20-20 உலகக் கோப்பை: சூப்பர் 8-ல் இந்தியா!
செயின்ட் லூசியா: மெல்ல மெல்ல சூடுபிடிக்கத் துவங்கிவிட்டது மூன்றாவது 20 ஓவர் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.
ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா. இந்த உலகக் கோப்பையில் சூப்பர் 8 கட்டத்தை அடையும் முதல் அணி இந்தியாதான்.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் ஸ்மித், இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார்.
இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இரண்டாவது பந்திலேயே, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து கார்த்திக்குடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 6-வது ஓவரில் பிரிந்தது. 17 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த கார்த்திக் காலிஸ் பந்து வீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து யுவராஜ் சிங் களம் இறங்கினார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். குறிப்பாக ரெய்னாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்குமாக விரட்டினார்.
இந்த ஜோடி 16-வது ஓவரில் பிரிந்தது. யுவராஜ் சிங் 30 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 2 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்து வந்து பதான் 11 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து ரெய்னாவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். 19-வது ஓவரின் 3-வது பந்தில் ரெய்னா சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்தார். 101 ரன்கள் எடுத்த அவர் அடுத்த பந்திலேயே அவுட் ஆனார். டோனி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது.
டோனி 16 ரன்களுடனும், ஹர்பஜன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
அடுத்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் காலிஸ் 54 பந்துகளில் 73 ரன்கள் குவித்து அவுட் ஆனார். கேப்டன் ஸ்மித் 36 ரன்கள் (28 பந்துகள்) எடுத்து ரன் அவுட் ஆனார்.
கடைசி கட்டத்தில் டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் அந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன
தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியா 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
உடல் நலக் குறைவு காரணமாக கௌதம் கம்பீர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டார்.
வேகப் பந்து வீச்சாளர் ஜாகீர்கானுக்கு பதிலாக, ஆல் ரவுண்டர் பியூஸ் சாவ்லா களம் இறங்கினார்.
வங்க தேசத்தை வென்ற பாகிஸ்தான்
ஞாயிற்றுக் கிழமை நடந்த மற்றொரு ஆட்டத்தில் வங்க தேச அணியை எளிதில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 172 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய வங்கதேச அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.
இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டங்கள்
இலங்கை – ஜிம்பாப்வே
(இரவு 7, கயானா)
மேற்கிந்தியத்தீவுகள் – இங்கிலாந்து
(இரவு 11, கயானா)