கச்சத்தீவில் ராணுவ முகாம் அமைக்க முயலும் இலங்கை!
Saturday, June 6, 2009 at 2:13 am | 155 views
கச்சத்தீவில் ராணுவ முகாம் அமைக்க முயலும் இலங்கை!
ராமேஸ்வரம்: இலங்கைக்கு சொந்தமானதா இல்லையா என்று இன்னமும் உறுதி செய்யப்படாத கச்சத்தீவில் நிரந்தர ராணுவம் மற்றும் கடற்படை முகாம் ஒன்றை அமைக்க இலங்கை முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. 
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் சென்று, இலங்கை கடற்படையினரால் துரத்தப்பட்ட தமிழக மீனவர்கள் இத்தகவலைக் கூறியுள்ளனர்.
அப்படி ஒரு ராணுவ முகாம் கச்சத்தீவில் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோய் விடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கச்சத்தீவை தாரை வார்த்தவர்கள்
1974-ல் இந்தியாவால் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது கச்சத்தீவு. இருப்பினும் இந்திய மீனவர்கள் இங்கு தங்களது மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம், ஓய்வு எடுத்துச் செல்லலாம் என இதுதொடர்பான ஒப்பந்தத்தில் ஷரத்து உள்ளது.
ஆனால் இதை இலங்கை அமல்படுத்தியதே இல்லை. கச்சத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, அடித்துத் துன்புறுத்துவது, மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து மிரட்டி அனுப்புவது என ரவுடித்தனம் செய்து வருகிறது.
இப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கச்சத்தீவில் நிரந்தர கடற்படை மற்றும் ராணுவ முகாமை அமைக்க இலங்கை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 30ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் அப்பகுதியில் மீன் பிடிக்கச் சென்றபோது கடற்படையினரால் தாக்கி விரட்டப்பட்டனர்.
அவர்கள்தான் கச்சத்தீவில் ராணுவ முகாம் அமைக்கும் வேலைகள் நடந்து வருவதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கச்சத்தீவுப் பகுதியில் தரையை சமப்படுத்தும் வேலை நடக்கிறது. அங்கு நூற்றுக்கணக்கான கடற்படை வீரர்கள் நடமாட்டம் உள்ளது. இலங்கை கடற்படை கப்பல்களும் காணப்படுகின்றன.
கச்சத்தீவில் ராணுவ முகாம் அமைக்க முயற்சி நடப்பதாக தெரிகிறது. அப்படி அமைந்தால் எங்களுக்கு பெரும் இடையூறாகி விடும். எங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்திய மீனவர்களின் உரிமைகளை முன்பு பறித்த இலங்கை அரசு தற்போது முழுமையாக இந்தியர்களை (தமிழ்நாட்டு மீனவர்களை) அந்தப் பக்கம் கூட வராமல் தடுக்கும் முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
மீனவர்களிடம் தொடரும் அட்டகாசம்…
இந் நிலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் வலைகளைப் பறித்து கிழித்தெறிந்து இலங்கை கடற்படையினர் அட்டகாசம் செய்ததால், மீனவர்கள் பாதியிலேயே கரைக்குத் திரும்பியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படும் அவதி சொல்லி மாளாது. இலங்கையில் போர் முடிந்த பிறகும் கூட தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வருகிறது இலங்கை கடற்படை. இதை கேட்க நாதியில்லை. இந்திய அரசு வழக்கம் போல மெளனமாக இருந்து வருகிறது.
தற்போது இலங்கையில் போர் நின்று விட்டபோதிலும் இலங்கை கடற்படையினரின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், அட்டகாசமும் நின்றபாடில்லை.
45 நாள் மீன் பிடித் தடை நீங்கிய பின்னர் கடந்த 30ம் தேதி முதல் மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். அன்றைய தினம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கி கடற்படையினர் அட்டகாசம் செய்தனர். 12 பேரை பிடித்து விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்து அனுப்பினர்.
நேற்று ராமேசுவரத்தில் இருந்து 800விசைப்படகு களில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த கென்னடி உள்ளிட்ட மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்தபோது அங்கு ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் அவர்கள் படகிற்குள் ஏறினர்.
மீனவர்களை தாக்கிய வலைகளை அறுத்து கடலில் வீசினர். இனி இந்த பகுதிக்கு வந்தால் உயிருடன் திரும்ப மாட்டீர்கள் என்று எச்சரித்தனர்.
இதையடுத்து மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று தொடர்ந்து மீன் பிடிக்காமல் பாதியிலேயே கரை திரும்பினர்.
இலங்கை கடற்படையின் இந்த தொடர் அட்டகாசத்திற்கு என்றுதான் முடிவோ என்று மீனவர்கள் பெரும் குமுறலுடன் உள்ளனர்.












madhdhiyil sonia, chennaiyil kalaignar ivaragalai vaithukondu naam enge poi niyaayathai theduvathu …… tamilargal anaivarum mannodu mannai makki pogum varai ivargalin makkal thondu thodarum……vaazhga thamizhagam valarga jananaayagam jai hind.