BREAKING NEWS
Search

ரஜினி, வாலி, வைரமுத்து பாராட்டியதால் ஜெ.வுக்கு வயிற்றெரிச்சல்! – கருணாநிதி

இந்திப் போராட்டத்தின்போது கோவாவில் கும்மியடித்து, டூயட் பாடியவர் ஜெயலலிதா! – கருணாநிதி

சென்னை: இளைஞன் பட விழாவில், தன்னை ரஜினிகாந்த், வாலி மற்றும் வைரமுத்து ஆகியோர் பாராட்டியதை தாங்க முடியாமல், வயிற்றெரிச்சலில் அறிக்கை விடுகிறார் ஜெயலலிதா என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் பிணங்கள் விழுந்தபோது – கோவா கடற்கரையில் கும்மியடித்துக் கொண்டு ‘டூயட்’ பாடிக்கொண்டிருந்தவர் ஜெயலலிதா என்றும், ஒரு அறிக்கையை எப்படி தொடங்கினோம் என்பது கூடத்தெரியாமல், நான் கோமாளித்தனமான அறிக்கைகளை விடுவதாக கூறும் கொடநாட்டு கோடீஸ்வரி, என்றும் சாடியுள்ளார் கருணாநிதி.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

பத்திரிகைகள் இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். எந்த அளவிற்கு ஜெயா குழப்பம் அடைந்திருக்கிறார் என்பதற்கு ஆதாரம் தேடி நாம் வேறெங்கும் செல்ல தேவையில்லை. அவருடைய அறிக்கையை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். 6-12-2010 அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை எப்படி தொடங்குகிறது தெரியுமா?

“ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, வெள்ளத்தால் தமிழக மக்கள் அல்லல்பட்டு கொண்டிருக்கையில், தன்னுடைய “இளைஞன்” திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவிலே கலந்துகொண்டு உல்லாசமாக பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி” – இப்படித்தான் 6-ந் தேதிய ஜெயா அறிக்கை தொடங்குகிறது.

அறிக்கை விடத் தெரியாத ஜெ…

8-12-2010 அன்று மீண்டும் ஜெயலலிதாவின் அறிக்கை ஒன்று வந்துள்ளது. அந்த அறிக்கை எப்படித் தொடங்குகிறது தெரியுமா?

“ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தபோது எப்படி நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தாரோ, அதேபோல் கனமழை காரணமாக தமிழகமே வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் திரைப்பட விழாவில் ஆனந்தமாக பொழுதைக் கழித்து இருக்கிறார் கருணாநிதி”

– இந்த இரண்டு அறிக்கைகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். 6-ந் தேதி வெளியிட்ட அறிக்கையை எப்படி தொடங்கினோம் என்பது கூடத்தெரியாமல், 8-ந் தேதி அறிக்கையை தொடங்குகிறார் என்றால் அதற்கென்ன காரணம்? ஆத்திரமா? அறியாமையா? திரைப்படத்துறை விழாவிலே நான் கலந்து கொண்டுவிட்டேன் என்ற வயிற்றெரிச்சலா? அல்லது தன்னை யாருமே அழைக்கவில்லையே என்ற பொறாமையா? இந்த லட்சணத்தில்தான் நான் கோமாளித்தனமான அறிக்கைகளை விடுவதாக எழுதியிருக்கிறார் இந்தக் கொடநாடு கோடீஸ்வரி!

அடுத்து ஜெயலலிதா தனது அறிக்கையில் என்ன சொல்கிறார் தெரியுமா? “இதில் திடுக்கிட வைக்கும் உண்மை என்னவென்றால், ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுதான்” என்று எழுதியிருக்கிறார். இதில் ஒரு வயிற்றெரிச்சல்! இந்த அம்மையாரின் ஆட்சிக் காலத்தில்தான் இவர் கலந்து கொள்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அமைச்சரவையிலே உள்ள அத்தனை பேரும் சென்று கலந்து கொள்வார்கள். ஏன், தற்போது முதல்-அமைச்சராக இல்லாத இந்த காலத்திலே கூட, இவர் கோவை, திருச்சி, மதுரை நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டபோது, இவரது அமைச்சரவை முன்னாள் சகாக்கள், இன்றைய அ.தி.மு.க. முன்னணியினர் அத்தனை பேரும் சென்று கலந்து கொண்டார்கள்.

ஆனால் இப்போது என்ன நிலைமை? 7-ந்தேதியன்று அமைச்சரவை கூட்டம். 5-ந்தேதியன்று காலையில் புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் ஆய்வுக்கூட்டம். அந்த கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் என்ற முறையில் நிதியமைச்சர் பேராசிரியர், பொருளாளர் என்ற முறையில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் என்ற முறையில் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச்செயலாளர்கள் என்ற முறையில் துரைமுருகன், பரிதி இளம்வழுதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த அமைச்சர்களில் அன்று மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேராசிரியரைத்தவிர மற்ற நான்கு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த நான்கு பேரைத் தவிர 6ந் தேதி விழுப்புரத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்காக துணை முதல்வர் ஸ்டாலினை அழைத்துச் செல்வதற்காக வந்த உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் திரைப்பட விழாவிலே கலந்து கொண்டார்கள். மொத்தம் 29 அமைச்சர்களில் ஆறேழு பேர்தான் அந்த விழாவிலே கலந்து கொண்டார்கள். ஆனால் ஜெயலலிதா ஒட்டு மொத்த தமிழக அமைச்சரவையும் இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டதாக அறிக்கை விடுகிறார் என்றால், அதற்கு என்ன பெயர் சொல்வது?

இந்த ஆறேழு பேரிலும், துணை முதல்வர், பொன்முடி ஆகியோர் நிகழ்ச்சி முடிந்தவுடன் இரவு 9 மணிக்கு மேல் சென்னையிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளிலும், கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் சுற்றிப் பார்த்து விட்டு நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு, மீண்டும் 7-ந்தேதி அமைச்சரவையிலே கலந்து கொள்ள வந்து விட்டார்கள்.

கோவாவிலே கும்மியடித்தவர் ஜெ…

ஜெயலலிதா மேலும் அவருடைய அறிக்கையிலே வெள்ள நிவாரண பணிகளை பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டினைக் கூறியிருக்கிறார். அதுவாவது உண்மையா? அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அன்றாடம் வெள்ளப்பகுதிகளையெல்லாம் பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்ததின் பேரில், தமிழக அமைச்சரவையே கூடி விவாதித்து பல்வேறு உதவிகளை செய்ய முடிவெடுத்துள்ளது. மத்திய அரசிடம் உதவி கோரிப் பெறுவதென அமைச்சரவையில் முடிவெடுத்து, அதற்கான கடிதமும் அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால் வெள்ள நிவாரணப் பணிகளிலே நான் அக்கறை செலுத்தவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விடுகிறார் என்றால் அதிலே ஏதாவது பொருள் இருக்கிறதா?

கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது – தமிழ்நாட்டில் பிணங்கள் விழுந்தபோது – கோவா கடற்கரையில் கும்மியடித்துக் கொண்டு ‘டூயட்’ பாடிக்கொண்டிருந்தவர் இதே ஜெயலலிதா!

கூட்டணி கட்சியை நான் ஏதோ மிரட்டுவதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே வழக்கம்போல உளறியிருக்கிறார். பா.ஜ.க. ஆட்சியிலே இருந்தபோது விடுதலை நாளன்று கூட ஜெயலலிதா மிரட்டியதாகவும், தனது வாழ்நாளிலேயே ஜெயலலிதாவோடு கூட்டணியிலே இருந்த காலம்தான் மோசமான காலம் என்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று ஜெயா நினைக்கிறாரா?

ரஜினி, வாலி பாராட்டியதை தாங்க முடியாமல்….

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஒப்புக்கொள்கிற வரையில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஓயாது என்று ஜெயலலிதா அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இவர்தான் ஏகத் தலைவி என்று தானாகவே கற்பனை செய்துகொண்டு அறிக்கையிலே சொல்லியிருக்கிறார்.

நினைப்புதான் பொழப்பை கெடுக்கும் என்று சொல்வார்களே அதுபோலத்தான் எப்படியாவது, ஏதாவது நடக்காதா, அதன் மூலமாக தனக்கு விடிவுகாலம் பிறக்காதா என்றுதான் ஏங்குகிறார். இதற்கிடையே கழக அரசின் சார்பில் செய்யப்படும் சாதனைகள், திட்டங்கள் கண்டு அசூயை கொண்டு, மற்றவர்கள் என்னைப் பாராட்டினால் இவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதிலும் ரஜினிகாந்த், கவிஞர்கள் வாலி, வைரமுத்து போன்றவர்கள் அந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு என்னைப் பாராட்டியதை எப்படி அவரால் பொறுத்துக்கொள்ள முடியும்? அதனால்தான் அறிக்கையிலே அநாகரிகமான வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்துகிறார்.

இறுதியாக ஜெயலலிதா தனது அறிக்கையை முடிக்கும்போது “தான் செய்த பாவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நாள் நெருங்கி கொண்டிருக்கிறது என்பது கருணாநிதிக்கு தெரியும்” என்று எழுதியிருக்கிறார். செய்த பாவங்களின் பலனை தற்போதே அனுபவித்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதா என்னுடைய நாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்பதை ஏதோ அவரது வார்த்தை மூலம் சொல்லியிருந்தால், அதற்காக கவலைப்படுபவன் அல்ல இந்த கருணாநிதி, என்று கூறியுள்ளார்.

குறிப்பு: இளைஞன் இசை வெளியீட்டு விழா எப்படியெல்லாம் திசை திரும்பக் கூடும் என்பதை நன்கு உணர்ந்துதான், “ஊரெல்லாம் பலமா மழை பெஞ்சிட்டிருக்கு. வெள்ளத்துல வீடிழந்து, ரோடெல்லாம் டேமேஜ் ஆகி, மக்கள் நிறைய அவதிப்பட்டுக்கிட்டிருப்பாங்க. ஒரு முதலமைச்சரா கலைஞர் அய்யாவுக்கு அதைக் கவனிக்க வேண்டியது இருக்கும். எனவே என் பேச்சை நான் சீக்கிரமா முடிச்சிக்கிறேன்..” என்று கூறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

ஒரு நல்ல அரசியல் / மக்கள் தலைவருக்கு அழகு, ‘வருமுன் உணர்வது’!

-வினோ




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *