ஸ்வைன்ப்ளூ… ஆறுதல் தரும் நோவார்ட்டிஸ்!
Friday, June 12, 2009 at 2:30 pm | 185 views
பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்புமருந்து கண்டுபிடித்தது நோவார்ட்டிஸ்!
பாஸெல்: ஸ்விட்சர்லாந்தின் புகழ்பெற்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனமான நோவார்டிஸ் ஏஜி, H1N1 (ஸ்வைன்ப்ளூ) எனப்படும் பன்றிக் காய்ச்சலுக்கு
முதல் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.
உலக நாடுகள் பலவற்றையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது நோவார்ட்டிஸ் நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு.
பொதுவாக இதுபோன்ற தடுப்பு மருந்துகள் வளர்ந்த கரு முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும். ஆனால் ஸ்வைன் ப்ளூ தடுப்பு மருந்து மட்டும் செல்களிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக நோவார்டிஸ் அறிவித்துள்ளது.
பன்றி்க் காய்ச்சல் என்பது உலகம் முழுக்க பரவியுள்ள வியாதி என நேற்றுதான் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
இன்றைய தேதிக்கு 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பன்றிக் காய்ச்சல் நோயால் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மெக்ஸிகோவில் பரவத் துவங்கிய நோய் இன்றைக்கு இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. ஆனாலும் இந்தியாவில் உரிய நேரத்தில் முறையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
சுகாதார வசதிகள் அதிகமாக இல்லாத ஆப்ரிக்க நாடுகளில் இப்போது H1N1 வெகு வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதால் உலக சுகாதார நிறுவனம் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து புதிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் ஏற்கெனவே ஈடுபட்டிருந்த பல நிறுவனங்கள் அந்த முயற்சிகளை துரிதப்படுத்தின. இவற்றில் முதல் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் நோவார்டிஸ் வெற்றி பெற்றுள்ளது. நோவார்ட்டிஸின் ஜெர்மன் தொழிற்சாலையில் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல மில்லியன் டோஸ் மருந்துகளை அதிவிரைவில் உற்பத்தி செய்யும் வசதி கொண்டது இந்த தொழிற்சாலை என்பதால் உலகம் முழுக்க தடுப்பு மருந்து சப்ளை செய்வது எளிதாக இருக்கும் என கூறப்படுகிறது.
விரைவில் இந்த மருந்தை சோதனை செய்யவுள்ள நோவார்டிஸிடம், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் லட்சக்கணக்கான டோஸ் தடுப்பு மருந்துகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளன.












Well done Novartis!