BREAKING NEWS
Search

மாபலி விருந்துக்கு அழைப்பிதழ்!

மாபலி விருந்துக்கு அழைப்பிதழ்!

சில தினங்களுக்கு முன் விகடனில் வெளிவந்த மாலதி மைத்ரியின் கவிதை இது. கட்டுப்படுத்த முடியாத ஆற்றாமையில் வந்து விழுந்துள்ள வரிகள். சமகால இனத் துரோகிகளுக்கு இதெல்லாம் உரைக்குமா தெரியவில்லை…

ன்றோரே சான்றோரே

பேரரறிஞர்களே மூதறிஞர்களே

கவிஞர்களே கலைஞர்களே

அரசு ஊழியர்களே

என் உயிரினும் உயிரான தமிழர்களே

நாம் சுவாசித்தது ஒரே காற்று

நாம் பேசியது ஒரே மொழி

நாம் நடத்தியது ஒரே பேரம்

நாம் விதித்தது ஒரே விலை

நாம் விற்றது ஒரே இனம்

காட்டிக்கொடுக்க நீண்டதும்

நம் ஒரே விரல்

நாம் செய்ததும் ஒரே துரோகம்

இம்மாபெரும் வரலாற்றை

நாம் சாதித்த ஓராண்டின் நிறைவைக்

கொண்டாடும்

விருந்துக்கு அழைக்கிறேன்

உலகே தமிழ் மண்ணில் திரளட்டும்

விரோதி வருடம்

சித்திரை ஐந்தாம் நாள்

வங்கக் கடல் தீவில்

சிங்கப் படைகள்

சில லட்சம் மக்களைக் கொன்றொழித்து

சீர்மிகு வரலாறு படைத்த

மாபலி நாளின்

மாண்பினைப் போற்றும் வகையில்

இச்சித்திரை மாதம்

பௌர்ணமி தினத்தில்

மனிதகுலமே கண்டிராத வகையில்

மாபெரும் விருந்து நடக்கிறது

அனைவரும் கலந்துகொண்டு

விருந்தினைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்

அறுக்கப்பட்ட மென்முலைகள்போன்ற

இட்லியுடன் பிள்ளைக்கறி பிசைந்த

செவ்வரிசிச் சோறு

மதுவருந்தும் கவிஞர்களுக்கு மட்டும்

நுரை பொங்கும் செங்குருதியுடன்

மூளை வறுவல் வழங்கப்படும்

இதிலுள்ளவை தவிர்த்து

சிறப்புணவு தேவையெனில்

மூன்று தினங்களுக்கு முன்

எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தால்

தீவிலிருந்து

தனி விமானத்தில்

தருவித்துத் தர ஏதுவாக இருக்கும்

உலகச் சமூகமே வியந்து நிற்க

உலகத் தமிழர்கள் ஒன்றாய் நின்று

இப்பலி விருந்தைச் சிறப்பிக்கும்படி

கேட்டுக்கொள்கிறேன்.

இவ்விருந்தை வழங்குபவர்கள்

ஹைடு அண்ட் சீக் வேர்ல்டு விஷன்

ஹனி டியூ அண்ட் ஸ்பிரிங் பிரிவரிஸ்,

ஆன்ட்டி வார் அண்ட் பீஸ் ஹன்டர்ஸ்,

வேர்ல்டு நைட்ரோ கெமிக்கல்ஸ்,

இன்டர்நேஷனல் வார் கிரிமினல்ஸ் அசோஸியேஷன்.

குறிப்பு: தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே அயல் நாட்டு நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இதைப் பிழையாகக் கருதி தமிழ்ப் பற்றாளர்கள் விருந்துக்கு வராமல் இருந்துவிடக் கூடாது. இது எங்கள் அன்புக் கட்டளை!

நன்றி: ஆனந்த விகடன்




One thought on “மாபலி விருந்துக்கு அழைப்பிதழ்!

  1. குமரன்

    சித்திரை மாதம் வைகாசி மாதம் என்பது தமிழ் அல்ல நமது முதல்வருக்கு.
    எனவே ஏப்ரல், மே, ஜூன் என்றே வழங்கவேண்டும்.
    எனவேதான் ஜூன் மாதம் 19 – 22 ஆம் தேதி ஒரு மறைமுகக் கொண்டாட்டமாக செம்மொழி மாநாடு என்ற பெயரில் சொக்கத் தங்கம் சோனியாவை அழைத்து விருந்து நடத்துகிறார்.

    ஜூன் மூன்றாம் தேதி புதிய குழந்தை போலப் பிறந்தநாள் கொண்டாடியதோடு அல்லாமல் தன பிறந்த நாளுக்குத் தானே தன்னைப் பற்றிப் புகழ்ந்து பல பக்கங்களுக்கு அறிக்கை வெளியிட்டார்.

    கருனாநிதின்னா சும்மாவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *