இந்திரனே சந்திரனே என்பார்.. அதே வேகத்தில் தூக்கிப்போடுவார்..! – ‘தெளிந்த’ கருணாநிதி
Tuesday, February 9, 2010 at 3:54 am | 2,100 views
‘எச்சமிடும் பறவைகளும் விரட்ட முடியாமல் தவிக்கும் கோபுரக் கலசமும்…’ – முதல்வர் கருணாநிதியின் உள்குத்து இது!
சென்னை : ‘இந்திரனே, சந்திரனே என்றெல்லாம் புகழ்ந்து, தூக்கி நிறுத்துபவர்கள், அதே வேகத்தில் கீழே தூக்கிப் போடுபவர்களாகவும் இருப்பர். இதை மனதில் கொண்டு, அவர்கள் காதருகே பேசும்போதெல்லாம், நீங்கள் செவிடர்களாகவும், மற்றவர்களைப் பற்றி கோள்மூட்டும் போதெல்லாம், ஊமைகளாகிவிடும் விரதத்தை கடைபிடிக்க வேண்டும்’ என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவுக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:
உங்கள் கலைத்துறை வளர்ச்சி எவ்வாறு நிகழ்ந்தது?
எனது 13வது வயதில், 80 பக்க நோட் புத்தகம் ஒன்றில், “செல்வச்சந்திரா’ என்ற கதையை எழுதி, அதை பலரிடமும் படிக்கக் கொடுத்து, அவர்களது பாராட்டைப் பெற்றேன்.
எனது 18 வயதில், அண்ணாதுரையை, திருவாரூரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரைச் சந்திப்பதற்கு முன், நான் எழுதிய, ‘இளமைப்பலி’ என்ற கட்டுரை, ‘திராவிட நாடு’ இதழில் வெளியாகி இருந்தது. என்னை அண்ணாதுரை சந்தித்த போது, ‘கட்டுரை நன்றாக இருந்தது. நீ படிப்பைக் கெடுத்துக் கொண்டு, இப்படி தொடர்ந்து எழுத வேண்டாம். முதலில் நன்றாகப் படி’ என்று சொன்னார். அவர் சொன்னதில், அது ஒன்றைத்தான் நான் கேட்கவில்லை.
‘குண்டலகேசி – மந்திரிகுமாரி’ என்ற தலைப்பில் நான் எழுதிய நாடகம், தேவி நாடக சபை சார்பில், கும்பகோணத்தில் அரங்கேறியது. நாடகத்தைப் பார்த்த மாடர்ன் தியேட்டர் அதிபர் சுந்தரத்திற்கு, அது பிடித்துப் போனதால், “மந்திரிகுமாரி’ திரைப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு கொடுத்தார். அதன்பிறகு, ‘மணமகள்’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி படிப்படியாக, பல நெருக்கடிகளுக்கு இடையே எனது கலைத் துறை வளர்ச்சி நிகழ்ந்தது. இதுவரை 75-க்கு மேற்பட்ட படங்கள் வெற்றிக்கொடி பிடித்தாலும், நான் திரையுலகில் அல்லது கலையுலகில் உச்சகட்டத்தை அடைந்து விட்டதாகக் கருதவில்லை.
அப்படிக் கருதாததால்தான், எவ்வித ஆணவமும், அகம்பாவமும், என்னை அணுகாமல் அடக்க ஒடுக்கமாக, இத்துறையில் இதுவரை நடமாடிக் கொண்டிருக்கிறேன்; இன்னமும் எழுதுகிறேன். அந்த எழுத்து மூலம், வரும் ஊதியத்தை நலிந்தோர்க்கும், நல்ல காரியங்களுக்கும் தொடர்ந்து வழங்கி வருகிறேன். கலைத்துறை வளர்ச்சியின் போது, நான் கற்றுக் கொண்ட அடக்க ஒடுக்கம் என் உணர்வோடு கலந்து விட்டதால், என்னை ஆட்கொண்ட கலைத்துறையும், நான் ஒன்றிக் கலந்து விட்ட அரசியல் துறையும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு, என் வளர்ச்சிக்கு வலிமை வழங்கியுள்ளன.
உசுப்பேத்துவார்கள்… உறவாடிக் கெடுப்பார்கள்!
கலைத்துறை வாழ்வுக்கும், அரசியல் வாழ்வுக்கும் இடையே நீங்கள் கண்ட அல்லது காணுகின்ற வேறுபாடுகள் என்ன? அதிலே வெற்றி காண்பதற்கு உங்கள் அறிவுரை என்ன?
என்னைப் பொறுத்தவரை, இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க, ஒற்றுமை, வேற்றுமைகளை விளக்க விரும்பவில்லை.
ஆனால், எந்த ஒரு துறையானாலும், அந்த துறையில் ஒருவர் முன்னுக்கு வந்துவிட்டால், அவரைச் சுற்றி நான்கைந்து பேர் கூடுவர். அவர்கள் நல்லவர்களாகவும் இருப்பர்; நம்மை உசுப்பிவிட்டு உறவாடிக் கெடுப்பவர்களாகவும் இருப்பர். அவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்திரனே, சந்திரனே என்றெல்லாம் புகழ்ந்து, உங்களைத் தூக்கி நிறுத்துபவர்கள், அதே வேகத்தில் உங்களை கீழே தூக்கிப் போடுபவர்களாகவும் இருப்பர்.
இதை மனதில்கொண்டு, அவர்கள் காதருகே பேசும்போதெல்லாம், நீங்கள் செவிடர்களாகி விட வேண்டும்; மற்றவர்களைப் பற்றி அவர்கள் கோள்மூட்டும் போதெல்லாம், நீங்கள் ஊமைகளாகிவிட வேண்டும்.
இப்படி ஒரு விரதத்தைக் கடைபிடிப்பார்களானால், கலை உலகிலும், அரசியல் வட்டாரத்திலும், பொதுவாழ்வில் உயர்ந்தோர் இடம் உங்களுக்கு கிடைத்தே தீரும்.
இல்லையேல், எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும், எச்சமிடும் பறவைகளை துரத்தவும் முடியாமல், தூக்கி வைத்துக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும், கோபுரக் கலசத்தின் நிலைதான் ஏற்படும்…”
இவ்வாறு அந்த அறிக்கையில் எழுதியுள்ளார் முதல்வர் கருணாநிதி.











அஜித் பேசிய தைரியமான பேச்சு க்கு ரஜினி எழுந்து நின்று கை தட்டி ஊக்குவித்ததை ஒடுக்கும் விதமாக தாக்கும் விதமாக ’’அடக்க ஒடுக்கமாக ’’இருக்கும் படி மறைமுக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
***** சதிஷ்குமார் விஷயம் என்னவென்று தெரியாமலே உளறாத *.. ..*** ***
ஸ்பெக்ற்றம் பணம் ஏதும் கைக்கு வந்து சேரலையா.. சம்பந்தப்பட்டவர் ஏதும் டிமிக்கி கொடுத்துவிட்டாரா? ஏன் இந்த கோபம். இவரை எல்லோரும் புகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்பார்கிறாரா? நல்லது செய்தால் எல்லோரும் புகழ்வார்கள் (நாட்டுக்கு) குடும்பத்துக்கு நல்லதுதானே செய்கிறேன் என்று எதிர் கேள்வி கேட்பார்!!!!
இவ்வளவு ஈழ தமிழர்களை கொலை செய உடந்தையாய் இருந்ததுக்காக ராஜபக்சே இவரை புகழ்ந்துவிட்டு இப்போது கண்டுகொள்ளவில்லை என்று வருத்தமா?