BREAKING NEWS
Search

மூன்று மாதங்களில் கொல்லப்பட தமிழர்கள் 53215..!

மூன்றே மாதங்களில் 53215 தமிழர்கள் படுகொலை! – பிரிட்டன் தமிழர் பேரவை

லண்டன்: இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான கால கட்டத்தில் 53 ஆயிரத்து 215 தமிழர்களை கொன்று குவித்துள்ளது இலங்கை அரசு என்று பிரிட்டிஷ் தமிழர்கள் பேரவை கூறியுள்ளது.

அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த 13 ஆயிரத்து 130 தமிழர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:

jagath6_021

இலங்கைப் படையினரால் இறுதி மூன்று மாதங்களில் நடத்தப்பட்ட பெரும் இனப்படுகொலையின் போது 53 ஆயிரத்து 215 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு விட்டனர்.

பிரிட்டிஷ் தமிழர் பேரவை நடத்திய ஆய்வுகளின் அடிப்படையிலும் திரட்டப்பட்ட நம்பகமான தகவல்களின் அடிப்படையிலும் அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரபூர்வ வெளியீடுகளின் அடிப்படையிலும் இந்த செய்தியை பேரவை வெளியிடுகின்றது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வன்னி மண்ணில் 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்ததை அதிபர் ராஜபக்சேவின் முந்தைய அறிக்கைகளும் அந்தப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகளும் உறுதி செய்கின்றன.

ஆனால், தற்போது அகதி முகாம்களில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 785 மக்கள்தான் எஞ்சியுள்ளதாக ஐ.நா. சபை கூறுகின்றது. இந்த அடிப்படையில் பார்த்தால் எவ்வளவு பெரிய இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை எளிதில் அறிய முடியும்.

அரசின் வதை முகாம்களுக்கு வந்த அப்பாவி மக்களில் 13 ஆயிரத்து 130 பேர் காணாமல் போயுள்ளனர். இதை ஐ.நா. சபையும் உறுதி செய்துள்ளது.

இந்த தகவல்களின் அடிப்படையில் 53 ஆயிரத்து 215 பேரை மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான ஒரு குறுகிய காலப்பகுதியில் நாங்கள் இழந்து நிற்கின்றோம்.

காணாமல் போய் விட்டதாக கூறப்படும் 13 ஆயிரத்து 130 அப்பாவி தமிழ் மக்களையும் மீட்க அரசும் உலக சமுதாயமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முள்வேலியின் பின்னால் அடைபட்டு நிற்கும் எங்களது மக்களுக்கு தேவையான சகலவற்றையும் பொறுப்பேற்பது தமிழர் அனைவரின் தலையாய கடமையாகும்.

நவநீதம் பிள்ளை முயற்சியை தடுப்பது ஏன்?

ருவாண்டாப் படுகொலைகள் நீதியின் முன் நிறுத்தப்பட்ட போது மிகவும் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் நீதி வழங்கி அதன் மூலம் உலகில் பிரசித்தி பெற்றவரான ஐ.நா. சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தற்போது இலங்கையின் இனப் படுகொலைகளை நீதியின் முன்நிறுத்தப் பாடுபட்டு வருகின்றார்.

அப்படி ஒரு நீதி விசாரனை நடைபெற்றால் இந்த பெரும் படுகொலைகளில் பங்கேற்ற அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். ஆகவேதான் நவநீதம் பிள்ளையின் முயற்சியை இந்த நாடுகள் தடுத்து நிறுத்துவதில் மும்முரமாக உள்ளன.

இந்தியா போன்ற நாடுகளின் ஆசீர்வாதத்தினால் இங்கை மீதான போர்க்குற்ற விசாரணை இயலாததொன்றாகி விட்டது. ஆனாலும் உலகின் நீதியை நிலைநாட்டுவதில் நவநீதம் பிள்ளையின் நேர்மை பாராட்டுக்குரியதாகும்.

அதேசமயம், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், அவருடைய அலுவலக அதிகாரிகளான விஜய் நம்பியார், ஜான் ஹோம்ஸ் ஆகியோர் வன்னி அவலத்தை குறைத்து வெளியிட்டு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு, வன்னி மக்களுக்கு நடந்த பெரும் அநீதி மற்றும் படுகொலையை உலகறியச் செய்ய வேண்டும்.

மக்களை மீட்க உலக சமுதாயத்தை வலியுறுத்தவும், முள் வேலிக்குப் பின்னால் நிற்கும் எமது மக்களின் அவலத்தைப் போக்க ஆவண செய்யவேண்டும் என வலியுறுத்தியும், லண்டனில் வருகிற 20ம் தேதி மாபெரும் பேரணிக்கு பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

இதில் தமிழ் உறவுகள் அனைத்தும் திரண்டு வந்து பங்கேற்க வேண்டும் என கோரியுள்ளது பேரவை.
One thought on “மூன்று மாதங்களில் கொல்லப்பட தமிழர்கள் 53215..!

  1. Susithra Gunalan

    வணக்கம்!

    உங்கள் பதிவு இன்று திரட்டியில் பார்த்தேன். வலை நன்றாக இருக்கின்றது. குறிப்பா இலங்கை பிரச்சனை சம்பந்தமா நீங்க நெறயவே எழுதி இருக்கீங்க. இவ்ளோ உயிர்ப் பலி நடந்தும் எந்த நாடுமே அக்கறை இல்லாம இருக்கிறது ரொம்ப வேதனையா இருக்கு. முதல்ல ஒரு ஓலைக் குடிசேலன்னாலும் அவங்க சொந்த நிலத்தில வாழ விடணும். இதுக்கு ராஜபக்சே சம்மதிப்பாரா??? உங்க பணி தொடர வாழ்த்துக்கள்.

    அன்புடன் சுசித்ரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *