BREAKING NEWS
Search

லலித் மோடி சஸ்பென்ட் – பிசிசிஐ அதிரடி!

லலித் மோடி சஸ்பென்ட் – பிசிசிஐ அதிரடி!

டெல்லி: கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்த சர்ச்சையையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவராகத் திகழ்ந்த, இந்திய கிரிக்கெட்டின் கண்ணியத்தை காற்றில் பற்றக்க விட்டவர் என்று குற்றம்சாட்டப்பட்ட ஐபிஎல் ஆணையாளர் லலித் மோடியை தற்காலிக நீக்கம் செய்யும் உத்தரவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அனுப்பியது.

இந்த உத்தரவு மற்றும் விளக்கக் கடிதத்தில் மோடி மீது 22 ஊழல் மற்றும் முறைகேடுகளைச் சுமத்தியுள்ளது பிசிசிஐ. ஐபிஎல் இறுதிப் போட்டியின் கடைசி பந்து வீசப்படும் வரை காத்திருந்த கிரிக்கெட் வாரியம், தனது செயலர் பி சீனிவாசன் பெயரில் இந்த உத்தரவுக் கடிதத்தை அனுப்பியுள்ளது.

பிசிசிஐயின் இந்த அதிரடி உத்தரவு மூலம், லலித் மோடி ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கெடுப்பது தடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நிர்வாகக் குழு கூட்டத்தில் தான் பங்கேற்பதோடு, அதை நடத்தும் அதிகாரமும் தனக்கே உண்டு என்று சவால் விட்டு வந்தார் மோடி. பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் சரத் பவார் ஆகியோர் கூறியும் கூட மோடி பதவி விலகுவேன், மாட்டேன் என்று கண்ணா மூச்சி காட்டி வந்தார்.

மோடியின் நீக்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கோப்பை வென்ற செய்தி கூட பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை துவங்கிய ஐபிஎல் நிறைவு விழா மற்றும் இறுதிப் போட்டிகளைக் காண, ஐபிஎல்லின் தலைமைப் பீடமான பிசிசிஐலிருந்து பெரும்பாலான நிர்வாகிகள் வரவில்லை.

லலித் மோடியின் ஆதரவாளர்களாக செயல்படும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மட்டும் வந்திருந்தனர்.

இந்த நிகழ்வுக்கு லலித் மோடி, தனது விசேஷ ஹெலிகாப்டரில், பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ, புல்லட் புரூப் ஜாக்கெட் அணிந்து வந்திறங்கினார்.

நடிகைகளும், மாடல் அழகிகளும் அவரைச் சூழ்ந்து நின்று வரவேற்று அழைத்துச் சென்றனர். கூடவே விஜய் மல்லையா, ஷாரூக்கான் உள்ளிட்டோரும் இருந்தனர்.

பாலிவுட் நடிகர் நடிகைகளின் ஆட்டம் பாட்டம், கட்டிப் பிடிப்பு, காற்று முத்தம், கன்னத்து முத்தம், ரஹ்மானின் இசை எல்லாம் கடந்து இறுதிப் போட்டி ஆரம்பித்தது. அப்போதும் பிசிசிஐ நிர்வாகிகள் வரவில்லை.

இறுதிப் போட்டியில் சென்னை அணி ஜெயித்ததும், நேராக டோனியிடம் போனவர், ‘நான்தான் இந்த ரிசல்டை ட்விட்டரில் எழுதிவிட்டேனே’ என்ற பாணியில் கையில் ஒரு குத்துவிட்டு உற்சாகமாகக் கட்டிப் பிடித்தார்.

அடுத்த 5 நிமிடங்களில் மோடியின் கைகளில் சஸ்பெண்ட் உத்தரவு.

கடுமையான குற்றச்சாட்டுகள்…

லலித் மோடி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை.

அவை…

*பாரம்பரிய கிரிக்கெட்டின் ஆட்ட விதிகளை தளர்த்தியுள்ளார்.

*ஐபிஎல்லில் எல்லையற்ற பண மோசடி செய்துள்ளார்.

*கிட்டத்தட்ட அனைத்துப் போட்டிகளின் முடிவையும் முன்கூட்டியே தனது ட்விட்டரில் புக்கிகளுக்கு வசதியாக அனுப்பியுள்ளார்.

*ஐபிஎல் அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிகளின் பின்னணியில் இருந்து இயக்கியுள்ளார். இந்த அணிகளின் தற்போதைய உரிமையாளர்களான ஷாரூக்கான், ஷில்பா ஷெட்டி மற்றும் ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் வெறும் பினாமிகளே (கடைசி வரை இவர்கள்தான் மோடிக்கு மிகத் தீவிர ஆதரவாளர்களாக உள்ளனர்)!

*ஐபிஎல் ஏலத்தை சந்தேகத்துக்கிடமான முறையில் மோடியே ரகசியமாக முன்பேர முறையில் நடத்தியுள்ளார்.

*ஐபிஎல் மோசடியில் பெரும் பணம் குவித்து பல நாடுகளில் சொத்துக் குவித்துள்ளார். இவற்றில் 3 பெரிய அரண்மனைகள் அடக்கம்.

*மோடியின் நெருங்கிய உறவினர்கள் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை, ஆன்லைன் உரிமை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெற்றுள்ளனர். பல கோடி ரூபாய் இதில் சம்பாதித்துள்ளனர், குறைந்த முதலீட்டில்.

*மத்திய அமைச்சர்கள் சரத் பவார், பிரபுல் பட்டேல் ஆகியோரும் லலித் மோடியின் முறைகேடுகளில் உடந்தை. ஐபிஎல்லுக்காக அரசு நிறுவன விமானங்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் இம்மூவரும்.

*27 கிரிக்கெட் வீரர்களை சூதாட்டத்தில் உடந்தையாக இருக்கச் செய்துள்ளார்.

*குறிப்பிட்ட சில மீடியா நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்.

-இப்படி குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.

இதுகுறித்து மோடி என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் (மோடியால் லாபம் பெற்ற நிறுவனம் என சுட்டிக்காட்டப்படும் மீடியா குழுமத்தில் என்டிடிவியும் ஒன்று!), “கடைசியில் அவர்கள் நினைத்ததை சாதித்து விட்டார்கள். நான் விளக்கம் தர 5 நாள்கள் அவகாசம் கேட்டேன். ஆனால் அதைக் கூட அவர்கள் தரவில்லை. நான் சொல்லவிருக்கும் உண்மையைக் கேட்க அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இனி நிர்வாகக் குழு கூட்டத்திலும் பங்கேற்க முடியாது” என்றார்.

ஐபிஎல்லின் புதிய தலைவர், மோடி மீதான சட்டப்பூர்வ நடவடிக்கை உள்ளிட்ட விவரங்கள் திங்கள் கிழமை மாலைக்குள் தெரிந்துவிடும். லலித் மோடி முறைகேட்டில் சம்பந்தப்பட்ட பணம், வருமான வரி ஏய்ப்பு உள்ளிட்ட விவரங்களும் விரைவில் வெளியாகும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சசிதரூர் நீக்கத்துக்கு பழிக்குப் பழியாக மோடி நீக்கப்பட்டுள்ளாரா… அல்லது அவரது குற்றங்களில் தொடர்புடைய அமைச்சர்கள் பிரபுல் பட்டேல், சரத்பவார் போன்றவர்கள் மீது நடவடிக்கை தொடருமான என்பது குறித்து யாரும் மூச்சு காட்டவில்லை!

-என்வழி
2 thoughts on “லலித் மோடி சஸ்பென்ட் – பிசிசிஐ அதிரடி!

  1. palanivel

    கடந்த மூன்று வருடமாக வருமான வரி ஆணையத்துக்கோ அல்லது கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கோ மோடி செய்த எதுவுமே தப்பாக படவில்லையே ஏன் ?

  2. Ngoppan

    ஒருத்தன் சம்பாதிச்சா போதும், பிச்சைக்கார பயவுல்லைங்களுக்கு பொறுக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *