BREAKING NEWS
Search

மனசுக்குள் பெய்யும் மழை!

மனசுக்குள் பெய்யும் மழை!

சின்ன வயதில் பார்த்த பல படங்கள் மறந்து போகின்றன.. கேட்ட பல பாடல்கள் நினைவுகளிலிருந்து அழிந்து போகின்றன.

ஆனால் சில நிகழ்வுகளைத் தொட்டு நிற்கும் படங்கள் / பாடல்களை யுகங்களானாலும் மறக்க முடியாது போலிருக்கிறது.

ஒரு கோடை மழை நாளில், எங்கள் ஊரில் திருமணம் ஒன்றில் ரிக்கார்டு போட்டபோதுதான் முதன்முதலில் அந்தப் பாட்டைக் கேட்டேன். பதின்ம வயதுகளின் ஆரம்பம். பார்க்கும் பெண்களிடமெல்லாம் நெருக்கமாக இருக்கத் தூண்டும் கிளர் பருவம். மனதை பரவசப்படுத்தியது அந்தப் பாட்டு.

அதுதான் வெள்ளைப் புறா ஒன்று… எனும் புதுக்கவிதை படப் பாட்டு. தொடர்ந்து அந்த ரிக்கார்டில் ஒலித்த அத்தனைப் பாடல்களுமே இனிமையாக இருந்தன. ஆனால் வெள்ளைப் புறா ஒன்றும்…, வா வா வசந்தமே பாடலும்தான் எனக்கு மிகப் பிடித்த பாடல்களாக இருந்தன.

பின்னொரு மழைநாளில் திருப்பத்தூர் சி.கே.சி திரையரங்கில் அந்தப் படத்தைப் பார்த்தேன். 14 கிலோ மீட்டர் சைக்கிளில் நண்பர்களுடன் போய் பார்த்த படம். படத்தின் இடைவேளையில்தான், அவளும் படம் பார்க்க வந்திருப்பது தெரிந்தது. அவளுக்கு வீடு பக்கத்து கிராமம். உடன் படிப்பவள். வகுப்பிலேயே அழகி. சைக்கிளில் அவள் வருவதைப் பார்க்கவே ஒரு கூட்டம் காத்திருக்கும். பையன்களும் பெண்களும் பேசிக் கொள்ளாமல், மனதுக்குள் பெரிய கோட்டை கட்டி, அந்தக் கோட்டையைத் திறக்காமலேயே, அடுத்த கட்டத்துக்குப் போய்விடும் கட்டுப்பெட்டி காலம் அது.

படம் முடிந்த பிறகு அவள் என்னுடன் அதிசயமாய் பேசினாள்.. (உடன் வந்திருந்த அவள் தங்கை விரோதமாய் முறைத்ததாய் நினைவு!)

‘படம் பிடிச்சிருக்கா…’

‘ம்… உனக்கு?’

‘எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இன்னொரு முறை அக்காவோட வருவேன்’

‘எப்போன்னு சொல்லு…நானும் வர்றேன்’

பதில் சொல்லாமல், முகமெல்லாம் வெட்கச் சிரிப்பாக அவள், கடந்து செல்ல, வெள்ளைப் புறா ஒன்று இதயத்துக்குள் நீண்ட நேரம் படபடவென அடித்துக் கொண்டே இருந்தது. அந்த சந்தோஷத்தைக் கொண்டாட நண்பர்களை வற்புறுத்தி அடுத்த காட்சியும் பார்த்தேன் (இரண்டாம் வகுப்பு டிக்கெட் விலை 75 பைசா!).

வாழ்க்கை வேறு வேறு திசைகளில் பயணப்பட்டுவிட்டாலும் இன்னும் கூட மனசுக்குள் அந்த மழை ஈரமும், மகிழ்ச்சியான உரையாடலும் மறையவே இல்லை.

‘புதுக்கவிதை’ பாடல்களை மீண்டும் ஒரு முறை கேட்க நேர்ந்தபோது, இதைப் பதிவு செய்யத் தோன்றியது… இதைப் படிக்கும் உங்களையும் இப்படி சில மழைக் காலங்களும்… புதுக்கவிதைகளும் கடந்திருக்கலாம்…!

வெள்ளைப் புறா ஒன்று…

வாரே வா…

வெள்ளைப் புறா ஒன்று… (சோகம்)

வா வா வசந்தமே…

படம்: புதுக்கவிதை
நடிகர்கள்: ரஜினி, ஜோதி
பாடல்கள்: வைரமுத்து
இசை: இசைஞானி இளையராஜா
இயக்கம்: எஸ்பி முத்துராமன்
வெளியான வருடம்: 1982

-திருப்பத்தூரான்




3 thoughts on “மனசுக்குள் பெய்யும் மழை!

  1. Raja

    வெள்ளை புறா ஒன்று பாடலும் சந்தோசம் மற்றும் சோகமாக வரும். அதேபோல் நான் அடிமை இல்லை படத்தில் வரும் ஒரு ஜீவன் தான் பாடலும் (சந்தோசம், சோகம்) என்க்கு மிகவும் பிடித்தது. நல்ல பிளாஷ்பேக் பதிவு.

  2. r.v.saravanan

    இனிமையான பிளாஷ்பேக் பதிவு

    எனக்கு பிடித்தமான பாடல்கள் வெள்ளை புறா ஒன்று ,வா வா வசந்தமே எப்பொழுது கேட்டாலும் மயக்கும் இளையராஜாவின்
    இசை

    பதிவுக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *