BREAKING NEWS
Search

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராசா மீது தவறில்லை! – பிரதமர்

இரண்டாம் முறை பிரதமரான பிறகு மன்மோகன் சிங்கின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு!

டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசா மீது எந்த தவறும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பதவியேற்று ஓராண்டு நிறைவுறுவதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற பிரதமர், பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு பதி்லளித்தார்.

அவரது பேட்டி:

நாங்கள் 2-வது தடவையாக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் போதுமான சாதனைகளை நிகழ்த்தி உள்ளோம். இன்னும் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தவிருக்கிறோம். எங்கள் சாதனையை யாரும் மறுக்க முடியாது.

இந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும். அடுத்து 10 சதவீத சாதனையை எட்டி சாதனை புரிவோம்.

இன்னும் வேகமான வளர்ச்சி நமக்கு தேவை. அதை செய்து காட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம்

விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது. பண வீக்கம் அதிகமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தி சாதாரண மக்களை பாதிக்காமல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண வீக்கத்தை வரும் டிசம்பருக்குள் 5-ல் இருந்து 6 சதவீதத்துக்குள் கொண்டு வருவோம். தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

விவசாய உற்பத்தியை நவீன படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான வசதி வாய்ப்புகளும் அதிகப்படுத்தப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக ரூ.1000 கோடியில் தேசிய சமூக பாதுகாப்பு நிதி உருவாக்கப்படும்.

தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தல்

தேசிய பாதுகாப்புக்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தீவிரவாதம் எந்த மதத்தையும் சேர்ந்தது அல்ல. ஆனால் மதத்தை சார்ந்த சில தவறான நபர்கள் அதை இயக்கி கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் அரசு வன்முறை மூலம் எந்த ஒரு மனித உரிமை மீறல் நடப்பதையும் அனுமதிக்காது. தீவிரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப் படும். எந்த வகையான தீவிரவாதத்தையும் அனுமதிக்கமாட்டோம்.

நக்சலைட்டுகளால் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது…

நக்சலைட்டுகள் உள்நாட்டு பாதுகாப்புக்கு சவாலாக இருக்கின்றனர். நக்சலைட்டு பிரச்சினையை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.

நக்சலைட்டுகள் பிரச்சினை தொடர்பாக நான் பலமுறை மாநில அரசுகளுடன் பேசி இருக்கிறேன். நக்சலைட்டுகளால் நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதை அனைத்து மாநில முதல்வர்களும் புரிந்து கொண்டுள்ளனர்.

தீவிரவாதிகளையும், நக்சலைட்டுகளையும் கட்டுப்படுத்த தவறினால் நாட்டின் வளர்ச்சியை பாதித்து விடும். பொருளாதார மாற்றங்கள் பலன் தராமல் போய்விடும்.

காஷ்மீரில் உள்ள அனைத்து அமைப்புகளும் வன்முறைகளை கைவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும்.

நம்பிக்கையற்ற பாகிஸ்தான்

பாகிஸ்தானுடன் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இல்லாததுதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் தனது மண்ணில் இந்தியாவுக்கு எதிரான எந்த தீவிரவாதத்துக்கும் அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவாதத்தை தர வேண்டும்.

பாகிஸ்தான் நமது பக்கத்து நாடு. அந்த நாட்டுடன் சேர்ந்து வளர்ச்சி அடைய வேண்டும். அவர்களோடு நல்லுறவை மேற்கொள்ள வேண்டும் என்பதையே விரும்புகிறோம்.

தற்போது நடக்கும் பேச்சு வார்த்தைகளால் பல முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

அப்சல்குருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்…

பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பாக சட்டம் தனது கட மையை செய்யும். அரசு செயல்பாட்டில் வெளிப் படையான நிலையை கடைப் பிடிப்போம். அணு ஒப்பந்த மசோதா தொடர்பாக நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுக்கும் என கருதுகிறேன்.

சிபிஐ சுதந்திரமான அமைப்பு

நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும். பாதுகாப்பு படைகள், உளவு நிறுவனங்கள் நவீனப்படுத்தப்படும்.

சி.பி.ஐ. சுதந்திரமாக செயல்படும் இயக்கம். அவர்கள் பணியில் எங்கள் அரசு தலையிடுவது இல்லை.

தனியார் தொழிற்சாலைகளில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசியல் கட்சி, தொழில் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

சோனியாவுடன் கருத்து வேறுபாடு?

சோனியா காந்திக்கும் எனக்கும் எந்த கருத்து வேறு பாடும் இல்லை. சோனியா ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர். நான் ஒரு காங்கிரஸ்காரன். நான் வாரம் ஒரு தடவை சோனியா காந்தியை சந்தித்து அரசியல் பிரச்சினை மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் பற்றி ஆலோசித்து வருகிறேன்.

கட்சிக்கு உட்பட்டு அரசு பணிகள் சிறப்பாக நடக்க வேண்டும், என்பதற்காக இந்த ஆலோசனைகளை நடத்துகிறோம். எங்களுக்குள் நம்பிக்கை இன்மையோ, அல்லது தவறான நம்பிக்கையோ ஏற்படுவது இல்லை. அவர் அரசு சிறப்பான செயல்பாட்டுக்கு ஆலோசனை வழங்குவார். அவருடைய ஆலோசனையை பெற்று அவரின் வழிகாட்டுதல்படி செயல்பட்டு வருகிறேன்.

5 ஆண்டுகளும் பதவியில் இருப்பேன்…

எனது பணிகள் முடிவதற்கு முன்பு ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை. எங்கள் ஆட்சி 5 ஆண்டு முழுவதற்கும் நீடிக்கும். நான் இப்போது செய்து இருக்கும் பணிகளை விட இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என கருதுகிறேன். ஆனாலும் எனது பணியில் திருப்தியாக இருக்கிறேன். கட்சிக்கும், ஆட்சிக்கும் மிகுந்த ஒத்துழைப்பு உள்ளது.

மந்திரிகள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படையாக சொல்வது சரியானது அல்ல என்று கருதுகிறேன்.

வெட்டு தீர்மானம் தொடர்பாக மாயாவதி மற்றும் முலாயம் சிங்குடன் நாங்கள் எந்த மறைமுக உடன்பாடும் ஏற்படுத்தி கொள்ளவில்லை.

ஐபிஎல் விவகாரம்…

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்பாக நிதித்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதில் தவறு கண்டு பிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சில் மந்திரி சபையை விட பெரியது அல்ல. அந்த அமைப்பு நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.

ராசா மீது தவறில்லை!

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்து விட்டதாக எழுந்த புகார்கள் பற்றி பாராளுமன்றத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது. நானும் மத்திய தகவல் தொடர்பு மந்திரி ஆ.ராசாவை அழைத்து பேசினேன். அவர் என்னிடம் முழு விளக்கம் கொடுத்தார்.

இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைத்த வழி காட்டுதல்களின் அடிப்படையிலேயேதான் நடந்து கொண்டதாக அமைச்சர் ராசா கூறினார். இது தொடர்பாக தொலை தொடர்பு ஆணையமும் ஆதரவு தெரிவித்து உள்ளது.

மேலும் 2003-ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கும் கொள்கை அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்பட்டதாக ராசா வெளிப்படையாக கூறி உள்ளார்.

அமைச்சர் ராசா அளித்துள்ள விளக்கத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு அந்த நேரத்து கொள்கை அடிப்படையில் நடந்ததை தெரிவித்துள்ளார். அவர் மீது தவறு இல்லை. இதில் உள்ள முழு பிரச்சினையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய ஊழல் தடுப்பு கமிஷனர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் நான் ஒரு தீர்க்கமான கருத்தை வெளியிடுவது சரியாக இருக்காது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீடுக்கும், 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் சரியானதை காண வேண்டியது அவசியமாகும்.

ஊழல் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பதை ஆட்சி தொடக்கத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன். ஆட்சியில் எந்த மட்டத்தில் ஊழல் நடந்தது கண்டு பிடிக்கப்பட்டாலும் நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ராகுலுக்கு வழிவிடத் தயார்!

ராகுல் காந்தி பிரதமர் பதவியை ஏற்க, தற்போதைய உங்கள் பதவிக் காலத்திலேயே, விலகி வழி விடுவீர்களா? என்று கேட்டார் ஒரு நிருபர்.

அதற்கு பதிலளித்த பிரதமர், “காங்கிரஸ் கட்சியை சீரமைக்கும் மிகச் சிறப்பான பணியை ராகுல்காந்தி செய்து கொண்டிருக்கிறார். அவர் மத்திய மந்திரி பதவி வகிக்க எல்லா தகுதிகளும் உள்ளது.

இது தொடர்பாக நான் பல தடவை ராகுலிடம் விவாதித்துவிட்டேன். ஆனால் மந்திரி சபையில் சேர அவர் இதுவரை ஆர்வம் காட்டாமலே உள்ளார்.

இது தொடர்பாக பல தடவை கேட்டும் அவர் சாதகமான பதில் சொல்லவில்லை. ராகுல் அமைச்சரவையில் சேர்ந்தால், அது காங்கிரஸ் கட்சிக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும்.

மத்திய மந்திரி சபையில் சேர ராகுல்காந்தி எப்போது விருப்பம் தெரிவித்தாலும் சரி, அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும். காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்தால் யாருக்காகவும் (ராகுல் உள்பட) நான் பிரதமர் பதவியை விட்டு விலகி மகிழ்ச்சியுடன் வழி விட தயாராக இருக்கிறேன்.

கட்சி பொறுப்பிலும், ஆட்சிப் பொறுப்பிலும் இளைஞர்கள் வரவேண்டும் என்று நான் எண்ணுவது உண்டு. இளைஞர்கள் யார் வந்தாலும் வழி விட நான் தயாராக உள்ளேன்.

சாதிவாரி கணக்கெடுப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்திலும், வேறு சில பிரிவுகளில் இருந்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இதுபற்றி மந்திரி சபையில் ஆய்வு செய்ய கேட்டுள்ளேன். அது பரிசீலனையில் உள்ளது.

புதிய மாநிலங்களை உருவாக்கும் திட்டம் எதுவும் இப்போது அரசிடம் இல்லை. தெலுங்கானா மாநிலம் ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஆய்வு ஒரு கமிட்டி மூலம் நடந்து வருகிறது…, என்றார் பிரதமர்.

பிரதமராகத இரண்டாம் முறை பதவியேற்ற பிறகு உள்நாட்டில் பத்திரிகையாளர்களை பிரதமர் சந்திப்பது இதுவே முதல் முறை என்பதால் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது. ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் நூற்றுக்கணக்கான நிருபர்கள் பங்கேற்றனர்.

-என்வழி
7 thoughts on “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராசா மீது தவறில்லை! – பிரதமர்

 1. மன்மோகன் சிங்

  இத்தனை நாளா பங்கு பிரிப்பதில் உடன்பாடு ஏற்படவில்லை, அதனால் நானும் வாயை திறக்க வில்லை, இப்பதான் எங்க பங்கு செட்டில் ஆச்சு…எனவே தான் சொல்கிறேன் “”””ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராசா மீது தவறில்லை”””

 2. Chozhan

  நல்ல மனிதர் அரசியலுக்கு வந்து நிறைய பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இத்தாலியின் மேற்பார்வையில் அமெரிக்காவின் அதட்டலில் இந்தியா முதுகெலும்பு இல்லாமல் இருக்கவேண்டிய கட்டாயம். ம்ம் காலம் மாறும் காட்சி மாறும். ராசா/கருணாநிதி/சோனியா கூட்டணி வெளிச்சத்திற்கு வரும். நாம் இருப்போம் ஆனால் இந்த ஆட்சி இருக்காது. அப்பொழுது தெரிய வரும் பொறுத்து இருப்போம்.

 3. sakthivel

  மன்மோகன் சிங்கும் “கை” தேர்ந்த அரசியல்வாதியாகிவிட்டார்….

  காங்கிரஸ் கட்சி இந்தியாவை சீர்குலைத்துவிடும் என்றுதான் மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியை கலைக்க நினைத்தார், அவரின் தீர்க்கதரிசனத்தை சோனியா நிச்சயம் நிறைவேற்றுவார்……

 4. r.v.saravanan

  அமைச்சர் ராசா அளித்துள்ள விளக்கத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு அந்த நேரத்து கொள்கை அடிப்படையில் நடந்ததை தெரிவித்துள்ளார். அவர் மீது தவறு இல்லை.

  அப்ப யார் மேலே தான் தவறு ?

  விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது

  எங்களுக்கு மிக கவலை அதிகரிக்கிறது

 5. Mariappan

  காங்கிரஸ் கட்சி இந்தியாவை சீர்குலைத்துவிடும் என்றுதான் மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியை கலைக்க நினைத்தார், அவரின் தீர்க்கதரிசனத்தை சோனியா நிச்சயம் நிறைவேற்றுவார்……

  nandri sakhtivel.

 6. palPalani

  மத்திய அமைச்சர் ராசாவே ஒத்துகொண்டாலும், இந்த கல்லூளிமங்கன் மாட்டான் போலிருக்கே? எங்க, நீ செஞ்சத புரூப் பண்ணுன்னு சொல்வான் போலிருக்கே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *