BREAKING NEWS
Search

வீடு, ஹோட்டல் மீது தாக்குதல்: ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா உள்பட 30 பேர் மீது எப்ஐஆர் பதிவு!

வீடு, ஹோட்டல் மீது தாக்குதல்: ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா உள்பட 30 பேர் மீது எப்ஐஆர் பதிவு!

சென்னை: வேளச்சேரியில் உள்ள ஒரு வீடு மற்றும் சைதாப்பேட்டை நட்சத்திர ஹோட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சன் பிக்சர்ஸ் சிஇஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா உள்ளிட்ட 30 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிண்டி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னை கிண்டி, வேளச்சேரி சாலை எபனேசர் அவன்யூவைச் சேர்ந்தவர் தர்மசேனன் எபனேசர். இவரது மகன் சித்தார்த். விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றுள்ள இவர் தனது நண்பரை அவரது நீலாங்கரை வீட்டில் விடுவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை காரில் அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் அப்போது குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டில் இருந்து திரும்பும்போது, சித்தார்த்தின் காரின் பின்னால் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்தக் காரை சற்று விலகிக் கொள்ள சொன்னபோது, சித்தார்த்துக்கும், அந்த காரில் இருந்தவர்களுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

இந்தத் தகராறு முற்றியதில் அந்தப் பகுதியில் உள்ளவர்களும், காரில் வந்தவர்களும் சேர்ந்து சித்தார்த்தின் காரை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் பயந்துபோன சித்தார்த், உடனே பக்கத்திலிருந்த நண்பர் வீட்டுக்குள் ஓடி தஞ்சமடைந்தார்.

இதுகுறித்து தனது தாயார் சவுமித்ரிக்கு (வயது 65) சித்தார்த் போன் மூலம் தெரிவித்தார். சவுமித்ரி வந்து சித்தார்த்தை மீட்டுச் சென்றுள்ளார்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்ய சவுமித்ரி திட்டமிட்டிருந்தார்.

அப்போது சவுமித்ரிக்கு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தன்னை ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்று கூறிக் கொண்டதோடு, “நான் யாரென்று தெரியாமல் உன் பையன் மோதிவிட்டான். எனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால்தான் அவனை நான் சும்மா விடுவேன். இல்லாவிட்டால் அவனை கண்டதுண்டமாக வெட்டி எறிந்துவிடுவேன். இதுகுறித்து யாரிடமாவது புகார் சொன்னால், உன்னையும் உன் மகன் சித்தார்த்தையும் சேர்த்து கொலை செய்துவிடுவேன்” என்று கூறி மிரட்டினாராம்.

மகள் மீது தாக்குதல்

இந்த நிலையில் 31-ந் தேதி இரவில் சவுமித்ரி வீட்டில் அவரது மகள் தீபா (சித்தார்த்தின் அக்காள்) அலறும் சத்தம் கேட்டுள்ளது. உடனே மேல் மாடியில் இருந்து சவுமித்ரி இறங்கி வந்தார்.

அங்கு தீபாவை ஒருவர் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார். அங்கு மேலும் 20 பேர் கத்தி, உருட்டுக் கட்டையுடன் நின்று சத்தம்போட்டுக் கொண்டிருந்தனராம். இதைப் பார்த்த சவுமித்ரி கூச்சலிட்டுள்ளார். இருவரையும் மிரட்டியவர்கல், கற்களாலும், கட்டையாலும் கார் மற்றும் ஜன்னல்களை உடைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து கிண்டி போலீசில் சவுமித்ரி புகார் கொடுத்தார். தீபாவின் 15 சவரன் செயினையும் அந்த கும்பல் பறித்துச் சென்றதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் சக்சேனா உள்ளிட்ட 30 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

செக்கர்ஸ் ஹோட்டல் சூறை

இந்தச் சம்பவம் நடந்த கொஞ்ச நேரத்தில், சைதாப்பேட்டை சின்னமலைப் பகுதியில் உள்ள செக்கர்ஸ் ஓட்டல் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

இந்த ஓட்டலின் உரிமையாளரான வினோஜ் செல்வம், சித்தார்த்தின் நெருங்கிய நண்பராம். எனவே சித்தார்த் இங்கே பதுங்கியிருக்கக் கூடும் என்று அந்த கும்பல் செக்கர்ஸ் ஹோட்டலுக்குச் சென்றுள்ளது. கார்கல், ஆட்டோ என பல வாகனங்களில் 100க்கும் மேற்பட்டோர் ஓட்டலுக்குள் புகுந்து உருட்டுக் கட்டைகளால் அடித்து நொறுக்கித் தள்ளினர்.

சுமார் 20 அடி உயர கண்ணாடிகள், டி.வி.கள், கம்ப்யூட்டர்கள், பூந்தொட்டிகள், அலங்கார இருக்கைகள் போன்ற பொருட்கள் நொறுக்கப்பட்டன. மேலும், ஓட்டலுக்கான பணப் பெட்டியில் இருந்த ரூ.3.60 லட்சம் பணத்தையும் இந்த கும்பல் எடுத்துச் சென்றுவிட்டதுய

இந்த சம்பவம் நடந்தபோது, ஓட்டலின் வரவேற்புப் பகுதியில் பல வெளிநாட்டவர் அமர்ந்திருந்தனர். இந்த வெறியாட்டத்தைப் பார்த்த அவர்கள், உடனே ஓட்டலை விட்டு வெளியே ஓடிவிட்டனர்.

இதுகுறித்து கிண்டி போலீஸ் நிலையத்தில் ஓட்டல் துணை மேலாளர் சந்திரசேகர் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் சாதிக் மற்றும் 100 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. சித்தார்தை அடுத்த 24 மணி நேரத்துக்குள் நேரில் அழைத்து வரவேண்டும் என்று ஹோட்டல் ஊழியர்களை எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளது இந்த கும்பல். ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா பெயரையும் அவர்கள் கூறியதாக ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கிண்டி போலீசாரிடம் ஹோட்டல் துணை மேலாளர் சந்திரசேகரன் புகார் செய்துள்ளார்.

இது தொடர்பில் தியாகராயநகரைச் சேர்ந்த அருள், வெங்கடேசன், ரவி, கிருஷ்ணமூர்த்தி, வடிவேலு ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கிண்டி துணை கமிஷனர் செந்தில் குமரன் கூறுகையில், “சக்ஸேனா உள்பட 30 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவாகியிருப்பது உண்மைதான். ஆனால் நாங்கள் சக்ஸேனாவை கைது செய்யவில்லை. விசாரணை நடந்து கொண்டுள்ளது. முழு விவரமும் பிறகு வெளியிடப்படும்” என்றார்.

இதுகுறித்து சக்ஸேனா கூறுகையில், “இந்த சம்பவங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. சித்தார்த்தும் அவன் நண்பனும் குடித்துவிட்டு எனது நண்பர்களுடன் மோதியுள்ளனர். இது தொடர்பாக நீலாங்கரை போலீசில் எனது நண்பர்கள் ஏற்கெனவே புகார் பதிவு செய்துள்ளனர். மற்றபடி ஹோட்டலுக்கு வந்தவர்கள் என் பெயரைச் சொன்னார்கள் என்பதற்காக என்மீது வழக்குப் போடுவது எப்படி சரியாகும்? போலீசார் விசாரிக்கட்டும். அப்போது உண்மை தெரியும்” என்றார்.

அடித்து நொறுக்கப்பட்ட செக்கர்ஸ் ஹோட்டல், ரோகினி தியேட்டர் உரிமையாளரும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச் செயலாளருமான பன்னீர் செல்வத்துக்குச் சொந்தமானது. அவரது மகன்தான் வினோஜ் செல்வன். இவர் பாஜகவில் மாநில இளைஞர் அணியில் உள்ளார்.
5 thoughts on “வீடு, ஹோட்டல் மீது தாக்குதல்: ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா உள்பட 30 பேர் மீது எப்ஐஆர் பதிவு!

 1. குமரன்

  சன் டி.வி. ரவுடிங்களை சமாளிக்க அஞ்சா நெஞ்சன் அழகிரியின் ஆட்கள்தான் சரி. வினோஜ் செல்வன் பா.ஜ.கவிலிருந்து விலகி சிலைன்ஜர் தலைமையிலுள்ள தி.மு.கவின் அழகிரி கோஷ்டியில் சேர்ந்து விட்டால் போதும். சன் டி.வி. ரைடிங்கலேல்லாம் கப் சிப்.

 2. maduraisaravanan

  எது உண்மை என்பது விரைவில் தெரியவரும். அதுவரை பொறுமை காப்போம். யார் செய்தாலும் இது அநியாயம். போதை படுத்தும் பாடு… கொடுமையடா..சாமி.

 3. Jag

  ஹலோ நண்பர்களே
  இதுதான் தற்போதைய தமிழகத்தின் நிலை……. தலைவர் இல்லா இடம்… நேர்மையான தலைமைக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் இடம்…

 4. Juu

  //சன் டி.வி. ரவுடிகளை சமாளிக்க அஞ்சா நெஞ்சன் அழகிரியின் ஆட்கள்தான் சரி//

  வழிமொழிகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *