BREAKING NEWS
Search

மணிவிழா காணும் சூப்பர் ஸ்டார் ரஜினி -லதா… ஒரு ப்ளாஷ்பேக்!

மணிவிழா காணும் சூப்பர் ஸ்டார் ரஜினி -லதா… ஒரு ப்ளாஷ்பேக்!


1981. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ரஜினியின் கொடி உயரே உயரே பறந்துகொண்டிருந்த நேரம்… காதலில் விழுந்தார்!

பிப்ரவரி 25-ந்தேதி மாலை 4 மணிக்கு, நிருபர்களை திடீரென்று ரஜினி அழைத்தார்.

ரஜினி அழைப்பாயிற்றே… சில நிமிடங்களுக்கெல்லாம் அத்தனை நிருபர்களும் ரஜினி வீட்டில்.

அந்த பிரஸ் மீட் நிருபரிகளுக்கு மறக்க முடியாதது. ரஜினி இப்படிப் பேசினார்:

“லதாவை நான் காதலிக்கிறேன். கடவுள் அருளால் அவருக்கும் எனக்கும் திருமணம் நடைபெறுகிறது. இது எப்படி என்பது பற்றி, என் அன்பு ரசிகர்களுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

வாழ்க்கையின் இன்ப – துன்பங்களை உணர்ந்தவன் மட்டுமல்ல; அனுபவித்து அறிந்தவன் நான். முதுகில் தழும்பேற மூட்டை சுமந்து, மில்லி அடித்து, வாழ்க்கையின் மேடு – பள்ளங்கள் அனைத்தையும் உணர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.

என் வாழ்க்கையில் பெரும் திருப்பம் நிகழ்ந்தது, பிரபல நடிகை சௌகார் ஜானகியின் வீட்டில்தான்.

7 மாதங்களுக்கு முன் அங்கு, பாலசந்தர் சாரின் “தில்லு முல்லு” படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதில் நான் நடித்துக் கொண்டிருந்தேன்.

பகல் ஒரு மணி இருக்கும். எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் வந்தனர். அவர்களில், என் முன்னால் வந்து, தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் லதா.

“மிஸ்டர் ரஜினி! நான் கல்லூரி மாணவி. எங்கள் கல்லூரியின் சிறப்பு இதழுக்கு, உங்களை பேட்டி காண வந்திருக்கிறேன். சம்மதமா?” என்று கேட்டார். நான் சம்மதித்தேன்.

பேட்டி தொடர்ந்தது. சுவையான, அறிவுபூர்வமான கேள்விகள் பலவற்றை லதா கேட்க கேட்க, நானும் என் பாணியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

லதா திடீரென்று “மிஸ்டர் ரஜினிகாந்த்! உங்கள் திருமணம் எப்போது?” என்று கேட்டார்.

“குடும்பப் பாங்கான பெண் எப்போது கிடைக்கிறாளோ, அப்போதுதான் திருமணம்” என்று பதிலளித்தேன், லதா மீது கண்களைப் பதித்தபடி.

“இப்படிச் சொன்னால் எப்படி! விளக்கமாகச் சொல்லுங்கள்!” என்றார், லதா.

“உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். உங்களை மாதிரி ஒரு பெண் கிடைத்தால் நான் கல்யாணம் செய்து கொள்வேன்” என்றேன்.

நாணத்தால் லதாவின் முகம் சிவந்து விட்டது.

என் வாழ்க்கையில் ஒளிவு – மறைவு இல்லை. உண்மை பேசி வாழ விரும்புகிறேன். என் மனமார, எவருக்கும் துரோகம் செய்யமாட்டேன்.

அதனால்தான் மனம் திறந்து, “என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?” என்று லதாவிடம் கேட்டேன். தொடர்ந்து, இதுபற்றி ஒய்.ஜி.மகேந்திரனிடம் பேசினேன்.

லதாவிடமும், லதாவின் பெற்றோரிடமும் மகேந்திரன் பேசினார். அவர்களின் சம்மதம் கிடைத்தது.

அதன் பிறகு நானும் லதா வீட்டுக்கு சென்று அவர் பெற்றோர்களிடம் பேசினேன். ‘திருமணத்துக்கான ஏற்பாடுகளை எல்லாம் நானே செய்கிறேன். அதுவரை வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டேன்.

நான் பெங்களூர் சென்று என் அண்ணனிடம் லதா பற்றி கூறினேன். முதலில் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

“என்னப்பா… அந்தப் பெண் நம்ம சாதி இல்லேன்னு சொல்றே. மராத்தியில் கிடைக்காத பெண்ணா உனக்கு மதராஸிலே கிடைக்கப்போகுது?” என்று கேட்டார்.

“நான் நல்லா இருக்கணும்னு நீங்க விரும்பினா, லதாவை மணந்து கொள்ள எனக்கு அனுமதி கொடுங்க”ன்னு சொல்லிவிட்டு வந்தேன்.

பிறகு என் அண்ணன், சென்னைக்கு வந்தார். லதாவைப் பார்த்துவிட்டு, சம்மதம் தெரிவித்தார்.

லதா மட்டும், “உங்களை மணந்து கொள்ளமாட்டேன்” என்று கூறியிருந்தால், என் மனம் தாங்கியிருக்காது. ஏனென்றால் ஒரு பொருளின் மீது ஆசை கொண்டால் அதை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி கொண்டவன் நான். சம்யுக்தையை பிருதிவிராஜன் தூக்கிச்சென்றது போன்ற நிலைமை ஏற்பட்டிருக்கும். அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.

திருமணத்துக்காக 7 மாதம் காத்திருந்தேன். அதற்குக் காரணம் உண்டு. எனது மனைவியின் குணநலன்கள் எப்படி? என் குணத்தையும், மனதையும் அறிந்து நடந்து கொள்வாளா? அவளது நடை, உடை, பாவனை எப்படி என்பதை எல்லாம் அறிந்து கொள்ள விரும்பினேன். அதற்குத்தான் 7 மாதம் பிடித்தது.

என் மனைவி லதாவுக்கு சங்கீத ஞானம் உண்டு. நன்றாகப் பாடுவாள். அவள் விரும்பினால் சினிமாவில் பின்னணி பாடலாம். நடிக்க விரும்பினால் கூட நடிக்கலாம். நான் தடை சொல்லமாட்டேன்.

என்னோடு ஜோடியாக நடிக்க விரும்பினால்கூட, நான் நடிக்கத் தயார்!

பெண்கள் என்பவர்கள், வீட்டில் கணவன் காலடியில் நெளியும் புழுவோ, பூச்சியோ அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் தேவை. அந்த சுதந்திரம் லதாவுக்கு முழுமையாக உண்டு…”, என்றார் ரஜினி.

திருமணத்துக்கு யாரையும் அழைக்கமாட்டேன்…

திருமணத்துக்கு யாரையெல்லாம் அழைத்தீர்கள்? என்று கேட்டபோது, “யாரையும் அழைக்கவில்லை” என்றார்.

தொடர்ந்து, “எனது திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. என்னோடு நெருங்கிப் பழகிய, என் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்களைக் கூட, “வாருங்கள்! என் திருமண கோலத்தைக் கண்ணாரக் கண்டு ஆசீர்வதியுங்கள்” என்று அழைக்கவில்லை.

இதற்குக் காரணம் என்ன? அழைப்பிதழ் அச்சடித்து, குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வீடு வீடாகச் சென்று கொடுப்பது, தபால், தந்தி, ரேடியோ வசதிகள் இல்லாத அந்தக் காலத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில் அது எதற்கு? என்னைப் போன்ற ஒரு நடிகனுக்குத் திருமணம் என்றால், அடுத்த நிமிடமே மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக நவீன வசதிகள் இருக்கின்றன. அதனால் அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை.

என் திருமணத்துக்கு உடன் பிறந்தவர்கள் தவிர, வேறு எவரையும் அழைக்கவில்லை. வயது முதிர்ந்த என் தந்தையிடம் கூட, மானசீகமாகத்தான் வாழ்த்து பெற்று இருக்கிறேன்.

நான் பெங்களூரில் கண்டக்டராகப் பணியாற்றினேனே… அப்போது என்னுடன் பழகி, என்னுடன் உண்டு உறங்கிய சில பஸ் கண்டக்டர்கள், டிரைவர் நண்பர்களை மட்டுமே திருப்பதிக்கு அழைத்திருக்கிறேன்.

தெய்வத்தின் சந்நிதானத்தில் என் திருமணம் நடைபெறுகிறது. வெறும் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியைத்தான் நான் லதா கழுத்தில் கட்டப்போகிறேன்.

தாலி கட்டுவது என்பது வெறும் சடங்கு. ஆனால், தெய்வத்தை சாட்சியாக வைத்துக் கொண்டு, மனச்சாட்சிக்கு பயந்து, ஒருத்தி கழுத்தில் கயிற்றைக் கட்டுவதே உண்மையான திருமணம். திருமணத்தையொட்டி, சென்னையில் உள்ள சில அனாதை விடுதிகளில் உள்ளவர்களுக்கு சீருடையுடன் உணவும் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறேன்,” என்றார்.

“தேன் நிலவுக்கு எங்கே போகப் போகிறீர்கள்?” என்று கேட்டதற்கு,

“தேன் நிலவாவது, சர்க்கரை நிலவாவது? விஸ்கி அடித்தால், தினமும் தேன் நிலவுதான்! கள்ளம், கபடம் இல்லாமல், ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் ஒவ்வொரு நாளும் தேன் நிலவு நாட்களே!

எனினும் இனி நான் டிரிங்க் செய்வதை குறைத்துக் கொண்டு விடுவேன். உடல் நலமே முக்கியம். சுவர் இருந்தால்தானே சித்திரம் தீட்ட முடியும்! இதை கவனிக்கும் பொறுப்பு, இனி என்னை விட என் லதாவுக்கு அதிகம் உண்டு…,” என்றார் தனக்கே உரிய பாணியில்.

வந்தால் உதைப்பேன்…

இவ்வளவும் சொன்னவர், எந்த நிருபரும் திருமணத்துக்கு வரக் கூடாது என்று ஒரு குண்டைப் போட்டார்.

இதனால் பரபரப்படைந்த நிருபர்கள், வரவேண்டாம் என்று சொல்வதற்காகவா எங்களை அழைத்தீர்கள் என்றனர் சற்று உரிமையுடன்.

அப்போது, லதாவுடன் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை நிருபர்களிடம் ரஜினி கொடுத்தார்.

“திருமணத்துக்குப் பிறகு இந்தப் படத்தை போட்டுக் கொள்ளுங்கள். வரவேற்பு நிகழ்ச்சியை பின்னர் சென்னையில் நடத்தப் போகிறேன். தேதி முடிவாகவில்லை. முடிவானபிறகு, என்னை ஆளாக்கிய கலை உலக, பத்திரிகை உலக நண்பர்கள் ஒவ்வொருவரையும் நேரில் அழைப்பேன். திருப்பதி கோவிலில் மாலை மாற்றி தாலி கட்ட விசேஷ அனுமதி பெற்று இருக்கிறேன். அங்கே பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் வந்து கூட்டம் கூடினால் பிரச்சினை ஏற்படும். எனவே, திருமணத்துக்கு யாரும் வரவேண்டாம்” என்றார், ரஜினி.

“வந்தா…?” என்று ஒரு நிருபர் கேட்க, ரஜினி ‘டென்ஷன்’ ஆகி, “உதைப்பேன்” என்றார்.

திடுக்கிட்டனர் பத்திரிகையாளர்கள்.

உடனே ஒரு நிருபர், “ரஜினி! இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீர்கள். இதை அப்படியே பிரசுரித்தால் நன்றாகவா இருக்கும்?”

என்று, கூறினார்.

அமைதி அடைந்த ரஜினி, “நீங்கள் நேருக்கு நேராக இப்படி கூறியதைப் பாராட்டுகிறேன். அப்படிச் சொன்னதற்கு வருந்துகிறேன்… ஸாரி! ஆனாலும், திருப்பதிக்கு யாரும் வரவேண்டாம். கேமிராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கிறதைத் தவிர வேறு வழி தோணாது!” என்றார், ரஜினி!

திருமலையில் திருமணம்…

26-2-1981 அன்று அதிகாலை 3.30 மணிக்கு திருமலையில் சுப்ரபாதம் முழங்க லதாவுக்கு தாலி கட்டினார் ரஜினி.

திருமணம் முடிந்து, சாமி சந்நிதியை விட்டு ரஜினியும், லதாவும் வெளிவந்தபோது,  சில பத்திரிகையாளர்களும், போட்டோகிராபர்களும் எப்படியோ அங்கு வந்து போட்டோ எடுக்க முயன்றனர். ‘நான் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் இங்கே வந்துட்டாங்களே’ என்று ‘டென்ஷன்’ ஆனார், ரஜினி.

உறவினர்கள் அவரைச் சமாதானப்படுத்தி, வேறு வழியாக அழைத்துச் சென்றுவிட்டனர்.

திருமணம் முடிந்ததும் படப்பிடிப்பு…

திருப்பதியிலிருந்து அருகில் உள்ள திருச்சானூர் சென்று, பத்மாவதியை தரிசனம் செய்துவிட்டு, ரஜினிகாந்தும் மற்றவர்களும் உடனடியாக சென்னைக்குத் திரும்பினார்கள்.

அன்று காலை 10 மணிக்கு, ஏவி.எம்.ஸ்டூடியோவில் கே.பாலசந்தரின் “நெற்றிக்கண்” படப்பிடிப்பு நடந்தது. அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

7 மாதங்களுக்கு முன், பாலசந்தரின் “தில்லுமுல்லு” படப்பிடிப்பின்போது அரும்பிய ரஜினி – லதா காதல், அதே பாலசந்தரின் “நெற்றிக்கண்” படப்பிடிப்பின்போது திருமணத்தில் முடிந்தது.

இதற்கிடையே, மனைவி லதாவுடன் ரஜினி பெங்களூருக்கு சென்று, தன் தந்தையிடம் ஆசி பெற்றார்.

வரவேற்புக்கு எல்லோரையும் அழைத்த ரஜினி…

“திருமணத்துக்கு யாரும் வரவேண்டாம். ஆனால், திருமண வரவேற்புக்கு எல்லோரும் வாருங்கள். நானே உங்களுக்கு அழைப்பு கொடுப்பேன்” என்று ஏற்கனவே ரஜினி அறிவித்திருந்தார்.

அதைப்போலவே, திருமணத்துக்கு 2 வாரம் கழித்து (மார்ச் 14-ந்தேதி) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார். அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் தானே அழைப்பிதழ் கொடுத்து நிகழ்ச்சிக்கு வரச் சொன்னார். “சாமி சந்நதானத்தில் நடக்கும் திருமணத்தை விளம்பரப்படுத்த விரும்பவில்லை. ஆனால் நண்பர்கள் அனைவரும் சந்தோஷமாக கூடும் நிகழ்ச்சி வரவேற்பு. அனைவரும் வர வேண்டும்” என்றார்.

பிரமுகர்களும், திரை உலகத்தினரும் பெருந்திரளாக வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

நல்ல மருமகள்…

திருமணத்துக்குப் பிறகு, ஒரு முறை ரஜினியின் தந்தையிடம், “உங்கள் மருமகள் லதாவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார் ஒரு நிருபர்.

அதற்கு அவர், “ரொம்ப நல்லப் பொண்ணு. என்னை அன்பாக கவனித்துக் கொண்டாள்” என்று அவர் பதிலளித்தார்.

திருமணத்தின்போது லதா, சென்னை எத்திராஜ் கல்லூரியில் “பி.ஏ” இறுதியாண்டு படித்துக்கொண்டு இருந்தார். திருமணத்துக்குப் பிறகும் 2 மாதம் தொடர்ந்து கல்லூரிக்குச் சென்று படித்து, பரீட்சை எழுதி, “பி.ஏ” பட்டம் பெற்றார்.

திருமணத்துக்குப் பிறகு…

திருமணத்துக்குப்பின், ரஜினிகாந்த் வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள். இதை அவரை பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

முன்பெல்லாம், இரவு நெடுநேரம் கழித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ரஜினி, திருமணத்துக்குப்பின் மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வீடு திரும்பத் தொடங்கிவிட்டார்.

இதுபற்றி கேட்டவர்களிடம், “முன்பு நான் தனி ஆள். இப்போது எனக்காக ஒருத்தி வீட்டில் தனியாகக் காத்திருக்கிறாளே! அவளுக்காக காலாகாலத்தில் வீட்டுக்குப் போகவேண்டாமா!” என்று பதிலளித்தார்.

இனிய சுபாவமும், கருணை உள்ளமும் கொண்டவர், லதா. அவருக்கு ரஜினி வைத்திருக்கும் செல்லப் பெயர் ஜில்லு.  அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ஒரு காட்சி ரஜினி வீட்டில் படமாக்கப்பட்டிருக்கும். அந்த்க காட்சியில் லதா வருவார். அப்போதும் அவரை இதே பெயர் சொல்லித்தான் ரஜினி அழைப்பார்.

லதாவின் முயற்சியால் சிகரெட், மது ஆகியவற்றை படிப்படியாக குறைத்துக் கொண்டார் ரஜினி. பேச்சில் பொறுமையும், செயல்களில் நிதானமும் ஏற்பட்டன.

“திருமணத்துக்குப்பின் உங்கள் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டனவே” என்று ஒரு பேட்டியின்போது நிருபர் கேட்டதற்கு, “ஒருவர் திருமணம் செய்து கொள்வதே, மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தானே! அந்த மாற்றங்களைத்தான் இப்போது பார்க்கிறீர்கள்! நேரம் வரும்போது, எல்லாம் தானாகவே நடக்கும்” என்றார் ரஜினி.

-என்வழி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *