BREAKING NEWS
Search

பொன்சேகாவை தூக்கில் போடுவோம்! – கோத்தபாய

உண்மையைச் சொன்னால் பொன்சேகாவை தூக்கில் போடுவோம் – கோத்தபாய

லண்டன்: போர் குற்றங்கள் பற்றி சாட்சியம் அளித்தால் சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவோம், என்று ராஜபக்சேவின் தம்பி மிரட்டல் விடுத்துள்ளார்.

இலங்கையில் 30 ஆண்டுகளாக ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரில் முக்கிய பங்காற்றியவர் அப்போதைய ராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகா. 59 வயதான இவர், போர் முடிவுக்கு பின்னர் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டார். இதனால் பதவியை ராஜினாமா செய்து, அரசியலில் தீவிர பங்கு கொண்டார்.

தற்போது எம்.பி.யாக இருக்கும் பொன்சேகா, போர்க் காலங்களில் நடைபெற்ற சம்பவங்களையும், இறுதிக் கட்ட போரின்போது மனிதாபிமானமற்ற முறையில் போர் குற்றங்கள் நடக்க அரசியல்வாதிகள்தான் உத்தரவிட்டனர் என்பதையும் எந்த விசாரணை குழு முன்பும் சொல்வேன் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதற்கிடையே அவரை கைது செய்து காவலில் வைத்துள்ள இலங்கை அரசு, அவர் மீது ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாகவும், ராணுவத்தில் இருந்து கொண்டே அரசியலில் ஈடுபட்டதாகவும் வழக்குகள் தொடர்ந்து உள்ளது.

இந்த நிலையில், போர் குற்றங்கள் பற்றி சரத் பொன்சேகா சாட்சியம் அளித்தால், அவரை தூக்கில் போடுவோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், அந்த நாட்டு ராணுவ அமைச்சகத்தின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே மிரட்டியுள்ளார்.

லண்டனில், உள்ள பி.பி.சி. நிறுவனம் இந்த வாரம் கடைசியில் ஒளிபரப்ப உள்ள நிகழ்ச்சிக்காக அவரை பேட்டி கண்டது. ‘ஹார்டு டாக்’ என்றழைக்கப்படும் இந்த பேட்டியின்போது, “இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் பற்றி யார் விசாரித்தாலும் முழு உண்மைகளையும் வெளியிடுவேன் என்று அப்போது போரை முன்னின்று நடத்திய தளபதி சரத் பொன்சேகா கூறி இருக்கிறாரே?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கோதபாய கடும் கோபத்துடன் இப்படிக் கூறினார்:

“சரத் பொன்சேகா அப்படி சாட்சியம் அளிக்க முடியாது. ஏனென்றால், அவர்தான் அப்பொழுது தளபதியாக இருந்தவர். அப்படி அவர் சாட்சியம் அளித்தால் அது ராஜ துரோகம், அரசாங்கத்துக்கு விரோதமானது. மீறி அவர் சாட்சியம் அளித்தால் அவரை நாங்கள் தூக்கில் போடுவோம்.

எப்படி அவர் நாட்டை காட்டிக் கொடுக்க முடியும்? நாட்டுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய முடியும்? என்று நான் உங்களை கேட்கிறேன். அவர் ஒரு பொய்யர், பொய்யர், பொய்யர்.

எங்கள் நாடு ஒரு சுதந்திரமான நாடு. இறுதிப்போர் தொடர்பாக, அல்லது மற்றவர்கள் குற்றம் சாட்டுவது போல ராணுவமும் விடுதலைப் புலிகளும் போர் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பது பற்றி விசாரணை தேவைப்பட்டால், அதை நாங்களே நடத்திக் கொள்ள முடியும். 3-வது நபரின் அல்லது 3-வது நாட்டின் விசாரணைக்கு நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம்.

இறுதி யுத்தத்தின் போது சரணடைய வந்த விடுதலைப் புலிகளை சுட்டுக் கொல்லும்படி ராணுவ அதிகாரிகளுக்கு ராணுவ அமைச்சக செயலாளர் (நான்) உத்தரவிட்டதற்கு நேரடி சாட்சி உள்ளது என்று பொன்சேகா கூறியது பொய், ஆதாரம் இல்லாதது. அப்படி எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்கவில்லை…” என்றார்.




2 thoughts on “பொன்சேகாவை தூக்கில் போடுவோம்! – கோத்தபாய

  1. raj.s

    இவர்கள் நம்ம ஊர் அரசியல் வாதிகள் போல் திறமை ஆனவர்கள் அல்ல. விரைவில் இந்த கோத்தபாய மாட்டி கொள்வான்..எப்பவும் புது திருடன் மாட்டுவான் . இவன் புது கொலைகாரன் .

  2. Tom

    இலங்கையில் 30 ஆண்டுகளாக ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து

    What are you trying to say??? Stupid it never ends.
    ____________

    Corrected

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *