BREAKING NEWS
Search

ரூ 14000 கோடி மோசடி- சத்யம் ராமலிங்க ராஜூ ஜாமீனில் விடுதலை!

ரூ 14000 கோடி மோசடி- சத்யம் ராமலிங்க ராஜூ ஜாமீனில் விடுதலை!!

ஹைதராபாத்: ரூ 14000 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜூவை இன்று ஜாமீனில் விடுதலை செய்தது ஆந்திர உயர்நீதி மன்றம்.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாகத் திகழ்ந்தது சத்யம் கம்ப்யூட்டர்ஸ். ஆனால் இதன் வருவாய் மற்றும் லாபத்தை பொய்யாக உயர்த்திக் காட்டி, பங்குகளின் விலை உயரக் காரணமாக இருந்தார் ராமலிங்க ராஜூ. ஒரு கட்டத்தில் சத்யம் நிறுவனத்தின் துணை நிறுவனமான மேடாஸை சத்யம் நிறுவனத்துடன் இணைக்க முயன்றார். அப்போதுதான் சத்யம் நிறுவனத்தில் நடந்த நிதி மோசடி அம்பலமானது.

வேறு வழியின்றி, ரூ 5700 கோடிக்கு மேல் பொய்யாகக் கணக்குக் காட்டியதாக ராமலிங்கராஜு ஒப்புதல் கடிதம் கொடுத்துவிட்டு, நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து சத்யம் நிறுவனமே ஆட்டம் கண்டது. ராஜு கைது செய்யப்பட்டு ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார். ராஜுவின் மோசடிகளை சிபிஐ விசாரிக்க ஆரம்பித்தது. ஏராளமான மோசடிகள் அம்பலத்துக்கு வந்தன. மொத்தம் ரூ 14000 கோடிக்கும் அதிகமாக ராமலிங்கராஜு மோசடி செய்துள்ளதாக சிபிஐ அறிவித்தது.

இந்த நிலையில் சத்யம் நிறுவனத்தை வாங்கிக் கொண்டது மகிந்திரா நிறுவனம். இன்னொரு பக்கம் ஜாமீனில் விடுதலைப் பெற பிரம்மப் பிரயத்தனம் மேற்கொண்டார் ராஜு.

ஆனால் உச்ச நீதி மன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. சில காலம் கழித்து மீண்டும் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் என உச்ச நீதி மன்றம் அறிவுறுத்தியது.

இதற்கிடையே ராமலிங்க ராஜூவுக்கு இதய நோய் உள்பட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டதால், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க ஹைதராபாத் நிஜாம் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார். தனது சிறைவாசத்தின் பெரும்பகுதி நாட்களை அவர் மருத்துவமனையிலேயே கழித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இடையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராமலிங்க ராஜூவின் தம்பி ராம ராஜு, சத்யம் முன்னாள் நிதி அலுவலர் வட்லாமணி சீனிவாஸ் உள்பட 9 பேர் பல்வேறு தருணங்களில் ஜாமீன் பெற்று விட்டனர்.

இந்த நிலையில் தனது உடல்நிலை மற்றும் தற்போதைய சூழலை காரணம் காட்டி ஜாமீன் கோரி விண்ணப்பித்தார் ராமலிங்க ராஜூ.

இந்த மனுவை எதிர்த்து வாதாடிய சிபிஐ வழக்கறிஞரும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான ஹரின் பி ராவல், “ராமலிங்க ராஜூவின் உடல்நிலைப் பற்றிய மருத்துவ அறிக்கைகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. எனவே மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அனுப்பி, அவரது உடல் நிலை குறித்து அறிய வேண்டும். அதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என்று வாதிட்டார்.

ஆனாலும் ஆந்திர உயர்நீதிமன்றம் இன்று ராமலிங்க ராஜூவுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

ராஜுவின் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.




2 thoughts on “ரூ 14000 கோடி மோசடி- சத்யம் ராமலிங்க ராஜூ ஜாமீனில் விடுதலை!

  1. endhiraa

    ராஜுவின் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர் !

    ரொம்ப முக்கியம்..இவனை நம்பி இன்னும் ஒரு கூட்டம் இருக்கா ????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *