BREAKING NEWS
Search

லாஸ் ஏஞ்சல்ஸில் மைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

லாஸ் ஏஞ்சல்ஸில் மைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

லாஸ் ஏஞ்சல்ஸ்: பாப் இசை மன்னர் மைக்கேல் ஜாக்சனின் உடல் நேற்று இரவு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அவரது குடும்பத்தினர் மட்டும் உடன் இருந்தனர். வே்று யாரும் அனுமதிக்கப்படவில்லை. USA/

எனினும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்தனர். ஜாக்சனின் உடல் அடக்கத்தை முன்னிட்டு, பிரபலங்கள் பங்கேற்ற இறுதிச் சடங்கு நிகழ்ச்சியும் நடந்தது.

உலகையே தனது இசை மற்றும் நடனத்தால் கட்டிப்போட்ட பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், கடந்த 25-ந் தேதி அன்று மரணமடைந்தார். ஜாக்சனின் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், அவரது இறுதி சடங்குகளை நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவரது உடல் நேற்று இரவு (இந்திய நேரப்படி) அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடல் அடக்கத்தின் போது, பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பாரஸ்ட் லான் ஹில்ஸ் பகுதியில் உள்ள சான் பிராண்டோ கல்லறை வளாகத்தில் மைக்கேல் ஜாக்சன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, அவரது குடும்பத்தினர் மட்டும் இருந்தனர். அடக்க பிரார்த்தனை உள்ளிட்ட இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர்.

முன்னதாக, மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருந்தபோது, ‘எனது இறுதி சடங்குகளை பூமியிலேயே மிகப்பெரிய கலை நிகழ்ச்சியாக நடத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இறுதி சடங்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டன. அதற்காக, ஸ்டெபிள்ஸ் சென்டர் என்ற கலையரங்கில் பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மைக்கேல் ஜாக்சனின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஏ.ஈ.ஜி. என்ற இறுதி மரியாதை சேவை நிறுவனம் செய்தது. மைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சி தொடங்கியது.

அதில், ஆலிவுட் பிரபலங்கள் ஸ்டீவ் வாண்டர், ஜஸ்டின் டிம்பர்லேக், ஜெனிபர் ஹட்சன், லயோனல் ரிச்சி, மார்ட்டின் லூதர் கிங் 3, மேஜிக் ஜாக்சன், மரியா கேரி, ஜான் மேயர் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். மைக்கேல் ஜாக்சனின் `ஹீல் த வேர்ல்ட்’, ‘மேன் இன் தி மிர்ரர்’ போன்ற பாடல்கள் பாடப்பட்டன.

இறுதி சடங்கு நிகழ்ச்சியில், ஜாக்சனின் முன்னாள் மனைவி டெபி ரோ பங்கேற்கவில்லை. அது குறித்து அவரது வக்கீல் கூறுகையில், “டெபி ரோ வந்தால், அவரையே டி.வி. கேமராக்கள் மிகைப்படுத்தும். அதனால், மைக்கேல் ஜாக்சனின் இறுதி சடங்கு நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறையும் என்பதால் பங்கேற்கவில்லை. எனினும், தனிப்பட்ட முறையில் ஜாக்சனுக்காக இறுதி அஞ்சலி செலுத்தினார்,” என்றார்.

இணைய தளத்தில் டிக்கெட்

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை காண்பதற்காக இணைய தளம் மூலம் குலுக்கல் முறையில் ரசிகர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதற்காக, 16 லட்சம் ரசிகர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில் இருந்து 8 ஆயிரத்து 750 ரசிகர்கள் மட்டும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தலா இரண்டு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

அந்த டிக்கெட்டுகளை பெறுவதற்கு ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவியது. எனவே, டிக்கெட்டை பெற்ற ரசிகர்களில் சிலர், அவற்றை ஆயிரக்கணக்கான டாலருக்கு விற்பனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சக்கணக்கான ரசிகர்கள்

இணையதள குலுக்கல் மூலமாக டிக்கெட் பெற்ற ரசிகர்கள் தவிர லட்சக்கணக்கான ரசிகர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்து விட்டனர்.

அவர்களும் நிகழ்ச்சியை காண்பதற்காக ஸ்டேபிள்ஸ் சென்டர் அருகில் உள்ள நோக்கியா தியேட்டர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் முதல் டொபேகா வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த தியேட்டர்கள் அனைத்திலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அவை அனைத்தும் நிரம்பி வழிந்ததால் தெருக்களில் நின்றபடியே தங்களுடைய மன்ம் கவர்ந்த பாப் சக்கரவர்த்திக்கு ரசிகர்கள் இதயப்பூர்வமாய் அஞ்சலி செலுத்தினர். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு டி.வி. சேனல்களும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்தன. கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்!

அடுத்த பிறவி என்ற கருத்து உண்மையாக இருந்தால், இசையால் உலக மக்களின் இதயங்களை மகிழ்வித்த ஜாக்ஸன், மீண்டும் பிறந்து வரவேண்டும். நிமமதியான வாழ்க்கையை அவர் பெறவேண்டும்; நிறைவான இசையை மக்களுக்குத் தரவேண்டும்!

இப்போது… அவரது ஆத்மா சாந்தி கொள்ளட்டும்!




3 thoughts on “லாஸ் ஏஞ்சல்ஸில் மைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

  1. கருணாநிதி

    அடங் கொக்கா மக்கா! இவன்தாண்டா இசை அரசன்!

  2. Manoharan

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..
    இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்..

    ஜாக்சனின் ஆன்மா இசை வடிவில் என்றும் வாழ்ந்திருக்கும்..

  3. RSN

    அடுத்த பிறவி என்ற கருத்து உண்மையாக இருந்தால், இசையால் உலக மக்களின் இதயங்களை மகிழ்வித்த ஜாக்ஸன், மீண்டும் பிறந்து வரவேண்டும். நிமமதியான வாழ்க்கையை அவர் பெறவேண்டும்; நிறைவான இசையை மக்களுக்குத் தரவேண்டும்!

    இப்போது… அவரது ஆத்மா சாந்தி கொள்ளட்டும்!

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..
    இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்..

    ஜாக்சனின் ஆன்மா இசை வடிவில் என்றும் வாழ்ந்திருக்கும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *