BREAKING NEWS
Search

வம்சம் – திரைப்பட விமர்சனம்

வம்சம் – திரைப்பட விமர்சனம்

டிகர்கள்: அருள்நிதி, சுனேனா, ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு

ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி

கலை இயக்கம்: தேவராஜன்

இசை: தாஜ் நூர்

பிஆர்ஓ: நிகில் முருகன்

இயக்கம்: பாண்டி ராஜ்

தயாரிப்பு: மோகனா மூவீஸ்

‘பசங்க’ பாண்டிராஜ் அடுத்து மணக்க மணக்க தந்திருக்கும் கிராமத்து விருந்து வம்சம்.

ஊரில் தலைக்கட்டு குடும்பத்து வம்சம் அழிந்து போகாமல் ஒரு வாரிசாவது மிஞ்ச வேண்டும் என்ற கிராமத்து மக்களின் உள்ளக் கிடக்கையை, இரண்டரை மணிநேர திரைப்படமாகத் தந்திருக்கிறார்.

இதுவரை எந்தப் படத்திலும் சொல்லாத, காட்டாத தமிழ் கிராமத்து வழக்கங்களை, திருவிழா நிகழ்வுகளை மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் பாண்டிராஜ். இது இன்றைய தலைமுறைக்கு அவசியமான பதிவும் கூட.

கதையென்று பார்த்தால் அதில் புதுமை ஒன்றுமில்லை. வழக்கமான கிராமத்து விரோதங்கள், இளசுகளின் காதல், அதில் குறுக்கிடும் வில்லன், இறுதியில் ஜெயிக்கும் காதலர்கள் என்று போகிறது கதை. ஆனால் அதைச் சொல்லியிருக்கும் விதம்தான் ரசிகர்களை இழுத்துப் பிடித்து உட்கார வைக்கிறது.

புலிவதனம், சிங்கம்பிடரி என இரண்டு கிராமங்கள். இங்கு நடக்கும் 15 நாள் திருவிழா மிகப் பிரபலம். எந்த ஊரிலும் இல்லாத அளவு விசேஷமான இந்த திருவிழாவில் நடக்கும் ரேக்ளா ரேஸ், கம்புச் சண்டை, கோழிச் சண்டை என அனைத்திலும் ஜெயிப்பவர் லோக்கல் ரவுடியான கிஷோர் (ஹீரோவின் அப்பா). அவரிடம் தொடர்ந்து தோற்கும் அவமானம் தாங்காத ஊர்ப்பெரிய மனிதர் ஜெயப்பிரகாஷ், சாராயத்தில் விஷம் வைத்து கிஷோரைக் கொன்றுவிடுகிறார்.

கிஷோரின் விதவை மனைவி, கணவனின் மரணத்துக்குப் பிறகு மகன் அருள்நிதியுடன் அந்த கிராமத்தை விட்டே வெளியேறி ஒதுக்குப் புறமாக வசிக்கிறார். கணவனைப் போல மகனும் ரவுடியாகிவிடக் கூடாதே என பார்த்துப் பார்த்து வளர்க்கிறார். ஆனால் கடைசியில் மகனும் வன்முறையைக் கையில் எடுக்க வேண்டிய சூழல்.

அருள்நிதிக்கும் பக்கத்து ஊர் சுனேனாவுக்கும் காதல் அரும்புகிறது. சுனேனாவுக்கு எல்லாமாகவும் இருக்கும் அவரது அப்பாவை ஒரு விரோதத்தில் ஜெயப்பிரகாஷ் கொன்றுவிட, அந்த கோபத்தில் ஜெயப்பிரகாஷின் முகத்தில் நடுரோட்டில் சாணியை அடித்து, காறித் துப்புகிரார் சுனேனா. காதலிக்காக களம் இறங்குகிறார் அருள் நிதி. இருவரையும் போட்டுத் தள்ளப் பார்க்கிறார் ஜெயப்பிரகாஷ். இதில் யார் ஜெயித்தார்கள்? என்பது வழக்கம் போல யாரும் எளிதில் யூகிக்கிற க்ளைமாக்ஸ்.

தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத வெகு இயல்பான தெற்கத்தி கிராமங்கள், மக்களின் வாழ்க்கை முறைகள் என பார்த்துப் பார்த்து பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் திருவிழாக் காட்சிகளை இத்தனை நீ…ளமாக எடுத்து பொறுமையைச் சோதிக்க வேண்டுமா?

மக்களிடம் செல்போன்களின் ஆதிக்கத்தை வெகு அழகாக நக்கலடித்திருக்கிறார் பாண்டிராஜ்.

அருள் நிதிக்கு இது முதல் படம். ஆனால், மிக வாலாயமாக வருகிறது நடிப்பு. சண்டைக் காட்சிகளில் இப்போதே விஷால் ரேஞ்சுக்கு பறந்து பறந்து அடிப்பதெல்லாம் மிகையோ மிகை. ஆனால், இதையெல்லாம் இனி யார் கவனிக்கப் போகிறார்கள்! அருள்நிதிக்கு ஒரு பட்டப் பெயரும், எண்ணற்ற ஆக்ஷன் கதைகளுமாய் குவித்துவிட மாட்டார்களா நமது கோலிவுட் படைப்பாளிகள்?

கிராமத்துப் பெண்ணாக வரும் சுனேனா வெகு இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார். பசுமாட்டுக்கு அசின் என்று பெயர் வைத்து இருவரும் காதல் வளர்க்கும் காட்சியும், பூனைக்கு த்ரிஷா என்று பெயர் வைத்து கஞ்சா கருப்பு காமெடி பண்ணுவதும் ரசிக்க வைக்கின்றன.

படத்துக்குப் படம் ஜெயப்பிரகாஷின் நடிப்பு மெருகேறி மின்னுகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், வம்சத்தில் கிட்டத்தட்ட ஹீரோ ஜெயப்பிரகாஷ்தான். வில்லத்தனத்தை இத்தனை இயல்பாக சமீபத்தில் வேறு எந்த நடிகரும் காட்டியதாகத் தெரியவில்லை.

அருள் நிதியின் அம்மாவாக நடித்திருக்கும் புதுமுகம் நந்தினி மனதில் நிற்கிறார்.

கஞ்சா கருப்பின் நகைச்சுவை படத்துக்கு பெரும் பலம்.

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, புதுக்கோட்டை கிராமங்களை அப்படியே கண்முன் நிறுத்துகிறது. தேவராஜனின் கலை இயக்கம் படத்தின் இயல்பான ஓட்டத்துக்குக் கைகொடுக்கிறது.

தாஜ் நூரின் இசையில் ஒரு பாட்டு பரவாயில்லை. ஆனால் பின்னணி இசை சொல்லிக் கொள்கிற மாதிரியில்லை.

சில குறைகள் இருந்தாலும், ரசிக்க வைக்கும்படி திரைக்கதை அமைத்திருப்பதில் பாண்டிக்கு மீண்டும் வெற்றி கிடைத்திருக்கிறது.

வம்சம்… ரசிக்க வைக்கும் கிராமத்துத் திருவிழா!
3 thoughts on “வம்சம் – திரைப்பட விமர்சனம்

  1. Appavi

    மனச தொட்டு சொல்லுங்க படம் நல்லாவா இருக்கு??? சரியான மொக்க படம் .

  2. PULI

    VAMSAM PADAM NALLA VANTHIRUKKU. NAN PONNAMARATHI KARAN. ENGA MANNULA VATTU KUTHU KEDAYATHU. PADATHULA SAATHI ONNU THAAN ROMBA URUTHUTHU. MATHAPADI…….. YE… MALARAEEEEE.. OO..N.. ASINU….. VANTHIRUCHU VADI….. ITHELLAM NADAPPIYAL UNMAI. DIRECTARUKU VAZHTHUKKAL.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *