BREAKING NEWS
Search

மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்… ரப்பர் ஸ்டாம்புகளின் வெட்டி பந்தா அல்ல!

ஜனங்களுடன் பயணம் செய்தால் ஜனாதிபதியின் கிரீடம் சாய்ந்துவிடுமோ!

க்களுக்காகத்தான் அரசுகள்… அரசுகளுக்காக மக்கள் அல்ல. தேர்தல் முடிந்து பதவி நாற்காலியில் அமர்ந்த கையோடு, இந்த அடிப்படை உண்மையை மறந்துவிடுகிறார்கள் அரசியல்வாதிகள்

ஒரு தலைவன் உயிர்வாழ பல நூறு மக்கள் செத்தாலும் பரவாயில்லை என்ற சைக்கோ மனப்பான்மையில்தான் இன்றைய ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உள்ளனர்.

அதற்கு இதோ இன்னுமொரு உதாரணம்…

விமானத்தில் எரிபொருள் காலியாகிவிட்ட நிலையிலும் 3 விமானங்களை வானில் வட்டமடிக்கவிட்டு ஒன்றல்ல இரண்டல்ல 500 பயணிகளின் உயிரோடு விளையாடியுள்ளது டெல்லி விமான நிலையம்.

மங்களூர் விமான விபத்து நடந்த மூன்றே நாட்களில் கடந்த புதன்கிழமை நடந்த அதிரவைக்கும் சம்பவம் இது.

சரி… இதற்குக் காரணம் என்ன?

அன்றைய தினம் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சீனாவுக்குப் புறப்பட்டார். அதே போல இந்தியா வந்துள்ள துர்க்மேனிஸ்தான் அதிபர் பெர்டிமுன்ஹா மெடோவ் ஆக்ராவச் சுற்றிப் பார்க்கச் சென்றார். இருவரது சிறப்பு விமானங்களும் டெல்லி விமான நிலையத்தில் இருந்து கிளம்ப இருந்ததால், பாதுகாப்பு கருதி மற்ற அனைத்து விமானங்களும் கடைசி நேரத்தில் டெல்லியில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு, ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.

மும்பையில் இருந்து டெல்லி வந்த ஜெட்லைட் நிறுவன போயிங் 737 விமானம் (JLL 108), ஜெய்ப்பூருக்குத் திருப்பிவிடப்பட்டபோது அதில் போதுமான எரிபொருள் இல்லை. இருப்பினும் அந்த விமானம் ஜெய்ப்பூர் செல்ல உத்தரவிடப்பட்டது. இதையடுத்த அந்த விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியது. அப்போது அதில் வெறும் 3 நிமிட எரிபொருளே மிச்சமிருந்தது.

அதே போல மும்பையில் இருந்து டெல்லி வந்த கிங்பிஷ்ஷர் ஏர்பஸ் 330 விமானம் (IT 300) ஜெய்ப்பூரில் தரையிறங்கியபோது, அதில் அடுத்த 10 நிமிடம் மட்டுமே பறப்பதற்கான எரிபொருளே மிச்சமிருந்தது.

சென்னையிலிருந்து வந்த ஜெட் ஏர்வேஸ் (9W 2357) நிறுவனத்தின் போயிங் 737 விமானமும் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. அது தரையிறங்கும்போது அதில் 13 நிமிடம் பறப்பதற்கான எரிபொருளே மிச்சம் இருந்துள்ளது.

இந்த மூன்று விமானங்களிலும் 450 பயணிகள் இருந்தனர். இந்த மூன்று விமானங்களின் பைலட்டுகளும் இனிமேல் பறக்க முடியாது என்று எமர்ஜென்சி நிலையை அறிவித்த பிறகே, ஜெய்ப்பூரில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில் அன்றைய தினம் 11 விமானங்கள் சண்டீகர், லக்னெள, ஜெய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. மேலும் 20 விமானங்கள் தரையிறங்க முடியாமல் டெல்லியை சுமார் 1 மணி நேரம் சுற்றிக் கொண்டே இருந்தன.

காலை 9 மணிக்கு ஆரம்பித்த இந்த நெருக்கடி, பிரதீபாவும் மெடோவும் டெல்லியைவிட்டுக் கிளம்பிய 10 மணி வரை தொடர்ந்தது.

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அப்ரோச் ரேடார் எனப்படும், விமானங்களின் இயக்கத்தை கண்டறியும் ரேடார் இல்லை. விமானங்கள் தரும் தகவலை வைத்தே அவற்றின் வேகம், திசையை ஜெய்ப்பூர் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தால் அறிய முடியும்.

அத்தோடு அங்கு தூசிப் புயலும், வேகமான காற்றும் சேர்ந்து கொள்ள ஜெய்ப்பூரில் தரையிறங்க விமானங்கள் மிகவும் சிரமப்பட்டன.

இந்தத் தகவல்களை இந்த 3 விமானங்களின் பைலட்டுகளும் தரையிறங்கவுடன் புகாராகப் பதிவு செய்துள்ளனர். எரிபொருள் குறித்து கவலைப்படாமல் திடீரென விமானங்களை வேறிடத்துக்கு போகுமாறு கூறுவது, வானிலேயே சுற்றவிடுவது ஆகியவை குறித்து விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் flight safety report-ல் பதிவு செய்துள்ளனர்.

விஐபிக்கள் விமானங்கள் காரணமாக விமான நிலையம் மூடப்படுவது குறித்து முன்கூட்டியே தரப்படும் ‘Notam’ (notice to airmen) என்ற தகவல் டெல்லிக்கு வரும் வரை தரப்படவில்லை என்று பைலட்டுகள் புகார் கூறியுள்ளனர்.

ஆனால், விஐபிக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ‘Notam’ தகவல் தருவது நிறுத்தப்பட்டுவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக விஐபி விமானங்களுக்காக 3 நிமிடங்கள் மட்டுமே விமான நிலையம் மூடப்படும். ஆனால், கடந்த புதன்கிழமை ஆக்ராவில் நிலவிய மோசமன வானிலையால் துர்க்மேனி்ஸ்தான் அதிபரின் விமானம் கிளம்புவது தாமதமாகிவிட்டது. இதனால் தான் விமான நிலையம் 1 மணி நேரம் மூடப்பட்டது என்று கூறியுள்ளனர் அதிகாரிகள்.

பொதுவாகவே விஐபி விமானங்களால் விமான நிலையங்களில் நாளுக்கு நாள் கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைக்கு அது பிற பயணிகள் விமானங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

விமான டிராஃபிக் அதிகமில்லாத நேரத்தில் இந்த மாதிரி வேலையற்ற விஐபிக்களின் பயணங்களைத் திட்டமிடலாம். பிரதிபா பாட்டீலின் வெட்டி சீனப் பயணத்துக்காகவும், துர்க்மெனிஸ்தான் அதிபர் ஆக்ராவைச் சுற்றிப் பார்க்கவும் 500 பயணிகள் எமலோகம் போகவேண்டுமா?

தரை வழிப் பயணம் பாதுகாப்பில்லை என்று கூறி விமானங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ள இந்த விஐபிக்கள், இங்கும் சாலை வழி பயணத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை கெடுபிடிகளையும் பிரயோகிப்பது அர்த்தமற்றது.

ஏன்… மக்கள் பயணிக்கும் விமானங்களுடன் சேர்ந்து இவரது விமானம் கிளம்பினால் இந்த ஜனாதிபதியின் கிரீடம் சாய்ந்துவிடுமா?

ஆயிரமாயிரமாய் கொட்டிக் கொடுத்து விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் பாதுகாப்புதான் முக்கியமே தவிர, உப்புப் பெறாத ரப்பர் ஸ்டாம்புகளின் வெட்டி பந்தா அல்ல!

-என்வழி
10 thoughts on “மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்… ரப்பர் ஸ்டாம்புகளின் வெட்டி பந்தா அல்ல!

 1. krish

  இவுங்களிடம் இருப்பது மட்டும் தான் உயிர் மத்தவங்களிடம் இருபதெல்லாம் ம..ரா ……………..????

 2. குமரன்

  இலங்கையில் லட்சக் கணக்கான மக்கள் மீது வான் வழித் தாக்குதலுக்குத் திட்டமும் வழியும் வகுத்துக் கொடுத்த சோனியா காந்தி தலைமையிலான அரசாங்கம் வெறும் 200 அல்லது 300 உயிர்களைப் பற்றியா கவலைப் படும்?

  ரஷ்யாவின் ஜார் மன்னர்கள்…
  பிரெஞ்சின் லூயி மன்னர்கள் …
  மங்கோலியாவின் செங்கிஸ்கான் வம்சத்தவர் …
  ஜெர்மனியின் ஹிட்லர் …
  இத்தாலியின் முசோலினி ….
  போன்ற அரக்கர் குணம் கொண்டவர்களின் வரிசையில் …

  இலங்கையில் ராஜபக்சே …
  இந்தியாவில் சோனியா காந்தி ….
  தமிழகத்தில் கருணாநிதி ….

  சரித்திரம் இவர்களை கெட்ட செயல்களுக்காக மறக்காது … மன்னிக்காது.

 3. Dinesh

  மக்களின் உயிரை துச்சமென மதிக்கும் காங்கிரஸ் அரசு உடனடியாக நீக்கப் பட வேண்டும். இந்த அரசு அனைத்து துறைகளிலும் தன்னுடைய அதி பயங்கர அலட்சியத்தை காட்டிக் கொண்டு இருக்கிறது. இது சீக்கிரம் கலையப்பட வேண்டிய ஒன்றாகும்.

 4. கிரி

  கொடுமைடா சாமி! வர ஆத்திரத்திற்கு…….. என்ன பண்ணி தொலையறது! வழக்கம் போல புலம்பிட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்.

 5. Mariappan

  பிரதிபா பாட்டீலின் வெட்டி சீனப் பயணத்துக்காகவும், ஏன்… மக்கள் பயணிக்கும் விமானங்களுடன் சேர்ந்து இவரது விமானம் கிளம்பினால் இந்த ஜனாதிபதியின் கிரீடம் சாய்ந்துவிடுமா?

  ஆயிரமாயிரமாய் கொட்டிக் கொடுத்து விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் பாதுகாப்புதான் முக்கியமே தவிர, உப்புப் பெறாத ரப்பர் ஸ்டாம்புகளின் வெட்டி பந்தா அல்ல!

  சாட்டைஅடி வரிகள் ஆனால் இந்த ஜென்மங்கள் திருந்தவா போகிறது?

 6. M.S.Vasan

  கும‌ர‌ன்,
  அர‌பு நாடுக‌ளுக்கு அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ், அவ‌ரின் த‌ந்தை,
  இந்திய‌ பிரிவினைக்கு, மாமா நேரு, பாக் த‌ந்தை ஜின்னா இப்ப‌டி
  எத்த‌னையோ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளின் அதிகார‌ ம‌ம‌தைக‌ளுக்கு,
  க‌ல‌ப்ப‌லி அப்பாவி ம‌க்க‌ள் ம‌ட்டுமே. இவ‌ர்க‌ள் அப்பாவிக‌ளாய்
  இருப்ப‌தால் த‌ன் அவ‌ர்க‌ள் பாவிக‌ளாகிறார்க‌ள்.

 7. palPalani

  இந்த கிழவி பதிவியேற்ற அன்றைக்கும், தினதந்தியில வந்த செய்தி இது.
  “நேற்றோடு அப்துல் கலாமின் பதிவிகாலம் முடிந்ததால் அவர் நேற்று தனது பொருட்களுடன் ராஜ் பகனைவிட்டு வெளியேறியதை தொடர்ந்து, பிரதிபா பட்டேல் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 14 பேருடன் ராஜ் பவனில் குடியேறினார்.”
  எனக்கு அப்பவே தெரிஞ்சு போச்சு இந்த கேள்வி எதுக்காக பதவிக்கு வந்ததுன்னு! முன்னெல்லாம் பிரதமர் அதிக பட்சம் மூன்று நாள் வெளிநாட்டு பயணம், கவர்னர்ன்னா நான்குநாள் பயணம்தான் கேள்விப்பட்டிருக்கோம், ஆனா இப்ப இருக்கவுங்கலேல்லாம், குறைஞ்சது 5 நாள், 6 நாள், 7 நாள் அல்லது 10 நாள் பயணந்தானே போகிறார்கள்? இது புரியலையே?

 8. babu bahrain

  சாட்டைஅடி வரிகள் ஆனால் இந்த ஜென்மங்கள் திருந்தவா போகிறது?
  சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் வேஸ்ட்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *