முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

நினைவுகளை மீட்டும் இசை… ஒரு அனுபவம்

Monday, February 8, 2010 at 2:12 am | 1,952 views

நினைவுகளை மீட்டும் இசை… ஒரு அனுபவ தொகுப்பு

ள்ளி நாட்களில்… ஏன் கல்லூரிக்குச் செல்லத் துவங்கியபோதும் கூட, ஏதாவது ஒரு வானொலி நிலையத்தில் சேர்ந்து விட வேண்டும் என்பது என் தீராத ஆசையாக இருந்தது. காரணம் அப்போதெல்லாம், இசை கேட்க ஒரே வழி வானொலிதான். இசை என்றால்.. திரையிசை.. அதிலும் இளையராஜா – எம்எஸ்வி பாடல்கள்.

வானொலியை விட்டால் கல்யாணங்கள், திருவிழாக்களில் ரிக்கார்டு போடுவார்களே அதை சாப்பாடு தூக்கமின்றி கேட்டுக் கொண்டே இருப்பேன். அதிகபட்சம் இரண்டு நாள்தான் இந்த ரிக்கார்டு போடுவார்கள்… அப்புறம் புதிய பாடல்கள் கேட்க முடியாதே.. அதனால் உண்மையிலேயே சாப்பாட்டை மறந்து பாட்டுப் பித்துப் பிடித்துப் போய் திருவிழாக்களில்  அலைந்திருக்கிறோம். அட, பாட்டு கேட்பதற்காகவே ஒரு சவுண்ட் சர்வீஸில் வேலைக்குக் கூட சேர்ந்து கொஞ்சநாள் இருந்திருக்கிறேன்!

வானொலியில் ஞாயிற்றுக்கிழமையானால் நேயர் விருப்பம் என்ற நிகழ்ச்சி போடுவார்கள். அதில் விரும்பிக் கேட்டவர்களின் பெயர்களைப் படித்துவிட்டு, அந்தப் பாடலை ஒளிபரப்புவார்கள் பாருங்கள்… அந்த வேலையில் சேர மனதில் ஒரு வெறியே இருந்தது!

ஆனால் டிடி மெட்ரோ என்ற சேனல் வந்தபிறகு, அதிலும் காம்பியரிங் என்ற பெயரில் கண்டபடி பேச ஆரம்பித்த பிறகு அந்த ஆசை போயே போச். பாட்டு கேட்கவும் நிறைய சாதனங்கள் மலிந்துவிட்டன.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்.. நண்பர் சரவணன் சில பாடல்களைக் குறிப்பிட்டு, அவற்றைத் தொகுத்து பதிவாக வெளியிட விரும்பினார். அவர் விரும்பிய பாடல்களை யு ட்யூபில் தேடி இந்தப் பதிவைத் தயார் செய்தபோது உண்மையிலேயே, அந்த பழைய நாட்களின் ‘வெளியில்’ கொஞ்சநேரம்  மனம் அலைந்துவிட்டுத் திரும்பியது…!

அதிலும் அவர் குறிப்பிட்டிருந்த பாடல்கள்… மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்ட ராஜாவின் தேவ கானங்கள்… அவற்றை தொகுப்பதே தனி இன்பம்தான்.

இனி சரவணன் தன் ரசனையைப் பகிர்ந்து கொள்கிறார்…

-வினோ

சை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது.

நல்ல இசை என்பது, கேட்பவரை மனம் லயிக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் தெரியும்!

அப்படி என் மனம் லயித்த திரைப் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், ‘நினைவுகளை மீட்டும் இசை’ மூலம்…

ஆனந்தக்கும்மி என்று ஒரு படம் அனேகமாக வருடம் 1983-ல் வெளியானது. அந்தப் படம் பலருக்கு இன்று நினைவில் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் பாடல்கள்… காலத்துக்கும் மறக்க முடியாதது!

இந்த படத்தில் வரும் ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..
என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்த பாடல் ‘ஆனந்த கும்மியடி கும்மியடி ….’ என்று பெண்கள் கோரஸ் குரலில் ஆரம்பிக்கும் அது முடிந்தவுடன், தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்திருப்பார் இளையராஜா.

அப்படியே ஒரு அமைதியான கிராமத்தில், நிலவின் ஒளியில் மின்னும் பின்னிரவுக்க, நம்மை இழுத்துச் செல்லும் அந்த இசை.

தொடர்ந்து வரும் பல்லவி,

ஓ வெண்ணிலாவே வா ஓடி வா…

அதற்குப் பின் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு முன்

ஜானகியின் குரலில் வரும் ‘லா லி லா லி லா லி….’ நம்மை சுகமாய் தாலாட்டும்.

இந்த பாடலை எனது 18 வயதில் கேட்டிருக்கிறேன்.
இந்த வயதிலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மனதில் இளமையின் நினைவுகள்…

என் மனதை மயக்கும் பாடல்களில் ஒன்று..கேட்காதவர்கள் கேட்டுத்தான் பாருங்களேன்!

ஊமை நெஞ்சின் ஓசைகள்…, ஒரு கிளி உருகுது…, அண்ணன்மாரே தம்பிமாரே…, திண்டாடுதே ரெண்டு கிளியே (இளையராஜா) என மற்ற பாடல்களும் மகா இனிமையானவை.

இந்த ஆனந்தக்கும்மி படத்தின் தயாரிப்பு: இளையராஜா

பாடல் பாடியவர்கள் S.P. பாலசுப்ரமணியம்,S.ஜானகி

இந்த படத்தின் இயக்குனர்: பாலமுருகன்

இந்த படத்தின் நாயகன் பெயர் பாலச்சந்தர். இந்தப் படத்துக்குப் பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை.

நாயகி அஸ்வினி (பார்த்திபன் ஜோடியாக பொண்டாட்டி தேவை படத்தில் நடித்திருப்பார்).
பாடலை எழுதியவர்: வைரமுத்து

மெல்லப் பேசுங்கள் (1983) என்று ஒரு படம். இயக்குனர்கள்: பாரதி வாசு (சந்தானபாரதி – P.வாசு )

நாயகன்: வசந்த் (பின்னர் டிவி சீரியல்களில் பிரபலமாகி, சமீபத்தில் இறந்துவிட்டார்) நாயகி: பானுப்ரியா (அறிமுகம்)

இந்த படத்தில் ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…’ என்ற பாடல் சுகமானது.

இந்த பாடல் ஆரம்பிக்கும் முன் ஒரு ஒற்றைக் குயிலின் பாட்டுச் சத்தமும்… தொடர்ந்து புள்ளினங்களின் சத்தமும், மாணிக்கவாசகரின் சிவபெருமான திருப்பள்ளியெழுச்சி வரிகளும் ஒலிக்கும்.. நமக்கோ உடல் சிலிர்க்கும்!

‘கூவின பூங்குயில், கூவின கோழி…
குருகுகள் இயம்பின.. இயம்பின சங்கம்..
யாவரும் அறிவறியாய்! எமக்கு எளியாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே…’

உமா ரமணன் குரலில் இந்த வரிகள் அப்படியே ராஜாவின் இசையில் சங்கமிக்கும் அற்புதத்தை அவரைத் தவிர யாரும் நிகழ்த்த முடியாது.(பாடியது தீபன் சக்ரவர்த்தி- உமா ரமணன்) அதைத் தொடர்ந்து ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…’ என்று பல்லவி வரும்.

அடடா.. அது ஒரு சுகமான அனுபவம். அந்த உற்சாகம் வார்த்தைகளுக்குள் சிக்காதது. கேட்கும் யாரையும் தொற்றிக் கொள்ளும்.. பாடலுக்கு சொந்தக்காரர்: எம்ஜி வல்லபன்

கேட்காதவர்கள் கேட்டுப் பெறுங்கள் இந்த உற்சாகத்தை!

டம்: இங்கேயும் ஒரு கங்கை (1984)

தயாரிப்பு: கலைமணி

இயக்கம்: மணிவண்ணன்

நாயகன்: முரளி ,சந்திரசேகர்

நாயகி: தாரா (நாயகன் கமல் தங்கை )

இசை: இசை அரசர் இளையராஜா

அப்போதெல்லாம் மாசத்துக்கு ஒரு மணிவண்ணன் படம் வரும். கண்டிப்பாக ஹிட் ஆகும். இந்த படத்தில் நான்கு பாடல்கள்… இரண்டு பாடல்கள் மட்டுமே எனக்கு நன்கு அறிமுகம்.

1. தெக்குத் தெரு மச்சானே… (மிக இனிய டூயட்)
2. சோலை புஷ்பங்களே…

இந்த இரண்டு பாடல்களையும் பாடியவர்கள்: கங்கை அமரன், P.சுசீலா

‘சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்…’ பாடல் கேட்கும் போதே ஒரு மெல்லிய சோகம் மனதை நிழலாய் ஆக்கிரமிக்கும் உணர்வு. பாடல் முடிந்த பின்னும் இனம்புரியாத பாரம் மனதில்… வைரமுத்துவின் வரிகள் இவை.

இந்த படத்தின் பாடல்கள் ஊமை வெயில் என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து இசை தட்டுக்களாக வெளிவந்து அந்த காலகட்டத்தில் செம ஹிட்டானவை. ஆனால் அந்த படம் வெளிவரவில்லை.

அதற்குபின் மணிவண்ணனின் ‘இங்கேயும் ஒரு கங்கை’ படத்தில் அந்தப் பாடல்களை இளையராஜா பயன்படுத்தியதாகப் படித்திருக்கிறேன் (அன்றைய நாட்களில் ராஜா பயங்கர பிஸி. ஒரு வருடத்துக்கு 50 படங்களுக்கு இசையமைத்த நேரம். அதனால் இதுபோன்ற அட்ஜஸ்ட்மெண்டுகள்!)

ண்பதுகளின் ஆரம்ப வருடங்கள் அவை… ‘இன்னிசைச் சக்கரவர்த்தி இளையராவின் இசை மழையில்’ என்று படத்தின் டைட்டிலுக்கு மேலே ஒரு வரி இடம் பெறும்… அப்போதே தெரிந்து கொள்ளலாம் அது கோவைத் தம்பியின் படம் என்று. அவரது பெரும்பாலான படங்களுக்கு ராஜாதான் இசை. பாடல்களில் இசையை அமுதமாய் பொழிந்திருப்பார் இசைஞானி. படமெங்கும் அந்த அமுதமழை தொடரும்…

அப்படி ஒரு படம்தான் இளமைக் காலங்கள்.

இந்தப் படத்தில்   ‘இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்…’ என்று ஆரம்பிக்கும் பாடல் நினைவுகளை எப்போதும் இனிமைப்படுத்தும் அற்புதமான பாடல்.

அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அதிகாலை பஸ்சில் வரும் போது இந்த பாடல் பஸ்சில் ஒளிபரப்பானது… அதிகாலையில் அந்த குளிரில் பஸ்சின் சீரான ஓட்டத்தில் இந்த பாடல் கேட்டு பரவசமாகிப் போனேன்… எப்போது எங்கே இந்தப் பாடலைக் கேட்டாலும், என் மனதுக்குள் அந்த அதிகாலை சில்லென்ற நினைவுகளைப் பரப்பிவிட்டுப் போகும் அதிசயம்.

ஒரு அதிகாலையில் நீங்களும் கூட கேட்டுப் பாருங்கள்…

இதில், இரண்டாவது சரணத்திற்கு பின் ‘ப…ப…ப…பா…பா..ப…ப..
என்று ஜானகி பாடும்போது, ராஜாவின் இசையில் தெறிக்கும் துள்ளல்… மொத்த சந்தோஷத்தையும் அள்ளி வருவது போல ஒரு இசையொலியை அந்த இடத்தில் தந்திருப்பார் ராஜா. இனி இப்படியொரு பாட்டை யாராவது தர முடியுமா என்றுகூட தெரியவில்லை.

படம்: இளமை காலங்கள் (1984)

தயாரிப்பு: கோவைத்தம்பி

இயக்கம்: மணிவண்ணன்

நாயகன்: மோகன், நாயகி: சசிகலா

பாடல்: வைரமுத்து

இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.

பாட வந்ததோர் கானம்..

ஈரமான ரோசாவே…

ராகவனே ரமணா ரகுநாதா…

படிப்புலே ஹீரோ …

ந்தப் பதிவின் கடைசி பாடல்…

இளையராஜாவை மட்டுமே நம்பி ஸ்ரீதர் எடுத்த தென்றலே என்னைத் தொடு படத்தில் எல்லா பாடல்களுமே மிகப் பிரபலம்.

அதிலும் தென்றல் வந்து என்னை தொடும்… பாடல் இனிமையின் சிகரம்.

இந்த பாடல் ஆரம்பிக்கும் போது ராஜாவின் இசை தென்றலாய் வருட ஆரம்பிக்கும்… தொடர்ந்து ஜேசுதாஸ் – ஜானகி குரல்கள் நம்மை இன்னோர் உலகத்துக்கு அழைத்துச் செல்லும்.

சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது… என்றெல்லாம் பெரியவர்கள் சொல்வார்களே… அந்த இனிமையை இந்தப் பாடலில் அனுபவிக்கலாம்.

வாலி எழுதிய வசீகர பாடல் இது!

இந்தப் பாடல்களையெல்லாம் கேட்ட பிறகு மனதுக்குள் ஒரு நிறைவு வரும் பாருங்கள்.. அது எத்தனை கோடிகள் செலவழித்தாலும் கிடைக்காதது… நினைவுகளை எப்போதும் இனிமைப்படுத்தும் இசைஞானி இளையராஜாவுக்கு நன்றிகள். வேறென்ன சொல்ல முடியும்!

-ஆர் வி சரவணன்

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

12 Responses to “நினைவுகளை மீட்டும் இசை… ஒரு அனுபவம்”
  1. Sekar says:

    ‘இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்…’ சூப்பர் சாங் இது

  2. K S Sivakumaar says:

    Hello All,
    I am sivakumaar, a silent member in this group.
    It is nice to note the songs mentioned. Not only the above songs, but all the songs of Ilaiyaraja have touched our heart in one or other way.
    I was undergoing a lot of personal / family related problems. During that time the songs of Ilaiyaraja are the only “Thallatu” for me to get a good sleep.
    I can share a lot about this, but let me give opportunity for others to share their views.

    Thanks & Regards,

    K S Sivakumaar

  3. ஒவ்வொரு பாடலிலும் என் ரசனையைப் பார்த்து வியந்தேன். அருமையான கலஷன்ஸ்.
    இசைமேடையில் பாடலை மனதை என்னமோ செய்கிறது.

    இசையின் தலைவனுக்கு நன்றி.

  4. ஆனந்தக் கும்மியில் அனைத்துப் பாடல்களுமே அட்டகாசமாக இருக்கும். இந்தப் படத்தில் இளையராஜா இசையில் சிக்ஸர் அடித்துள்ளார் என்று அன்று குமுதம் விமர்சனம் செய்திருந்தது.

  5. திரு.சரவணன்,

    தென்றலே என்னைத்தொடு படத்தில் பெரும்பாலான பாடல்களை வாலி சார் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன், வைரமுத்து ஏதோ ஒரு பாடலை மட்டும் எழுதியிருக்கிறார் அது எந்த பாடல் என்று தெரியுமா?(குமுத்தில் வைரமுத்து எழுதிய கேள்வி‍பதில் தொடரில் “நடிகைகளுக்கு எழுதிய பாடல்களில் பிடித்தது” என்ற கேள்வியில் அந்த பாடலை குறிப்பிட்டிருந்தார் ஆனால் அதுவே பாற்கடல் என்னும் புத்தகமாக வந்தபோது அந்த பாடலை நீக்கிவிட்டார்கள்)

  6. VA. SHANKAR says:

    நினைவுகளை மீட்டும் இசை… ஒரு அனுபவம்…
    இரண்டாவது பாகம் எப்போது?.

  7. r.v.saravanan says:

    http://www.kaththavarayan.blogspot.com/

    தென்றலே என்னைத்தொடு படத்தில் வைரமுத்து ஏதோ ஒரு பாடலை மட்டும் எழுதியிருக்கிறார் அது எந்த பாடல் என்று தெரியுமா?(குமுத்தில் வைரமுத்து எழுதிய கேள்வி‍பதில் தொடரில் “நடிகைகளுக்கு எழுதிய பாடல்களில் பிடித்தது” என்ற கேள்வியில் அந்த பாடலை குறிப்பிட்டிருந்தார்

    நன்றி காத்தவராயன்
    நானும் அதை படித்திருக்கிறேன் எனது சேகரிப்பில் அந்த குமுதம்
    இதழ் பக்கங்களும் இருந்தது அதை கண்டெடுத்து உங்களுக்கு தெரிவிக்கிறேன்

  8. vasthathu says:

    அடடா வாட் எ போஸ்ட் ? மயில் iragu வைத்து வருடியது போல உள்ளது

  9. நன்றி சரவணன்.

  10. saravanan says:

    romba nalla pathivu, innum niraya namma ‘mottaiya’ pathi ezhuthunga saravanan.(if u have any doubt about raja sir songs please mail to me).best of luck.
    saravanan,
    singapore.
    (native:near perambalur)

  11. P வெங்கடேசன் says:

    ஆனந்தக்கும்மி பல நூறு தடவை, பாடல்கள் கேட்டாலும் , இப்போது தான் சரவணன் தயவால் பார்க்க சந்தர்ப்பம் கிடய்த்தது. கீழ் மனதில் இருந்து நன்றி .

  12. கிரி says:

    //நல்ல இசை என்பது, கேட்பவரை மனம் லயிக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் தெரியும்//

    அதே!

    //சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்//

    செம பாட்டுங்க!

    //இந்த படத்தின் பாடல்கள் ஊமை வெயில் என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து இசை தட்டுக்களாக வெளிவந்து அந்த காலகட்டத்தில் செம ஹிட்டானவை. ஆனால் அந்த படம் வெளிவரவில்லை//

    அப்படியா!

    //இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்… தென்றல் வந்து என்னை தொடும்… பாடல் இனிமையின் சிகரம்//

    இரண்டுமே கலக்கல் ராகம்

    ஓ வெண்ணிலாவே வா ஓடி வா இந்த பாடலை தவிர எனக்கு அனைத்து பாடல்களும் ரொம்ப பிடிக்கும்.. இளையராஜாவின் பழைய பாடல்களின் சிறப்பே எப்போது கேட்டாலும் இனிமை தருவது தான்.

    சிறப்பான தொகுப்பு சரவணன். வாழ்த்துக்கள்

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)