பிரபாகரனின் பெற்றோருக்கு என்ன நேர்ந்தது?
Friday, November 6, 2009 at 2:30 am | 3,866 views
மிகக் கொடிய சித்திரவதைக் கூடத்தில் பிரபாகரனின் பெற்றோர்!
தனது ஆட்சியில் தமிழ் ஈழத்தில் ஏழை பணக்காரன் என்றோ, உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்றோ பாரபட்சம் பார்க்காமல் எல்லோரையும் சமமாகப் பாவித்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோர் இன்று இலங்கை அரசின் கொடுஞ்சித்திரவதை முகாமில் துன்புறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் ஈழத்தில் நடந்த கொடிய இனப்படுகொலை போரின்போது மக்களோடு மக்களாக தங்கி இருந்தனர் பிரபாகரனின் பெற்றோரான வேலுப்பிள்ளையும் பார்வதியம்மாவும்.
போரில் சிங்கள ராணுவம் கொன்றது போக மிச்சமிருந்த தமிழர்கள் முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட போது, அவர்களுடனே மாணிக் பார்ம் முகாமில் தங்கியிருந்தனர் இந்த வயதான தம்பதியர்.
பிரபாகரனின் பெற்றோரைத் தேடி மாணிக் பார்ம் முகாமில் சிங்கள வீரர்கள் தங்கள் வெறியாட்டத்தைத் துவக்கியபோது, தாங்களாகவே முன் வந்து, படையினருடன் ஒப்புவித்துக் கொண்டனர் வேலுப்பிள்ளையும் பார்வதியம்மாவும். தங்களால் மக்கள் துன்பப்படக் கூடாது என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது.
ஆனால் அதன் பிறகு அவர்கள் எங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற முழுமையான தகவல் கிடைக்கவில்லை. ‘பிரபாகரனின் பெற்றோர் நன்கு பராமரிக்கப்படுவதாக’ மட்டும் அவ்வப்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவோ அல்லது அவரது தம்பிகள் பசில் மற்றும் கோத்தபயா ராஜபக்சேக்களும் அறிக்கை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், பிரபாகரனின் பெற்றோர் இந்தத் தள்ளாத வயதிலும் இலங்கை அரசின் கொடுஞ்சித்திரவதை முகாமில் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இந்த வார ஆனந்த விகடன் வெளியிட்டுள்ள கட்டுரையொன்றில், “ஹிட்லரின் சித்ரவதைக் கூடத்தைவிட பயங்கரமான நிகழ்வுகளை அரங்கேற்றிக் காட்டும் கல்பிட்டி ‘ஃபோர்த் ப்ளோரில்’ பிரபாகரனின் பெற்றோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ‘ஃபோர்த் ப்ளோர்’ அதாவது நாலாவது மாடி என்பது உலகின் படுமோசமான சித்திரவதைக் கூடங்களுள் ஒன்று என்றும் இந்தக் கட்டுரை விவரிக்கிறது.
“அரசுக்கு எதிரான முக்கிய தமிழ்முகங்கள் சிக்கிவிட்டால்… அவர்களை சிறுகச் சிறுக நொறுங்கவைத்து ரகசியங்களைப் பிடுங்க முடிவெடுத்துவிட்டால்… இந்த ‘ஃபோர்த் ஃப்ளோரு’க்குக் கொண்டுபோய்விடுவார்களாம்.
“இங்கே போய் உயிரோடு திரும்பியவர்கள் மிக அபூர்வம்தான்! அப்படி உயிரோடு திரும்பி வர்றவங்களும் வாழ்நாள் முழுக்க நிம்மதியாத் தூங்க முடியாது. கனவிலும் மிரட்டும் கொடுமைகள் அப்படி! சுவர் எங்கும் தெறித்து விழுந்த ரத்தக்கறைகளும், ஓயாத மரணவலி ஒலங்களும் அந்த நான்காம் மாடியில் ஒலித்துக் கொண்டே இருக்குமாம். அந்த இடத்தை ‘சாத்தானின் மாளிகை’ என்றும் ‘பிசாசுக் கூடாரம்’ என்றும் விவரம் தெரிந்த தமிழர்கள் சொல்வது வழக்கம்.
விசாரணைக்காக வரும் நபர்களை வகைப்படுத்தியே சித்ரவதை தொடங்குவார்களாம். ஆடைகளைக் கழற்றி, பனிக்கட்டிகள் நிரம்பி இருக்கும் ஓர் அறையில் நடுங்கும் குளிரில் உறையவைப்பது… கேட்கிற கேள்விக்கு ‘திருப்தி’கரமான பதில் வராவிட்டால், குளிருக்கு நேரெதிரான பாஸ்பரஸ் ட்ரீட்மென்ட் நடக்குமாம். பாஸ்பரஸை உடலில் தடவி, கொதிக்கிற மின் தகட்டைக் கையிலெடுத்து…
மேற்கொண்டு கேட்டால், இளகிய மனங்கள் துடிதுடித்துப் போகும்.
தலைகீழாகத் தொங்கவிடுவது… பிறகு, பி.வி.சி. பைப்புகளில் மணலை நிரப்பி அடித்து நொறுக்குவது… தலைகீழாகத் தொங்குபவரின் தலையில் முழுக்க பெட்ரோல் நிரம்பிய ஒரு பாலிதீன் பையை மாட்டுவது… மூச்சுவிட முடியாமல் அவர்கள் பெட்ரோலை மெள்ள மெள்ளக் குடிப்பதையும்… அதன் நெடி மிகுந்த காற்றைச் சுவாசிப்பதையும் ரசிப்பது!
விதவிதமாக நீள்கின்றன இந்த சித்ரவதைப் படலங்கள். வாய் வழியே பெட்ரோல் சென்று அரை மயக்க நிலையில் ஆழ்ந்த பிறகும், கேட்ட கேள்விக்குப் பதில் வராவிட்டால் வாய்க்குள் தீக்குச்சியைக் கொளுத்திப்போடுவார்களாம் குரூர அதிகாரிகள்! இதில், உடலின் உள்ளுறுப்புகள் தீயினால் வெந்து பொசுங்கிவிடும்.
உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கும்போது, நான்கைந்து பேர் மட்டுமே கால்நீட்டி அமரக்கூடிய ஓர் அறைக்குள் 20-க்கும் மேற்பட்ட நபர்களை நின்ற நிலையில் அடைத்துவிடுவார்களாம். துளிகூட வெளிச்சம் புகாத அந்த இருட்டறைக்குள் முனகலும், மூச்சுவிடும் சத்தமும் மட்டும்தான் துணையிருக்கும். மற்றபடி எல்லாமே அந்தகாரம்தான்! மனநிலையை உருக்கி, உண்மைகளை வாங்குவதற்காக இப்படி உணவு, தண்ணீர் தராமல் பலநாட்கள் இருட்டுக்குள் வைத்திருப்பது உண்டு என்றும் இலங்கைத் தமிழ்ப் புள்ளிகள் மத்தியில் பரவிக்கிடக்கிறது சேதி.
“பெண்களின் நிலைமையோ எழுத்தில் வடிக்க முடியாது… ஆனால் இத்தகைய ஓரிடத்தில்தான் கடந்த நான்கு மாதங்களாக விசாரணை என்ற பெயரில் பிரபாகரனின் தாய் – தந்தை வைக்கப்பட்டு இருப்பதாக அறிகிறோம். அதுவும் இருவரையும் பிரித்து தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
வேலுப்பிள்ளைக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் உள்ளனவாம். தாய் பார்வதியம்மாளுக்கும் சர்க்கரை, உயர் ரத்த அழுத்த பாதிப்பு உண்டாம். அவர்களுக்கு அங்கே என்னவிதமான மருத்துவக் கண் காணிப்பு அளிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. அவர்களிடமிருந்து சிங்கள அதிகாரிகள் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்றும் புரியவில்லை!” என்று அக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இலங்கை சென்ற எம்பிக்கள் குழுவில் இடம்பெற்றிருந்த திருமாவளவன், பிரபாகரனின் பெற்றோரைச் சந்திக்க பசில் ராஜபக்சேயிடம் அனுமதி கேட்டாராம். அதற்கு, ‘அவர்களை வெளியில் விடுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அவர்கள் இந்தியாவில் தங்குவதாக இருந்தால் மட்டும்தான் வெளியில் விடுவோம். மற்ற வெளிநாடுகளுக்குப் போனால், அவர்கள் எங்களுக்கு எதிராகப் பேட்டிகள் கொடுப்பார்கள். இப்படித்தான் டாக்டர் தமிழ்வாணியை நாங்கள் வெளியில் விடச் சம்மதித்தோம். ஆனால், லண்டன் போனவர் எங்களையே விமர்சித்தார். அந்த மாதிரி பிரபாகரனின் பெற்றோர் செயல்படக் கூடாது அல்லவா?” என்றாராம் பசில் ராஜபக்சே.
தமிழர் மானம் காக்க களம் புகுந்து 30 ஆண்டுகாலம் இனப்பெருமையை பறை சாற்றிய மாவீரனின் பெற்றோருக்கு உண்மையில் என்ன நேர்ந்தது? அவர்களை மீண்டும் நலமோடு பார்க்க முடியுமா?
அவர்களை வெளியில் விட்டால் பல உண்மைகள் அம்பலமாகிவிடும் என பயந்து மகிந்த அரசாங்கம் மூடி மறைப்பதை, இப்போதும் வேடிக்கைதான் பார்க்கப் போகிறதா சர்வதேசம்?
-என்வழி













இந்தியாவே பின்னாடி நிற்கும் பொது நமக்கு என்ன பயம். ஹ ஹ.எதுவும் செய்யலாம்.அமெரிக்காவின் கண்லேயே விரலை விட்டு ஆட்டலாம் ஹ ஹ !
-மஹிந்த
இங்கிருந்து ஈழம் சென்ற தி.மு.க, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரபாகரனின் பெற்றோர் இருக்குமிடத்துக்கு அழைத்துப்போங்கள் என்று கேட்டிருக்க வேண்டாமா?
ஆறு மணி நேர உண்ணாவிரத ஓரங்க நாடகத்துக்கு முன்னால், வார்த்தைக்கு வார்த்தை எங்கள் தொப்புள்கொடி உறவு என்று ஒப்பாரி வைத்த கனிமொழி ஏன் அந்தத் தொப்புள்கொடி உறவான, பிரபாகரனின் அன்னையை நான் பார்க்க வேண்டும் என்று கேட்கவில்லை? துரோகி.
இங்கே முச்சந்தியில் மூன்று மணி நேரம் பேசி வாய் வீரம் காட்டும் திருமாவளவன் ஏன் பிரபாகரனின் பெற்றோரை நான் சந்திக்கும்போது உன்னால் முடிந்தல் என்னைக் கொல், அவர்களிடம் என்னைக் கொண்டுபோ என்று இனவெறியன், படுகொலையாளன் ராஜபக்சேயிடம் சொல்லவில்லை?
டி.ஆர்.பாலுவும், ஆரூணும் தங்களுக்கு ஏதாவது வியாபார வாய்ப்பு இருக்கிறதா என்பதிலேயே குறியாக இருந்திருப்பார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.
நம் தலைஎழுத்து இப்படி இருக்கிறதே.
ஆனந்தவிகடனில் இருந்து அப்படியே காப்பி செய்துள்ளீர்கள். இதெல்லாம் ஒரு பிழைப்பா?
________
இந்தத் தகவல் ஆனந்த விகடனில் வெளியானதுதான் என்பதைக் குறிப்பிட்டுள்ளது மட்டும் உங்கள் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டதோ!
//இதுகுறித்து இந்த வார ஆனந்த விகடன் வெளியிட்டுள்ள கட்டுரையொன்றில், “ஹிட்லரின் சித்ரவதைக் கூடத்தைவிட பயங்கரமான நிகழ்வுகளை அரங்கேற்றிக் காட்டும் கல்பிட்டி ‘ஃபோர்த் ப்ளோரில்’ பிரபாகரனின் பெற்றோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.//
இதனைக் கட்டுரையின் இறுதியில் இட்டிருக்கவேண்டும்.
tamilany mendum dr braba comen soon