BREAKING NEWS
Search

ஸ்ட்ரைக் செய்வதாக மிரட்டும் விமான நிறுவன அதிபர்களைக் கைது செய்யலாம்! – கேப்டன் கோபிநாத்


ஸ்ட்ரைக் செய்வதாக மிரட்டும் விமான நிறுவன அதிபர்களைக் கைது செய்யலாம்! – கேப்டன் கோபிநாத்

ங்களுக்கு அரசு ரூ.52000 கோடி நிதிச் சலுகை தராவிட்டால் ஆகஸ்ட் 18-ம் தேதி ஸ்ட்ரைக் செய்வோம் என தனியார் விமான நிறுவன அதிபர்கள் அரசை மிரட்டி வருகின்றனர். deccan_gopinath

இதற்கு அரசுத் தரப்பில் கடுமையான எச்சரிக்கை பதிலடியாகக் கிடைத்துள்ளது. அதுபற்றி இன்னொரு செய்தியில் பார்ப்போம்.

ஆனால் இந்த ஸ்ட்ரைக்கைப் பற்றி தனியார் விமான நிறுவன அதிபர் ஒருவரை கடுமையாகச் சாடி பேட்டியளித்துள்ளார்.

விஜய் மல்லையா, நரேஷ் கோயல் போன்றவர்கள் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளதாக அவர்களை நன்கறிந்த கேப்டன் கோபிநாத் கூறியுள்ளார்.

நேற்று இரவு அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி…
பெங்களூர்: ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் ஸ்ட்ரைக்கில் ஈடுபடுவதாக மிரட்டும் எல்லா தனியார் விமான நிறுவன அதிபர்களையும் அரசு கைது செய்யலாம். காரணம் இவர்கள் செய்வது சட்ட விரோதம். விமான நிறுவனம் துவக்கினால் என்னென்ன ரிஸ்க் இருக்கிறது என்று தெரிந்துதானே இந்தத் தொழிலுக்கு வந்தார்கள்?,என கேள்வி எழுப்பியுள்ளார் டெக்கன் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் கேப்டன் கோபிநாத்.

ஏர் டெக்கன் எனும் பெயரில் குறைந்த கட்டண விமானங்களை இயக்கியவர் கோபிநாத். ஆனால் 2007-ல் தனது நிறுவனத்தை விஜய் மல்லையாவுக்கு விற்றுவிட்டார். இப்போது டெக்கன் விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

தனியார் விமான நிறுவனங்கள் தற்போது அறிவித்துள்ள ஸ்ட்ரைக் பற்றி அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.

அவர் கூறியதாவது:

“தனியார் விமான நிறுவனங்கள் மக்களையும் அரசையும் ஏமாற்ற முயற்சிக்கின்றன. ஒரு வித மோசடி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். சும்மா ஒரு கல்லை எறிந்து பார்ப்போம். போனால் கல்… வந்தால் எக்கச்சக்க லாபம் என்பதே அவர்கள் நோக்கம்.

இதை ஆரம்பத்திலேயே அடியோடு நசுக்க வேண்டும்.

விமான நிறுவனம் ஆரம்பித்தால் என்னென்ன இடர்பாடுகள் வரும், விமான எரிபொருள் விலை எவ்வளவு, இது குறையுமா குறையாதா? போன்ற விவரங்கள் தெரியாமலா ‘பிஸினஸ் மாக்னெட்டுகள்’ என வர்ணித்துக் கொள்ளும் மல்லையாவும் நரேஷ் கோயலும் விமான நிறுவனங்களை ஆரம்பித்தார்கள்!

நஷ்டம் வந்தாலும் தாங்குவோம் என்று சொல்லித்தானே ஆரம்பித்தார்கள்… இப்போது கூப்பாடு போடுவதில் என்ன நியாயம் இருக்கிறது. இவர்கள் விமான நிறுவனம் ஆரம்பித்தபோது விமான நிலைய வாடகை, எரிபொருள் கட்டணங்கள் குறைவாகவா இருந்தன… அன்றைக்கும் இதே அளவு அதிகபட்ச கட்டணத்தைதான் அரசு வசூலித்தது. அப்போது லாபம் வந்தது… இப்போது வரவில்லையென்றால் காரணம் என்னவென்பதை விமான அதிபர்கள் யோசிக்க வேண்டும்.

இந்த நாட்டில் 98 சதவிகித மக்கள் பஸ்கள், ரயில்களில்தான் பயணிக்கிறார்கள். மீதி உள்ளவர்களில் 1 சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் விமானங்களை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். எப்போதாவது விமானத்தைப் பயன்படுத்துபவர்கள் கொஞ்சம் பேர் உள்ளார்கள். இந்த பயணிகளைக் கூடத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை இந்த ‘அதிபர்களால்’. இதுதான் உண்மை!

காரணம் விமானங்களில் வசூலிக்கப்படும் அதிகபட்ச கட்டணம். ரயில்களின் இரண்டாம் வகுப்பு ஏசி கட்டண அளவுக்கு மட்டுமே விமானக் கட்டணங்கள் இருந்தால் மக்கள் ஏன் ரயில்களைத் தேடி ஓடப் போகிறார்கள்… பயணிகள் வருகை கணிசமாக இருக்கும். லாபம் குறைவாக இருந்தாலும், விமானங்களைப் பயன்படுத்துவோர் பெருகுவார்கள், தொடர்ந்து விமானங்கள் தடையின்றி இயங்கிக் கொண்டே இருந்திருக்கும்.

ஆனால் இந்த உண்மைகளை, வர்த்தக அணுகுமுறைகளை வசதியாக மறந்துவிட்டு, விமான நிறுவனங்களை கூட்டு சேர்த்துக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். இது ஆபத்தானது.

உள்நாட்டில் இயங்கும் தனியார் விமான நிறுவனங்கள் ஒரு குழுவாக (Cartel) சேர்ந்து கொண்டு ‘சில்லோர் போட்டிச் சந்தை’ அமைப்பை (Oligopoly) உருவாக்குவதை அரசு அனுமதிக்கக் கூடாது.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஒரு லாரி டிரைவரைக் கைது செய்ய அரசுக்கு உள்ள அதிகாரத்தை, இந்த தனியார் விமான நிறுவன அதிபர்களைக் கட்டுப்படுத்துவதிலும் பிரயோகிக்கலாம். ஸ்ட்ரைக் முடிவில் உறுதியாக நிற்கும் விமான நிறுவனங்களை சஸ்பென்ட் செய்யலாம், அதன் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களையும் கைது செய்யலாம்.

தனியார் நிறுவன அதிபர்கள் செய்வது அறிவீனமானது, கொஞ்சமும் நடைமுறைச் சாத்தியமற்றது. ஒரு தனியார் வர்த்தக நிறுவனத்தின் நஷ்டத்துக்கு அரசு ஏன் பொறுப்பாக வேண்டும்… அப்படியெனில் இந்த நிறுவனங்களை அரசிடமே கொடுத்துவிடலாமே…

பத்து ஆண்டுகளுக்கு முன்பும் நிறைய தனியார் விமான நிறுவனங்கள் முளைத்தன. சில ஆண்டுகளில் காணாமல் போயின. அப்படித்தான் இப்போதும். முடிந்தால் தாக்குப் பிடியுங்கள். இல்லையேல் மூடுவிழாவுக்குத் தயாராகுங்கள். நஷ்டத்தில் இயக்குமாறு அரசு கேட்கவில்லையே…

அதேநேரம், இந்தியாவில் விமான எரிபொருள் கட்டணம் என்பது மிக அதிகம் என்பதை நான் மறுக்கவில்லை. அரசு இந்த விஷயத்தில் சற்று மனம் வைக்க வேண்டும்.

நாட்டின் உள்கட்டமைப்பின் முக்கிய அங்கமாக விமானத் துறையை மாற்றி, அடிப்படைக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும். இந்த சலுகைகள் பயணிகளுக்கும் கிடைக்குமாறு விமான நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அப்போதுதான் வர்த்தகம் தடையில்லாமல் இருக்கும்…, என்றார் கோபிநாத்.
One thought on “ஸ்ட்ரைக் செய்வதாக மிரட்டும் விமான நிறுவன அதிபர்களைக் கைது செய்யலாம்! – கேப்டன் கோபிநாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *