸ் யாரும் கிடைக்கலை.

நரேன் கார்த்திகேயன், கரூண் சந்தோக், அர்மான் இப்ராஹிம், பார்த்தீவ் சுரேஷ்வரன், ஆதித்யா பட்டேல், இப்போ நான்… இப்படி இதுவரை இந்தியா சார்பாக சர்வதேசப் போட்டிகளில் பங்கெடுப்பவர்கள் எல்லோருமே தமிழ்நாட்டுக்காரர்கள்தான்.

இந்த ஒரு காரணத்துக்காகவே தமிழக அரசு, ரேசுக்கு உதவலாம். கூடவே, பெரிய எம்.என்.சி. நிறுவனங்களிடம் தமிழக ரேஸர்களுக்கு ஸ்பான்சர் செய்யச் சொல்லி அறிவுறுத்தலாம். அது நடந்தா, ரொம்பப் பெரிய புண்ணியமா இருக்கும்.

இப்போ இன்டர்நேஷனல் ரேஸ்ல கலந்துகொள்ளும் எல்லா ரேஸ் வீரர்களும் பிச்சை எடுத்துட்டு இருக்கோம். எனக்கு இந்த வருஷம் மட்டும் ரேஸ்ல கலந்துக்க நாலு லட்சம் பவுண்டு வேணும். ஒரு இங்கிலாந்து பவுண்டு கிட்டத்தட்ட 69 ரூபாய். சீக்கிரமே அது 80 ரூபாய் ஆகலாம். இது ரொம்ப காஸ்ட்லி விளையாட்டு சார். அரசாங்கம் நினைச்சாதான் ஆர்வமுள்ள, பண வசதி இல்லாத, திறமைசாலி இளைஞர்களை ரேஸர்கள் ஆக்க முடியும்!”

படங்கள் ஓடாததால்தான் ரேஸுக்குப் போய்விட்டீர்கள் என்கிறார்களே…

“ஒரு உண்மையை சொல்லட்டுமா? நான் இதுவரை நடிச்ச அத்தனை படங்களிலும் என்னோட 100 சதவிகித உழைப்பைக் கொடுத்துத்தான் நடிச்சிருக்கேன். ஆனா, அதில் பல படங்கள் ஹிட் ஆகலைன்னு நினைக்கும்போது மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. தொடர்ந்து மட்டமான, குப்பையான படங்களா நடிச்சு என் ரசிகர்களை நான் ஏமாத்த விரும்பலை.

அதுவும் இப்போ தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்கிறது பெரிய செலவு பிடிக்கிற விஷயம். அவ்வளவு காசு செலவழிச்சு தியேட்டருக்கு வர்ற ரசிகர்கள் யாரும் நிச்சயம் குப்பையான படங்கள் பார்க்க விரும்பமாட்டாங்க.

என்னைப் பொறுத்தவரை, மட்டமான படங்களில் நடிக் கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம். என்னால் தொடர்ந்து வருஷத்துக்கு 200 நாள் கால்ஷீட் கொடுத்து கோடிக் கோடியாச் சம்பாதிக்க முடியும். ஆனால், எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த அஜீத் மனசுக்குப் பிடிச்சதை மட்டும்தான் செய்வான். மனுஷனுக்குச் சந்தோஷம்தான் சார் முக்கியம்!”.

“ஆனா, இதுவரை நீங்க கலந்துக்கிட்ட எல்லா ரேஸிலும் கிட்டத்தட்ட கடைசி இடம்தான் பிடிக்கிறீங்க… என்ன காரணம்?”

”இப்ப எனக்கு 39 வயசு. ஃபார்முலா-2 ரேஸ் ஓட்டுபவர்களில் எனக்குத்தான் வயசு ஜாஸ்தி. அவங்க எல்லாருமே ஆறு வயசுல இருந்தே பக்கா பயிற்சி எடுத்து 20 வயசுக்குள் சர்வதேசப் போட்டிகளில் கலந்துக்குறாங்க. ஆனா, நான் ஆறு வருஷம் பிரேக் விட்டுட்டு இப்போதான் திரும்ப வந்திருக்கேன். உடனே, ரிசல்ட் கிடைக்கும்னு சொன்னா, என்னையே நான் ஏமாத்திக்கிறேன்னுதான் அர்த்தம். படிப்படியாதான் முன்னேறணும். மெதுவா நடந்தாலும் எப்பவும் பின்நோக்கி மட்டும் நடக்க மாட்டேன்!”

அஜீத் குமார் அரசியல்வாதி ஆவாரா?

“இப்போ நான் அரசியல்வாதி இல்லைன்னு யார் சொன்னது? இப்பவும் எப்பவும் அரசியல் என்னைச் சுத்தி இருந்துட்டேதான் இருக்கு. சினிமா இண்டஸ்ட்ரி முழுக்கவே பாலிடிக்ஸ்தான்.

கருணையே இல்லாத அந்த இண்டஸ்ட்ரியில் ஒருத்தன் சர்வைவ் பண்ணணும்னா, அவனுக்கு நிச்சயம் அரசியல் தெரிஞ்சிருக்கணும். சினிமாவில் எந்த காட்ஃபாதரும் இல்லாம 18 வருஷம் சமாளிச்சு நிக்க, சாதிக்க, நானும் எப்பவோ அரசியல்ல இறங்கிட்டேன் பாஸ்.

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்னு எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கு. அரசியல் இல்லாத ஒரு இடம்கூட இந்த உலகத்தில் இல்லை. அரசியல் இல்லாத மனுஷன் யாரும் இந்த உலகத்தில் கிடையாது. அஜீத் மட்டும் அரசியலில் இல்லாமல் இருக்க முடியுமா என்ன?”

இனி சினிமா?

”சந்தேகமே வேண்டாம். தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். ஆனால், வருஷத்துக்கு ஒரு படம் நடிச்சாலும் நல்ல படமா நடிக் கணும். இப்போ தயாநிதி அழகிரியின் ‘கிளவுட் நைன் மூவி’சுக்காக ஒரு படம் பண்றேன். கௌதம் சார் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கார். செப்டம்பர்ல ரேஸ் முடிஞ்சதும் அக்டோபர்ல ஷூட்டிங் ஆரம்பிக்கும்!”, என்று கூறியுள்ளார் அஜீத்.

பேட்டி-படம்: ஆனந்த விகடன்

கல்விக் கொள்ளைக்கு சவுக்கடி கொடுத்த கட்டண நிர்ணயம்!

கல்விக் கொள்ளைக்கு சவுக்கடி கொடுத்த கட்டண நிர்ணயம்!

சங்க என்ற படத்தில் ஒரு வசனம் வரும்… ‘டொனேஷன், டெர்ம் பீஸ், ட்யூஷன், அதிலும் ஸ்பெஷல் ட்யூஷன்… என புடுங்கறான் புடுங்கறான் புடுங்கிகிட்டே இருக்கான் புடுங்கி’ என்பார் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையில் பாதிக்கப்பட்ட ஒரு தந்தை. அந்த வசனத்துக்கு திரையரங்கில் கிடைத்த கைத்தட்டலே, மக்களின் நொந்த மனதுக்கு சாட்சி.

கல்வியை உச்சலாபம் வைத்து விற்கும் இழிபிறவிகளை விட மோசமான ஜென்மங்கள் உலகில் யாரும் இருப்பார்களா என்று கேட்டால், இல்லையென்றே சொல்வேன். ஔவை சொன்ன இழிகுலத்தோர் வேறு யாருமல்ல… இவர்கள்தான்.

திருட்டு அரசியல்வாதிகள், போலிச் சாமியார்கள், நாட்டை ஏய்க்கும் தொழிலதிபர்கள்… இவர்களுக்கெல்லாம் மேலான ஒரு மோசடிக் கும்பல் உண்டென்றால் அது கல்வியை விற்கும் தனியார் பள்ளிகள் மற்றும் அவற்றை நடத்தும் மோசடி ட்ரஸ்ட்கள்தான்.

வகுப்பறைக்குள் நுழைந்ததிலிருந்து பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் ஒரு நாளில் அல்லது வாரத்தில் நிச்சயம் ஒரு முறை ஏதாவது ஒரு காரணம் சொல்லி பணம் கறந்துவிடும் பள்ளிகள் ஏராளம். இந்த தனியார் பள்ளிக்கூட தூண்களில் சாய்ந்து நின்றால்கூட காசு கொடுங்க என்று கையில் பிரம்போடு நிற்பார்கள் போலிருக்கிறது. அப்படி ஒரு கொள்ளை, கட்டணம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

புரசைவாக்கத்தில் ஒரு பள்ளியில் ப்ரீ கேஜி அட்மிஷனுக்கு ரூ 50 ஆயிரம் நன்கொடை தந்தால்தான் உண்டு. சேத்பட்டில் உள்ள அந்த புகழ்பெற்ற பள்ளியில் ரூ ஒன்று முதல் 3 லட்சம் வரை நன்கொடை தர வேண்டும். இங்கெல்லாம் சாமானியன் வீட்டுப் பிள்ளை படிக்கவே முடியாது.

புறநகர்ப் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் அடிக்கும் கொள்ளை சொல்லி மாளாது. இங்கெல்லாம் கௌரவத்துக்காக பிள்ளைகளைச் சேர்க்கும் நடுத்தரவாசிகள்தான் பலியாடுகள்.

எத்தனையோ ஆண்டுகள் எத்தனையோ தனி நபர்கள், அமைப்புகள் முறையிட்டும் தனியார் பள்ளிகளின் கட்டணங்கள் முறைப்படுத்தப்படாமலேயே இருந்தன. ஆனால் திமுக அரசு சற்றுத் துணிந்து இந்தக் கொள்ளைக்கு ஒரு கடிவாளம் போட்டுள்ளது.

நீதிபதி கே கோவிந்தராஜன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து தனியார் பள்ளிகளுக்கு கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. இதுகூட சற்று அதிகமான கட்டணம் என்றாலும், இதற்கு முன் அடிக்கப்பட்ட கொள்ளையோடு ஒப்பிட்டால் எவ்வளவோ பரவாயில்லை எனும் அளவு நியாயமான கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. இந்த கட்டண நிர்ணயம் மற்றும் அதில் அரசு காட்டிய உறுதி நிச்சயம் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு பெரிய இடியாகத்தான் இருந்திருக்கும்.

இந்​தக் கட்​ட​ணங்​களை தமிழகத அரசு ஏதோ குத்துமதிப்பாக நிர்ணயிக்கவில்லை. மிகப்பெரிய ஆய்வுக்குப் பிறகு அறி​வி​யல்​பூர்​வ​மாக,​​ ஒவ்​வொரு பள்​ளிக்​கு​மா​கத் தீர்​மா​னிக்​கப்​பட்​டவை என்பது குறிப்பிடத்தக்கது.

துணை முதல்வர் ஸ்டாலின் வார்த்தையில் சொல்வதென்றால், “ஒவ்​வொரு பள்​ளி​யும் கொண்​டி​ருக்​கும் இடத்​தின் பரப்​ப​ளவு,​​ கட்​ட​டங்​க​ளின் அளவு,​​ உள்​கட்​ட​மைப்பு வசதி,​​ தள​வாட வச​தி​கள்,​​ ஆய்​வுக்​கூ​டம்,​​ நூல​கம்,​​ பணி​யா​ளர்,​​ ஆசி​ரி​யர்​கள் எண்​ணிக்கை ஆகி​ய​வற்​றைக் குறித்து அந்​தந்​தப் பள்​ளி​யி​ட​மி​ருந்து தக​வல் பெற்று அளிக்​கு​மாறு,​​ தமி​ழ​கத்​தின் அனைத்து மாவட்​டங்​க​ளி​லும் உள்ள முதன்மை கல்வி அலு​வ​ல​ருக்கு ஒரு படிவத்தை நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி வழங்​கி​யது.

இந்​தப் படி​வங்​களை 10,934 பள்​ளி​கள் பூர்த்தி செய்து தந்​தன.​ 701 பள்​ளி​கள் இப்​ப​டி​வங்​களை இது​வரை பூர்த்தி செய்து தரவே இல்லை.​ ஆனால் அதற்காக அப்படியே விட்டுவிடாமல், படிவங்கள் தராத பள்ளிகள் பற்றியும் விசாரித்து, அவற்றின் தரம், தேவைக்கேற்ப ஓராண்டுக்கான கட்டணங்களை நிர்ணயித்துள்ளது அரசு. பள்ளியை நடத்தும் தாளாளருக்கு எவ்வளவு லாபம் என்பதையும் நிர்ணயித்து, அதை கட்டணத்துடன் சேர்த்துள்ளது அரசு. நிச்சயமாய் இந்தக் கட்டண விகிதப்படி வசூலித்தால் பள்ளியை நடத்துபவருக்கு எந்த நஷ்டமும் வராது.

அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்கள் விவரம் இது: அதி​க​பட்​ச​மாக மேனி​லைப் பள்​ளி​யில் ரூ.​ 11,000,​ உயர்​நி​லைப் பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 9 ஆயி​ரம்,​​ நடு​நி​லைப் பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 8 ஆயி​ரம்,​​ தொடக்​கப் பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 5 ஆயி​ரம்,​​ கிரா​மத் தொடக்​கப்​பள்​ளிக்கு ரூ.3,500 எனக் கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்டு அறி​விக்​கப்​பட்​டள்ளது.​..”

அரசு கலர் டிவி கொடுத்தபோது கூட மக்கள் இத்தனை மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார்கள். அந்த அளவு பெற்றோரை நிம்மதிப் பெருமூச்சுவிடவைத்துள்ளது இந்த அறிவிப்பு.

ஆனால் இந்த கட்டணங்களை வழக்கம்போலவே ஏற்க மறுத்து நீதிமன்றத்துக்குப் போனார்கள், தன்னிச்சையாக சுரண்டிக் கொழுத்த தனியார் பள்ளி நிர்வாகிகள்.

தீர விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று, அந்த மனுக்களை தள்ளுபடி செய்து, தமிழக அரசின் கட்டண விகிதம் சரியானதுதான் என்று தீர்ப்பளித்தனர். இது மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

ஆனால் இந்த நேரத்தில்தான் தாங்கள் எப்பேர்ப்பட்ட அயோக்கியர்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளனர் தனியார் பள்ளி தாளாளர்கள்.

இனி நீதிமன்றத்தை நம்பப்போவதில்லையாம்… அரசியல் ரீதியாக இந்தப் பிரச்சினையைச் சந்திப்பார்களாம்.

அதெப்படி அரசியல் ரீதியாகச் சந்திப்பார்கள்? இதோ தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒரு பகுதி:

“எங்கள் அமைப்பில் உறுப்பினராக உள்ள 11 ஆயிரம் தனியார் பள்ளிகளில் குறைந்தபட்சம் 5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களின் குடும்பம் என கணக்கிட்டால் கிட்டத்தட்ட 50 லட்சம் ஓட்டுக்கள் தேறும்.

சட்டசபை தேர்தலில் எந்த கட்சி எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தேர்தல் வாக்குறுதி அளிக்க முன் வருகிறதோ அந்த கட்சிக்குதான் இந்த ஓட்டுகள் என முடிவெடுத்துள்ளோம். தனியார் பள்ளிகள் தங்கள் இஷ்டப்படி செயல்பட்டுக் கொள்ள அனுமதி தர வேண்டும். அரசு தலையிடக் கூடாது என்பதே எங்களின் ஒட்டு மொத்த கோரிக்கை.

முதல்வர் கருணாநிதிக்கு எங்கள் நிலைமை இப்போது நன்கு புரியும். அவர் இப்போது உதவி செய்வார் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்….”

-போலிச் சாமியார்கள் கூட கிட்டே நெருங்க முடியாது. அத்தனை அயோக்கியத்தனமாக கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறார்கள் இந்தக் கயவர்கள்.

நாங்கள் கல்விச்சேவை செய்கிறோம் என்று கூறிக் கொண்டுதான் இவர்கள் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஆரம்பித்த பிறகுதான் தங்கள் வியாபார முகத்தைக் காட்டுகிறார்கள்.

இப்போது கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதே, இந்​தப் பள்ளி​கள் கொடுத்த வரவு,​​ செலவு, எதிர்கால தேவை போன்ற கணக்​கீடு​க​ளின் அடிப்​ப​டை​யில்​தான்.​ ஆனால் அதை இப்போது ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். காரணம் ரொம்ப சிம்பிள்… பல்​வேறு தலைப்​பு​க​ளின் கீழ் அடிக்கும் மறைமுகக் கொள்ளை இதனால் பாதிக்கப்பட்டு விட்டது என்பதே.

பிரி கேஜிக்கும் எல்கேஜிக்கும் கூட கம்ப்யூட்டர் கட்டணம், நூலகக் கட்டணம், ஸ்போர்ட்ஸ் கட்டணம், நீச்சல் கட்டணம் என தினுசுதினுசாகக் கொள்ளையடித்ததை இனி தொடர முடியாதே என்ற ஆத்திரத்தில், இப்போது தேர்தல் அரசியலைக் கையிலெடுத்துள்ளன இந்த அறிவிலிகள்.

கல்வி என்பது வாழ்க்கையின் அடிப்படை ஆதாரங்களுள் ஒன்று. அதில் அரசின் கட்டுப்பாடுகள் இருந்தே தீர வேண்டும். இப்போதுதான் அரசு சரியான முடிவையும் எடுத்துள்ளது.

இதற்கெல்லாம் தங்களால் கட்டுப்பட முடியாது எனக் கருதினால்,​​ தங்​கள் பள்​ளி​களை அர​சிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்​கிக்​கொள்வதுதானே…

அதை விட்டுவிட்டு தேர்தலில் பார்த்துக் கொள்கிறோம் என்று மிரட்டும் அளவுக்கு இந்த கல்வி நிறுவன முதலாளிகள் சவால் விடுகிறார்கள் என்றால், இந்தப் பள்ளிகளை கட்டாயமாக அவர்களிடமிருந்து பறித்து அரசின் வசப்படுத்துவதுதான் ஒரே வழி. அரசு இந்த விஷயத்தில் துணிந்து களமிறங்கலாம். நீதிமன்றத்தின் உத்தரவும் அதற்கு ஏதுவாகவே உள்ளது.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான கட்டணங்களை, அந்தந்தப் பள்ளிகளின் முன்பு பெரிதாக அச்சிட்டு ஒட்டச் செய்வதோடு, இவை சரியாக அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆராய தனி குழு ஒன்றையும் அமைக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு நமது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக துணை முதல்வர் ஸ்டாலினின் முனைப்பும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதில் செய்த உதவிகளும் மெச்சத் தக்கவை.

கல்வித் துறையில் நடந்த பெரும் கொள்ளைக்கு தடைபோட்டிருக்கும் அரசு, தனியார் பள்ளி முதலாளிகள் சிலரின் வெத்து வேட்டு அரசியல் மிரட்டல்களுக்குப் பணியாமல், அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினால் நிஜமாகவே தலைமுறை தாண்டியும் நன்றி சொல்வார்கள் தமிழ் மக்கள்!

-வினோ

என்வழி

பத்திரிகையாளர்களுக்கு காமராஜர் சொன்ன அறிவுரை!

April 13, 2010 by envazhi  
Filed under நட்புடன்

பத்திரிகையாளர்களுக்கு காமராஜர் சொன்ன அறிவுரை!

சொத்து சுகம் நாடார்

சொந்தந்தனை நாடார்

பொன்னென்றும் நாடார்

பொருள் நாடார்

தான்பிறந்த அன்னையையும் நாடார்

ஆசைதனை நாடார்

நாடொன்றே நாடித் – தன்

நலமொன்றும் நாடாத

நாடாரை நாடென்றார்

-பெருந்தலைவர் காமராஜர் பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள் இவை. இந்த வரிகளுக்கு ஒரு விளக்கவுரை எழுதியதுபோல, விகடன் இந்த வாரம் பெருந்தலைவர் பற்றிய 25 குறிப்புகளைத் தந்துள்ளது.  அந்தக் கட்டுரை…

னம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்… என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்!

காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு ‘காலா காந்தி’, பெரியாருக்கு ‘பச்சைத் தமிழர்’, காங்கிரஸ்காரர்களுக்கு ‘பெரியவர்’. இன்று வரை பெருந்தலைவர் என்றால் அவரே!

‘இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்’, ‘அப்படி ஏன் சொல்றேன்னேன்’, ‘ரொம்ப தப்புன்னேன்’, ‘அப்பிடித்தானேங்கிறேன்’, ‘அப்ப பாப்போம்’, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!

நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோ டு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!

ரசியலில் அவருக்கு குரு தீரர் சத்திய மூர்த்தி. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜ் இருக்க… செயலாளராகச் செயல்பட சத்தியமூர்த்தி மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்!

ன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்!

மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

சினிமா அவருக்குப் பிடிக்காது. ‘ஒளவையார்’ விரும்பிப் பார்த்திருக்கிறார். ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படத்தைப் போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அவர் கடைசியாகப் பார்த்த படம் ‘சினிமா பைத்தியம்’!

சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், ‘கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க’ என்று வாங்க மறுப்பார்!

கன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. ‘நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு’ என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!

ந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். ‘நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?’ என்று கமென்ட் அடித்தார்!

ரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். ‘கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

த்திரிகையாளர்களுக்கு அவரது அறிவுரை… ‘ஒண்ணு, நீங்க பத்திரிகைக்காரனா இருங்க. அல்லது அரசியல்வாதியாவோ பிசினஸ்மேனாவோ இருங்க. மூணாகவும் இருக்க முயற்சி பண்ணாதீங்க!’

மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற ‘கே.பிளான்’ போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். ‘எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்’ என்றார்!

ங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்!

வரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். ‘இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று மட்டுமேசொல்லி விட்டு இறங்கினார்!

நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்!

டிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்!

றாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!’ என்று அவரது அறிவாற்றலை மெச்சினார் ஆர்.வெங்கட்ராமன்!

தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!

னது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

‘தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை’ – காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!

விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். ‘இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!’ என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.

கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!

ன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

ன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, ‘டாக்டர் வந்தா எழுப்பு… விளக்கை அணைச்சிட்டுப் போ’ என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!

-ஆனந்த விகடன்

மக்களையும் என் ரசிகர்களையும் கைவிட மாட்டேன்! – விஜய் திடீர் பேட்டி

April 9, 2010 by envazhi  
Filed under Cinema

அரசியலுக்காக என்னைத் தயார்ப்படுத்தி வருகிறேன்! – நடிகர் விஜய்

சென்னை: “மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அவர்களுக்காக நேரடியாக களத்தில் இறங்கி போராடுவேன். என் உயிரினும் மேலான தமிழ் மக்களையும், என்னை நம்பி என் வழியை பின்பற்றும் என் ரசிகர்களையும் கைவிட மாட்டேன்…” என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

மேலும், அரசியலுக்கு, தன்னை தயார்படுத்தி வருவதாகவும், மக்கள் விரும்பும்போது, களத்தில் இறங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

மலையாளத்தில் வெளிவந்த பாடிகார்ட் என்ற படம் தமிழில் தயாராகிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில், விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். சித்திக் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் அருகில் உள்ள திருவிடைமருதூரில் சில தினங்களுக்கு முன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து விஜய்-அசின் பங்குபெற்ற போட்டி நடனக்காட்சி, காரைக்குடியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள செம்மண் பூமியில் படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பு இடைவேளையில் விஜய், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு விஜய் அளித்த பதில்களும்:

சுறா எப்போது வரும்?

இம்மாத இறுதியில் வெளிவருகிறது.

மீண்டும் அசினுடன் நடிப்பது பற்றி…

நானும் அசினும் இதற்கு முன் இணைந்து நடித்த சிவகாசி, போக்கிரி இரண்டுமே பெரும் வெற்றி பெற்றவை. இந்த முறையும் ரசிகர்களுக்கு பெரும் விருந்து காத்திருக்கிறது.

உங்கள் மக்கள் இயக்கம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது?

மக்கள் இயக்கம் தொடங்கியதே தமிழகம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு நற்பணிகள் செய்வதற்குத்தான். வீதிதோறும் இறங்கி வேலை செய்ய ரசிகர்களுக்கு ஒரு அடையாள அட்டை தேவைப்பட்டது. கம்ப்யூட்டர்கள் வழங்குதல், ஏழைகளுக்கு இலவச திருமணம் என்று பல்வேறு பணிகளை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

இத்தகைய நற்பணிகளை விளம்பரப்படுத்தவோ, வெளிச்சப்படுத்தவோ நான் விரும்பாததால், அது ஒரு மவுன புரட்சியாக நாளுக்கு நாள் வேகத்துடன் நடந்து வருகிறது. மாதம் ஒருமுறை மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் செய்து கொண்டுதான் இருக்கிறேன். கடந்த மாதம் கூட திருச்சியில் 24 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தேன்.

விவேகானந்தர் சொன்னது போல….

உங்கள் இயக்கத்துக்கு எந்த மாதிரியான இளைஞர்களை எதிர்பார்க்கிறீர்கள்?

“உண்மையான உணர்வுள்ள நூறு இளைஞர்கள் என்னுடன் வாருங்கள். இந்தியாவையே மாற்றிக்காட்டுகிறேன்” என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அந்த பேச்சின் வலிமை, தன்னம்பிக்கை எனக்கு பிடித்த விஷயம். அதே பாணியில்தான் உண்மையான உணர்வுள்ள, சமூக அக்கறை கொண்ட துடிப்பான இளைஞர்களை என் மக்கள் இயக்கத்துக்கு எதிர்பார்க்கிறேன்.

அரசியலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன்…

நீங்கள் அரசியலுக்கு வருவது தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அதனால் உங்களை நம்பி வந்த ரசிகர்களை ஏமாற்றி விடுவீர்களோ என்ற அச்சம் உள்ளதே?

நான் எந்த பணியில் ஈடுபட்டாலும் நூறு சதவீதம் முழுமையாக ஈடுபடுவேன். எல்லாவற்றுக்கும் காலமும், சூழலும் முக்கியம் இல்லையா? அரசியல், ஆரவாரமான அலைகள் வீசும் பெருங்கடல். அதில் நீந்தி கரை சேர வேண்டும் என்றால் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு என்னை நான் தயார்படுத்தி வருகிறேன். அதற்கான அரசியல் பாடம் பயின்று என் இயக்கத்தினரையும் தயார்படுத்தி வருகிறேன். எப்போதும் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். அதை பலப்படுத்துவதில்தான் என் முழு கவனமும் உள்ளது.

விஜய் அரசியலுக்கு வந்தால், நன்றாக இருக்கும் என்று மக்கள் விரும்பும்போது, கண்டிப்பாக களத்தில் இறங்கி களப்பணி ஆற்றுவேன். நான் ஒரு முடிவெடுத்தால், அந்த முடிவை நான் நினைச்சாக்கூட மாத்திக்க மாட்டேன். இது, சினிமா வசனம் மட்டுமல்ல. நிஜமும் அப்படித்தான்.

நடிகனாக வேண்டும் என்று முடிவெடுத்து அதில் உறுதியாக இருந்ததால்தான் இன்று உங்கள் முன்னாள் நிற்கிறேன்.

களத்தில் இறங்கி போராட தயார்

மக்களுக்கு பிரச்சினை என்றால் குரல் கொடுப்பதுடன், மக்களுக்காக முன்னின்று போராடவும் தயங்கமாட்டேன் என்று முன்பு கூறினீர்களே?

அதில் எந்தவித மாற்றமும் இல்லை. என்னை உயரத்தில் உட்காரவைத்து அழகு பார்த்த அருமை மக்களுக்காக, போராட எப்போதும் நான் தயார்நிலையில் இருக்கிறேன்.

என்னை ஒரு சகோதரனாக, மாணவ சமுதாயத்தினர் ஒரு சக மாணவனாக, பெரியோர்-தாய்மார்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக, குடும்பத்தில் ஒருவனாக என்னை நேசிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அவர்களுக்காக நேரடியாக களத்தில் இறங்கி போராடுவேன். மீண்டும் சொல்கிறேன், என் உயிரினும் மேலான தமிழ் மக்களையும், என்னை நம்பி என் வழியை பின்பற்றும் என் ரசிகர்களையும் கைவிட மாட்டேன்…,”என்றார் விஜய்.

பேட்டியின்போது அவரது மக்கள் தொடர்பாளர் பி டி செல்வகுமார் உடனிருந்தார்.

குறிப்பு: இந்தப் பேட்டியை காரைக்குடி நிருபர்களுக்கு விஜய் அளித்துள்ளார். எனவே சென்னையில் உள்ளவர்களுக்காக டைப் செய்து அனுப்பி வைத்துள்ளார் விஜய்யின் பிஆர்ஓ  பிடி செல்வகுமார்.

எல்லோரும் விரும்பும் ‘மாலை’!

March 29, 2010 by envazhi  
Filed under Cartoon

எல்லோரும் விரும்பும் ‘மாலை’!

Courtesy: தினமணி

மேடையில் வரம்பு மீறும் விஐபிகள்!

மேடையில் வரம்பு மீறும் விஐபிகள்!


மேடையும் பேச்சும் தமிழக விஐபிக்களின் இரு கண்கள். பேசிப் பேசியே ஆட்சியைப் பிடித்தவர்களல்லவா…

ஆனால் இந்த விஐபிக்கள்-அது திரையுலகமோ, அரசியலோ, ஆன்மீகமோ-மேடையில் பேசுவதும் நடந்து கொள்வதும் பல நேரங்களில் வரம்பு மீறி முகம் சுளிக்க வைக்கின்றன.

முன்பெல்லாம் அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் பேச்சு வரம்பு மீறிப் போவதாக உணர்ந்தால் பெருந்தலைவர் காமராஜர், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் போன்றவர்கள் குறிப்பிட்ட பேச்சாளரை ஒரு தட்டுத் தட்டி அமர வைத்த சம்பவங்களை கேட்டும், பார்த்தும் இருக்கிறோம்.

ஆனால் நிலைமை இன்று அப்படியா… வெற்றி கொண்டான்களும் எஸ்எஸ் சந்திரன்களும் எந்த கட்டுப்பாடுகளுமின்றி கண்டபடி பேசித் திரிவதைப் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம்.

திரையுலக மேடைகளிலோ கேட்கவே வேண்டாம்…

விசி குகநாதன் என்ற நபர் சமீபத்தில் ஒரு மேடையில் இப்படிப் பேசினார்:

“நமீதா எல்லா மேடைகளிலும் தவறாமல் தரிசனம் தரவேண்டும். அவரைப் பார்த்தாலே தனி கிக்தான். அதனால்தான் எல்லா தயாரிப்பாளர்களும் அவரைப் போட வேண்டும் என விரும்புகிறார்கள்…” என்றார்.

தமிழ் அரைகுறையாகத் தெரிந்த நமீதாவே நெளிந்தார் என்றால் மற்ற, மனசாட்சி உள்ளவர்களின் நிலை என்னவாக இருக்கும்… ஆனால் கொடுமை பாருங்கள்… இவர் ஃபெப்ஸியின் தலைவர், முதல்வருக்கு வேண்டியவர். முதல்வர் தந்துள்ள வீடுகளை நடிகர் நடிகைகளுக்கு ஒதுக்கித் தரும் பொறுப்பிலிருப்பவர்! இதில் நடிகைகளின் கற்பு பற்றி வாய் கிழிய பேச்சு வேறு!

விஜய் டிவி விருது வழங்கும் விழாவில், சிக்கென்ற உடையில் விருது பெற வந்தார் சினேகா. அவருக்கு விருது தர வந்த பார்த்திபன் இப்படிச் சொன்னார்… “சினேகாவைப் பார்த்தால் ஒரு பொண்டாட்டி ஃபீல் வரும்… ஏன் பொண்டாட்டியாவே வெச்சுலாம்னு தோணும்…” என்று கூற, மேடையிலிருந்து திட்டிக் கொண்டே இறங்கினார் அந்தப் பெண்.

பல மேடைகளில் இத்தகைய காட்சிகளைப் பார்த்து வந்தாலும், நேற்று ரெட்டச் சுழி ஆடியோ வெளியீட்டில் திரையுலக ஜாம்பவான்கள் என்று சொல்லிக் கொண்ட சிலர் வழிந்த வழிசல் மகா கேவலம்.

ஒரு அழகான பெண் மேடையில் இருக்கிறார் என்பதற்காக இப்படியெல்லாமா உளறுவது? ஆங்கிலத்தில் Demonstration Effect என்பதற்கு சரியான அர்த்தம் இதுதான் போலிருக்கிறது!

முன்னாள் உலக அழகியும், இந்தியாவின் பெரும் பொருட்செலவில் உருவாகும் படமான எந்திரனின் நாயகியுமான ஐஸ்வர்யா ராய்தான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்.

அவரைப் புகழ்வதாகக் கூறிக் கொண்டு, இயக்குநர் – நடிகர் – எழுத்தாளர் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் பார்த்திபன் பேசியது இது:

“சுமாரா ஒரு பொண்ணு வந்தாலே ஐஸ்வர்ய ராய் மாதிரி அழகா இருக்கான்னு சொல்லுவேன். ஐஸ்வர்யா ராயே இங்கு வந்திருக்கிறார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு சுனாமியே ஸ்டேஜ்ல வந்து உட்கார்ந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராய் சிரிக்கும்போது கன்னத்தில் விழுகிற கன்னக்குழியை ரெட்டைச்சுழி என்றும் சொல்லலாம்…

“விழா அழைப்பிதழில் ஆடியோ சி.டி.,யை ஐஸ்வர்யா ராய் வெளியிட வைரமுத்து பெற்றுக் கொள்வார் என்று போட்டிருந்தார்கள்.

நாங்களும் அவர் எப்போ பெற்றுக் கொள்வார்… பெற்றுக் கொள்வார் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த 50 கே.ஜி. தாஜமஹால் குட்டி போட்டால் அந்த குட்டி 5 கிலோ தாஜ்மஹாலாகவாவது இருக்கும் அல்லவா? அந்த குட்டி எப்போன்னுதான் எதிர்பார்த்திட்டு இருக்கோம்…”

-இந்த கருமத்துக்கு ரசிக மகா ஜனங்களின் கைத்தட்டல் வேறு!

இவருக்குப் பிறகு ஐஸ்வர்யா ராயை பாராட்டிப் பேச வந்தவர் கே பாலச்சந்தர். அவர் பேச்சைப் பாருங்கள்:

“ஐஸ்வர்யாவுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்தது சந்தோஷமாக இருந்தது. அவரது அழகை ஆராதித்தேன். இந்த கிழவனுக்கு என்ன இப்படியொரு ஆசைன்னு நினைக்காதீங்க. அழகை ஆராதிக்க வயசு ஏது? ஆனா… ஆராதிக்கிறதோட நிறுத்திக்கணும்…”

பாரதிராஜாவோ, “என்னுடைய சீட்டை ஐஸ்வர்யா ராய் பக்கத்துல போடாம தள்ளிப் போட்டுட்டாங்களே..” என்று ஆ…தங்கப்பட்டார்.

வைரமுத்து பேசும்போது, “ஐஸ்வர்யா ராயை கண்ணியமாகப் பார்க்க வேண்டும்” என்று ஆரம்பித்தார். அட என்று நிமிர்வதற்குள், பார்த்திபன் பாணிக்குப் போய்விட்டிருந்தார்…

“ஐஸ்வர்யா ராயின் கூந்தல் அழகா, நெற்றி அழகா, கன்னம் அழகா, இதழ் அழகா, கழுத்து அழகா (அதுக்கும் கீழே இறங்கித் தொலைப்பாரோ என்ற சங்கடம்…), இடை அழகா… கால்கள் அழகா… என்று பார்க்கையில், அவரது கண்ணியம்தான் அழகு” என்றார்.

அந்த ‘அழகு’ உங்களிடம் இல்லையேப்பா…. வயதுக்கு தரப்படும் சலுகையை இப்படியா துஷ்பிரயோகம் செய்வது!

அது சரி… இதற்கெல்லாம் மேடையிலிருந்த ஐஸ்வர்யாவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?

“பாரதிராஜா – பாலச்சந்தர் போன்ற ஜாம்பவான்கள் மத்தியில் நான் இருப்பதே எனக்குப் பெருமை” என்றார்.

தமிழ் தெரியாதது அவருக்கு எவ்வளவு வசதி பாருங்கள்!

-வினோ

ஓய்வு பெறுவது எனது சொந்த விஷயம்! -முதல்வர் கருணாநிதி

February 15, 2010 by envazhi  
Filed under General

எனக்குப் பிடித்த ‘ரெட் அண்ட் பிளாக்’!- பாராட்டு விழாவில் கருணாநிதி பேச்சு

சென்னை: ஓய்வெடுப்பது எனது சொந்த விஷயம். அதை நான் எந்த தேதியிலே, எப்போது, எந்த சூழ்நிலையிலே அறிவிப்பேன் என்பது வேறு விவகாரம், என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

அமைச்சர் துரைமுருகனைத் தலைவராகவும் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனை செயலாளராகவும் கொண்ட சங்கத் தமிழ்ப் பேரவை சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ‘நன்றிப் பெருவிழா-நற்றமிழ்த் திருவிழா’ நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது முதல் இதுவரையிலே நடந்த விழாக்களில் இது தலைசிறந்த விழா என்பதை நான் கூற விரும்புகிறேன்.

இந்த விழாவில் நான் காலையிலிருந்து இதுவரையிலே நீண்ட நேரம் தொடர்ந்து கலந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால் கடந்த ஆண்டு இந்த விழாவில் நான் பெற்ற பாடம் எனக்கு நினைவு இருப்பது மாத்திரமல்ல, என்னை அச்சுறுத்திக்கொண்டும் இருக்கிறது. இதே நாளில் கடந்த ஆண்டு ஏறத்தாழ பத்து மணி நேரத்திற்கு மேலாக – ஜெகத்ரட்சகனும், துரைமுருகனும் நடத்திய அந்த விழாவிலே அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்ணுற்று – அன்றிரவே முதுகெலும்பு நோயினால் தாக்குண்டு அறுவை சிகிச்சை முடிந்து சரியாக இன்றைக்கு ஓராண்டு காலம் ஆகிறது.

யாராவது நினைப்பார்களா? மீண்டும் இந்த விழாவிலே கலந்துகொண்டு இவ்வளவு நேரம் செலவழிக்கலாம் என்று யாராவது நினைப்பார்களா? என்னை தவிர வேறு யாருக்காவது இந்த துணிவு ஏற்படுமா என்றால், எனக்கு ஏற்பட்ட துணிவுக்கு காரணமே, இங்கே தமிழைப் பருகலாம் – தமிழ்ச் சுவையை அருந்தலாம் என்ற அந்த நம்பிக்கையோடு தான் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் – மாலையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் என்னை நான் ஈடுபடுத்திக்கொண்டு உங்களோடு ஒருவனாக இருக்கின்ற அந்த பெரும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

என் பிராண்ட் ‘ரெட் அண்ட் பிளாக்…’

துரைமுருகனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேட்டதாக இங்கே ரஜினியே சொன்னார்கள். உங்களைப் பார்த்தால் ஒரு மாதிரியாக தெரிகிறதே, சாப்பிடுவீர்களா? என்ன ‘பிராண்ட்’? பிளாக் லேபிளா? ரெட் லேபிளா? என்றெல்லாம் கேட்டதாக இங்கே சொன்னார்.

துரைமுருகன் அவருக்கு சொல்லியிருக்க வேண்டிய பதில் எனக்கு தெரியும். ‘ரெட் அண்ட் பிளாக்’தான் எனக்கு பிடிக்கும் என்று சொல்லியிருக்க வேண்டும். இங்கே கூடியிருக்கின்ற பலருக்கு இது புரியும். “நான் மாத்திரமல்ல – எங்கள் தலைவரே விரும்புவது ரெட் அண்ட் பிளாக்தான்’ என்று துரைமுருகன் தைரியமாகச் சொல்லியிருக்க வேண்டும்.

அதற்காக ரஜினிகாந்த் ஒன்றும் வருத்தப்படமாட்டார். ஏனென்றால் அவர் கேட்டதற்கு நாம் சொல்லுகின்ற சரியான பதில் அதுதான். உண்மையான பதில் அதுதான். அந்த பதிலை நான் இங்கே விவரிப்பதற்கு காரணம் இன்றைக்கு தமிழ்நாட்டில் ‘ரெட் அண்ட் ப்ளாக்’ – கொடியானாலும், சின்னமானாலும் கிட்டத்தட்ட ஐம்பது அல்லது அறுபதாண்டு காலமாக மக்களுடைய மனதிலே பதிந்துவிட்ட ஒன்றாகும்.

இன்னும் சொல்லப்போனால் திராவிட இயக்கத்தின் கொடி – சிவப்பு, கறுப்பாக இன்றைக்கு அமைந்திருப்பதற்கு காரணம் – பெரியாரின் திராவிடர் கழகத்தின் கொடியே – கறுப்பு சிவப்பாக அமைந்தது. நடுவிலே வட்டமான சிவப்பும், சுற்றிலும் கறுப்பும் திராவிடர் கழகத்தின் கொடி.

இந்த கொடி பரவாயில்லையா என்று பெரியார் கேட்டு – படம் வரைந்து – அவருடைய அலுவலகத்திலே பணிபுரிந்து கொண்டிருந்த எங்களைப் போன்றவர்களையெல்லாம் கேட்டபோது – ‘நாங்கள் நன்றாக இருக்கிறது, இதையே ஏற்றுக்கொள்ளலாம்’ என்று அவரிடத்திலே சொன்னோம். அப்படி ஒப்புதல் வழங்கிய போது நேரம் இரவு மணி 2.

அதெல்லாம் என்னுடைய ரத்தம்தான்…

அதற்கு பிறகு அதைச் சித்திரமாக வரைவதற்கு – ஓவியர் யாரும் இல்லை. எப்படி கறுப்பையும், சிவப்பையும் வரைந்து காட்டி காலையிலே அய்யாவிடத்திலே சென்று ஒப்புதல் பெறுவது என்று யோசித்த போது தான் – நான் சிவப்பு வண்ணத்திற்காக தேடித்தேடி – அந்த அலுவலகத்தில் அந்த நேரத்தில் சிவப்பு வண்ணம் கிடைக்காமல் – சிவப்பு வண்ணம் இருந்த மேஜையை மேலாளர் அரிவரத சாமி பூட்டிக் கொண்டு போய்விடவே – என்ன செய்வதென்று கேட்ட போது – பயப்பட வேண்டாம், ஒரு ஊசி கொடுங்கள் என்று கேட்டு – ஒரு ஊசியால் என்னுடைய விரலை குத்தி, அதிலேயிருந்து ரத்தத்தை எடுத்து சிவப்பு வண்ணத்திற்கு பதிலாக கொடுத்து அந்த கொடியை அன்றைக்கு உருவாக்கினோம்.

அதனுடைய விரிவாக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி. இன்றைக்கு தமிழ்நாட்டிலே இருக்கின்ற ‘திராவிட’ என்கிற சொல்லை சேர்த்துக் கொண்டிருக்கின்ற எந்த கட்சியின் கொடியிலும் – காணப்படுகின்ற சிவப்பு இருக்கிறதே, அது என்னுடைய ரத்தம்தான் என்பதை அவர்களுக்கெல்லாம் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

வயிற்றெரிச்சல்காரர்கள்…

அதனால் தான் துரைமுருகனுக்கு சிலர் மீது வந்த கோபத்தைப் போல எனக்கு கோபம் வரவில்லை. அவர் சொன்னார் – இந்த விழாவை நாங்கள் நடத்துவதற்கு காரணமே – இதைப் பார்த்து வயிற்றெரிச்சல்காரர்கள் மேலும் வயிற்றெரிச்சல் படட்டும் என்று சொன்னார். வயிறு மட்டுமே இருப்பவர்கள் எரிச்சல் கொள்வதிலே தவறு இல்லை.

இதை துரைமுருகன் பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. மனம் இருந்தால் மன எரிச்சல் – நெஞ்செரிச்சல் ஏற்படும். வயிறு மாத்திரம் இருப்பவர்களுக்கு வயிற்றெரிச்சல் ஏற்படும் என்றால், அதற்காக நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

ஓய்வெடுப்பதற்கா பாராட்டு விழா?

ஒரு பாராட்டு விழா நடத்துகிறீர்கள் என்றால் என்னை தூக்கி இன்னொரு சிம்மாசனத்திலே வைப்பதற்காக அல்ல. நான் இதுவரையில் ஆற்றிய பணியை மேலும் ஆக்கப்பூர்வமாக, பரவலாக மக்களுக்கு பயன்படுகின்ற வகையில் உறுதியாக நாம் நடைமுறைப்படுத்துவதற்காக இந்த பாராட்டு விழாவே தவிர, இந்த பாராட்டு விழாவை நடத்தி ‘நீ ஆக்கிய, நீ செய்த நற்செயல்களுக்கெல்லாம் நாங்கள் இந்த பரிசை அளித்து விட்டோம்’ என்று என்னை ஓய்வெடுக்கச் சொல்வதற்காக அல்ல.

ஓய்வெடுத்துக் கொள்வது என்பது என்னுடைய சொந்த விஷயம். அதை நான் எந்த தேதியிலே, எப்போது, எந்த சூழ்நிலையிலே அறிவிப்பேன் என்பது வேறு விவகாரம்.

ஆனால் தமிழ்நாட்டில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற உணர்வுகளை – எண்ணங்களை நான் கடந்த 1967-ம் ஆண்டிலிருந்து அண்ணாவின் தலைமையிலே நான் ஆற்றிய பணியானாலும், அவர் இந்த நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயரிட்டாரே, அந்த நிலையானாலும் – அவர் சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக ஆக்கித் தந்தாரே, அந்த நிகழ்வானாலும் – அவருக்கு பிறகு அவருடைய கொள்கையிலே தொடர்ந்து அவருடைய லட்சியங்களைத் தொடர்ந்து சிந்தாமல், சிதறாமல் ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்ற அந்த உறுதியோடு நாம் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த பயணத்தில் இன்னும் வேகம் வேண்டும், இன்னும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் வேண்டும், இன்னும் பரவலாக நம்முடைய பணி தொடர வேண்டும் என்று என்னை உசுப்பிவிடுவதற்காகத் தான் இந்த பாராட்டு விழா என்று நான் கருதுகிறேனேயல்லாமல் நான் இதுவரையிலே புரிந்துள்ள சாதனைகள், போதும் போதும் என்று அறிவிப்பதற்காக அல்ல.

இவைகளை மேலும் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை நான் மிகமிக நன்றாக உணருகின்றேன். எனக்கு தம்பியுடையான் என்ற படை வரிசையிலே ஒருவராக இருக்கின்ற ஜெகத் ஆனாலும், அதைப் போலவே துரைமுருகன் ஆனாலும் படாதபாடுபட்டு – பகல் இரவு பாராமல் இந்த மண்டபத்தை இந்த அளவிற்கு ஜோடித்து – அவர்களுடைய ஜோடனை சரியாக இருக்கிறதா என்று நான் முதல் நாளே வந்து பார்க்க வேண்டுமென்று என்னை நேற்றிரவு அழைத்து வந்து – இந்த அலங்காரங்களையெல்லாம் காட்டி மகிழ்ந்தார்களே என்ன காரணம்? அண்ணனுக்கு இந்த மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவா? அல்ல.

கண்ணியம் முக்கியம்…

இந்த மகிழ்ச்சியால் மேலும் அவர் இயக்கப் பணிகளில் தொடர்ந்து வேகமாக நடைபோட வேண்டும், விறுவிறுப்பாக நடைபோட வேண்டும் என்பதற்காகத் தான் என்று நான் கருதுகிறேன். அதே நேரத்தில் நான் மாத்திரம் இந்த இயக்கத்திலே வேகமாக – விறுவிறுப்பாக நடை போட்டால் போதாது.

இந்த இயக்கத்திலே இருக்கிற முன்னோடிகள் அனைவரும் நம்முடைய தளபதிகள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருக்கின்ற அமைச்சர்களானாலும், பாராளுமன்ற உறுப்பினர்களானாலும், பேரவை உறுப்பினர்கள் ஆனாலும் அவர்கள் எல்லாம் அத்தகைய ஒழுங்கு முறையோடு உறுதியோடு இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்க வேண்டும். இது தான் நம்முடைய உயிர் மூச்சு என்ற அந்த ஆர்வத்தோடு நடைபோட வேண்டும்.

தொடர்ந்து நடைபோடுவோம் – இன்னும் வேகமாக நடைபோடுவோம் – விவேகமாக நடைபோடுவோம் – கண்ணியத்தோடு நடை போடுவோம் – கடமையை மறக்காமல் நடை போடுவோம் – என்று உங்களையெல்லாம் என்னோடு சேர்த்து அழைத்துக்கொண்டு இந்த பயணத்தை மேற்கொள்கிறேன் என்று கூறி அந்த பயணத்திற்கு துணையாக மேடையிலே இருக்கின்ற சூப்பர் ஸ்டார் ஆனாலும் – கலைஞானி ஆனாலும் – மற்ற கலைஞர்கள் ஆனாலும் – எதிரே இருக்கின்ற நீங்கள் அத்தனை பேரும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்…” என்றார் முதல்வர் கருணாநிதி.

‘இழிவுபடுத்தியவனுக்கு மன்னிப்பு.. எதிர்த்துப் போராடியவனுக்கு சிறையா?’ – சீமான்

February 7, 2010 by envazhi  
Filed under General

ஜெயராமுக்கு மன்னிப்பு.. எங்களுக்கு சிறையா? – சீமான் கொதிப்பு

சென்னை: வீரத்திலும் அறிவிலும் உலகத்திற்கே முன் மாதிரியாகத் திகழும் தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்திப் பேசியிருக்கின்றார் ஜெயராம். அவருக்கு மன்னிப்பு, அதை எதிர்த்துப் போராடிய எங்களுக்கு சிறையா? என்று ஆவேசமாக கேட்டுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்.

சீமான் மீது இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வன்முறையைத் தூண்டியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கை:

மலையாள நடிகர் ஜெயராம் வீரத்திலும் அறிவிலும் உலகத்திற்கே முன் மாதிரியாகத் திகழும் தமிழ்ப்பெண்களை இழிவுபடுத்திப் பேசியிருக்கின்றார். இது ஒட்டு மொத்த தமிழினத்தையும் இழிவு படுத்தும் செயலாகும்.

இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத் தமிழர்கள் 12 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது போடப்பட்ட வழக்கில் அவர்கள் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்து வெற்றியுடன் வெளி வருவார்கள்.

இந்த நிலையில் வன்முறையைத் தூண்டியதாக தமிழக அரசு இன்று என் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது என்னை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடுக்கப்பட்டுள்ள வழக்காகும்.

இந்த விஷயத்தில் வன்முறையைத் தூண்டியது நானா? மலையாள நடிகர் ஜெயராமா? என்பது உலகிற்குத் தெரியும்.

உணர்வுப்பூர்வமான ஒரு விஷயத்தில் மிகவும் இழிவாக ஒரு கருத்தைச் சொல்லி விட்டு அதன் பின்பு உலகம்

முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியவுடனும் அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டவுடனும் நடிகர் ஜெயராம் மன்னிப்புக் கோரி உள்ளார்.

உணர்வுள்ள தமிழர்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கா விட்டால் இந்நேரம் அவர் கருத்து வரலாற்றில் அப்படியே பதிவாகியிருக்கும். தமிழர்களைப் பற்றிய கருத்து வரலாற்றில் கேட்பாரற்று போயிருக்கும். நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டமே அவர் மன்னிப்பு கேட்டதற்கு காரணம். அவரது பேச்சே அவருக்கு எதிரான இப்படிப்பட்ட செயல்பாட்டிற்குக் காரணம்.

ஆகவே வன்முறையை தூண்டியது நானல்ல. ஜெயராம் தான். வன்முறையை நான் எப்போதுமே விரும்பியது இல்லை. அவர் மீது தான் தமிழக அரசு வழக்குத் தொடுக்க வேண்டும். அவரது காலம் கடந்த மன்னிப்பு பிரச்சினைக்குத் தீர்வாகாது. அவருக்கு மன்னிப்பும் நாம் இயக்கத்தவர் மீது சிறை என்பதும் மோசடியான ஒன்று.

மன்னிப்பு தான் பிரச்சினைக்குத் தீர்வென்றால் கொடும் குற்றம் இழைக்கும் ஏனைய குற்றவாளிகள் விஷயத்திலும் தமிழக அரசு இதனைப்பரீசிலிக்குமா? மற்றபடி என்மீது போடப்பட்ட வழக்கு கண்டு நான் பயப்படவில்லை.

இயக்கத்தின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் போடப்பட்டுள்ளது. அதனைக் கண்டு அச்சப்பட மாட்டேன். எதிர்த்து வழக்காடி வெளி வருவேன்” என்று கூறியுள்ளார் சீமான்.

இதுகுறித்து சீமானிடம் இன்று பேசினோம்.

அவர் கூறுகையில், “நான் வன்முறையைத் தூண்டவில்லை. இயக்கத் தோழர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை நீதிமன்றத்தில் பேசிக் கொள்ளலாம். நான் இங்கே ஒரு விஷயத்தை முன் வைக்க விரும்புகிறேன்.

திமுக உள்ளிட்ட தமிழகத்து அரசியல் கட்சிகளின் தோழர்கள் வன்முறையில் ஈடுபடும்போது, அவர்கள் செய்த செயலுக்காக அந்தந்த கட்சித் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா… இதைக் கவனிக்க வேண்டும். என்னை ஒடுக்குவதுதான் இவர்கள் நோக்கம்.

அதற்காக நான் வன்முறைக்கு வக்காலத்து வாங்கவில்லை. அது தவறான வழிமுறை என்று எங்களுக்கும் தெரியும். ஆனால் ஜெயராம் வீடு தாக்குதலுக்குள்ளானதன் காரணம், வன்முறையை விட மகா மோசமான அவரது பேச்சு. அதைக் கண்டிக்க வக்கில்லை… அப்படியெனில் எவன் வேண்டுமானாலும் தமிழ் பெண்களைப் பற்றி, நம் அம்மா, அக்கா, தங்கைகளைப் பற்றி என்னவேண்டுமானும் சொல்லட்டும்.. நமக்கென்ன, சினிமாதானே என்று சிரித்துக் கொண்டே போகலாமா?

வழக்கு வரட்டும்… இந்த சீமான் சலசலப்புகளுக்கு அஞ்சமாட்டான். எங்கள் இயக்கத்தை வன்முறை இயக்கம் போல சித்தரிக்க நடத்தும் சூழ்ச்சியின் இன்னொரு கட்டம். இதையும் வெற்றிகொள்வேன்…” என்றார் உணர்ச்சிகரமாக.

வழக்கு வாபஸ்…

இதற்கிடையே ஜெயராம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் அவர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுவிட்டதாக மனித உரிமை அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் அறிவித்துள்ளன.

சீமான் மீது வழக்கு கூடாது!- வைகோ

சீமான் மீதான வழக்கு தவறானது… அதனை உடனே வாபஸ் பெற வேண்டும் தமிழக அரசு என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“சினிமா நடிகர் ஜெயராம் ஒரு பேட்டியில், தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் கூறியது கண்டனத்துக்கு உரியதாகும். அதிலும், வீட்டு வேலை பார்க்கும் தமிழ் பெண்களை ஏளனம் செய்து அவமதிக்கும் விதத்தில் வார்த்தைகளைக் கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இருப்பினும், தன் தவறை உணர்ந்து பகிரங்கமாக அவர் மன்னிப்பு கேட்டுவிட்டதால் பிரச்சினையை இத்துடன் விட்டு விடலாம்.

நடிகர் ஜெயராம் கூறிய வார்த்தைகளால் ஆத்திரமுற்ற இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளாமல், கைதானவர்களையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். சீமான் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அடடே… அசத்தல்!

February 1, 2010 by envazhi  
Filed under Cartoon

நல்ல வேளை.. மகாத்மா நினைவு நாளுக்கு லீவ் விடலை!

மீப நாட்களில் தினமணியில் வந்த சிறந்த கார்ட்டூன்களில் சில உங்கள் பார்வைக்கு. நூறு பக்கம் கட்டுரைகள் எழுதினாலும் இதைவிட நாசூக்காக யாராலும் விஷயத்தைச் சொல்ல முடியாது…!

நன்றி: மதி, தினமணி

Related Posts with Thumbnails