BREAKING NEWS
Search

மொத்தமாகப் பணம் கறக்க, செத்த பிறகும் சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகள்!

மொத்தமாகப் பணம் கறக்க, செத்த பிறகும் சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகள்!

திருச்சி உறையூரில் உள்ளது  அந்த தனியார் மருத்துவமனை.

பெயர் ‘ஏபிசி ஹாஸ்பிடல்’. கரூர் (காங்கிரஸ் கட்சி) முன்னாள் எம்.பி. முருகையாவின் மகன் அருணுக்கு சொந்தமானது இந்த மருத்துவமனை என்பதை கவனத்தில் கொண்டு தொடர்ந்து படியுங்கள்…

அதிக கட்டணம், முறையான சிகிச்சை இன்மை, பிரசவம் என்று உள்ளே நுழைந்தாலே சிசேரியன் என கத்தியைத் தூக்கும் கொடுமை என ஏற்கெனவே ஏகப்பட்ட புகார்கள் இந்த மருத்துவமனை மீது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (செப் 24) ஒரு விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த லால்குடியைச் சேர்ந்த பிரபாகரன் (24) என்பவரை இந்த மருத்துவமனையில் சேர்த்தனர் அவரது உறவினர்கள்.

24-ம் தேதி அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதோடு சரி. அதன் பிறகு அவரைப் பார்க்க நெருங்கிய உறவுக்காரர்கள், நண்பர்கள் யாரையுமே அனுமதிக்கவில்லை அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகள். கேட்கும்போதெல்லாம், அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை, அபாயகட்டத்திலிருக்கிறார் என்றே கூறி வந்துள்ளனர்.

ரிசப்ஷன் பக்கம் போனாலே ஏதாவது ஒரு பில்லைக் கொடுத்து பணம் கட்டச் சொல்லி வந்திருக்கிறார்கள் இந்த இரண்டு நாட்களும். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு பிரபாகரன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 3 நாட்கள் சிகிச்சை அளித்த வகையில் கட்டணம் ரூ. 1 1/2 லட்சம் கொடுத்துவிட்டுப் பிணத்தை தூக்கிச் செல்லுமாறு கறாராகக் கூறிவிட்டார்களாம்.

சில மணி நேரம் கழித்து ஞாயிற்றுக்கிழமை காலை பிரபாகரனின் உறவினர்கள் ஏராளமானோர் மருத்துவமனை முன்பு திரண்டனர். அப்போது மருத்துவமனை ஊழியர்களுக்கும், பிரபாகரன் உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

24-ந்தேதி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பிரபாகரனை உறவினர்கள் பார்க்க அனுமதிக்கவே இல்லை என்றும் மறுநாளே (25-ந் தேதி) பிரபாகரன் இறந்து விட்ட நிலையில் பணத்துக்காக பிணத்துக்கு சிகிச்சை அளித்துள்ளனர் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிருடன் இருந்ததற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள் என்றும் ஊழியர்களிடம் கேட்டனர் உறவினர்கள். இதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. சிகிச்சை அளித்த மருத்துவர்களோ எட்டிப் பார்க்கவே இல்லை.

இந்த நிலையில் கொதிப்படைந்த பிரபாகரன் உறவினர்கள் சிலர் மருத்துவமனை மீது கல் வீசி தாக்குதலில் இறங்க, அடுத்த நிமிடமே உறவினர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே பெரும் ரகளை ஏற்பட போலீஸ் வந்து சிலரை கைது செய்ததது.

பிரபாகரனின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.

இங்கே மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுதான்… எக்காரணம் கொண்டும் கார்ப்பரேட் ஸ்டைலில் கடை விரித்திருக்கும் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டாம் என்பதே. அதற்காக அரசு மருத்துவமனைக்கு போகச் சொல்கிறீர்களா… அங்கு காட்டப்படும் அலட்சியத்தில் உயிர் போய்விடாதா? என்று சிலர் கேட்கக் கூடும்.

அரசு மருத்துவமனைகளைப் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டிவிட முடியாது. மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் ஆங்காங்கே சில அசம்பாவிதங்கள் நடப்பது உண்மைதான். ஆனால் நோயாளி செத்த பிறகும், உயிரோடு இருப்பவர்களை ‘பணத்துக்காக சாகடிக்கும்’ கொடுமை அங்கே இல்லை.

குறிப்பாக சென்னை பொது மருத்துவமனை உள்ளிட்ட பல பெரிய அரசு மருத்துவமனைகளில் நல்ல சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு தரும் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள்.

அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றால் அதிகாரத்தோடும் உரிமையோடும் கேள்வி கேட்கும் மக்கள், தனியார் மருத்துவமனைகளில் கைகட்டி வாய் பொத்தி அவர்கள் கேட்ட தொகையை கட்டுக்கட்டாக அள்ளிவிடுகிறார்கள். இந்த நிலையை இனியாவது மாற்றலாமே!
3 thoughts on “மொத்தமாகப் பணம் கறக்க, செத்த பிறகும் சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகள்!

  1. Umm Omar

    ரமணன் படம் உண்மையில் நடந்தது போல இருக்கு. என்னத்த சொல்ல? இதுல மருத்துவமணைய மற்றும் குற்றம் சொல்லி விட்டுட முடியாது. கூடவே பணத்தை அள்ளுகிற அரசியல்வாதிகளும் போலீஸ்காரங்களும் இன்னும் பலரும் திருந்தனும். அப்படி திருந்தறதுக்கு அரசு வழி பண்ணனும். அரசே கண்ணும் காணாம இருந்தா அப்புறம் இது மாதிரி ஆயிரம் மருத்துவமனைல என்ன ஆனாலும் ஒன்னும் செய்ய முடியாது.

  2. கோய்ந்து

    ஆமாம்! இவனுங்க மட்டும் மொத்தமா டிக்கெட் வித்து பணம் சம்பாதிக்கலாமா? ஏன் ஒரே ஒரு படம் மட்டும் இலவசமா ரஜினிய விட்டு நடிக்க சொல்லு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *