BREAKING NEWS
Search

ராஜபக்சே சகோதரர்களே இனப்படுகொலைக்கு முழுக் காரணம்! – அமெரிக்கா

ராஜபக்சே சகோதரர்களே இனப்படுகொலைக்கு முழுக் காரணம்! – அமெரிக்க கருத்தை வெளியிட்ட விக்கிலீக்ஸ்

வாஷிங்டன்: இலங்கையில் தமிழருக்கு எதிராக நடந்த கொடிய இனப்படுகொலைக்கு முழுக் காரணம் ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களே என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் கொழும்புவுக்கிடையே பரிமாறப்பட்ட 3000க்கும் மேற்பட்ட ஆவணங்களில் உள்ள ரகசியங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி வருகிறது.

இலங்கையில் இறுதிக் கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அதிபர் ராஜபக்சேவும், அவரது சகோதரர்கள் இருவரும் போர்க் குற்றவாளிகளே என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதர் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு இந்த ஆண்டு ஜனவரியில் அனுப்பிய ரகசிய அறிக்கையை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதர் பாட்ரிஷியா வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு ஜனவரி மாதம் அனுப்பிய ரகசிய கேபிள் தகவலில் கூறியிருப்பதாவது:

ஒரு அரசு தனது அதிகாரிகளும், படைகளும் தங்கள் பதவிக் காலத்தில் செய்த போர்க் குற்றங்களை தானாக விசாரித்ததாக நாம் கேள்விப்பட்டதே இல்லை.

ஆனால், இலங்கைப் பிரச்சனையில் உள்ள சிக்கல் என்னவென்றால், குற்றங்களைச் செய்தவர்கள் நாட்டின் உயர் அதிகாரிகளாகவும், ராணுவத் தளபதிகளாகவும் இருக்கிறார்கள். இதில் ராஜபக்சே மற்றும் சகோதரர்களுக்கும், எதிர்கட்சி வேட்பாளர் பொன்சேகாவுக்கும் பங்குள்ளது.

ராஜபக்சே அரசை எதிர்ப்பவர்கள் திடீர் என்று மாயமாகி விடுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர்.

உலகளவில் தமிழர்கள் இந்த பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் இலங்கையில் இருக்கும் தமிழர்களோ அரசைக் கடுமையாக எதிர்ப்பதற்கு இது நேரமில்லை என்றும் கருதுகின்றனர்,” என்று கூறியுள்ளார்.

இந்த தகவலை விக்கிலீக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது.

அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபயா ராஜபக்சே தான் பாதுகாப்புத் துறைச் செயலாளராக இருக்கிறார். பொன்சேகா விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ராணுவத்திற்கு தலைமை வகித்தார். அவர் அதிபர் தேர்தலில் தோற்றபிறகு கைது செய்யப்பட்டார்.

வெள்ளைக் கொடிகளுடன் வந்த புலிகளின் தலைவர்களைக் கொன்றதிலும் கோத்தபாய, பசில் ராஜபக்சேக்களுக்கு முக்கியப் பங்குள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் ‘தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின்’ பேச்சாளர் ஒருவர் கூறுகையில், “சேனல் 4- வெளியிட்டுள்ள போர்க்குற்ற ஆதாரங்கள் ராஜபக்சே மற்றும் அவரது தம்பிகளின் குற்றங்களுக்கு தண்டனை தர போதுமானவையாகும். இவர்கள் செய்திருப்பது மனித குலத்துக்கே விரோதமான படுபயங்கர காரியம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை தமிழ் சமூகம் ஓயாது,” என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *