BREAKING NEWS
Search

1,76,0000 + 70,000 + 42,000 = 2,88,000!! – கோயிந்தா கோயிந்தா!!

1,76,0000 + 70,000 + 42,000 = 2,88,000!! – கோயிந்தா கோயிந்தா!!

2002. வாஜ்பாய் பிரதமராக இருந்த நேரம். நதிகள் இணைப்பு குறித்த பேச்சுகள் அதன் உச்ச கட்டத்தை எட்டியிருந்தன.

நிபுணர் குழுவொன்றை வைத்து நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு ஆகும் செலவு குறித்த மதிப்பீட்டைத் தரச் சொன்னது மத்திய அரசு.

வட இந்திய மற்றும் தென்னக நதிகளை இணைக்கும் இந்தத் திட்டத்துக்கு ரூ 500000 லட்சம் கோடி தேவைப்படும் என அறிவித்தது அந்தக் குழு!

வாஜ்பாய் அரசு போன பிறகு, காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் பிரதமரானார். இந்த நதிநீர் இணைப்புப் பிரச்சினை மீண்டும் எழுந்தது. இமயமலையில் உற்பத்தியாகும் 14 முக்கிய ஆறுகளையும் தென்னக நதிகளுடன் இணைக்கும் திட்டம் குறித்து விரைந்து முடிவை அறிவிக்குமாறு, ஒரு பொது நல வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்னது.

சில மாதங்கள் கழித்து மன்மோகன் சிங் அரசு உச்சநீதிமன்றத்தில் இப்படி பதில் கொடுத்தது:

இந்தத் திட்டம் மிகப் பெரிய செலவு பிடிக்கும் ஒன்றாக உள்ளது. திட்டச் செலவு ரூ 5 லட்சம் கோடிகளுக்கும் மேல் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. நாடு இப்போதிருக்கும் நிலையில், நதி நீர் இணைப்புத் திட்டம் சாத்தியமல்ல…” என்று ஒரேயடியாக நதிநீர் இணைப்புக் கனவில் மண்ணள்ளிப் போட்டது!

ரூ 5 லட்சம் கோடி தொகையை, நாட்டின் ஜீவாதாரப் பிரச்சினையைத் தீர்க்க செலவழிக்க முடியாது என்று சொன்ன மன்மோகன் சிங் அரசில், சமீப காலத்தில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் ஊழலின் மதிப்பு எவ்வளவு தெரியுமா… ரூ 2.88 லட்சம் கோடி!!

1,76,0000….

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மட்டும் மன்மோகன் சிங் ஆசியுடன் அன்றைய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ ராசாவால் ஏற்பட்ட இழப்பு ரூ 1.76 லட்சம் கோடி. இதனை யாரோ ஒரு எதிர்க்கட்சித் தலைவர் சொல்லவில்லை… இந்திய நாட்டின் அரசியல் சாசன சட்டப்படி உருவாக்கப்பட்ட மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் அதிகாரப்பூர்வமாக, ஒரு அறிக்கையாகவே தாக்கல் செய்திருக்கிறார்.

இந்தத் தொகையை ராசாவா வாங்கினார் என்ற கேள்வி எழலாம். லஞ்சத்தை நேரடியாகத்தான் பெற வேண்டும் என்றில்லையே!

இந்த 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டில் ராசா தவிர்த்து யாரெல்லாம் பலனடைந்திருக்கிறார்கள் என்று பார்த்தால், அது தலை சுற்ற வைத்துவிடும். திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தலைமை, அந்த தலைமையின் குடும்பங்கள், அந்த குடும்பங்களுக்கு கப்பம் கட்டிய கார்ப்பரேட்டுகள் என பலரும் இந்த விவகாரத்தில் தொடர்புள்ளவர்களாக உள்ளனர்.

அரசியல் புரோக்கரான நீரா ராடியாவுக்கே ஒரு 2 ஜி டீலை முடித்துக் கொடுக்க ரூ 60 கோடி கமிஷனாகக் கிடைத்திருக்கிறதென்றால், இந்த ஊழலின் கதாநாயகன்கள் பெற்றுள்ள ஆதாயத்தின் அளவை யூகிக்க முடிகிறதா…

70,000…

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டோடு ஒப்பிடுகையில் இந்த ரூ 71000 கோடி சின்ன தொகைதான்!! காமன்வெல்த் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்தத் தொகையில் எத்தனை சதவீதம் செலவிடப்பட்டது என்ற கணக்கே இன்னும் வந்தபாடில்லை. பெயருக்கு சில கோடிகளை செலவழித்துவிட்டு, மீதியை கூட்டாக பங்குபோட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த கொள்ளையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமே இல்லை. புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.

42000…

அரசியல்வாதிகளுக்கு நாங்கள் மட்டும் சளைத்தவர்களா… என்ற வேகத்தில் அதிகாரிகள் அடித்த கொள்ளையின் ஒரு பகுதிதான் இந்த ரூ 42000 கோடி.

வீட்டுக் கடன்கள் வழங்குதல் என்ற பெயரில் 12 தேசிய வங்கிகள் மற்றும் எல்ஐசியின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் அதிகாரிகளே அடித்த கொள்ளை இது. இந்தத் தொகை ஆரம்பகட்ட விசாரணையில் வெளிவந்திருப்பது மட்டுமே. அடுத்த கட்ட விசாரணைக்குப் போகும்போது, 2 ஜி ஸ்பெக்ட்ரம் அளவுக்கு வளர்ந்து நிற்கலாம்… சொல்ல முடியாது!

இவற்றைத் தவிர, ‘சில்லறை ஊழலாக’ ஆதர்ஷ் வீட்டு வசதி முறைகேடு, எடியூரப்பாவின் நில ஒதுக்கீட்டு முறைகேடு (இது கர்நாடகத்தில் பாஜகவின் திருவிளையாடல்) என பட்டியல் தொடர்கிறது.

ஆனால் மக்களுக்கு இதில் பெரிதாக ஆர்வம் இல்லை. ‘அடித்தால் லட்சக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கோடிகளில்தான் இனி அடிக்க வேண்டும்… அதில்தான்

கொஞ்சம் சுமாரான த்ரில் இருக்கிறது. சும்மா சில்லறைத்தனமா பத்து கோடி, நூறு கோடின்னு அடிக்கறதெல்லாம் ஒரு ஊழலா..?’ என்ற நினைப்பு வந்துவிட்டது அவர்களுக்கு.

எப்படியும் எந்த ஊழலிலும், கொள்ளையடிக்கப்பட்ட தொகை அரசு கஜானாவுக்கு திரும்பியதாக சரித்திரம் இல்லையென்பதால், கொஞ்ச நாள் பரபரப்பாகப் பேசி பொழுது போக்கிவிட்டு மறந்துபோவது ஒன்றுதான் இந்த ஊழல் கதைகளின் க்ளைமாக்ஸ்!

இப்போது அந்தக் க்ளைமாக்ஸை நோக்கித்தான் வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது நிலைமை. புதிய தேர்தல், கூட்டணிக் கதைகளுக்கு கருணாநிதி, சோனியா உள்ளிட்டோர் பரபரப்பாக திரைக்கதை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்துக்கு எத்தனை ஆயிரம் ரூபாய் கவர் கிடைக்கும் என்ற பிரச்சினை மக்களுக்கு…

தலைவர்கள் – அதிகாரிகள் தைரியமாக ஊழல் செய்யலாம்!

-வினோ
11 thoughts on “1,76,0000 + 70,000 + 42,000 = 2,88,000!! – கோயிந்தா கோயிந்தா!!

  1. senthamil anthanan

    இந்த ஊழலைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தத் தளத்தில் எழுதுகிற பெரும்பாலானவர்கள் ஈழத் தமிழர்களுக்காக இரங்குவது போலச் சில பாசாங்கு பண்ணினாலே பாதித் தமிழ்த் தொண்டு செய்த பாக்கியம் கிட்டிவிடும் என்று நம்புகிறார்கள். தாமரை அக்கா பதிவைக் கொஞ்சம் பாருங்களேன்! கருணாநிதி பாணியில் அதில் கவிதைகள் வேறே! இங்கே எழுதுறவங்க, இந்தியாவில் இருக்கிற செந்தமிழ் நாட்டைப் பற்றியும் கொஞ்சம் சிந்திங்க சார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *