BREAKING NEWS
Search

முழுக்க முழுக்க உளறல்… ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்கள்… கேபிக்கு மன்னிப்பே கிடையாது! – வைகோ

முழுக்க முழுக்க உளறல்… ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்கள்… கேபிக்கு மன்னிப்பே கிடையாது! – வைகோ

சென்னை: கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் சமீபத்தில் கூறியுள்ள அனைத்தும் உளறல் பேச்சு… ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்கள். அவருக்கு மன்னிப்பே கிடையாது,” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை:

இலங்கைத் தீவில் போர்நிறுத்தம் ஏற்படாமல் போனதற்கு வைகோதான் காரணம் என்று, சிங்கள அரசின் விருந்தாளியாக தற்போது கொழும்பில் இருக்கின்ற குமரன் பத்மநாதன், என் மீது குற்றம் சாட்டி இருக்கிறார்.

வைகோவின் தேர்தல் பேராசையால், விடுதலைப்புலிகள் பலியாக நேர்ந்தது என்று, ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார். இப்படிக் கூறிய குமரன் பத்மநாதன், 2002ஆம் ஆண்டு இறுதியில், சர்வதேசப் பொறுப்பில் இருந்து பிரபாகரனால் நீக்கி வைக்கப்பட்டவர். பகைவர்களுக்குக் கையாளாகி விடக்கூடாதே என்ற நிலையில், 2008ஆம் ஆண்டில், சர்வதேச ஊடகத் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டவர்.

2009 மே 18ஆம் தேதி, பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று அறிவித்துவிட்டு, மூன்றாம் நாள் பிரபாகரன் இறந்து விட்டார். இனி விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நானே தலைவர் என்றும், தன்னைத்தான் பிரபாகரன் தலைவர் பொறுப்பை வகிக்கச் சொன்னார் என்றும், ஒரு உலக மகா பொய்யைச் சொல்லி, தனக்குத்தானே முடிசூடிக் கொண்டவர்.

ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்…

இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்படும், தமிழ் ஈழ மக்களின் போராட்ட வரலாற்றில், ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏற்பட்ட துரோகப் படலத்தின் தொடர்ச்சியாக, தற்போது குமரன் பத்மநாதன் தமிழ் ஈழ விடுதலைக்கு எதிராக, கொலை பாதகன் ராஜபக்சே அரசின் கைக்கூலியாக, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்கிறார்.

அவர் தனது பேட்டியில், தமிழ் ஈழம் என்பது அழிந்து போன லட்சியம் என்றும், விடுதலைப்புலிகள் சாதாரண மக்கள் மீது வன்முறையை ஏவி, துன்பம் விளைவித்ததற்காகத் தான் வருந்துவதாகவும், அதற்காக இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தாம் மன்னிப்புக் கோருவதாகவும் கூறி உள்ளார்.

இலங்கையில் போரை நிறுத்துவதற்கு, தி.மு.க. தரப்பிலே முயற்சித்ததாகவும், இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அதற்கான ஒரு திட்டத்தைச் சொன்னதாகவும், அந்தத் திட்டத்தின்படி, விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரண் அடைகிறோம் என்று அறிவிக்க வேண்டும். சுதந்திரத் தமிழ் ஈழம் என்ற குறிக்கோளைக் கைவிட்டு, மாற்று அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்க வேண்டும் என்றும், அப்படி ஒரு அறிவிப்பை சிதம்பரமே தயாரித்து இருந்ததாகவும் பத்மநாதன் கூறி உள்ளார்.

இந்தத் திட்டம் குறித்து, வைகோவுக்கும், பழ. நெடுமாறனுக்கும் தெரிவிக்கக் கூடாது என்றும், தேர்தல் காலமாதலால், போர் நிறுத்தம் ஏற்பட்டால் காங்கிரஸ் தி.மு.க.வுக்குப் பெயர் வந்துவிடும் என்றும், அதனால், இந்தத் திட்டத்தைப் புலிகள் ஏற்கவிடாமல் தடுக்க முயல்வோம் என்றும், புலிகளின் அரசியல் பிரிவுச் செயலாளர் நடேசனிடம் கூறப்பட்டதாகவும், நடேசன் அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனிடம் கூறியதால், மகேந்திரன் என்னிடம் கூறி விட்டாராம்.

தமிழ் ஈழ விடுதலைக் கோரிக்கையைப் புலிகள் கைவிட்டால், விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் ஆதரவு தர மாட்டோம் என்று நடேசனிடம் நான் கூறி விட்டதால், இந்தப் போர் நிறுத்த முயற்சி கைகூடாமல் போனதாகவும், பத்மநாதன் என் மீது பழி சுமத்தி உள்ளார்.

பத்மநாதன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய். போர்நிறுத்தம் ஏற்பட்டால், என்னைவிட, பழ.நெடுமாறனை விட நிம்மதி அடைகிறவர்கள் யாரும் இருக்க முடியாது. எவ்வகையிலாவது போர்நிறுத்தம் ஏற்பட்டு விடாதா என்று நாங்கள் துடித்தோம்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், புலிகள் அமைப்புக்கும், அவர்கள் அங்கே எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைப் பற்றி, எந்தக் காலத்திலும் நாங்கள் யோசனை கூறியது கிடையாது. ஈழத்தின் நிலைமைக்கு ஏற்ப, அம்மக்களின் நலனுக்கு ஏற்ற முடிவுகளை, பிரபாகரன் மேற்கொள்வார்.


முரண்பட்ட பேட்டி…

பத்மநாதன் கொடுத்த பேட்டியில், அவரது கூற்றையே அவர் முரண்பட்டு இன்னொரு இடத்தில் சொல்கிறார்.

2008 டிசம்பர் 31இல் பிரபாகரன் தன்னோடு தொடர்பு கொண்டதாகவும், ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, முக்கியத் தலைவர்களை வெளிநாட்டுக்கு வெளியேற்றி, சில வெளிநாடுகளின் உதவியோடு போர்நிறுத்தம் ஏற்படுத்தும் யோசனையைத் தாம் கூறியதாகவும், அதற்கு பிரபாகரன், இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிராகரித்து விட்டதாகவும் கூறுகிறார்.

ஆயுதங்களைக் கீழே போடவே ஒப்புக்கொள்ளாத பிரபாகரன், சிதம்பரத்தின் யோசனைப்படி ஆயுதங்களையும் கீழே போட்டு, சரண் அடைந்து தமிழ் ஈழத்தையும் கைவிட்டு விட, கனவிலாவது உடன்படுவாரா?

நான் இதில் எதிர்ப்புத் தெரிவித்து, அதனால் முயற்சி நின்று போனதாக அறிவுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள்.

அதே பேட்டியில், இன்னொரு இடத்தில், பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி, தன்னிடம், தனது தந்தை, தாய், தங்கை, தம்பியைப் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யச் சொன்னதாகவும், ஹெலிகாப்டர் மூலமும், பின்னர் கப்பல் மூலமும் அவர்களைத் தப்புவித்து, வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல, ஒரு ஆசிய நாட்டுடனும், இரண்டு ஆப்பிரிக்க நாடுகளுடனும் தான் திட்டமிட்டதாகவும், நார்வேயில் உள்ள நெடியவன் அதற்குப் பணம் கொடுக்காமலும், புலிகளின் வெளிநாட்டு விமானப்பிரிவுத் தலைவர் அச்சுதன், விமானிகளை அனுப்பாமல் கெடுத்து விட்டார்கள் என்றும் கூறி உள்ளார்.

ஈழத்தமிழ் மக்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு தப்பிச் செல்ல பிரபாகரன் சம்மதிக்க மாட்டார் என்று சொல்லிவிட்டு, பிறிதொரு இடத்தில் கடைசியாக தப்பிச் செல்ல வருவார் என்றும் கூறி உள்ளார்.

ராஜபக்சேயின் விருந்தாளி கேபி…

குமரன் பத்மநாதன் கோலாலம்பூரில் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, விமானத்தில் வசதியுள்ள உயர்வகுப்பில் தான் பயணித்ததாகவும், கொழும்பு சென்றவுடன் ராஜபக்சேயின் சகோதரன், தமிழ் ஈழ மக்களின் படுகொலைக்குக் காரணமான கொடியோருள் ஒருவனான ராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு ராஜபக்சே தம்மை அன்போடு கைகுலுக்கி வரவேற்று கேக்கும், தேநீரும் தந்து உபசரித்ததாகவும், மிக்க கனிவோடு தம்மிடம் பேசியதாகவும், அதன்பின் தான் ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டதாகவும், அதிகாரி ஒருவர் தனக்கு எந்நேரமும் உதவியதாகவும், உலகில் யாருடனும் பேசும் தொலைபேசி வசதியும், தொடர்புகொள்ள மின் அஞ்சல் வசதியும் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.

சிங்கள அரசுக்கும், தனக்கும் பரஸ்பரப் புரிதலும், நம்பிக்கையும், நட்பும் வளர்ந்துகொண்டே வருவதாகவும் சொல்லி உள்ளார். கோத்தபயவிடம், யுத்தம் நீண்ட காலத்துக்கு முன்பே யுத்தம் முடிந்து விட்டதாகக் கூறினாராம்.

லட்சியத்தைக் கைவிடாத பிரபாகரன்….

கடல்புலிகளின் தலைவர் சூசை, அரசியல் பிரிவுச் செயலாளராக இருந்த தமிழ்செல்வன், நிதிப்பிரிவுப் பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோர் அமைப்பிலே ஆதிக்கம் செய்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார். ஆனால், 2002 கடைசியில் பிரபாகரன் தன்னைப் பொறுப்பில் இருந்து விலகச் சொன்னதாகவும் ஒப்புக் கொண்டு உள்ளார்.

இமாலய ஆபத்துகளே தன்னைச் சூழ்ந்தாலும், பிரபாகரன் இலட்சியத்தைக் கைவிட மாட்டார், சரண் அடைய மாட்டார் என்பதை, புலிகளின் எதிரிகளும் ஒப்புக் கொள்வார்கள்.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி, பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரையில் திட்டவட்டமாக அவர் ஒன்றை உலகத்துக்கு அறிவித்தார்.

“பெரிய ஆயுத பலம் கொண்ட பாரிய சக்திகளை எதிர்த்து நாங்கள் நிற்கிறோம். எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும், எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும், எத்தனை சக்திகள் எதிர்கொண்டாலும், தமிழரின் சுதந்திர விடிவுக்காகத் தொடர்ந்து நாம் போராடுவோம். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரம் ஆகிவிட்ட எமது மாவீரர்களின் வழியே சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோமாக! புலிகளின் தாகம், தமிழ் ஈழத் தாயகம்.”

தமிழ் ஈழ விடுதலையைத் தன் உயிரினும் மேலான இலட்சியமாகக் கொண்டு இருந்த பிரபாகரனை, அதைக் கைவிடச் சொல்லி, இந்திய அரசினர் யோசனை சொன்னார்களாம்.

போர் நிறுத்தம் பற்றி இந்திய அரசு கூறவில்லையே…

விஸ்வரூபம் எடுக்கின்ற கேள்வி யாதெனில், இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும் என்று உலகின் பல நாடுகள் வேண்டுகோள் விடுத்து, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், இந்திய அரசு ஏன் ஒப்புக்குகூட போர் நிறுத்தம் என்ற சொல்லை இலங்கை அரசிடம் கூறவில்லை?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் போர் நிறுத்தத்துக்கு ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 48 மணி நேரத்தில், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்து விட்டு வந்தபோது, பிரதமர் வீட்டு வாயிலில் பத்திரிக்கையாளர்கள் இந்தியப் பிரதமர் போர் நிறுத்தம் வேண்டினாரா? என்று கேட்டனர்.

ஆத்திரத்தோடும், எரிச்சலோடும், போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது; விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என்று உடம்பை முறுக்கிக் கொண்டு திமிராகப் பேசும் தைரியம் அந்த அதிபருக்கு எப்படி வந்தது? இந்திய அரசு கொடுத்தத ஊக்கம்தான் காரணம்.

போரை நடத்தியது இந்தியாவே…

இதைத்தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் சொல்லி வருகிறேன். இலங்கையில், சிங்கள அரசு புலிகளுக்கு எதிராக நடத்தும் போரை இயக்கியதும், திட்டமிட்டதும், ரடார்களும், ஆயுதங்களும், ஆயிரம் கோடி வட்டி இல்லாத பணமும் கொடுத்தது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான். பிரதமரே இலங்கைக்குத் தாங்கள் ஆயுத உதவி செய்ததை ஒப்புக்கொண்டு, 2008 அக்டோபர் 2 இல் எனக்கு கடிதம் எழுதி உள்ளார்.

வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், தமிழக முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டு வாசலில், போர் நிறுத்தத்தை இந்தியா கேட்குமா? என்று செய்தியாளர்கள் வினவியதற்கு எரிச்சலோடு பதில் சொன்னார்: ‘அது எங்கள் வேலை அல்ல; சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் நடக்கும் சண்டை’ என்றார்.

2009 பிப்ரவரி 18 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் அதே பிரணாப் முகர்ஜி, அப்பாவி தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்கிறார்கள் என்று அக்கிரமமான குற்றசாட்டையும் கூறினார்.

இந்திய இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் 2007 இல் செய்யப்பட்டது. இந்தியக் கடற்படையின் உதவியோடு விடுதலைப் புலிகளுக்கு வந்த எட்டுக் கப்பல்களை தாங்கள் கடலில் மூழ்கடித்ததாக இலங்கையில் கடற்படைத் தளபதி வசந்த கரனன்கொட 2009 மார்ச்சில் உண்மையைப் போட்டு உடைத்து விட்டார்.

ராஜபக்சே அறிவித்த ஒரு மூவர் குழுவும், மன்மோகன் சிங் அறிவித்த மூவர் குழுவும், டெல்லியில் ஐந்து முறையும் கொழும்பில் மூன்று முறையும் சந்தித்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி வெற்றி பெறத் திட்டமிட்டன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே விடுதலைப் புலிகளைப் போரில் முடித்துவிட வேண்டும் என்று இந்திய அரசு விரும்புவதாக, இலங்கை அமைச்சர் ஒருவரே கூறிவிட்டார்.

இலங்கை நாடாளுமன்றத்தில், இந்திய உதவியால்தான் புலிகளைத் தோற்கடித்தோம் என்றே அதிபர் ராஜபக்சே அறிவித்தார்.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, பிஞ்சுக் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் உட்பட படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய அரசும் ஒரு காரணம். ராஜபக்சேவின் போர்க்குற்றத்தில், இந்தியாவின் காங்கிரஸ் அரசுக்கும் பங்கு உண்டு என்று தொடர்ந்து நான் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி வருகிறேன்.

அதற்காக என் மீது தேசத் துரோக குற்றச்சாட்டில் இரண்டு வழக்குகளை கருணாநிதி அரசு ஏவி உள்ளது.

நானா பதவி ஆசைப் பிடித்தவன்…?

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இரத்தப் பழிக்கு இந்திய அரசு ஆளாகி விட்டது; குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும்; எங்கள் எதிர்காலச் சந்ததிகள் இன்றைய இந்திய அரசை மன்னிக்க மாட்டார்கள் என்று எழுத்து மூலமாக பிரதமரிடம் குற்றம் சாட்டி உள்ளேன்.

இந்தத் தமிழ் இனத் துரோகச் செயலுக்கு, கலைஞர் கருணாநிதி உடந்தையாகச் செயல்பட்டார் என்பதே என் குற்றச்சாட்டு.

இந்தப் பழியில் இருந்து தப்பிக்கவும், என் மீதே பழி சுமத்தவும், கடந்த ஆண்டிலேயே உளவுத்துறையின் ஏற்பாட்டில், பத்மநாதன் இப்போது அவிழ்த்து விட்டு உள்ள கோயபல்ஸ் பொய்களை அப்போதே சொன்னார்கள். அது எடுபடவில்லை.

அனைத்து உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக இராஜபக்சே நிறுத்தப்படுவார் என்று கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ள என்னைக் களங்கப்படுத்த, இராஜபக்சேவின் கைக்கூலி ஆகிவிட்ட குமரன் பத்மநாதனைத் தற்போது பயன்படுத்தி உள்ளார்கள்.

இதில் வேதனை என்னவெனில், நாடாளுமன்றத் தேர்தலில் பதவி ஆசைக்காக நான் போர் நிறுத்தத்தைத் தடுத்தேன் என்று குமரன் பத்மநாதன் உளறி இருக்கிறார். மத்திய அமைச்சர் பதவிகள் என்னை நாடிவந்தபோதும் நிராகரித்தவன், 2004ஆம் ஆண்டில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை நிராகரித்தவன் நான்.

என்ன பேசினார் நடேசன்?

2009ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி நடேசன் என்னிடம் பேசும்போது, தொகுதி உடன்பாடு முடிந்துவிட்டதா அண்ணா? என்று கேட்டார்.

‘கொஞ்சம் நெருடல் இருக்கிறது. ஆனால், அணிமாற மாட்டேன்; தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்’ என்றேன்.

அதற்கு அவர் ‘நீங்கள் போட்டியிட சிவகாசித் தொகுதி ஒதுக்கப்படுகிறதா?’ என்றார்.

‘தற்போது விருதுநகர் தொகுதி அது. ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படுகிறது’ என்றேன்.

‘நீங்கள் ஒருவர் நாடாளுமன்றத்துக்குச் சென்றால், ஐநூறு எம்.பி.க்கள் எங்களுக்காகச் செல்வதாக நினைப்போம். எனவே, நீங்கள் போட்டியிட வேண்டும்’ என்றார்.

‘நான் யோசிக்கிறேன்’ என்றேன்.

அன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் தொடர்பு கொண்டார். ‘அண்ணா, பலத்த சண்டை நடக்கிறது. மிகவும் சிரமப்பட்டு சேட்டிலைட் போனில் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு நீங்கள் அவசியம் போட்டியிட வேண்டும் என்று தலைவர் பிரபாகரன் விரும்புகிறார்’ என்று குறிப்பிட்டார்.

‘இது குறித்து யோசித்து முடிவு எடுப்பேன்’ என்றேன்.

அன்று நடந்த இந்த உரையாடல் அருகில் இருந்த என் இயக்க முன்னோடிகளுக்குத் தெரியும்.

மே 10ஆம் தேதி அன்று கடற்புலிகளின் தலைவர் சூசை என்னிடம் பேசினார். ‘காயம்பட்ட தமிழ் மக்களின் புண்களில் புழுக்கள் நெளிகின்றன. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் சிலரை இந்திய அரசு ஒரு குழுவை அனுப்பிப் பார்வையிடச் செய்யுங்கள்’ என்றார்.

மே 11 கடைசி நாள் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சொன்னேன். ‘அடுத்த நான்கு நாட்களுக்குள் கோரமான போரை சிங்கள அரசு நடத்தப் போகிறது. இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்கத் திட்டமிட்டு விட்டனர். இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழர்களை அழிக்க சிங்கள அரசு மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு ஆயத்தமாகி விட்டது’ என்று குறிப்பிட்டேன்.

மே 12 அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் காடன் பிரௌன் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உள்ளிட்டத் தலைவர்களுக்கு தமிழர்களின் துயரத்தை மின் அஞ்சலில் வடித்துப் போரை நிறுத்த மன்றாடி செய்தி அனுப்பினேன்.

நான் எந்தப் பதவியிலும் இல்லை. என் மனதில் ஏற்பட்ட பதற்றத்தால் நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்றே செயல்பட்டேன்.

மே 13 வாக்குப் பதிவு முடிந்து இரவு பத்தே கால் மணிக்கு நடேசன் என்னிடம் பேசினார். ‘ஜெயித்துவிடலாமா? அண்ணா’ என்றார்.

‘என் தொகுதியில் கோடிக்கணக்கில் ஆளும் தரப்பு பணத்தைக் கொட்டிவிட்டது. சொற்ப வித்தியாசத்தில் ஜெயிக்கலாம்’ என்றேன். பிரபாகரன், நடேசன் உள்ளிட்டோரின் நிலைமையைப் பற்றிக் கவலைப்பட்டபோது ‘பயப்படாதீங்க அண்ணா! நாங்க வெல்வோம் அண்ணா!’ என்றார்.

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரச்சொல்லி, நடேசனையும் அவரது மனைவியையும், புலித்தேவனையும் சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது.

துரோகிகள் கேபி, கருணாவும் இயேசுவைக் காட்டிக் கொடுத்த ஜூடாஸும்!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எதிரிகளுக்குப் பிடித்துக் கொடுத்தான் ஜூடாஸ். 30 வெள்ளிக் காசுகளுக்காக இத்துரோகத்தைச் செய்த ஜூடாஸ், தனது குற்றத்தை உணர்ந்தவனாக உள்ளம் உடைந்து, முப்பது காசுகளை வீசி எறிந்துவிட்டு, மரக்கிளையில் கழுத்தில் சுருக்கிட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டு மடிந்தான்.

ஆனால், தன் துரோகத்தை உணர்ந்து வருந்தி தற்கொலை செய்து கொண்டான் என்று உலகில் எவரும் சொல்வது இல்லை.

தன் தவறை உணர்ந்த ஜூடாஸுக்கே மன்னிப்பு இல்லை என்றால், குமரன் பத்மநாதன், கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது.

துரோகிகளும், எதிரிகளும் தூற்றினால்தான் நீ சரியான பாதையில் போவதாக அர்த்தம் என்று தந்தை பெரியார் சொன்னார்.

ராஜபக்சே கூட்டம் வைகோவையும், நெடுமாறனையும் தூற்றுகின்றபோது அவர்கள் சரியான பாதையில் செல்கிறார்கள் என்பதை, தன்மானம் உள்ள தமிழர்கள் நன்கு அறிவார்கள்…

பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற தகவல் கிடைத்ததும் நான் தனியறையில் கண்ணீர் விட்டதும், கதறியதும், அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் தவித்ததும் உண்மை. அதை நான் மறுக்கவில்லை.

ஆனால் இது இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட வதந்தி, சதி என்று 24 மணிநேரத்தில் உறுதியான தகவல் கிடைத்ததும் தலைவர் இருக்கிறார், நலமுடன் இருக்கிறார் என்று சொன்னோம். இதில் என்ன குற்றம் கண்டுபிடிக்கிறார் கே.பி.?”

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் வைகோ.

-என்வழி
9 thoughts on “முழுக்க முழுக்க உளறல்… ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்கள்… கேபிக்கு மன்னிப்பே கிடையாது! – வைகோ

 1. karthik

  நன்றி கே பி அவர்களே… உங்கள் சொற்களால் தான் தலைவன் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை வலுவடைகிறது…

 2. patrick

  யார் குற்றவாளி என்று யாருக்கு தெரியும் ? கே பி குற்றம் செய்திருந்தால் அவர் பிரபாகரனால் என்றோ கொன்றுபார் . ஆனால் கே பி 2009 ஆம் ஆண்டு பதவி கொடுத்திருக்க மாட்டார் . சூசையின் கடைசி பேச்சில் , கே பியை குறிப்பிடார். அவர் என்ன பொய் சொன்னரா ? பிரபாகரன் இருக்கிறான் என்று வைகோ , நெடுமாறன் , சீமான் போன்றோர் பொய் கூறுகிறார்கள் .அந்த மாவீரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த தவறிவிட்டோம் .
  உண்மை யாருக்கு தெரியும் ?

  குறிப்பு : ஆசிரியருக்கு கட்டுரை எழுதும் முன் அந்த ஜெயராஜின் – கே பி தொலைபேசி நேர்முகத்தை முழுவதும் படிக்கவும் ?

 3. Jag

  இனிய வைகோ,

  தமிழர் எவரும் உங்களது ஈழம் குறித்த செயல்பாடுகளுக்கு உள்நோக்கம் இருப்பதாக நம்பமாட்டார்கள்.

  பினிக்ஸ் பறவை போல் மீண்டெழுவோம்

 4. RAMAN

  ராஜபக்சே கூட்டம் வைகோவையும், நெடுமாறனையும் தூற்றுகின்றபோது அவர்கள் சரியான பாதையில் செல்கிறார்கள் என்பதை, தன்மானம் உள்ள தமிழர்கள் நன்கு அறிவார்கள்…”

 5. Muthu

  கருங்காலி பத்மநாதன் தமிழ் இன அரக்கன் ராஜபக்சேயின் ஊதுகுழலாக மாறி, தான் ஆட்டு வைப்பதற்கு ஏற்ப ஆடி கொண்டி இருக்கிறான். இந்த தமிழ் இனத்தின் மற்றொமொரு எட்டப்பன் சொல்லும் உளறல்கள் எல்லாம் இந்த மானமிகு தமிழரிடத்தில் எடுபடாது. இந்த சதி பேச்சிற்கு பின்னால், முன்பு வைகோவின் மேல் பழி சொல்லி வெளியேற்றிய தமிழ் நாட்டு கருணாவின் பங்கும் இருக்கலாம். இத்தகைய எட்டப்பன்களின் பாவ செயல்களுக்கு வரலாற்றில் மன்னிப்பே கிடையாது…

 6. குமரன்

  ///துரோகிகளும், எதிரிகளும் தூற்றினால்தான் நீ சரியான பாதையில் போவதாக அர்த்தம் என்று தந்தை பெரியார் சொன்னார்.
  ராஜபக்சே கூட்டம் வைகோவையும், நெடுமாறனையும் தூற்றுகின்றபோது அவர்கள் சரியான பாதையில் செல்கிறார்கள் என்பதை, தன்மானம் உள்ள தமிழர்கள் நன்கு அறிவார்கள்…///

  வைகோவும் நெடுமாறனும் தலைசிறந்த தன்மானத் தமிழர்கள் சந்தேகமேயில்லை. துரோகி கே.பி. தான். இரண்டு நாட்டிலும் இருக்கும் கருணாதான்.

  வைகோவுக்கு பதவி ஆசை இல்லாததால்தான் இப்படி ஒன்றுமில்லாமல் இருக்கிறார். பதவி ஆசை இருந்திருந்தால் அவர் என்றோ மத்திய அமைச்சர் ஆகியிருக்கலாம். ஆகி பல ஆயிரம் கோடி சம்பாதித்திருந்தால் ராமதாஸ் போல அதிக அளவில் எம்.பி. எம்.எல்.எ சீட்டைத் தனது கட்சிக்கு வாங்கி வளர்ந்திருக்க முடியும். இப்படி பதவி பணம் எதிலும் ஆசை இல்லாமல் தமிழனுக்காகவே சிந்தித்தால் என்ன ஆகும் என்பதற்கு வைகோவும், இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு கருனாநிதியுமே உதாரணம்.

 7. illamaran

  If Mr.Vaiko & Nedumaran are really true in the eelam cause, forget the past. Let them participate in the enquiry along with more Eelam supporters that is going to be held on 21st of this month in New Delhi/Chennai ban on Ltte in India. No one has participated in the enquiry that held (reg. ban on Ltte) in New Delhi last month except a BJP leader from Tamil Nadu. Whether Vaiko is really aware of this or he is busy in some other work. Pl. refer Newzealand’s Highcourt verdict, that LTTE is now Front organisation of Eelam Tamil people. Based on this let Vaiko or other eelam supporters fight in the Indian Courts to lift the ban on LTTE. Have they tried any time in the past. Moreover, all Tamil fronts in the foreign countries must try to lift the ban on LTTE in their respective countries,either is diplomatic way or through the courts.This is the right time

 8. illamaran

  If Mr.Vaiko & Nedumaran are really true in the eelam cause, forget the past. Let them participate in the enquiry along with more Eelam supporters that is going to be held on 21st of this month in New Delhi/Chennai ban on Ltte in India. No one has participated in the enquiry that held (reg. ban on Ltte) in New Delhi last month except a BJP leader from Tamil Nadu. Whether Vaiko is really aware of this or he is busy in some other work. Pl. refer Newzealand’s Highcourt verdict, that LTTE is now Front organisation of Eelam Tamil people. Based on this let Vaiko or other eelam supporters fight in the Indian Courts to lift the ban on LTTE. Have they tried any time in the past. Moreover, all Tamil fronts in the foreign countries must try to lift the ban on LTTE in their respective countries,either is diplomatic way or through the courts.This is the right time

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *