BREAKING NEWS
Search

ரஜினி மீது ராஜேந்தருக்கு என்ன கோபம்? – கேள்வி பதில்-16

ரஜினியிடம் கால்ஷீட் கேட்டு கிடைக்காத கோபமா ராஜேந்தருக்கு?- கேள்வி பதில்-16

கேள்வி: ரஜினியிடம் கால்ஷீட் கேட்டு, கிடைக்காத கோபத்தில்தான் தலைவரை தாக்கிப் பேசுகிறாரா ராஜேந்தர்? (ஒருவேளை வீராசாமி கதையைச் சொல்லியிருப்பாரே!!)

-காமாட்சிநாதன்

பதில்: ஒரு சுவாரஸ்யமான ப்ளாஸ்பேக்கைச் சொல்கிறேன் என்று முன்பே கூறியிருந்தேன்… இதோ அந்த ப்ளாஷ்பேக். உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கிறதா பாருங்கள்!

எஸ் ஜே சூர்யாவின் ‘நியூ’ படத்தின் இசை வெளியீட்டு விழா. இடம்: ஆல்பட் திரையரங்கம்.

ராஜேந்தரிடம் மைக் போனது. அவ்வளவுதான், கிட்டத்தட்ட 1 மணிநேரம் மூச்சு விடாமல் பேசிக் கொண்டே போனார். அவரை அமைதியாக்கி உட்கார வைக்கவும் முடியவில்லை.

அப்போது, தனக்கும் ரஜினிக்கும் என்ன பிரச்சினை என்பது குறித்து ராஜேந்தர் இப்படிக் கூறினார்:

உயிருள்ளவரை உஷா என்று ஒரு படம் எடுத்தேன். அந்தப் படம் பெற்ற வெற்றி என்னவென்று தமிழ் சினிமா உலகமே அறியும்.

பொதுவாக சினிமாவில் நான் யாரிடமும் போய் நிற்காதவன். தன்மானத்தை விற்காதவன். ஆனால் நானாகபே போய் ஒருவரிடம் கால்ஷீட் கேட்டேன் என்றால் அது ரஜினியிடம்தான்.

உயிருள்ளவரை உஷா படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர்… செயின் ஜெயபால். ரொம்ப பவர்புல் வேடம். அது ரஜினி மட்டுமே செய்யக் கூடிய வேடம்.

அதனால அவர்கிட்டே சொன்னேன் கதை… கேட்டுக்கிட்டார் அதை. உடனே பதில் சொல்லவில்லை. நானும் விடவில்லை. மீண்டும் கேட்டேன். அப்போதும் அவர் சூப்பர் ஸ்டாராக உச்சத்திலிருந்தார்.

ரஜினி எனக்குச் சொன்ன பதில் இது: “இப்போது நான் நடிப்பவை எல்லாம் பெரிய படங்கள். ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்திப் படங்கள் வேறு பண்ணிக் கொண்டிருக்கிறேன். இப்போது கால்ஷீட் இல்லை என்பது ஒருபக்கம், கவுரவ வேடத்தில் நடித்தால் மற்ற தயாரிப்பாளர்களின் படங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளதே,” என்றார்.

எனது அந்தப் படத்தில் ரஜினி மட்டும் நடிச்சிருந்தா, அந்த ரேஞ்சே வேற. ஆனால் அவர் கால்ஷீட் கொடுக்கல. அன்றைக்கே எடுத்தேன் சபதம்… அந்த சபதத்துலதான் போட்ட விதைதான் சிம்புன்ற நடிகனா இன்னிக்கு உங்க முன்னாடி, லிட்டில் சூப்பர் ஸ்டாரா, நிக்கிறான். எனக்கு சூப்பர் ஸ்டார் கால்ஷீட் கிடைக்கல, அதனால நானே சூப்பர் ஸ்டாரை உருவாக்கினேன். இந்த ராஜேந்தர் போட்ட சபதத்தில ஜெயிச்சிட்டான்…” என்று பேசிக் கொண்டே போனவர், ஒரு பாட்டுப் பாடி முடித்தபிறகுதான் அந்த மைக்கைக் கொடுத்தார்.

இப்போது தெரிகிறதா!

*******

கேள்வி: வினோ, தலைவர் தமிழில் எழுதியிருப்பதை பார்த்தேன் (மைனாவுக்கு பாராட்டு கடிதம்). எனக்கு நீண்ட நாளாக மனதில் ஒரு கேள்வி. தலைவர் எப்போது எப்படி தமிழ் எழுத படிக்க கற்று கொண்டார் என்பதுதான் அது. அவர் பிறப்பால் தமிழர் என்றாலும் வளர்ந்தது கர்நாடகா. ஆரம்ப காலத்தில் அவரது தமிழ் உச்சரிப்பை பலர் கேலி செய்தது உண்டு… ( பேச்சில் அந்த வேகம் எங்கே போச்சு தலைவா ?)

தனக்கு தெரியாததை தெரிந்தது போல் நடிப்பவர் அல்ல தலைவர். தனக்கு பிடித்த நூல் பொன்னியின் செல்வன் என்று சொல்லியிருந்தார்.

உங்களுக்கு தெரிந்த தகவல்களை சொல்லுங்களேன்..

பி.கு. : கேள்வி பதில் பகுதியில் இதை தரலாம்.

-டிஆர்

பதில்: என்ன இப்படி கேட்டுட்டீங்க… தமிழ்நாட்டில் பிறந்தவர். தமிழ்நாட்டு மருமகன் அவர். 35 வருஷமா தமிழில் நடிக்கிற அவருக்கு, கவிதை எழுதுமளவுக்கு தமிழ் அத்துப்படி.

சமீபத்தில் பாலச்சந்தர் கேள்வி – பதில் நிகழ்ச்சியில், கவிதை எழுதணும்னு ஆசை இருக்கா? என்று கேட்க, அதற்கு தலைவர் ஆமாம் என்றார்.

இன்னொன்று, தமிழில் வள்ளி படத்துக்கு கதை – திரைக்கதை – வசனம் எழுதி, சிறந்த கதாசிரியருக்கான விருதையும் வென்றவர் ரஜினி. பாபாவின் கதை, திரைக்கதையும் (சில வசனங்களும்) தலைவரே.

ரஜினி விரும்பிப் படிக்கும் நாவல்களே சொல்லும் அவரது தமிழ் ரசனை மற்றும் அறிவின் மேன்மையை.

அவருக்குப் பிடித்த நாவல் பொன்னியின் செல்வன், அம்மா வந்தாள். பிடித்த நாவலாசியர்கள்: கல்கி, ஜெயகாந்தன், தி ஜானகிராமன், புதுமைப்பித்தன்.

இவர்களின் எழுத்துக்களைப் படிக்கும் ஒருவரது தமிழறிவு எத்தகையதாக இருக்கும் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

ஆரம்ப காலத்தில் தமிழை பிழையின்றி பேச அவர் தனது நண்பர்கள் உதவியையும் பெற்றிருக்கிறார்.

தலைவரின் நெருங்கிய நண்பரான ராஜ் பகதூர் வேலூர் மாவட்டத்துக்காரர். தமிழர். நீங்கள் குறிப்பிடும் காலகட்டத்தில், ராஜ் பகதூரிடம் தமிழை சுத்தமாக உச்சரிக்கக் கற்றதாக ரஜினியே குறிப்பிட்டுள்ளார். மற்ற தமிழ் நண்பர்களிடமும் தொடர்ந்து பேசிப் பேசி உச்சரிப்பத் திருத்திக் கொண்டவர் தலைவர். படிக்கவும் எழுதவும் தன் முயற்சியிலேயே கற்றுக் கொண்டார். இதற்காக வாத்தியாரெல்லாம் வைத்துக் கொள்ளவில்லை நம்ம வாத்தியார்!

*******

கேள்வி: எந்திரன் இப்போ எத்தனை சென்டர்களில் தியேட்டர்களில் 50 வது நாள்?

– மாரியப்பன்

பதில்: சன் பிக்சர்ஸ் சொன்ன கணக்குப் படி 158 திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது எந்திரன். இது தமிழ்நாட்டுக் கணக்குதான்.

ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் ஓடும் திரையரங்குகள் தனி. மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் 50 நாட்களைக் கடந்தது எந்திரன். எப்படிப் பார்த்தாலும் 250 திரையரங்குகளுக்கு குறையாமல் 50 நாட்கள் ஓடியிருக்கிறது எந்திரன். இது பெரிய சாதனை. இப்போது தமிழகத்தில் பாதியாகக் குறைந்துள்ளது எந்திரன் ஓடும் தியேட்டர்களின் எண்ணிக்கை. புதிய படங்கள் வருகை ஒரு முக்கியக் காரணம். இன்னொன்று தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இங்கே படத்தை ரிலீஸ் செய்ததால், பார்க்காதவர்கள் மிகமிகக் குறைவு என்ற நிலை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்…. உலகம் முழுக்க 100 திரையரங்குகளுக்கு மேல் 100 வது நாள் விழா காணப்போகிறது எந்திரன்!

*******

கேள்வி: வடக்கில் எங்காவது 50 நாளைத் தாண்டியதா எந்திரன்?

-ஜெய்

பதில்: மும்பையில் 2 மல்டிப்ளெக்ஸ்களில் 50வது நாளைத் தாண்டி ஓடிக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று போரிவிலி ஈஸ்ட்டில் உள்ள சோனா கோல்ட் மல்டிப்ளெக்ஸ். 12.45 மணிக் காட்சியாக ஓடுகிறது. சினிமாக்ஸ் சியானில் ஒரு காட்சி.

எந்திரன், தெலுங்கு ரோபோ தலா இரு 2 திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்துள்ளன மும்பையில்.

அகமாதாபாத், சண்டிகரில் 40 நாட்களில் எடுக்கப்பட்டுள்ளது ரோபோ. லக்னோ பிவிஆர், பிக் சினிமாஸ் மல்டிப்ளெக்களில் 38 நாட்கள் ஓடியுள்ளது. ஆனால் டெல்லி உள்ளிட்ட பெரும்பாலான வட இந்திய நகரங்களில் ரோபோ 1 மாதத்துக்கும் மேல் ஓடியது. டெல்லியில் மட்டும் 80 திரையரங்குகளுக்கு மேல் வெளியான படம் ரோபோ.  ஆனால் இந்தி ரோபோ இப்போதும் பெங்களூர், ஹைதராபாதில் ஓடிக் கொண்டுதான் உள்ளது!

-வினோ
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *