BREAKING NEWS
Search

வாக்குப் பதிவு எந்திரம்: அணுகுமுறை சரியில்லை…!

வாக்குப் பதிவு எந்திரம்: அணுகுமுறை சரியில்லை…!

தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு எந்திரம் குறித்த ஐயப்பாடுகள் பலமாக எழுந்துள்ள நிலையில், அதில் தில்லு முல்லு நடக்க வாய்ப்பே இல்லை என அடித்துக் கூறுகிறது தேர்தல் ஆணையம்.

ஆனால் எப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்ய முடியும் என பொதுமக்கள் மத்தியில் செயல்முறை விளக்கமே காட்டியது பாட்டாளி மக்கள் கட்சி. இப்போது, ஒரிஸாவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றும் வாக்குப் பதிவு எந்திரங்கள் மூலம் பெரும் மோசடிகளை அரங்கேற்ற முடியும் என நிரூபித்துக் காட்டியுள்ளது.

இந்தச் சூழலில் அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தினமணி இன்று அருமையான தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

evms

அந்தத் தலையங்கம்:

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறே செய்ய முடியாது, அந்த அளவுக்கு நிலையான, மாற்றமுடியாத மென்பொருள்கள் இந்த இயந்திரத் தயாரிப்பின்போதே உள்ளுக்குள் அமைக்கப்படுகின்றன என்று சொல்லி, “தில்லுமுல்லு செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்’ என்று தேர்தல் ஆணையம் சவாலுக்கு அழைத்துள்ள வேளையில், ஒரிசா மாநிலத்தில் ஒரு தன்னார்வ அமைப்பு அதை நிரூபித்தே காட்டிவிட்டது.

புவனேஸ்வரத்தைச் சேர்ந்த ஜன சைத்திரிய வேதிகா என்ற அமைப்பினர் இதைச் செய்து காட்டியுள்ளனர். முன்னாள் நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் செயல்விளக்கம் நடத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் குறிப்பிடுவதைப் போல, இந்த மென்பொருள்கள் மாற்றவியலாத தன்மையுடன் தயாரிப்பிலேயே உள்ளுக்குள் பொருத்தப்பட்டிருப்பது உண்மைதான். அடிப்படையான மென்பொருள் மாற்றம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுவோர் எண்ணிக்கை மாறுகிறது. அவர்களுக்கான சின்னங்கள் தனித்தனியாக உள்ளன. சின்னங்களுக்கான தகவல் இணைப்பை மென்பொருளுடன் சேர்க்கும் பணி மாவட்ட அளவிலான அதிகாரிகளின் பொறுப்பில்தான் நடைபெறுகிறது.

பதிவு செய்யும் பொத்தானுக்கு அருகில் ஒரு கட்சியின் சின்னம் வெளிப்பார்வைக்கு பதிவு இயந்திரத்தில் தெரிந்தாலும், அதை அழுத்தினால் வேறு சின்னத்துக்கு வாக்குப் போய்ச் சேரும்படியாக இணைப்பை மாற்றித் தருவதற்கோ, அல்லது இரண்டாவது அணியின் சின்னத்தில் விழும் வாக்குகள் மூன்றாவது அணிக்கும், மூன்றாவது அணி சின்னத்தின் வாக்குகள் இரண்டாவது அணிக்கும் விழும்படியாக மாற்றி அமைக்கவோ அதிகாரிகள் நினைத்தால் முடியாதா என்பதே சில அரசியல் கட்சிகள் கேட்கும் அடிப்படையான கேள்வி.

நியாயமாக, இத்தகைய செயல்விளக்கத்தை அரசியல் கட்சிகள்தான் செய்துகாட்டியிருக்க வேண்டும். தோல்வியால் முகம் சுணங்கிப் போகிற அவர்கள்தான் இதில் அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டியிருக்க வேண்டும். ஆனால் தன்னார்வ அமைப்பு இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் நிலையில் அரசியல் சூழல் உள்ளது.

வாக்குப் பதிவுக்கு வந்து இறங்குவது முதலாக வாக்குப்பதிவு நடந்து இயந்திரங்கள் மீண்டும் பொது இடத்தில் சேகரிக்கப்படுவது வரையிலும் எந்தெந்த நிலைகளில் எப்படியெல்லாம் தில்லுமுல்லு நடைபெற வாய்ப்பு உள்ளது என்பதை செயல்விளக்கம் செய்து காட்டும் பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. அப்போதுதான் அந்தத் தவறுகள் நேராதபடி மாற்று நடைமுறைகளை தேர்தல் ஆணையம் உருவாக்க முடியும்.

பாஜக தமிழ் மாநிலத் தலைவர் இல. கணேசன் ஓர் ஆக்கபூர்வமான யோசனையை முன்வைத்திருக்கிறார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு வாக்காளர் தான் தேர்வு செய்யும் சின்னத்திற்கான பொத்தானை அழுத்தியதும் வாக்குப்பதிவு நடப்பதோடு, அச் சின்னம் பொறித்த சீட்டும் (பிரின்ட்-அவுட்) அச்சாகி வெளிவரும் வசதி இருந்தால், அந்தத் துண்டுச்சீட்டை பார்த்தவுடன் தனது சின்னத்துக்குத்தான் வாக்கு அளித்தோம் என்ற மனநிறைவை வாக்காளர் பெற முடியும்.

அதேநேரத்தில், அந்த துண்டுச்சீட்டை வாக்குப்பெட்டியில் போடச் செய்தால், இயந்திரக்கோளாறு அல்லது தில்லுமுல்லு புகார்கள் வரும்போது அந்தச் சீட்டுகளையும் எண்ணிப் பார்த்து வாக்குச்சாவடி வாரியாக, கணினி மற்றும் சீட்டு எண்ணிக்கையைச் சரிபார்க்க முடியும். சாதாரண மளிகைக் கடை ரசீது போல, பேருந்து நடத்துநர் தரும் டிக்கெட் போல மிக எளிய, அதிக செலவில்லாத தொழில்நுட்பம்.

தற்போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்தான் மாவட்டத் தேர்தல் அலுவலராகவும் இருக்கிறார். பொதுத்தேர்தலின்போது தேர்தல் பார்வையாளர்களை பிற மாநிலங்களிலிருந்து வரவழைப்பதைப் போல, மாவட்டத் தேர்தல் அலுவலர்களாகப் பிற மாநில ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் புதிய மாற்றத்தையும் அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும்.

கடைசி ஒரு மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் வந்தால், வாக்குப் பதிவு முடியும் வரை காத்திருக்காமல், 5 மணி வரை வாக்குச் சாவடிக்குள் வந்துள்ளவர்களின் எண்ணிக்கையை மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் தெரிவித்துவிட்டு, வாக்குப்பதிவை நிதானமாகச் செய்துகொள்ளும் திட்டத்தையும் உருவாக்க வேண்டும்.

குறைகள் சொல்லப்படும்போது அதற்கான வாய்ப்புகளை அலசிப் பார்ப்பதும், பல்துறை வல்லுநர்களின கருத்துகளை அறிவதும்தான் தேர்தல் ஆணையத்தின் பணியாக இருக்க வேண்டும். மாறாக, நிரூபித்துக் காட்டுங்கள் என்று சவால் விடுவது முறையான அணுகுமுறை அல்ல!
5 thoughts on “வாக்குப் பதிவு எந்திரம்: அணுகுமுறை சரியில்லை…!

 1. Guevara

  Congratulations Thinamani, and you too vino. It is yet another superb article. E. Ganeshan of PJP’s counter suggestion of vote casting with the hard copy (print out) is not only excellent, but much democratic too.

 2. வடக்குப்பட்டி ராமசாமி

  பரவா இல்லை! நல்லாதான் இருக்கு…

  மேலும் நம்ம அதிகாரிகளின் அணுகுமுறையும் மாறவேண்டும். தேர்தல் வேலைபார்ப்பவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள் மட்டுமே, இதை மாற்ற வேண்டும்! அப்பத்தான் மாற்ற துறையை சேர்ந்தவர்களும் சம்பாரிக்க முடியும்!

 3. Manoharan

  I always have a strong opinion that EVMs are not the geniune option to vote. Ballot Paper system is the simple and best system for Countries like India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *