BREAKING NEWS
Search

முன்னணி ஹீரோக்களை மிரட்டுகிறார் கருணாநிதி! – ஜெ

முன்னணி ஹீரோக்களை மிரட்டுகிறார் கருணாநிதி! – ஜெ

மிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களை மிரட்டி தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி, என்று ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

மதுரையில் திமுக அரசுக்கெதிராக திங்கள்கிழமை நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் கருணாநிதி குடும்பத்தின் சினிமா ஆதிக்கம் குறித்து கடுமையாக விமர்சித்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

அவர் பேசுகையில், “தமிழ் சினிமாவையே தன் கைக்குள் போட்டுக் கொள்ளப் பார்க்கிறார் கருணாநிதி. இவருக்கு எதிராக எந்த ஹீரோவாவது பேசினால் உடனே அவர்களை வீட்டுக்கு அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். முன்னணி ஹீரோ ஒருவரை அப்படித்தான் திட்டினார் சமீபத்தில்.

இன்னொரு முன்னணி ஹீரோவை, இவரது குடும்பத்துக்கு இலவசமாகவே சினிமா நடித்துத்தர வேண்டும் என மிரட்டப்பட்டிருக்கிறார். இதையெல்லாம் என்னிடம் சொல்லிப் புலம்புகிறார்கள் அந்த ஹீரோக்கள்.

கருணாநிதியின் நோக்கமே, ஹீரோக்களை ஜீரோக்களாக்குவதும், தனது குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்குவதும்தான்.

இவரது குடும்பத்தில் உள்ள மகன்கள், பேரன்கள் எல்லோருமே சினிமா துறையை ஆக்கிரமித்துள்ளனர்.

கருணாநிதி குடும்பத்தினர்தான் இந்த ஆண்டு அதிக படங்களைத் தயாரித்துள்ளனர் அல்லது வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டு வெளியான 64 படங்களில் 35 படங்களை கருணாநிதி குடும்பமே தயாரித்துள்ளனர்.

இவர்கள் வாங்க மறுத்ததால் 40 படங்கள் கடந்த ஆண்டு வெளியாகவே இல்லையாம்.

நடிப்பு, தயாரிப்பு, கதை வசனம், இயக்கம் என சகலமும் கருணாநிதி குடும்பத்தினர் வசமே. ஆனால் கதை வசனத்தையெல்லாம் இவர்களுக்கு சொந்தமாக எழுதத் தெரியாது. யாரையாவது வைத்து எழுதி, பணம் கொடுத்து தங்கள் பெயரைப் போட்டுக் கொள்வார்கள்.

கருணாநிதி கதை வசனம் எழுத ரூ 50 லட்சம் சம்பளமாம். இவர் கதை, வசனம் எழுதி அதை யார் பார்ப்பார்கள். கதை வசனம் என்று ஏதோ ஒன்றைக் கொடுப்பார். அதை அப்படியே தூக்கி வைத்துவிட்டு, இயக்குநர்கள் தலையெழுத்தே என தங்கள் சொந்த கதை வசனத்தை படமாக எடுக்கிறார்கள். அவர்களுக்கு இவரிடம் வேலை ஆக வேண்டும். அதற்காகத்தான் இந்த ரூ 50 லட்சம் சம்பளம்.

இவரது அரசால் வழக்கு தொடரப்பட்ட ஒருவரே இப்போது கருணாநிதி கதை வசனத்தில் படம் தயாரிக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் கருணாநிதி ஆட்சியின் நேர்மையை!”, என்றார்.

முன்பு பெப்சி விழாவில் ‘மிரட்டிக் கூப்பிடுகிறார்கள்’ என்று முதல்வர் முன்னிலையில் பேசியவர் அஜீத். அதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், பின்னர் கருணாநிதியை சந்தித்து அஜீத் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதெல்லாம் நினைவிருக்கலாம். இதே அஜீத் பின்னர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசி பெற்றதோடு, சிறிது நேரம் பேசிக் கொண்டும் இருந்தார்.

சன் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸுக்காக தலா ஒரு படம் நடிக்கிறார் விஜய் என்று செய்தி வெளியானது. முந்தைய படங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே மீண்டும் நடித்துத் தருகிறார் விஜய் என்றும் சொல்லப்பட்டது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இதே விஜய்யும் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்று, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததுதான். அதாவது அஜீத்தும், விஜய்யும் ஒரே நாளில் ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.

அவர்களின் அந்த சந்திப்புக்கும், ஜெயலலிதாவின் மதுரை பேச்சுக்கும் சம்பந்தம் இருக்குமோ என்ற கேள்வியோடு ஒரு குறிப்பை மேலிடத்துக்கு அனுப்பியுள்ளதாம் உளவுத்துறை!

அழகிரி மீது கடும் தாக்கு

ந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பிறகு ஜெயலலிதா மொத்தம் 2 மணி நேரம் பேசினார்.மாலை 4.45க்கு மைக்கைப் பிடித்தவர் 6.45க்குதான் கீழே வைத்தார்.

இதில் அதிக நேரத்தை முதல்வர் கருணாநிதியின் மகனும், மதுரையின் செல்வாக்கு மிக்க வி்விஐபியுமான மத்திய அமைச்சர் முக அழகிரியை தாக்குவதற்கே எடுத்துக் கொண்டார்.

அழகிரி குறித்து அவர் பேசுகையில், “ஒருகாலத்தில் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளால் தூங்கா நகராக இருந்த மதுரை, தற்போது தூங்க முடியாத நகராகிவிட்டது. காரணம் அழகிரி. தமிழகத்தில் இரண்டு அரசுகள் உள்ளன. கருணாநிதி முதல்வராகவும், ஸ்டாலின் துணை முதல்வராகவும் சென்னையில் இருக்கும் ஒரு அரசு.

அழகிரி தலைவராகவும், ‘பொட்டு’ சுரேஷ் துணைக்கு இருப்பவராகவும் மற்றொரு அரசு இருக்கிறது. மதுரைக்கு ஸ்டாலின் வரவேண்டுமானால், அழகிரியிடம் விசா வாங்கிகொண்டுதான் வரவேண்டும். லீலாவதி கொலை வழக்கை நினைவூட்ட விரும்புகிறேன். மக்களுக்காக தண்ணீர் கொண்டு வர பாடுபட்ட, மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி பஜாரில் கொலை செயப்பட்டார். நான்கு தி.மு.க.,வினர் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வன்முறைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. தி.மு.க.,விற்கு வேலை பார்க்க பரோலில் விடுவிக்கப்பட்டனர்.

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? அஞ்சா நெஞ்சன்! யார் கொடுத்தது இந்த பட்டம். உண்மையான அஞ்சா நெஞ்சம் யாருக்கு இருக்கிறது என்பது உங்களூக்கே புரியும்.

ஆட்சி இல்லாவிட்டாலும் நாங்கள் அஞ்சாத சிங்கங்கள். மரணம் ஒருமுறைதான் வரும். அது உங்களுக்காக வரும் என்றால் சந்தோசமாக ஏற்கிறேன்.அதனால்தான் துணிச்சலாய் வந்திருக்கிறேன்.

அனைவராலும் மதிக்கக்கூடிய மென்மையான திமுக தலைவர் தா.கிருட்டினன்.  அவர் திமுக ரவுடிகளால் கொடூரமாக கொல்லப்பட்டார்.  அவரின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று அழகிரி மிரட்டி வருகிறார்.  இந்த வழக்கு சம்பந்தமாக ஜெயா டிவியில் பேட்டி ஒளிபரப்பினால் ஜெயா டிவி அலுவலகத்தை தரை மட்டமாக்குவோம் என்கிறார்.

இந்த அஞ்சா நெஞ்சன் மதுரையைத் தாண்டி டெல்லிக்குப் போனால் அஞ்சி நடுங்குகிறார். பத்திரிக்கையாளர்களின் பேட்டி அஞ்சி ஓடுகிறார் இந்த அஞ்சா நெஞ்சன்.  நாடாளுமன்ற கூட்டம் என்றாலே ஓடி ஒளிந்துகொள்கிறார் இந்த அஞ்சா நெஞ்சன்.

அமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு வரியைத்தான் இவர் பேசியிருக்கிறார். இவருக்கு அஞ்சா நெஞ்சன் என்ற பட்டம் வேறு…

போகப் போக தெரியும், இந்த பூவின் வாசம் புரியும் என்று ஒரு பாடல் இருக்கிறது. நான் அதை இப்படிச் சொல்கிறேன்: போகப் போக தெரியும், அழகிரியின் ஊழல் வாசம் புரியும்…” என்றார்.


எனக்கும் நீதிபதிகளுக்கும் பாதுகாப்பில்லை…

டந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஆண்டு தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லை. உபரி மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

மாநிலத்திற்கு வருவாய் பெருகியது. அ.தி.மு.க., ஆட்சியில் காற்றாலை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தி.மு.க., ஆட்சியில் மோசமான பராமரிப்பு காரணமாக மின்வெட்டு ஏற்படுகிறது. மின்வாரியத்திற்க நஷ்டம். மக்களுக்கு கஷ்டம். மாணவ மாணவியர் படிக்க மின்சாரம் இல்லை. தமிழகம் இருளில் மூழ்கியிருக்கிறது.

விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பல இடங்களில் மணல் அள்ளப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் வரம்பு மீறி மணல் அள்ளியதால் ஐகோர்ட் மணல் அள்ள தடை விதித்துள்ளது. இதனை ஆய்வு செய்ய குழு அமைத்தது. இந்த குழு தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்த குழு தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டு தடை விதிக்க பரிந்துரை செய்துள்ளது.

பெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கு தி.மு.க.,வும் அதரவு தெரிவிக்கின்றது. கருணாநிதி விலைவாசியை கட்டுப்படுத்துவார் என எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. எனவே தி.மு.க.,விற்கு சட்டசபை தேர்தலில் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்.

இந்த ஆட்சியில் எனக்கும், உங்களுக்கும், போலீசாருக்கும், நீதிபதிகளுக்கும் பாதுகாப்பில்லை.  இந்த ஆட்சியில் மிகவும் பாதிக்கப்பட்ட சமுதாயம் மீனவ சமுதாயம். பலர் இறந்துள்ளனர். நூற்றுகணக்கானோர் இலங்கை சிறையில் உள்ளனர். ஆயிரகணக்கானோர் நடுக்கடலில் தாக்கப்படுகின்றனர்.

பத்திரிகைகளை நம்பி நாங்களில்லை!

கோவை கூட்டத்திற்கு 8 லட்சம் பேர் திரண்டதை பத்திரிகைகள் செதியாக வெளியிட்டிருந்தன. இதை பொறுக்க முடியாத கருணாநிதி, பத்திரிகைகளை மிரட்டினார். திருச்சி கூட்டத்திற்கு 18 லட்சம் பேர் திரண்டனர். இதை பத்திரிகைகள் இருட்டடிப்பு செதுவிட்டன.

என்னிடம் பேசிய வடமாநில தலைவர்கள், கோவை கூட்டம் குறித்து பாராட்டினர். ஆனால் திருச்சி கூட்டம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்ததுதான் காரணம். எனது கூட்டங்களுக்கு வாகனங்கள் தரக்கூடாது என உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். கருணாநிதி சொல்வதை ஊடகங்கள் கேட்காவிட்டால் அந்த ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களும் இதற்கு பயந்து கொண்டு கருணாநிதிக்கு ஆதரவாகவே செய்தி போடுகின்றன.

திருச்சி கூட்டத்திற்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டனர் என கருணாநிதி கூறினார். ஆனால் உண்மையில் கூட்டத்தை தடுப்பதற்காகதான் போலீசாரை அனுப்பினார். இந்த தடையை மீறி மக்கள் வெள்ளமென திரண்டனர். திருச்சி கூட்டத்தில் பணத்தை அள்ளி செலவழித்தார் கருணாநிதி. அப்படியும் கூட்டம் வரவில்லை. ஆனால் அதை ‘ஆஹா… ஓஹோ…’ என எழுதச் சொன்னார். தமிழகத்தின் பத்திரிகைகளுக்கு மனச்சாட்சி உண்டா, என அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

கருணாநிதி மிரட்டல்களுக்கு பத்திரிகைகள் பயந்துவிட்டன. மதுரையின் பிரம்மாண்ட கூட்டம் பற்றி உண்மையான செதியை வெளியிடுகிறனவா என்று நாளை பார்த்தால்தான் தெரியும். எம்ஜிஆர் காலத்திலிருந்தே பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை. மக்களை நம்பி உள்ளோம். தேர்தல் வரட்டும், மக்கள் முடிவு என்ன என்பது அப்போது தெரியும்…” என்றார் ஜெயலலிதா.

கூட்டணி… என் கணக்கு தப்பாது!

கூட்டணி குறித்து ஜெயலலிதா பேசுகையில், “கூட்டணி எப்படி இருக்குமோ என்ற சிறிய சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். எனது கணிப்பு சரியாக இருக்கும். மேலும், 2011 ல் கோட்டையை அ.தி.மு.க. பிடிக்கும். மதுரையில் 4 மணியிலிருந்து கரன்ட்கட் செயப்பட்டுள்ளதாக தற்போது எனக்கு ஒரு தகவல் வந்துள்ளது. எனது பேச்சின் நேரடி ஒளிபரப்பை யாரும் பார்க்கக்கூடாது என கருணாநிதி பவர்கட் செதுள்ளார். அடுத்த தேர்தலில் கருணாநிதியின் பவரை கட் செது, அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். செவீர்களா?

உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்… பொறியாளர் ஒருவர் மூன்று கிலோ மீட்டருக்கு பாலம் கட்டினார். “இப்பாலத்தில் செல்லும் வாகனங்கள் 30 டன் எடை கொண்டதாக இருக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு குண்டூசி எடையைக்கூட பாலம் தாங்காது; இடிந்துவிடும்,” என்றார். ஒரு லாரி 30 டன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு, பாலத்தில் சென்றது. மறுமுனையில் லாரியை வரவேற்க, அதிகாரிகள் திரண்டிருந்தனர். லாரி மீது சில புறாக்கள் அமர்ந்திருந்தன. குண்டூசி எடைக்கு மேல் புறாக்கள் இருக்குமே என மக்கள் அச்சமடைந்தனர்.

ஆனால், லாரி மறு முனையை அடைந்தது. இது குறித்து அந்த பொறியாளரிடம்,” ‘புறாக்கள் அமர்ந்ததால், 30 டன்னிற்கு மேல் எடை அதிகரித்திருக்குமே,’ என மக்கள் கேள்வி எழுப்பினர். பொறியாளரோ, “இந்த ஒன்றரை கிலோமீட்டரை லாரி கடந்தபின், டீசல் செலவாகிவிட்டது. புறாக்கள் அமர்ந்திருந்தாலும், 30 டன்னிற்கு மேல் எடை அதிகரித்திருக்காது,” என்றார். அதுபோல் எனது கூட்டணி கணக்கும், கணிப்பும் சரியாக துல்லியமாக இருக்கும் என்றார் ஜெயலலிதா.

தனது பொதுக்கூட்ட நேரடி ஒளிபரப்பை மக்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக மதுரை முழுவதும் மாலை 4 மணியிலிருந்தே மின்வெட்டு அமல்படுத்தப்பட்டதாக ஜெயலலிதா கூறினார். ஆனால் இதனை மின்வாரியம் மறுத்துள்ளது.

மதுக்கடையை சூறையாடிய அதிமுகவினர்

ர்ப்பாட்டம் நடந்த இடம் அருகே, பாண்டி கோயில் எதிர்புறம் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை உட்பட சுற்றுப்புற பகுதி கடைகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில்,நேற்று மதியம் தொண்டர்கள் டாஸ்மாக் கடையை உடைத்து, சூறையாடினர். அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த 4 போலீசார் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதிமுக கண்டனக் கூட்டத்துக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதம் நேரக்கூடாது என்பதால், முன்னெச்சரிக்கையாக பள்ளிகள் / கல்வி நிறுவனங்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

-என்வழி




5 thoughts on “முன்னணி ஹீரோக்களை மிரட்டுகிறார் கருணாநிதி! – ஜெ

  1. DEEN_UK

    ஜெயலலிதா சொல்வதில் சில உண்மைகளும் உள்ளது..சில கருத்துகள் உண்மையே…அது நமக்கு தேவை இல்லை.ஜெயலலிதா வந்தால் மட்டும் என்ன நடந்து விட போகிறது? அவர்களும் ஒரு மிக பெரிய …………………..தான். எது எப்படி இருந்தாலும் நமது குடும்பம் (ரஜினி ரசிகர்கள் ) ஜெயலலிதாவுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்.காரணம்..ஜெயலலிதா என்று ஒருவர் இல்லாவிடில்,நமது தலைவர் தமிழ் மக்கள் மேல் உள்ள அன்பு ,தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அவரது நினைப்பு நமக்கு தெரியாமலே போய் இருக்கும் என்பதே உண்மை.. இவர்களுக்கெல்லாம் ஒரு முடிவு வெகு விரைவில் காத்திருக்கிறது..வெகு விரைவில் இதற்கு ஒரு தீர்வு உள்ளது..அது நிச்சயம் நடக்கும்..அந்த நேரம் உலக அரங்கில் வளரும் நாடுகளுக்கு தமிழ் நாடு,,முன்னுதாரணமாய் திகழும்…இது நிச்சயம்..இது நடந்து கொஞ்ச நாளில் தமிழ் நாட்டில் திராவிட ஊழல் கட்சிகள் காணாமல் போய்விடும் ..சில காமெடி கட்சிகள் (வருங்கால முதல்வர் கனவு காணும் தந்தை டைரக்டர் கட்சி உள்பட ) கூட்டணி கட்சியாக இருக்கும்….இது நடப்பது உறுதி..இப்படி நடக்கும் போது உங்களுக்கு நினைவு இருந்தால் எனக்கு ஒரு பதில் அனுப்புங்கள் நண்பர்களே!! தீன் …நீ அப்போவே சொன்னது நடக்குது பார் .!! என்று இதே நமது குடும்ப தளத்துக்கு கமெண்ட் பண்ணுவீங்க!! அப்போதும் நாம் எல்லோரும் இங்க இதே போல பேசிட்டு இருப்போம்!! இது நடக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.

  2. madan

    Deen சொன்னதை நான் வழிமொழிகிறேன். தலைவர் அரசியலுக்கு வந்தால் இப்போது உள்ள ஆளும் கட்சி எதிர் கட்சி எல்லாம் தலைவரை வீழ்த்த கூட்டணி அமைக்க வேண்டி இருக்கும்.

  3. Boston Sriram

    //தலைவர் அரசியலுக்கு வந்தால்//
    தலைவர் எதுக்கு அரசியலுக்கு வந்து, தன மன நிம்மதியை கெடுத்து கொண்டு, நம் போன்ற அரசியல் ஞான சூனியங்களுக்காக, தன வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டும்?
    அவர், அவர் போக்கில் செல்வது தான் சரி. அவ்வளவு அக்கறை இருந்தால், கூப்புடுறவங்க அரசியல்ல குதிக்கட்டும். நம்ம சுயநலத்துக்காக, அவர் பலிகடா ஆக தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *