மீண்டும் ‘மிஸ்டு கால்’ கலாச்சாரத்துக்கு துரத்திடாதீங்க!
Monday, November 23, 2009 at 10:16 pm | 1,407 views
எஸ்எம்எஸ் என்ற பெயரில் மொபைல் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை!
ஒருத்தன் ஒரு முறை 5 பைசா திருடினா தப்பா….
தப்பில்ல..
5 தடவை அஞ்சு அஞ்சு பைசாவா திருடினா தப்பா…
தப்பு மாதிரிதான் தெரியுது..
5 லட்சம் தடவை அஞ்சு அஞ்சு பைசாவா திருடினா தப்பா…
தப்புதாங்க…
-இந்த அந்நியன் டயலாக் இப்போது மொபைல் நிறுவனங்களுக்குதான் சாலப் பொருந்தும்.
அழைப்புக் கட்டணம் என்ற பெயரில் இவர்கள் அடித்த கொள்ளை சற்றே மட்டுப்பட ஆரம்பிக்க, கண்ணுக்குத் தெரியாமல் இன்னொரு சுருட்டலில் ஈடுபட்டிருந்தனர். அதுதான் எஸ்எம்எஸ் கட்டணம் என்ற பெயரில் சிறுகச் சிறுக அடிக்கும் கொள்ளை.
எஸ்எம்எஸ் எனப்படும் குறுந்தகவல் சேவைக்கு பல மொபைல் நிறுவனங்கள் வசூலிக்கும் தொகை, அழைப்புக் கட்டணத்தைவிட அதிகம். இந்தத் தகவலை சில தினங்களுக்கு முன் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட அலறியடித்துக் கொண்டு, கட்டணக் குறைப்பு பற்றி ஆலோசிப்பதாக அறிவித்துள்ளது தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.
சரி… அப்படி என்னதான் கொள்ளையடிக்கிறார்கள்?
நியாயமாக இந்த குறுந்தகவல் சேவையை இவலசமாகவே தர வேண்டுமாம் மொபைல் நிறுவனங்கள். அல்லது குறிப்பிட்ட ஒரு (குறைந்தபட்ச) தொகையைப் பெற்றுக் கொண்டு ஆயுள் முழுக்க இலவசமாகவே தரமுடியுமாம்.
காரணம் ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப, போய்ச் சேர அதிகபட்சம் ஒரு நொடி மட்டுமே தேவைப்படுகிறது. எஸ்எம்எஸ்ஸுக்கு தேவை வெறும் 0.5 – 1 KBதான் என்கிறது தொலைத் தொடர்பு அலுவலகம். இதற்கு விலை நிர்ணயிப்பது கடினமாம். காரணம் 1 KB-க்குள் வரும் எஸ்எம்எஸ்களுக்கு அரை பைசாதான் வசூல் செய்ய வேண்டும். சரி, இது முடியாதென்றால் அதிகபட்சம் 1 பைசா கட்டணம் நிர்ணயிக்கலாம்.
ஆனால் மொபைல் நிறுவனங்கள் வசூலிப்பதோ 50 காசு முதல் 1 ரூபாய் வரை. ரேட் கட்டர் என்ற பெயரில் ஒரு தொகையைப் பிடுங்கிக் கொண்டு 30 பைசா எனக் குறைக்கிறார்கள்.
ஆனால் கொடுமை என்னவென்றால், இப்போது அழைப்புக் கட்டணத்துக்கு 1 நொடிக்கு 1 பைசா வசூலிக்கும் மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள் கூட, அதே 1 நொடிக்குள் முடிந்துவிடும் எஸ்எம்எஸ்ஸுக்கு 50 பைசா கட்டணமாக வசூலிப்பதுதான்!
நம்மிடம் இந்த நிறுவனங்கள் அதிகபட்சமாக 50 முதல் 100 மடங்கு வரை கொள்ளையடிக்கிறார்கள்.
ஆரம்ப காலங்களில் ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு (நேஷனல்) 3 ரூபாய் வரை வசூலித்த ரிலையன்ஸ் நிறுவனம், இப்போது ரேட் கட்டர் உபயோகித்தால், ஆயுள் முழுக்க எஸ்எம்எஸ்ஸுக்கு 40 பைசா என கட்டணம் நிர்ணயித்துள்ளது. இப்போதும் 40 மடங்கு அதிகமாக வசூலிக்கிறது இந்த நிறுவனம். கிட்டத்தட்ட 87 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள ரிலையன்ஸுக்கு எவ்வளவு லாபம் என்று தோராயமாகக் கணக்குப் போட்டுப் பாருங்கள்… இன்னும் ஏர்டெல், வோடபோன், பிஸ்எஸ்என்எல்…
இந்த செய்தி மற்றும் உண்மைகளை இப்போது மீடியா வெட்ட வெளிச்சமாக்கியதும், திருடனுக்கு தேள் கொட்டிய கணக்காக விழுந்தடித்துக் கொண்டு அறிக்கை விடுகிறது ட்ராய் எனப்படும் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்.
எஸ்எம்எஸ் கட்டணத்தை வருகிற மார்ச் மாதத்துக்குள் ஒழுங்குபடுத்திவிடுவோம் என்று ட்ராய் இன்று அறிவிக்க, ஏர்டெல் நிறுவனமோ இன்னும் சில தினங்களில் 50 சதவிகித கட்டணக் குறைப்பைச் செய்வதாகக் கூறியுள்ளது.
டாடா டெலிசர்வீஸஸ், ரோமிக் கட்டணம் கூட இனி வினாடிக்கு 1 பைசாதான் என்றும், இனி ரூ 30 கொடுத்துவிட்டு ஆயிரக்கணக்கில் இலவச எஸ்எம்எஸ் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
எப்படியோ, மிஸ்டுகால் கலாச்சாரத்திலிருந்து கவுரவமாக எஸ்எம்எஸ் கலாச்சாரத்துக்கு மாறியவர்களை மீண்டும் பழைய நிலைக்கு துரத்தாமல் இருந்தால் சரி!
-விதுரன்











கொள்ளை அடித்தேபழககற்றுகொண்டார்கள்
சின்னதா
திருடவன்
திருடன்
நெறைய
திருடவன்
தொழிலதிபர்
எப்படியோ, மிஸ்டுகால் கலாச்சாரத்திலிருந்து கவுரவமாக எஸ்எம்எஸ் கலாச்சாரத்துக்கு மாறியவர்களை மீண்டும் பழைய நிலைக்கு துரத்தாமல் இருந்தால் சரி!
இன்னும் நெறைய பேர் மிஸ்டுகால் கலாச்சாரத்தில் தான் இறுக்கங்கள்…. என்னுடைய நண்பனையும் சேர்த்து……………………..