BREAKING NEWS
Search

2 ஜி ஒதுக்கீடு… ரூ 60 கோடி பெற்றேன்‍! – நீரா ராடியா ஒப்புதல்

‘ராசா மூலம் 2 ஜி ஒதுக்கீட்டை வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு பெற்றுத் தர ரூ 60 கோடி வாங்கினேன்!’ – நீரா ராடியா ஒப்புதல்

டெல்லி: 2 ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பாக, முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவுடன் பேசி காரியம் சாதித்துள்ளேன். இதற்காக ரூ 60 கோடியை ஆலோசனைத் தொகையாகப் பெற்றிருக்கிறேன்” என்று நீரா ராடியா வாக்குமூலம் அளித்துள்ளார்.

வைஷ்ணவி கார்பரேட் கம்யூனிகேஷன்ஸ் என்ற பத்திரிகைத் தொடர்பு மற்றும் ஆலோசனை நிறுவனத்தை நடத்துபவர் நீரா ராடியா. டெல்லியில் பல்வேறு பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசகராகச் செயல்படுகிறார். அதற்காக அவர்களிடம் ஆலோசனைக் கட்டணம் பெறுகிறார்.

அவருடைய வாடிக்கையாளரான டாடா குழுமத்தின் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பலன் கிட்டுவதற்காக தொலைத் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ. ராசாவுடன் பேசியிருப்பதையும், தான் கூறிய ஆலோசனைகளுக்காக ரூ.60 கோடியைக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அமலாக்கப் பிரிவு விசாரணை

மத்திய நிதித்துறையின் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவின் அமல்பிரிவு இயக்கக (இ.டி.) அதிகாரிகள் நீராவிடம் புதன்கிழமை காலை 9 மணி முதல் தொடர்ச்சியாக 8 மணிநேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான பல்வேறு உண்மைகளை ஒப்புக் கொண்டார்.

அவற்றை அவர் தனது கைப்பட 20 பக்கங்களில் எழுதிக் கொடுத்திருக்கிறார். அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் மேலும் கேள்விகள் கேட்க நேர்ந்தால் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் உறுதி அளித்திருக்கிறார். அத்துடன் வங்கிக் கணக்கு, வரைவோலை நகல் உள்ளிட்ட 500 ஆவணங்களையும் அவர் ஒப்படைத்திருக்கிறார். விசாரணைக்குத் தேவை என்றால் வேறு ஆவணங்களையும் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

நீரா ராடியாவுக்கு மத்தியில் உள்ள மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோருடன் நல்ல பரிச்சயம் இருக்கிறது. பிரபல நிறுவனங்களுக்குத் தொழில் வளர்ச்சிக்காக அவர் ஆலோசகராகச் செயல்படுகிறார். அத்துடன் அவர்களுடைய செயல்பாடுகளுக்கு ஏதேனும் இடையூறு இருந்தால் அவற்றைக் களையவும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களையோ அதிகாரிகளையோ சந்தித்து ஆவன செய்கிறார். இந்தச் சேவைக்காக அவருக்கு கோடிக்கணக்கில் கட்டணம் தரப்படுகிறது. நீரா ராடியாவிடம் பிரிட்டிஷ் நாட்டு பாஸ்போர்டும் வைத்துள்ளார்.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு:

அவருடைய உயர் வட்டார பழக்கங்களையும் வருவாய் பெறக்கூடிய வாய்ப்புகளையும் உற்றுக் கவனித்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அவரைப் பற்றி மேலும் தகவல்களைத் திரட்ட 2009 நவம்பரில் அவருடைய தொலைபேசி உரையாடலை அவருக்குத் தெரியாமலே பதிவு செய்ய ஆரம்பித்தனர். அவருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் ஆகியோருக்குள்ள நெருக்கம் அந்த உரையாடல் பதிவு மூலம் உறுதிப்பட்டிருக்கிறது.


சி.பி.ஐ.க்குக் கடிதம்:

இதையடுத்து வருமான வரித்துறை இணை ஆணையர் ஆசிஷ் அப்ரோல், மத்திய புலனாய்வுத்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் விநீத் அகர்வாலுக்கு இவற்றையெல்லாம் சுட்டிக் காட்டி 2009 நவம்பர் 20-ல் கடிதம் எழுதியிருக்கிறார். இதையடுத்தே நீரா ராடியாவிடம் விசாரிக்கலாம் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டாடா டெலிசர்வீசஸ், யூனிடெக் வயர்லெஸ் ஆகிய தனது வாடிக்கையாளர்களுக்காக ஆ. ராசாவைச் சந்தித்திருக்கிறார் நீரா ராடியா.

அவருடைய வைஷ்ணவி கார்பரேட் கன்சல்டன்ட்ஸ், விட்காம், நியூகாம் கன்சல்டிங், மேஜிக் ஏர்லைன்ஸ், நோசிஸ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு யார் யார் எதற்காகப் பணம் கொடுத்தார்கள் என்பதையும் வருவாய்ப் புலனாய்வுத் துறையின் அமல்பிரிவு இயக்குநரக அதிகாரிகள் கேட்டனர். தனக்குப் பணம் கொடுத்தவர்களின் பெயர்களையும் நீரா தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

“ராடியாவிடம் விசாரணை நடத்தினோம், தேவைப்பட்ட ஆவணங்களைப் பெற்றோம். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வரவேண்டும், மேற்கொண்டு நாங்கள் கேட்கும் ஆவணங்களைத் தர வேண்டும் என்று கூறியிருக்கிறோம்” என்றார் அமலாக்கப் பிரிவின் பிராந்திய துணை இயக்குநர் பிரபா காந்த்.

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்டப்படியும் அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டப்படியும் நோட்டீஸ் தரப்பட்டு ராடியாவிடம் விசாரணை நடந்திருக்கிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் 50-வது பிரிவின்கீழ் அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது. அவர் மீது வழக்கு தொடரும்பட்சத்தில் இதை நீதிமன்றத்தில் சாட்சியமாகப் பதிவு செய்ய முடியும்.

அனைத்தையும் சொல்லிவிட்டேன் – நீரா ராடியா

விசாரணை முடிந்து வெளியில் வந்த நீரா ராடியாவிடம் நிருபர்கள் இதுகுறித்து கேட்டபோது, “அதிகாரிகள் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார்கள், நான் அதற்குப் பதில் அளித்திருக்கிறேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகக் கூறியிருக்கிறேன், ஆவணங்களைக் கேட்டாலும் தருவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்த அனைத்தையும் கூறிவிட்டேன்,” என்றார்.

2ஜி முறைகேட்டில் நீராவின் பங்கு!

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ராடியாவுக்கும் பங்கு இருப்பதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்துப் பேசுவதுடன் அரசின் கொள்கைகள், விதிமுறைகளையே மாற்றச் செய்யும் அளவுக்கு அவர் செல்வாக்கு படைத்தவர் என்றும் தெரிய வந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் வியக்கின்றனர்.

யார் இந்த நீரா ராடியா?

49 வயதாகும் நீரா ராடியாவின் பெற்றோர் காஷ்மீரை சேர்ந்தவர்கள். இவர்கள் கிழக்கு ஆப்ரிக்காவில் பணியாற்றியபோது, பிறந்தவர் நீரா. இங்கிலாந்து பிரஜை. ஈ இருந்தாலும், ‘இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்டவர்’ என்ற தகுதியைப் பெற்றுள்ளார்.

இவர் தன் கணவர் ஜானக் ராடியாவை விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவரது சரளமான ஆங்கிலப் பேச்சுத் திறன்தான் இவரை ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் எளிதில் நெருக்கத்தை ஏற்படுத்தியது. 1990-களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை இந்தியாவில் தொடங்கும் முயற்சி (டாடா நிறுவனம் சார்பில்) மூலம் இங்கு வந்து சேர்ந்தார்.

ஆனால் டாடாவுக்கு விமான நிறுவனம் தொடங்க அனுமதி கிடைக்கவில்லை. எனவே கார்ப்பரேட் கன்ஸல்டன்ட் ஆக மாறினார். இப்போது டாடா, ரிலையன்ஸ் போன்ற பெரிய பெரிய நிறுவனங்களுக்கு அவர்தான் கன்ஸல்ட்ன்ட்.

நீரா ராடியாவிடம் பெற்றுள்ள தகவல்கள் அடிப்படையில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால், பல தொழில்துறை திமிங்கிலங்கள் கையும் களவுமாக மாட்டுவார்கள்… பல அதிர வைக்கும் உண்மைகள் வெளியாகும்.

2 ஜி விவகாரத்தில், அமைச்சர் ராசாவை சந்தித்து லாபி செய்த நீராவுக்கே ரூ 60 கோடி ‘பீஸ்’ என்றால், துறைக்கு பொறுப்பானவர்கள், அவர்களுக்கும் மேல்மட்டத்தில் இருந்தவர்களுக்கு எத்தனை கோடி போயிருக்கும்?

இதையும் கண்டுபிடித்து சொல்வார்களா புலனாய்வுத் துறையினர்..?
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *