BREAKING NEWS
Search

ரஜினி – பாலச்சந்தர் பேட்டி: ஒரு ப்ளாஷ்பேக்!

ரஜினி – பாலச்சந்தர் பேட்டி: ஒரு ப்ளாஷ்பேக்!

மீபத்தில் பழைய செய்தித்தாள்களைப் புரட்டியதில் தினத்தந்தியில் வெளியான ரஜினி வாழ்க்கை வரலாற்றின் சில பகுதிகளைக் காண நேர்ந்தது.

அதில் சூப்பர் ஸ்டார் ரஜினியை ஏற்கெனவே ஒரு முறை, ஒரு பத்திரிகைக்காக இயக்குநர் கே பாலசந்தர் பேட்டி எடுத்த விவரம் வெளியாகியிருந்தது. 1985-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பேட்டி அது.

இந்தப் பேட்டியைப் படிப்பவர்கள் நிச்சயம், சமீபத்தில் ரஜினியை கேபி எடுத்த பேட்டியுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே செய்வார்கள். இந்த புதிய பேட்டியில் கேட்ட சில கேள்விகளை, கேபி அன்றே ரஜினியிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி… ரஜினியின் பதில்களில் அதே தெளிவு, நேர்மை!

ரஜினி – கேபி நேர்காணல் (1985):

பாலசந்தர்: நான் உன்னை நடிக்க வைத்த போதெல்லாம், நீ அமைதியில்லாமல் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஆர்வமுடன் இருந்தாய். இப்போது அந்த பரபரப்பு இல்லாமல், சஞ்சலமில்லாமல் அமைதியாக வேலை செய்பவனாக, கடவுள் பக்தி உடையவனாக இருக்கிறாய். பத்து ஆண்டுகளுக்கும் இந்த மாறுதல் ஏற்பட எப்படி முடிந்தது?

ரஜினி: பத்து வருஷத்துக்கு முன்பாக ‘பெரிய நடிகனாக வேண்டும், நிறைய சம்பாதிக்கணும். கார், பங்களா வாங்கணும்’ என்ற ஆசை நிறைய இருந்தது. மனுஷன் சந்தோஷமா, நிம்மதியா இருக்க இதெல்லாம் தேவை. இதெல்லாம் இல்லாம சந்தோஷமா, நிம்மதியா இருக்க முடியாதுன்னு நம்பி இருந்தேன். அப்போது பணம் எனக்கு ரொம்பத் தேவைப்பட்டது.

இதை எல்லாம் நான் அடைந்த பிறகு மன நிம்மதியோ, சந்தோஷமோ நிச்சயமாக பணம், புகழில் இல்லை. அப்படி யாராவது நினைச்சா அது முட்டாள்தனம். இதெல்லாம் அதிகமாக வரவர சிக்கல்களும், பிரச்சினைகளும் ஜாஸ்தியாயிகிட்டே இருக்கும்.

சுகம், நிம்மதியை நாம் விலை கொடுத்து வாங்க முடியாது. இதெல்லாம் நம்ம மனசுக்குள்ளேயே இருக்கு. இதெல்லாம் கிடைக்கிறதுக்கு ஆண்டவனோட அருள் வேணும்.

பணம், புகழ் நிலையானது இல்லைன்னு தெரிஞ்ச பிறகு, அதைப் பொருட்படுத்தாம நடிக்கிறதுதான் என்னோட கடமைன்னு தீர்மானிச்சேன். தவிர, பேரையும், புகழையும் என்னோட மன நிம்மதி, சந்தோஷத்தோட சேர்க்கலை. அது தனி, இது தனி.

பாலசந்தர்: புகழ் பெற்ற நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது நல்லது என்றுதான் நான் நினைக்கிறேன். அதிக படிப்பறிவில்லாத ஜனங்களுக்கு மத்தியில் ஜனநாயகம் நல்ல முறையில் செயல்பட வேண்டுமானால் நல்ல கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைக்க பிரபல நட்சத்திரங்கள் தேவைப்படுகிறார்கள். அதிலும் மக்களிடையே புகழ் பெற்ற தேசியத் தலைவர்கள் அதிகமில்லாத சமயத்தில். இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

ரஜினி: நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அரசியலில் ஈடுபடுவதற்கு முன் ஜனங்களுக்கு உதவி செய்யவேண்டும். என்ன கஷ்டம் வந்தாலும், அதிலிருந்து நாம் பின் வாங்கக் கூடாது என்கிற உறுதியான எண்ணம் நம் மனதில் வரவேண்டும்.

அரசியலை சாக்கடை என்று சொல்வார்கள். நாமும் அந்தச் சாக்கடையில் ஐக்கியமாகாமல் எதிர்நீச்சல் போட்டு எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்கிற உறுதி வேண்டும்.

அரசியலில் ஈடுபடுவதற்கு முன் நம்முடைய பொருளாதார வசதி, குடும்பச் சூழ்நிலை முதலியவற்றை ஒருநிலைப்படுத்திக்கொண்டு “இனி இங்கே வேலை கிடையாது. எனவே அரசியலுக்குப் போவோம்” என்ற எண்ணமில்லாமல், உண்மையிலேயே மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்கிற குறிக்கோளுடன் அந்தச் சாக்கடையை சுத்தம் பண்ண நாம் போகவேண்டும். இல்லேன்னா சாக்கடைப் பக்கமே போகக் கூடாது.

பாலசந்தர்: என்றாவது ஒரு நாம் அரசியலில் ஈடுபடலாம் என்கிற எண்ணம் உனக்குத் தோன்றுகிறது. பெங்களூரில் நீ பேசியதைக் கேட்டபின்பு, நீயும் அரசியலில் ஈடுபடவேண்டும் என்பதுதான் என் விருப்பம் கூட. உடனடியாக இல்லாவிட்டாலும், அமிதாப்பைப் போல சில ஆண்டுகம் கழித்து அரசியலுக்கு வரலாம். உன்னுடைய அபிப்பிராயம் என்ன?

ரஜினி: என்னைப் பற்றி எனக்குத் தெரிந்த தைவிட உங்களுக்கு நிறையவே தெரியும். என்னால் அரசியலில் நிச்சயமாக மாற்றங்கள் செய்ய முடியும் என்றும், அதற்கான அறிவு, தகுதி, சக்தி எனக்கு இருக்கிறது என்றும் நீங்கம் நம்பினால் அதற்கு நான் நிறைய கொடுத்து வச்சிருக்கணும்.

பாலசந்தர்: வன்முறை சம்பந்தமான படங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறாயே? நீ வன்முறையில் நம்பிக்கை உள்ளவனா என்ன? சமீபத்தில் நாட்டில் நடந்த வன்முறை நிகழ்ச்சியைப் பற்றி என்ன சொல்கிறாய்?

ரஜினி: எனக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. நான் வன்முறையாளனும் அல்ல. வன்முறை சம்பந்தப்பட்ட படங்களில் என்னை நடிக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது என்னுடைய நிலைமை, எனக்கு யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத் திரும்ப நான் பணம் வாங்கித் தரவேண்டும். அவர்கள் நடிக்க வைக்கிறார்கள், நான் நடிக்கிறேன்.

சமீபத்தில் நாட்டில் நடந்த வன்முறைக்கெல்லாம் காரணம் “நாம் அனைவரும் இந்தியர்கள்” என்ற உணர்வு நம்மிடையே குறைந்து வருவதினால்தான்.

பாலசந்தர்: அபூர்வ ராகங்கம் ஷூட்டிங்கில் முதல் நாளன்று நீ என்னுடன் பங்கேற்றது உனக்கு நினைவிருக்கிறதா?

ரஜினி: அந்த நிகழ்ச்சி அப்படியே பசுமையாக நினைவில் உள்ளது.

பாலசந்தர்: ஏவி.எம். ஸ்டூடியோவில் ‘அவர்கள்’ படப்பிடிப்பின்போது நான் உன்னைத் திட்டியதும் உனக்கு நினைவிருக்கிறதா?

ரஜினி: “உனக்கு நடிப்பு வராது, உன்னால் நான் தலையைப் பிச்சுக்கணும். இன்ஸ்டிட்யூட்ல நீ என்ன படிச்சி கிழிச்சியோ! ‘மூன்று முடிச்சு’படத்துல வசனம் கம்மி. சிகரெட்டை தூக்கிப் போடறது, அதைப் போடறதுன்னு ஸ்டைலா போயிருச்சு. ஆனா இது வசனம் நிறைய இருக்கிற கேரக்டர். ‘இவனுக்காக நான் கேரக்டரை மாத்த முடியாது. இவனை மாத்திட்டு ஜெய்கணேசை கொண்டு வாங்க’ன்னு சொல்லி ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு நீங்க போனது, இன்னைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது.

பாலசந்தர்: ‘உனக்கு நடிப்பே வராது’ என்று உரிமையுடன் அன்று உன்னைத் திட்டியது இன்று கவனத்துக்கு வருகிறது. அகில இந்தியாவிலும் ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ என்கிறப் பெயரை இன்று நீ பெற்றுவிட்டாய். அதற்காகப் பெருமைப்படுபவன் என்னைத்தவிர வேறு யாராக இருக்க முடியும்?

ரஜினி: அதற்குக் காரணம் நீங்கம்தான். உங்களுடைய ஆசீர்வாதம்தான்…!

-என்வழி
7 thoughts on “ரஜினி – பாலச்சந்தர் பேட்டி: ஒரு ப்ளாஷ்பேக்!

  1. chittu

    whenever i read article about U my eyes are filled with tears . ur daughters are very luckiest daughters in the world to have a very nice father like U

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *