BREAKING NEWS
Search

2000 டிஎம்சி தண்ணீரை வீணாக்கும் கேரளா தமிழகத்துக்கு 10 டிஎம்சி தரமறுப்பது நியாயமா? – வைகோ

கேரள சாலைகளை மறிக்கும் போராட்டம்… வைகோ, பழ நெடுமாறன் உள்பட 8000 பேர் கைதாகி விடுதலை!

கோவை: கேரளத்தில் 2 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாகும்போது, 10 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு தர கேரள அரசு மறுப்பது நியாயமா? என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக-கேரள எல்லையான கோவை மாவட்டம் க.க.சாவடியில் கேரள அரசை கண்டித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தலைமை வகித்த வைகோ பேசியது:

கேரள மக்களுக்கு எதிராகவோ, கேரள-தமிழக மக்கள் இடையே பகையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவோ மறியல் போராட்டம் நடத்தவில்லை. தமிழகத்தின் எதிர்கால சந்ததியினரின் நலன் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகப் போராட்டம் நடத்தப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணை பலம் இழந்து இருப்பதாக போலி சி.டி.க்கள் மூலம் கேரள அரசு அம் மாநில மக்களிடம் பிரசாரம் செய்துவருகிறது. அந்த அணையை உடைக்க அச்சுதானந்தன் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. அணை உடைக்கப்பட்டால் இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவு பாதிக்கப்படும்.

இதை கேரள மக்கள் உணர்ந்து அச்சுதானந்தன் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இப் போராட்டம் நடத்தப்படுகிறது. கேரளத்தில் மலையும், கடற்கரைகளும்தான் உள்ளன. வேளாண் உற்பத்தி செய்ய நிலங்கள் இல்லை.

ஆனால், தமிழகத்தில் ஏராளமான நிலங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் அரிசி, பருப்பு, பால், உணவு தானியங்கள், காய்கறிகள், கால்நடைகள் கேரளத்துக்கு வழங்கப்படுகிறது. நெய்வேலியில் இருந்து 212 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து 50 மெகாவாட் மின்சாரம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொள்ளையடிக்கப்படும் மணல் கேரளத்தில் கட்டுமானப் பணிகளுக்காக கடத்தப்படுகின்றன. அதேநேரத்தில் கேரளத்தில் இருக்கும் மருத்துவ, இறைச்சிக் கழிவுகள் தமிழக எல்லைக்குள் கொட்டப்படுகின்றன.

தமிழகத்தில் இருக்கும் அனைத்து வளங்களையும் பயன்படுத்தும் கேரளம், தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பது எந்த வகையில் நியாயம்? முல்லைப் பெரியாறு, பாம்பாறு,நெய்யாறு, செண்பகவல்லி ஆறு ஆகியவற்றில் இருந்து கேரளம் தண்ணீர் தர மறுத்தால் தமிழகத்தில் இருக்கும் 2 கோடி பேருக்கு குடிநீர் கிடைக்காத நிலை உருவாகும். தண்ணீர் இல்லாவிட்டால், இந்த வளமெல்லாம் அழிந்து போகுமே… பிறகு யாரிடம் கையேந்தும் இந்தக் கேரளம்?

கேரளத்தில் ஆண்டுக்கு 2 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் வீணாகி அரபிக் கடலில் கலக்கிறது. ஆனால், தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. தண்ணீரை தர கேரள அரசு மறுக்கிறது. இது நியாயம்தானா என்பதை கேரள அரசும், அங்குள்ள மக்களும் உணர வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முயற்சி செய்யும் அச்சுதானந்தன் தலைமையிலான அரசுக்குக் கடிவாளம் போடாமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் இருக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் உரிமை பாதுகாக்க தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்,” என்றார்.

மயக்கமடைந்த பழ நெடுமாறன்

இந்தப் போராட்டத்தின் இன்னொரு கட்டமாக தேனி மாவட்டத்திலிருந்து கேரளா செல்லும் 13 சாலைகளில் மறியல் நடைபெற்றது. இதற்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். லோயர்கேம்ப்- குமுளி சாலையில் அவர் மறியல் செய்தார்.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் சேக் தாவூத், பாரதீய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் முருகன்ஜி, 5 மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கே.எம். அப்பாஸ் உள்பட பல்வேறு அமைப்புகள், விவசாய சங்கத்தினர், மகளிர் குழுவினர் மறியலில் ஈடுபட்டனர்.

மறியலின் முடிவில் நெடுமாறன் உள்பட 1707 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தின்போது, வெயில் கடுமையாக இருந்தது. சுமார் 2 மணி நேரமாக போராட்டக் குழுவினருடன் கோஷமிட்டுக் கொண்டேஇருந்த பழ. நெடுமாறன் பின்னர் தலைமையுரையாற்றினார்.

அப்போது, பழ.நெடுமாறன் தலைசுற்றி மயக்கமடைந்து கீழே சாய்ந்ததால் போராட்டக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மதுரையைச் சேர்ந்த டாக்டர் முத்துச்செல்வன், பழ. நெடுமாறனைப் பரிசோதித்ததில், ரத்த அழுத்தம் குறைவாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக மருத்துவக் குழுவினர் அவருக்குச் சிகிச்சை அளித்தனர்.

அனைவரும் விடுதலை..

இந்தப் போராட்டத்தால் கிட்டத்தட்ட நேற்று பகல் முழுவதும் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் முற்றாக நிறுத்தப்பட்டன. இதனை முன்கூட்டியே உணர்ந்து நேற்று முன்தினம் இரவு முழுக்க லாரிகளில் பொருள்களை கேரளாவுக்கு ஏற்றிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில் கைதான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் உள்ளிட்ட 8000க்கும் அதிகமானோர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். இவர்களின் எண்ணிக்கை 50000-க்கும் அதிகமாக இருக்கும் என்றார் வைகோ.

-என்வழி
5 thoughts on “2000 டிஎம்சி தண்ணீரை வீணாக்கும் கேரளா தமிழகத்துக்கு 10 டிஎம்சி தரமறுப்பது நியாயமா? – வைகோ

 1. palPalani

  இவருக்கு வேற வேலையே இல்லையா? ஒன்னு ஈழம்னு கத்துறாரு, இல்லை! இப்படி முல்லை பெரியாருன்னு கத்துறாரு. இவரு என்னைக்குதான் நமக்காக பிரியாணி வாங்கிதரபோராரோ?

 2. bala

  ஆனால் தமிழக பத்திரிகைகள் மிகவும் தரம் தாழ்ந்து கொண்டிருக்கின்றன, எந்த அளவு மக்களிடம் இந்த போராட்டத்தை கொண்டு சேர்த்திருக்கலாம்.. அனைத்தையும் மழுங்கடிக்கும் வேலையை தெளிவாக செய்கின்றன. என்வழி உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

 3. j.Saravanan

  எல்லா பத்திரிக்கையும் வருமானத்தை மட்டுமே பார்கின்றன. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட தமிழரை நினைந்துவிட்டால்

 4. anandhu

  மக்கள் பிரச்சினையை அரசியல் ஆக்கும் தமிழக அரசியல்வாதிகளிடம் பணம் வாங்கி வோட்டு போட்டு, உண்மையாக போராடும் வைகோ போன்றவர்களை தோற்கடிக்கும் நிலை மாறும் வரை, தமிழனுக்கு பக்கத்துக்கு மாநிலத்தினர் இதுபோல் தண்ணி காட்டத்தான் செய்வார்கள். இன்றைய நிலையில் காந்தி தேர்தல்ல நின்ன கூட காந்தி நோட்டு அவரை ஜெயிச்சிடும்.
  படித்தவர்கள் விளையாட்டை தீவிர பிரச்சினையாக விவாதிக்கிறார்கள். இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளை விளையாட்டாக விட்டு விடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *