BREAKING NEWS
Search

ராசாவின் வீடுகள் உள்பட 14 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு!

ராசாவின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 14 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு!

சென்னை: 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு புகாரில் சிக்கி பதவி விலகியுள்ள அமைச்சர் ஆ. ராசாவின் டெல்லி, பெரம்பலூர் மாவட்டத்தில் அவரது சொந்த ஊரில் உள்ள வீடுகளில் மத்திய புலனாய்வுக் குழுவினர் (சி.பி.ஐ.) மற்றும் வருவாய்த் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சாவின் வீடு, அலுவலகங்களிலும் சோதனைகள் நடந்தன. சென்னையில் சாதிக் பாட்சாவை சி.பி.ஐ. அதிகாரிகள் தனியே அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதுமட்டுமின்றி ராசாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே. சந்தோலியா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரியா, தொலைத்தொடர்பு ஆணையத்தின் உறுப்பினர் கே. ஸ்ரீதர், தொலைத்தொடர்புத் துறையின் மூத்த அதிகாரி ஏ.கே. ஸ்ரீவத்ஸவா ஆகியோருக்குச் சொந்தமான இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனைகளின்போது ‘குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும்’ ஆதாரங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1.76 லட்சம் கோடி இழப்பு… சி.ஏ.ஜி. அறிக்கை:

செல்போன் சேவைக்கான 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தவறான வழிமுறைகளைப் பின்பற்றியதால் மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.) அறிக்கை சமர்ப்பித்த நிலையில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து ஆ. ராசா விலகினார்.

இவ்வளவு பெரிய தொகை இழப்பு ஏற்பட்டிருப்பதால் இதுபற்றி நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இதை காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்து வருகிறது. இரு தரப்பும் தங்கள் நிலையில் பிடிவாதமாக இருப்பதால் நாடாளுமன்றக் கூட்டம் கடந்த 3 வாரங்களாக நடக்காமல் உள்ளது.

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான புகாரை சி.பி.ஐ. விசாரிக்குமாறு ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009 அக்டோபர் 21-ல் இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் மீதான விசாரணையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாதது குறித்து கடந்த மாதம் சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து இந்த விசாரணையில் சி.பி.ஐ. தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.

நீரா ராடியா -கனிமொழி – ராசா – டாடா பேச்சு

இதற்கிடையே, ராசாவுக்கு தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியைப் பெற்றுத்தருவதில் தரகராகச் செயல்பட்ட நீரா ராடியா, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, ராசா மற்றும் பத்திரிகையாளர்களுடன் தொலைபேசியில் பேசிய உரையாடல் பதிவுகள் வெளியாகின.

இந்தத் தகவல்களும் சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்டுள்ளன. ராசா பதவி விலகிய சூழ்நிலை, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் காட்டும் தீவிரம், உச்ச நீதிமன்றத்தின் கண்டனம் ஆகிய பின்னணியில் வழக்கில் முன்னேற்றம் இருப்பதைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் சி.பி.ஐ. இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் ராசா, தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள், ராசாவின் நண்பர் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலக வளாகங்களில் சோதனைகள் நடந்துள்ளன.

“குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று சி.பி.ஐ. டி.ஐ.ஜி. வினிதா தாக்குர் டெல்லியில் தெரிவித்துள்ளார்.

“இப்போது கிடைத்துள்ள தகவலின்படி தொலைத் தொடர்புத் துறையின் சில அதிகாரிகளும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் மற்றவர்களும் சேர்ந்து அலைக்கற்றை ஒதுக்கீடு கோரும் மனுதாரர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கிரிமினல் சதிச் செயலில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது” என அவர் கூறியுள்ளார்.

சொந்த ஊரிலும் ரெய்டு…

தமிழகத்தில் ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் 8 பேர் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த ராசாவின் அண்ணன் கலியபெருமாள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் பெரம்பலூரில் ஒரு வங்கிக்குச் சென்ற அதிகாரிகள் சில தகவல்களைக் கேட்டறிந்தனர்.

ராசாவின் நெருங்கிய நண்பரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருமான சாதிக் பாட்சாவின் வீட்டில் 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிறகு பாட்சாவின் தம்பி ஜாபர் அலியை அழைத்துச்சென்று, பாஷாவின் அலுவலகத்தில் 2 மணி நேரம் சோதனை நடத்தினர். அங்கிருந்து சில ஆவணங்களை எடுத்துச்சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில்…

சென்னையில் பாட்சாவின் வீட்டில் அதிகாரிகள் 8 மணி முதல் 11.30 வரை சோதனை நடத்தினர். பிறகு பாட்சாவை அதிகாரிகள் அழைத்துச் சென்று ராஜாஜி பவனில் விசாரித்தனர். பிறகு மாலை 3 மணிக்கு மீண்டும் அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த ரெய்டால் கூட்டணிக்கு பாதிப்பில்லை –  காங்கிரஸ்

சி.பி.ஐ. நடத்திய இந்த சோதனையால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகியில், “தி.மு.க.வுடன் அரசியல் ரீதியிலான கூட்டணி வைத்து இருக்கிறோம். ஊழல் புகார்கள் கூறப்படும் போது, சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள எந்த கட்சியும் அதுபற்றிய விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காது.

தி.மு.க.-காங்கிரஸ் இடையேயான கூட்டணி பலம் வாய்ந்ததாக உள்ளது. இந்த கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும்…”, என்றார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *