BREAKING NEWS
Search

பொன்னியின் செல்வன் – மீண்டும் அந்த அனுபவம்…!

பொன்னியின் செல்வன் – கல்கி தந்த காவியம்!

தினோராம் வகுப்பு படிக்கும்போதுதான் பொன்னியின் செல்வன் எனக்குப் படிக்கக் கிடைத்தது, எங்கள் ஊர் கிளை நூலகத்தில்.

நூலகத்தில் நான் உறுப்பினராகச் சேர்ந்த புதிது அது. சுஜாதாவின் நாவல்கள்தான் முதல் அறிமுகம். சில தினங்களிலேயே அசோகமித்திரன், வண்ணதாசன் என புதுப்புது எழுத்துக்கள் படிக்கக் கிடைத்தன. அந்த நேரத்தில் என்னைப் போன்ற புதிய உறுப்பினர்களுக்கு பெரிய பெரிய புத்தகங்களைத் தரமாட்டார் அந்த நூலகர்.

மூத்த ‘அண்ணன்கள்’ கலர் கலரான அட்டைகள் கொண்ட பெரிய பெரிய புத்தகங்களை வாங்கிச் செல்வதை கடுப்போடு பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரு நாள் பொறுமை எல்லை மீறியது. எங்கள் வீட்டு வழியாகத்தான் அந்த நூலகர் ஊருக்குப் போயாக வேண்டும். அப்படி வந்தவரின் சைக்கிளைப் பிடித்து நிறுத்தி, ‘நியாயம்’ கேட்க, அடுத்தநாளே, அனைத்து வகை நூல்களையும் எடுத்துச் செல்லும் ‘உரிமை’ கிடைத்துவிட்டது!!

அப்படி ‘உரிமை’ கிடைத்தவுடன் என் கைக்குக் கிடைத்த புத்தகம்தான் கல்கியின் பொன்னியின் செல்வன். எடுத்துப் போன கையோடு, கம்பங்கொல்லையின் பரண் மீது ஏறி அமர்ந்து முதல் அத்தியாயத்தைப் படிக்க ஆரம்பித்தேன். சொன்னால் நம்பமாட்டீர்கள்… கடைசி பக்கத்தின் கடைசி எழுத்தையும் வாசித்துவிட்டு, மீண்டும் முன்னும் பின்னும் புத்தகத்தை திருப்பிக் கொண்டே இருந்தேன். மதியம் சாப்பிடக்கூட மறந்துவிட்டது. அன்று என் வயசுக்கு, மனதில் ஏற்பட்ட உணர்வுகளை, ரசாயன மாறுதல்களை நிச்சயம் விவரிக்க முடியாது. அது போன்றதொரு இனிய அனுபவம், உணர்வை எப்போதும் பெற்றதில்லை!

இரவு ஏழு மணி வரை நூலகம் இருக்கும். அதற்குள் அடுத்த பாகங்களைப் பெற்றுவிடவேண்டும் என்ற முனைப்பில் மூன்று கிலோமீட்டர் தூரத்தை அரைமணி நேரத்துக்குள் அடைந்து, நூலகரிடம் அடுத்த பாகம் கேட்க, ‘இன்னிக்கு புக் எடுத்தாச்சில்ல… அடுத்து நாளைக்குதான் எடுக்க முடியும்..’ என்று ரூல்ஸ் பேசினார்.

‘என்ன செய்வது… வேற வழியே இல்லையா…’ என்று கேட்டதும், என்ன நினைத்தாரோ, இரண்டாம் பாகத்தைக் கொடுத்துவிட்டார். கூடவே ஒரு யோசனை சொன்னார். “வேணும்னா இன்னும் ரெண்டு கார்ட் வேணா எடுத்துக்கோ… மூன்று புத்தகங்கள் பெற்றுச் செல்லலாம்”, என்று.

அடுத்த நாளே துணைத் தலைமையாசிரியரிடம் விஷயத்தைச் சொல்லி படிவத்தில் கையெழுத்து வாங்கி, மேலும் 2 கார்டுகளைப் பெற்றேன். ஒரு உறுப்புமைக்கு அப்போது ரூ 3 கட்டணம். மொத்தம் 3 கார்டுகள்… 3 புத்தகங்கள் பெறலாமே!

பள்ளி முடிந்ததும் நூலகத்துக்குப் போய், பொன்னியின் செல்வனின் அனைத்துப் பாகங்களும் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றேன். ஆனால் வேறு உறுப்பினர்கள் கொண்டு சென்றிருந்தனர். அன்று இரவு வரை நூலகத்தில் காத்திருந்து அடுத்த மூன்று பாகங்களையும் பெற்றுக் கொண்ட பிறகுதான், வீடு திரும்பினேன். அந்த இரவு, அடுத்த நாள் பகல் என மல்லுக் கட்டிக் கொண்டு படித்தேன். அவ்வப்போது நான் பெரிதாகச் சிரித்ததைப் பார்த்து அம்மா வந்து திட்டிவிட்டுப் போவார்கள். பின்னிரவில் காடா விளக்கு எரிவதைப் பார்த்து அவர்கள் அணைத்துவிட்டுப் போக, பத்துநிமிடம் கழித்து அதை ஏற்றி வைத்துக் கொண்டு படித்தது நினைவிருக்கிறது.

கிட்டத்தட்ட நினைவு முழுக்க கல்கியின் பொன்னியின் செல்வனே வியாபித்திருந்தது. மனதுக்குள் நானே வந்தியத் தேவனாகிப் போனேன். வகுப்பில் சக மாணவிகளில் குந்தவையைத் தேட ஆரம்பித்துவிட்டது மனசு!

2400 பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்துவிட்ட பிறகுதான், ‘யார்யா இந்த கல்கி?’ என்று அவரைப் பற்றிய தேடலுக்குத் தாவினேன். அவர் வாழ்க்கையும், தமிழர் பாரம்பரியம் குறித்து அவரது எழுத்தில் விரவிக் கிடந்த பெருமையும் அவரது ஒவ்வொரு புத்தகத்தையும் தேட வைத்தன.

அந்த நாள்களில் சினிமாதான் அதிகபட்ச உற்சாகம். நல்ல படங்களை திரும்பத் திரும்பப் பார்ப்போம். ஆனால் எந்தப் படமும் தராத இனிய அனுபவத்தை கல்கி தந்தார், பொன்னியின் செல்வனில்.

ஐந்து பத்து என ஓரளவு கையில் காசிருந்த நேரம் (அன்றைக்கு அதுவே பெரிய விஷயம்!)… நடுத்தர புத்தகங்களின் விலை அதிகபட்சம் 10 ரூபாய்க்குள் முடிந்துவிடும் என்பதால், சொந்தமாக வாங்கும் ஆர்வம் வந்தது. அப்படி நான் வாங்கிய முதல் புத்தகம் கல்கியின் மகுடபதி. தொடர்ந்து கள்வனின் காதலி போன்ற சில புத்தகங்களை வாங்கினாலும், பொன்னியின் செல்வனை சொந்தமாக வாங்கும் ஆசை, மாநிலக் கல்லூரிக்குள் நுழைந்த பிறகே சாத்தியமானது.

கிட்டத்தட்ட கல்கியின் அனைத்துப் புத்தகங்களையும் வாசித்துவிட்டு, மீண்டும் பொன்னியின் செல்வனை கையில் எடுத்தபோது, இளங்கலை முதலாண்டிலிருந்தேன். அன்றும் முதல் முறை படித்த அதே உணர்வு. ஆனால் முன்னிலும் வேகமாக படித்து முடித்தேன்.

அதன் பிறகு எப்போதெல்லாம் கூடுதல் உற்சாகம் தேவைப்படுகிறதோ… அப்போது பொன்னியின் செல்வன் கையிலிருக்கும். மனம், வீர நாராயண ஏரிக்கரை, கொள்ளிட சுழல், குடந்தை சோதிடர், கோடியக்கரை கொள்ளிவாய்ப் பிசாசு, வல்லவரையன், ஆழ்வார்க்கடியான்… நம்ம முரட்டு ஹீரோ ஆதித்ய கரிகாலன் என வேறு உலகத்துக்குள் சஞ்சரிக்கத் துவங்கிவிடும்.

டெல்லியில் சில காலம் பணியாற்ற நேர்ந்த போது, கனாட் பிளேஸ் பகுதியில் ஒரு கடையில் பொன்னியின் செல்வன் பிரதிகளைப் பார்த்ததும், ஏதோ பெற்றோரையே பார்த்துவிட்ட மகிழ்ச்சியோடு அந்தப் புத்தகங்களை வாரி அணைத்து, பணம் கொடுத்து வாங்கி வந்தது நினைவுக்கு வருகிறது.

சென்னை வந்த பிறகு, ஹிக்கின் பாதம்ஸில் மலிவுப் பதிப்பாக பொன்னியின் செல்வனைப் பார்த்ததும், இன்னும் ஒரு செட் வாங்கிக் கொண்டேன்.

சமீபத்தில் சில நாட்கள் ஓய்விலிருக்க வேண்டிய சூழல். படிக்க புத்தகம் வேண்டும். சட்டென்று அருகில் உள்ள புத்தகக் கடைக்குப் போனால், மனதுக்குப் பிடித்த அதே பொன்னியின் செல்வன். கூடவே நல்ல கையடக்க பதிப்பாக பார்த்திபன் கனவும், அலை ஓசையும். அனைத்தையும் வாங்கிக் கொண்டேன். அடுத்த 5 நாட்கள் போனதே தெரியவில்லை!

-அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் எழுத்தின் சக்தி அது. தான் சார்ந்த சமூகத்தின் கண்ணோட்டத்தோடு மட்டும் பார்க்காத ஒரு எழுத்து அவருடையது. எதையும் வலிந்து திணிக்காத ஒரு யதார்த்தம், பருவத்துக்கேற்ப மாறும் ஆறு போல, தன்பாட்டுக்குப் போகும் இயல்பான நடை… அன்றைய இலக்கணத் தமிழ் காலத்திலேயே, இயல்புத் தமிழை, வழக்குச் சொற்களை அழகாக அவர் கையாண்டிருக்கும் விதம்… எல்லாமே கட்டிப் போட்டுவிட்டது மனசை.

சுஜாதா, ஜானகிராமன், புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஜெகசிற்பியன், இந்திரா பார்த்தசாரதி, நா பா (நா பார்த்தசாரதி), சாண்டில்யன் என தேர்ந்தெடுத்த எழுத்துக்களைப் படித்தாலும், கல்கியைப் படிக்கும் போது ஏற்படும் குதூகலம் அலாதியானது.

பொன்னியின் செல்வனை எண்பதுகளில் படித்துவிட்டு, அதற்கு தொடர்ச்சியான ஒரு நாவல் ஏதேனும் இருக்கிறதா என்று தேடியபோது, எங்கள் தமிழய்யா நாகு அவர்கள் வேங்கையின் மைந்தனை அறிமுகப்படுத்தினார். ஆனால் பொன்னியின் செல்வனுக்கு அருகில்கூட வைத்துப் பார்க்க முடியவில்லை அந்தப் புத்தகத்தை. மாமன்னன் ராஜேந்திரன் வரலாற்றை கல்கி எழுதாமல் போனாரே என்று மிகவும் வருத்தப்பட்டேன் அன்று.

ஆனால் கல்கிக்குப் பிந்தைய படைப்பாளிகளில் நா பாவின் நடையும், மொழி ஆளுமையும் சிலிர்ப்பைத் தந்தது. குறிப்பாக ‘மணிபல்லவ’த்தில் தமிழர் பெருமையும், ஒரு ஆண்மகனின் கம்பீரத்தையும் நற்பண்புகளையும் அவர் எழுதியிருக்கும் பாங்கு, நம் கால்களைத் தரையில் பாவ விடாமல் செய்யும் அளவுக்கு அத்தனை உயர்வாக இருக்கும்.

கல்கியின் எழுத்துக்கு இணையான இடம் அமரர் சுஜாதாவுக்குத்தான் தரவேண்டும். ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’யை அவர் தொடங்கியதும், ‘ஆஹா வந்துவிட்டது இன்னொரு பொன்னியின் செல்வன் அல்லது அதன் தொடர்ச்சி…’ என்று பல லட்சம் வாசகர்கள் மகிழ்ந்தனர். அதற்கொப்பவே அந்தக் கதையும் அத்தனை விறுவிறுப்பும் இனிமையும் நிறைந்ததாக இருந்தது. ஆனால் முதல் பாகத்தோடு அந்தக் கதை நின்றுபோனது. பின்னர் தொடர்வதாகச் சொன்ன சுஜாதாவும் இன்று இல்லை… நமக்கு நல்ல எழுத்துக்கள் கிடைப்பதில் மீண்டும் வெறுமை.

ரஜினியின் பேட்டியைப் பார்த்த பிறகு, இதோ 12வது முறையாக பொன்னியின் செல்வன் படிக்கிறேன். 11- ம் வகுப்பில் படித்தபோது ஏற்பட்ட அந்த குதூகலத்தையும், இனம்தெரியாத சுகானுபவத்தையும் இப்போதும் உணர முடிகிறது!!

பொன்னியின் செல்வன் நாவலை எண்பதுகளில் வாசிப்பை ஆரம்பித்த பலரும் நிச்சயம் படித்திருப்பார்கள். கல்கி இதழிலும், அதன் பிறகு பல பதிப்பகங்களின் மலிவு விலைப் பதிப்பாகவும் வந்துவிட்டது இந்த நாவல். இணையத்திலும் தாராளமாகக் கிடைக்கிறது. என்றாலும், மீண்டும் ஒருமுறை அந்த வாசிப்பு அனுபவத்தை நண்பர்கள் பெற, நாட்டுடைமை ஆகிவிட்ட ‘பொன்னியின் செல்வனை’ என்வழியில் தொடர்ந்து பிரசுரிக்க முடிவு செய்துள்ளேன். நாளை முதல் தினமும் ஒரு அத்தியாயமாக பொன்னியின் செல்வன் வெளியாகும்.

தொலைக்காட்சி சில காலம் புத்தக வாசிப்பை மழுங்கடிக்கப் பார்த்தது. ஆனால் இணையம் வந்து, வாசிப்புக்கு மறுபிறவி கொடுத்துள்ளது. குறிப்பாக இன்றைய புதிய தலைமுறையினர் இணையத்தில் படிப்பது மிக அதிகம். எனவே பொன்னியின் செல்வன் என்ற இனிய அனுபவத்தை இணையவழியில் இன்னொரு முறைப் பெறுங்கள்…

-வினோ

என்வழி ஸ்பெஷல்
27 thoughts on “பொன்னியின் செல்வன் – மீண்டும் அந்த அனுபவம்…!

 1. Prasad-California

  மிக்க நன்றி வினோ.ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

 2. Nat

  நன்றி வினோ. புதிய முயற்சி மட்டுமல்ல..மிகவும் நன்மை பயக்கும் விஷயமும் கூட…

 3. S Maharajan

  அருமையான முயற்சி வினோ அவர்களே
  ஒரு முறை தவற விட்ட இந்த பொக்கிஷம்
  மீண்டும் எனக்கு என்வழி முலம் கிடைக்க போகின்றது.
  நன்றி

 4. Mohd. Allah

  Great Decision – Vino – Congradulations…… This is what we need unlike concentrate in stories such as nithyanantha scandal, etc.

 5. ilaiyaraja

  மிக்க நன்றி. நீங்கள் சொன்ன அதே அனுபவம் எனக்கும். நான் ஜப்பானுக்கு வேலை நிமித்தம் சென்றிருந்த சமயம். எனது நண்பர்கள் இணயத்தில் இருந்து நிறைய படித்துகொண்டு இருந்தார்கள். எப்போதும் இணையத்திலேயே இருப்பார்கள். அவர்கள் தெலுங்கு நண்பர்கள். அப்படி என்னதான் அவர்கள் படிகிறார்கள் என்று பார்த்தால், ‘அந்த’ புத்தகம் படித்துக்கொன்றிருந்தர்கள் . எனக்கு ஆசையை அடக்கமுடியவில்லை. நானும் இணையத்தில் தேடினேன் . கிடைத்தது. ஆனால் புடிக்கவில்லை. மீண்டும் தேடினேன் தேடினேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு அமரர் கல்கி அவர்களின் ‘பார்த்திபன் கனவு’ கிடைத்தது. பார்த்திபன் கனவு திரைப்படம் போல் இருக்குமோ என்று கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு காவியத்தை படிக்க ஆரம்பிதேன். அவ்ளோதான். இரவு பகல் என்று பார்க்காமல் அதை படித்து முடித்தேன். உடனே கல்கி அவர்களின் அணைத்து படைப்பையும் தேடினேன். ஒவொன்றாக படித்தேன். கடைசியில் தன ‘பொன்னியின் செல்வன் ‘ படிக்க ஆரம்பித்தேன் . ஏனென்றால் ‘பொன்னியின் செல்வன் ‘ மிக அதிக பக்கங்கள் உடையது. இவ்வளவு பக்கத்தை படித்து முடிக்க முடியுமா என்று ஒரு தயக்கம். ஆனால் படிக்க ஆரம்பித்தேன். என்னால் வேற எந்த வேலையும் செய்ய முடியவில்லை. பைத்தியம் புடித்தவன் போல் படித்து கொண்டே இருந்தேன். படித்து முடித்தேன். ஆனால் இன்றும் ‘பொன்னியின் செல்வன் ‘ படித்து போல் எந்த படைப்பையும் படிக்கமுடியவில்லை.

 6. Dr. Suppandi

  இந்த படத்தை திரைப்படமாக (கற்பனையில்) எடுத்தால் யார் யாருக்கு எந்த வேடம் பொருத்தமாக இருக்கும் என வலை-நண்பர்கள் எழுதினால் ஒரு சுவாரசியமான பதிவு கிடைக்கும்.

  ஒரு துவக்கமாக

  வந்தியத்தேவன் – சூப்பர் ஸ்டார்
  பெரிய பழுவேட்டரையர் – மறைந்த நடிகர் திலகம்
  நந்தினி – ஷோபனா / ரம்யா கிருஷ்ணன் / சில்க் ஸ்மிதா
  குந்தவை – தபு / குஷ்பூ
  பொன்னியின் செல்வன் – உலக நாயகன்
  வானதி – ஐஸ்வர்யா ராய்
  பூங்குழலி – அசின் (வினோ மன்னிப்பாராக)
  ஆழ்வார்க்கடியான் – விவேக்
  பினாகபாணி – சந்தானம்
  ரவிதாசன் – பார்த்திபன்
  (இந்த வில்லன் வேடம் இவருக்கு நன்றாக பொருந்தும்)

  – டாக்டர் சுப்பாண்டி

 7. Murali

  தம்பி ரகு ரஜினி அவர்களே தங்கள் கருத்து மிகவும் அருமை.
  தலைவர் வந்தியதேவன் பாத்திரம் நினைத்து பார்கவே மனம் குதுகளிகிறது!!!

 8. Murali

  பொன்னியின் செல்வன் திரைப்படமாக (கற்பனையில்) எடுத்தால் யார் யாருக்கு எந்த வேடம் பொருத்தமாக இருக்கும் என வலை-நண்பர்கள் எழுதினால் ஒரு சுவாரசியமான பதிவு கிடைக்கும்.

  ஒரு துவக்கமாக

  வந்தியத்தேவன் – சூப்பர் ஸ்டார்
  பெரிய பழுவேட்டரையர் – மறைந்த நடிகர் திலகம்
  நந்தினி – ஷோபனா / ரம்யா கிருஷ்ணன் / சில்க் ஸ்மிதா
  குந்தவை – தபு / குஷ்பூ ( இது தான் சரி அல்ல )
  பொன்னியின் செல்வன் – உலக நாயகன்
  வானதி – ஐஸ்வர்யா ராய்
  பூங்குழலி – அசின் (வினோ மன்னிப்பாராக)
  ஆழ்வார்க்கடியான் – விவேக்
  பினாகபாணி – சந்தானம்
  ரவிதாசன் – பார்த்திபன்
  (இந்த வில்லன் வேடம் இவருக்கு நன்றாக பொருந்தும்)

  மிகவும் அருமை நண்பரே!!!

 9. ilaiyaraja

  குந்தவை , வானதி வேடம் இவர்களுக்கு பொருத்தமாக இருக்காது. (பொருத்தமாக இருந்தாலும் வானதி மாற்றப்படவேண்டும்). இல்லை என்றால் சூப்பர் ஸ்டார் படமாக இருந்தாலும் புறக்கணிப்போம்.

 10. ganesh

  வினோ அண்ணா,
  நேற்று தான் காந்தளூர் வசந்தகுமாரன் படித்து முடித்தேன். அதிகம் வர்ணிக்காமல் நக்கல் கலந்த நடையில் வசந்தகுமாரன் பாத்திரம் அருமையாக இருந்தது. படித்து முடித்ததும் நண்பர்களிடம் பொன்னியின் செல்வன் புத்தகம் வைதிருகிரீர்களா என்று கேட்டு கொண்டிருந்தேன். அதற்கு அவசியம் இல்லாமல் செய்து விட்டீர்கள். இனி எப்போதும் உங்கள் இணையத்தளம் தான் வாசிக்க போகிறேன்.

  என்வழி இணையத்தளம் தான் இனி “என்வழி”.

  ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன் “பொன்னியின் செல்வனை”.

  நன்றி அண்ணா.

 11. Dr. Suppandi

  கல்கி கதையில் உள்ள ஓவியங்கள், பாத்திரப் படைப்பு, அதற்கான
  நடிப்பு போன்றவற்றை வைத்து நோக்கும் போது குந்தவை வேடத்திற்கு லக்ஷ்மி மிகப் பொருத்தமாக (அழகாகவும்) இருப்பார். ஆனால் நமக்கு முகத்திரையில் உன்னைப் போல் ஒருவன் லக்ஷ்மி வருவதால் இன்றைய நிலையில் தலைவர் அவர்களுக்கு உடன் ஜோடியாக குஷ்பூவோ, அல்லது தபுவோ பொருத்தமாக இருப்பார். (இவர் உலக நாயகனுக்கு அக்காவாக இருப்பார் இன்பத்தையும் மனதில் கொள்ள வேண்டும். ஸ்ரேயா போன்றவர்கள் அவர் மகள் வயதில் இருக்கிறார்கள்.)

  பார்த்திபன் ரவிதாசன் வேடத்த்டில் பிய்த்து எடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

  ஆதித்த கரிகாலன் – ஒரு சிக்கலான பாத்திரம். பிரகாஷ் ராஜ் சற்று அடக்கி வாசித்தால் பொருத்தமாக இருப்பார். அதற்கான பாடி லாங்குவேஜ் அவரிடம் இருக்கிறது.

  -டாக்டர் சுப்பாண்டி

 12. Suresh கிருஷ்ணா

  என்னைப் பொருத்தவரை வந்தியத் தேவன், ஆதித்த கரிகாலன் இரு வேடங்களுக்கு ஒரே சாய்ஸ் தலைவர்தான்.

  வந்தியத் தேவனின் குறும்பும், ஆதித்த கரிகாலனின் விசித்திர, முரட்டுத் தனம் நிரைந்த கேரக்டரும் தலைவரைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. வேட்டையன் ரஜினியை ஆதித்த கரிகாலருக்கு பொருத்திப் பாருங்கள்.

  இதில் சிக்கல் என்னவென்றால், ஆதித்த கரிகாலனின் தங்கை குந்தவை. அவள்தான் வந்தியத் தேவன் நாயகி. இரண்டு பாத்திரங்கலையும் தலைவர் செய்தால் உள்ள சிக்கல் இது மட்டுமே. ஆனால் அது சினிமா… இரு வேறு பாத்திரங்கள் என்று எடுத்துக் கொள்ளும் பக்குவம் இருந்தால்- தலைவர் ஆதித்த கரிகாலனாகவும், வந்தியத் தேவனாகவும் கலக்கி எடுப்பார்.

  -Suresh கிருஷ்ணா

 13. sekar

  எத்தனை முறை இணையதளத்தில் தேடிக் கிடைத்தாலும், நான் எப்போதும் இருக்கும் என் வழியில் கிடைத்தால் அது எனக்கு மகிழ்ச்சிதான்

 14. Dr. Suppandi

  திரு சுரேஷ் அவர்களே:

  பாபா படத்தில் தலைவர் இறப்பது போன்ற ஒரு க்ளைமாக்ஸ் காட்சி வைத்ததால் தான் படம் பெரும் தோல்வி அடைந்தது. எனவே ஆதித்தன் பாத்திரம் இறப்பது போன்ற காட்சியை ரசிகர்களால் ஏற்க முடியாது. மாற்றி யோசிக்கவும்.

  -டாக்டர் சுப்பாண்டி

 15. mydeen

  நீங்க சொல்றது ரொம்ப சரி வினோ, நானும் அப்படிதான் ௧௫ நாளில் எல்ல பாகங்களையும் முடித்துவிட்டேன். பழுவேட்டையர், நந்தினி, வத்தியதேவன், கரிகாலன், பொன்னியின் செல்வன், எல்லா கேரக்டர்களும் அப்பிடியே மனசில் இருக்கு.
  சிவகாமியின் சபதமும் அப்படித்தான்.

 16. arulselvan1985

  வினோ,

  ஒரு நல்ல நாவலை எனக்கு அறிமுக படுத்தி உள்ளீர்கள். மிக நன்றி. நான் தற்போதுதான் முழுவதைவும் படித்து முடித்தேன். மிக சிறந்த நாவல்.

 17. மதன்

  பொன்னியின் செல்வன் திரைப்படமாக (என் கற்பனையில்) எடுத்தால் யார் யாருக்கு எந்த வேடம் பொருத்தமாக இருக்கும். இதோ…

  அந்த காலத்தில்…

  வந்தியத்தேவன் – சிவாஜி கணேசன்
  பெரிய பழுவேட்டரையர் – நம்பியார்
  நந்தினி – பத்மினி
  குந்தவை – பானுமதி ( இவரைத் தவிர எனக்கு யாரும் தோன்றவில்லை )
  பொன்னியின் செல்வன் – எம்.ஐி.ஆர்.
  வானதி – சரோஜாதேவி
  பூங்குழலி – ஜெயலலிதா
  ஆழ்வார்க்கடியான் – ஜெமினி கணேசன்
  கரிகாலன் – அசோகன்
  ரவிதாசன் – பி.எஸ்.வீரப்பன்
  கந்தன் – முத்துராமன்

  தற்காலத்தில்……

  வந்தியத்தேவன் – விக்ரம்
  பெரிய பழுவேட்டரையர் – ரஜினிகாந்த்
  நந்தினி – ஐஸ்வர்யாராய்
  குந்தவை – மீனா / ரம்யா கிருஷ்ணன் / குஷ்பு
  பொன்னியின் செல்வன் – கமலஹாசன்/சூர்யா
  வானதி – சினேகா
  பூங்குழலி – நயன்
  ஆழ்வார்க்கடியான் – தம்பி ராமையா
  கரிகாலன் – விஜயகாந்த் ( மாதரி : நானே ராஜா நானே மந்த்ரி )
  ரவிதாசன் – பார்த்திபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *