BREAKING NEWS
Search

மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு நிறுத்தி வைப்பு! – மத்திய அரசு அறிவிப்பு

மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு நிறுத்தி வைப்பு! – மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நாடெங்கும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்போவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்திருந்தது.

இதற்கு நாடெங்கும் கடும்எதிர்ப்பு கிளம்பியது. அகில இந்திய அளவில் எம்.பி.பி.எஸ்.-சில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தினால் அது கிராமப்புற மாணவர்களுக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மருத்துவ பொது நுழைவுத்தேர்வை கைவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார்.

தமிழக அரசு சார்பில் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே மருத்துவ பொது நுழைவுத் தேர்வை கண்டித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து மத்திய அரசு பணிந்தது. நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

2011-12 ம் கல்வி ஆண்டில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டுமானால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். நேற்று அந்த அறிவிக்கை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்நாட்டின் தீவிர எதிர்ப்பால் நேற்று அந்த அறிவிக்கை வெளியிடப்படவில்லை.

மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தினால் அது மாநிலங்களின் உரிமையில் தலையிடுவது போல ஆகிவிடும் என்று பெரும்பாலான மாநில அரசுகள் கருத்து தெரிவித்துள்ளன. எனவே இது தொடர்பாக மாநில அரசுகளுடன் விரிவாக கலந்து ஆலோசனை நடத்த மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

அதுவரை மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடை பெறாது. தற்போதைய சூழ்நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் (2011-12) மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நிச்சயமாக நடைபெறாது என்பது உறுதியாகி உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சுஜாதா ராவ் கூறுகையில், “அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். சிறிது காலத்துக்கு அது ஒத்திப் போடப்பட்டுள்ளது.

பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை அமல்படுத்தும் முன்பு மாநில அரசுகளுடன் ஆலோசிக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய் துள்ளது. எனவே மாநில அரசுகளுடன் ஆலோசிக்கப்படும்.

வரும் 30-ந்தேதி மத்திய சுகாதார கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை சிக்கல் எதுவுமின்றி அமல் படுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுக்கு இதன் மூலம் பாதிப்பு வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது பற்றியும் ஆராயப்படும்”, என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *