BREAKING NEWS
Search

‘20000 பேரைக் கொன்ற ஆண்டர்சனை பத்திரமாக அனுப்பி வைத்த ராஜீவ் காந்தி!’

‘20000 பேரைக் கொன்ற ஆண்டர்சனை பத்திரமாக அனுப்பி வைத்த ராஜீவ் காந்தி – அர்ஜுன் சிங்!’

டெல்லி: இருபதாயிரம் மக்களின் உயிரிழப்புக்குக் காரணமான யூனியன் கார்பைடு முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனை, தனி விமானத்தில் பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தவர் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திதான் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அவர் பிரதராக இருந்தபோது தான் ஆண்டர்சன், டெல்லி வழியாக அமெரிக்காவுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

1984-ம் ஆண்டு போபால் விஷவாவு கசிவில் 20000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்த ஆண்டர்சனை மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் தனது அரசு விமானத்தில் ஏற்றி டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.

டிசம்பர் 3ம் தேதி விஷவாயு சம்பவம் நடந்தது. இதையடுத்து 7ம் தேதி ஆண்டர்சன் கைது செய்யப்பட்டு வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். அதே நாளில் விடுவிக்கப்பட்டு சிறப்பு விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

காங்கிரஸ் தலைவரும் பிரதமருமான ராஜீவ்காந்திக்கு தெரியாமல் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் ராஜிவ் காந்தியின் உத்தரவின்பேரில்தான் அர்ஜூன் சிங் செயல்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இதை அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏவின் ஆவணங்களும் உறுதிப்படுகின்றன. கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் உள்ள சிஐஏ மையம் எழுதிய இந்த ரகசிய குறிப்புகளை கடந்த 2002ம் ஆண்டு ஜனவரி மாதம் சிஐஏ பகிரங்கமாக்கியது.

1984ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி எழுதப்பட்ட அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

”நேற்று யூனியன் கார்பைட் தலைவர் ஆண்டர்சனை இந்திய மத்திய அரசு வேகமாக விடுதலை செய்தது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்தியப் பிரதேச அரசு முயல்வதாக, இந்திய அரசு கருதுவதாகத் தெரிகிறது.

இந்த விஷவாயு கசிவுக்கு ஆண்டர்சனையோ யூனியன் கார்பைட் நிறுவனத்தையோ நேரடியாக குற்றம் சாட்டுவது சரியல்ல என்று அமெரிக்க உளவுப் பிரிவு கருதுகிறது. அதன் இந்திய துணை நிறுவனத்தின் (Union Carbide India Ltd) மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், துணை நிறுவனத்தை காப்பாற்றிவிட்டு அமெரிக்க நிறுவனம் மீது குற்றம் சுமத்த முயற்சிகள் நடக்கின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் ராஜிவ் காந்தியின் உத்தரவால்தான் ஆண்டர்சனை அர்ஜூன் சிங் விடுவித்தார் என்பது தெளிவாகிறது. அவரைப் பொறுத்தவரை ஆண்டர்சன் மீதும் அமெரிக்க நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்தது தெரிகிறது. ஆனால், டெல்லியில் இருந்து வந்த உத்தரவுகளால் அவர் தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கலாம் என்பது உறுதியாகிறது.

ஆனால், இந்த விஷயத்தில் ராஜீவ் காந்திக்கு எந்தவகையான அமெரிக்க நெருக்குதல் வந்தது, இது தொடர்பாக மத்திய அரசுடன் எந்த அமெரிக்க அதிகாரிகள், அமைச்சர்கள், தூதர்கள் பேசினார்கள் என்ற விவரம் அந்த ரகசிய குறிப்புகள் இடம் பெறவி்ல்லை.

ராஜீவ் விடுவித்திருக்கலாம்.. பி.சி.அலெக்சாண்டர்:

இந் நிலையில் ராஜீவ் காந்தியின் முதன்மைச் செயலாளராக பணியாற்றிய தமிழக முன்னாள் கவர்னர் பி.சி.அலெக்சாண்டர் சென்னையிலிருந்து நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

“போபால் விஷவாயு கசிவு சம்பவம் நடந்த 3வது நாள் டெல்லியில் அதிகாலையிலேயே பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையில் மூத்த அமைச்சர்கள் கூடி விவாதித்தனர். அதில் மத்திய பிரதேச முதல்வராக இருந்த அர்ஜூன் சிங்கும் கலந்து கொண்டார்.

ஆனால், அப்போது யூனியன் கார்பைட் தலைவர் ஆண்டர்சனை விடுவிப்பது குறித்து பேசப்படவில்லை.

ஆண்டர்சனை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல அனுமதி அளிக்கலாம் என்று ராஜீவ் காந்தி முடிவெடுத்தாரா? அர்ஜூன் சிங் முடிவெடுத்தாரா? என்பது எனக்குத் தெரியாது. நான் அங்கிருந்தவரை அது குறித்து விவாதிக்கப்படவிவ்லை.

நான் அந்தக் கூட்டம் முடிந்தவுடன் ராஜீவுடன் வேறு பல முக்கிய நாட்டு விஷயங்கள் குறித்து 20 நிமிடம் பேசிவிட்டு்க் கிளம்பிவிட்டேன். அதன் பிறகு ராஜீவும் அர்ஜூன் சிங்கும் தனியே சந்தித்துப் பேசினர். அப்போது ஆண்டர்சனை தப்ப வைப்பது குறித்து இருவரும் பேசினார்களா என்பது எனக்குத் தெரியாது. இது குறித்து விளக்கம் தர வேண்டியது அர்ஜூன் சிங்தான்.

ஏதாவது நெருக்கடி அல்லது சர்வதேச உறவுகள் தொடர்பாக நாட்டின் நலன் கருதி அந்த நடவடிக்கை (ஆண்டர்சனை விடுவித்தது) எடுக்கப்பட்டிருக்கலாம்,” என்றார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட முயன்றார் அலெகஸாண்டர் என்பதும், அதை சோனியா ஆதரிக்காததால் காங்கிரசை கடுமையாக விமர்சித்தார் அலெக்ஸாண்டர் என்பதும் நினைவு கூறத்தக்கது.

சோனியாவை சந்தித்த பின் மறுப்பு தெரிவித்த அர்ஜூன் சிங்:

இதற்கிடையே நேற்று முன் தினம் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்த அர்ஜூன் சிங், “ஆண்டர்சன் விவகாரத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அந்த நேரத்தில் விஷவாயு பிரச்சனையை நான் மிகச் சிறப்பாக கையாண்டேன்” என்றும் கூறினார்.

காங்கிரஸ் மறுப்பு:

இந் நிலையில், ஆண்டர்சன் தப்பிச் சென்றதில் அப்போதைய மத்திய அரசுக்கு தொடர்பில்லை என்று காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

இது தொடர்பாக செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் நிருபர்களிடம் பேசுகையில், “பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையில் இருந்த மத்திய அரசுக்கு இதில் தொடர்பிருப்பதாக சொல்வதை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். இந்த விஷயத்தில் ராஜீவ் காந்தி அரசை குற்றம்சாட்டுவது என்ற கேள்வியே எழவில்லை. 26 ஆண்டுகள் கழித்து பலரும் பலவிதமாக கருத்து கூறுகிறார்கள். எது உண்மை என்பதை அமைச்சர்கள் குழு கண்டுபிடிக்கும்…” என்றார்.

அமெரிக்காவின் வற்புறுத்தலின் பேரில்தான் ஆண்டர்சன் அனுப்பி வைக்கப்பட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கருத்து தெரிவித்து உள்ளாரே? என்று கேட்டதற்கு,

“ராஜீவ் காந்தி அரசுக்கு நெருக்கடி, தூண்டுதல் இருந்தது என்பதில் உண்மை இல்லை. அதுபற்றி திக் விஜய் சிங்கே விளக்கம் அளித்து விட்டார். யாருடைய தூண்டுதலும் இருந்தது என்ற கேள்விக்கே இடமில்லை” என்றார்.

யூனியன் கார்பைடு தொழிற்சாலையை பின்னர் எடுத்துக் கொண்ட ‘டவ்’ நிறுவனத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி இடம் பெற்றுள்ளாரே என்ற கேள்விக்கு, அவர் ஒரு சுப்ரீம் கோர்ட் வக்கீல் என்ற முறையில் இடம் பெற்றுள்ளார். மற்றபடி அதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார்.
4 thoughts on “‘20000 பேரைக் கொன்ற ஆண்டர்சனை பத்திரமாக அனுப்பி வைத்த ராஜீவ் காந்தி!’

 1. Bala

  காங்கிரஸ் என்பது மேற்கத்திய நாடுகளின் செயல்திட்டத்தில் செயல்படும் இந்திய அரசியல் கட்சி. இது தெரியாமல் இங்குள்ளவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பது தங்களது குடும்பத்தை தாங்களே கூட்டி குடுப்பதற்கு சமம்..

 2. M.S.Vasan

  ராஜீவ் (பிர‌த‌ம‌ர்) அனும‌தியின்றி, அருண்சிங்(மாநில‌ முத‌ல்வ‌ர்)
  த‌னித்து இத்தைய‌ வெளிநாட்டு க‌ம்ப‌னி சிக்கியுள்ள‌ சிக்க‌லில்
  முடிவெடுத்திருக்கும் சாத்திய‌ம் இல்லை.
  இன்று, போப‌ர்ஸ் வ‌ழ‌க்கிலிருந்து சிபிஐயை காட்டி த‌ப்பியது போல‌
  அருண்சிங்கைப் ப‌லிக‌டாவாக்கி (அல்லது வேறு ஈடு த‌ந்து} ராஜீவ்
  பெய‌ரை காப்பாற்ற‌ வேண்டிய‌ த‌ர்ம‌ச‌ங்க‌ட‌ம் காங்கிர‌ஸ் க‌ட்சிக்கு உள்ள‌து.
  அத‌ற்கு க‌ட்சி நேரு குடும்ப‌ம் தவிர்த்து யாரையும் ப‌லி கொடுக்க‌த் த‌யார்.

 3. குமரன்

  இப்போது கூட ராஜபக்சே அவருடன் வந்த அறிவிக்கப்பட்ட குற்றவாளியான டக்லஸ் தேவானந்தாவுடன் சிரித்துக்கொண்டே கைகுலுக்குகிறார் நமது பிரதமர் மன்மோகன். காங்கிரசைப் பொருத்தமட்டில் இந்திரா ராஜீவ் சோனியா பிரியங்கா ராகுல் உயிர்களைப்பற்றியும் தி மு கவை பொருத்தமட்டில் அண்ணா துரை, மாறன், கருணாநிதி, சுடாலின், அழகிரி, மனைவியார், துணைவியார், கனிமொழி, மு.க.முத்து, தமிழரசு, கலாநிதி, தயாநிதி இவர்களின் உயிர்களைப்பர்றியும்தான் அக்கறை. மற்ற உயிர்கள் மதுரை தினகரனில் எறிந்த ௩ பத்திரிகையாளர் ஆகட்டும், லட்சக் கனாகில் வான்தாக்குதலில் உயிர் இழந்த ஈழத்தமிழர்கள் ஆகட்டும், போபால் 20000 பேர் ஆகட்டும் எல்லாம் கிள்ளுக்கீரை.

  திமுகவும் காங்கிரசும் ஒழிந்தால்தான் நாடும் மக்களும் நலமாக இருக்க முடியும். மனித உயிருக்கு மதிப்பு இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *