BREAKING NEWS
Search

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி வைகோ வழக்கு!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி வைகோ வழக்கு!

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை உறுதி செய்து, தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்து 14.5.10 அன்று மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை உறுதி செய்வதற்காக ஐகோர்ட்டு நீதிபதியைக் கொண்ட தீர்ப்பாயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விசாரணையில் என்னையும் சேர்த்துக் கொள்ளும்படி நான் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. நான் வாதிடுவதற்கு மட்டும் அனுமதி தரப்பட்டது.

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சட்டவிரோத இயக்கம் என்று அறிவித்தும், அதற்கு தடை விதித்தும் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து கடந்த நவம்பர் மாதம் 12-ந் தேதி தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களின் செயல்பாடுகளை வைத்துத்தான் அந்த அமைப்புக்கு தடை விதிக்க முடியும். அந்த அமைப்பின் உறுப்பினராக இல்லாத ஆதரவாளர்களின் செயல்பாடுகளையும் வைத்து தடை விதிக்க முடியாது.

விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பான கிரிமினல் வழக்குகளில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்படவில்லை. தனித்தமிழ் ஈழம் வேண்டுமென்று போராடுவதால் இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாடுக்கும் குந்தகம் ஏற்படும் என்று அறிவிப்பாணையில் மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால் இந்த போராட்டம் இந்தியாவிலோ, தமிழகத்திலோ நடக்கவில்லை. இலங்கையில் நடக்கும் போராட்டத்தினால் இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை. எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்யத் தேவையில்லை. எனவே கடந்த நவம்பர் 12-ந் தேதி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்…”, என்று கூறியுள்ளார் வைகோ.

இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *